Wednesday, June 17, 2015

கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...

கோவைக்காய் சாப்பிடலாம் வாங்க...

கோவையைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. வேலிகள், தோட்டங்கள், காடுகளில் இந்த கொடி படர்ந்து காணப்படும். இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு தன்மை கொண்டது. கோவையின் நிறத்தையும், வடிவத்தையும் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, நாமக்கோவை, கருங்கோவை என பலவகையாகப் பிரிக்கின்றனர். இதன் இலை, காய், வற்றல், தண்டு, கிழங்கு அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

இரத்தம் சுத்தமடைய:
காற்று, நீர், இவற்றின் மாசடைந்த தன்மையாலும் இன்றைய அவசர உணவு (பாஸ்ட்புட்)களாலும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இதனால் இரத்தத்தில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படுகிறது. மேலும் பித்த அதிகரிப்பு காரணமாக இரத்தம் அசுத்தமடைகிறது. இதனால் சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. இரத்த சோகை மற்றும் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் உருவாகிறது. இவர்கள் கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் 1 ஸ்பூன் அளவு தேனில் கலந்தோ அல்லது கஷாயமாகக் காய்ச்சியோ அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமடைவதுடன் உடலும் புத்துணர்வு பெறும்.

கண் நோய் குணமாக:
கண்கள் ஐம்புலன்களில் முதன்மையானது. கண்களால்தான் புறத்தோற்றங்களை காணவும் ரசிக்கவும் முடியும். உடலில் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் கண்கள் முதலில் பாதிக்கப்படும். இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத்தான் அதிக வேலை பளு. இதனால் கண் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. இதற்கு கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, கஷாயம் செய்து தினமும் காலையில் அருந்தி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும். மேலும் கண் நரம்புகள் பலப்படும்.

தோல் கிருமிகள் நீங்க:
தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு இவற்றைக் குணப்படுத்தவும், தோலில் ஏற்படும் அலர்ஜியைத் தடுக்கவும் கோவை இலை பயன்படுகிறது. கோவை இலை, மஞ்சள் தூள், சிறியா நங்கை, வேப்பிலை இவைகளை சம அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து சிறிது நீர் கலந்து மண்சட்டியில் விட்டு நன்றாக காய்ச்சி ஆறியபின் உடலெங்கும் பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.

உடல் சூடு : 
கோவையிலை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும். கண்கள் குளிர்ச்சிபெறும் .

வியர்க்குருவை தடுக்க:
சிலருக்கு வியர்வை வெளியேறாமல் வியர்க்குருகளாக நீர்கோர்த்துக்கொள்ளும். இவை சில சமயங்களில் வேனல் கட்டிகளாக மாறவும் வாய்ப்புள்ளது. இவர்கள் கோவை இலையை அரைத்து உடலெங்கும் பூசி குளித்து வந்தால் வியர்குரு வராமல் தடுக்கலாம்.கோவை இலையின் சாறுடன் வெண்ணெய் சேர்த்து பூசி வந்தால் சொறி, சிரங்கு, நாள்பட்ட புண் போன்றவை குணமாகும்.

தாது புஷ்டியாக:
இன்றைய மன அழுத்த பிரச்சனையால் சிலர் தாதுவை இழந்துவிடுகின்றனர். இதனால் இவர்கள் மண வாழ்க்கைக்கு செல்ல பயங்கொள்கின்றனர். மேலும் சிலரோ இதை மறைத்து திருமணம் செய்து பின்னாளில் மணவாழ்க்கை கசந்து விவாகரத்து கோரி நிற்கின்றனர். இப்பிரச்சனை தீர கோவையிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து ஒரு மண்டலம் உண்டுவந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம்.

விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...

விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...

விளாம் பழம் நாம் கண்டு கொள்ளமால் விட்டுள்ள அரிய பழ வகைகளில் ஒன்று. இதன் மருத்துவ மகத்துவத்தை படித்துப்பாருங்கள். அடுத்த முறை எங்கு விளாம் பழத்தைப்பார்த்தாலும் வாங்கி சுவைப்பீர்கள்.

*தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தானப் பழம் விளாம்பழம், இதனால் ரத்தம் விருத்தி அடைவதோடு, ரத்தத்தை சுத்திகரிப்பும் செய்கிறது.

* விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால் பல், எலும்புகளை வலுடையச் செய்கிறது.

* தயிருடன் விளாம் காயை பச்சடிபோல் செய்து சாப்பிட்டால் வாய்ப்புண், அல்சர் குணமடையும்.

* வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசறி சாப்பிட்டுவர... நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும்.

* விளாம்பழத்துடன் பனங்கற்கண்டைக் கலந்து சாப்பிட, பித்தக் கோளாறுகளால் ஏற்படும் வாந்தி, தலைச் சுற்றல் நீங்கும்.

* தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தைக் கொடுத்துவர நினைவாற்றல் அதிகரிக்கும்.

* விளாம் மர இலையை தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்துக் குடிக்க, வாயுத் தொல்லை நீங்கும்.

* விளாங்காயை அரைத்து மோரில் கலந்து குடிக்க, நாள்பட்ட பேதி சரியாகும்.

* விளாம்பழ மரத்தின் பிசினை (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) தொடர்ந்து சாப்பிட்டு வர, பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.

* விளாம் மரப் பட்டையைப் பொடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கஷாயத்தை வடிகட்டிக் குடிக்க, வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய் கசப்பு போன்றவை குணமாகும்.

* சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் சாப்பிட ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசிக்கும்.

குருபகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாடு :-

குருபகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாடு :-

குருபகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளுங்கள். குருபகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை தவறாது செய்யுங்கள். குருபகவானின் நல்லருளை பெறுங்கள்.

நவக்கிரக குருவையா, ஞான குருவையா?

சமீப காலமாக கோயில்களில், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி சந்நதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இவர் களில் 99 சதவீதம் பேர் குருவுக்குப் பரிகாரம் செய்வதற்காக வருபவர்கள். அதே நேரத்தில் நவகிரகங்களில் ஒருவரான குரு பக வானை வழிபடுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு.

குரு பகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை தட்சிணாமூர்த்திக்கு செய்வது சரிதானா?இவர்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசம் என்ன? தட்சிணாமூர்த்தி என்பதற்கு தென்முகக் கடவுள் என்று பொருள். அதாவது, தெற்கு நோக்கி வீற்றிருப்பவர். நவகிரகங்களில் ஒருவரான வியாழ (குரு) பகவானின் திசை வடக்கு. திசையின் அடிப்படை யிலேயே இருவரும் வேறுபடுகின்றனர்.

அதே போல வியாழனுக்கு உரிய நிறம், மஞ்சள். இவருக்கு உரிய தானியம், கொண்டைக் கடலை. தட்சிணாமூர்த்தியோ வெண்ணிற ஆடையை உடுத்தியிருப்பவர். (‘ஸ்வேதாம்பரதரம் ஸ்வேதம்…’ என்று உரைக்கிறது வேதம். ஸ்வேதம் என்றால் வெள்ளை நிறம் என்று பொருள்.) உண்மை நிலை இவ்வாறு இருக்க வியாழனுக்கு பரிகாரம் செய்ய நினைப்பவர்கள், ஞான குருவாய் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரமும், கொண்டைக்கடலை மாலைகளும் சாற்றுகிறார்கள்.

இது, தியானத்தில் ஆழ்ந்திருக்கும் தட்சிணாமூர்த்திக்கு தொல்லை கொடுப்பது போல் அமைகிறது. ஞானம் வேண்டி தட்சிணாமூர்த்தியை வழிபடுபவர்களுக்கு கிழமை முக்கியமில்லை. வியாழன் அன்றுதான் வழிபட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. தெளிவாகச் சொல்வதானால், வியாழக் கிழமைக்கும் தட்சிணாமூர்த்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

சிவபெருமான் ஞானத்தை போதிக்கும் குருவாக ஸநகாதி முனிவர்களுக்கு வேத ஆகமங்களின் பொருளை உபதேசிக்கும் திருவுருவமே தட்சிணாமூர்த்தி. கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருப்பவராக இவர் காட்சியளிக்கிறார். இவர் ஆதிகுரு அல்லது ஞானகுரு என்று போற்றப்படுகிறார். அதே நேரத்தில் தேவர்களின் சபையில் ஆச்சாரியனாக, தேவர்களுக்கு ஆசிரியராக பணி செய்பவர் வியாழன் என்று அழைக்கப்படும் ப்ருஹஸ்பதி. ஆசிரியர் தொழில் செய்வதால் இவரை குரு என்று அழைக்கின்றனர்.

