Thursday, March 7, 2013

நம்மால் முடியும்


கள் அசைந்திட
வானில் சிறகடிக்க
நாம் காக்கைகள் அல்ல!
துன்பத்தை கண்டதும்
மண்ணில் தலை புதைக்க
நாம் நெருப்பு கோழிகள் அல்ல!
மனிதர்கள் நாம்!
எது வந்தாலும் எதிர்த்துப்
போராட வேண்டும்
நம்மால் முடியும் என்று!…..
வாழ்க்கை என்பது நமக்குக் கிடைத்துள்ள ஒரு அரிய வாய்ப்பு. இந்த வாய்ப்பை  சரியாகப் பயன்படுத்தினால் நாமும் வெற்றியடைந்து சமுதாயத்தையும் வெற்றியடையச் செய்யலாம். மேலும் உலக வரலாறு என்பது சாதித்த சில மனிதர்களின் வாழ்க்கை வரலாறு ஆகும். நாமும் நினைத்தால் வரலாறு படைக்கலாம். அதற்குத் தன்னம்பிக்கையும், திட்டமிட்ட உழைப்பும் தேவை.

எல்லாம் நம் கையில்

நமது இரண்டு கைகளையும் இயக்குகின்ற மூன்றாவது கையாகிய ‘தன்னம்பிக்கை’ நமக்கு இருந்தால் நம்மால் எதையும் சாதிக்க முடியும். எதையும் ‘முடியும்’ என்று நினைப்பதே தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கான முதல்படி. ஆகவே எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தோடு தொடங்க வேண்டும். மேலும்

‘முடியும்’ என்ற எண்ணமே, ஒரு காரியத்தை முடிப்பதற்கான வழிகளைத் தோற்றுவிக்கும் வல்லமை படைத்தது.

ஆம்! முடியும் என்று துணிந்து விட்டால் மூளைக்குள் மின்சாரம் பிறப்பெடுக்கும். எல்லாம் நம் கையில் தான் இருக்கின்றது. முதலில் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்று நம்ப வேண்டும்.

பிறக்கும்போதே யாரும் சாதனையாள ராகப் பிறப்பதில்லை. இடைவிடாத முயற்சியும், பயிற்சியும் தான் ஒருவரைச் சாதனையாளராக மாற்றுகின்றது. முயற்சியும் பயிற்சியும் தொடர்ச்சியாக இருந்தால் சாதாரண மனிதனும் சாதனையாளர் ஆகலாம்.

எண்ணங்களே ஏணிப்படிகள்

நமது வாழ்க்கையானது நம்முடைய எண்ணங்களின் வெளிப்பாடு ஆகும். அதாவது நாம் இன்று வாழ்ந்து கொண்டு இருக்கும் வாழ்க்கையானது, இதுவரை நமது நெஞ்சில் தோன்றிய எண்ணங்களின் செயல் வடிவமாகும்.

ஏனென்றால் எண்ணங்களே செயல்களாக மலர்கின்றன. செயல்களே வெற்றியைத் தருகின்றன. ஆகவே சிந்தனையே நமது செல்வம். நற்சிந்தனை நமது வாழ்வின் வரங்களை அள்ளி அள்ளித் தருகின்ற தவம். ஆகவே எதையும் சாதிக்க முடியும் என்ற மனநிலையோடு சிந்தித்து புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால் எதுவும்

சாத்தியமே என்பதைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். பிறகு வெற்றி நம்மிடம் கூட்டணி அமைத்துக்கொள்ள முயலும்.

எதையும் பன்முகமாகவும், நேர்முகமாகவும் சிந்தித்தால் தொடர்ந்து வெற்றியடைய முடியும் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும். எதைச் சிந்திக்கும் போதும், அந்தச் சிந்தனையை செயலாக்கும் போதும் ஏற்படும் விளைவுகளையும் சேர்த்தே சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் நம்மைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். நாள்தோறும் வளர்ந்து வளர்ந்து செடி தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கின்றது. நதி நகர்ந்து நகர்ந்து தன்னை உயிரோட்டமாக வைத்துக் கொள்கின்றது. அது போல முயன்று முயன்று முன்னேற்றப் பாதையில் விரைந்திட வேண்டும்.

எதையும் குறைந்தது இருமுறையேனும் சிந்தித்து விட்டு முடிவெடுக்க வேண்டும். சிந்திக்கும் போதுதான் மனம் விரியத் தொடங்கு கின்றது. விரிந்த மனமே வெற்றியின் விளைநிலம்.

எதிலும் தவறு ஏற்படுவது இயற்கையே என்றாலும் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, ஒருமுறை நேர்ந்த தவறுகள் மீண்டும் நேராதவாறு எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். செயல்பட்டுப்பாருங்கள் வெற்றி நமக்கு ஒரு விழா எடுக்க நாள் குறிக்கும்.

“ஆம்!
தவறுவது தவறில்லை;
தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளத்
தவறுவதே தவறு.
எண்ணங்களே வாழ்க்கையின் வண்ணங்கள்
எண்ணங்களை மாற்றினால்
வாழ்க்கையை மாற்றலாம்!”

முன்னேற்றத்தின் முகவரி

நம் முன்னேற்றத்திற்கு முகவரியாக இருப்பது நமது தகுதி. தகுதி என்றவுடன் செல்வ நிலையோ அல்லது வேறு எந்த நிலையோ இல்லை. தகுதி என்பது

த    -    தன்னம்பிக்கை
கு    -    குறிக்கோள்
தி    -    திட்டம்

இந்த மூன்றும் நாம் முன்னேறுவதற்கான முகவரி ஆகும்.

வெற்றிக்கு முயற்சிதான் மூலதனம். முயற்சிக்கு அடிப்படை தன்னம்பிக்கை. எப்பொழுதும் உற்சாகத்தோடு செயல்பட வேண்டும். தவறு நேர்ந்து விடுமோ என்ற அச்சத்தில் செயல்படக் கூடாது. ‘வென்றால் பரிசு, தோற்றால் அது அனுபவம்’ என்ற மனநிலையோடு செயல்பட வேண்டும்.

ஒவ்வொருவரிடமும் முன்னேறுவதற்கான அனைத்து ஆற்றலும் சக்தியும் இயற்கையாகவே இருக்கின்றது. மண்ணில் விழுந்த விதை முளைத்து வெளியே வருவதற்குத் தேவையான சக்தி அதனுள் இருப்பதைப் போல நாம் ஒவ்வொருவரும் சாதிப்பதற்கு தேவையான ஆற்றலும் சக்தியும் அவர்களின் உள்ளத்திலேயே உள்ளது. அதை உணர்ந்து பயன்படுத்துபவர்களே சாதனையாளர்களாக மாறுகின்றனர். மற்றவர்கள் வேதனை விளிம்பில் நின்று தவிக்கின்றனர்.

நமது மனம் இறுக்கமாகவும், எதிர்மறை யாகவும் சிந்தித்து கொண்டிருப்பதால் அந்த வாய்ப்புகளும் வளமும் நமக்குத் தெரிவது இல்லை. மனதை விரித்து எல்லையில்லாமல் சிந்தித்து, நம் தேடலுக்கும் தேவைக்கும் ஏற்ற வாய்ப்புகள் தென்பட்டவுடன் அவற்றின் மீது மட்டுமே கவனம் செலுத்தி நம் லட்சியத்தை அடைய முயற்சி செய்ய வேண்டும். ஆம், முயற்சிகள் தான் முன்னேற்றத்திற்குத் தேவையான முதல் மூலதனம். முயற்சி சிறகுகள் அசையும் போது எதுவும் சாத்தியமே!

