Saturday, February 1, 2014

தீங்கு செய்பவர்களை இப்படியும் ஒழித்துக் கட்டலாமே.

தீங்கு செய்பவர்களை இப்படியும் ஒழித்துக் கட்டலாமே

1.நாம் எல்லோரும் ஏறக்குறையப் பழக்கப்பட்டிருகின்றோம் தீங்கு செய்தவர்களுக்குத் தீங்குதான் செய்ய வேண்டும் என்று.ஆனால் அற நூல்கள் சொல்லுகின்றன மன்னித்து விடு  இன்னா செய்தாரை  உனக்குத் தீங்கு செய்தவர்களுக்கும் நன்மை  செய்து விடு என்று.இது நடப்பு வாழ்வில் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கின்றது .ஒருவர் நமக்குச் செய்த தீங்கை மனதில் வைத்து அவருக்கும் தீங்கு செய்தல் என்னும் பழிவாங்குதல் என்னும் செயலை எல்லா மனிதர்களும் செய்யலாம்.அவர் செய்த தீங்கை மன்னிக்கும் செயலைச் செய்பவர்கள் அறிவாளிகள்.மற்றவர்கள் செய்த தீங்கை உதாசீனப்படுத்துபவர்கள் ஞானவான்கள்.எல்லோரும் ஞானவான்களாகத்தான் முடியுமா?

2.நிலத்தில் ஒரு விதையைப் போட்டால் எப்படி அது தனக்குத் தேவையான சத்தை மட்டும் தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளில் இருந்து கிரகித்துத் தன்னை வளர்க்கின்றது. அதன் வளர்ச்சியில்  நிறைவு பெறுகின்றது . அப்படித்தான் நமது மனம் என்னும் விளைநிலத்தில் ஒரு எண்ணத்தை நாம் விதைத்து விட்டோம் என்றால் அது நம்மை சுற்றியுள்ள சூழ்நிலைகளில் இருந்து நாம் எந்த வகையான  விதையை விதைத்தோமோ அதன் சத்துக்களை தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளில் இருந்து கிரகித்து வளர ஆரம்பித்து விடும்.அதன்  இயற்கைப் பணியை எந்தவிதத் தவறுகையும் இல்லாமல் செய்து முடிக்கும். விதை விதைப்பது மட்டும் நமது கட்டுப் பாட்டில் உள்ளது.

3.மற்ற செயல்கள் எல்லாம் நம்மை அறியாமலேயே தனது இயல்பான வளர்ச்சியில்  காரியங்களை  ஆற்றுகின்றது.நாம் விதைத்த விதையின் சத்தை ஒத்த, சத்தை தனக்கு வெளியில் இருந்து கவர ஆரம்பித்து விடும்.நாம் நமக்குத் தீங்கு செய்தவர்கள் மீது வெறுப்பும் ,குரோதமும்,அவர்கள் கெட்டுப் போக வேண்டும் என்று எந்த எண்ணத்தை மனதில் நம்மை அறியாமலேயே விதைகின்றோமோ அது நம்மை நோக்கி நம்மில் கவரப்பட்டு நமது எண்ணங்களுக்கு வலு சேர்த்துக் கொண்டே இருக்கும்.அப்படி கவரும் போது நாம் எவ்வளவு கோபமும்,குரோதமும் கொண்டு விதை விதைத்தோமோ அவ்வளவு வீரியமாக வளர்ந்து நமக்குத் தான் துன்பத்தை ஏற்படுத்தும்.

4.பொதுவாக நமக்குத் தீங்கு விளைவிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அவர்கள் மீது நாம் கோபம்,குரோதம்,பழி உணர்ச்சி போன்ற உணர்வுகளை நாம் எண்ணும் படியாகத் தனது காரியத்தையோ,சொற்களையோ சொல்லுவார்கள். அதன் பின்பு அது அவருக்கும் தெரியாது அவர்மேல் நாம் கொள்ளும் உணர்வு  அவரைப் பற்றிய  எண்ணங்களை  விதைக்கும்  நமக்குள்  தான் விளையப் போகின்றது என்று .அவரும் நம் மேல் இதே கோபம் குரோதம் போன்ற உணர்வுகளை அவரது மனதில் விதைத்தால்  எந்த உணர்வு அழுத்தமாக யார் மனதில் விளைவிக்கப்பட்டதோ அது  எதிராளியின்  மனதின்  மன  அழுத்தத்தோடு உராய்வு செய்து அதிக அழுத்தம் கொண்டவர் விதைத்த எண்ணம் கொண்டவருக்கே  அதிகத்  தீங்கு விளைவிக்கும்.

5.அப்படி என்றால் நம்மை ஒழித்துக் கட்டி அவர்கள் வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நாம் இரை ஆக வேண்டியது தானா?இப்படிக் கண்டிப்பாக எண்ணத்தேவையில்லை.எப்போதெல்லாம் நமது மனதில்  கோபம் ,தாபம்,குரோதம்,பழி வாங்கும் உணர்வு இப்படி உணர்வுகளை நமது மனதில் ஏற்படுத்தி அது நமது மனதில் விதைக்கப்பட்டு வளர்ந்து நமக்கே தீங்கு விளையட்டும் என்று யார் நினைக்கின்றார்களோ,அவர்களது முகத்தை  நமது மனக் கண்ணில் கொண்டு வந்து அவர்கள் மீது நாம் மிகுந்த அன்பை வெளிப்படுத்துவதாக எண்ணிக் கொள்ள வேண்டும்.

6.நமக்கு கோபத்தை ஏற்படுத்தியவர்கள் முகத்தையும் எந்த அவர்களது உணர்வு நமக்குக் கோபத்தை ஏற்படுத்தியதோ அதனை நமது மனக் கண்ணில் நினைத்து அந்தக் குறிப்பிட்ட நபர் நன்றாக இருக்க வேண்டும்.அவர் மீது நமது அன்பு கத்தை கத்தையாக இறங்க வேண்டும்.அவர் நம் மீது கொண்டுள்ள தவறான நம்பிக்கைகள் இல்லாமல் ஆகி அவர் நமது தரப்பின் நியாயத்தை உணர  கடவுள் அவருக்கு அருள  வேண்டும் என்று அவர் மனதை நினைத்து மன்தில் வேண்டுங்கள்.

