Thursday, March 7, 2013

நம்மால் முடியும்


கள் அசைந்திட
வானில் சிறகடிக்க
நாம் காக்கைகள் அல்ல!
துன்பத்தை கண்டதும்
மண்ணில் தலை புதைக்க
நாம் நெருப்பு கோழிகள் அல்ல!
மனிதர்கள் நாம்!
எது வந்தாலும் எதிர்த்துப்
போராட வேண்டும்
நம்மால் முடியும் என்று!…..
வாழ்க்கை என்பது நமக்குக் கிடைத்துள்ள ஒரு அரிய வாய்ப்பு. இந்த வாய்ப்பை  சரியாகப் பயன்படுத்தினால் நாமும் வெற்றியடைந்து சமுதாயத்தையும் வெற்றியடையச் செய்யலாம். மேலும் உலக வரலாறு என்பது சாதித்த சில மனிதர்களின் வாழ்க்கை வரலாறு ஆகும். நாமும் நினைத்தால் வரலாறு படைக்கலாம். அதற்குத் தன்னம்பிக்கையும், திட்டமிட்ட உழைப்பும் தேவை.

எல்லாம் நம் கையில்

நமது இரண்டு கைகளையும் இயக்குகின்ற மூன்றாவது கையாகிய ‘தன்னம்பிக்கை’ நமக்கு இருந்தால் நம்மால் எதையும் சாதிக்க முடியும். எதையும் ‘முடியும்’ என்று நினைப்பதே தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கான முதல்படி. ஆகவே எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தோடு தொடங்க வேண்டும். மேலும்

‘முடியும்’ என்ற எண்ணமே, ஒரு காரியத்தை முடிப்பதற்கான வழிகளைத் தோற்றுவிக்கும் வல்லமை படைத்தது.

ஆம்! முடியும் என்று துணிந்து விட்டால் மூளைக்குள் மின்சாரம் பிறப்பெடுக்கும். எல்லாம் நம் கையில் தான் இருக்கின்றது. முதலில் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்று நம்ப வேண்டும்.

பிறக்கும்போதே யாரும் சாதனையாள ராகப் பிறப்பதில்லை. இடைவிடாத முயற்சியும், பயிற்சியும் தான் ஒருவரைச் சாதனையாளராக மாற்றுகின்றது. முயற்சியும் பயிற்சியும் தொடர்ச்சியாக இருந்தால் சாதாரண மனிதனும் சாதனையாளர் ஆகலாம்.

எண்ணங்களே ஏணிப்படிகள்

நமது வாழ்க்கையானது நம்முடைய எண்ணங்களின் வெளிப்பாடு ஆகும். அதாவது நாம் இன்று வாழ்ந்து கொண்டு இருக்கும் வாழ்க்கையானது, இதுவரை நமது நெஞ்சில் தோன்றிய எண்ணங்களின் செயல் வடிவமாகும்.

ஏனென்றால் எண்ணங்களே செயல்களாக மலர்கின்றன. செயல்களே வெற்றியைத் தருகின்றன. ஆகவே சிந்தனையே நமது செல்வம். நற்சிந்தனை நமது வாழ்வின் வரங்களை அள்ளி அள்ளித் தருகின்ற தவம். ஆகவே எதையும் சாதிக்க முடியும் என்ற மனநிலையோடு சிந்தித்து புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால் எதுவும்

சாத்தியமே என்பதைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். பிறகு வெற்றி நம்மிடம் கூட்டணி அமைத்துக்கொள்ள முயலும்.

எதையும் பன்முகமாகவும், நேர்முகமாகவும் சிந்தித்தால் தொடர்ந்து வெற்றியடைய முடியும் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும். எதைச் சிந்திக்கும் போதும், அந்தச் சிந்தனையை செயலாக்கும் போதும் ஏற்படும் விளைவுகளையும் சேர்த்தே சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் நம்மைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். நாள்தோறும் வளர்ந்து வளர்ந்து செடி தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கின்றது. நதி நகர்ந்து நகர்ந்து தன்னை உயிரோட்டமாக வைத்துக் கொள்கின்றது. அது போல முயன்று முயன்று முன்னேற்றப் பாதையில் விரைந்திட வேண்டும்.

எதையும் குறைந்தது இருமுறையேனும் சிந்தித்து விட்டு முடிவெடுக்க வேண்டும். சிந்திக்கும் போதுதான் மனம் விரியத் தொடங்கு கின்றது. விரிந்த மனமே வெற்றியின் விளைநிலம்.

எதிலும் தவறு ஏற்படுவது இயற்கையே என்றாலும் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, ஒருமுறை நேர்ந்த தவறுகள் மீண்டும் நேராதவாறு எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். செயல்பட்டுப்பாருங்கள் வெற்றி நமக்கு ஒரு விழா எடுக்க நாள் குறிக்கும்.