“இடைவிடாத முயற்சியை

இதயத்தில் குடியேற்றினால்

முள்ளின் முனையிலும்

முல்லைப் பூ பறிக்கலாம்

கானல் நீரிலும் மின்சாரம் எடுக்கலாம்

ஆள்காட்டி விரலால்

பூமி உருண்டையையே

புரட்டிப் பார்க்கலாம்!”

முயற்சிக்கு முன்னால் வருகின்றதயக்கமும் வெற்றிக்குப் பின்னால் வருகின்றமயக்கமும் ஒருவருக்கு நிலையான முன்னேற்றத்தைக் கொடுக்காது. ஆகவே தயக்கத்தை தவிர்த்து முயற்சிச் சிறகுகளை தினந்தோறும் அசைக்க வேண்டும். வெற்றி நம் விலாசமாகும்.

வாழ்க்கையில் நமக்கென்று ஒரு இலக்கு இருக்க வேண்டும். வெறுமனே பிறந்தோம். இருந்தோம். இறந்தோம் என்றில்லாமல், வந்தோம், வென்றோம், சென்றோம் என்று வாழ வேண்டும். வாழ்க்கை என்றால் ஒரு ‘இலட்சியம்’ இருக்க வேண்டும். லட்சியம் தான் நம்மை இயக்குகின்ற உந்து சக்தி. நமக்கு இயற்கையாக சில திறமைகள் இருக்கும். அந்த திறமைகளைப் பயன்படுத்தும் விதத்தில் நமது லட்சியத்தையும் திட்டத்தையும் அமைத்துக் கொண்டால் நாம் எளிதில் அதை அடையமுடியும். மகாகவி பாரதிக்கு ஒரு லட்சியம் இருந்தது. அதுதான் ‘தமிழின் மேன்மை’. நமது முன்னாள் குடியரசுத் தலைவருக்கு ஒரு லட்சியம் இருக்கிறது அது தான் ‘வளர்ந்த பாரதம்’. அதுபோல் நமக்கும் ஒரு இலட்சியம் இருக்க வேண்டும்.

லட்சியம் என்கிற நெருப்பை நெஞ்சில் பற்றவைத்து விட வேண்டும். பாதையில்லை என்று பயப்படக் கூடாது. பாதையை உருவாக்கத்தான் நாம் பிறந்திருக்கிறோம் என்று நம்ப வேண்டும். நம்மிடம் திறமை உள்ளது என்ற நம்பிக்கையோடு செயல்படும்போது, நாம் செய்யும் எந்தச் செயலும் தனித்தன்மை மிக்கதாக அமைந்து, வெற்றி உறுதி செய்யப்படுகின்றது. ஆகவே வெற்றிக்கும் சாதனைக்கும் லட்சியம் தான் அடிப்படை என்பதைப் புரிந்து கொண்டு, நம் லட்சியத்தை தீர்மானம் செய்ய வேண்டும்.

“இலட்சியம் இல்லாத வாழ்க்கை
துடுப்பில்லாத படகு போன்றது.
அது காற்றுக்கு அசையலாம்
ஆனால் கரையை அடையாது”.

வெற்றியின் விலாசம்

நல்ல விசயங்களைத் தெரிந்து கொள் வதற்கு மனதை எப்போதும் திறந்த நிலையில் வைத்திருக்க வேண்டும். புதிய புதிய கருத்துகள் மனதினுள் நுழையும் போதுதான் புதிய சிந்தனைகள் உருவாகின்றது. புதிய சிந்தனை களைச் செயலாக்கும் போதுதான் புதிய முன்னேற்றமும் வாழ்க்கையில் வளர்ச்சியும் ஏற்படுகின்றது. புதிய தளிர்கள் தான் ஒரு செடியை வளர்ச்சியடையச் செய்கின்றது. அதுபோல புதிய கருத்துகள் தான் ஒருவரை புதிய செயல்களில் ஈடுபடச் செய்கிறது.

மனம் எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு நாம் எதைச் செய்கின்றோமோ அதில் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும். ஏனென்றால், கவனமில்லாமல் ஒன்றைச் செய்யும் போது அதில் முழு வெற்றி கிடைக்காது. அவ்வாறு வெற்றி கிடைக்காத சமயங்களில் மனச்சோர்வும் விரக்தியும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே எதைச் செய்தாலும் அதில் நம்மைக் கரைத்துக் கொண்டு நம்முடைய திறமைகளையும் தனித்தன்மைகளையும் வெளிக்காட்ட முயல வேண்டும்.

மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு வித்தியாசமாக புதுமையாக சிந்திப்பது என்பது வெற்றிக்கு வழிகாட்டும். சகோதர – சகோதரிகளே என்று வித்தியாசமாய் பேச்சைத் துவக்கியதால் தான் விவேகானந்தர் கவனிக்கப் பட்டார். எங்கும் எப்போதும் தனித்தன்மையாக இருக்க வேண்டும்.

தடம் பதித்து நடக்க விரும்புபவர்கள் ஒரு இலட்சியத்தை வரையறுத்துக் கொள்ள வேண்டும். அதை நோக்கியே தன் பயணத்தை நகர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். நம் இலக்கை நோக்கிய பயணத்தில் வரும் இடையூறுகளைப் பொருட்படுத்தாமல் தொட வேண்டிய சிகரத்தைத் தொட்டே தீருவது என்பதில் பின்வாங்கக் கூடாது. இந்தத் துறையில் என் பெயர் பதிக்கப்பட வேண்டும் என்ற திடமான முடிவுக்கு வரவேண்டும். அது ஒன்றும் தற்பெருமையல்ல. அது தன்னை அடையாளப் படுத்தும் முயற்சியே.

இந்தியத் திருநாட்டின் இளைஞர்களின் எழுச்சி நாயகனாக இன்றும் திகழ்ந்து கொண்டு இருப்பவர் போற்றுதலுக்குரிய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள். விண்வெளித் துறையில் தடம் பதிக்க வேண்டும் என்பது அவரது சின்ன வயது கனவு. அந்தக் கனவை நனவாக்கிக் காட்டியவர்.

வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டும். நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்றஆசை, நம்பிக்கை, எதிர்பார்ப்பு என்ற மூன்று வலுவான சக்திகளைப் புரிந்து கொண்டு அதில் கைதேர்ந்தவராகி விட வேண்டும் என்று அவர் அடிக்கடி சொல்வார்.

“மனவெளியில் கனவுகளின் ஆட்சி
முயற்சிகளில் செயல் முடிக்கும் எழுச்சி
தினந்தோறும் முன்னேற்றத்தின் தொடர்ச்சி
முடிக்கின்றசெயல்களே வெற்றியின் வளர்ச்சி”

தோல்வியின் பாடங்கள்

தோல்வி என்பது ஒரு முடிவல்ல; அது ஒரு திருப்புமுனை; வெற்றி நம்மை வெளி உலகிற்குக் காட்டுகின்றது. தோல்விதான் நம்மை நமக்கே அடையாளம் காட்டுகிறது. மேலும் வெற்றியின் மூலம் கிடைக்கும் பரிசுகளை விட, தோல்வியின் மூலம் கற்றுக்கொள்ளும் பாடங்களின் மதிப்பு அதிகம்.

