Tuesday, June 16, 2015

ஒரு நிமிடம் கூட ஓயாதீர்கள்….

ஒரு நிமிடம் கூட ஓயாதீர்கள்….

  • எப்போதும் விரிந்து மலர்ந்து கொண்டே இருப்பது தான் வாழ்க்கை. யாருக்கும் பயனில்லாமல் சுருங்கி விடுவது தான் மரணம். தோல்வியின் மூலம் நாம் புத்திசாலிகள் ஆகிறோம். அதனால், எத்தனை முறை தோற்றாலும் குறிக்கோளை அடைவதற்கான முயற்சியை கைவிட்டுவிடாதீர்கள்.
  • ஒரு நிமிடம் கூட ஓயாமல், ஏதாவது ஒரு பணியைச் செய்து கொண்டே இருங்கள். அது தவறோ சரியோ, எதுவாக இருந்தாலும் பொருட்படுத்தவேண்டாம். நமது அகவாழ்க்கை சிறந்ததாகவும், தூய்மையானதாகவும் இருந்தால் மட்டுமே நாம் காணும் உலகமும் சிறப்பும் தூய்மையும் கொண்டதாக இருக்கும்.
  • சண்டையிடுவதோ, குறைசொல்வதோ தேவை இல்லை. நிலைமையைச் சீர்படுத்தி அமைக்க அவை சிறிதும் உதவப்போவதில்லை. நாம் எண்ணும் ஒவ்வொரு எண்ணமும், நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சூட்சும தன்மையை அடைந்து நம்மிடமே வந்து விடும்.

உழைத்தால் சாதிக்கலாம்

உழைத்தால் சாதிக்கலாம்

* நியாயத்தை எடுத்துச் சொல்வதில் கோழையாக இராதீர்கள். உலக நன்மைக்காக சண்டை செய்வதில் வீரராக இருங்கள்.

* உங்களை ஏழை என்று நினைக்காதீர்கள். பணம் ஒரு சக்தியல்ல. நன்மையும் தெய்வபக்தியுமே சக்தி.

* இந்த உலகில் தோன்றிய நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.

* தனியாக இருந்து கொண்டு பலருடைய பகையை தேடிக் கொள்பவன் அறிவற்ற மூடனைப் போன்றவன்.

* செல்வம் பெருகிய காலத்தில் ஒருவனுக்கு பணிவு வேண்டும். அதே சமயம், செல்வம் குறைந்து வறுமை வரும் காலத்தில் பணியாத துணிவு வேண்டும்.

* கடின உழைப்பு இல்லாமல், பெரிய காரியங்களைச் சாதிக்க முடியாது.

தைரியமாக இரு மன உறுதியை இழக்காதீர்!!!

தைரியமாக இரு மன உறுதியை இழக்காதீர்!!!

* அறியாமையால் அச்சம் உண்டாகிறது. அச்சம் துன்பத்திற்கு வழிவகுக்கிறது.

* நிமிர்ந்த நெஞ்சுடன் தைரியமாகப் போராடுங்கள்.

* பணியின் முழுப் பொறுப்பையும் உங்கள் மீது சுமத்திக் கொள்ளுங்கள்.

* துணிவுடன் செயலாற்றுங்கள். உங்களுக்குரிய விதியை வகுத்துக் கொள்வது நீங்கள் தான் என்பதை உணருங்கள்.

* ஒழுக்கம், அன்பு, அமைதி உள்ளவர்களை@ய இந்த மண்ணுலகம் வேண்டுகிறது.

* அறிவார்ந்து சிந்திக்கும்போது தான், பிழைகளை நம்மால் அகற்ற முடியும்.

* ஞானம் புறவுலகில் இருந்து வருவது இல்லை. இயல்பாகவே மனிதனுக்குள் எப்போதும் இருக்கிறது.

* மனஉறுதியை எப்போதும் இழக்கக் கூடாது. ஏழை, எளியோரின் மருந்து அது ஒன்றே.