7.இதனால் அவரது தவறான தூண்டுதலால் நமது மனதில் எப்படிப்பட்ட எண்ண விதைகள் விதைக்கபப்டுகின்றன என்று நீங்களே  கவணமாக கணக்கெடுங்கள். நமது மனதில் மேலே சொன்னபடி அன்பு எண்ணங்கள் நினைக்கப்படும் போது நமது மனதால் கவரப்படும் எண்ணங்கள் அன்பு,மன்னிப்பு,நல்லதை வேண்டுதல் என்று தான் இருக்கும்.இந்த  எண்ணங்களும்  எந்த தவறான எண்ணங்களையும் கவராது அதன் விதையை ஒட்டிய  அன்பு,மன்னிப்பு ,கருணை ஆகியவற்றாஇ மட்டும் கவரும் .இதனால் நமக்குக் கலக்கமான ,மன வருத்தமான எண்ணங்களை உருவாக்கியவர்களால் நமக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது.அவரும் இந்த இயற்கையின் சூத்திரத்தை உணர வேண்டும் என்று எண்னுவோம்.

8.இதனால் நமக்கு எந்தக் கால கட்டத்திலும் யாராலும் தீங்கு என்பதையே செய்ய இயலாது.நமது வாழ்வு முன்னேற்றக் கட்டத்தை நோக்கித் தானாகவே செல்ல ஆரம்பித்து விடும்.நமது வாழ்வின் ஒவ்வொரு நாளிலும் நமது மனதைப் பாதிப்பவர்கள் மீது அன்றைய தினமே இந்த  சூத்திரத்தைப் பயன்படுத்தி நமது மனது என்னும் விளை நிலத்தைத் தூய்மைப் படுத்தி வைப்போம்.நமது வேண்டுதல் சுருக்கமாக பின் வருமாறு இருக்கலாம் நாம் யாரால் பாதிக்கப்பட்டிருக்கின்றோமோ அவரது முகத்தை நமது மனக் கண்ணில் கொண்டு வந்து

"இவர் நன்றாக இருக்க வேண்டும்"
"இவர் மேல் நான் அன்பு செலுத்துகின்றேன்"
"இவர் என் தரப்பு நியாயத்தைத் தெரிந்து கொள்ள இறைவன் அவருக்கு அருள் புரிய வேண்டும்"
"இவர் மேல் இறைவனின் அருள் இறங்க வேண்டும் "
என்று அவரை மனக் கண்னில் கொண்டு வந்து மீண்டும் மீண்டும் நினைக்கும் போது அவர் நமது மனதில் உருவாக்கிய எண்ணத்தால் எந்தத் தீங்கும் நமக்கு விளையாது.நாமும் இந்தக் கலக்கம் தந்த நபரையும் சூழ்நிலையையும் எளிதில் மறந்து விடுவோம்.

9.இந்த மனநிலையைதினம் தோறும்  நமது குடும்ப உறுப்பினர்களில் தொடங்கி ,நாம் அன்றாடம் நமது பயணத்தில்,பொது இடங்களில்,அலுவலகத்தில்,இப்படி எப்போதெல்லாம் மனிதர்களுடன் உறவு கொண்டு வருகின்றோமோ அப்போதெல்லாம் இதனைப்  பயன்படுத்தலாம்.நமக்கு ஒரு கேடு அல்லது தீங்கு பற்றி நல்ல பாடம் வேண்டும் என்றால் இவ்வாறு செய்ய வேண்டியதில்லை.இந்தப் பதிவைப் படித்ஹ்ட பின்பு நீங்கள் என்னைத் தங்களது மனக்கண்ணில் நினைக்காமல் இருந்தால் சரி.இந்தப் பதிவு உங்களுக்குத் தீங்கு எதையும் செய்வதற்காக பதிவிடப்பட்டதல்ல.

மர்பி விதிகள் போட்ட குட்டி விதிகள்

மர்பி விதிகள் போட்ட குட்டி விதிகள் 

1.நம் மீது அன்பு செலுத்துபவர்கள் எப்போதும் நம்மை  விட்டுத் தூரமாகத்தான் இருக்கின்றார்கள்.

2.நம் மீது அன்பு செலுத்துபவர்கள் யார் என்றே நமக்கும் தெரியாது அவர்களுக்கும் தெரியாது.

3.நாம் எப்போதும் நமக்குப் பிடிக்காத மேல் அதிகாரியின் கீழ் தான் பணிபுரிந்து கொண்டிருக்கின்றோம்.நமக்குக் கீழ் பணிபுரிபவர்களும்  இப்படித்தான் நினைக்கின்றார்கள்.

4.நல்ல வேலைக் காரர்கள் எப்போதும் நமக்குப் பக்கத்து வீட்டில் தான்  வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

5.நமக்கு நல்ல கருத்து தோன்றும் போது யாரும் நம்மைப் பேச அழைப்பதில்லை.நாம் பேச அழைக்கும் போது மனதில் பேசுவதற்கு ஒன்றும் இல்லை.

6.நம்மிடம் வேலைக்குச் சேர்ந்தபின்புதான் நல்ல வேலைகாரனுக்கு எல்லா சோதனையும் வந்து அவன் கெட்டவன் என்று பெயர் எடுப்பான்.

7.நம்மிடம் ஒரு கோடி ரூபாய்   பணம்  வரும் வரை நமக்கு ஒரு கோடி ரூபாய் வைத்திருப்பவர்களைப் பிடிக்காது .

8.நல்ல கருத்துக்கள் நிறைந்த சிந்தனையானது நாம் எப்போது ஒரு துண்டு பேப்பரும் பென்சிலும் கூட இல்லாமல் தனியாக இருக்கின்றோமோ அப்போது தான் மின்னல் போலத் தோன்றி மறையும்.வீட்டுக்கு வந்து எப்படி நினைத்துப் பார்த்தாலும் நமது நினைவுக்கு வருவதில்லை.

9.மற்றவர்களுக்குச் சொல்ல எப்போதும் நம்மிடம் நிறைய அறிவுரைகள் இருந்து கொண்டே இருக்கும்.அதனை நாம் சொன்னாலும் அதை யாரும் கேட்டுக்  கடைப்பிடிக்க மாட்டார்கள்  என்று எல்லோரும் நினைத்துக் கொண்டே இருக்கின்றோம்.

10.நமக்கு நல்ல ஆன்மீகச் சிந்தணை வரும் போது தான் ஒரு சாமியார் தவறு செய்ததாக மாட்டிக் கொள்கின்றார்.

11.நாம் நல்ல ஆடை மனதிற்குப் பிடித்தாற்போல் அணிந்து கொண்டு சென்றால் அன்றுதான் என்றும் எதிராக வரும் அந்தக் கல்லூரியில் படிக்கும் பெண்ணைப் பார்க்க முடியாது.

