Saturday, April 27, 2013

பின்னடைவுகளை பிளந்து முன்னேறு

வாழ்வில் சில சம்பவங்கள் நமக்கு சவால்விடும் விதமாய் அமையும். அத்தகைய சவால்கள் வரும்போதெல்லாம் தொடை தட்டி எழுபவர்கள் சோதனைகளைக் கடந்து சாதிக்கிறார்கள். தொடை நடுங்கி நிற்பவர்கள் தோற்கிறார்கள். இது ஒற்றை வரி உபதேசமல்ல. உண்மையின் சாரம். நிகரற்ற சாதனையாளர்கள் வாழ்வில் நிரூபிக்கப்பட்ட சத்தியம்.

காலம் வீசுகிற பந்தைக் கையில் பிடிக்கும் லாவகமே, எறியப்பட்டது பூப்பந்தா அணுகுண்டா என்பதைத் தீர்மானிக்கிறது. எதிர்வரும் சவால்கள் ஒவ்வொன்றிலும் சாதனைக்கான சாத்தியக் கூறுகள் ஒளிந்திருப்பதை உணர்ந்தவர்கள் உயர்கிறார்கள்.

சில நடைமுறை உதாரணங்களை நினைத்துப் பார்த்தால் நம் வாழ்விலும் சோதனைகள் வருவது நாம் சாதிப்பதற்காகவே என்கிற உண்மை புலப்படும்.

ஆப்பிள் கம்ப்யூட்டரை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் உரையாற்றியபோது தன் வாழ்வில் நடந்த சறுக்கல்களும் சவால் மிக்க பொழுதுகளும் எப்படி சாதனைக்கு வழிவகுத்தன என்பது பற்றி சிலிர்க்க வைக்கும் உண்மைகளை பகிரங்கமாய்க் பகிர்ந்து கொண்டார்.

“வாழ்க்கை, கசப்பான சம்பவங்களால் ஆங்காங்கே புள்ளிகளை வைத்து விட்டுப் போகிறது. அவற்றை கரும்புள்ளிகள் என்று நினைத்துக் கவலைப் படுகிறோம். ஆனால் அந்தப் புள்ளிகளை இணைக்கிற புத்திசாலித்தனம் இருந்தால், அந்தக் கசப்பான சம்பவங்களே கம்பீரமான வெற்றிக்குக் காரணிகள் ஆகின்றன” என்றார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

இதனை உணர்த்தும் விதமாய் உதாரணங்களைத் தன்னுடைய வாழ்விலிருந்தே தந்தார் அவர்.

தான் தொடங்கிய ஆப்பிள் நிறுவனத்திலிருந்தே வெளியேற்றப்பட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ். கசப்பான அந்தக் கரும்புள்ளி வைக்கப்பட்ட விநாடியே அடுத்த வெற்றியின் புள்ளியைத் தொட, புயல்போல் இயங்கினார் அவர். பிக்ஸல் அனிமேஷன் ஸ்டுடியோஸ் என்கிற புத்தம் புதிய நிறுவனத்தைத் தொடங்கி அனிமேஷன் உலகில் அசகாய சூரராய் மிக விரைவில் வளர்ந்தார். இந்த மகத்தான வெற்றி, தான் உருவாக்கிய ஆப்பிள் நிறுவனத்தை மீண்டும் அவருடைய ஆளுகைக்குள் கொண்டு வந்தது. தன் மறு வருகையை ஒரு சாதனையின் மூலம் கொண்டாடத் தீர்மானித்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். இருபத்தோராம் நூற்றாண்டை உலுக்கும் விதமாய் ஒரு கண்டுபிடிப்பைக் கொடுத்தார். அதுதான் உலகெங்கும் உள்ளவர்களின் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாகிக் கொண்டிருக்கும் ஐ-பாட். பின்னடைவுகள், சவால்விடும் தருணங்கள், சோதனைகள் இல்லாமல் இந்த சாதனைகள் சாத்தியமே இல்லை என்று அடித்துச் சொல்லும் ஸ்டீவ் ஜாப்ஸ், கரும்புள்ளிகளை இணைக்கும் வெற்றிக்கோலம் வரைவதற்கான உத்திகளையும் உணர்த்தினார்.

1. புள்ளிகளைப் புரிந்து கொள்ளுங்கள்:

வாழ்வில் நடக்கும் சம்பவங்களை சரியாகப் புரிந்து கொள்வதில்தான் சாமர்த்தியம் இருக்கிறது. தோல்விகளும் பின்னடைவுகளும், உண்மையில் தோல்விகளோ பின்னடைவுகளோ அல்ல. அவை ஒரு மனிதன் மேற்கொள்கிற மருத்துவப் பரிசோதனைக்கு நிகரானவை. மருத்துவப் பரிசோதனையின் முடிவுகள், மனிதனின் உடலில் இருக்கிற நோயைக் கண்டறிந்து சொல்கின்றன. மேலோட்டமாகப் பார்த்தால் அது கசப்பான செய்தி. அதே நேரம், எனக்குள் நோய் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும் அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளவும் அருமையான வாய்ப்பு என்பதால் அதுவே ஒரு நல்லசெய்தி. ஒவ்வொரு சம்பவத்தையும் சரியாகப் புரிந்து கொண்டால் அடுத்த கட்டம் நோக்கி நகரலாம்.

2. அடுத்த புள்ளியைத் தொடப் புறப்படுங்கள்:

ஒரு சம்பவத்தை உணர்வு பூர்வமாய் உள்வாங்குபவர்கள் சற்றும் தயக்கமின்றி அடுத்த அடியை எடுத்துவைப்பார்கள். நெருப்பைத் தொட்டால் சுடும் என்பது அனுபவம் தருகிற பாடம். சுடுகிறது என்பதற்காகவே நெருப்பை வெறுப்பவர்கள், நெருப்பைத் தவிர்ப்பவர்கள் வாழ்வில் பல விஷயங்களை இழக்கிறார்கள்.

நெருப்பை சரியாகப் பயன்படுத்தியவர்கள் அதிலிருந்து வெப்பத்தை சமையலுக்கும், தொழில்நுட்பத்திற்கும் பயன்படுத்தி பலன் பெறுகிறார்கள். ஒரு விஷயத்தில் ஏற்படும் தோல்வி, அடுத்த முறை அதை சரியாக செய்வதற்குக் கற்றுத்தருகிறது. எனவே ஒவ்வொரு பின்னடைவும் உயர்வான முன்னேற்றம் நோக்கி நம்மை உந்தித்தள்ளுகிறது.

3. புள்ளிகளை வைத்துக் கொண்டே செல்லுங்கள்:

புதிய புதிய அனுபவங்களுக்கு, புதிய புதிய தொடர்புகளுக்கு எப்போதும் தாகத்தோடு இருங்கள். தயாராக இருங்கள். தொடர்ந்து செயல்படுவதன் மூலமாக மட்டுமே, வருகிற வாய்ப்புகளை, பெறுகிற தொடர்புகளை, கிடைக்கிற அனுபவங்களை வெற்றிக்கான வாகனங்களாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

தொடர்ந்து இயங்குவதன்மூலம், உங்கள் துறையில் வல்லுனராக நீங்கள் வளர்வது மட்டுமின்றி மற்றவர்களாலும் அறியப்படுவீர்கள். ஒரு துறையில் வளர வேண்டும் என்கிற ஆர்வம் மட்டுமே உங்களை வளர்த்துவிடாது. களத்தில் எவ்வளவு உற்சாகமாக இறங்குகிறீர்கள் என்பதுதான் உங்கள் ஊக்கத்தையும் செயல்திறனையும் உலகுக்குச் சொல்லும். பயன்படுத்தாத வாய்ப்புகளும்., வெளிப்படுத்தாத திறமைகளும் எந்தப் பயனையும் தந்துவிடாது.

4. தவிர்க்க வேண்டிய புள்ளிகளையும் தெரிந்துகொள்ளுங்கள்:

அனுபவங்களைத் தராமல் குருட்டாம்போக்கில் சில ஆதாயங்கள் வருவதுண்டு. அத்தனை வெற்றிகளும் அப்படி வரும் என்று நினைத்துவிடாதீர்கள். சில விஷயங்களைத் தவிர்ப்பதால்கூட, தற்காலிகத் தோல்விகளை ஏற்பதால்கூட நிரந்தரமான வெற்றிகளை நோக்கி நாம் பயணமாகலாம். பயணம் போகிறபோது, பக்குவமில்லாத குறுக்குப் பாதைகளில் போவதன் மூலம் போகிற வாகனம் பழுதாவதுபோல, தவறான அணுகுமுறைகள் உங்கள் வளர்ச்சிக்குத் தடை ஏற்படுத்தக்கூடும். புள்ளிகளை இணைத்துக் கொண்டே போகிற போது தவிர்க்க வேண்டிய புள்ளிகளையும் தெரிந்து கொள்வது அவசியம்.

