Saturday, April 27, 2013

சுய வளர்ச்சியும் விஞ்ஞான வழிமுறைகளும்

வருடங்களாக சுய முன்னேற்ற முயற்சிகள் செய்து வந்துள்ள எனக்கு, ஏன் விஞ்ஞான முறையில் சுயவளர்ச்சியை, மாற்றங்களை, தாக்கங்களை ஆராயக் கூடாது என்ற கேள்வி என்னுள் எழுந்தது. எனவே புதிய முயற்சியை மேற்கொண்டு, அவற்றில் நான் கண்டு கொண்ட சில அனுபவங்களை, நேரிடையான சத்தியத்தை பகிர்ந்துகொள்ள முன் வந்துள்ளேன்.

முதற் சாதனம்:

பங்கேற்பு சூழ்நிலைகளின் ஆய்வு (Participatory situation Analaisis)

நான் முதன் முதலில் ஆராய்ந்தது என் அக புறவாழ்வின் சூழ்நிலைகளைப்பற்றி. என் சூழ்நிலைகளை ஆய்வு செய்ய, மேற்கூறிய சாதனத்தின் உதவியை நாடினேன். என் எண்ணத்தில், உணர்ச்சிகளில் செயல்பாட்டில் வழிமுறைகளிலுள்ள சூழ்நிலைகளை ஆராய்ந்தேன். இதைச் செய்ய நிதானமாக, அமைதியான காலை பொழுதினில் 5 நிமிடத்தில் தொடங்கி, தற்பொழுது 1 மணி அளவில் தினந்தோறும் தியானத்தின் மூலமாக ஆய்வு செய்துகொண்டே வளர்கின்றேன். இவ்வாறாக என் உள் யாத்திரையில் நான் கண்டுகொண்ட முடிவுகள் பல. அவற்றில் நான் 15 அக புற சூழ்நிலைகளை தேர்வு செய்தேன். அவைகள் பின் குறிப்பிடப்பட்டுள்ளன.

இரண்டாம் வழிமுறை:

நிறை, குறை, சந்தர்ப்ப அபாய வழிமுறை (Strenth, Weakness, Opportunity, & Threat Analysis SWOT Analysis)

மேற்கூறிய வழிமுறையை உபயோகித்து நான் சேகரித்த 15 சூழ்நிலைகளை ஆய்வு செய்தேன். 9 நிறைகளாகவும், 6 குறைகளாகவும் உள்ளதை உணர்ந்தேன். என்னுள் கண்டுகொண்ட 6 குறைகளை ஏன் சந்தர்ப்பங்களாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற கேள்வி என்னுள் எழுந்தது. அவ்வாறே தூண்டிய எண்ண வழியிலேயே யாத்திரை செய்தேன். என் 9 நிறைகளையும் நான் ஒவ்வொன்றாக உபயோகித்தேன். இந்நிறைகள் எனக்கு தேவையான நம்பிக்கையை வளர்த்தன. இவ்வழியில் சென்றபொழுது பல சமயம், வீழ்ச்சிகளையும், சிலசமயம் வெற்றிகளையும் கண்டு, கைவிடாது முன் சென்றேன். 6 சூழ்நிலைகளில் மாற்றங்கள் தர, ஒவ்வொன்றாக கையாண்டேன். முதன் முதலில் எனக்கு மிகவும் சுலபமாக இருந்ததையும், பின் படிப்படியாக கஷ்டமாக இருந்ததைக் கையாண்டு, மாற்றங்களைத் தந்தேன். இம்மாற்றங்களினால் என் எண்ணத்திலும், உணர்ச்சிகளிம், செயல்முறைகளிலும் மாற்றங்கள், தாக்கங்கள் ஏற்பட்டன.

நான் தினந்தோறும் ஒவ்வொரு நிமிடமும் புதியவன் ஆக வேண்டுமென ஆவல் கொண்டேன். என்னிலுள்ள நற்பண்புகளை காத்திடவும் வளர்த்திடவும், கண்கானித்தல் வேண்டுமென அரிய நோக்கத்தைப் பெற்றேன்.

மூன்றாம் வழிமுறை:

ஒரு வடத்திற்குள் எங்கு எப்படி, எந்த நிலைகளில் மாற்றங்கள் தர (வெளிப்படையான) திறந்த வெளிப்படையான கேள்விகளை (Open ended questions) என்னையே நான் கேட்க ஆரம்பித்தேன். என்னுள் இருக்கும் 6 எதிரிடைய சந்தர்ப்பங்களை, வகை செய்தேன். இந்த ஆறு நிலைகளிலும் ஒரு உறவைக் கண்டேன். எல்லாம் என் உணர்ச்சிகளுக்கு சம்பந்தப்பட்டவை என்று.

