Friday, August 5, 2016

தோல்வி என்றால் என்ன?.... அது என்ன செய்யும்...

தோல்வி அகந்தையை அழித்து வாழ்வின் உண்மைகளை பற்றிய உபயோகமான அறிவை தருகிறது. 

டாக்டர் அலக்சாண்டர் கிரஹாம் பெல் தனது மனைவியின் காதை கேட்க வைக்க ஓர் கருவியை தேடித் தோல்வியடைந்தாலும், கடைசியில் தொலைபேசியை கண்டு பிடித்தார். 

இனி கல்வி கற்க முடியாது என்று பாடசாலையில் இருந்து விரட்டப்பட்டதால் உண்டான தோல்வியே தாமஸ் அல்வா எடிசனை பெரும் கண்டு பிடிப்பாளராக்கியது.

தோல்வி எப்போதும் மறைந்திருக்கும் ஓர் ஆசீர்வாதமாக மாறுகிறது. ஏனெனில் செய்ய திட்டமிட்ட நோக்கங்களில் இருந்து மக்களை வேறு திசைக்கு மாற்றுகிறது, புதிய வாய்ப்புக்களின் கதவுகளை அது திறக்கிறது.

சிறு வயதில் இருந்தே ஏராளம் தோல்விகளை சந்தித்த ஆபிரகாம் இலிங்கன் அனைத்துத் தோல்விகளையும் மதிப்பிட்டு கடைசியில் அனைவரும் அறிந்த அமெரிக்க அதிபரானார்.

தோல்வி வந்தவுடன் அதற்குள் வெற்றி என்பது ஏதோ பெரிய கனி போல இருப்பதாக எண்ணி விடாதீர்கள். வெற்றி விதை போலவே இருக்கும், அதை வளர்த்து மரமாக்கி கனி பறிக்க வேண்டியதே உங்கள் பொறுப்பு.

யார் மீண்டெழுந்து மறுபடியும் போரிடப் போகிறார்கள் என்பதை அறியவே இயற்கை நமக்கு தோல்வியைத் தருகிறது. மீண்டெழுந்தவர்களே மனித குலத்திற்கு தலைமை தாங்குகிறார்கள்.

உடல் ஊனமுற்றிருந்த மைலோசி என்பவர் தனக்கு ஒரு மனம் இருப்பதை கண்டறிந்தார். அதை பயன்படுத்தி வாழ்வில் உயர்வு பெறும் புதிய கண்டு பிடிப்பை கண்டு பிடித்தார். உங்களிடம் ஒன்றுமே இல்லை ஆனால் ஒரு மனம் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி உயர்வடையுங்கள்.

நீங்கள் தோல்விகளை கையாளும் விதத்தைப் பார்த்தால் உங்களிடம் தலைவராகும் தகுதி இருக்கிறதா இல்லையா என்பது புரிந்துவிடும்.

ஒருவனது பலவீனங்களை அளவிடும் அளவு கோலாக தோல்வி இருக்கிறது. ஆனால் அதுவே அவற்றை சரி செய்யும் ஒரு வாய்ப்பையும் தருகிறது. இந்தவகையில் தோல்வி ஓர் ஆசீர்வாதம்தான்  

தோல்வி என்று கருதப்படுபவை தற்காலிக சரிவுகள்தான். அதை நேர் மறையான மனோபாவத்துடன் எடுத்துக் கொண்டால் விலை மதிப்பற்ற செல்வமாக மாற்றலாம்.

தோல்வியை ஏற்று தொடர்ந்து போராடுபவனை உலகம் மதிக்கிறது, ஆனால் பிரச்சனை தீவிரமாகும்போது கைவிடும் மனோபாவம் உடையவனை உலகம் மன்னிப்பதில்லை.