5. தொலைநோக்கின் தெளிவோடு புள்ளிகளை வையுங்கள்:

நீண்ட காலத் திட்டத்தோடு நீங்கள் செய்கிற சில வேலைகளின் முக்கியத்துவத்தைப் பக்கத்தில் இருப்பவர்களால்கூடப் புரிந்துகொள்ள முடியாது. கண்ணுக்குத் தெரியாத அந்த மாயப்புள்ளிகள் நாளைய வெற்றியின் ஆழமான அடித்தளங்களாய் அமையும். ஆப்பிள் கம்ப்யூட்டரிலிருந்து வெளியேற்றப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் மனதுக்குள் அனிமேஷன் ஸ்டுடியோ என்கிற அற்புதம் ஒளிந்திருப்பதை மற்றவர்கள் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

இந்தத் தொலைநோக்கு நிறைந்த மாயப்புள்ளியை மனதுக்குள் குறித்துக்கொண்டு, வெறித்தனமாக வேகத்தில் அந்தப் புள்ளியை நோக்கிப் புறப்பட்டு வெற்றிகள் குவித்த இன்னொரு சாதனையாளரின் வாழ்க்கையை இங்கே நாம் நினைத்துப் பார்க்கலாம்.

2001 சம்மர் ஒலிம்பிக்ஸில் ஆறு தங்கப் பதக்கங்களையும், 2008 சம்மர் ஒலிம்பிக்ஸில் எட்டு தங்கப் பதக்கங்களையும

சின்ன விஷயங்கள்! சிறந்த வாழ்க்கை!!

வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்வதற்கு வழிகள் என்னென்ன என்று தாமஸ் ஜெஃபர்ஸன் ஒரு பட்டியலே கொடுத்திருக்கிறார். அவை, இவை:

1. இன்றே செய்து முடிக்கக் கூடியதை ‘நாளை’ என்று ஒத்திப் போடாதீர்கள்.
2. நீங்களே செய்துக் கொள்ளக்கூடிய விஷயத்திற்காக இன்னொருவரைத் தொந்தரவு செய்யாதீர்கள்.
3. பணம் கைக்கு வரும்முன்னே அதற்கான செலவுகளைச் செய்யாதீர்கள்.
4. விலை மலிவாய்க் கிடைக்கிறது என்பதற்காக, வேண்டாத ஒன்றை வாங்காதீர்கள்.
5. பசி, தாகத்தை விட சுயமரியாதை பெரிது என்பதை மறவாதீர்கள்.
6. எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாய்ச் சாப்பிடுங்கள்.
7. விரும்பிச் செய்யும் எதற்காகவும் பின்னால் வருத்தப்படாதீர்கள்.
8. கற்பனையில் உருவாகும் கவலைகளை எண்ணி நிஜத்தில் வருந்தாதீர்கள்.
9. மென்மையாக அணுகுங்கள், மேன்மையாக முடிவெடுங்கள்.
10. கோபமாயிருக்கும் போது, பேசுவதற்கு முன்னால் பத்து வரை எண்ணுங்கள். இன்னும் கோபமாயிருந்தால் நூறுவரை எண்ணுங்கள்.

உங்கள் கனவு நிறுவனம்

சிகரத்தின் படிக்கட்டுகள்

தற்போதைய காலம் எதையும் விரைந்து செய்யும் காலமாக இருப்பதை நாம் அனைவருமே உணருகின்றோம். அதற்குச் சாதகமாக எல்லாம் எளிதில் கிடைக்கின்ற சூழலும் இருப்பதால் அனைத்திலும் வேகத்தைப் பார்க்க முடிகின்றது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை சொந்தமாய் ஒரு நிறுவனத்தை தொடங்குவதற்கு பல்வேறு இடர்ப்பாடுகளை சந்திக்க வேண்டி வந்தது. அப்படியும் நினைத்த காலத்திற்குள் தொடங்குவதென்பது எங்கோ ஒரு சிலருக்குத்தான் சாத்தியமாய் இருந்தது. ஆனால் இன்றைய நிலை அப்படி இல்லை. தலைமுறையாய் ஒரு துறையில் ஈடுபட்டிருப்பவர்கள்தான் நிறுவனங்களை நடத்த முடியும். மேலும் கிளைகளை விரிவாக்கம் செய்யமுடியும் என்ற நிலைமாறி, இன்றைய காலத்தில் தகுதியும், தன்னம்பிக்கையும், தைரியமும், பல்வேறு நிறுவனங்களைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருவதைக் கண்கூடாகப் பார்க்கமுடிகிறது. மாநில அளவிலும் தேசிய அளவிலும் பன்னாட்டளவிலும் என நிறுவனங்கள் விரிவடைந்து செல்வதையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

தன்னால் செய்யக்கூடியதைக்கூட செய்வதற்கு துணிச்சல் வராமல் வானளாவி உயர்ந்து நிற்கும் நிறுவனங்களைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டபடி, “நான்கூட இப்படிப்பட்ட நிறுவனத்தை தொடங்கவேண்டும் என்று நினைத்தேன். ஏனோ முடியவில்லை” என்று புலம்புபவர்களுக்கு ஒரு வார்த்தை. “பல்லாயிரம் மைல்களுக்கான பயணம் முதல் அடியில்தான் தொடங்குகிறது” என்பதை நினைவில் வையுங்கள். முதல் அடியை எடுத்து வைக்கவே பயமும் தயக்கமும் இருந்தால் கனவு அப்படியே கனவாகவே இருக்கும். வாழ்நாளும் முடிந்துவிடும். எனவே எதுவாயிருப்பினும் தயக்கத்தை கைவிட்டு துணிச்சலோடு ஒரு முடிவை எடுக்கும்போதுதான் நம் நோக்கங்களை செயல்படுத்த வழிகள் பிறக்கும்.

உங்களின் கனவு நிறுவனத்தை தொடங்குவதற்கு காலதாமதப்படுத்தும் காரணங்கள் வெளியில் இல்லை. உங்களிடம்தான் இருக்கிறது என்பதை உணருங்கள் மந்தமான வாழ்க்கைச் சூழலிலிருந்து விடுபட்டு விரைவில் சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு மாறுங்கள். நீங்கள் கனவு காணும் நிறுவனம் தொடங்கப்படாமல் இருப்பதற்கான காரணங்கள் இல்லாமல் போகட்டும். நிறுவனங்கள் ஏன் தொடங்கப் படுகின்றன? ஒரு நிறுவனத்தை தொடங்குவதற்கான படிநிலைகள் என்னென்ன? என்பதைப் பார்ப்போம்.

நிறுவனங்கள் ஏன் தொடங்கப்படுகின்றன?

நி வழக்கமாக ஓரிடத்தில் சென்று ஒரேமாதிரி பணியைக் குறைந்த வருவாய்க்கு செய்து கொண்டிருப்பதில் இருந்து ஒரு மாற்றம் தேவை.

நி வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற ஆர்வம்.

நி வருவாயைப் பெருக்குவதன் மூலம் வாழ்க்கை வசதிகளை அதிகரித்துக் கொள்ளலாம் எனும் உந்துதல்.

நி தொழில் ரீதியான அனுபவமும், நிதியைத் திரட்டி ஒரு நிறுவனத்தை தொடங்கி நடத்தக் கூடிய ஆற்றலும், சாதகமான புறச் சூழல்களும் அமைந்திருக்கும்போது தாமே ஏன் ஒரு நிறுவனத்தை தொடங்கக் கூடாது? எனும் சிந்தனை.

நி சமூக பொருளாதார அடிப்படையில் தொடர்புகளை அதிகரித்துக் கொள்ளவும், சமூகத்தில் அந்தஸ்து பெறவும் தம்மை அடையாளப்படுத்தவும் தமக்கென்று உள்ள நிறுவனத்தால் மட்டுமே முடியும் என்ற எண்ணம்.

நி சமூக, பொருளாதார அடிப்படையில் தொடர்புகளை அதிகரித்துக் கொள்ளவும், சமூகத்தில் அந்தஸ்து பெறவும், தம்மை அடையாளப்படுத்தவும் தமக்கென்று உள்ள நிறுவனத்தால் மட்டுமே முடியும் என்ற எண்ணம்.

நி எல்லாவிதமான திறன்களையும் வைத்திருக்கும்போது, தான் ஓரிடத்தில் வேலை செய்வதைக் காட்டிலும் பல பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குபவராக தம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற அவா.

நி காலப்போக்கிற்கு ஏற்ப மக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு புதிய நிறுவனங்களைத் தொடங்குதல்.

நி ஓரிடத்தில் படித்த நண்பர்கள், ஒரே இடத்தில் தொழில் பழகியவர்கள் ஒரு குழுவாய்ச் சேர்ந்து தாம் விரும்புகின்ற துறை சார்ந்த நிறுவனத்தை தொடங்குவது.

நி ஏற்கனவே நடத்தப்பட்டுவரும் நிறுவனத்தின் துணைப்பொருட்கள் தேவைகளுக்கு மற்றவர்களைச் சார்ந்திராமல் தாமே அவற்றை இன்னொரு நிறுவனத்தின் மூலம் தயாரித்தால் என்ன என்கின்ற முடிவு.

நி தொலைநோக்கு இலட்சியங்களை அடைவதற்கான முயற்சி.

போன்றவையும் மேலும் பல்வேறு அம்சங்களும் நிறுவனங்கள் தொடங்குவதற்கு காரணங்களாய் அமைகின்றன.