12.நாம் யாரிடமாவது நமது திறமையைக் குறித்து பறை சாற்றிவிட்டு வீடு வந்து சேர்ந்திருக்க மாட்டோம் அந்தத் திறமையே  நம்மிடம் சுத்தமாகக் கிடையாது என்று ஒரு நிகழ்வு நடை பெறும்.

13.உலகத்தில் உள்ள மனிதர்கள் எல்லாம் தாங்கள் யார் என்றும் தங்களது உண்மையான வாழ்வின் நோக்கம் என்ன என்றும் தெரியாமலேயே இருக்கின்றார்கள்.இப்படித்தான் எல்லா மனிதர்களும் நினைக்கின்றார்கள்.

14.நாம் நன்றாகச் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டோம் என்று நினைக்கும் போதுதான் எதிர்புற வளைவில் இருந்து ஒருவன் கண்மூடித்தனமாக வேறு பக்கம் பார்த்துக் கொண்டே தனது சைக்கிளை நம்மை நோக்கி ஓட்டிக் கொண்டு வருவான்.

15.நாம் சரியென்று வாழ்வின் முன்னேற்றத்திற்காகக் கடைப்பிடித்து வந்த முக்கியமான தத்துவங்களும் கொள்கைகளும் நமக்கு நன்கு மறந்து போயிருக்கும்.எப்படி நினைத்தாலும் நினைவிற்கே வராது.

16.நாம் செய்தது நியாயம் தான் என்று நான்கு  பேர்கள் சொல்லுவார்கள் என்னும் செயலை நாம் செய்திருக்கின்றோம் என்று நினைக்கும்  போது தான் யாரும் அதனை ஆட்சேபிக்க மாட்டார்கள்.

17.நாம் நமது நிலத்திற்கு வேலி போடலாம் என்று எண்ணும் போது தான் பக்கத்து நிலத்திற்காரன் அதி ல் ஏற்கனவே ஆக்கிரமிப்பு செய்திருப்பான்.

18.நாம் ஒரு விசயத்தை நன்கு புரிந்து கொண்டு எல்லோரிடமும் சொல்லலாம்  என்று போனால் அன்று அதனை ஒரு அற்ப விசயமாக எல்லோரும் சொல்லுவார்கள்.யாரும் அதனைப்  பற்றி பேச மாட்டார்கள்.

19.நாம் ஒரு புத்தகம் எழுதலாம் என்று பாதி கஷ்டப்பட்டு பல நாட்கள் எழுதிவிட்டு ஒரு நாள் தற்செயலாகப் பார்த்தால் இணையத்தில் அதுபற்றிய பல   நல்ல  புத்தகங்கள் இலவச பதிவிறக்கத்திற்காக இருக்கும்.

20.இன்று தான் ஒரு புதிய சிந்தனை மனதில் மின்னல் போல வந்து  அந்த சிந்தனை வந்த போது நமக்கு பென்சிலும் பேப்பரும் கிடைத்து எழுதி அதனை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வருவதற்குள் அது ஒரு அற்ப சிந்தனையாக நமக்கே தெரியும்.

21.இன்றுதான் எல்லோரும் கவரும் வண்ணம் நாம் இருக்கின்றோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே சார் கண்ணிலே பீழை மாதிரி ஏதோ ஒட்டிக் கொண்டிருக்கின்றது என்று பக்கத்தில் இருப்பவர் சொல்லுவார்.

22.நாம் நல்ல வித்தியாசமான சிந்தனைகளாகச் சிந்திக்கின்றோம்  என்னும் போது தான் அதைவிட  பல வித்தியாசமான சிந்தனைகள் அடங்கிய பல  புத்தகங்கள்  பல நூற்றாண்டுகளுக்கு முந்தியே எழுதப்பட்டுள்ளது என்று நமக்குத் தெரிய வரும்.

23.இந்த உலகம் மாயையானது எல்லாமே பொய்யானது இன்பமோ துன்பமோ என்று எதுவுமே இல்லை என்று நாம் உறுதியாக முடிவு செய்து இருக்கும் போது தான் ஊரில் இருந்து போன் வரும் மனைவியிடம் இருந்து ஏங்க கேஸ் சிலிண்டர் தீர்ந்து  போச்சு உடனே ஏற்பாடு பண்ணுங்க என்று.

24.நமக்கு நன்கு  பழக்கமான மேல் அதிகாரி மாறுதல் ஆகி நாம் பணிபுரியும் ஊருக்கு வரும் போது அவர் நம்முடன் பணிபுரியும்  எல்லோருக்குமே ஏற்கனவே நன்கு  பழக்கமானவராக இருப்பார்.

25.நம்மிடம் ஐடியா கேட்டு தங்களது வேலைகளைச் செய்பவர்கள் தங்களது சந்தேகம் நமக்குத்தான் வந்தது போலப் பேசுவார்கள்.நாம் கொடுத்த ஐடியாவை அவர்கள் தான் நம்மிடம் கூறியது போலக் கூறுவார்கள்.நாம் தான் சந்தேகம் கேட்டதைப்  போலக்  கூறுவார்கள்.

26.நாம் யாராவது ஒரு பெரிய மனிதர்  நமக்குப் பழக்கம் அவரிடம் இக்கட்டில் உதவி கேட்கலாம் என்றிருந்தால் அவர் நமது  வீட்டுக் கதவைத் தட்டிக் கொண்டிருப்பார்.

27.நாம் ஒரு நல்ல கவிதை எழுதியிருக்கின்றோம் என்று நினைத்தால் மறு நாள் நமக்கே அதனைப் பிடிக்காது.

28.நமக்கு ஒரு புதிய சிந்தனை வந்துள்ளது என்று நினைக்கும் போது அது ஒரு அற்ப சிந்தனை என்று மற்றவர்கள் எல்லோருக்கும் தெரிந்து நமக்குத் தெரியாமலேயே இருக்கும்.

29.ஒருவர் நம் மீது வெறுப்பாக இருக்கும் போது தான் அவர் மீது நமக்கு மிகுந்த அன்பு ஏற்படும் .

30.நமக்கு மற்றவர்களோடு உரையாடத் தெரியவில்லை என்று மற்றவர்கள் நினைக்கும் போது தான் நாம் நிறையப் பேசிக் கொண்டிருப்போம்.

31.நமக்குத் தீவிர கடவுள் நம்பிக்கை ஏற்படும் போது நாம் மருத்துவமனை படுக்கையில் அறுவைசிகிச்சையில் இருந்து நகர முடியாதபடி மயக்க நிலையில் இருப்போம்.