* எல்லாருக்கும் இன்பம் அளிக்கும் ஒரே மாதிரியான பொருள் உலகில் இல்லவே இல்லை.

* தோல்வி இல்லாத வாழ்வால் பயன் உண்டாகாது. வாழ்வின் சுவையே போராட்டத்தில் தான் இருக்கிறது.

* தனக்கென லட்சியத்தை வகுத்துக் கொண்டு, அதை அடைய இன்று முதல் வெற்றி பயணம் மேற்கொள்ளுங்கள்.

* நம் ஒவ்வொருவரிடமும் எல்லையற்ற சக்தியும், தூய்மையும், மகிழ்ச்சியும் குடி கொண்டிருக்கின்றன.

* மிகப் பெரிய உண்மை ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். அது தான் வலிமையே வாழ்வு.

* உலகத்தைப் போல உங்கள் உள்ளமும் பரந்து விரிந்ததாக இருக்க வேண்டும்.

* தன்னை நெறிப்படுத்திக் கொண்டு வாழ்பவனே, உலகையும் நெறிப்படுத்தும் தகுதியைப் பெறுகிறான்.

சுவாமிஜி வாழ்வில் நடந்தவை!!!!

சுவாமிஜி வாழ்வில் நடந்தவை!!!!

சுவாமிஜி வாழ்வில் நடந்தவை …..
ஒரு முறை சுவாமிஜி இருக்கும் மடத்திற்கு வந்த ஒரு சீடர் அங்கே இருந்த களஞ்சியப் புத்தகங்களின் தொகுதியை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

அவர் விவேகானந்தரிடம் வியப்புடன் கூறினார் ‘ இந்தப் புத்தகங்கள் எல்லாவற்றையும் ஒரு பிறவியில் படித்து முடிப்பது இயலாத காரியம்’ என்றார். சுவாமி விவேகானந்தரோ அந்தப் புத்தகங்களில் பத்துப் பகுதிகளை முடித்துவிட்டுப் பதினோராம் பகுதியைப் படித்துக் கொண்டிருக்கிறார் என்பது சீடருக்குத் தெரியாது.

சுவாமி விவேகானந்தரோ அந்த சீடரிடம் ‘ என்ன சொல்கிறா நீ? முதல் பத்துப் பகுதிகளில் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேள். நான் பதில் சொல்கிறேன்?’ என்றார்.

சீடரோ திகைப்புடன் ‘ என்ன, இந்த நூல்களை எல்லாம் படித்து விட்டீர்களா?’ என்றார்.

சுவாமிஜியோ ‘படிக்காமல் கேள்வி கேட்கச் சொல்வேனா? என்றார்.

சீடர் சுவாமிஜி சொல்வதால் அவரிடம் புத்தகத்தில் முதல் பத்துப் பகுதிகளிலிருந்து வெவ்வேறு விதமாக பல கேள்விகளை வெவ்வேறு பக்கங்களிலிருந்தும் கேட்டார்.

சுவாமிஜியோ அசராமல் அனைத்திற்கும் பதிலும் விளக்கமும் சில இடங்களில் அந்த புத்தகத்தின் மொழியிலேயே அவற்றை எடுத்துக் கூறி அசர வைத்தார்.

சீடர் புத்தகத்தை வைத்து விட்டு ‘இது மனித ஆற்றலால் முடியாத காரியம்!’ என்றார்.

ஆனால் சுவாமிஜியோ ‘ஏன் முடியாது. இதோ பார், பிரம்மச்சரியத்தை (கட்டுக்கோப்பான ஒழுக்கத்தையும் தியானத்தையும் வழுவாமல் கடைபிடித்தல்) ஒழுங்காக கடைப்பிடிப்பது ஒன்றால் மட்டுமே எல்லா கலைகளும் கணநேரத்தில் கைவசப்படும்; ஒருமுறை கேட்பவற்றைத் தவறின்றி நினைவில் கொள்ளவும், மீண்டும் அதை அப்படியே ஒப்பிக்கவும் முடியும். இத்தகைய பிரம்மச்சரியம் இல்லாமையால் தான் நமது நாட்டில் எல்லாம் அழிவின் எல்லைக்கே வந்துவிட்டன’ என்றார்.