மனதை வலிமைப்படுத்துங்கள்

பெர்ஷியாவின் அரசர், ஜரதுஷ்டிரா என்ற ஒரு பெரும் ஞானியை சந்தித்தார். அவரிடம் ஞான வாக்குகளை கேட்டார் ஜரதுஷ்ரா, அரசரிடம் சில கோதுமை விதைகளைக் கொடுத்தார். அரசருக்கு அவமானமாக இருந்தது. செல்லும் வழியில் அதை தூக்கி எறிந்துவிட்டுச் சென்றார். பல காலம் சென்றது. மீண்டும் ஒரு நாள் ஞானி ஜரதுஷ்ராவுக்கு செய்தியனுப்பி தனக்கு ஞானவாக்குகளை வழங்கும்படி அரசர் கேட்டுக்கொண்டார். ஞானி திரும்பவும் அரசருக்கு கோதுமை விதைகளை கொடுத்தார்.

ஞானியின் வாக்குகளை புரிந்து கொள்ள தனக்கு ஞானம் போதாது என்று எண்ணிய அரசர், அந்த விதைகளை தன் பிரார்த்தனை கூடத்தில் வைத்தார். இதன்பின் அரசர் இந்தியாவைச் சேர்ந்த தத்துவஞானி ஒருவரை வரவழைத்து தனக்கு ஞானம் புகட்டி வழி நடத்தி செல்ல வேண்டினார்.

அந்த தத்துவ ஞானியோ, தான் அரசரின் அழைப்பை ஏற்று அங்கு வந்ததற்கு காரணமே, அங்குள்ள ஞானியான ஜரதுஷ்டிராவை காண வேண்டும் என்ற விருப்பத்தினால்தான் என்றார். அரசர் அவரை பிரார்த்தனைக் கூடத்திற்கு அழைத்துச் சென்று ஜரதுஷ்டிரா கொடுத்த கோதுமை விதைகளைக் காட்டினார். விதைகளைக் கண்ட தத்துவஞானி தன்னை மறந்து உரத்த குரலில் 'ஆஹா' என்ன அற்புதமான தத்துவம் என்று கூறினார். பிறகு தத்துவஞானி அரசரிடம் விளக்கமாக கூறினார். விதைகள் சிறியதாக இருந்தாலும் அதிலிருந்து செடிகள் வளரும் சாத்தியம் உண்டு. ஒரு விதை மரமாகும். மரம் மீண்டும் விதையாகும். இது தொடரும். இதுபோல்தான் நாமும் எல்லைக்குட்பட்டவர்கள் போல தோன்றினாலும், இந்த எல்லைகளைத் தாண்டி வளரும் ஆற்றல் கொண்டவர்கள். இரண்டாவதாக, விதை வளர அது தன்னுடைய விதைத்தன்மையை விடுவதற்கு தயாராக இருக்க வேண்டும். அதேபோல் நாமும் பழையவைகளை மறக்கவில்லையானானல், புதிய எதிர்க்காலத்தை காண்பது என்பது முடியாது. ஞானத்தோடு வாழும் கலை என்பதே இறக்கும் கலையாகும்.

கடைசியாக, ஒரு விதையை பூமியில் விதைக்கும் போது கண்ணுக்குத் தெரியாத சக்திகளான ஈரப்பசை, வெப்பம் மற்றும் காற்றும் இவையெல்லாம் விதை முளைக்க உதவுகிறது. இதற்கு தேவை நம்பிக்கை. அதுபோல வாழ்விலும் நல்லவைகளை நம்ப வேண்டும். அப்பொழுது கண்ணுக்குத் தெரியாத சக்திகள் ஒன்றிணைந்து நமக்கு வழிகாட்டும்.

கனவு காணுங்கள் - கலாமின் தன்னம்பிக்கை வரிகள்

முடியாது என்பது நோய்

"கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை கிடையாது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முடியாது என்று காந்தியடிகளும், சுதந்திர போராட்ட வீரர்களும் நினைத்திருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. சி.சுப்பிரமணியமும், எம். எஸ். சுவாமிநாதனும் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து இருக்காது. வர்கீஸ் கொரியன் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா வெண்மை புரட்சியில் வெற்றி அடைந்து இருக்காது. விக்ரம் சாராபாய் முடியாது என்று நினைத்திருந்தால் இன்று செயற்கைக்கோளை இந்தியா ஏவியிருக்க முடியாது. முடியாது என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிகமாக உள்ளது. முடியும் என்று நம்பும் மனிதனால் தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது.  எனவே, நண்பர்களே, முடியும் என்ற நம்பிக்கை கொண்டு எந்த செயலையும் தொடங்குங்கள். "முடியும்' என்ற நம்பிக்கை முதலில் ஓவ்வொரு இந்தியனுக்கும் வேண்டும்"