எடுக்கின்ற முயற்சிகள் அத்தனையும் வெற்றியடைய வேண்டும் என்று எப்பொழுதும் எதிர்பார்க்கக்கூடாது. வெற்றியும், தோல்வியும் வாழ்க்கை என்ற நாணயத்தின் இரு பக்கங்கள். ஆகவே முடிவு எதுவாயினும் ஏற்றுக் கொள்கின்ற மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் சில முயற்சிகள் வெற்றியடையும். பல முயற்சிகளில் வெற்றி கிடைக்காமல் போய்விடும். அதுதான் இயற்கை!

ஒரு பெரிய மாமரத்தை எடுத்துக் கொண்டால் அதில் எத்தனை ஆயிரம் பூக்கள் பூக்கிறது. அத்தனைப் பூக்களும் கனியாக மாறுவதில்லை. அதுபோலதான் நாம் எடுக்கும் அத்தனை முயற்சிகளும் வெற்றியடையாது. அதற்காக நாம் முயலாமல் இருந்து விடக்கூடாது. முயன்று கொண்டே இருக்க வேண்டும். வெற்றி நம் விலாசம் தேடிவரும் நாள் வரும். அது நாளையே வரும். ஆகவே, வெற்றியை எதிர்நோக்கிச் செயல்பட்டாலும் தோல்விகளை யும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தோடு முயற்சி செய்ய வேண்டும்.

குப்பை விஷயங்கள் குறித்து எப்பொழுதும் சிந்திக்கக்கூடாது. அதாவது எதிர்மறையான வற்றை எண்ணும்போது மனதில் உள்ள ஆற்றல் குறைவதோடு, வாழ்க்கையின் மீது சலிப்பும், வெறுப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மனம் எப்பொழுதும் தெளிவாக இருப்பதற்கும், மகிழ்ச்சியாக இருப்பதற்கும் ஏற்றசூழ்நிலையை அமைத்துக் கொள்ள மனதால் முயல வேண்டும். முடியாவிட்டால் எந்தச் சூழ்நிலையையும் ஏற்றுக் கொள்ளும் மனதை உருவாக்க வேண்டும்.

முயற்சியே நிலையானது. அதுதான் முடிவுகளை நிர்ணயிப்பது என்பதை, உள்ளத்தில் உறுதியாக எழுதிக் கொள்வதோடு அதை அடிக்கடி எண்ணிப் பார்க்க வேண்டும். எந்தப் பிரச்சனையையும் சவாலாக ஏற்றுக்கொண்டு, தன்னம்பிக்கையுடன் அதில் வெற்றி காண முயற்சி செய்ய வேண்டும். பிரச்சனைகள் ஏற்படும்போது, மற்றவர்களின் உதவியையும், ஆலோசனைகளையும் நாடுவதற்கு முன்னர், நாமாகவே குறைந்தபட்சம் இரு தீர்வுகளை யாவது யோசனை செய்ய வேண்டும்.

“முயன்றால் எதுவும் முடியும்
முன்னேற்றம் விரைவில் தெரியும்
சிந்தித்துப் பார்த்தால் புரியும்
சிகரங்கள் தொட்டிட முடியும்!”

தன்னம்பிக்கையே வாழ்க்கையின் முதற்படி. வெற்றி என்னும் சிகரத்துக்கு ஆதாரமாக இருப் பவை இலட்சியம், முயற்சி, கடின உழைப்பு. வெற்றிக்கு முயற்சி தான் மூலதனம். முயற்சிக்கு அடிப்படை தன்னம்பிக்கை! எல்லோரும் மனிதர்கள்தான். ஆனால் தடம் பதித்து நடப்பவர்கள்தான், மாமனிதர்கள்! நாளை நாமும் நினைத்தால் மாமனிதர்கள் ஆகலாம்.

முன்னேற்றச் சிந்தனைகள்


வாழ்க்கையெனும் சோலையிலே வசந்த மலர்பறிக்கணும். நாம் வாழ்ந்தோம் என்ற முத்திரையை வரலாற்றில் புதிக்கணும் என்றுதான் எல்லோரும்நினைக்கிறார்கள். ஆனால் எல்லோராலும் அப்படி வாழ முடிவதில்லை. ஏனென்றால் அவர்களுடைய சிந்தனை வலுப்பெற்றதாக அமையாததே அதற்குக் காரணம் ஆகும். எந்தச் செயலுக்கும் அடிப்படை சிந்தனையே! அதைப்பற்றிச் சொல்லுகிறபோது “உங்களுடைய சிந்தனையை கவனியுங்கள், ஏனென்றால் அது செயலாக மாறுகிறது. உங்களுடைய செயலைக் கவனியுங்கள். ஏனென்றால் அது பழக்கமாக மாறுகிறது. உங்களுடைய பக்கத்தைக் கவனியுங்கள், ஏனென்றால் அது உங்கள் வழக்கமாக மாறுகிறது. உங்கள் வழக்கத்தைக் கவனியுங்கள். ஏனென்றால் அது உங்கள் வாழ்க்கையாக மாறுகிறது.” என்றான் ஒரு மேதை. ஆகவே எல்லாவற்றிற்கும் மூலாதாரம் சிந்தனையே என்பது தெளிவு.

வாழ்க்கையின் வடிவம்

சிந்தனையே மனிதனின் வாழ்க்கையை வடிவமைக்கிறது. எழுகின்ற சிந்தனைப் பெருக்கத்தை அளவிட்டு, வரையறை செய்து கூற முடியாது. நல்ல சிந்தனைகள், தீய சிந்தனைகள், மலட்டுச் சிந்தனைகள் என்பன ஒவ்வொருவருக்கும் உதயமாகிக்கொண்டே இருக்கும் என மனோத்த்துவ அறிஞர்கள் கூறுகிறார்கள். ஏற்படுகின்றன சிந்தனைகளை வடிவமைத்து சீர்செய்து செம்மைப்படுத்துவதற்கு உதவுவது இலட்சியம் என்று சொல்லப்படுகிற வாழ்க்கையின் இலக்கு. வாழ்க்கையின் இலட்சியம் அல்லது வாழ்நாளில் எதைச் சாதிக்க விரும்புகிறோம்என்பதை தீர்மானமாக நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். இலட்சியம் இல்லாத வாழ்க்கை, சேரும் இடம் தெரியாத கப்பலைப் போலத் தத்தளித்து மூழ்கிப்போகும். இலட்சியம் என்ன எனபதை முடிவு செய்த பின், ஏற்படுகிற சிந்தனைகளை இலட்சியத்தை நோக்கி திருப்பி விடல் எளிது. உயர்ந்த சிந்தனைகளால் உருவாக்கப்பட்டதாக இலட்சியம் இருக்க வேண்டும். மறந்தும் பிறருக்கு தீங்கு விளைவிப்பதாக சிந்தனை இருக்கக் கூடாது. சிந்தனைப்பயிர்களில் ஆரோக்கியமானவைகளை காழ்ப்புணர்ச்சி, தீங்கு போன்ற நோய்கள் தாக்காமல் வளர்க்க வேண்டும்.

பாரதியின் எண்ணம்

எதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்பதை திட்ட வட்டமாக கூறுகிறார் புரட்சிக் கவி.

“எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்”

நல்லதையே நாம் எண்ண வேண்டும். அப்படிச் செய்தால் எண்ணியது முடியும். தோல்விகளைக் கண்டு துவண்டு போகாத உறுதியான மனம் அமையப் பெறும். குழப்பம் இல்லாத தெளிந்த நல்லறிவு வாய்க்கப் பெறும் என்று, எண்ணம் அனைருக்கும் நன்மை விளைவிக்கும் படியாகவே இருக்க வேண்டும் என்கிறார்.