ஞானகுரு வேறு, நவகிரக குரு வேறு என்பதைப் புரிந்து கொள்வது நல்லது. வியாழ பகவானுக்கு உரிய அதிதேவதை மருத்வந்தன் என்றும், ப்ரத்யதி தேவதை பிரம்மா என்றும் தெளிவாகச் சொல்கிறது வேதம். எந்த விதத்திலும் தட்சிணாமூர்த்தியோடு வியாழ (குரு) பகவானை சம்பந்தப்படுத்தி வேதத்திலோ, புராணங்களிலோ சொல்லப்படவில்லை.

இந்த நிலையில் வியாழனுக்கு உரிய பரிகார த்தை தட்சிணாமூர்த்திக்கு செய்ய வேண்டிய அவசியம் என்ன? இந்தக்குழப்பத்திற்கு என்ன காரணம்? ஞானகுருவாம் தட்சிணா மூர்த்தியை வழிபடும் வகையில் பள்ளிக் குழந்தைகளும் இந்த ஸ்லோகத்தினை எளிதாகச் சொல்கிறார்கள்:

குருப்ரஹ்மா: குருர்விஷ்ணு: குரு தேவோ மஹேஸ்வர:
குரு சாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மைஸ்ரீ
குருவே நம:

- இந்த ஸ்லோகத்தில் இடம்பெறும் ‘குரு’ என்ற வார்த்தையை வைத்து குரு பகவானும் இவரும் ஒன்று என நினைத்திருக்கலாம். குரு பகவானுக்கு உரிய பரிகாரத் தலமாக ஆலங்குடி தட்சிணாமூர்த்தி ஸ்வாமி பிரபலம் அடைந்திருப்பதும் கூட காரணமாக இருக்கலாம்.

இறைவன் இட்ட பணியைச் செய்பவர்களே நவக்கிரகங்கள். ஒன்பது கோள்களுக்கும் ஒவ்வொரு காரகத்துவம் உண்டு. இவர் களில் சுபகிரகமாகவும், வேண்டுகின்ற நன்மையைச் செய்பவராகவும் விளங்குபவர் வியாழ (குரு) பகவான். குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. ஜென்ம ராசியை குரு பார்த்தால் நினைத்த காரியம் கைகூடும்.

இந்த உலகத்தில் நாம் ஆனந்தமாய் வாழ்ந்திடத் தேவையான அனைத்து சுகங்களையும் அருள்பவர் குரு பகவான். குரு பலம் இருந் தால் திருமணம் நடைபெறும். குருவின் அனுக்ரகம் இருந்தால் பிள்ளைப்பேறு கிட்டும். திருமணத்தடை நீங்கவும், புத்திரபாக்கியம் கிட்டவும், உயர் கல்வியில் இடம் பிடிக்கவும் குருவின் அருள் வேண்டி பரிகாரம் செய்ய விழைகின்றனர்.

அவ்வாறு பரிகாரம் செய்ய விரும்புபவர்கள் , இனி வரும் வியாழக்கிழமைகளிலும் நவகிரகங்களில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கும் வியாழ பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றியும், கொண்டைக் கடலை மாலை அணிவித்தும் வழிபடலாம்.
கொண்டைக் கடலை சுண்டல் நைவேத்யம் செய்து, வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம். வியாழன்தோறும் விரதம் இருந்து வடக்கு முகமாய் நெய் விளக்கு ஏற்றியும் வழிபடலாம்.அதே நேரத்தில் ஞானமார்க்கத்தை நாடும் அன்பர்கள் தட்சிணாமூர்த்தியை வழிபடலாம்.

வியாழக்கிழமைதான் என்றில்லை, எந்த நாளிலும் அவரை வழிபடலாம். மனம் சஞ்சலத்திற்கு உள்ளாகும் எந்த நேரத்தி லும் தட்சிணாமூர்த்தியின் சந்நதியில் அவருக்கு முன்பாக அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபடுங்கள். குழப்பங்கள் அகன்று மனம் தெளிவடையும். ஞான குரு வேறு, நவகிரக குரு வேறு என்ற உண்மையைப் புரிந்துகொள் வோம். அந்தந்த தேவதைகளுக்கு உரிய பரிகாரத்தைச் சரியாக செய்து முழுமையான பலனை அடைவோம்.

Tuesday, June 16, 2015

மன்னிப்போம்! மறப்போம்!

மன்னிப்போம்! மறப்போம்!

* பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன், பிறருக்கு தண்டனை தரும் அதிகாரம் எந்த மனிதனுக்கும் கிடையாது.

* பிறர் குற்றங்களை மன்னிக்கும் குணம் இருந்தால், உங்களை நல்லவர் என நீங்களே முடிவு கட்டிக்கொள்ளலாம். மன்னிப்பது மனிதகுணம். மறப்பது தெய்வீக குணம்.

