Thursday, March 7, 2013

வாழ்வின் முடிவான இலட்சியம்?


வாழ்வின் முடிவான இலட்சியம் தான் என்ன?

சிலவற்றைத் தேடி அடைவதே வாழ்வின் இலட்சியமாகிவிடுகிறது சிலருக்கு. அது கிடைத்து விடுகின்றது என்று வைத்துக் கொள்வோம். பிறகு அதனினும் மேலான – அதனினும் பன்மடங்கு பெரிதான ஒன்றுக்கு அலைகின்றோம்.

சிலர் பொருளுக்காக – சிலர் பதவிக்காக – சிலர் புகழுக்காக – சிலர் விளம்பரத்திற்காக – சிலர் பெண்ணுக்காக – இப்படி – ஆசைகள் இருந்து கொண்டே வளர்ந்து கொண்டே இருக்கின்றன. சிலருக்கு ஆசைகள் பெருகிக்கொண்டே செல்கின்றன.

ஆசைகள் இருப்பதும் அவை வளர்ந்து கொண்டே செல்வதும் கூடத் தவறில்லை. அவற்றை நெறிப்படுத்திக் கொண்டால் போதுமானது.

நம்மைச் சுற்றி, நம் வாழ்க்கையை சுற்றி மூன்று வேலிகளை – அரண்களை அமைத்துக் கொள்வது நல்லது. அந்த எண்ணவேலிகளை நம்மைப் பாதுகாகும் வாழ்க்கை நெறியானதாகவும் இருக்கும் வாழ்க்கை அமைதியாகவும் இருக்கும்.

முதல் வேலி: உண்மை

நம்மைச் சுற்றிலும் முதல் வடமாக – முதல் வேலியாக உண்மை என்னும் வேலியை அமைதுக் கொள்ள வேண்டும். நம்முடைய செயல்கள் ஒவ்வொன்றையும் நம் மனசாட்சி எடை போட்டுப் பார்க்கிறது. இது உண்மை. இது உண்மையல- இது உண்மையில் குறைகிறது. என்று அவ்வ்பொது ஒவ்வொருவருக்கும் எடுத்துச் சொல்கிறது. மனசாட்சியின்படி வாழ்கின்றவர்கள் -வெளியுலகில் ஓகோ என்று இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு ஒளிமயமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். சிலர் சொல்கிறார்கள் இந்த உலகில் தவறுகள் செய்ய நிர்பந்திக்கப்படுகிறோம். தொழில் துறையில் உண்மைக்கு மாறாக நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. என்று. இது உண்மைதான் என்றாலும் பொய்யாக நடந்து நடந்து – பொய்யான வாழ்க்கைக்காக தன் உண்மையான வாழ்வை இழந்து மனப் போராட்டத்தால் தவிப்பவர்கள் தாம் பலராக இருக்கிறார்கள். உண்மையான வாழ்க்கையில் எது கிடைக்கிறதோ அது போதும் என்று தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டால், அத்தகையதோர் வாழ்க்கையை மேற்கொண்டு விட்டால் – அதற்கான ன உறுதியைப்பெற்று விட்டால் அந்த உண்மையே நமக்கத் துன்பங்கள் நேரும்போதெல்லாம் வலிமை வாய்ந்த ஆயுதமாக அமைந்துவிடுகிறது.

குற்றங்களைச் செய்து சேர்த்த பணத்தில் தான தருமங்கள் செய்து தன்னை உயர்மனிதனாகக் காட்டக் கொள்வதைவிட நேரிய வழியில் எளிமையாக வாழ்ந்து நாமே ஓர் முன் உதாரணமாகத் திகழ்வதில் நன்மை அதிகம் அல்லவா.