32.நமது நம்பிக்கைக்குரிய வேலையாள் எப்போதும் நாம் சரியாகச் செய்ய வேண்டும் என்று விரும்பும் காரியத்தை மட்டும் செய்யாமல் மறந்துவிடுவார்.

33.மேலதிகாரிக்கு  எந்தத்தீங்கும் வராமல் தன்னுடைய பணியைச் செய்யும் பணியாளரை அந்த மேலதிகாரிக்குப் பிடிக்காது.

34.நமது குழந்தை வகுப்பறையில் ஆசிரியரிடம் திட்டு வாங்கிக் கொண்டிருக்கும் போது நாம் அவனை மற்றவர்களிடம் புகழ்ந்து பேசிக் கொண்டிருப்போம்.

35.நாம் நமது குழந்தையைக் கடினப்பட்டு ஒரு புகழ் வாய்ந்த பள்ளியில் சேர்த்துவிட்டு வீடு திரும்பும் போது தான் தற்செயலாக அந்தப் பள்ளியைப் பற்றிய குறை கூறியுள்ள ஒரு செய்தியை நாளிதழில் பார்ப்போம்.

36.நமது ஆளுகை மற்றவர்கள் மீது நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று எண்ணும் போது நாம் மற்றவர்களின் ஆளுகைக்குட்பட்டு செயல்களைச் செய்து கொண்டிருப்போம்.

37.மற்றவர்களுடைய பலவீனங்களை நாம் பார்க்கும் போது நமது பலத்தை அவர்கள் எடுத்துக் கொண்டு நம்மை பலவீனர்களாக மாற்றுகின்றார்கள் என்பது நமக்குத் தெரியாது.

38.நாம் அப்பாடா வாழ்க்கை நிம்மதியாகப் போகின்றது என்னும் தருணத்தில் இருந்து தான் நமது நிம்மதியிழப்புக்கான சூழ்நிலை ஆரம்பிக்கின்றது.

39.அமைதி என்பது கொந்தளிப்பில் தான் ஒளிந்து கொண்டிருக்கின்றது.

40.வாழ்க்கையைப் பிரச்சினையில்லாமல் ஓட்ட நாம் எத்தனை வழிகளைக் கடைப்பிடித்தாலும் அத்தனை வழிகளும் பிரச்சினையாகத்தான் இருக்கும்.

41.ஒரு விசயத்தை நாம் நன்றாகப் புரிந்து விட்டோம் என்று  எண்ணும் போது தான் அது பற்றிய புதிய புரியாமை மனதில் தோன்றி ஏற்கனவே புரிந்ததையும் புரியாமல் செய்து விடும்.

42.நாம் நமது புதிய நண்பர்களுடன் நமது கண்ணியத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் போது தான் பால்ய  நண்பன் வந்து நீயெல்லாம் இப்படி உயர்ந்த நிலைக்கு வருவது கனவிலும் நடக்காதது என்று அவர்களது அன்பைக்  காட்டுவார்கள்.

43.நம்மைப்  படுகுழியில் தள்ளத்தக்க திறமை வாய்ந்தவர்கள் தான் நமக்கு நமது மனம் கோணாதபடிக்கு சேவகம் செய்து கொண்டிருப்பார்கள்.

44.நாம் மற்றவர்கள் புகழ்ச்சியில் நம்மை மறந்திருக்கும் நிலையில் தான் நமது அழுக்குகளை எடை போட்டுக் கொண்டிருப்பார்கள்.

45.ஒரு நண்பன் தப்பானவனாக இருப்பானோ என்று நாம் நினைக்கும் அந்த நிமிடத்தில் இருந்து அவன் தப்பானவனாக மாறும் சூழல் உருவாகிவிட்டது.

46.நாம் நமது கடமைகளை சரியாகச் செய்தாலும் கூட மற்றவர்கள் எவரும் தங்களது கடமைகளைச் சரியாகச் செய்வது கிடையாது அவர்களும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

47.நம்மைச் சுற்றியுள்ளவர்கள்  இவன் எதிலேயாவது  மாட்டமாட்டானா என்று நினைக்கும் போது தான் நாம் நமது திறமைகளைப் பற்றிப்  பெருமை பேசிக் கொண்டிருப்போம்.

48.நம்மைப் பார்த்தவுடன் பவ்வியமாக எழுந்து வணக்கம் சொல்லுபவர்கள் நமது நல்ல குணத்தை மதித்து எழுந்து வணக்கம்  சொல்வதில்லை நமது விச குணங்களை உணர்ந்து தான் .

49.மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்று எண்ணும் போது  நம் மூலமாக  அவர்களுக்கு நல்லது நடக்கும்.

50.நமக்கு வரும் தீங்குகளை ஒருவர் அவர் மூலமாக நமக்குச் செய்து நமக்கு அதை நல்லதாக மாற்றுவார்.

51.நாம் வாய்விட்டுச் சிரிக்கும் போது  மற்றவர்களுக்கு அது பிடிக்காது .

52. மிகவும் முக்கியமான விசயம் நினைவுக்கு வந்து அதனை உடனடியாக மனைவியிடம் சொல்லி எச்சரிக்கை செய்ய நினைக்கும் போது நமது அலை பேசியில் டவர் தெரியாது.டவர் தெரியும் போது நமக்கு அது ஒரு முக்கியமான விசயமாகத் தெரியாது .

53.நாம் காசிக்கு போய் மகான் ஒருவரை தரிசணம் செய்து கொண்டிருக்கும் போது அவர் நமது ஊரில் உள்ள ஒரு சிறிய கோவிலைச் சொல்லி அது ரொம்ப விசேசமானது என்று கூறுவார்.

54.நாம் மிகுந்த கோபமாக இருக்கின்றோம் என்று எல்லோரும் நினைக்கும் போது நாம் அமைதியாக நமது காரியங்களைச்  செய்து கொண்டிருப்போம்.

55.நாம் அமைதியாக நமது காரியங்களைச் செய்து கொண்டிருக்கும் போது மற்றவர்கள் நமக்கு கோபம் ஏற்படும் செய்திகளைச் சொல்லுவார்கள்.


56.எப்போதும் நமக்கு வாடகை வீடு கிடைத்தால் வீட்டு உரிமையாளர் அதன் அடித்தளத்தில் குடியிருந்து நம்மைக் கண்கானித்துக் கொண்டே இருப்பார்.வீட்டின் உரிமையாளர் வெளியூரில் இருந்தால் அந்த வீட்டில் குடி தண்ணீர் இணைப்புக் கூட இருக்காது.