* சொல் வலிமை மட்டுமின்றி, ஆள்பலம், பொருள்பலம் போன்ற வலிமைகளைக் கொண்டிருப்பவனே வல்லவன்.

* சுயநலம் கருதி தனக்கு சாதகமான விஷயத்தை அங்கீகரிப்பது கூடாது. இயற்கையின் வழியில் நியாய தர்மத்தைப் பின்பற்றுவதே நல்லது.

* பெரும்பாலான மனிதர்கள் தன் குற்றத்தை சுண்டைக்காயாகவும், பிறர் குற்றத்தை பூசணி காயாகவும் எண்ணுகிறார்கள்.

* செயல் வீரனையே உலகம் போற்றுகிறது. காரியம் செய்யாதவனை யாரும் விரும்புவதில்லை. வேலையின்றி சோம்பித் திரிபவனைக் காண்பது கூட தீமை தான்.

* வேலை செய்யாமல் ஒருவனிடம் பணம் பெற முயற்சிப்பது பிச்சை எடுப்பதற்குச் சமமானது.

விடாமுயற்சி வெற்றி தரும்!!!

விடாமுயற்சி வெற்றி தரும்!!!
  • முயற்சி மேற்கொண்டால் வெற்றியை எட்டும் வரை கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். லட்சியத்தை தவிர வேறு எதையும் சிந்திக்கக்கூடாது.
  • ஒருவருக்கொருவர் மனதாலும் தீங்கு நினைக்காதீர்கள். யாருக்காகவும் எதற்காகவும் பயம் கொள்ளாதீர்கள். இதை பின்பற்றினால் வாழ்வில் ஒருபோதும் துன்பம் நம்மைத் தீண்டாது.
  • ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் கல்வி அவசியம். அப்பொழுது சமூதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகள் மறைந்து சமதர்ம சமுதாயம் உண்டாகும்.
  • பகுத்தறியும் ஆற்றல் இல்லாத யாருக்கும் கொள்கை ஒன்றும் இருக்காது. இதுவே என் கொள்கை என்று வாழ்பவனிடம் பகுத்தறியும் ஆற்றல் இருக்கும்.
  • தன்னம்பிக்கை மனதில் இருந்தால் வெற்றி உறுதி நம்பிக்கை இருக்குமிடத்தில் விடாமுயற்சி இருக்கும். விடாமுயற்சியே வெற்றியை கொண்டு வந்து விடும்.
  • எண்ணம், சொல், செயல் மூன்றிலும் நேர்மை இருக்குமானால் அக்னிக்கு நிகரான ஆற்றல் நம்மிடம் உண்டாகி விடும்

எது சிறந்த வழி!

எது சிறந்த வழி!

ஒவ்வொருவனும் தன்னுடைய வழிதான் சிறந்தது என்று நினைக்கிறான். மிகவும் நல்லது. ஆனால் உனக்கு வேண்டுமானால் அது நல்லதாக இருக்கலாம் என்பதை நீ நினைவில் வைக்க வேண்டும். ஒருவனால் சிறிது கூட ஜீரணிக்க முடியாத ஓர் உணவு, மற்றொருவனுக்கு எளிதல் ஜீரணமாகக் கூடியதாக இருக்கும். உனக்குப் பொருத்தமாக இருப்பதனாலேயே ஒவ்வொருவனுக்கும் அது தான் வழி, சங்கரனுக்குப் பொருத்தமான சட்டை சந்திரனுக்கும் சங்கரிக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும் என்ற முடிவிற்குத் தாவிவிடாதே. கல்வியறிவில்லாத, பண்பாடற்ற, சிந்தனையில்லாத ஆண் பெண் அனைவரும் இத்தகைய குறுகலான சட்டைக்குள் புகுத்தப்பட்டிருக்கிறார்கள்!

நீயாகவே சிந்தித்துப் பார். நாத்திகனாக இருந்து விட்டுப் போ! இந்த உலகமே பெரிது என்று நினைக்கும் இலெகிகனாக இருந்துவிட்டுப் போ! அது கூட எவ்வளவோ பராவாயில்லை – மனதைப் பயன்படுத்திச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த மனிதனுடைய வழி தவறானது என்று சொல்வதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது? உனக்கு வேண்டுமானால் அது தவறாக இருக்கலாம். அதாவது, நீ அந்த வழியைப் பின்பற்றினால் அதனால் உனக்குக் கேடு விளையக்கூடும். ஆனால் அதற்காக அந்த வழியால் அவன் கீழ்நிலையை அடைந்து விடுவான் என்பது அதன் பொருளல்ல.