இந்த பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பதால் உண்டாகும் சக்தியை பற்றி சுவாமி விவேகானந்தர் மேற்கொண்டு விளக்குகிறார். குறைவாகவோ அதிகமாகவோ ஒவ்வொரு மனிதனிடமும் ஓஜஸ் (மனித ஆற்றல் அனைத்தும் ஓர் இடத்தில் குவியும் சக்தி) சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

உடலில் செயல்படுகின்ற எல்லா ஆற்றல்களும் அவற்றின் மிகவுயர்ந்த நிலையில் ஓஜஸாக மாறுகின்றன. ஒரு சக்திதான் இன்னொரு சக்தியாக மாறுகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். வெளியில் மின்சாரமாக, காந்த சக்தியாகச் செயல்படுகின்ற அதே சக்தி தான் அகச் சக்தியாக மாறுகிறது. தசைச் சக்தியாக செயல்படுபவைதாம் ஓஜஸாக மாறுகிறது. அதே சக்தி தான் பாலுறவு சக்தியாக, பாலுணர்ச்சியாக வெளிப்படுகிறது.

இவ்வகையில் வெளிப்படும் சக்தியை கட்டுப்படுத்தினால் எளிதில் ஓஜஸாக மாறுகிறது. நம்மிடம் இருப்பது ஒரே சக்தி தான். அதை தான் நாம் பல்வேறு நிலைகளில் உபயோகிக்கிறோம். எனவே எவ்வெவற்றிர்கு சக்தியை செலவிடவேண்டும் என்பதில் தெளிவு பெற வேண்டும்.

ஒழுக்கமுடைய ஆண்களும் பெண்களும் மட்டுமே ஓஜஸை மேலே எடுத்துச் சென்று மூளையில் சேமிக்க முடியும். அதனால் தான் பிரம்மச்சரியம் மிகச் சிறந்த ஒழுக்கமாகக் கருதப்படுகிறது. பிரம்மச்சரியத்திலிருந்து வழுவினால் ஒருவனிடமிருந்து ஆன்மீகம் நீங்கி விடுவதையும் மனவலிமையையும் ஒழுக்க வீரியத்தையும் அவன் இழந்துவிடுவதையும் உணர முடியும்.

இந்தக் காரணத்தினால் தான் பெரிய ஆன்மீக வீரர்களைத் தந்துள்ள எல்லா மதங்களும் சிறிதும் வழுவாத பிரம்மச்சரியத்தை எப்போதும் வற்புறுத்துவதைக் காண்கிறோம். இதே காரணத்தினால் தான், திருமணம் செய்து கொள்ளாத துறவியர் தோன்றினர்.

எண்ணம், சொல், செயல் அனைத்திலும் அப்பழுக்கற்ற பிரம்மச்சரியம் (கட்டுக்கோப்பான ஒழுக்கத்தையும் தியானத்தையும் வழுவாமல் கடைபிடித்தல்) அவசியம்.

எண்ணங்களின் மூலம் நினைத்ததை அடைய முடியும்

எண்ணங்களின் மூலம் நினைத்ததை அடைய முடியும்

இந்த இதழில் கொடுக்கப் பெற்றுள்ள எண்ணங்கள் பற்றிய கருத்துக்கள் எமர்சன்,ஜேம்ஸ் ஆலன், சுவாமி சிவானந்தர், வேதாத்திரி மகரிஷி, உதயமூர்த்தி ஆகியோரின் நூல்களிலிருந்து படித்த கருத்துக்கள்.

நடைமுறைக்கு ஏற்ற வகையில் எளிமைப்படுத்திக்கொடுக்கப் பெற்றுள்ளன. நம் எண்ணங்களை ஒழுங்குப் படுத்திக் கொண்டு நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்வதன் மூலம் தீய எண்ணங்களை நம் இதயத்தலிருந்து வெளியேற்றி விடுவோமானால், முதல் நன்மை நாம் துன்பங்களிலிருந்து விடுதலை அடைந்துவிடலாம்.