மனித நாகரிகம் வளர காரணம் வீரம்

மனித நாகரிகம் வளர்ந்ததற்குக் காரணமாக நான் நினைப்பதே வீரத்தினால்தான். மனிதன் எடுத்து வைத்த ஒவ்வொரு காலடிக்கும் வீரம் தேவைப்பட்டது என்பதுதான் வரலாறு. தன்னுடைய பிரதேசத்தைக் காத்துக் கொள்ள வீரம் தேவைப்பட்டது. புதிய வாசல்களைத் திறக்க, புதிய இடங்களைத் தேடிச்செல்ல வீரம் தேவைப்பட்டது. பழமையை மீறவும் புதியவற்றைக் கண்டுபிடித்து புதுமைகள் செய்யவும் வீரம் தேவைப்பட்டது. சகமனிதனின் கண்ணீரைத் துடைத்து புரட்சிகளை உருவாக்க வீரம் தேவைப்பட்டது. மனிதநேயம் என்கிற பேனாவில் வீரம் என்னும் மையினால் எழுதப்பட்டது தான் நீண்ட நெடிய மனிதனின் வரலாறு என்பது என் எண்ணம்.

உறுதியும், நம்பிக்கையும்

உறுதியும், நம்பிக்கையும் தலைமைப்பண்பும் கொண்ட நம்முடைய இளம் ஆண்களும், பெண்களும் ராணுவப்படைகளில் ஆர்வமுடன் சேர முன்வர வேண்டும் என்பது என் ஆசை. இன்றைய வேகமான அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக ராணுவத்தின் எத்தனையோ சவாலான, சுவாரஸ்யமான வேலைகள் உருவாகி வருகின்றன. இளைஞர்களுக்கு அவை பெரும் சாகசங்களாகத் திகழும்.

சிந்தனை செய்

இந்தியாவுக்கு நாம் என்ன செய்யலாம் என்று சிந்தனை செய்.

இந்தியாவை மேம்படுத்த வேண்டியவற்றைச் சிந்தனை செய்,

அமெரிக்கா, மற்ற மேலை நாடுகள் அடைந்துள்ள மேன்மைப்பாடுகளை நாமும் பெற வேண்டுமானால்!

“புலப்படாத எதிர்காலத்துக்கு மட்டும் ஒருவர் வாழ்ந்து வருவது ஆழமற்ற மேலொட்டிய செயலாகும்.”

ஆற்றல்களின் வேறுபாடுகளைத் தெளிவாக தெரிந்து கொள்

”என்னால் மாற்ற முடியாதவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன். வாழ்க்கையில் உன்னை வரவேற்கும் சக்திகளும், அறவே எதிர்க்கும் சக்திகளும் இருக்கத்தான் செய்யும். பலனளிக்கும் ஆற்றல்கள், பயனற்ற ஆற்றல்களின் வேறுபாடுகளைத் தெளிவாகத் தெரிந்து, அவற்றுக்கு இடைப்பட்ட முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.”

கனவு காண்

“கனவு காண், கனவு காண், கனவு காண், பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு. சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும். நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி.  ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும். அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.

ஒரே சிந்தனை

“முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங்கனவு எங்களுக்கு அறவே இல்லை! ஆனால் சமூக மனிதப் பிரச்னைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம்! தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்!”

மன உறுதி

இமயத்தின் உச்சியை எட்டித் தொடுவதாயினும் சரி அல்லது உன் வாழ்க்கைப் பணியின் உச்சத்தை அடைவதாயினும் சரி, மேலே ஏறிச் செல்ல ஒருவருக்கு மிக்க மன உறுதி தேவைப்படுகிறது.