“ஆம்!
தவறுவது தவறில்லை;
தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளத்
தவறுவதே தவறு.
எண்ணங்களே வாழ்க்கையின் வண்ணங்கள்
எண்ணங்களை மாற்றினால்
வாழ்க்கையை மாற்றலாம்!”

முன்னேற்றத்தின் முகவரி

நம் முன்னேற்றத்திற்கு முகவரியாக இருப்பது நமது தகுதி. தகுதி என்றவுடன் செல்வ நிலையோ அல்லது வேறு எந்த நிலையோ இல்லை. தகுதி என்பது

த    -    தன்னம்பிக்கை
கு    -    குறிக்கோள்
தி    -    திட்டம்

இந்த மூன்றும் நாம் முன்னேறுவதற்கான முகவரி ஆகும்.

வெற்றிக்கு முயற்சிதான் மூலதனம். முயற்சிக்கு அடிப்படை தன்னம்பிக்கை. எப்பொழுதும் உற்சாகத்தோடு செயல்பட வேண்டும். தவறு நேர்ந்து விடுமோ என்ற அச்சத்தில் செயல்படக் கூடாது. ‘வென்றால் பரிசு, தோற்றால் அது அனுபவம்’ என்ற மனநிலையோடு செயல்பட வேண்டும்.

ஒவ்வொருவரிடமும் முன்னேறுவதற்கான அனைத்து ஆற்றலும் சக்தியும் இயற்கையாகவே இருக்கின்றது. மண்ணில் விழுந்த விதை முளைத்து வெளியே வருவதற்குத் தேவையான சக்தி அதனுள் இருப்பதைப் போல நாம் ஒவ்வொருவரும் சாதிப்பதற்கு தேவையான ஆற்றலும் சக்தியும் அவர்களின் உள்ளத்திலேயே உள்ளது. அதை உணர்ந்து பயன்படுத்துபவர்களே சாதனையாளர்களாக மாறுகின்றனர். மற்றவர்கள் வேதனை விளிம்பில் நின்று தவிக்கின்றனர்.

நமது மனம் இறுக்கமாகவும், எதிர்மறை யாகவும் சிந்தித்து கொண்டிருப்பதால் அந்த வாய்ப்புகளும் வளமும் நமக்குத் தெரிவது இல்லை. மனதை விரித்து எல்லையில்லாமல் சிந்தித்து, நம் தேடலுக்கும் தேவைக்கும் ஏற்ற வாய்ப்புகள் தென்பட்டவுடன் அவற்றின் மீது மட்டுமே கவனம் செலுத்தி நம் லட்சியத்தை அடைய முயற்சி செய்ய வேண்டும். ஆம், முயற்சிகள் தான் முன்னேற்றத்திற்குத் தேவையான முதல் மூலதனம். முயற்சி சிறகுகள் அசையும் போது எதுவும் சாத்தியமே!

“இடைவிடாத முயற்சியை

இதயத்தில் குடியேற்றினால்

முள்ளின் முனையிலும்

முல்லைப் பூ பறிக்கலாம்

கானல் நீரிலும் மின்சாரம் எடுக்கலாம்

ஆள்காட்டி விரலால்

பூமி உருண்டையையே

புரட்டிப் பார்க்கலாம்!”

முயற்சிக்கு முன்னால் வருகின்றதயக்கமும் வெற்றிக்குப் பின்னால் வருகின்றமயக்கமும் ஒருவருக்கு நிலையான முன்னேற்றத்தைக் கொடுக்காது. ஆகவே தயக்கத்தை தவிர்த்து முயற்சிச் சிறகுகளை தினந்தோறும் அசைக்க வேண்டும். வெற்றி நம் விலாசமாகும்.

வாழ்க்கையில் நமக்கென்று ஒரு இலக்கு இருக்க வேண்டும். வெறுமனே பிறந்தோம். இருந்தோம். இறந்தோம் என்றில்லாமல், வந்தோம், வென்றோம், சென்றோம் என்று வாழ வேண்டும். வாழ்க்கை என்றால் ஒரு ‘இலட்சியம்’ இருக்க வேண்டும். லட்சியம் தான் நம்மை இயக்குகின்ற உந்து சக்தி. நமக்கு இயற்கையாக சில திறமைகள் இருக்கும். அந்த திறமைகளைப் பயன்படுத்தும் விதத்தில் நமது லட்சியத்தையும் திட்டத்தையும் அமைத்துக் கொண்டால் நாம் எளிதில் அதை அடையமுடியும். மகாகவி பாரதிக்கு ஒரு லட்சியம் இருந்தது. அதுதான் ‘தமிழின் மேன்மை’. நமது முன்னாள் குடியரசுத் தலைவருக்கு ஒரு லட்சியம் இருக்கிறது அது தான் ‘வளர்ந்த பாரதம்’. அதுபோல் நமக்கும் ஒரு இலட்சியம் இருக்க வேண்டும்.