நிறுவனத்தை தொடங்குவதற்கான படிநிலைகள்:

1. புதிய நிறுவனத்தை தொடங்குவதன் முதல்கட்டச் செயல்பாடு ஒரு குழுவை அமைப்பதாகும். ‘ஊர்ழ்ம்ண்ய்ஞ் இர்ம்ம்ண்ற்ற்ங்ங்’ எனப்படும் இக்குழுவில் நான்கு முதல் பனிரெண்டு பேர் வரை இருக்கலாம். நிறுவனம் தொடங்கத் தேவையான அனைத்து அம்சங்களைப் பற்றியும் கலந்தாலோசித்து நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டியது இக்குழுவின் பணியாகும். ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் /பங்குதாரர்கள் தவிர தேவைப்படும் பட்சத்தில் வெளியில் இருந்து வேறு யாரேனும் நிறுவனத்தில் உறுப்பினர்களாக / பங்குதாரர்களாக இணைவது குறித்து வெளிப்படையான ஒரு கூட்டத்தை நடத்தி அறிக்கையை தயாரிப்பதும் இக்குழுவின் வேலையாகும்.

2. நிறுவனத்திற்கான அமைப்புவிதித் தொகுதியையும் (இர்ய்ள்ற்ண்ற்ன்ற்ண்ர்ய்ள்)துணை விதிகளையும் (ஆஹ்ப்ஹஜ்ள்) உருவாக்க அமைப்பு விதிக் குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இக்குழு தற்காலிகமானது. நிறுவனத்தின் கட்டமைப்பிற்கும் தொடர்ச்சியாய் ஓர் ஒழுங்குமுறையோடும், விதிமுறைகளின் படியும் இயங்குவதற்கும் அமைப்பு விதித்தொகுதியும் துணை விதிகளும் மிக மிக அவசியமாகும். இவைதான் நிறுவனத்தின் நோக்கங்களுக்கும், இலட்சியங்களுக்கும் செயல்வடிவம் கொடுப்பவை. முடிவுகளை எடுத்தல், அலுவலர்கள், பணியாளர்களை நியமித்தல், குறிக்கோள்களை அடைவதற்கான வழிவகைகளை உருவாக்கித் தருதல் உள்ளிட்டவை இவ்விதிகளில் அடங்கும்.

3. அமைப்புவிதிக் குழுவினால் உருவாக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பின் அமைப்பு விதிகளிலும், துணை விதிகளிலும் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமெனில் உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்தி முடிவினை மேற்கொள்ளுதல் வேண்டும்.

4. நிறுவனத்தின் உறுப்பினர்கள் அமைப்புவிதிகளை ஏற்றுக்கொண்ட பின் அமைப்பு விதிக் குழுவினை கலைத்துவிட வேண்டும். அக்குழு உறுப்பினர்களுக்கு வேறு பணிகளை ஒப்படைக்கலாம்.

5. தற்காலிகமான ஒரு நிர்வாகக் குழுவினை நியமித்தல் அடுத்த பணியாகும். தகுதியும், ஆர்வமும் கொண்ட உறுப்பினர்களைக் கொண்டு நிர்வாகக் குழுவை அமைக்கலாம். நிறுவனங்களின் தன்மையைப் பொறுத்து மூன்றுமாதம், ஆறுமாதம், ஒருவருடம் என தற்காலிக நிர்வாகக் குழுவிற்கு கால வரையறையை நிர்ணயிக்கலாம். பின்னர் ஆண்டிற்கு ஒருமுறை அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைப்புவிதிகளுக்கேற்ப நிர்வாகக் குழுவினை அமைக்கலாம்.

அமைப்பு விதிகளும் துணைவிதிகளும்:

அமைப்புவிதிகள், நிறுவனத்தின் நோக்கங்களை குறிப்பிடுவதாக இருக்கும் நிறுவனத்தின் கட்டமைப்பையும், நிறுவனம் செயல்படப்போகும் வழிமுறைகளையும் அமைப்பு விதிகள்தான் எடுத்துக் கூறும். துணை விதிகளை உருவாக்கும் அதிகாரத்தையும் அமைப்புவிதி கொண்டிருக்கும்.

ஒவ்வொரு உறுப்பினரும் மிகத் துல்லியமாக நிறுவனத்தின் நோக்கம், செயல்பாடுகளை அறிந்து வைத்திருத்தல் அவசியம். நிறுவனத்தின் அமைப்புவிதித் தொகுதியும், துணைவிதிகளையும் படியெடுத்து வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.

அமைப்புவிதித் தொகுதி (இர்ய்ள்ற்ண்ற்ன்ற்ண்ர்ய்ள்)

: நிறுவனத்தின் பெயர்

: நிறுவனத்தின் இலட்சியங்கள்

: பதிவுசெய்யப்பட்ட நிறுவனத்தின் முகவரி

: நிறுவனத்திற்கான அடையாள முத்திரை

: நிறுவனத்திற்குள் அதிகாரப் பகிர்வு

: முடிவெடுக்கும் அதிகாரம் உடைய நிரந்தர உறுப்பினர்கள்

: அலுவலர்களுக்கான பதவிப் பெயர்கள், கடமைகள், விதிமுறைகள்

: இயக்குநர்கள் குழு மற்றும் நிர்வாகக் குழுவிற்கான வாக்களிப்பு உரிமையுடன் கூடிய விதிகள்

: உரிமைகளை அளிக்கும் அதிகாரி

: நிறுவனத்திற்கான விதிமுறைகளில் தேவைப்படும் திருத்தம் கொண்டு வரும் வழிமுறைகள்

மேற்கண்டவை மட்டுமல்லாது அவரவர் நிறுவனம் சார்ந்து தேவைப்படுவனவும் இவற்றில் அடங்கும்.

துணைவிதிகள் (ஆஹ்ப்ஹஜ்ள்)

: உறுப்பினர்கள் / பங்குதாரர்களை நிறுவனத்தில் சேர்க்கும் முறை

: கௌரவ உறுப்பினர்கள், குடும்பம் சார்ந்த உறுப்பினர்கள், நிறைஉரிமையில்லா உறுப்பினர்களுக்கான கட்டளை விதிகள்

: நிறுவனத்தில் உறுப்பினர்களாய் இருப்பதற்கான கால வரையறை விதிகள்

: அலுவலர்கள், குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தல், நீக்குதலுக்கான வழிமுறைகள்

: உறுப்பினர்கள் / பங்குதாரர்கள் முதலீடு செய்வதற்கான வழிமுறைகள்

: மாதக்கூட்டம், ஆண்டுக் கூட்டம், சிறப்புக்கூட்டம், அவசரக் கூட்டம் நடத்துவதற்கான வழிமுறைகள்

: நிறுவனத்தின் பொதுக்கூட்டம், இயக்குநர்கள் குழு கூட்டம், ஒவ்வொரு பணிக்கென நியமிக்கப்பட்டுள்ள குழுக்களின் கூட்டம் ஆகியவற்றை நடத்துவதற்கு தேவைப்படும் குறைந்தபட்ச உறுப்பினர் எண்ணிக்கை.

: ஒழுங்குவிதிகளுக்கான அதிகாரம்

: முக்கிய முடிவுகள் எடுக்கும்போது வாக்கெடுப்பிற்கு விடுதல்சார்பு

: பணியாளர்களுக்கான விதிமுறைகள் மற்றும் நிறுவனத்தில் அவர்களின் நிலை (நற்ஹற்ன்ள்)

: துணைவிதிகளை திருத்தியமைக்கும் வழி முறைகள்

: சார்புடைய நிறுவனங்களுடன் மேற் கொள்ள வேண்டிய தொடர்புமுறைகள்

: நிறுவனம் சார்ந்த வழக்குகளுக்கான நீதிமன்ற எல்லை. இவற்றோடு தேவைப்படும் மற்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரு நிறுவனத்தை தொடங்கி நடத்துவதற்கான அடிப்படையான செயல்களை இதுவரை பார்த்தோம். இனி அந்நிறுவனம் வெற்றிகரமாய் இயங்கவும், சிகரத்தின் படிகளில் நம்மை இட்டுச் செல்லவும் அச்சாணியாய் இருக்கும் நிர்வாகம் குறித்து அடுத்த இதழில் பேசுவோம்.

தள்ளிப்போடாமல் இருப்பது எப்படி?

இந்தக் கேள்வியை யாரிடமாவது கேட்டு பதில் பெறலாம் என்று பரபரப்பாக இருக்கிறதா? பொறுங்கள் – கொஞ்சம் தள்ளிப் போடுங்கள்!! என்ன – முதலுக்கே மோசமாக இருக்கிறதா? யாரையாவது கேட்பதற்கு முன்னால் உங்களையே சில கேள்விகள் கேட்டுக் கொள்ளுங்கள்.

1. வேறு முக்கியமான வேலை வந்தததால் எடுத்த வேலையைத் தள்ளிப் போடுகிறீர்களா? இல்லை, சோம்பல் காரணமாகத் தள்ளிப் போடுகிறீர்களா?

2. நேரத்தை வீணடிப்பதென்பது நம்மையும் அறியாமல் நிகழக்கூடிய விஷயம்தான். ஒரு நாளில் எந்த நேரத்தை எப்படி வீணடித்தீர்கள் என்பதை தினமும் டயரியில் குறித்து வையுங்கள்.

3. தள்ளிப் போடுவதை ஒரு வழக்கமாகத் தொடங்கி, வாழ்க்கை முறையாகவே ஆக்கிக் கொண்டவர்கள் எத்தனை பேர்களை உங்களுக்குத் தெரியும்? அவர்கள் என்ன ஆனார்கள்?

இதையெல்லாம் செய்தாலே தள்ளிப் போடுவதில் இருக்கும் எதிர்மறையான விளைவுகள் பற்றி நமக்குப் புரிந்துவிடும்.