இது ஏதோ அறிவுரை அல்ல. முழுக்க முழுக்க அனுபவம் கடந்த 20 ஆண்டுகளில் 30ஆண்டுகளில் எந்தந்த எண்ணங்களால் வளர்ந்துள்ளோம் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்த்தால் உண்மை பளிச்சென்று தெரிய வரும்.

இந்த இதழ் முழுவதும் பரவிக் கிடக்கின்ற எண்ணங்கள் பற்றிய கருத்துகளைஒன்றன்பின் ஒன்றாகப் படியுங்கள். ஒவ்வொரு கருத்துக்கும் ஒரு சிறிய இடைவெளிகொடுங்கள். உங்கள் எண்ணங்களோடு இக் கருத்துகளை இணைத்துப் பாருங்கள்.

எடுத்த எடுப்பில் சில கருத்துக்கள் உண்மை என்று உணர்வீர்கள்.

இரண்டாம் மூன்றாம் முறை இந்த இதழைப் படியுங்கள். எண்ணங்களுக்கு ஆற்றல் உண்டு என்பதை உணர்வீர்கள்.

உங்களுக்கான நல்ல எண்ணங்களைத் தேர்ந்து எடுங்கள். அதை நடைமுறைப்படுத்த முயற்சியுங்கள்.

சந்தேகம் இருப்பின் எழுதுங்கள். அடுத்த இதழல் அதற்கான பதிலைப் பெறலாம்.

எண்ணங்களின் தோற்றம்
மனத்தின் அடித்தளத்தில் அமைந்துள்ள பதிவுகளிலிருந்து எண்ணங்கள் தோன்றுகின்றன. இவை இயல்பாகத் தோன்றும் எண்ணங்களாகும்.

நடைமுறை வாழ்க்கையில் தோன்றும் எண்ணங்கள்
அறிகுறியால் தோன்றும் எண்ணங்கள்
இயல்பான உணர்ச்சியால் தோன்றும் எண்ணங்கள்
கேள்வியால் தோன்றும் எண்ணங்கள்
காட்சியால் தோன்றும் எண்ணங்கள்
பழக்கத்தின் காரணமாகத் தோன்றும் எண்ணங்கள்
சிந்திப்பதன் காரணமாகத் தோன்றும் எண்ணங்கள்.

எண்ணங்கள் பதிவாகும் இடங்கள்
நாம் வெளிப்படுத்தும் எண்ணங்கள் விண்வெளயில் பதிவாகின்றன.
எண்ணங்கள் நம் மனதிரையில் பதிவாகின்றன.
எண்ணங்கள் நம் முகத்திரையில் பதிவாகின்றன
எண்ணங்கள் நம் கண்களில் பதிவாகின்றன.

எண்ணங்களை வகைப்படுத்துதல்
மனதில் தோன்றும் எண்ணங்களை குறித்து வைத்துக் கொண்டு பாகுபடுத்தி ஆராய வேண்டும் எண்ணம் உருவாக ஒரு பின்னணி வேண்டும். நாம் அடைய விரும்பும் இலட்சியத்தைப் படமாகப் பார்க்கும் கற்பனை திறன் வேண்டும்.

தீய எண்ணங்களால் ஏற்படும் விளைவுகள்
மனம் வெற்றிடமாக இருக்கும் போது தீய எண்ணங்கள் தோன்றுகின்றன.

எதையும் காம இச்சையோடு பார்க்கும்போது தீய எண்ணங்கள் தோன்றுகின்றன.

பிறரைக் குறைகூறும்போது அந்த எண்ணங்களால் குறை கூறியவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

·         மனம் ஓய்ந்திருக்கும் போதும் சோர்ந்திருக்கும்போதும் தீய எண்ணங்கள் நுழைந்து விடுகின்றன. தீய எண்ணங்கள் தீமையையே விளைவிக்கின்றன. முரண்ப்பட்ட எண்ணங்கள் முரண்பட்ட விளைவுகளையே உண்டாக்குகின்றன. எண்ணங்களால் பற்றும் பற்றினால் ஆசையும், ஆசையால் கோபமும் உண்டாகின்றது.