வள்ளுவரின் உள்ளல்:

மனத்தளவில் கூட தீயவற்றை நினைக்கக்கூடாது என்றும், அவ்வாறு தீய சிந்தனைகளை ஏற்பட்டாலே ஒருவன் அழிந்து விடுவான்என்றும் செப்புகிறார்.

“உள்ளத்தால் உள்ளலும் தீதே” என்ற வரிகளின் ஆழம் அளவிட முடியாது.

ஆகவே, சிந்தனை சிறப்பானதாக இருந்தால்தான் மனம் ஆற்றல் மிக்கதாக அமைந்து வெற்றியின் படிகளை ஒருவர் அடைய முடியும். இதைதான் ‘மனம் போல் வாழ்வு’, ‘மாந்தர் தம் உள்ளத்தனைய உயர்வு’ என்பவை குறிக்கும்.

சிந்தனைத் தொழிற்சாலை

மூளையையும் மனதையும் நல்ல சிந்தனைகளால் நிரப்பிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தீய சிந்தனை தாமாகவே மூளையில் ஏறி அமர்ந்துகொண்டு நம்மை தீய வழியில் நடத்திச் செல்லும்.

நிலத்தில் நெல்லை விளைவிக்கலாம். கரும்பை விளைவிக்கலாம். தென்னையை விளைவிக்கலாம்.

பெரும் பசிபோக்கும் தானியங்கள தரமாகப் பயரிடலாம். அவ்வாறு செய்யாமல் காலியாக விட்டோமானால், அதில் களைகளும், முட்புதர்களும் பெருகி அங்கு விஷ ஜந்துக்கள் வசிக்கும்படியாக ஆகிவிடும். அதுபோலவேதான் நற்சிந்தனைகளால் மூளையையும் மனதையும் நிரப்பாவிட்டால் அது பேயின் தொழிற்சாலை ஆகிவிடும். அது வாழ்க்கையையும் கெடுத்து சமுதாயத்தையும் நாசமாக்கிவிடும்.

சிந்தனைக் சுவடுகள்:

எதைப் பற்றி சிந்திக்கலாம் என்ற சந்தேகம் ஒருவருக்கு ஏற்படுவது இயல்பே. ஆகவே.

1. எந்நேரமும் இலட்சியத்தைப் பற்றி சிந்திக்கலாம்.

2 திறமைகளை வளர்த்துக் கொள்வதைப் பற்றிச்சிந்திக்கலாம்.

3. குறைகளைக் குறைக்கும் வழிகளைப் பற்றி சிந்திக்கலாம்.

4. நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவு செய்து பற்றி சிந்திக்கலாம்.

5. இலட்சியத்தை அடைவதற்கு உதவுபவர்கள் பற்றி சிந்திக்கலாம்.

6. புதியன படைத்தல் பற்றி சிந்திக்கலாம்.

7. மனித குலமேம்பாடு பற்றி சிந்திக்கலாம்.

8. வாய்ப்புகளைப் பற்றியும் அவற்றை முழுமையாகக் பயன்படுத்துவது பற்றியும் சிந்திக்கலாம்.

9. சாதனையாளர்களுக்கு ஏற்பட்ட தடங்கல்கள் சோதனைகளைப் பற்றியும், அவற்றை எவ்வாறு அவர்கள் முறியடித்தார்கள் என்பது பற்றியும் சிந்திக்கலாம்.

10. முன்னேற்றம் பற்றி முழுமயாக சிந்திக்கலாம்.

மனிதனுக்கு உதவும் அனைத்துக் கண்டுபிடிப்புகளும் சிந்தனையில் விளைந்த விலைமதிப்பிட முடியாத முத்துமணிகள். மனிதன் சிந்திக்காமல் இருந்திருந்தால் நவநாகரிக உலகம் கிடைத்திருக்காது. உலகம் முழுவதையும் ஒளி, ஒலி கற்றைக்குள் அடைத்து வைக்கும் விஞ்ஞானம் பிறந்திருக்காது. சிந்தனையே வெற்றியின் விதை. அதிலும் முன்னேறச் சிந்திப்பவர்கள் மட்டுமே முன்னேறுகிறார்கள். மற்றவர்களை இவ்வுலகம் உமிழ்ந்து விடுகிறது.

நல்ல சிந்தனை – நல்ல செயல் – நல்ல வாழ்க்கை – நல்ல வரலாறு.

வாழ்வின் முடிவான இலட்சியம்?


வாழ்வின் முடிவான இலட்சியம் தான் என்ன?

சிலவற்றைத் தேடி அடைவதே வாழ்வின் இலட்சியமாகிவிடுகிறது சிலருக்கு. அது கிடைத்து விடுகின்றது என்று வைத்துக் கொள்வோம். பிறகு அதனினும் மேலான – அதனினும் பன்மடங்கு பெரிதான ஒன்றுக்கு அலைகின்றோம்.

சிலர் பொருளுக்காக – சிலர் பதவிக்காக – சிலர் புகழுக்காக – சிலர் விளம்பரத்திற்காக – சிலர் பெண்ணுக்காக – இப்படி – ஆசைகள் இருந்து கொண்டே வளர்ந்து கொண்டே இருக்கின்றன. சிலருக்கு ஆசைகள் பெருகிக்கொண்டே செல்கின்றன.

ஆசைகள் இருப்பதும் அவை வளர்ந்து கொண்டே செல்வதும் கூடத் தவறில்லை. அவற்றை நெறிப்படுத்திக் கொண்டால் போதுமானது.

நம்மைச் சுற்றி, நம் வாழ்க்கையை சுற்றி மூன்று வேலிகளை – அரண்களை அமைத்துக் கொள்வது நல்லது. அந்த எண்ணவேலிகளை நம்மைப் பாதுகாகும் வாழ்க்கை நெறியானதாகவும் இருக்கும் வாழ்க்கை அமைதியாகவும் இருக்கும்.

முதல் வேலி: உண்மை

நம்மைச் சுற்றிலும் முதல் வடமாக – முதல் வேலியாக உண்மை என்னும் வேலியை அமைதுக் கொள்ள வேண்டும். நம்முடைய செயல்கள் ஒவ்வொன்றையும் நம் மனசாட்சி எடை போட்டுப் பார்க்கிறது. இது உண்மை. இது உண்மையல- இது உண்மையில் குறைகிறது. என்று அவ்வ்பொது ஒவ்வொருவருக்கும் எடுத்துச் சொல்கிறது. மனசாட்சியின்படி வாழ்கின்றவர்கள் -வெளியுலகில் ஓகோ என்று இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு ஒளிமயமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். சிலர் சொல்கிறார்கள் இந்த உலகில் தவறுகள் செய்ய நிர்பந்திக்கப்படுகிறோம். தொழில் துறையில் உண்மைக்கு மாறாக நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. என்று. இது உண்மைதான் என்றாலும் பொய்யாக நடந்து நடந்து – பொய்யான வாழ்க்கைக்காக தன் உண்மையான வாழ்வை இழந்து மனப் போராட்டத்தால் தவிப்பவர்கள் தாம் பலராக இருக்கிறார்கள். உண்மையான வாழ்க்கையில் எது கிடைக்கிறதோ அது போதும் என்று தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டால், அத்தகையதோர் வாழ்க்கையை மேற்கொண்டு விட்டால் – அதற்கான ன உறுதியைப்பெற்று விட்டால் அந்த உண்மையே நமக்கத் துன்பங்கள் நேரும்போதெல்லாம் வலிமை வாய்ந்த ஆயுதமாக அமைந்துவிடுகிறது.