ஒரு மளிகைக் கடைக்குப் போகும்போதே நம்மிடம் வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியல் இருக்கிறதே, ஒவ்வொரு விடியலின் போதும் அந்த நாளில் செய்து முடிக்க வேண்டிய விஷயங்களின் பட்டியல் வேண்டாமா என்ன? தள்ளிப் போடும் பழக்கம் நம்மை விட்டுத் தள்ளிப் போக அடிப்படையில் இன்னொரு வேலையையும் செய்தாக வேண்டும். அதுதான் விடியல் பொழுதைப் பயன்படுத்துவது. விடிந்து சிறிது நேரம் சென்றபிறகு விழிப்பவர்களுக்கு நாள் நகர்கிற வேகத்திற்கு ஈடு கொடுத்து, அதைத் துரத்திப் பிடிப்பதே பெரியபாடாகி விடுகிறது.

விடியல் நம்மை நன்றாக வேலை வாங்கக் கூடிய நேரம். தள்ளிப் போடுவதைத் தவிர்க்க வேண்டுமென்றால், அந்த வேலைக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களை சேகரித்துக் கொண்டு, அதன் பின்னர் வேலையைத் தொடங்குவதே உத்தமம்.

இந்தக் கட்டுரையை எழுதுவதற்குக்கூட பேனா, பேப்பர், கிளிப், எழுதுவதற்கான அட்டை என்று ஒவ்வொன்றையும் தவணை முறையில் எடுத்துக் கொண்டு வந்தால், இதை எழுதி முடிக்கிற வேலை கண்டிப்பாகத் தள்ளித்தான் போகும்.

இதையெல்லாம்விட முக்கியம், ஏன் தள்ளிப் போடுகிறோம் என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வது. ஒரு நாள் முழுவதும் இயந்திரம்போல் யாரும் வேலை பார்த்துக் கொண்டே இருப்பதும் சாத்தியமில்லை. உல்லாசத்திற்குக் கொஞ்ச நேரம், பொழுதுபோக்குக் கொஞ்ச நேரம், நண்பர்களுடன் பேச சிறிது நேரம் என்று எத்தனையோ விஷயங்களுக்கு சில நிமிஷங்களை அவ்வப்போது ஒதுக்க வேண்டிவருகிறது.

ஏகத்துக்கு வேலை இருப்பதாக நினைப்பவர்கள் இந்த சின்னச் சின்ன சந்தோஷங்களை முற்றாக நீக்கிவிட்டு, வேலையிலேயே முழு கவனம் செலுத்துவதாய்த் தொடங்குவார்கள். இடையில் அலுப்புத்தட்டத் தொடங்கிவிட்டால் போச்சு. இந்த வேலை – சொந்த வேலை – எந்த வேலையையும் செய்யாமல், வேலைக்கான ஆயத்தப் பணியை வேண்டுமென்றே நீட்டிக்க மனது தூண்டத் தொடங்கும். உற்சாகமும் தூங்கத் தொடங்கும்.

நம்முடைய நேரங்களை சமவிகிதத்தில் சரியாகப் பங்கிட்டு வேலைகளில் ஈடுபடப் பழகிவிட்டால் நேரம் வீணாவதை நிச்சயமாகத் தடுக்கலாம்.

என்ன செய்ய விரும்புகிறோம் – என்ன செய்து கொண்டிருக்கிறோம். இந்த இரண்டுக்கும் நடுவிலான இடைவெளியை அதிகமாக்குவதே தள்ளிப் போடுகிற மனோபாவம்தான்.

இன்னொன்றும் முக்கியம். ஒரு நாளில் எத்தனையோ வேலைகள் உங்களுக்கு இருக்கலாம். ஆனால் மிக முக்கியமான வேலை என்று மூன்றை மட்டும் பட்டியலிடுங்கள். அவற்றை முதலில் முடித்துவிடுங்கள். அதன்பின், மற்றவற்றைச் செய்ய உங்களுக்கு உற்சாகம் தானே பிறக்கும்.

நாள் முழுவதும் காரியங்களைத் தள்ளிப் போடாமல் சாதகமாகச் செய்ய வேண்டுமென்றால், அதற்கு விடியற்காலை விசேஷமானது என்று பார்த்தோம். விடியற்காலையைப் பயன்படுத்திக்கொள்ள மிகவும் உகந்த வழி, இரவு விரைவிலேயே உறங்கப் போவதுதான். தூங்குவதற்கு இரண்டு மணி நேரங்கள் முன்பே தொலைக்காட்சி – கணினி ஆகியவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

தள்ளிப் போடத் தூண்டும் சோம்பல், உங்களைவிட்டுத் தள்ளிப் போகும். தள்ளிப் போடாதீர்கள். துள்ளியெழுங்கள்.

சுய வளர்ச்சியும் விஞ்ஞான வழிமுறைகளும்

வருடங்களாக சுய முன்னேற்ற முயற்சிகள் செய்து வந்துள்ள எனக்கு, ஏன் விஞ்ஞான முறையில் சுயவளர்ச்சியை, மாற்றங்களை, தாக்கங்களை ஆராயக் கூடாது என்ற கேள்வி என்னுள் எழுந்தது. எனவே புதிய முயற்சியை மேற்கொண்டு, அவற்றில் நான் கண்டு கொண்ட சில அனுபவங்களை, நேரிடையான சத்தியத்தை பகிர்ந்துகொள்ள முன் வந்துள்ளேன்.

முதற் சாதனம்:

பங்கேற்பு சூழ்நிலைகளின் ஆய்வு (Participatory situation Analaisis)

நான் முதன் முதலில் ஆராய்ந்தது என் அக புறவாழ்வின் சூழ்நிலைகளைப்பற்றி. என் சூழ்நிலைகளை ஆய்வு செய்ய, மேற்கூறிய சாதனத்தின் உதவியை நாடினேன். என் எண்ணத்தில், உணர்ச்சிகளில் செயல்பாட்டில் வழிமுறைகளிலுள்ள சூழ்நிலைகளை ஆராய்ந்தேன். இதைச் செய்ய நிதானமாக, அமைதியான காலை பொழுதினில் 5 நிமிடத்தில் தொடங்கி, தற்பொழுது 1 மணி அளவில் தினந்தோறும் தியானத்தின் மூலமாக ஆய்வு செய்துகொண்டே வளர்கின்றேன். இவ்வாறாக என் உள் யாத்திரையில் நான் கண்டுகொண்ட முடிவுகள் பல. அவற்றில் நான் 15 அக புற சூழ்நிலைகளை தேர்வு செய்தேன். அவைகள் பின் குறிப்பிடப்பட்டுள்ளன.

இரண்டாம் வழிமுறை:

நிறை, குறை, சந்தர்ப்ப அபாய வழிமுறை (Strenth, Weakness, Opportunity, & Threat Analysis SWOT Analysis)

மேற்கூறிய வழிமுறையை உபயோகித்து நான் சேகரித்த 15 சூழ்நிலைகளை ஆய்வு செய்தேன். 9 நிறைகளாகவும், 6 குறைகளாகவும் உள்ளதை உணர்ந்தேன். என்னுள் கண்டுகொண்ட 6 குறைகளை ஏன் சந்தர்ப்பங்களாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற கேள்வி என்னுள் எழுந்தது. அவ்வாறே தூண்டிய எண்ண வழியிலேயே யாத்திரை செய்தேன். என் 9 நிறைகளையும் நான் ஒவ்வொன்றாக உபயோகித்தேன். இந்நிறைகள் எனக்கு தேவையான நம்பிக்கையை வளர்த்தன. இவ்வழியில் சென்றபொழுது பல சமயம், வீழ்ச்சிகளையும், சிலசமயம் வெற்றிகளையும் கண்டு, கைவிடாது முன் சென்றேன். 6 சூழ்நிலைகளில் மாற்றங்கள் தர, ஒவ்வொன்றாக கையாண்டேன். முதன் முதலில் எனக்கு மிகவும் சுலபமாக இருந்ததையும், பின் படிப்படியாக கஷ்டமாக இருந்ததைக் கையாண்டு, மாற்றங்களைத் தந்தேன். இம்மாற்றங்களினால் என் எண்ணத்திலும், உணர்ச்சிகளிம், செயல்முறைகளிலும் மாற்றங்கள், தாக்கங்கள் ஏற்பட்டன.

நான் தினந்தோறும் ஒவ்வொரு நிமிடமும் புதியவன் ஆக வேண்டுமென ஆவல் கொண்டேன். என்னிலுள்ள நற்பண்புகளை காத்திடவும் வளர்த்திடவும், கண்கானித்தல் வேண்டுமென அரிய நோக்கத்தைப் பெற்றேன்.

மூன்றாம் வழிமுறை:

ஒரு வடத்திற்குள் எங்கு எப்படி, எந்த நிலைகளில் மாற்றங்கள் தர (வெளிப்படையான) திறந்த வெளிப்படையான கேள்விகளை (Open ended questions) என்னையே நான் கேட்க ஆரம்பித்தேன். என்னுள் இருக்கும் 6 எதிரிடைய சந்தர்ப்பங்களை, வகை செய்தேன். இந்த ஆறு நிலைகளிலும் ஒரு உறவைக் கண்டேன். எல்லாம் என் உணர்ச்சிகளுக்கு சம்பந்தப்பட்டவை என்று.