எண்ணங்களைக் கட்டுப்படுத்தும் முறை:
எண்ணங்களைக் கட்டுப்படுத்த அளவு கடந்த முயற்சியும் பொறுமையும் தேவை தேவைகளையும் குறைப்பதால் மட்டுமே எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியும். எண்ணத்தை வெல்வது என்பது நம்மிடம் உள்ள குறைகளை வெல்வது ஆகும்

இறை வழிபாட்டால் எண்ணங்களைக் கட்டுப்டுத்தலாம்.
தியாகங்கள் செய்வதால் எண்ணங்களைக் கட்டுப்படுத்தலாம்.

முறையான பழக்க வழக்கங்களால் எந்த வகையான எண்ணங்களையும் கட்டுப்படுத்தலாம்.

நம்பிக்கையே வெற்றியின் ரகசியம்!

நம்பிக்கையே வெற்றியின் ரகசியம்!

நமது வாழ்க்கையில் நமக்கு மிக முக்கியமாக இருக்க வேண்டியது தன்னம்பிக்கை ஆகும். ஒரு சிலர் சில வேலைகளை தன்னால் செய்ய முடியாது என்ற அவநம்பிக்கையில், யாராவது செய்து கொள்வார்கள் என்று விட்டு விடுகிறார்கள். இத்தகைய தன்மை நமது கோழைத் தனத்தைக் காட்டுகிறது. இதைப் பற்றி சுவாமி விவேகானந்தரின் சிந்தனையைப் பார்ப்போம்.

சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்: “தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலரது வரலாறே உலக வரலாறு”. இதற்குத் தேவையானவற்றை நாம் அவரது வார்த்தைகளிலேயெ இப்போது பார்க்கலாம்.

தன்னம்பிக்கை:
‘முடியாது, என்னால் முடியாது’ என்று மட்டும் சொல்லாதீர்கள். நீங்கள் எல்லையற்றவர்கள். காலமும், இடமும் கூட, உங்கள் இயல்புடன் ஒப்பிடும் போது ஒன்றுமே இல்லை. நீங்கள் எதையும் செய்ய முடியும். எல்லாம் வல்லவர்கள் நீங்கள்.

ஆற்றல்:
சாஸ்திரங்களில் உள்ளவை அனைத்தும், அவற்றைப் போல ஆயிரம் மடங்கு அதிகமாகவும் உன்னில் உள்ளன. ஒருபோதும் உன்னில் நம்பிக்கையை இழக்காதே. இந்தப் பிரபஞ்சத்தில் உன்னால் எதையும் செய்ய முடியும். ஒரு போதும் தளராதே. எல்லா ஆற்றலும் உன்னுடையதே.

சிரத்தை
சிரத்தை வேண்டும், தன்னம்பிக்கை வேண்டும். பலமே வாழ்வு, பலவீனமே மரணம். மரணமற்ற, சுதந்திரமான, இயல்பாகவே தூய்மையான ஆன்மாவே நீங்கள். நீங்கள் பாவம் செய்ய முடியுமா? முடியவே முடியாது. இந்த சிரத்தை நம்மிடம் இல்லாததன் காரணமாகவே நாம் தன்னம்பிக்கையை இழக்கிறோம்.
சிறப்புடைமை

ஒவ்வொரு மனிதனையும், ஒவ்வொரு நாட்டையும் சிறப்படையச் செய்ய மூன்று விஷயங்கள் தேவை:

நல்லியல்பின் ஆற்றல்களில் திட நம்பிக்கை.
பொறாமை, சந்தேகம்- இவை இல்லாதிருத்தல்.
நல்லவர்களாக இருந்து நன்மை செய்ய முயல்கின்ற அனைவருக்கும் உதவுதல்.

