Friday, October 21, 2016

ஒரு நாட்டு தலைவனின் தர்மம் என்ன?

இன்றைய காலத்தில் தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. ஆனால் அப்பாவி மக்களிடம் இருக்கும் அறியாமை மட்டும் இன்னும் நீங்கவில்லை. மேடைகள் அமைத்து வாயினிக்க பேசுபவரெல்லாம் முதல்வராகி விடலாம் என நம்பி அவர்களுக்கு வாக்களித்து இறுதியில் ஏமாற்றம் அடைகின்றனர். யார் வேண்டுமானாலும் தலைவராகலாம் என்ற ஒரு தவறான கொள்கையை நாம் கைவிட வேண்டும். தகுதியுடைய ஒருவர் மட்டும் தான் தலைவராக வேண்டும். ஒரு நாட்டின் தலைவன் என்னென்ன தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என மகாபாரதம், பகவத் கீதை, திருக்குறள் உட்பட இதர இந்துதர்ம நூல்களில் கூறப்படுகின்றது.

சத்திரியன்

சத்திரியன் (க்‌ஷத்ரியன்) என்றால் வீரமும் உறுதியும் உடையவன் எனப் பொருள்படும். ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவனாக இருக்கவேண்டும் என தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். எந்த பிறப்பை சேர்ந்தவனாக இருந்தாலும் அவன் ஒரு சத்திரியனுக்கு உடைய பண்புகளையும் செயலாற்றும் வினைத்திட்பமும் கொண்டிருக்க வேண்டும். அரசு தர்மத்தை உணர்ந்தவனாகவும் மனதில் இறைபக்தி உடையவனாகவும் இருக்க வேண்டும். உதாரணமாக, மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்தின் பிரதமராக இருந்த விதுரன்.

மகாபாரதம் (சாந்தி பர்வம்)

1) மனதில் இறைபக்தியும் இறைத்தொண்டில் ஈடுபாடும் கொண்டவனாக இருக்க வேண்டும்
2) மக்களுக்கு கொடுப்பவனாக இருக்க வேண்டும், மக்களிடமிருந்து பறிப்பவனாக இருக்க கூடாது
3) தேசபக்தி மிக்கவனாகவும் தியாக மனப்பான்மை கொண்டவனாகவும் இருக்க வேண்டும்
4) தன் நாட்டு மக்களுக்காக காலம், குடும்பம், வயது, ஆசை அனைத்தையும் அர்ப்பணிப்பவனாக இருக்க வேண்டும்
5) தர்மநியதிகளையும் அரசியல் பாடங்களையும் கற்று அறிந்தவனாக இருக்க வேண்டும்
6) எந்தவொரு சமயத்திலும் மனதில் பயம் கொள்ளாதவனாக நாட்டு மக்களைக் காக்க துணிந்தவனாக இருக்க வேண்டும்
7) நாட்டைக் கொள்ளையடிப்பவர்களையும் நாட்டிற்கு கேடு விளைவிப்பவர்களையும் அழிக்க தயக்கம் கொள்ள கூடாது
8) நாட்டுக்கு ஆபத்து நேரும்போது முன்னிலையில் நின்று மக்களுக்கு உதவ வேண்டும்

இந்த எட்டு பண்புகளையும் உடைய ஒருவனே ஒரு நாட்டிற்கு தலைவனாக தகுதி உடையவன் என மகாபாரதம் கூறுகின்றது. அரசியல் பாடங்கள் என்பது இன்று ”Science of Politics” எனப்படுகின்றது. முன்பு அர்த்தசாஸ்திரம் எனும் நூல் ஒருவனுக்கு அரசியல் பாடங்களைப் போதிக்க பயன்பட்டது.

பகவத் கீதை (18:43)

1) வீரம்/துணிவு
2) சுறுசுறுப்பு
3) உறுதியுடைமை
4) தாராளகுணம்
5) தலைமைத்துவம்
6) நாட்டை வளமாக்கும் திறமை
7) அஞ்சாமை/ பின் வாங்காமை

திருக்குறள் (382-383)

1) அஞ்சாமை
2) தாராளகுணம்
3) அறிவுடைமை
4) ஊக்கமுடைமை
5) சுறுசுறுப்புடைமை
6) கல்வியுடைமை
7) துணிவுடைமை

மேலே கூறப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட ஒருவரை தலைவனாக தேர்ந்தெடுக்க வேண்டியது நம் கடமை. அத்தகைய ஒருவரால் தான் நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு, வாழ்க்கைத்தரம், கல்வி, ஒழுக்கம் ஆகியவை மேன்மை பெறும்.

No comments:

Post a Comment