நான்காம் வழிமுறை:

காரண காரணிகளின் சம்பந்த முறையில் ஆய்வு செய்வது
(Cause Effect relationships Tools)

என்னுடைய இந்நிலைக்கு காரணங்கள் யாவை? என ஆராய இச்சாதனத்தை தேர்ந்தெடுத்தேன். இதைச் செய்யும்பொழுது எத்தனையோ உட்புறதடைகள் வந்தன. பலமுறை மனம் தளர்ந்தேன். பன்முறை பலர் என்னை பரிகசித்தனர். வீட்டில் இருப்பவர்கள் உட்பட. இருப்பினும் தொடர்ந்து முயற்சிகள் செய்தேன். நேரிடை காரணங்கள், எதிரிடை காரணங்களையும் ஆராய்ந்தேன். தடை செய்யும் காரணங்கள், துணை செல்லும் காரண காரணிகளை ஆராய்ந்தேன்.

இம்முறையினால், நான் குழந்தைப் பருவத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. அங்கு கீழ் மனதில் கண்டவைகள், அனுபவித்த உணர்ச்சிகள், நிகழ்ச்சிகளை ஆழமாக உணர்ந்தேன்.

என் தந்தையின் வழிமுறைகளில் சில, முக்கியமாக தண்டிப்பது எனக்கு சிறியவனாக இருக்கும் பொழுதிலிருந்தே பிடிக்கவில்லை. எனவே, என் தந்தையையே முழுமையாக மனதினில் வெறுத்து வந்தேன். அதை கீழ்மனதில் புதைத்தேன். பின், அந்நிலையில் எல்லோரையும் முக்கியமாக ஆண்களை, என் தந்தையின் மறு உருவமாக நினைத்து, எல்லோரையும் உணர்ச்சிவசமாக வதைத்து வந்ததை ஆய்வு செய்தேன். இதனால் என் தந்தை வேறு, அவர் வழிமுறைகள் வேறு. அவர் தண்டிக்கும் முறைகள் அவருடைய தாய் இல்லை என்பதை, நான் பாகுபாடு செய்தேன். எல்லோரும் என் தந்தை இல்லை என்பதையும் என்னில் இருந்த எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் செயல்களையும் தூய்மை செய்து மறுபிறவி எடுத்தேன்.

என் சுய முன்னேற்றங்களை, விஞ்ஞான ரீதியாக கண்காணித்து வருகின்றேன். மற்றும் என்னுடைய சேவை நிறுவனத்தின் மூலமாக மேற்கூறிய பல சாதனங்களை மக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து, குழுக்கள் மூலமாக வறுமைக் கோட்டிலிருந்து வெளிவர பல ஆய்வுகள் செய்துகொண்டு வருகின்றேன். இம்முறையினால் காணும் முன்னேற்றம் கண்டு, நானே மிகவும் வியந்துள்ளேன்.

நீங்களும் ஒரு கை பார்க்கலாமே?

தயாரா!

பின்குறிப்பு:

- படித்த பிறகு உமது தாக்கம் என்ன?

- அனுப்புங்கள் உங்கள் அனுபவங்களை “நமது நம்பிக்கை” ஆசிரியருக்கு

- பலரும் பயனும் பலனும் பெறட்டும்

- அனுபவங்களை அனுப்புபவர்களுக்கு நன்றிகள் பல

“9 நிறைகளின் சூழ்நிலைகள்”

1. நிறைய கனவுகள் காண்பது
2. எப்பொழுதும் புதியவைகளை செய்யத் துடிப்பது
3. புத்தியை கூர்மையாக வைக்க, புத்தகங்களைப் படிப்பது, விவாதிப்பது
4. கடின உழைப்பு
5. தனித்தன்மையில் வாழ்வது
6. மனதில் பட்டதை உடனே தெரியப்படுத்துவது
7. என்னை நான் நேசிப்பவன். அவ்வாறே பிறரையும் நேசிப்பவன்.
8. ஏழைகளுக்கு உதவி செய்யும் “வெறி” கொண்டவன்.
9. எல்லோருக்கும் மரியாதை கொடுப்பவன்.

“6 குறைகளின் சூழ்நிலைகள்”

1. அதிகமாக கோபப்படுதல்
2. நிறைய சாப்பிடுதல்
3. உணர்ச்சிகளை உடனுக்குடன் வெளிப்படுத்துதல்
4. பயமோடு கலந்த உணர்ச்சிகள்
5. எல்லோரையும் சந்தேகிப்பது
6. சாவைப் பற்றி எண்ணி பயப்படுவது.

Friday, April 26, 2013

சிந்தனைசெய் மனமே!

எது கடினம்

“அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று எதையும் நம்பாதே. எவன் சொன்ன சொல்லானாலும் அதை உனது சுயமதியால் ஏன் எதற்கு என்று சிந்தித்துப் பார்”
– சாக்ரடீஸ்

மனிதனுக்கு எது கடினமான வேலை. எவரெஸ்ட் போன்ற உயர்ந்த பனி மலைகளில் ஏறுவதா? வறண்ட பாலைவனத்தில் தாங்க முடியாத தலைச்சுமையோடு வெட்ட வெளியில் நடப்பதா?


பெரிய கோடரியால் மரத்தை வெட்டிச் சாய்ப்பதா? கொடிய போர்க்களத்தில் உயிரை பணயமாக வைத்து முன்னேறிச் செல்வதா? இவைகள் யாவும் கடினமான வேலையா?

இல்லை, இல்லை, இல்லவே இல்லை! நம்மில் அநேகருக்கு இவைகள் யாவையும் விட மிகக் கடினமாக வேலை ஒன்று உண்டு. அதுதான் சிந்திப்பது!

மனிதன் செய்யக்கூடிய வேலைகளில் மிக உயர்வானது எது? எத்தகைய கின்னஸ் சாதனைகள் இருக்கின்றதோ, அத்தனையும் விட உயர்வானது எது? சிந்திப்பது! ஆம். அதுவேதான்.

மனிதனின் பலம் எது?

குதிரையைப் போல ஓட முடியுமா? பறவையைப் போல பறக்க முடியுமா? யானையைப் போல மரங்களை சாய்க்க முடியுமா? சிங்கத்தைப் போன்ற பெரிய பற்கள் நம்மிடம் உள்ளதா? உறுதியான கொம்புகள் உள்ளதா? நீண்ட துதிக்கை உள்ளதா? இல்லையே!!

நம்மால் ஒரு நாயைக்கூட அல்லது பாம்பைக் கூட வெறும் காலினாலோ கையினாலோ அடித்துவிட முடியுமா? அதற்குக்கூட ஒரு தடியின் துணை வேண்டுமே! மனித உடல் எத்தனை மென்மையானது. நடந்து செல்ல வேண்டுமானாலும் கூட ஒரு காலணியின் துணை தேவைப்படுகிறது அவனுக்கு. இத்தனை பலவீனமான உடலைக் கொண்டு மனிதன் எப்படி வாழ்கிறான்? எப்படி உலகில் உள்ள அத்தனை உயிரினங்களை விடவும் உயர்ந்து நிற்கிறான். இந்த மனிதனின் பலம் எது? அதுதான் மனிதனின் சிந்தனையின் பலம்!

அதுதான் ஆறாவது அறிவு:

காலம் காலமாக எத்தனையோ சிந்தனையாளர்கள் தங்களின் சிந்தனையால் புதிய புதிய வழிகளையும், புதிய புதிய கருவிகளை கண்டுபிடித்து உலகத்தை முன்னேற்றி இருக்கிறார்கள்.

ஆனால் நம்மில் அநேகர் நமக்கு கொடுக்கப்பட்ட இந்த ஆறாவது அறிவான மனிதனின் மிகச் சிறந்த, பலமான இந்த அறிவை பயன்படுத்துகிறோமா? இந்த அறிவு தேவை இல்லை என்று மூட்டை கட்டி அட்டாலியில் போட்டு விட்டவர்கள் அநேகர். அநேகர் தாங்கள் போகும் இடத்திற்கு இந்த மூளையை எடுத்துச் செல்வதே இல்லை.

எல்லா மனிதர்களுக்கும் தலை இருக்கிறது. ஆனால் தலை தலையாக இல்லை. என்ன ஆச்சு? தலை வாலாக மாறிவிட்டது!

எது ஆடுகிறதோ அது வால்
எது சிந்திக்கிறதோ அது தலை

நம்மில் அநேகர் பிறர் சொல்லை ஆமோதிக்க தலையாட்டுவதற்கு மட்டுமே தலையை பயன்படுத்துகிறார்கள். சிந்திப்பதற்கு அல்ல. அப்போது அது வால்தானே?!
மறுப்பது ஏன்?

ஏன் நாம் சிந்திக்க மறுக்கிறோம்.
ஏன் சிந்திக்க தயங்குகிறோம்.

அப்படி ஒரு பழக்கம் இல்லீங்க! அது நமக்கு தேவை இல்லீங்க! ரிஸ்க் எடுக்க விரும்பலீங்க! நடக்குதா, இது போதும்டா சாமி. எதுக்கு இந்த வேண்டாத வேலை. மூளைக்கு வேலை கொடுத்தால் நிம்மதி கெட்டுப் போகுங்கோ. போகிற போக்கை மாற்ற, புதிய வழி காண அநேகருக்கு ஒரு தயக்கம். ஆறுகள் கூட தான் போகும் வழியை மாற்றலாம். ஆனால் இந்த சாதா மனிதர்கள் யாரும் தன் போக்கை மாற்ற விரும்புவதில்லை.