பலவீனம் இல்லாமை
நம்முடைய நன்மை தீமைகளுக்கு நாமே மூலக்காரணம். நாமே நம் கைகளால் கண்களை மூடி மறைத்துக் கொண்டு, ‘இருட்டாக இருக்கிறதே’ என்று கதறுகிறோம். கைகளை விலக்கி விட்டு ஒளியைப் பாருங்கள். மனம் சோர்ந்து விடாதீர்கள். பாதை மிகவும் கடினமானது. கத்தி முனையில் நடப்பது போன்றது. ஆனாலும் சோர்வு அடையாதீர்கள். எழுந்திருங்கள், விழித்திருங்கள்.

அஞ்சாமை
எதைக் கண்டும் அஞ்சாதீர்கள். நீங்கள் மகத்தான காரியங்களை செய்வீர்கள். பயம் தோன்றினால் அந்தக் கணமே நீங்கள் ஒன்றுமில்லாதவர்கள் ஆகி விடுவீர்கள். மூட நம்பிக்கைகள் அனைத்திலும் கொடியது பயமே. பயமின்மை ஒரு நொடியில் சொர்க்கத்தையே நமக்கு அளிக்கவல்லது. உங்களை மேன்மையானவர்கள் என்று நினையுங்கள், அப்படியே ஆவீர்கள்!

பொதுநலம்
பிறருக்காக சிறு வேலை செய்தாலும் அது நம்மிடம் சக்தியைக் கிளர்ந்தெழச் செய்யும். மற்றவர்களின் நன்மையை நினைத்துக் கொண்டிருப்பதே மனதில் சிங்கத்தின் வலிமையை உண்டாக்கும்.

கீழ்ப்படிதல்
கீழ்ப்படிந்து நடந்து கொள்ளுதல் மிகவும் முக்கியம். சத்தியத்திற்கும், மனித குலத்திற்கும், உங்கள் நாட்டிற்கும் எப்போதும் உண்மையாக நடந்து கொள்ளுங்கள்; உலகத்தையே அசைத்து விடுவீர்கள்.

பற்றின்மை
நம்மை எதிர்பார்த்து சிலர் வாழ்கிறார்கள்; நாம் அவர்களுக்கு நன்மை செய்யப் போகிறோம் என்று எண்ணுவது பலவீனம். இதுபோன்ற எண்ணங்களே நம்முடைய பற்றுக்கள் அனைத்திற்கும் காரணம். இந்தப் பற்றுக்கள் மூலமே நமது துன்பங்கள் எல்லாம் வருகின்றன.

திடநம்பிக்கை
சொல், செயல், சிந்தனை மூன்றும் ஒன்றுபட்டு நிற்கின்ற சிலர், விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் போதும், இவ்வுலகையே ஆட்டி வைத்து விட முடியும். இந்த நம்பிக்கையை கைவிடாதே; நமது சக்தியின், நமது ஆற்றலின் ஆதாரம் அந்த எல்லையற்ற பரம்பொருள் தான். எனவே முதலில் உங்களிடம் நம்பிக்கைக் கொள்ளுங்கள். எல்லா அறிவும், எல்லா ஆற்றலும், எல்லா தூய்மையும் நம்மில் உள்ளன.

குற்றம் அதிகமாக நிகழும் பகுதிகளிலே அதிக நீதிமன்றங்கள் இருக்கும். விபத்துக்கள் அதிகமாக ஏற்படும் இடங்களில் அதிக மருத்துவமனைகள் இருக்கும். அதைப் போலத் தான் பாவங்கள் ஏற்படக் கூடிய இந்த பூமியில் அந்த பாவங்களைப் போக்க அவதரித்த மாமுனிவர்களுள் குறிப்பிடத்தக்கவர் சுவாமி விவேகானந்தர்.

வசந்தத்தின் விடியலில், வீரத்தின் பாதையில், விவேகானந்தரின் அழைப்பில், ஆன்மிகத்தின் அரவணைப்பில் – சுருங்கச் சொன்னால் ‘விவேகானந்தரின் வழியில்’ வளம் மிக்க பாரதத்தை உருவாக்குவோம், வாருங்கள்!

