Tuesday, June 16, 2015

வலிமையே வாழ்வு… பலவீனமே மரணம்!

வலிமையே வாழ்வு… பலவீனமே மரணம்!

சிறு வயதில் இருந்தே சுவாமி விவேகானந்தர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் தைரியசாலியாக விளங்கினார். அதை அவரது வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகள் மூலம் தெரிந்து கொள்வோம்.

தீராத விளையாட்டுப் பிள்ளை!

நரேனின் நண்பன் வீட்டின் அருகே பூத்துக் குலுங்கும் மரம் ஒன்று இருந்தது. நரேனும் அவனது நண்பர்கள் அனைவரும் அம்மரத்தில் ஏறி கிளையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு விளையாடுவார்கள். நரேன் மரத்தின் கிளையைப் பிடித்துத் தொங்கி முன்னும் பின்னும் ஆடி கடைசியில் முன்னும் பின்னும் தொங்கிக் குதித்து மகிழ்ச்சியாக விளையாடுவார்.

அந்த வீட்டில் இருந்த பெரியவருக்கு சிறுவர்களின் அந்த ஆபத்தான ஆட்டம் மிகவும் கவலையைத் தந்தது. ஆகவே அப்பெரியவர் நரேனையும் அவர் நண்பர்களையும் அழைத்து ‘தம்பிகளா, அந்த மரத்தில் ஒரு பேய் இருக்கிறது. பிரம்மச் சாத்தான் அதில் இருக்கிறான். அந்த பிரம்மச் சாத்தானை நீங்கள் தொந்தரவு செய்தீர்கள் என்றால் அது உங்கள் கழுத்தை நெறித்துக் கொன்று விடும். அந்த பிரம்மச் சாத்தான் மிகவும் கொடூரமானது. அந்த மரத்தில் ஏறாதீர்கள், ஜாக்கிரதை’ என்றார்.

நரேனின் நண்பர்கள் அனைவரும் பயந்து விட்டனர். ஆனால் நரேனோ பயப்படவில்லை. பெரியவர் அங்கிருந்து சென்றவுடன் ஓடிச் சென்று விளையாடத் தொடங்கினார். நண்பர்கள் அனைவரும் ‘பெரியவர் சொன்னதைக் கேட்கவில்லையா?’ என்றனர். நரேன் பெரிதாகச் சிரித்தான். ‘சரியான மடையர்கள் நீங்கள்…எவ்வளவு நாட்களாக இந்த மரத்தில் விளையாடுகிறேன்… பேயோ, பிசாசோ, பிரம்மச் சாத்தானோ இருந்திருந்தால் இதற்குள் என் கழுத்தை நெறித்துக் கொன்றிருக்காதா?’ என்றான் நரேன். நண்பர்கள் புரிந்து கொண்டார்கள்.

அஞ்சா நெஞ்சமும் விடாமுயற்சியும்!

ஒருநாள் நரேன் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தான். அப்போது  பெரும் ஓசை கேட்டது. சத்தம் கேட்ட பக்கமாக நரேன் திரும்பிப் பார்த்தான். அப்போது ஒரு குதிரை வண்டி மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. எதையோ கண்டு அஞ்சி குதிரை தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தது. வண்டியினுள் ஒரு பெண்ணும், அப்பெண்ணின் மடியில் ஒரு குழந்தையும் இருந்தது. அப்பெண் மிகுந்த பயத்துடன் அழுது கொண்டிருந்தாள்.

அவ்வழியே சென்ற எவரும் அவளை காப்பாற்ற முயலவில்லை. அப்போது நரேன் அப்பெண்ணையும், குழந்தையையும் காப்பாற்ற எண்ணி குதிரையை அடக்க முயன்றான். முயற்சி செய்து மேலே ஏறிய போது கீழே விழுந்தான். மீண்டும் முயற்சி செய்த போது கீழே விழுந்து காயங்கள் ஏற்பட்டன. அதையும் பொருட்படுத்தாமல் மீண்டும் முயற்சித்து குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துக் குதிரையின் வேகத்தைத் தடுத்து நிறுத்தி, வண்டியில் இருந்த பெண்ணையும், அவள் குழந்தையையும் காப்பாற்றினான் நரேன். இதற்குக் காரணம் அவனது வலிமையே.
உதவி செய்யும் மனப்பாங்கு!

