Friday, October 21, 2016

மனிதனின் ஆறு எதிரிகள்

அரிஷத்வர்கம் என சொல்லப்படும் மனிதனின் ஆறு எதிரிகளும், மனிதனின் மனதினுள்ளேயே மறைந்திருந்து அவனை மெல்ல மெல்ல அழிக்கின்றன. அரி என்றால் எதிரி எனவும், ஷத் என்றால் ஆறு எனவும், வர்கம் என்றால் குழு எனவும் பொருள்படும்.

ஒவ்வொன்றும் மனிதனின் வாழ்க்கையில் மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்தும் இயல்புடைய குணங்களாகும்.

பக்தி நிலையைப் பொறுத்தவரை இந்த ஆறு குணங்களும் மனிதன் இறைவனின் திருவருளைப் பெற விடாமல் தடுக்கும் ‘எதிரிகள்’ என சொல்லப்படுகின்றது.

1) காமம் – தீவிர ஆசை
2) குரோதம் – கோபம்
3) லோபம் - பேராசை
4) மோகம் - மருட்சி
5) அகங்காரம் – இறுமாப்பு
6) மதஸர்யம் – பொறாமை

ஆறு எதிரிகளை அழித்திடுக

௧) காமம் என்றால் “அவா” அல்லது “ஆசை” எனப் பொருள்படும். தர்மநியதிக்கு உட்பட்ட ஆசை ஆக்கத்தை தரும். அதுவே தர்மநியதிக்கு எதிரான ஆசை அழிவையே தரும். பணம், பொருள், புகழ், பதவி போன்றவற்றின் மீது தீவிர ஆசை கொள்வது குற்றமாகும். எனவே, ஆசையை அடக்கிடுக.

௨) குரோதம் என்றால் ”கோபம்” அல்லது ”சினம்” எனப் பொருள்படும். ஆசைபட்ட ஒரு பொருளை அடைய முடியாமல் போய்விட்டால், அந்த ஆசை கோபமாக மாறும். கோப உணர்ச்சி மனத்தின் செயல்பாடுகளில் சஞ்சலங்களை ஏற்படுத்தி, வாக்கையும் செயலையும் பாதிக்கும். கோபத்தால் எழும் வாக்கும் செயலும் எப்போதும் சரியானதாக இருப்பதில்லை. எனவே, சினத்தைப் போக்கிடுக.

௩) லோபம் என்றால் “பேராசை” அல்லது “வெஃகுதல்” எனப் பொருள்படும். தேவைக்கு அதிகமான ஒன்றை அடைவதற்காக ஆசை கொள்வது பேராசை எனப்படுகின்றது. அதேபோல மற்றவருக்கு சொந்தமான ஒன்றை அடைய முயல்வது வெஃகுதல் எனப்படுகின்றது. வேண்டியது கிடைத்தால் அதைக் கொண்டு திருப்தி கொள்ள வேண்டும். அதைப் போலவே மேலும் மேலும் வேண்டும் என்று பேராசை கொள்ளக் கூடாது. ஆகவே, பேராசையைத் தவிர்த்து விடுக.

௪) மோகம் என்றால் “மருட்சி”, “பற்றுதல்” அல்லது “மயக்கம்” எனப் பொருள்படும். ஒரு பொருளின் மீது கொண்ட அளவற்ற பற்றுதலினால் அதை எப்படியாவது அடைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகின்றது. இதுவே ஒருவனை பல தீயசெயல்களிலும் ஈடுபடத் தூண்டுகின்றது. எனவே, மருட்சியை நீக்கிடுக.

௫) அகங்காரம் என்றால் “இறுமாப்பு” அல்லது “செருக்கு” எனப் பொருள்படும். பதவி, கல்வி, அறிவு, செல்வம் போன்றவற்றை ஒருவன் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக கொண்டிருக்கும் போது அவனிடம் செருக்கு ஏற்படுகின்றது. அகங்காரம் என்ற எதிரி ஒருவனின் மனத்தில் அவன் மற்றவர்களைக் காட்டிலும் உயர்ந்தவன் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையைத் தூண்டுகின்றது. இதனால் அவன் சக மனிதர்களிடம் மரியாதை, கருணை போன்ற அடிப்படை நற்குணங்கள் இன்றி செயல்படுகின்றான். ஆகவே, செருக்கை ஒழித்திடுக.

௬) மத்ஸர்யம் என்றால் “பொறாமை” எனப் பொருள்படும். தன்னை விட வேறு எவனும் கல்வி, பதவி, அறிவு, செல்வம் போன்றவற்றில் உயர்ந்து விட கூடாது என்ற ஓர் எண்ணம் தான் பொறாமை ஆகின்றது. மற்றவர்களின் அறிவாற்றல், திறமைகள், செல்வம் போன்றவற்றைக் கண்டு பொறாமை கொள்பவர்கள் அவற்றை எப்படியாவது அழித்துவிட எண்ணம் கொள்வர். இத்தகைய ஓர் எண்ணம் உண்மையில் தன்னைத் தானே அழித்துக் கொள்ள விதைக்கப்பட்ட விதை என்பதை அவர்கள் அறிகிலர். எனவே, பொறாமையை அகற்றிடுக.

முடிவுரை

இறைவனின் முழுமையான திருவருளை அடையும் எண்ணம் உள்ளவர்கள், முதலில் இந்த ஆறு தீய குணங்களையும் “கழுவி” விடவேண்டும். அன்றாடம் இறைவனின் நாமத்தை ஜபம் செய்தலும், மந்திர உச்சாடனம் செய்தலும், தேவாரம் மற்றும் பிரபந்தம் பாடுதலும், பகவத் கீதையைக் கற்றலும் ஒருவனின் மனதிலிருக்கும் ஆறு எதிரிகளையும் அழித்து விடுகின்றன.

No comments:

Post a Comment