மாறுபட்டு சிந்திக்க, வேறுபட்டு செயல்பட, ஒரு துணிவு வேண்டியதிருக்கிறது. ஒரு வித அச்ச உணர்வு, நம்மை மாறுபட்டு சிந்திக்க, நமது கூட்டத்தை தாண்டி வர அனுமதிப்பதில்லை. ஆனால் சிந்திக்காத மனிதர்கள் செம்மறியாட்டு கூட்டங்கள்.

ஒரு புகை வண்டியில் நிறைய பெட்டிகள் இருக்கலாம். ஆனால் அத்தனை பெட்டிகளையும் இழுத்துச் செல்லும் இஞ்சின் ஒரே ஒரு பெட்டியில்தான் இருக்கிறது.

அது போலவே இந்த உலகை இழுத்துச் செல்பவர்கள், இந்த உலகை மாற்றியமைப்பவர்கள், இந்த உலகை உருவாக்குபவர்கள் சிந்திக்கும் சில மனிதர்களே! அவர்கள் ஆயிரத்தில் ஒன்று இருப்பது படு அபூர்வம்தான்.

இப்படி சிந்திப்பவர்கள் அறிவியல் அறிஞர்களாகவும் ஆன்மிக அறிஞர்களாகவும், அரசியலில் பெரிய தலைவர்களாகவும், சிறப்புற்று விளங்குகிறார்கள். இந்த உலகம் என்ற மாளிகையை கட்டும் உன்னத சிற்பிகள் இவர்களே!

கோபர்னிக்கோ, கலிலியோ, நியூட்டன், ஐன்ஸ்டீன், டார்வின், எடிசன் இவர்கள் அறிவியல் புரட்சி செய்தவர்கள்.

வால்டேல், ரூஸோ, காரல் மார்க்ஸ் இவர்கள் அரசியல் புரட்சிக்கு வித்திட்டவர்கள்.
புத்தர், ஏசு, நபி, காந்தி போன்ற ஆன்மீக சிந்தனையாளர்கள் உலகை புரட்டிப் போட்ட உத்தமர்கள்.

எது சிந்தனை?

நம்மில் அநேகருக்கு எது சிந்தனை என்று தெரிவதில்லை. மனதில் இடையறாது ஓடிக் கொண்டிருக்கும் எண்ணங்களே சிந்தனை என தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிலருக்கு ஒரு பிரச்சனை வந்துவிட்டால் அதை மனதில் இடையறாது நினைத்து நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இதை சிந்தனை என தவறாக நினைக்கிறார்கள்.

இது போலவே இன்னும் சிலர் இனி நடக்கப்போகிற ஒரு நல்ல நிகழ்ச்சி, மனதுக்கு பிடித்த நிகழ்வு இவைகளை நினைத்து ஆனந்தக் கற்பனையில் இருப்பார்கள். இதுவும் சிந்தனை இல்லை!

கணிதத்திற்கு விடைகாண முயலும்போது, புதிர் கணக்குகளுக்கு விடை தேடும்போது, நாம் உண்மையிலேயே சிந்திக்கிறோம். ஆகவேதான் சிந்திக்க விரும்பாத அநேகருக்கு கணக்கு என்றால் பிணக்கு ஆகத் தெரிகிறது.

பிரச்சனைகளை அலசி ஆராய்தல் ((Analysing), கணக்கிடல் ((Calculation), திட்டமிடல் (Plan), புதிய வழி காணல் இவைகளே சிந்தனை எனப்படும்.

ஒவ்வொரு பிரச்சனையும், ஒவ்வொரு சிக்கலும், நமது சிந்தனைக்கு வேலை கொடுக்க வந்த அருமையான தருணங்கள். உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு சிந்திக்க பழக வேண்டும்.

இது போன்று நாம் சிந்திக்க முனையும்போது மனம் அங்கும் இங்குமாக அலைபாயும், தடம் மாறிப் போகும். ஆகவே தெளிவாக சிந்திக்க விரும்பினால் ஒரு பேப்பர், ஒரு பேனா, கொஞ்சம் மூளை இவைகளை எடுத்துக்கொண்டு, ஒரு இடத்தில் அமர்ந்து செயல்பட்டால் எப்படிப்பட்ட சிக்கல்களுக்கும் தீர்வு கண்டுவிடலாம் என்கிறார் பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அமெரிக்க அறிவியல், அரசியல் அறிஞர்.

யார் அறிவாளி?

நிறைய நூல்களை படித்தவர்கள் அறிவாளிகளா? இது சரியா?

நிறைய உணவுகளை உண்பவர்கள் யாவரும் பலசாலிகளா? எவர் நல்ல உணவுகளையும் உண்டு, கடினமான உடல் உழைப்பு செய்கிறார்களோ அல்லது கடின உடற்பயிற்சி மேற்கொள்கிறார்களோ அவர்களே பலசாலிகளாக இருக்க முடியும். வெறுமனே உணவை மட்டும் உண்பதால் உடல் பலம் வந்துவிடாது. அது போலவே நிறைய வாசித்தால் அறிவாளிகள் ஆகிவிட முடியாது. யோசிக்க வேண்டும். நிறைய படித்தவர்களிடம் நிறைய தகவல்கள் இருக்கலாம். ஆனால் அறிவாளிகள் ஆக முடியுமா? படிப்பு நல்ல தகவல்களையும் நமது சிந்தனையை தூண்டவும் உதவும். அப்போதும் சிந்திக்காவிட்டால் என்ன பலன்.

படித்தது ஏன் நினைவில் இருப்பதில்லை

ஒரு மரக்கட்டைமேல் இரும்பு துண்டை போட்டால் அந்த இரும்புத் தூள் மரக்கட்டையில் ஒட்டுமா? ஒரு காந்தத் துண்டின் அருகே இரும்புத்தூள் இருந்தால்கூட அது ஓடிப் போய் ஒட்டிக்கொள்கிறது. காந்தத் துண்டின் ஈர்ப்பினால் இரும்புத்தூள் போய் ஒட்டிக்கொள்கிறது. எவரிடம் தேடுதல் நிறைய இருக்கிறதோ, எங்கே சிந்தனை இருக்கிறதோ, அவர் படிப்பது அவரிடம் இயல்பாக ஒட்டிக் கொள்கிறது. தேடுதல் இல்லாது ஆர்வம் இல்லாது படிப்பவர்கள் படிக்கும் படிப்புகள் அவர்களிடம் ஒட்டாமல் தனியாக நிற்கின்றன. அவர்கள் ஒரு பாத்திரம் (Carrier) போல இருக்கிறார்கள்.

செரிமானம் ஆகாத உணவு உடலில் ஒட்டாமல் வெளியே செல்வது போல சிந்தனை இல்லாமல் படிக்கும் படிப்பு புத்தியில் ஒட்டுவதில்லை.

தொட்டியில் இருக்கும் நீரை குடத்தில் மொண்டு அண்டாவில் கொண்டு ஊற்றிய பின் அந்தக் குடத்தில் நீர் இருப்பதில்லை அல்லவா!

அநேகரின் படிப்பு இப்படித்தான் காணப்படுகிறது. புத்தகத்தை படித்து தேர்வில் கொட்டிவிட்டு தேர்வு முடிந்ததும் மறந்து விடுகிறோம். அநேக மாணவர்களின் இன்றைய படிப்பு இப்படித்தான் ஒட்டாமல் இருக்கிறது. இன்று இந்த காலி குடம் போலவே காலியாக இருக்கிறது அநேகரின் மூளை.

கார்பரேட் நிறுவனங்கள்

மிகப்பெரிய கார்பரேட் நிறுவனங்களில் (R & D Department) புதிய வழிகளையும், புதிய கண்டுபிடிப்புகளையும் உருவாக்க ஓர் ஆராய்ச்சி பகுதி செயல்படுகின்றது. பெரிய நிறுவனங்கள் இந்த பகுதிக்கு பல கோடிகளை செலவு செய்கிறார்கள். இந்த (R & D) ஆராய்ச்சி பகுதி எந்த அளவு சிறந்து விளங்குகிறதோ அந்த அளவுக்கு அந்த கம்பெனியின் சாதனங்கள் உயர்வு பெற்று விளங்குகின்றன. ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியில் பெரும்பகுதி இந்த ஆராய்ச்சி பகுதியின் கண்டுபிடிப்புகளை சார்ந்திருக்கிறது. இதுபோலவே எந்த சமுதாயம் புதிய வழிகளை சிந்திக்கிறதோ அந்த சமுதாயம் விரைவாக உயர்கிறது.

மனஅழுத்தம் நீங்க 30 வழிகள்

வாழ்வின் போக்கு பிடிபடும் வரையில் அழுத்தங்களின் தாக்குதலுக்கு ஆளாகும் பலரும் ஆடிப்போய் விடுகிறார்கள். செய்த செயல் ஒன்றிற்கு எதிர்பார்த்த விளைவு ஏற்படாத போதும், எதிர்பாராத எதிர் விளைவுகள் ஏற்படும்போதும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

வெளியே தெரியாத வலி, சொல்லத் துடித்தாலும் சொல்ல விடாமல் தடுக்கிற தயக்கம், எந்தச் செயலையும் செய்ய விடாமல் சோர்ந்துபோகச் செய்யும் மன உளைச்சல் ஆகியவை மன அழுத்தத்தின் அடித்தளங்களும் அறிகுறிகளும் ஆகும்.