நான்காம் வழிமுறை:

காரண காரணிகளின் சம்பந்த முறையில் ஆய்வு செய்வது
(Cause Effect relationships Tools)

என்னுடைய இந்நிலைக்கு காரணங்கள் யாவை? என ஆராய இச்சாதனத்தை தேர்ந்தெடுத்தேன். இதைச் செய்யும்பொழுது எத்தனையோ உட்புறதடைகள் வந்தன. பலமுறை மனம் தளர்ந்தேன். பன்முறை பலர் என்னை பரிகசித்தனர். வீட்டில் இருப்பவர்கள் உட்பட. இருப்பினும் தொடர்ந்து முயற்சிகள் செய்தேன். நேரிடை காரணங்கள், எதிரிடை காரணங்களையும் ஆராய்ந்தேன். தடை செய்யும் காரணங்கள், துணை செல்லும் காரண காரணிகளை ஆராய்ந்தேன்.

இம்முறையினால், நான் குழந்தைப் பருவத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. அங்கு கீழ் மனதில் கண்டவைகள், அனுபவித்த உணர்ச்சிகள், நிகழ்ச்சிகளை ஆழமாக உணர்ந்தேன்.

என் தந்தையின் வழிமுறைகளில் சில, முக்கியமாக தண்டிப்பது எனக்கு சிறியவனாக இருக்கும் பொழுதிலிருந்தே பிடிக்கவில்லை. எனவே, என் தந்தையையே முழுமையாக மனதினில் வெறுத்து வந்தேன். அதை கீழ்மனதில் புதைத்தேன். பின், அந்நிலையில் எல்லோரையும் முக்கியமாக ஆண்களை, என் தந்தையின் மறு உருவமாக நினைத்து, எல்லோரையும் உணர்ச்சிவசமாக வதைத்து வந்ததை ஆய்வு செய்தேன். இதனால் என் தந்தை வேறு, அவர் வழிமுறைகள் வேறு. அவர் தண்டிக்கும் முறைகள் அவருடைய தாய் இல்லை என்பதை, நான் பாகுபாடு செய்தேன். எல்லோரும் என் தந்தை இல்லை என்பதையும் என்னில் இருந்த எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் செயல்களையும் தூய்மை செய்து மறுபிறவி எடுத்தேன்.

என் சுய முன்னேற்றங்களை, விஞ்ஞான ரீதியாக கண்காணித்து வருகின்றேன். மற்றும் என்னுடைய சேவை நிறுவனத்தின் மூலமாக மேற்கூறிய பல சாதனங்களை மக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து, குழுக்கள் மூலமாக வறுமைக் கோட்டிலிருந்து வெளிவர பல ஆய்வுகள் செய்துகொண்டு வருகின்றேன். இம்முறையினால் காணும் முன்னேற்றம் கண்டு, நானே மிகவும் வியந்துள்ளேன்.

நீங்களும் ஒரு கை பார்க்கலாமே?

தயாரா!

பின்குறிப்பு:

- படித்த பிறகு உமது தாக்கம் என்ன?

- அனுப்புங்கள் உங்கள் அனுபவங்களை “நமது நம்பிக்கை” ஆசிரியருக்கு

- பலரும் பயனும் பலனும் பெறட்டும்

- அனுபவங்களை அனுப்புபவர்களுக்கு நன்றிகள் பல

“9 நிறைகளின் சூழ்நிலைகள்”

1. நிறைய கனவுகள் காண்பது
2. எப்பொழுதும் புதியவைகளை செய்யத் துடிப்பது
3. புத்தியை கூர்மையாக வைக்க, புத்தகங்களைப் படிப்பது, விவாதிப்பது
4. கடின உழைப்பு
5. தனித்தன்மையில் வாழ்வது
6. மனதில் பட்டதை உடனே தெரியப்படுத்துவது
7. என்னை நான் நேசிப்பவன். அவ்வாறே பிறரையும் நேசிப்பவன்.
8. ஏழைகளுக்கு உதவி செய்யும் “வெறி” கொண்டவன்.
9. எல்லோருக்கும் மரியாதை கொடுப்பவன்.

“6 குறைகளின் சூழ்நிலைகள்”

1. அதிகமாக கோபப்படுதல்
2. நிறைய சாப்பிடுதல்
3. உணர்ச்சிகளை உடனுக்குடன் வெளிப்படுத்துதல்
4. பயமோடு கலந்த உணர்ச்சிகள்
5. எல்லோரையும் சந்தேகிப்பது
6. சாவைப் பற்றி எண்ணி பயப்படுவது.

No comments:

Post a Comment