லட்சியம் என்கிற நெருப்பை நெஞ்சில் பற்றவைத்து விட வேண்டும். பாதையில்லை என்று பயப்படக் கூடாது. பாதையை உருவாக்கத்தான் நாம் பிறந்திருக்கிறோம் என்று நம்ப வேண்டும். நம்மிடம் திறமை உள்ளது என்ற நம்பிக்கையோடு செயல்படும்போது, நாம் செய்யும் எந்தச் செயலும் தனித்தன்மை மிக்கதாக அமைந்து, வெற்றி உறுதி செய்யப்படுகின்றது. ஆகவே வெற்றிக்கும் சாதனைக்கும் லட்சியம் தான் அடிப்படை என்பதைப் புரிந்து கொண்டு, நம் லட்சியத்தை தீர்மானம் செய்ய வேண்டும்.

“இலட்சியம் இல்லாத வாழ்க்கை
துடுப்பில்லாத படகு போன்றது.
அது காற்றுக்கு அசையலாம்
ஆனால் கரையை அடையாது”.

வெற்றியின் விலாசம்

நல்ல விசயங்களைத் தெரிந்து கொள் வதற்கு மனதை எப்போதும் திறந்த நிலையில் வைத்திருக்க வேண்டும். புதிய புதிய கருத்துகள் மனதினுள் நுழையும் போதுதான் புதிய சிந்தனைகள் உருவாகின்றது. புதிய சிந்தனை களைச் செயலாக்கும் போதுதான் புதிய முன்னேற்றமும் வாழ்க்கையில் வளர்ச்சியும் ஏற்படுகின்றது. புதிய தளிர்கள் தான் ஒரு செடியை வளர்ச்சியடையச் செய்கின்றது. அதுபோல புதிய கருத்துகள் தான் ஒருவரை புதிய செயல்களில் ஈடுபடச் செய்கிறது.

மனம் எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு நாம் எதைச் செய்கின்றோமோ அதில் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும். ஏனென்றால், கவனமில்லாமல் ஒன்றைச் செய்யும் போது அதில் முழு வெற்றி கிடைக்காது. அவ்வாறு வெற்றி கிடைக்காத சமயங்களில் மனச்சோர்வும் விரக்தியும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே எதைச் செய்தாலும் அதில் நம்மைக் கரைத்துக் கொண்டு நம்முடைய திறமைகளையும் தனித்தன்மைகளையும் வெளிக்காட்ட முயல வேண்டும்.

மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு வித்தியாசமாக புதுமையாக சிந்திப்பது என்பது வெற்றிக்கு வழிகாட்டும். சகோதர – சகோதரிகளே என்று வித்தியாசமாய் பேச்சைத் துவக்கியதால் தான் விவேகானந்தர் கவனிக்கப் பட்டார். எங்கும் எப்போதும் தனித்தன்மையாக இருக்க வேண்டும்.

தடம் பதித்து நடக்க விரும்புபவர்கள் ஒரு இலட்சியத்தை வரையறுத்துக் கொள்ள வேண்டும். அதை நோக்கியே தன் பயணத்தை நகர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். நம் இலக்கை நோக்கிய பயணத்தில் வரும் இடையூறுகளைப் பொருட்படுத்தாமல் தொட வேண்டிய சிகரத்தைத் தொட்டே தீருவது என்பதில் பின்வாங்கக் கூடாது. இந்தத் துறையில் என் பெயர் பதிக்கப்பட வேண்டும் என்ற திடமான முடிவுக்கு வரவேண்டும். அது ஒன்றும் தற்பெருமையல்ல. அது தன்னை அடையாளப் படுத்தும் முயற்சியே.

இந்தியத் திருநாட்டின் இளைஞர்களின் எழுச்சி நாயகனாக இன்றும் திகழ்ந்து கொண்டு இருப்பவர் போற்றுதலுக்குரிய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள். விண்வெளித் துறையில் தடம் பதிக்க வேண்டும் என்பது அவரது சின்ன வயது கனவு. அந்தக் கனவை நனவாக்கிக் காட்டியவர்.

வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டும். நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்றஆசை, நம்பிக்கை, எதிர்பார்ப்பு என்ற மூன்று வலுவான சக்திகளைப் புரிந்து கொண்டு அதில் கைதேர்ந்தவராகி விட வேண்டும் என்று அவர் அடிக்கடி சொல்வார்.