சிகிச்சை தேவைப்படும் அளவு மன அழுத்தத்தை முற்ற விடுபவர்களுக்கு சிகிச்சையே தீர்வு. ஆனால் அன்றாட வாழ்வில் நிகழும் சம்பவங்களால் ஏற்படும் பின்னடைவுகள் – மன அழுத்தங்கள் ஆகியவற்றை சரி செய்ய உலகெங்கும் உள்ள மனவியல் நிபுணர்கள் சில வழிமுறைகளைக் கண்டறிந்துள்ளனர்.

பல்வேறு சூழல்களில் பரிசோதிக்கப்பட்டு பலன் தருபவை என்று உறுதி செய்யப்பட்டுள்ள இந்த வழிமுறைகள், மன அழுத்தத்திலிருந்து உடனடி விடுதலை தருவதுடன் அடுத்த படிநிலை நோக்கி நகர்வதற்கும் கைகொடுக்கின்றன.

மனச்சோர்வைவிட மன அழுத்தம் எளிதில் கையாளக்கூடியது என்பதை மறந்துவிடக்கூடாது. இனம் புரியாத காரணங்களால் மனச் சோர்வு ஏற்படலாம். ஆனால் மன அழுத்தத்திற்கென்று குறிப்பிட்ட காரணங்கள் உண்டு. காரணங்களைக் கண்டறிய முடிகிறபோது தீர்வைக் கண்டடைவதும் எளிது.

மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தரக்கூடிய சில பயிற்சி முறைகள், நீண்டகால நிவாரணத்திற்குரிய பயிற்சிமுறைகள் – இரண்டையுமே மனவியல் நிபுணர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள். அவற்றை இப்போது பார்க்கலாம்.

ஆழ்ந்த சுவாசம்:

கீழை நாடுகள், மேலை நாடுகள் இரண்டுமே ஒப்புக்கொள்கிற உத்தி இது. ஆழ்ந்த சுவாசத்தின் மூலம் இரத்தத்தில் பிராணவாயுவின் அளவு அதிகரிப்பதால் உங்கள் தசைகள் தளர்வுநிலை அடைகின்றன. மனம் இயல்புநிலை அடைகின்றது. அடிவயிற்றில் கையை லேசாக அழுத்திக்கொண்டு ஆழமாக சுவாசிப்பதன் மூலம் அடிவயிற்றின் அசைவுகளையும், உடலும் மனமும் தளர்வு நிலை அடைவதையும் கண்கூடாக உணரலாம்.

காட்சிப்படுத்துங்கள்:

பூப்பூவாய்த் தூவும் வென்னீர் ‘ஷவரின் கீழ் கண்மூடி நிற்பது போலவும், உங்கள் அழுத்தங்களும் பதட்டங்களும் அடித்துக் கொண்டு போவது போலவும் மனதுக்குள் ஒரு காட்சியை வரைந்து பார்க்கச் சொல்கிறார்கள் மனவியல் நிபுணர்கள். அமைதியான இடமொன்றில் ஏகாந்தமாய் நீங்கள் கண்மூடிப் படுத்திருப்பது போன்ற காட்சியையும் உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால் அந்தக் காட்சியைத் துல்லியமாக உணர்வது அவசியம். அங்கு பார்வையில் படிகிற அம்சங்கள், கடற்கரையின் உப்பு வாசனை இவை அனைத்தையும் மனதில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

மனஅழுத்தம் தீர விரல் அழுத்தம்:

உள்ளங்கைகளில், மற்ற கையின் கட்டைவிரலால் தொடர் அழுத்தம் தருவது தொடங்கி, முழுமையான மசாஜ் செய்துகொள்வது வரையிலான உடல் தளர்வு நிலை உத்திகள் மன அழுத்தத்தைப் போக்குகிற திறன் கொண்டவை.

புன்னகையின் சக்தி:

மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் புன்னகைக்கிறீர்கள் என்பது எவ்வளவு உண்மையோ, புன்னகைக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்பதும் உண்மை. நரம்புகளில் தொடங்கும் மெல்லதிர்வுகள் முகத்திலுள்ள தசைகளை அசைத்து, பாதுகாப்பான உணர்வை மூளைக்கும் கொண்டு செல்லும் அற்புதம் ஒவ்வொரு புன்னகையின் போதும் நிகழ்கிறது என்கிறார் டாக்டர் கூப்பர். புன்னகையின் சக்தி புரியவேண்டுமா? புன்னகைத்துத்தான் பாருங்களேன்.

கடைவாய் – ஒரு ரகசியம்:

மனதில் உருவாகும் அழுத்தம் வந்து படிகிற இடங்களில் ஒன்று கடைவாய் இணைப்புகள். பற்களை இறுகக்கடித்து, காதுக்குக்கீழ் சுட்டுவிரலால் அழுத்திக் கொண்டு, நீளமாக மூச்சிழுப்பதும், வாயைத் திறந்தபடி காற்றை வெளியே விடுவதும், அழுத்தத்தின் சுவடுகளை உடலில் தங்காமல் வெளியேற்ற மேலைநாட்டு ஆய்வாளர்கள் கண்டு பிடித்திருக்கின்ற வழி.

மனம் சொல்லும் மந்திரம்:

நம்மை நாமே உற்சாகப் படுத்திக்கொள்ள ஆட்டோசஜஷன் முறைப்படி சில வாசகங்களை மனதுக்குள் உருவாக்கிக்கொள்வது மேலை நாட்டின் பாணி. நம்நாட்டில் அதற்குப் பஞ்சமே கிடையாது. “எல்லாம் செய்யக்கூடும்”, “நடப்பதெல்லாம் நன்மைக்கே” என்று எத்தனையோ வாசகங்கள், மனதுக்கு சக்திதரும் மந்திரங்களாய் உள்ளன. மனதுக்குள்ளேயே அவற்றைப் பத்து பதினைந்து முறைகள் சொல்லும்போது பெரிய அளவில் மாற்றங்கள் தெரியும்.

அடுத்தது என்ன…..?

மனஅழுத்தத்திற்கு ஆளாகிற பலரும் தன்னிரக்கத்தைத் தவிர்க்க முடியாமல் தவிக்கிறார்கள். “எனக்கேன் இது நிகழ்ந்தது? மற்றவர்களுக்கு இப்படி இல்லையே” என்கிற எண்ணங்கள் எழும்போது தன்னிரக்கம் நம் செயல் திறனை மேலும் பாதிக்கிறது. மாறாக, அடுத்தது என்ன?” என்ற அணுகுமுறையைக் கைக்கொள்கிற போது, செயல்படவேண்டும் என்ற தூண்டுதல் வேகம் பெறுகிறது.

எழுதிப்பாருங்கள்:

மனஅழுத்தத்தைத் தந்த சம்பவம், அதன் விளைவுகள், கையாள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், உடனடி நடவடிக்கைகள் ஆகியவற்றை ஒரு காகிதத்தில் எழுதுங்கள். மனதுக்குள்ளேயே பலவற்றையும் யோசிப்பதைவிட எழுதும்போது ஒரு புதிய தெளிவு பிறக்கிறது. அந்தத்தெளிவே மன அழுத்தத்திலிருந்து விடுபடும் சக்தியைக் கொடுக்கிறது. தெளிவாக எழுதிப்பார்க்கும்போது தீர்வை நோக்கிப் பலஅடிகள் வைத்தது போன்ற மன நிறைவை எளிதில் எட்டமுடிகிறது.

தடாலடிகளைத் தள்ளிப்போடுங்கள்:

அழுத்தம் கொடுக்கும் பதட்டம் காரணமாக தடாலடியாய் சில தவறான முடிவுகளை எடுக்கக் தோன்றும். அந்த நேரப் பதட்டத்தில் எது தவறு எது சரி என்று சிந்திக்காமல் செயல்படுவது சேதங்களை வளர்க்கும். எனவே, மனம் பதட்டமாக இருக்கும்போது முடிவெடுப்பதைத் தள்ளிப்போடுங்கள். பத்துவரை மனதுக் குள்ளேயே எண்ணி விட்டு, சிறிது தூரம் உலவிவிட்டு, பதட்டம் தணியும்வரை பொறுமையாய் இருந்தால் ஆக்கபூர்வமான முடிவுகள் சாத்தியமாகும்.

காபி குடிப்பதைக் குறையுங்கள்:

காலை மாலை காபி மிகவும் சுகமானதுதான். ஆனால் மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில் காபியைத் தவிர்ப்பது நல்லது என்கிறார் ஜேம்ஸ் ட்யூக் என்கிற ஆய்வாளர். தூய குடிநீர், பழச்சாறுகள் போன்ற பானங்கள் புத்துணர்வு தருவதாகவும் மன அழுத்தத்தைப் போக்கும் சக்தி தருபவையாகவும் இருக்கும். தண்ணீரோ பழச்சாறோ பருகும் போது, அந்தத் திரவம் உங்களுக்குள் கலந்து புத்துணர்வு தருவதை உணர்வுப் பூர்வமாய் ஏற்பது மேலும் ஊக்கம் தரும்.