குற்றங்களைச் செய்து சேர்த்த பணத்தில் தான தருமங்கள் செய்து தன்னை உயர்மனிதனாகக் காட்டக் கொள்வதைவிட நேரிய வழியில் எளிமையாக வாழ்ந்து நாமே ஓர் முன் உதாரணமாகத் திகழ்வதில் நன்மை அதிகம் அல்லவா.

இரண்டாவது வேலி ஒழுக்கம்

இரண்டாவது வேலி நமது வாழ்வின் நடைமுறைகள் அதையே ஒழுக்கம் என்கிறோம். கள், களவு காம்ம் பொய் கொலை என்ற கொடுஞ் செயல்களில் இருந்து விடுபடுவது – ஒவ்வொரு வரும் ஏதோ ஒருவகையில் தெரிந்தோ தெரியாமலோ சிறிதும் பெரிதுமாக இவ்வைந்து தீச் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். தங்கள் நடைமுறைகளில் குறைபாடு உள்ளவர்களாகி இத்தகைய தீமைகளை உலகுக்குத் தெரியாமல் முறைத்தாலும் இவர்கள் மனத்தளவில் வலிமையை இழந்தே விடுகிறார்கள். குற்றம் செய்பவன் லிமையை இழப்பான் என்பது சத்திய வாக்கு. வீரமாகப் பேசலாம், நேர்மையாகச் செயல்படுவது போலத் தோற்றமளிக்கலாம். யாருக்கும் தெரியாதவரை எல்லாம் சரியாக ஓடிக்கொண்டிருக்கும், மனசாட்சிக்கு முன்னால் இவர்கள் கோழைகளாக- குற்றவாளியாகவே காட்சி அளிக்கிறார்கள். இவர்களது செல்வமும் செல்வாக்கும் புகழும் பெருமையும் இவர்களிடன் இருக்கும் வரை இவர்கள் பாதுகாக்கப் பட்டதுபோல் இருகிறார்கள். ஏதேனும் ஒன்றை இழக்கும் போது கட்டடம சரிவது போல் இவர்கள் சிதறி விடுகிறார்கள். இறுதியில் இவர்கள் செயலுக்கு ஏற்ற தண்டனையை அனுபவித்தே தீருகிறார்கள். ஆனால் – ஒழுக்கமான – முறையான வாழ்க்கை – வலிமைவாய்ந்த வாழ்க்கையாகவே – அமைந்து விடுகிறது. சாதாரணமாக எளிமையாக வாழ்கின்ற இந்த நியாயமான மனிதர்களுக்கும் முன்னால் இந்தப் போலி பெரிய மனிதர்கள் தூள்தூளாகி விடுகிறார்கள். பணமும் பதவியும், இவர்களை ஒழுக்கச்சீலர்கள் என்று துன்புறுத்தினாலும் அது தற்காலிகமானதாக இருக்குமே ஒழிய நிரந்தரமான துன்பமாக இராது.

இந்த இரண்டாவது வேலியால் சமுதாயம் நம்மைப் பற்றிய ஒரு கணிப்புக்கு வந்து விடுகின்றது. ஒழுக்கத்தின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப நாம் உயர்வடைகிறோம். உயர்வுக்காக ஒழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தொடங்கினால், அது தோல்வியாக முடிந்து விடும். ஒழுக்கத்தோடு வாழ்வதுதான் மனித தர்மம். மனித அறம் என்று செயல்படவேண்டும். கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையும் அறிநெறிகளையும் மறந்த குடும்பங்களும் நாடுகளும் வீழ்ந்து பட்டத்தை நமக்கு வரலாறுகள் எச்சரித்த வண்ணம் இருக்கின்றன.

மூன்றாவது வேலி: உழைப்பு

மனிதன் உண்மையான எண்ணங்களோடும் ஒழுக்க நெறிகளோடும் மட்டும் வாழ்ந்தால் போதாதது. அவன் மேற்கொண்ட தொழில் எதுவாக இருந்தாலும் அதில் முழு மூச்சோடு கடினமாக உழைக்க வேண்டும். உழைக்காமல் வாழ்பவன் திருடன் என்றார் காந்தியடிகள். ஜப்பான் போல உழைக்கின்ற ஓர் சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டும் உழைத்துத்தான் வாழ வேண்டும் என்ற உணர்வினை நாம் நம் இளைஞர்களுக்கு ஊட்ட வேண்டும் என்ற உணர்வினை நாம் நம் இளைஞர்களுக்கு ஊட்ட வேண்டும். உழைக்கும் வாய்ப்பினை உருவாகிக் கொடுப்பது அரசின் கடமையாக இருக்க வேண்டும். வாழ்க்கை தற்காலிகமானது அல்ல – நிரந்தரமானது – ஒவ்வொருவருடைய வாழ்வும் இவர் எப்படி வாழ்ந்தார் என்று கவனிக்கப்படுகிறது. எப்படி பொருள் சேர்த்தார் என்று மதிக்கப்படுகிறது, உழைத்து வாழும் ஒரு சீரிய வாழ்வை அமைத்துக் கொள்வோம்.

இந்தக் கொள்கைகளை வாழ்வின் நெறிகளாகக் கடைபிடித்து வாழ்கின்றவர்கள் சிறந்த மனிதர்களாக – மா மனிதர்களாக உயர்கிறார்கள். இவர்கள் எத்தகைய எளிய வாழ்க்கை வாழ்ந்தாலும் பலருக்கு வழிகாட்டியாக விளங்குகிறார்கள். இவர்கள் தங்களுக்கென எண்ண வேலிகளை அமைத்துக்கொண்டவர்கள். இவர்கள் தான் சாதனையாளர்களாக உருவாகிறார்கள். இவர்களால் தான் நாட்டுக்கு நன்மை விளைகிறது. இவர்களுள் நீங்களும் ஒருவராக இருக்கலாம். உண்மை – ஒழுக்கம் – உழைப்பு – இவை தன்னம்பிக்கை தரும் தாரக மந்திரமாகும்.

நண்பர்களே! உங்கள் வாழ்க்கை பயிர் செழித்து வளர இந்த வேலிகளை இன்றே அமையுங்கள்!

வாழ்வின் உயர்ந்த இலட்சியம்


வாழ்வின் உயர்ந்த இலட்சியம் என்ன? என்று ஒருமுறை பேராசிரியர் ஒருவர் என்னிடம் கேட்டபொழுது, இலட்சியம் ஒன்றுதான். அதை இரண்டுவிதமாக அடையலாம்…

1. சிலர் நேரடியாக எளிய பாதையில் தியானத்தின் மூலமாகவே ஞானமடைவார்கள்.

2. சிலர் பணம், பேர், சுகம் என்று சுற்றுவழிப்பாதையில் சென்று, இதற்குமேல் அடைவதற்கு என்ன இருக்கின்றது என்று இறுதியில் ஞானமடைவார்கள்.

யார் எப்படித் தேடினாலும், யார் என்ன செய்தாலும், மனித வாழ்வின் இலட்சியம் ஞானமடைதல்தான் எனச் சொல்லி முடித்தேன்.

பணக்காரராவதன் மூலமாக உண்மையாகவே எதை அடைய முயற்சிக்கின்றீர்கள்?

உங்களுடைய சொத்துக்களின் எல்லையை அதிகரிப்பதன் மூலமாக உங்களின் எல்லையை அதிகரிக்கவே முயற்சிக்கின்றீர்கள்.

பெரும்பணத்தைச் சேர்ப்பதனாலேயே பெரும் மனிதராக மாறிவிட்டோம் என்று நம்பும் போது தான் வளர்ச்சியே நின்றுவிடுகின்றது.