57.நாம் எந்த வீட்டிற்கு வாடகைக்குச் சென்றாலும் அந்த வீட்டின் கழிவு நீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டே தீரும்.மழைக் காலத்தில் வீடும் ஒழுகும்.

58.நாம் ஒரு வீட்டில் வாடகைக்கு புதியதாகக் குடியேறும் போது அந்த வீட்டின் உரிமையாளர் நமக்கு மிக மிக நல்லவராகத் தெரிவார் அவருக்கும் தான் நாம்.

59.நாம் ஒரு வாடகை வீட்டில் இருந்து வெளியேறும் போது அந்த வீட்டின் உரிமையாளர் போல ஒரு கெட்டவர் உலகில் எங்கும் இல்லை என்று தோன்றும் ,அவருக்கும் தான்.

60.இந்த விதிகளில் ஏதோ ஒன்று இருப்பது போன்று தோன்றும் ஆனால் நமக்கு அது புரியாது புரிந்தாலும் வாழ்க்கையில் தகுந்த நேரத்தில் பயன்படுத்த முடியாது.

61.ஏதாவது ஒரு விசயத்தைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்திருக்கும் போது தான் ஒரு பதிவை எழுதி முடித்து வெளியிட்டிருப்போம்.

62.நமக்கு நன்கு விளக்கமாகத் தெரிந்த விசயத்தைப் பற்றி நமக்கு பதிவிட வேண்டும் என்றே தோனாது.

63.எப்போதெல்லாம் மனதில் குழப்பங்கள் தோன்றுகின்றதோ அதுவே ஒரு பதிவைத்  தட்டச்  சரியான  நேரம் .

64.நம்மை யாரும் சினிமாவில் நடிக்க அழைக்கமாட்டேன் என்கின்றார்கள் எனக்கு நடிகர்களே   பிடிக்காது.

65.நம்மைக் கொஞ்சம் கூட மதிக்காதவர்களுக்குத்தான்   நாம்  நமது அன்பைப் பொழிந்து கொண்டிருப்போம்.

66.சின்ன "ன" "ள" வும் பெரிய "ண" "ல" வும் எங்கே போடுவது என்று நாம் தெரியாமல் இருக்கும் போதே சார்  உங்க எழுத்து நன்றாக உள்ளது  என்று நான்கு பேர்கள் சொல்லுவார்கள்.

67.நல்ல நண்பர்கள் எப்போதும் நம்முடன் தொடர்புடன் இருக்க மாட்டார்கள்.தொடர்புடன் இருப்பவர்களுக்கு நாம் தான் நல்ல நண்பர்கள்.

68.நமது  வேலையில் நாம் பண்டித்யம் பெற்று விட்டோம் என்று நினைக்கும் போது தான் மேலதிகாரியிடம் இருந்து ஒரு மெமோ வரும்.

69.நம்மிடம் சரளமாக எப்போதும் போனில் பேசும் ஒருவரிடம் நாம் ஒரு உதவி கேட்கலாம் என்று போன் செய்தால் அப்போது தான் அவர் நமது அழைப்பை ஏற்கமாட்டார்.அவர் மீண்டும் நம்மை அழைக்கும் போது நாம் அவரிடம் அந்த உதவியைக் கேட்கமாட்டோம்.

70.நான் தற்போது அசைவம் எல்லாம் சாப்பிடுவதில்லை என்று எல்லோரிடமும் அறிவித்துக் கொண்டிருக்கும் போது தான் ஒரு படாக்கான் விருந்துக்கு நமக்கு அழைப்பு வரும் .

71.நமது பெற்றோர்கள் எப்போதும் நமது சகோதரனுக்குத்தான் அதிக சலுகை காட்டுகின்றார்கள் இது சகோதரிகள்,சகோதரனும் இப்படித்தன் நினைத்துக் கொண்டிருகின்றான் சகோதரிகளுக்குச் சலுகை காட்டுகின்றார்கள் என்று.

72.நாம் ஒரு மேடையில் பேசக் குறிப்பெடுத்திருக்கும் தகவல்கள் அடங்கிய தாள் அடுத்த பேச்சுக்குத் தேடும் போதுக்  கிடைக்கவே கிடைக்காது.முதல் மேடையில் நாம் எடுத்த குறிப்புகளில் இருந்து எதையும் பேசியிருக்க மாட்டோம்.

73.நாம் ஒரு சவாலான காரியத்தை இன்றே செய்து முடிக்க வேண்டும் என்று நினைத்து  ஒரு இடத்திற்கு வேகமாகப் போக வேண்டும் என்று போகும்  போது தான் நமது பைக் மூன்று முறை பஞ்சர் ஆகும் வண்டியை பஞ்சர் கடைக்குத் தள்ளிக் கொண்டிருப்போம்.

74.நாம் கல்யாணத்திற்கு முதன் முதலிம் பத்திரிக்கை கொடுக்கலாம் என்று சென்றால் நமது எதிர்புறமாக நாம் முதலில் பார்த்து  மறுத்த  பெண் வந்து கொண்டிருப்பார்.

75.நாம் ஒரு விசயத்தை நன்றாகப் புரியப் புரிய நாம் எதில் இருந்து சிந்தனையை ஆரம்பித்தோமோ அதிலேயே தான் வந்து நிற்போம்.

இந்த விதிகளுக்கு மூலம் மர்பி விதிகள் தான் அதனைத் தழுவியே இந்த விதிகள் எழுதப்பட்டுள்ளது.

எனது நல்ல குணங்களுக்கு காரணம் நான் படித்த புத்தகங்கள்

எனது நல்ல குணங்களுக்கு காரணம் நான் படித்த புத்தகங்கள்

எனது தீய குணங்களுக்கு காரணம் நான் பார்த்த மனிதர்கள்

மனம் என்பது ஒரு software தொகுப்பு 
மூளை என்பது ஒரு hardware தொகுப்பு

நமது மூளையின் சாதக பாதகங்களுக்கு யாரும் பொறுப்பல்ல‌
அது இறைவனால்,விதியால்,பாரம்பர்யமாக வந்த அமைப்பு

நமது வளர்பருவ பயிற்சிகளே
நமது மனம் என்ற மென்பொருள்களின் கூட்டமைப்பு
இதை  operating system   அல்லது os என்று சொல்லலாம்

இது நமது’ அனுபவங்களின்’ லாபம் அல்லது நஷ்டம்

நமது பெற்றோர்,ஆசிரியர்,அயலார் 
மற்றும் சமூக‌தாக்கங்களின் இறுதி வடிவமானது நமது மனது.