விவேகானந்தரை நினைத்திடுவோம்; விவேக வழியில் வாழ்ந்திடுவோம்!

வலிமையே வாழ்வு… பலவீனமே மரணம்!

வலிமையே வாழ்வு… பலவீனமே மரணம்!

சிறு வயதில் இருந்தே சுவாமி விவேகானந்தர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் தைரியசாலியாக விளங்கினார். அதை அவரது வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகள் மூலம் தெரிந்து கொள்வோம்.

தீராத விளையாட்டுப் பிள்ளை!

நரேனின் நண்பன் வீட்டின் அருகே பூத்துக் குலுங்கும் மரம் ஒன்று இருந்தது. நரேனும் அவனது நண்பர்கள் அனைவரும் அம்மரத்தில் ஏறி கிளையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு விளையாடுவார்கள். நரேன் மரத்தின் கிளையைப் பிடித்துத் தொங்கி முன்னும் பின்னும் ஆடி கடைசியில் முன்னும் பின்னும் தொங்கிக் குதித்து மகிழ்ச்சியாக விளையாடுவார்.

அந்த வீட்டில் இருந்த பெரியவருக்கு சிறுவர்களின் அந்த ஆபத்தான ஆட்டம் மிகவும் கவலையைத் தந்தது. ஆகவே அப்பெரியவர் நரேனையும் அவர் நண்பர்களையும் அழைத்து ‘தம்பிகளா, அந்த மரத்தில் ஒரு பேய் இருக்கிறது. பிரம்மச் சாத்தான் அதில் இருக்கிறான். அந்த பிரம்மச் சாத்தானை நீங்கள் தொந்தரவு செய்தீர்கள் என்றால் அது உங்கள் கழுத்தை நெறித்துக் கொன்று விடும். அந்த பிரம்மச் சாத்தான் மிகவும் கொடூரமானது. அந்த மரத்தில் ஏறாதீர்கள், ஜாக்கிரதை’ என்றார்.

நரேனின் நண்பர்கள் அனைவரும் பயந்து விட்டனர். ஆனால் நரேனோ பயப்படவில்லை. பெரியவர் அங்கிருந்து சென்றவுடன் ஓடிச் சென்று விளையாடத் தொடங்கினார். நண்பர்கள் அனைவரும் ‘பெரியவர் சொன்னதைக் கேட்கவில்லையா?’ என்றனர். நரேன் பெரிதாகச் சிரித்தான். ‘சரியான மடையர்கள் நீங்கள்…எவ்வளவு நாட்களாக இந்த மரத்தில் விளையாடுகிறேன்… பேயோ, பிசாசோ, பிரம்மச் சாத்தானோ இருந்திருந்தால் இதற்குள் என் கழுத்தை நெறித்துக் கொன்றிருக்காதா?’ என்றான் நரேன். நண்பர்கள் புரிந்து கொண்டார்கள்.

அஞ்சா நெஞ்சமும் விடாமுயற்சியும்!

ஒருநாள் நரேன் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தான். அப்போது  பெரும் ஓசை கேட்டது. சத்தம் கேட்ட பக்கமாக நரேன் திரும்பிப் பார்த்தான். அப்போது ஒரு குதிரை வண்டி மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. எதையோ கண்டு அஞ்சி குதிரை தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தது. வண்டியினுள் ஒரு பெண்ணும், அப்பெண்ணின் மடியில் ஒரு குழந்தையும் இருந்தது. அப்பெண் மிகுந்த பயத்துடன் அழுது கொண்டிருந்தாள்.