நரேனும், நண்பர்களும் ஒருமுறை பெரிய ‘டர்பீஸ்’ எனும் உடற்பயிற்சிக் கருவியைப் பயிற்சிக் கூடத்தில் பொருத்த முயற்சி செய்து கொண்டிருந்தனர். சிறுவர்களுக்கு அது சிறிது கடினமான வேலையாக இருந்தது. சுற்றி நின்று பலர் வேடிக்கைப் பார்த்தார்களே தவிர யாரும் உதவ முன்வரவே இல்லை. கூட்டத்தில் பலசாலியான ஆங்கில மாலுமி ஒருவர் இருப்பதைக் கண்டான் நரேன். ஓடிச் சென்று அவரிடம் உதவி கேட்டான். மாலுமி ஒப்புக் கொண்டு வேலையைச் செய்ய ஆரம்பித்தார்.

திடீரென டர்பீஸ் நழுவி கீழே விழுந்தது. அடடே, உதவி செய்ய வந்த மாலுமியின் தலையில் டர்பீஸ் விழுந்து விட்டதே என்று நரேன் நினைத்துக் கொண்டிருக்கையிலேயே மாலுமி மயங்கி தரையில் விழுந்தார். ஆங்கில மாலுமி இறந்து விட்டார் என்றெண்ணி மொத்த கூட்டமும் ஓடி விட்டது. ஆனால், நரேனும் அவன் நண்பர்களும் பயந்து ஓடவில்லை. நரேன் தன் வேட்டியைக் கிழித்து மாலுமியின் தலையைச் சுற்றி ரத்தப் போக்கி நிற்கும்படி இறுக்கக் கட்டினான். அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்து லேசாக விசிற ஆரம்பித்தான்.

சிறிது நேரத்தில் மாலுமி கண்விழித்தார். நரேனும் அவனது நண்பர்களும் மாலுமியை ஓய்வெடுக்கச் செய்து மருத்துவரிடம் காட்டினார். மாலுமி அவரது இருப்பிடம் செல்ல தன் நண்பர்களிடம் இருந்து பணம் சேர்த்துக் கொடுத்தனுப்பினான் நரேன்.
பயத்துக்கு விடை கொடு

காசியின் அழகிய கோயில்களுள் ஒன்று துர்க்கா கோயில். ஒருநாள் அங்கே சென்று தேவியை தரிசித்துவிட்டு, ஓர் ஒற்றையடி பாதையில் வரும்போது, விவேகானந்தரை ஒரு குரங்குக் கூட்டம் அவரைத் துரத்தியது. அவர் பயந்து விட்டார். குரங்குகளும் விடாமல் அவரை பின்தொடர்ந்து கொண்டே வந்தன. விவேகானந்தர் ஓடத் தொடங்கினார்.

அப்போது ஒரு துறவி, ‘எதிர்த்து நில்…பயப்படாதே!’ என்று உரக்கக் கத்தினார். விவேகானந்தரும் ஓடுவதை நிறுத்தி விட்டு திரும்பி நின்று கொண்டு மிக உறுதியாக குரங்குகளை நோக்கினார். அதுவரை துரத்தி வந்த குரங்குகள் இப்போது பயந்து கொண்டு வந்த வழியில் ஓடத் தொடங்கின.

‘தைரியமான சொற்கள்; அவற்றை விட தைரியம் மிக்க செயல்கள் இவையே வேண்டும்’ என்ற சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களைப் பின்பற்றி தைரியமாக வாழ்க்கையை எதிர்கொள்வோம் வாருங்கள் இளைஞர்களே.

No comments:

Post a Comment