தரையில் நமக்கு போடப்பட்ட 10 சீட்டு
நமது தாய் தந்தை மூளை

சுழன்று வரும் சீட்டுகளானவை, 
ந‌மது அதிட்டமும்
துரதிட்டமுமான 
விதி வசத்தால் வரும் அனுபவங்கள்.

இருப்பதைக் கொண்டு சிறப்புடன்
இந்த வினோதமான வேடிக்கையான வாழ்வை
அதன் வெற்றி தோல்விகளை ரசனையுடன் 
ருசித்து ரசித்து  மகிழ்ந்து வாழ பழகிக் கொள்வோம்…

காரணத்தை ஆராய்ந்து ஆராய்ந்து கொள்கைகள் தான் நிரம்பி வழிகின்றன, தீர்வுகளைக் காணோமே?

காரணத்தை ஆராய்ந்து ஆராய்ந்து கொள்கைகள் தான் நிரம்பி வழிகின்றன, தீர்வுகளைக் காணோமே?

அர்த்தமுள்ள இனியமனம்

மனிதன் மாற வேண்டும் அவன் மயக்கம் தீர வேண்டும்

வர்க்கப் பிரிவினை தான் காரணம்
என சிவப்புக் கொடி பிடித்தார்கள்

இல்லை இல்லை சாதிப்பிரிவினை அதை விட ஆழம்
என கருப்புக் கொடி பிடித்தார்கள்.

ஆசை தான் காரணம் என்றான் புத்தன்
இம்சைதான் காரணம் என்றார் காந்தி
இச்சைதான் காரணம் என்றார் யேசு

காரணத்தை ஆராய்ந்து ஆராய்ந்து
கொள்கைகள் தான் நிரம்பி வழிகின்றன,
தீர்வுகளைக் காணோமே?

எத்தனை எத்தனை
நூற்றாண்டுகள்
ஆயிரமாண்டுகள்
கொண்டாடி முடித்தாலும்
மனிதத்தின் பிரச்சனைகள் வளர்ந்து கொண்டுதானே இருக்கிரது

மனம் மாற வேண்டும்
மன மாற்றம் வர வேண்டும்
மனிதன் மாற வேண்டும்
மயக்கம் மாற வேண்டும்

இந்த மாமனிதர்களுக்கு சிலை வைத்து மாலை போட்டு
மரியாதை செய்து விட்டு மறந்து விடும் மக்கள் குணம் மாறவேண்டும்

எது தவறு எது சரி, முடிவெடுக்க முடியாது அவ்வளவு சுலபத்தில்

எது தவறு எது சரி, முடிவெடுக்க முடியாது அவ்வளவு சுலபத்தில்…

ஏவுகனைகளின் செலவுகள் ஏழைகளின் உணவிலிருந்து திருடப்பட்டது.
மிக ஆழமான சிந்திக்க வேண்டிய வார்த்தைகள்.

இது ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கும் கதைதானே,

அடிப்படைத் தேவைகள்
அந்தஸ்து தேவைகள்
எது அத்யாவசயம்?எது அனாவசயம்?

இந்த வழக்காடு மன்றம் வீட்டிலேயே தீரவில்லை
பிறகு நாட்டிலே எப்படித் தீரும்

கோடான கோடி வயிறுக்கு பசி,
வறுமைக் கோட்டுக்கு கீழே,
கோடிக்கணக்காக செலவு செய்து நிலாவில் கால்பதிப்பு,

எது தவறு எது சரி,
முடிவெடுக்க முடியாது அவ்வளவு சுலபத்தில்

பள்ளிக்கூடத்துக்கு fees கட்ட பணமில்லை
மாமன் மச்சானைக் கூட்டி காதுகுத்த கூத்தாடலாமா?
எனக்கு வைர நெக்லஸ் இல்லை,
உங்களுக்கு எதற்கு கப்பல் மாதிரி கார்?

யுத்தங்கள்,வாதங்கள் என்றென்ரும்,எங்கெங்கும் இருக்கிறதே?
நடு நிலை தொடரும், ந‌ல்லதே நடக்கட்டும்.

அதோ அந்தக் கடைசியில் இருப்பவர் யார்?

அதோ அந்தக் கடைசியில் இருப்பவர் யார்?

1.அதோ அந்தக் கூட்டத்தின் கடைசியில் தன்னைக் குறுக்கி உட்கார்ந்திருப்பது யார் என்று தெரிகின்றதா?அது நான் தான் நான் தான் என்று ஒரு கூட்டம் ரகசியமாகக் கூவிக் கொண்டிருக்கின்றது  .இதனைக் கூடத் தனியாக யாரையும்  அனுபவிக்க விடாத  அளவிற்கு அந்தக் கூட்டம்.அந்தத் தகுதியைக் கூட ஒவ்வொருவரும் விரும்பியும் மற்றவர்கள்  அதனை அடைந்து விடக்கூடாது என்று மருகியும் உள்ள மனிதர்களின்  கடைநிலை அது.அதோ அந்தக் கூட்டத்தின் கடைசியில் தன்னைக் குறுக்கிக் கொண்டு உட்கார்ந்திருப்பது யார் என்று தெரிகின்றதா?

2.அதனை அடைந்து விட்டால் அதன் பிறகு வாழ்வின் ஒவ்வொரு நிலையும் முன்னேற்றம் தான்.அந்த நிலை தான் கடை நிலை ஆயிற்றே அதற்குக் கீழே  அடைய வேறு எந்த ஒரு நிலையும் இல்லையே.எனக்கு வாழ்வின் எந்த ஒரு கட்டத்திலும் மிகவும் பிடித்தமான வேசம் இது  தான் .அதோ அந்தக் கடைசியில் உட்கார்ந்திருப்பது யார் என்று தெரிகின்றதா?அது நாம் மறைத்து வைத்துள்ள நமது அடையாளங்களைநம்மைப் போன்று  மறைக்கத் தெரியாமல் வெளிப்படையாகக் காட்டிக் கொண்டிருக்கும் அவரைத் தெரிகின்றதா?

3.தனது அடையாளத்தைத் தொலைத்துவிட்டு அடையாளமே இல்லாத நபராக அதோ அந்தக்கடைசியில் உட்கார்ந்திருக்கும் நபர் யார் என்று தெரிகின்றதா?அவரைப் பார்த்தவுடன் ஏன் உங்களுக்கு இவ்வளவு பாசம் அது தான் நீங்கள் இல்லையே?அதோ அவர் எனக்கான உள் முக அடையாளத்துடன் வேறு ஒரு நபரின் வெளிப்புறத்தை வேடமாகப்  போட்டுக் கொண்டு இருக்கின்றாரே என்று ஒவ்வொருவரும் வெளிப்படையாகச் சொல்லமுடியாமல் ?அதோ அந்தக் கடைசியில் உட்கார்ந்திருக்கும் நபர் யார் என்று தெரிகின்றதா?