தொடர்ந்து முயற்சி செய், வெற்றி நிச்சயம்

மாணவப் பருவத்தில் பல்வேறு தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்தத் தேர்வு முடிவுகள் எதிர்பார்த்தவாறு அமையாவிட்டால், அதற்காக மாணவர்கள் மனம் சோர்ந்துவிட வேண்டியதில்லை. தேர்வு முடிவுகள்தான் வாழ்க்கையில் இறுதியானது எனக் கருத வேண்டாம். கடவுள் நம்முடன் இருப்பாரானால், ஒருவரும் உங்களுக்கு எதிராகச் செயல்பட முடியாது. எனவே, தொடர்ந்து முயற்சி செய்தால், நிச்சயம் வெற்றி கிட்டும். தாற்காலிகமாக ஏற்படும் பின்னடைவுக்காக மனம் சோர்ந்து போய்விட வேண்டாம்.

துணிவுடன் எதிர்கொள்

வெற்றி எப்பொழுதுமே மகிழ்ச்சியைத் தரும். ஆனால், பல காரணங்களால் சில சமயம் தேர்வில் நாம் பின்னடைவைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதையும் நாம் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் நாம் சில எதிர்பாராத பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும் பிரச்னைகள் நம்மை மேலாதிக்கம் செய்ய அனுமதிக்கக் கூடாது.​ நாம்தான் பிரச்னைகளை மேலாதிக்கம் செய்ய வேண்டும்.​ பிரச்னைகளை தோல்வியுறச் செய்து, வெற்றி காண வேண்டும்

நீ நட்சத்திரமாக ஜொலிக்க விரும்பினால்

நீ யார் என்பது முக்கியமல்ல;

உனது மனது எதை விரும்புகிறதோ,​​

அது நிச்சயம் உன்னை வந்து சேரும்.”

எதிர்பாராத பிரச்னைகளை எதிர்கொண்டு அதில் வெற்றி பெறுவதுதான் இளைஞர்களின் தனித்தன்மையாகும்.

தோல்வியை கண்டு துவளாதீர்....

வாழ்க்கையில் உயர்வும், தாழ்வும் மாறி மாறி வருவது சகஜம். வாழ்வில் எல்லோரும் முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பு. உயர்வு வரும் இடத்தில் தோல்விகளும் கூடவே வரும்.

உயர்வும் தாழ்வும் நாணயத்தின் இரு பக்கங்களாக கருத வேண்டும். தோல்வியை கண்டு துவளக் கூடாது. வாழ்வில் ஒரு முறையேனும் தோல்வி ஏற்பட்டால் தான் வெற்றியின் அருமை புரியும். சாதாரணமாக ஒருவன் வெற்றியடைந்தால் அவனுக்கு அது பெரிய விஷயமாக தெரியாது. பல முறை தோல்வி கண்டு, வெற்றியை தழுவும் ஒருவனால் தான் அதை உண்மையில் உணர முடியும். அவன் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. வெற்றியை கொண்டாடுவான்.

நமக்கு ஏற்பட்ட நிறைய தோல்விகளும் நம் வெற்றிக்கு காரணமாக அமையும். ஒருவர் பெற்ற வெற்றியை தாங்க முடியாதவர்கள், அவரை ஏதேனும் வகையில் தோற்கடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

நாம் வெற்றி பெற்றுக் கொண்டே போகும் போது மற்றவர்களை பற்றி அறிய முடியாது. ஆனால், தோல்வி ஏற்படும் போது தான், யார் நல்லவர் கெட்டவர் என்ற சுயரூபம் நமக்கு தெரியும். பொதுவாக வெற்றி பெறும் போது நமது நண்பர்கள் கூட எதிரிகளாக மாறுவார்கள். ஆனால், தோல்வி அடையும் போது சில நண்பர்களும் நமக்குக் கிடைப்பார்கள்.