அதேபோல் புகழ் பெறுவதன் மூலமாக நீங்கள் உங்களின் பெயருடைய எல்லையை அதிகரித்து உங்களின் எல்லையை அதிகரிக்கவே முயற்சிக்கின்றீர்கள். சுகங்களின் மூல மாகக் கூட உங்களின் உணர்வினுடைய எல்லையைத்தான் அதிகரிக்க முயற்சிக்கின்றீர்கள். உங்களின் எல்லா முயற்சியுமே உங்களின் எல்லையை வெவ்வேறு வழிகளில் பெருக்கும் முயற்சிகள்தான்.

நம் முடைய எல்லைகளை விரிவாக்கிக் கொள்வதற்காகத்தான் வெவ்வேறு வழிகளில் நம்முடைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றோம். வாழ்வில் எந்தவொரு உச்சியை ஒருவர் தொட்டாலும் அது வாழ்வின் ஒரேயொரு பரிமாணமாகத்தான் இருக்கின்றது. ஆனால் ஞானமடைதல் எனும் உன்னத நிகழ்வு உங்களை எல்லாப் பரிமாணங்களிலும் மலரச் செய்யும், அபூர்வ அனுபவமாகும்.

ஞானத்தை அடைவதற்காக உழைக்கும் ஒருவர் அவருடைய வாழ்வில் எதையுமே இழக்க மாட்டார். மாறாக, எல்லாவற்றையும் பெறுவார். ஞானத்தை இலக்காகக் கொண்டிருக்காமல் உழைப்பவர் எல்லாவற்றையும் அடைந்தபிறகு கூட எதையும் அடையாத அதிருப்தியைத்தான் பெற்றிருப்பார்.

ஞானமடைவதற்குத் தடையாயிருக்கும் அகங்காரம் பற்றிய இனிமையான சம்பவ மொன்று…

யுங்சூ தன்னுடைய குருவிடம் இப்படிக் கேட்டார். அடிக்கடி எங்களை அகங்காரம் பிடித்தவர் என்று திட்டுகின்றீர்கள். அகங்காரம்கூட அந்த இறைவனால் படைக்கப்பட்ட ஒன்றுதானே? இறைவனால் படைக்கப்பட்ட ஒன்று எப்படித் தவறாக இருக்க முடியும்? சரியான விளக்கம் சொல்லுங்கள் என்றார்.

ஜென் குரு அக்கேள்விக்குப் பதிலளித்த போது, உங்களின் அகங்காரத்தை பூர்த்தி செய்வதற்காக வாழ்ந்தால் கூட பரவாயில்லை.

ஆனால், உங்களின் மொத்த வாழ்வும் யாரோ ஒரு சிலரின் அகங்காரத்தைப் பூர்த்தி செய்வதற்காகவே ஓடுகின்றது. அடுத்தவரின் அகங்காரத்திற்காக உங்களையே அர்ப்பணிக்க வைத்து, உங்களின் வாழ்வைக் கேலிக்கூத்தாக்கும் அகங்காரத்தைத்தான் திட்டுகின்றேன்.

யுங்சூ. எங்களின் அகங்காரத்தை பூர்த்தி செய்தால் கூட பரவாயில்லை எனச் சொல்கின்றீர்களே. அழிக்கப்பட வேண்டிய அகங்காரத்தைப் பூர்த்தி செய்ய ஆரம்பித்தால் இந்த ஜென்மமே பாழாய்ப் போய் விடுமல்லவா?

ஜென் குரு, அகங்காரம் அழிக்கப்பட வேண்டும் என்பதையெல்லாம் நடைமுறைப்படுத்துவதற்கு இன்று தயாராயிருக்கும் புத்திசாலிகள் வெகு குறைவு.

பெரும்பாலான மனிதர்கள் தங்களின் விருப்பப்படி வாழ்வதாய் நம்பிக்கொண்டிருக்கின் றார்கள். அது பெரிய பொய். உங்களின் விருப்பம் என்பதே, சமுதாயத்தாலும், சுற்றத்தாராலும் நேரடி யாகவோ மறைமுகமாகவோ நிர்ணயிக்கப்பட்டவைதான். உங்களின் விருப்பப்படி முழுமையாக வாழ ஆரம்பித்து விட்டால் ஞானியாகி விடுவீர்கள். இதையெல்லாம் தாண்டி அவர் இப்படிச் சொல்லி விட்டால்? இவர் இப்படி நினைத்துவிட்டால் என்னாவது? என்று யார் யாருடைய அகங்காரத்திற்காகவெல்லாம் தன்னை வளைத்து, வாழ்வை அடகுவைத்து வாழ்வதால்தான் மனிதர்கள் வீழ்ந்து கொண்டேயிருக்கின்றார்கள். இதைத்தான் தவறு என்று சொல்கின்றேன்.

உங்களின் அகங்காரத்தைப் பூர்த்தி செய்வதற்காக உங்களின் எல்லைகளை அதிகரித்தால் கூட அழிய வேண்டியது அழிகின்றது என்று நிம்மதியாயிருக்கலாம்.

ஆனால், இதில் ஒரு பெரிய சிக்கல் என்னவென்றால், எது உங்களுடைய அகங்காரம்? எது மற்றவர்களுடையது என்று பிரித்துப் பார்ப்பது எளிதல்ல. தன்னுடைய அகங்காரத்தைக் கண்டுபிடித்து அதைப்பூர்த்தி செய்து அதிலிருந்து வெளிவருவதென்பது எல்லோருக்கும் சாத்தியமானதல்ல என்று சொல்லி முடித்தார்.

பலருடைய ஆசை இப்படித்தான் இருக்கின்றது. உலகை அனுபவிக்கவும் வேண்டும். ஆனால் அகங்காரம் அழியவும் வேண்டும்.

அதேபோல் தொடர்ந்து தன் எல்லையை விரித்துக் கொண்டே செல்ல வேண்டும். ஆனால் அகங்காரம் அழியவும் வேண்டும்! சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால், எந்தப் பெரிய இழப்பும் இல்லாமல், கஷ்டம் இல்லாமல் வாழ்வை அனுபவித்து ஆளவும் அகங்காரம் அழியவும் வேண்டும்! என்றுதான் நெஞ்சோரம் பலரும் ஆசைப்படு கின்றார்கள். இப்படிப்பட்டவர் களையும் ஞானம் நோக்கி அழைத்துச் செல்லும் தியானம்தான் உங்களுக்கான இந்த வாரத் தியானம். இத்தியானம் மிக எளியது, மிக வலியது.

Sunday, March 3, 2013

வாழ்க்கை என்பது என்ன?


இந்த தலைப்பையே உங்களுக்குள் ஒரு முறை கேட்டுப்பாருங்கள். வாழ்க்கை என்பது என்ன?

- உயிரோடு இருப்பதா?

- மகிழ்ச்சியாக இருப்பதா?

- பணம், புகழைத் தேடி தலை தெறிக்க ஓடுவதா?

- தோல்விகளில் கற்றுக் கொள்வதா?

- வெற்றிகளில் பெற்றுக் கொள்வதா?

- தன்னலமற்ற அர்ப்பணிப்பா?

- தத்துவங்களின் அணிவகுப்பா?

…. இவைகளில் எது வாழ்க்கை என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும், பிறந்தவர் அனைவரும் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

வாழ்க்கை என்பது ஓர் அனுபவம். ஆளுக்கு ஆள் மாறுபடும். சுகமோ துக்கமோ அனுபவம் நம்மை பலப்படுத்துகிறது. காயப்படுத்துகிறது, சிரிக்க வைக்கிறது, அழவைக்கிறது. முடிவில் இதில் எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது.