முடியாத விஷயங்களை மறுத்துச் சொல்லுங்கள்:

எல்லோரையும் திருப்திப்படுத்தும் எண்ணம் எங்கேயோ நமக்குள் இருக்கிறது. இது வேண்டாத விஷயங்களையும் மேலே தூக்கில் போட்டுக் கொண்டு, மற்றவர்களிடம் சிரித்தாலும், நம் உள் வட்டத்துக்குள் எரிந்துவிழச் செய்கிறது. இந்தக் கூடுதல் பாரம், மன அழுத்தத்தை வளர்த்துவிடும் என்பதால், செய்யமுடியாதவற்றையும் செய்ய விரும்பாதவற்றையும் நாசூக்காய் மறுத்துச் சொல்வதே நல்லது.

நறுமணங்களின் நலம் பெறுங்கள்:

தீயவாசனையை அடையாளம் கண்டு முகம் சுளிக்கும் அளவுக்கு மனிதர்கள் நறுமணங்களின் சுகத்தில் ஈடுபட்டு அனுபவிப்பதில்லை. நறுமணம் தரும் மலர்கள், எண்ணெய் வகைகள் ஆகியவற்றின் மூலம் மனதை மிக விரைவில் லேசாக்கிக் கொள்ளமுடியும்.

உங்கள் உஷ்ணமே உங்களுக்குதவும்:

டேவிட் சோபெல் என்ற மனநல மருத்துவர், மிக எளிதான வழியொன்றைச் சொல்கிறார். இரண்டு கைகளையும் பரபரவென்று தேய்த்து மூடிய கண்களுக்கு மேல் வைத்து, ஆழமாக சுவாசிக்கும்போதே அந்த உஷ்ணத்தையும் உள் வாங்குகிறபோது, புதிய உத்வேகம் உங்களுக்குள்ளேயே உருவாகும் என்கிறார் அவர்.

மூன்று முக்கிய இடங்கள்:

பெர்க்லேயில் உள்ள அக்யூ பிரஷர் மையத்தின் இயக்குநர் மைக்கேல் ரீட் கேச் மன அழுத்தம் வலுவிழந்து போக உடலிலுள்ள மூன்று இடங்களில் அழுத்தம் கொடுக்குமாறு அறிவுறுத்துகிறார்.

1. புருவங்களின் மத்தியில் அழுத்தம் தருதல்.

2. பின் கழுத்தில் அழுத்தம் தருதல்.

3. கழுத்துச் சரிவுக்கும் தோள்பட்டைக்கும் மத்தியில் அழுத்தம் தருதல்.

அழுத்தத்தின் கனத்தை உணரும் அளவு அழுத்தலாம். அங்குள்ள நரம்பு மண்டலங்கள் செயல்பட்டு, மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் உந்துசக்தியை மூளைக்கு வழங்கும்.

கவலைக்கென்று நேரம் ஒதுக்குங்கள்:

மனதில் தோன்றும் கவலைகள் எல்லா நேரமும் உங்களை அரித்தெடுப்பதை அனுமதிக்காதிருக்க வழி உண்டு. கவலைகள் என்னவென்று பார்க்க ஒரு நேரம் ஒதுக்குவது, கால்மணி நேரம் என்று வைத்துக்கொண்டால், அந்தக் கால் மணி நேரமும் கன்னத்தில் கைவைத்துக்கொண்டு கவலைப்பட வேண்டியதில்லை. கவலைகளை ஆராய்ந்து அவற்றை உங்கள் கட்டுக்குள் கொண்டு வரத்தான் அந்த நேரம் .

நொறுக்குத் தீனி நொறுக்குங்கள்:

கார்போஹைட்ரேட் கொண்ட நொறுக்குத் தீனியை நொறுக்கினால் அதிலிருந்து செரிடானின் உங்கள் மனதை அமைதிப்படுத்தும் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

வைட்டமின் வேண்டும்:

வைட்டமின் பி, மற்றும் கால்ஷியம் போன்ற சத்துக்களை சிறிதளவு சேர்த்துக்கொண்டே வருபவர்கள் அவ்வளவு எளிதாக மன அழுத்தத்திற்கு ஆட்பட மாட்டார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

அடையாளம் என்ன?

மன அழுத்தம் உருவாவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வெளிப்பாடுகளை ஏற்படுத்தும். சிலருக்குத் தோள்வலி வரும். சிலருக்கு சுவாசம் துரிதப்படும். உங்களுக்கு ஏற்படும் அடையாளம் என்னவென்று தெரிந்து வைத்துக்கொண்டால், அறிகுறிகள் தென்படும் போதே அவற்றிலிருந்து வெளிவருவதற்கு உடனடி முயற்சிகளில் இறங்கமுடியும்.

ஆகாயம் பாருங்கள்:

அடைந்துகிடக்கும் உணர்வுகளை விடுவிக்கும் சக்தி திறந்தவெளிக்கு இருக்கிறது. அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் வெளியே வந்து, ஆகாயத்தை, அலையலையாய்ப் போகும் மேகங்களைப் பார்ப்பது பயன்தரும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள்.

நடைப்பயிற்சி நலம் தரும்:

நெஞ்சில் ஏதோ எண்ணங்கள் கனக்கத் தொடங்கிவிட்டால் கொஞ்சதூரம் நடந்துவருவது பயன்தரும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். வெளியே உலவுவதற்கு நேரம் ஒத்துழைக்காத நிலையில் அலுவலகத்துக்குள் அங்குமிங்கும் உலவுவது இடைக்கால நிவாரணம் போன்றது.

வெந்நீர்க்குளியல்:

வெறுப்பாக இருந்தால் வெந்நீர்க் குளியல் போடுங்கள் என்கிறார் டாக்டர் வெஸ்டன். குளிக்கும் அளவு நிலைமையோ நேரமோ இல்லையென்றால் வெந்நீரில் கைகால்களையாவது கழுவுங்கள். இதம் செய்யும் ஆற்றல் வெந்நீருக்கு இருக்கிறது என்கிறார் அவர்.

இசையால் வசமாகும் இதயம்:

எத்தகைய பதட்டத்தையும் தணித்து அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. இசை கேளுங்கள் அல்லது பாடுங்கள். உங்கள் இதயம் படபடவென்று அடித்துக்கொள்வதை அது மட்டுப்படுத்துவதோடு என்டார்ஃபின் பெருகவும் வழிவகுக்கிறது.

செல்லப் பிராணிகள்:

நியூயார்க்கில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு, இரத்த அழுத்தம் ஏற்படுவதில்லை என்று தெரிய வந்துள்ளது. முயன்று பாருங்கள்.
கவனம் குவியுங்கள்:

மனம் பதறுகிறபோது நுணுக்கமான விஷயங்களை நோக்கிக் குவியாமல் அலைபாயத் தொடங்கும். அப்போதெல்லாம், ஒரு சின்ன விஷயத்தை எடுத்துக்கொண்டு அதில் முழு கவனத்தை செலுத்துங்கள். ஒரு சிறு பென்சிலாகக் கூட இருக்கலாம். அதன் அளவு, வடிவம், வண்ணம், கூர்மை என்று அனைத்தையும் கூர்ந்து கவனிக்கத் தொடங்குங்கள். உங்கள் மனம் இயல்பு நிலை அடைவதை உணர்வீர்கள்.

நண்பர்களை அழையுங்கள்:

மனதுக்கு நெருக்கமாக நீங்கள் உணரும் ஒருவரை அழையுங்கள். அவரிடம் உங்கள் சிக்கலைப் பற்றிப் பேசினாலும் சரி, பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசினாலும் சரி. அந்த அன்பான குரலில் ஆதரவை உணர்வீர்கள்.

வஜ்ராசனத்தின் வல்லமை:

மன அழுத்தம் மாறுவதற்கு வஜ்ராசனத்தில் அமருங்கள் என்று சொல்பவர்கள் நம் ஊர் யோகக்கலை வல்லுநர்கள் மட்டுமல்ல. நியூயார்க்கில் உள்ள எக்யூனாக்ஸ் ஃபிட்னஸ் சென்டரின் இயக்குநர் மோலி ஃபாக்ஸ் கூடத்தான். குழந்தைபோல் மண்டியிட்டு கண்மூடி குதிகாலின் மீது சிறிது நேரம் அமருங்கள். அதுதான் வஜ்ராசனம். மெல்லக் குனிந்து முன் நெற்றியை நிலத்தில் பதியுங்கள். இதையே சில தடவைகள் செய்யுங்கள்.

பிரார்த்தனை:

மனமுருகும் பிரார்த்தனை, மன ஒருமை கொண்டு செய்யும் தியானம் இவையெல்லாம் மன அழுத்தத்தை விரட்டியடிக்கிற வல்லமை கொண்டவை.

நிமிர்ந்து அமருங்கள்:

சோர்வு வரும்போது சுருண்டு படுக்கத்தான் மனது சொல்லும். முதுகுத்தண்டை நிமிர்த்தி நேராக, ஜோராக உட்காரும்போது இரத்த ஓட்டம் நன்கு நிகழ்ந்து உங்கள் சக்தியைப் பெருக்கும்.

தாவரங்களோடு சிறிது நேரம்:

பேச முடியாத, பார்க்க முடியாத தாவரங்களிடம் ஜீவசக்தி நிரம்பி வழிகிறது. ஒரு செடியுடனோ மரத்துடனோ நெருக்கமாக சிறிது நேரத்தை செலவிடுங்கள். அழுத்தம் அகல்வதை உணர்வீர்கள்.