“மனவெளியில் கனவுகளின் ஆட்சி
முயற்சிகளில் செயல் முடிக்கும் எழுச்சி
தினந்தோறும் முன்னேற்றத்தின் தொடர்ச்சி
முடிக்கின்றசெயல்களே வெற்றியின் வளர்ச்சி”

தோல்வியின் பாடங்கள்

தோல்வி என்பது ஒரு முடிவல்ல; அது ஒரு திருப்புமுனை; வெற்றி நம்மை வெளி உலகிற்குக் காட்டுகின்றது. தோல்விதான் நம்மை நமக்கே அடையாளம் காட்டுகிறது. மேலும் வெற்றியின் மூலம் கிடைக்கும் பரிசுகளை விட, தோல்வியின் மூலம் கற்றுக்கொள்ளும் பாடங்களின் மதிப்பு அதிகம்.

எடுக்கின்ற முயற்சிகள் அத்தனையும் வெற்றியடைய வேண்டும் என்று எப்பொழுதும் எதிர்பார்க்கக்கூடாது. வெற்றியும், தோல்வியும் வாழ்க்கை என்ற நாணயத்தின் இரு பக்கங்கள். ஆகவே முடிவு எதுவாயினும் ஏற்றுக் கொள்கின்ற மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் சில முயற்சிகள் வெற்றியடையும். பல முயற்சிகளில் வெற்றி கிடைக்காமல் போய்விடும். அதுதான் இயற்கை!

ஒரு பெரிய மாமரத்தை எடுத்துக் கொண்டால் அதில் எத்தனை ஆயிரம் பூக்கள் பூக்கிறது. அத்தனைப் பூக்களும் கனியாக மாறுவதில்லை. அதுபோலதான் நாம் எடுக்கும் அத்தனை முயற்சிகளும் வெற்றியடையாது. அதற்காக நாம் முயலாமல் இருந்து விடக்கூடாது. முயன்று கொண்டே இருக்க வேண்டும். வெற்றி நம் விலாசம் தேடிவரும் நாள் வரும். அது நாளையே வரும். ஆகவே, வெற்றியை எதிர்நோக்கிச் செயல்பட்டாலும் தோல்விகளை யும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தோடு முயற்சி செய்ய வேண்டும்.

குப்பை விஷயங்கள் குறித்து எப்பொழுதும் சிந்திக்கக்கூடாது. அதாவது எதிர்மறையான வற்றை எண்ணும்போது மனதில் உள்ள ஆற்றல் குறைவதோடு, வாழ்க்கையின் மீது சலிப்பும், வெறுப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மனம் எப்பொழுதும் தெளிவாக இருப்பதற்கும், மகிழ்ச்சியாக இருப்பதற்கும் ஏற்றசூழ்நிலையை அமைத்துக் கொள்ள மனதால் முயல வேண்டும். முடியாவிட்டால் எந்தச் சூழ்நிலையையும் ஏற்றுக் கொள்ளும் மனதை உருவாக்க வேண்டும்.

முயற்சியே நிலையானது. அதுதான் முடிவுகளை நிர்ணயிப்பது என்பதை, உள்ளத்தில் உறுதியாக எழுதிக் கொள்வதோடு அதை அடிக்கடி எண்ணிப் பார்க்க வேண்டும். எந்தப் பிரச்சனையையும் சவாலாக ஏற்றுக்கொண்டு, தன்னம்பிக்கையுடன் அதில் வெற்றி காண முயற்சி செய்ய வேண்டும். பிரச்சனைகள் ஏற்படும்போது, மற்றவர்களின் உதவியையும், ஆலோசனைகளையும் நாடுவதற்கு முன்னர், நாமாகவே குறைந்தபட்சம் இரு தீர்வுகளை யாவது யோசனை செய்ய வேண்டும்.

“முயன்றால் எதுவும் முடியும்
முன்னேற்றம் விரைவில் தெரியும்
சிந்தித்துப் பார்த்தால் புரியும்
சிகரங்கள் தொட்டிட முடியும்!”

தன்னம்பிக்கையே வாழ்க்கையின் முதற்படி. வெற்றி என்னும் சிகரத்துக்கு ஆதாரமாக இருப் பவை இலட்சியம், முயற்சி, கடின உழைப்பு. வெற்றிக்கு முயற்சி தான் மூலதனம். முயற்சிக்கு அடிப்படை தன்னம்பிக்கை! எல்லோரும் மனிதர்கள்தான். ஆனால் தடம் பதித்து நடப்பவர்கள்தான், மாமனிதர்கள்! நாளை நாமும் நினைத்தால் மாமனிதர்கள் ஆகலாம்.

No comments:

Post a Comment