சிந்திக்கும் மனிதன் தெளிவடைந்தானா என்றால் அதுதான் இல்லை. மேலும், மேலும் குழம்பி முடிவில் தற்கொலையில் வாழ்வை பறிகொடுக்கிறான்.

இறைவனால் இவ்வுலகில் படைக்கப்பட்ட மற்ற ஜீவராசிகளுக்கு வாழ்க்கையை பற்றிய ஆராய்ச்சி எதுவுமில்லை. விலங்குகள் தற்கொலை செய்து கொள்வதுமில்லை. காரணம் அவைகளுக்கு முடிவை பற்றிய பயமில்லை. அந்த வகையில் அறியாமை ஒரு வரம்.

தான் அறிவாளி என்று கர்வப்படும் மனிதனால் வாழ்க்கையில் ஜெயிக்க முடிவதில்லை. காரணம் அறிவு மட்டும் வாழ்க்கைக்கு போதாது. அதற்கு மேலும் ஒன்று தேவைப்படுகிறது. அது என்ன..? தன்னம்பிக்கை. மனோபலம் உள்ளவனுக்கு மட்டுமே அது சாத்தியமாகும்.

அப்படி ஒரு விஷயம் இருக்கிறதா…? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.

வாழ்க்கையை பற்றி தீர்மானமான விளக்கம் எதுவும் இல்லாவிட்டாலும், வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு மனோபலம் ஒன்று மட்டுமே தீர்வாக அமைகிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுப வங்களே அவர்களின் வழிகாட்டி. அனுபவங் களிலிருந்து அவர்கள் கற்றுக் கொள்ள வேண் டும். அப்படி கற்றுக் கொண்டவன் ஜெயிக் கிறான். கற்றுக் கொள்ளாதவன் தவிக்கிறான்.

ஒரு ஜெர்மனிய பழமொழி, “அனுபவம் என்ற பள்ளியில் மூடன் எதையும் கற்றுக் கொள்ளமாட் டான்” என்கிறது. அப்படி கற்றுக் கொள்ளாதவரை வாழ்க்கை அவனுக்கு வசப்படாது.

மற்ற உயிரினங்களிலிருந்து மனிதன் பல விதத்தில் மாறுபடுகிறான். சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வதில், தன் தேவைகளை தானே தேடி பூர்த்தி செய்து கொள்வதில், நன்மை- தீமைகளை பகுத்தறியும் விதத்தில் பிறருக்கு வழிகாட்டியாக இருப்பதில்..! இத்தனை யும் பெற்று, சிந்தித்து செயல்படும் திறன் பெற்றிருக்கும் மனிதன், சில நேரங்களில் மிருகத்தை விட கீழ்நிலைக்கு வந்து விடுகிறான். போகும் திசை தெரியாமல் மயங்கி நிற்கிறான். அப்போது தான் வாழ்க்கையில் பயம் ஏற்படுகிறது.

துன்பம் துரத்தும் போது ஆன்மிகமும், அறிவியலும் அவனுக்கு துணை போவதில்லை. தோல்விக்கு பின்பு கிடைக்கும் வெற்றிக்காக காத்திருக்க அவனுக்கு பொறுமையில்லை. தோல்வியே வாழ்க்கை என்று முடிவுசெய்து, தனக்கு சோகமான முடிவைதேடிக் கொள்கிறான். தோல்விகள் நமக்கு நல்ல அனுபவங்களை தந்து, நம்மை பலசாலியாக்குகிறது.

நம்பிக்கை எனும் வானவில் நம்மிடம் எப்போதும் இருக்கவேண்டும். வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது. நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது. ஒவ்வொரு மனிதனின் கையிலும் அழகான வாழ்க்கை இருக்கிறது. அதை வளப்படுத்தும் நம்பிக்கை எனும் வானவில்தான் தோன்ற மறுக்கிறது. அப்போது வாழ்க்கை வெறுமையாகிறது. அந்த வெறுமையை நிரப்ப யாராலும் முடியாது.

இரவும், பகலும் வருவதுமில்லை. போவதுமில்லை. அவை பூமி சுழலுவதால் ஏற்படும் மாற்றங்கள். சுகமும், துக்கமும் வருவதுமில்லை. போவதுமில்லை. நாம் வாழ்வதால் வரும் மாற்றங்கள். பூமி இரவுக்காக வருந்துவதுமில்லை, பகலுக்காக மகிழ்வதுமில்லை. அது ஓர் கர்மயோகியைப் போல தன் பணியை செய்துக் கொண்டிருக்கிறது.

சூரியன் உயிர்களை வளர்க்கிறது. காக்கிறது. அது இல்லாத நேரத்திலும் உயிர்கள் அதை எதிர்நோக்கி காத்திருக்கிறது. ஆனால் இன்றைய அவசர மனிதனிடம் விடியலுக்காக காத்திருக்கும் பொறுமையில்லை. கல்வியறிவு அதிகமில்லாத காலத்தில் கூட இருந்திராத மனச்சுமை, டென்ஷன், தற்கொலைகள், இப்போது தான் அதிகமாகி வருகிறது. எந்த அறிவியல் வளர்ச்சியும் இவர்களை வாழவைப்பதில்லை. இந்த நவீனயுகத்தில் தற்கொலை தடுப்பு மையங்கள் ஆங்காங்கே உருவாகி வருவது வரமா? சாபமா?

உங்களுடைய வாழ்க்கையில் மற்றவர்களுக்கு தேவையான முன் உதாரணம் இருக்க வேண்டும். தோல்விகளை தாண்டி வெளிவந்தால் தான் அங்கே வெற்றி நம்மை வரவேற்க காத்திருக்கும். வெற்றிக்காக உழைக்கிறோம். தோல்வி நம் முன்வந்து நிற்கும் போது துவண்டு போகிறோம். தோல்வி தான் முதலில் வரும். அது உலக இயல்பு.

தோல்வியை கண்டு மிரண்டு போய் வாழ்க்கையை தொலைத்து விடுகிறோம். ஏன் இந்த அவசரம். தோல்விக்கு பின் வெற்றி என்ற வாக்கு பொய்யா, மெய்யா என்று பொறுத்திருந்து பார்க்கலாமே.

இன்று பல்வேறு சூழலால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள். எதிர்பார்த்த ஒன்று கிடைக்காவிட்டால் விரக்தியின் எல்லைக்கே போய்விடுகிறார்கள். நாம் நினைத்தால் எதுவும் நடக்கும் என்ற தத்துவம் அவர்களுக்கு புரிவதில்லை.

நாம் நினைக்கும் எண்ணங்கள் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். அந்த பாசிடிவ் எண்ணங்கள் நம் சூழ்நிலைகளை மாற்றியமைத்து நம்மை வெற்றி பாதையில் அழைத்துக் செல்லும். நம் எண்ணம் ஒருநாள் செயலாகும் போதுதான் அந்த எண்ணத்தின் வலிமை புரியும். நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாக மாறிவிடுவோம்.

- நம்மைவிட உடலில் பலசாலி யானை

- நம்மைவிட வேகத்தில் சிறந்தது குதிரை

- நம்மைவிட உழைப்பில் சிறந்தது கழுதை.

இப்படி மிருகங்கள் நம்மைவிட பலமடங்கு பலசாலிகளாக இருந்தாலும், நாம்தான் இவைகளை அடக்கி ஆள்கிறோம். காரணம் மனிதன் மட்டுமே மனோபலம் கொண்டவன். நமக்கு ஏற்படுகிற பிரச்சினைகளும் அப்படித்தான். அதனை அடக்கியாளும் சக்தி நம்மிடம் உள்ளது.