4.அட இந்த வேடத்திற்குக் கூடவா இவ்வளவு மவுசு?எல்லோரும் தாங்களாகவே அந்த நபர்  தாங்கள் தான் என்று பாவிக்கின்றனரே?அதோ அந்தக் கடைசியில் உட்கார்ந்திருக்கும் நபர் யார் என்று தெரிகின்றதா?அதோ அவர் எழுந்து விடப் பார்க்கின்றார் விடாதீர்கள் அவரை .அவர் பூண்டிருப்பது எனது அடையாளத்தை அவர் போய் விட்டால் நான் எங்கே போய் என்னைத் தேடுவது.அப்புறம் நானே காணாமல் போய் ,காணாமல் போன  என்னை நானே தேடுவது போன்று ஆகி விடும்.

5.அதோ அந்தக் கடைசியில் உட்கார்ந்திருக்கும் நபர் யார் என்று தெரிகின்றதா?விடாதீர்கள் அவரை வெளியே எங்கும் போய் விடாமல் அவரது முகத்தை யாராவது திருடித் தங்களது முகத்தில் அணியப் போகின்றார்கள் .அப்புறம் நான் எப்படி வாழ்வது மீதமுள்ள எனது வாழ்வை. வாழக் கூடிய எனது உருவத்தை அவர் தானே சுமந்து கொண்டிருக்கின்றார்.அதோ அந்தக் கடைசியில் உட்கார்ந்திருக்கும் நபரை யார் என்று தெரிகின்றதா?

6.என்னது அவர் உங்களது உருவத்தையும் சுமந்து கொண்டிருக்கின்றாரா?நீங்களும்தான் அவரைத் தேடிக் கொண்டிருக்கின்றீர்களா?நான் தான் உங்களது முகத்தைத் திருடி அணிந்து கொண்டிருக்கின்றேனா?அதோ அந்தக் கடைசியில் உட்கார்ந்திருக்கும் நபருக்கு அருகில் உட்கார்ந்திருக்கும் நபர் நீங்கள் தானா?நீங்களும் தான் உங்களைத் தொலைத்துவிட்டுத் தேடிக் கொண்டிருக்கின்றீர்களா?

7.சுய முன்னேற்றம்,சுய முன்னேற்றம்  என்று எவ்வளவு நாள் தான் எழுதுவது ,சுய பின்னேற்றம் என்ன என்று தெரிந்து கொள்ளாமல் சுய முன்னேற்றத்தைத் தெரிந்து கொள்ள முடியாது தானே?.நாம் யார் என்பதை அறியாமல் நாம் சமூகத்தில் எந்த இடத்தில் இருக்கின்றோம் என்பதையும் தெரியாமல் நம்மை நாம் முன்னேற்ற முடியாதே?நம்மை நாமே உணர்ந்தால் தானே நம்மைப் பிறர் உணரமுடியும்.இந்த வகையில் அதோ அந்தக் கடைசியில் உட்கார்ந்திருக்கும் நபர் யார் என்பதை உணர்ந்தோம் என்றால் இந்த சுய பின்னேற்றமும் ஒரு மகத்தான சிந்தனைதான்.

Monday, January 13, 2014

சுவாமி விவேகானந்தர்!

சுவாமி விவேகானந்தர்!!!

உங்கள் பணி என்ன?
''ஏற்கெனவே இருப்பதை அழிப்பதல்ல என் பணி; மாறாக, இருப்பதைப் புனர்நிர்மாணம் செய்வதே!

உலக நாடுகளின் சரித்திரங்கள் அனைத்திலும், ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு மகாபுருஷன் அதன் தேசிய வாழ்வின் கேந்திரமாக விளங்குவான். அந்த மகாபுருஷனது கருத்துக்கள் மக்கள் யாவர் மீதும் சக்தியுடன் பாயும்.

என் சீடர்களாகிய நீங்கள் புத்திசாலிப் பிள்ளைகள்தான். ஆயினும், காரியத்தில் என்ன செய்திருக்கிறீர்கள்?

உங்களது ஒரு வாழ்வை மற்றுமுள்ள பலரின் வாழ்வுக்காக நீங்கள் அர்ப்பணிக்க வேண்டும். வேதாந்தம் கற்பது, தியானம் செய்வது முதலானவற்றை அடுத்த பிறவியில் பார்த்துக்கொள்ளலாம்!

'பிறருக்குப் பணி செய்வதிலேயே இந்த உடல் அழியட்டும்’ என்று நீங்கள் நினைக்கவேண்டும். அப்போதுதான், நீங்கள் என்னிடம் வந்தது வீண்போகவில்லை என அறிந்துகொள்வேன்!''

'என்னை நீ விலக்கலாமா?’

'துறவியர்க்கு எல்லோரிடத்தும் எல்லாவற்றிலும் சம பாவம் இருக்கவேண்டும்’ என்று சுவாமிஜி உணர்ந்து கூறிய ஒரு நிகழ்ச்சி.

சுவாமிஜி அப்போது ஜெய்ப்பூரில், மன்னரின் விருந்தினராகத் தங்கியிருந்தார். ஒருநாள் மாலையில், மன்னருக்காக ஒரு நாட்டிய நிகழ்ச்சி நடைபெற இருந்தது. அதற்கு சுவாமி விவேகானந்தரையும் அழைத்தார் மன்னர். ஆனால் சுவாமிஜியோ, நாட்டியப் பெண் ஒருத்தியின் கலை நிகழ்ச்சிக்கு சந்நியாசி ஆகிய தாம் வருவதற்கில்லை என மறுத்துவிட்டார். இந்தச் செய்தி அந்த நாட்டியப் பெண்ணுக்குத் தெரிந்துவிட்டது. அம்பு பட்ட வெண்புறா கதறுவதுபோல மிகவும் சோகத்துடன் பாடினாள் அவள். அந்தப் பாடலின் கருத்து...