இதெல்லாம் வாழ்க்கையில் சகஜமாக எடுத்துக் கொண்டு எல்லோரிடமும் நட்புடன் பழக வேண்டும். சில தோல்விகள் தான் வேகமாக வளர வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். தோல்வி வரும் போது அதற்காக துவண்டு போய் சாப்பிடாமல், இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்து யோசிப்பதை விட்டுவிட்டு, இதுவும் வெற்றிக்கான பாடமாக எடுத்துக் கொண்டு நேர்மறையாக நமது எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

தோல்வியின் முடிவே உயர்வின் ஆரம்பமாக இருக்கும்.

Wednesday, July 20, 2016

பதவி உயர்வுக்குக் கைகொடுக்கும் 10 வழிகள்! #DailyMotivation

சிறு வேலையில் பணிபுரிபவர் தொடங் சி.இ.ஓ-வாக இருப்பவர் வரை அனைவருமே விரும்பும் விஷயம் பதவி உயர்வு என்பது ஒவ்வொரு வருடமும் முன்பைவிட அதிகம் உழைத்து ஒரு படி மேலே செல்ல வேன்டும் என்பது அனைவரது கனவாகவும் உள்ளது. சென்ற வருடத்தைவிட குறைந்தபட்சம் 10% சம்பளமாவது இந்தவருடம் உயர்ந்துவிட வேண்டும் என்பதைத்  தான் அனைவரும் விரும்புகிறார்கள். உங்கள் பதவி உயர்வுக்கு கடின உழைப்பு மட்டுமல்ல இந்த 10 விஷயங்களும் கட்டாயம் தேவைப்படுகின்றன. அவை இதோ...

நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்!

இந்த வருட‌ இறுதியில் பதவி உயர்வு வேண்டும் என நினைத்தால் அதற்கான வேலைகளை இன்றே தொடங்குங்கள். எந்த அளவுக்கு உங்களுக்கு வேலை தரப்படுகிறததோ அதனை முதலில் 100% முழுமையாக முடிக்க பழகுங்கள். சிலர் அலுவலகத்தின் கவனத்தைத் தன் மீது திருப்ப அதிகமாக வேலை செய்வார்கள். அவற்றில் சில  100% முழுமையாக முடிக்க இயலாமல் போகலாம். அதற்குப்  பதில் உங்களிடம் ஒரு வேலையைக்  கொடுத்தால் 100% முழுமையாக முடிக்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். அது தானாகவே அலுவலகத்தின் கவனத்தை உங்கள் மீது திருப்பும்.

வாய்ப்புகளை வீணடிக்காதீர்கள்!

உங்களது உயர் அதிகரியோ அல்லது உங்களைவிட ஒருபடி மேலே இருக்கும் நபரோ ஏதோ ஒரு காரணத்திற்காக அலுவலகத்தில் இல்லாமல் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டு, உங்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டால் அன்று உங்களைச்  சிறப்பாக நிருபிக்க முயற்சி செய்யுங்கள். மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் சில சமயம் இதனை வேண்டுமென்றே ஒருவரின் தலைமை பண்பைச்  சோதிக்க செய்து பார்க்கும் முயற்சியாக மேற்கொள்கின்றன. அதனால் உங்களை நம்பி வழங்கப்படும் வாய்ப்புகளை வீணடிக்காதீர்கள். இது  உங்களுக்கான இன்னொரு நுழைவுத்தேர்வு போன்றது.

அப்டேட் ஆகுங்கள்!

உங்கள் துறையில் அப்டேட்டாக இருங்கள். அது தொடர்பான தொழில் நுட்பங்களையோ, புதிய கண்டுபிடிப்புகளையோ கற்றுக்கொள்ளுங்கள். சில சமயங்களில் நீங்கள் அப்டேட்டாக இருக்கிறீர்கள் என்பதற்காகவே உங்களுக்கு சில பதவிகள் உங்களைத்  தேடி வரும். இன்னும் சொல்லப்போனால் உங்களது அப்ட்டேட்டுக்காகவே சில புதிய பதவிகள் உருவாக்கப்படலாம்.

