வாழ்வில் சில சம்பவங்கள் நமக்கு சவால்விடும் விதமாய் அமையும். அத்தகைய சவால்கள் வரும்போதெல்லாம் தொடை தட்டி எழுபவர்கள் சோதனைகளைக் கடந்து சாதிக்கிறார்கள். தொடை நடுங்கி நிற்பவர்கள் தோற்கிறார்கள். இது ஒற்றை வரி உபதேசமல்ல. உண்மையின் சாரம். நிகரற்ற சாதனையாளர்கள் வாழ்வில் நிரூபிக்கப்பட்ட சத்தியம்.
காலம் வீசுகிற பந்தைக் கையில் பிடிக்கும் லாவகமே, எறியப்பட்டது பூப்பந்தா அணுகுண்டா என்பதைத் தீர்மானிக்கிறது. எதிர்வரும் சவால்கள் ஒவ்வொன்றிலும் சாதனைக்கான சாத்தியக் கூறுகள் ஒளிந்திருப்பதை உணர்ந்தவர்கள் உயர்கிறார்கள்.
சில நடைமுறை உதாரணங்களை நினைத்துப் பார்த்தால் நம் வாழ்விலும் சோதனைகள் வருவது நாம் சாதிப்பதற்காகவே என்கிற உண்மை புலப்படும்.
ஆப்பிள் கம்ப்யூட்டரை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் உரையாற்றியபோது தன் வாழ்வில் நடந்த சறுக்கல்களும் சவால் மிக்க பொழுதுகளும் எப்படி சாதனைக்கு வழிவகுத்தன என்பது பற்றி சிலிர்க்க வைக்கும் உண்மைகளை பகிரங்கமாய்க் பகிர்ந்து கொண்டார்.
“வாழ்க்கை, கசப்பான சம்பவங்களால் ஆங்காங்கே புள்ளிகளை வைத்து விட்டுப் போகிறது. அவற்றை கரும்புள்ளிகள் என்று நினைத்துக் கவலைப் படுகிறோம். ஆனால் அந்தப் புள்ளிகளை இணைக்கிற புத்திசாலித்தனம் இருந்தால், அந்தக் கசப்பான சம்பவங்களே கம்பீரமான வெற்றிக்குக் காரணிகள் ஆகின்றன” என்றார் ஸ்டீவ் ஜாப்ஸ்.
இதனை உணர்த்தும் விதமாய் உதாரணங்களைத் தன்னுடைய வாழ்விலிருந்தே தந்தார் அவர்.
தான் தொடங்கிய ஆப்பிள் நிறுவனத்திலிருந்தே வெளியேற்றப்பட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ். கசப்பான அந்தக் கரும்புள்ளி வைக்கப்பட்ட விநாடியே அடுத்த வெற்றியின் புள்ளியைத் தொட, புயல்போல் இயங்கினார் அவர். பிக்ஸல் அனிமேஷன் ஸ்டுடியோஸ் என்கிற புத்தம் புதிய நிறுவனத்தைத் தொடங்கி அனிமேஷன் உலகில் அசகாய சூரராய் மிக விரைவில் வளர்ந்தார். இந்த மகத்தான வெற்றி, தான் உருவாக்கிய ஆப்பிள் நிறுவனத்தை மீண்டும் அவருடைய ஆளுகைக்குள் கொண்டு வந்தது. தன் மறு வருகையை ஒரு சாதனையின் மூலம் கொண்டாடத் தீர்மானித்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். இருபத்தோராம் நூற்றாண்டை உலுக்கும் விதமாய் ஒரு கண்டுபிடிப்பைக் கொடுத்தார். அதுதான் உலகெங்கும் உள்ளவர்களின் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாகிக் கொண்டிருக்கும் ஐ-பாட். பின்னடைவுகள், சவால்விடும் தருணங்கள், சோதனைகள் இல்லாமல் இந்த சாதனைகள் சாத்தியமே இல்லை என்று அடித்துச் சொல்லும் ஸ்டீவ் ஜாப்ஸ், கரும்புள்ளிகளை இணைக்கும் வெற்றிக்கோலம் வரைவதற்கான உத்திகளையும் உணர்த்தினார்.
1. புள்ளிகளைப் புரிந்து கொள்ளுங்கள்:
வாழ்வில் நடக்கும் சம்பவங்களை சரியாகப் புரிந்து கொள்வதில்தான் சாமர்த்தியம் இருக்கிறது. தோல்விகளும் பின்னடைவுகளும், உண்மையில் தோல்விகளோ பின்னடைவுகளோ அல்ல. அவை ஒரு மனிதன் மேற்கொள்கிற மருத்துவப் பரிசோதனைக்கு நிகரானவை. மருத்துவப் பரிசோதனையின் முடிவுகள், மனிதனின் உடலில் இருக்கிற நோயைக் கண்டறிந்து சொல்கின்றன. மேலோட்டமாகப் பார்த்தால் அது கசப்பான செய்தி. அதே நேரம், எனக்குள் நோய் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும் அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளவும் அருமையான வாய்ப்பு என்பதால் அதுவே ஒரு நல்லசெய்தி. ஒவ்வொரு சம்பவத்தையும் சரியாகப் புரிந்து கொண்டால் அடுத்த கட்டம் நோக்கி நகரலாம்.