அவ்வழியே சென்ற எவரும் அவளை காப்பாற்ற முயலவில்லை. அப்போது நரேன் அப்பெண்ணையும், குழந்தையையும் காப்பாற்ற எண்ணி குதிரையை அடக்க முயன்றான். முயற்சி செய்து மேலே ஏறிய போது கீழே விழுந்தான். மீண்டும் முயற்சி செய்த போது கீழே விழுந்து காயங்கள் ஏற்பட்டன. அதையும் பொருட்படுத்தாமல் மீண்டும் முயற்சித்து குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துக் குதிரையின் வேகத்தைத் தடுத்து நிறுத்தி, வண்டியில் இருந்த பெண்ணையும், அவள் குழந்தையையும் காப்பாற்றினான் நரேன். இதற்குக் காரணம் அவனது வலிமையே.
உதவி செய்யும் மனப்பாங்கு!

நரேனும், நண்பர்களும் ஒருமுறை பெரிய ‘டர்பீஸ்’ எனும் உடற்பயிற்சிக் கருவியைப் பயிற்சிக் கூடத்தில் பொருத்த முயற்சி செய்து கொண்டிருந்தனர். சிறுவர்களுக்கு அது சிறிது கடினமான வேலையாக இருந்தது. சுற்றி நின்று பலர் வேடிக்கைப் பார்த்தார்களே தவிர யாரும் உதவ முன்வரவே இல்லை. கூட்டத்தில் பலசாலியான ஆங்கில மாலுமி ஒருவர் இருப்பதைக் கண்டான் நரேன். ஓடிச் சென்று அவரிடம் உதவி கேட்டான். மாலுமி ஒப்புக் கொண்டு வேலையைச் செய்ய ஆரம்பித்தார்.

திடீரென டர்பீஸ் நழுவி கீழே விழுந்தது. அடடே, உதவி செய்ய வந்த மாலுமியின் தலையில் டர்பீஸ் விழுந்து விட்டதே என்று நரேன் நினைத்துக் கொண்டிருக்கையிலேயே மாலுமி மயங்கி தரையில் விழுந்தார். ஆங்கில மாலுமி இறந்து விட்டார் என்றெண்ணி மொத்த கூட்டமும் ஓடி விட்டது. ஆனால், நரேனும் அவன் நண்பர்களும் பயந்து ஓடவில்லை. நரேன் தன் வேட்டியைக் கிழித்து மாலுமியின் தலையைச் சுற்றி ரத்தப் போக்கி நிற்கும்படி இறுக்கக் கட்டினான். அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்து லேசாக விசிற ஆரம்பித்தான்.

சிறிது நேரத்தில் மாலுமி கண்விழித்தார். நரேனும் அவனது நண்பர்களும் மாலுமியை ஓய்வெடுக்கச் செய்து மருத்துவரிடம் காட்டினார். மாலுமி அவரது இருப்பிடம் செல்ல தன் நண்பர்களிடம் இருந்து பணம் சேர்த்துக் கொடுத்தனுப்பினான் நரேன்.
பயத்துக்கு விடை கொடு

காசியின் அழகிய கோயில்களுள் ஒன்று துர்க்கா கோயில். ஒருநாள் அங்கே சென்று தேவியை தரிசித்துவிட்டு, ஓர் ஒற்றையடி பாதையில் வரும்போது, விவேகானந்தரை ஒரு குரங்குக் கூட்டம் அவரைத் துரத்தியது. அவர் பயந்து விட்டார். குரங்குகளும் விடாமல் அவரை பின்தொடர்ந்து கொண்டே வந்தன. விவேகானந்தர் ஓடத் தொடங்கினார்.

அப்போது ஒரு துறவி, ‘எதிர்த்து நில்…பயப்படாதே!’ என்று உரக்கக் கத்தினார். விவேகானந்தரும் ஓடுவதை நிறுத்தி விட்டு திரும்பி நின்று கொண்டு மிக உறுதியாக குரங்குகளை நோக்கினார். அதுவரை துரத்தி வந்த குரங்குகள் இப்போது பயந்து கொண்டு வந்த வழியில் ஓடத் தொடங்கின.

‘தைரியமான சொற்கள்; அவற்றை விட தைரியம் மிக்க செயல்கள் இவையே வேண்டும்’ என்ற சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களைப் பின்பற்றி தைரியமாக வாழ்க்கையை எதிர்கொள்வோம் வாருங்கள் இளைஞர்களே.