இரண்டாவது வேலி ஒழுக்கம்

இரண்டாவது வேலி நமது வாழ்வின் நடைமுறைகள் அதையே ஒழுக்கம் என்கிறோம். கள், களவு காம்ம் பொய் கொலை என்ற கொடுஞ் செயல்களில் இருந்து விடுபடுவது – ஒவ்வொரு வரும் ஏதோ ஒருவகையில் தெரிந்தோ தெரியாமலோ சிறிதும் பெரிதுமாக இவ்வைந்து தீச் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். தங்கள் நடைமுறைகளில் குறைபாடு உள்ளவர்களாகி இத்தகைய தீமைகளை உலகுக்குத் தெரியாமல் முறைத்தாலும் இவர்கள் மனத்தளவில் வலிமையை இழந்தே விடுகிறார்கள். குற்றம் செய்பவன் லிமையை இழப்பான் என்பது சத்திய வாக்கு. வீரமாகப் பேசலாம், நேர்மையாகச் செயல்படுவது போலத் தோற்றமளிக்கலாம். யாருக்கும் தெரியாதவரை எல்லாம் சரியாக ஓடிக்கொண்டிருக்கும், மனசாட்சிக்கு முன்னால் இவர்கள் கோழைகளாக- குற்றவாளியாகவே காட்சி அளிக்கிறார்கள். இவர்களது செல்வமும் செல்வாக்கும் புகழும் பெருமையும் இவர்களிடன் இருக்கும் வரை இவர்கள் பாதுகாக்கப் பட்டதுபோல் இருகிறார்கள். ஏதேனும் ஒன்றை இழக்கும் போது கட்டடம சரிவது போல் இவர்கள் சிதறி விடுகிறார்கள். இறுதியில் இவர்கள் செயலுக்கு ஏற்ற தண்டனையை அனுபவித்தே தீருகிறார்கள். ஆனால் – ஒழுக்கமான – முறையான வாழ்க்கை – வலிமைவாய்ந்த வாழ்க்கையாகவே – அமைந்து விடுகிறது. சாதாரணமாக எளிமையாக வாழ்கின்ற இந்த நியாயமான மனிதர்களுக்கும் முன்னால் இந்தப் போலி பெரிய மனிதர்கள் தூள்தூளாகி விடுகிறார்கள். பணமும் பதவியும், இவர்களை ஒழுக்கச்சீலர்கள் என்று துன்புறுத்தினாலும் அது தற்காலிகமானதாக இருக்குமே ஒழிய நிரந்தரமான துன்பமாக இராது.

இந்த இரண்டாவது வேலியால் சமுதாயம் நம்மைப் பற்றிய ஒரு கணிப்புக்கு வந்து விடுகின்றது. ஒழுக்கத்தின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப நாம் உயர்வடைகிறோம். உயர்வுக்காக ஒழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தொடங்கினால், அது தோல்வியாக முடிந்து விடும். ஒழுக்கத்தோடு வாழ்வதுதான் மனித தர்மம். மனித அறம் என்று செயல்படவேண்டும். கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையும் அறிநெறிகளையும் மறந்த குடும்பங்களும் நாடுகளும் வீழ்ந்து பட்டத்தை நமக்கு வரலாறுகள் எச்சரித்த வண்ணம் இருக்கின்றன.

மூன்றாவது வேலி: உழைப்பு

மனிதன் உண்மையான எண்ணங்களோடும் ஒழுக்க நெறிகளோடும் மட்டும் வாழ்ந்தால் போதாதது. அவன் மேற்கொண்ட தொழில் எதுவாக இருந்தாலும் அதில் முழு மூச்சோடு கடினமாக உழைக்க வேண்டும். உழைக்காமல் வாழ்பவன் திருடன் என்றார் காந்தியடிகள். ஜப்பான் போல உழைக்கின்ற ஓர் சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டும் உழைத்துத்தான் வாழ வேண்டும் என்ற உணர்வினை நாம் நம் இளைஞர்களுக்கு ஊட்ட வேண்டும் என்ற உணர்வினை நாம் நம் இளைஞர்களுக்கு ஊட்ட வேண்டும். உழைக்கும் வாய்ப்பினை உருவாகிக் கொடுப்பது அரசின் கடமையாக இருக்க வேண்டும். வாழ்க்கை தற்காலிகமானது அல்ல – நிரந்தரமானது – ஒவ்வொருவருடைய வாழ்வும் இவர் எப்படி வாழ்ந்தார் என்று கவனிக்கப்படுகிறது. எப்படி பொருள் சேர்த்தார் என்று மதிக்கப்படுகிறது, உழைத்து வாழும் ஒரு சீரிய வாழ்வை அமைத்துக் கொள்வோம்.

இந்தக் கொள்கைகளை வாழ்வின் நெறிகளாகக் கடைபிடித்து வாழ்கின்றவர்கள் சிறந்த மனிதர்களாக – மா மனிதர்களாக உயர்கிறார்கள். இவர்கள் எத்தகைய எளிய வாழ்க்கை வாழ்ந்தாலும் பலருக்கு வழிகாட்டியாக விளங்குகிறார்கள். இவர்கள் தங்களுக்கென எண்ண வேலிகளை அமைத்துக்கொண்டவர்கள். இவர்கள் தான் சாதனையாளர்களாக உருவாகிறார்கள். இவர்களால் தான் நாட்டுக்கு நன்மை விளைகிறது. இவர்களுள் நீங்களும் ஒருவராக இருக்கலாம். உண்மை – ஒழுக்கம் – உழைப்பு – இவை தன்னம்பிக்கை தரும் தாரக மந்திரமாகும்.

நண்பர்களே! உங்கள் வாழ்க்கை பயிர் செழித்து வளர இந்த வேலிகளை இன்றே அமையுங்கள்!

No comments:

Post a Comment