2. அடுத்த புள்ளியைத் தொடப் புறப்படுங்கள்:
ஒரு சம்பவத்தை உணர்வு பூர்வமாய் உள்வாங்குபவர்கள் சற்றும் தயக்கமின்றி அடுத்த அடியை எடுத்துவைப்பார்கள். நெருப்பைத் தொட்டால் சுடும் என்பது அனுபவம் தருகிற பாடம். சுடுகிறது என்பதற்காகவே நெருப்பை வெறுப்பவர்கள், நெருப்பைத் தவிர்ப்பவர்கள் வாழ்வில் பல விஷயங்களை இழக்கிறார்கள்.
நெருப்பை சரியாகப் பயன்படுத்தியவர்கள் அதிலிருந்து வெப்பத்தை சமையலுக்கும், தொழில்நுட்பத்திற்கும் பயன்படுத்தி பலன் பெறுகிறார்கள். ஒரு விஷயத்தில் ஏற்படும் தோல்வி, அடுத்த முறை அதை சரியாக செய்வதற்குக் கற்றுத்தருகிறது. எனவே ஒவ்வொரு பின்னடைவும் உயர்வான முன்னேற்றம் நோக்கி நம்மை உந்தித்தள்ளுகிறது.
3. புள்ளிகளை வைத்துக் கொண்டே செல்லுங்கள்:
புதிய புதிய அனுபவங்களுக்கு, புதிய புதிய தொடர்புகளுக்கு எப்போதும் தாகத்தோடு இருங்கள். தயாராக இருங்கள். தொடர்ந்து செயல்படுவதன் மூலமாக மட்டுமே, வருகிற வாய்ப்புகளை, பெறுகிற தொடர்புகளை, கிடைக்கிற அனுபவங்களை வெற்றிக்கான வாகனங்களாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
தொடர்ந்து இயங்குவதன்மூலம், உங்கள் துறையில் வல்லுனராக நீங்கள் வளர்வது மட்டுமின்றி மற்றவர்களாலும் அறியப்படுவீர்கள். ஒரு துறையில் வளர வேண்டும் என்கிற ஆர்வம் மட்டுமே உங்களை வளர்த்துவிடாது. களத்தில் எவ்வளவு உற்சாகமாக இறங்குகிறீர்கள் என்பதுதான் உங்கள் ஊக்கத்தையும் செயல்திறனையும் உலகுக்குச் சொல்லும். பயன்படுத்தாத வாய்ப்புகளும்., வெளிப்படுத்தாத திறமைகளும் எந்தப் பயனையும் தந்துவிடாது.
4. தவிர்க்க வேண்டிய புள்ளிகளையும் தெரிந்துகொள்ளுங்கள்:
அனுபவங்களைத் தராமல் குருட்டாம்போக்கில் சில ஆதாயங்கள் வருவதுண்டு. அத்தனை வெற்றிகளும் அப்படி வரும் என்று நினைத்துவிடாதீர்கள். சில விஷயங்களைத் தவிர்ப்பதால்கூட, தற்காலிகத் தோல்விகளை ஏற்பதால்கூட நிரந்தரமான வெற்றிகளை நோக்கி நாம் பயணமாகலாம். பயணம் போகிறபோது, பக்குவமில்லாத குறுக்குப் பாதைகளில் போவதன் மூலம் போகிற வாகனம் பழுதாவதுபோல, தவறான அணுகுமுறைகள் உங்கள் வளர்ச்சிக்குத் தடை ஏற்படுத்தக்கூடும். புள்ளிகளை இணைத்துக் கொண்டே போகிற போது தவிர்க்க வேண்டிய புள்ளிகளையும் தெரிந்து கொள்வது அவசியம்.
5. தொலைநோக்கின் தெளிவோடு புள்ளிகளை வையுங்கள்:
நீண்ட காலத் திட்டத்தோடு நீங்கள் செய்கிற சில வேலைகளின் முக்கியத்துவத்தைப் பக்கத்தில் இருப்பவர்களால்கூடப் புரிந்துகொள்ள முடியாது. கண்ணுக்குத் தெரியாத அந்த மாயப்புள்ளிகள் நாளைய வெற்றியின் ஆழமான அடித்தளங்களாய் அமையும். ஆப்பிள் கம்ப்யூட்டரிலிருந்து வெளியேற்றப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் மனதுக்குள் அனிமேஷன் ஸ்டுடியோ என்கிற அற்புதம் ஒளிந்திருப்பதை மற்றவர்கள் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.
இந்தத் தொலைநோக்கு நிறைந்த மாயப்புள்ளியை மனதுக்குள் குறித்துக்கொண்டு, வெறித்தனமாக வேகத்தில் அந்தப் புள்ளியை நோக்கிப் புறப்பட்டு வெற்றிகள் குவித்த இன்னொரு சாதனையாளரின் வாழ்க்கையை இங்கே நாம் நினைத்துப் பார்க்கலாம்.
2001 சம்மர் ஒலிம்பிக்ஸில் ஆறு தங்கப் பதக்கங்களையும், 2008 சம்மர் ஒலிம்பிக்ஸில் எட்டு தங்கப் பதக்கங்களையும
No comments:
Post a Comment