'பரமனே! சமபாவம் என்பதையே இயல்பாகக் கொண்ட நீ, பாவம் செய்தவள் இவள் என்று என்னை ஒதுக்கிட நினைக்கலாமா? இரும்புத்துண்டு ஒன்று, இறைவனின் பதுமையில் பஞ்ச உலோகங்களில் ஒன்றுமாக அமைகிறது. பிறிதொரு இரும்புத் துண்டோ பிராணிகளைக் கொல்லும் பாவியின் கை வாளாக பாதகம் புரிகிறது. ஆயினும், இரண்டும் ரஸவாதியின் திறனால் மாசற்ற பொன்னாய் மாறுவதையும் நீ அறிவாய்! பாவம் செய்தவள் இவள் என்று என்னை விலக்க நினைக்காதே!

சமபாவம் என்பதே நின் இயல்பன்றோ? காளிந்தி நதியின் புனித நீரும், கழிகாலில் வழிகின்ற இழிநீரும் ஒரு நிலையில் இனிய கங்கையில் இணைகின்றபோது ஏற்றம் பெறுவதை நீ ஏற்றுக்கொண்டவன் அன்றோ! பாவம் செய்தவள் இவள் என்று என்னை விலக்க நினைக்காதே! பரமனே, சமபாவம் என்பதே நின் இயல்பன்றோ?’

அவளது அந்த அற்புத கீதம் சுவாமிஜியின் காதில் விழுந்தது. உள்ளத்தைத் தொட்டது. சுவாமிஜியின் இதயம் இளகியது. 'மாசு நிறைந்தவள்’ என்று உலகத்தவர் யாவரும் கருதிய ஒரு பெண்தான் எவ்வளவு அழகாக தனக்கு உயர்ந்ததொரு தத்துவத்தை உணர்த்திவிட்டாள்! பாவமும் புண்ணியமும் இறைவனின் சந்நிதியில் ஏது? பரமனின் முன்பு யாவும் ஒன்றுதானே! மாயைக்கு உட்பட்ட உலக மக்களுக்கு பேதங்கள் இருப்பது இயல்பு. ஆனால், மாயையைக் கடந்து, பிரம்மத்தில் லயித்திருக்கும் சந்நியாசிக்கு சமபாவம்தானே இருக்கவேண்டும்?’

சுவாமிஜி உடனே நேராக நாட்டியம் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்துக்குச் சென்றார். இயல்பிலேயே ஒளிவீசும் அவரது கண்கள் கண்ணீரால் பளபளக்க, பாடிய அணங்கை அன்னையைக் காண்பதுபோல் அன்புடன் நோக்கி, ''தாயே! நான் குற்றவாளி ஆகிவிட்டேன். இங்கு வராமலே இருந்து உன்னை அவமதித்த பாவத்துக்கு ஆளாகி இருப்பேன். ஆயினும் தாயே... அதிர்ஷ்டவசமாக உன் சங்கீதம் என் அறிவை விழிப்புறச் செய்துவிட்டது!'' என்றார்.

 'வேதங்களால் என்ன பயன்?’

சுவாமிஜி, பிரேமானந்தருடன் உலாவச் சென்றார். அது 1902-ம் ஆண்டு, ஜூலை 4-ம் தேதி, வெள்ளிக்கிழமை. அன்று மாலையில், பற்பல விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே சென்ற அவர், வேதத்தைப் பிரசாரம் செய்யவேண்டியதன் அவசியம் குறித்துச் சொன்னதுடன், வேதத்துக்காக ஒரு கல்லூரி தொடங்க வேண்டும் என்ற தமது விருப்பத்தையும் வெளியிட்டார்.
''சுவாமிஜி, வேதத்தைப் படிப்பதால் என்ன விசேஷ பயன் கிடைக்கும்?'' என்று கேட்டார் பிரேமானந்தர்.

சுவாமிஜி பளிச்சென்று, ''மூடநம்பிக்கைகள் அழியும்'' என்றார்.

மடத்துக்குத் திரும்பிய சுவாமிஜி சாதுக்களுடன் பேசிக் கொண்டிருந்தார். பற்பல நாடுகள் உன்னதமாக எழுந்ததையும், வீழ்ந்ததையும் பற்றிக் கூறினார். ஆனால் இந்தியாவைப் பற்றி அவர் பேசுகையில், ''இந்தியா அமரத்துவம் பெற்றது. ஆண்டவனைத் தேடுவதிலேயே ஈடுபட்டால், இந்தியா என்றும் வாழும். மாறாக அரசியலையும், சமூக சச்சரவுகளையும் தேடிப் போனால், இந்தியா செத்துவிடும்'' என்றார்.

இதுவே அவரது இறுதியான போதனை. எத்தனையோ விவேகானந்தர்கள் வருவார்கள்!

தாம் யார் என்று அறிந்து, அதுவாகவே சுவாமிஜி மாறப்போகும் அந்த இறுதியான நாளில், அதிகாலையில் எழுந்த சுவாமிஜி, சிறிது தேநீர் பருகிவிட்டு தியானத்தில் அமர்ந்தார்.

வழக்கத்துக்கு மாறாக பூஜாகிருகத்தின் கதவுகளை எல்லாம் மூடிவிட்டு, ஏகாந்தமாக தியானம் செய்யலானார். தியானத்தைவிட தியாகம் பெரிது என்று வாழ்ந்திருந்த நாட்களெல்லாம் முடிந்துவிடப் போகும் தினம் அது என்பதாலோ என்னவோ, சுவாமிஜி வெகு நேரம் தியான சமாதியில் ஆழ்ந்திருந்தார்.

தியானம் முடிந்து பூஜாகிருகத்தின் படிகளில் இறங்கி வந்த சுவாமிஜி, தன்னையும் அறியாமல் அம்பிகையைப் பற்றிய கமலாகாந்தரின் அற்புதமான பாடலைத் தமது அமுதமான குரலில் பாடினார். பேலூர் மடத்தினர் அந்தத் தீஞ்சுவைக் குரலைக் கேட் டனர்- அதுதான் தாங்கள் கடைசியாகக் கேட்கும் குரல் என்று அறியாமலே!

தம்மையறியாமலே பாடியதுபோல், பாடல் முடிந்ததும் தம்மையறியாமலே பேசவும் செய்தார் சுவாமிஜி. ''காளியை மட்டும்தானா... இந்த விவேகானந்தனையும்கூட யார் புரிந்துகொண்டார்கள்? அவன் என்ன செய்தான் என்று யார் தெரிந்துகொண்டார்கள்? இன்னொரு விவேகானந்தன் இருந்தால், அவனால்தான் புரிந்துகொள்ள முடியும். இன்னும் ஒரு விவேகானந்தன் என்ன... கால வெள்ளத்தில் எத்தனையோ விவேகானந்தர்கள் தோன்றத்தான் போகிறார்கள்..!''