பொன்மொழி முத்துக்கள்


1. சின்னச் சின்ன விஷயங்கள் சந்தோஷத்தைத் தரும். ஆனால், சந்தோஷம் சின்ன விஷயம் இல்லை.

2. செலவுக்குமேல் வரும்படி உள்ளவன் செல்வன்; வரவுக்குமேல் செலவழிப்பவன் ஏழை.

3. போனால் வராதது ஒன்றே ஒன்று; அதுதான் காலம்(நேரம்).

4. மனைவி இல்லாதவன் அரை மனிதன்.

5. ஆண்களைவிடப் பெண்களுக்குப் பசி இருமடங்கு; புத்தி நான்கு மடங்கு; ஆனால் ஆசைகளோ எட்டு மடங்கு. (பெண்கள் வருந்தற்க)

6. அழகுக்கு ஆற்றல் அதிகம்; ஆயினும் அதைவிட ஆற்றலுடையது பணமே!

7. உள்ளத்தில் அன்பு இருந்தால் மட்டும் போதாது; அது செயலில் வெளிப்படவேண்டும்.

8. பெண்ணை ஒரு பொருள்போல் நடத்துவதால்தான் எல்லா இன்னல்களும் வருகின்றன.

9. எழுதப்படும் சொல்லைவிட நாக்கால் பேசப்படும் சொல்லே வலிமை மிக்கது.

10. நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது.

11. பரிசுத்த இதயத்தைப் பெற்று இருப்பதே மனிதனின் முதல் தகுதி.

12. பொறுமைசாலிக்குக் கோபம் வரும்பொழுது எச்சரிக்கையுடன் விலகிஇருந்துகொள்வது நல்லது

13. துன்பங்கள் நிலையானவை அல்ல; அவை ஆற்றில் ஓடும் தண்ணீர்போல் ஓடிவிடும்.

14. வல்லமையற்ற நீதி ஆற்றலற்றது; நீதியற்ற வல்லமை கொடுங்கோன்மை.

15. எந்த ஒரு முட்டாளும் பணம் ஈட்டமுடியும்; ஆனால் அறிவாளியால் மட்டுமே அதைக் காப்பாற்ற இயலும்.

16. ஒருவனைத் தனிமையில் கண்டிக்கவேண்டும்; பலர் முன் பாராட்டவேண்டும்.

17. பிள்ளையின் அருமை பெற்றவளுக்குத்தான் தெரியும்.

18. இயலுமாயின் பிறரைவிட அறிவாளியாக இரு; ஆனால், அதை அவர்களிடம் கூறாதே!

19. நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது எளிது; ஆனால், உயிரைக் கொடுப்பதற்குரிய நண்பன் கிடைப்பதுதான் அரிது.

20. துன்பம் வந்துவிடுமோ என்னும் அச்சம் துன்பத்தைவிடக் கொடியது; துயரமானது.

21. இறந்தவர்கள் இருப்பவர்களின் கண்களைத் திறக்கிறார்கள்.

வாழ்க்கை தத்துவங்கள்


ஒருவர் உன்னைத் உயர்த்திப் பேசும் போது விழிப்போடு இரு. 

ஒருவர் உன்னைத் தாழ்த்தி பேசும் போது ஊமையாய் இரு. 

புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு. எளிதில் வெற்றி பெறலாம். 

விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும் 

தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும். 

மனம் விட்டுப் பேசுங்கள் – அன்பு பெருகும். 

நண்பரின் சட்டைப்பையில் துவாரம் இருக்கும்போது அதில் நாணயங்களை போடுவதின் மூலம் அவருக்கு உதவி செய்ய முடியாது 

வாழ்க்கையில் மாறாதது மாற்றம் மட்டுமே. 

வெற்றி என்பது நிரந்தரமல்ல; தோல்வி என்பது முடிவுமல்ல! 

கண்கள், தம்மைத் தாமே நம்புகின்றன. காதுகளோ மற்றவரை நம்புகின்றன 

துன்பங்களை வளர்ப்பதும் தனிமை தான் ; தணிப்பதும் தனிமை தான். 

நல்ல சொற்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. நல்ல செயல்கள்
நம்மை மெளனமாக்குகின்றன 

அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது - ஓர் அனுபவசாலி 

நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால், ஒரு நல்ல நண்பனின் மவுனம் இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும். 

அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- காந்தியடிகள் 

வாழ்க்கை என்பதே ஒன்றை விட்டு ஒன்றை பிடிக்க முயன்று எல்லாவற்றையும் கோட்டை விடுவதே இடர்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான முன்னேற்றத்திற்கான வழியாகும். – அரவிந்தர் 

மனிதனை மாற்றி அமைக்கும் விதி, அவனது ஒழுக்கமே 

கோபம் என்னும் அமிலம் எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக் 
கொண்டிருக்கும் கலதத்தையே  பெரிதும் நாசப்படுத்தி விடும் 
]
ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம். ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம். 

என்றாவது நான் ஆசிரியரானால், அது கல்வி போதிக்க மட்டுமல்ல, 
கல்வி கற்பதற்காகவும் இருக்கும் 

எதிரியின் கையில் உள்ள ஆயுதத்தை பார்த்து கேலி செய்வதைவிட 
அதை பிடுங்கிகொள்வது புத்திசாலித்தனம் 

நாம் எப்போதுமே வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்;
 ஆனால் எப்போதுமே வாழ்வதில்லை. 

நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன; ஆனால் அனுபவமோ 

தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது – பில் கேட்ஸ் 

நம்பிக்கை உள்ளவர்கள் எந்த சூழலையும் சாதகமாக்கிக் கொண்டு முன்னேறுகிறார்கள் 

அறிவுக்கும் மனசுக்கு சிக்கல் இருக்கும் போது நீங்க மனசு சொல்வதை மட்டும்கேளுங்கள். 

மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திராமல், எந்தப் புயலையும் தாங்கும்  இரும்புக்கோட்டையாக வைத்திருக்கக் கற்க வேண்டும் 

உதவும் கரங்கள், ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது – அன்னை தெரஸா 

உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர முடியாது. 

ஒன்று தவிர்க்க முடியாது என்னும் போது. அதை எதிர்கொள்ளும் தைரியம்  வந்துதானே தீர வேண்டும் 

தோல்வியின் அடையாளம் தயக்கம்! 

வெற்றியின் அடையாளம் துணிச்சல்! 

துணிந்தவர் தோற்றதில்லை! தயங்கியவர் வென்றதில்லை! 

வெற்றியை விரும்பும் நமக்குத் தோல்வியைத் தாங்கும் மனம் இல்லை;

 தோல்வியைத் தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான். 

சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை. 

அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.அவற்றைக் கடந்து சென்றால்  அவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை! 

காலம் போனால் திரும்புவதில்லை காசுகள் உயிரை காப்பதும் இல்லை ! 

உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?

பிரச்சினைகள் வரும்போது அல்ல; பிரச்சினைகளைக் கண்டு நீங்கள் 
பயந்து விலகும்போது – பாரதியார் 

நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது, நீ யாரை விரும்புகிறாயோ அவரை நினைத்துக்கொள்வாய்!

 நீ துயரத்தில் இருக்கும் போது, உன்னை யார் விரும்புகிறாரோ அவரை
 நினைத்துக் கொள்வாய்! 

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..அன்பு நன்றி கருணை கொண்டவன்  மனித வடிவில் தெய்வம்..