எனவே, உன்னிடம் அறிவு இருந்து மற்றொருவன் பலவீனனாக இருப்பதை பார்த்தால், அதற்காக அவனை நீ கண்டிக்காதே. உனக்கு இயலுமானால் அவனுடைய நிலைக்கு இறங்கிச் சென்று அவனுக்கு நீ உதவி செய். தானாகவே அவன். வளர்ச்சி பெற வேண்டும். நான் அவனுடைய தலைக்குள் ஐந்து மணி நேரத்தில் ஐந்து கூடை அறிவைத் திணித்துவிடுவேன். ஆனால் அதனால் என்ன நன்மை ஏற்பட்டுவிடப் போகிறது ? அவன் முன்பு இருந்ததைவிட மேலும் சற்று அதிகம் மோசமானவனாகத்தான் இருப்பான்.

எழுந்திருங்கள், விழித்துக் கொள்ளுங்கள், இனியும் தூங்க வேண்டாம். எல்லாத் தேவைகளையும் எல்லாத் துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது. இதை நம்புங்கள். அப்போது அந்தப் பெரிய சக்தி உங்களிடமிருந்து வெளிப்படும் என்ற இந்த உண்மையை அனைவருக்கும் சென்று போதிப்பாயாக…. எல்லையற்ற வலிமையும், எல்லையற்ற ஞானமும், வெல்ல முடியாத ஆற்றலும் உனக்குள்ளேயே குடிகொண்டிருப்பதை நீ உணரமுடிந்தால், நீ அந்த ஆற்றலை வெளியே கொண்டுவர முடியுமானால், நீயும் என்னைப் போல் ஆக முடியும்.

ஓய்வின்றி வேலை செய்க!

ஓய்வின்றி வேலை செய்க!

* உங்களிடம் உள்ளதை எல்லாம் பிறருக்கு கொடுத்துவிட்டு பிரதிபலன் எதிர்பாராமல் வாழுங்கள்.

* நாம் உண்பதும், உடுப்பதும், உறங்குவதும் கடவுளுக்காகவே. அனைத்திலும் எப்போதும் கடவுளையே காணுங்கள்.

* ஒரு எஜமானனைப் போல கடமையைச் செய்யுங்கள். அடிமையைப் போல இருக்காதீர்கள். சுதந்திர உணர்வுடன் பணியாற்றுங்கள்.

* சாகின்ற நிலையிலும் கூட நாம், ஒருவர் யார் எப்படிப்பட்டவர் என்று கேள்வி கேட்காமல் உதவி செய்வது தான் கர்மயோகம்.

* சுதந்திர உணர்வு இல்லாத வரையில் மனதில் அன்பு தோன்றுவதில்லை. அடிமையாகி விட்டால் உண்மையான அன்புக்கு இடமே இல்லை.

* ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வேலைகளைச் செய்து கொண்டே இருங்கள். ஆனால் வேலைகளுக்குள் கட்டுப்பட்டு விடாதீர்கள்.

* வாழ்வில் மனிதன் உயர வேண்டுமானால் கடுமையான சோதனைகளைக் கடந்து சென்றாக வேண்டும்.

* சூழ்நிலைக்குத் தக்கபடி வாழ்வை அனுசரித்து அமைத்துக் கொள்வது தான் வெற்றிக்கான ரகசியம்.

* ஒரு செயலின் பயனில் கருத்துச் செலுத்தும் அதே அளவிற்கு அதைச் செய்யும் முறையிலும் கவனம் செலுத்துவது அவசியம்.

* தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதை விட போராடி மாள்வதே மேலானது. நீ ஒருபோதும் அழக்கூடாது.

* ஒரு லட்சியத்தை எடுத்துக் கொண்டு அதற்காக உன்னை அர்ப்பணித்துக் கொள். பொறுமையுடன் விடாமுயற்சி செய்தால் உனக்கு ஆதரவான நல்ல காலம் நிச்சயம் வரும்.

* சுயநலத்துடன் வாழாமல், “நான் அல்லேன் நீயே’ என்னும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். எல்லா நன்மைகளுக்கும், ஒழுக்கங்களுக்கும் இதுவே அடிப்படை பண்பு.

* உன்னால் எல்லாருக்கும் சேவை செய்ய முடியும். அதுவும் கடவுளின் குழந்தைகளுக்குத் தொண்டு செய்யும் பாக்கியம் உனக்கு கிடைத்திருக்கிறது.