வயது பிரச்னை அல்ல!

இது குறைந்த வயதில் உள்ளவர்களுக்கும், வயது அதிகமானவர்கள் என  இருவருக்குமே பொருந்தும். குறைந்த வயதில் இருப்பவர் இவர் என்னை விட சீனியர் இவர் இருக்கும் போது எனக்கு எப்படி பதவி உயர்வு கிடைக்கும் என்ற எண்ணமும், இவர்கள் நான் உயர்பதவிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வார்களா என்ற தயக்கத்தோடும் காணப்படுவார்கள். இது தடையே அல்ல. உங்கள் திறமைக்கு தான் நிர்வாகம் மதிப்பளிக்கும் வயதுக்கு அல்ல. உங்களால் நிர்வாகத்திற்கு அதிக பயன் என்றால், கண்டிப்பாக நிர்வாகம் உங்களைத்  தான் தேர்வு செய்யும். அதனால் உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள்.

இதே போல் வயது அதிகமானவர்களிடமும் ஒரு கேள்வி இருக்கிறது ''இன்றைய தொழில்நுட்பம் மட்டும் தான் எனக்கு புதிது. என் அனுபவம் இருக்கும் போது இந்தப்  புதியவர்களை அதிகம் நிர்வாகம் நம்புகிறதே, நமக்கு வயதாகிவிட்டதோ என்ற எண்ணம் இருக்கலாம். ஆனால் உங்கள் கேள்வியிலேயே உங்களுக்கான பதில் உள்ளது. உங்களுக்கு தொழில்நுட்பம் மட்டும் தான் புதிது. அதிக அனுபவம் உள்ளது. அதனை கற்றுக்கொண்டால் நீங்கள் தான் கில்லி. அனுபவத்துக்கு நிர்வாகம்  எப்போதுமே மதிப்பளிக்கும்.

பன்முகத்தன்மை!

இவர் ஒரே ஒரு வேலையைச்  செய்பவர் இந்த வேலை தவிர இவருக்கு வேறு எதுவும் தெரியாது என்ற வரிகளில் சிக்கி கொள்ளாதீர்கள். உங்களால் எந்த ஒரு வேலையையும் அசால்ட்டாக செய்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கையை அலுவலகத்துக்கு ஏற்படுத்துங்கள். அதற்காக அனைத்துப்  பணிகளையும் நீங்களே செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களுக்கு அனைத்து வேலைகளும் தெரியும் ஆட்கள் பற்றாக்குறையோ அல்லது திடீர் தேவையோ ஏற்பட்டால்  இவரால் முடியும் என்கின்ற பன்முகத்தன்மை கொண்டவராக இருங்கள்.

 அறிவு பரிமாற்றம்! 

நீங்கள் புதிய விஷயங்களைக்  கற்றுக்  கொள்வது மட்டுமல்ல. புதிதாகக்  கற்றுக்கொண்ட‌ , உங்களுக்குத்  தெரிந்த விஷயங்களைக்  கற்றுக் கொடுப்பவராகவும் இருங்கள். உங்களுக்கு மட்டுமே தெரிந்த, அலுவலகத்துக்குப்  பயன்படும் விஷயங்களை அதனைக் கற்க ஆர்வமுள்ளவருக்குக்  கற்றுக்கொடுங்கள். இது உங்கள் தலைமைப் பண்பையும், உங்கள் மீதான கவனத்தையும் கூட்டும்.

அலுவலக அரசியலைச் சமாளியுங்கள்!

எல்லா அலுவலகத்திலுமே, சிலரால் தொடர்ந்து பிரச்னைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். சில சமயங்களில் உங்களுக்கு வரும் வாய்ப்பைத்  தட்டி பறிப்பவராகக்  கூட அவர் இருக்கலாம். அவர்களைச்  சமாளிக்க பழகுங்கள். எப்படியும் உங்களுடன் திறமை குறைந்தவராக இருந்தால் அந்த இடத்தில் அவரால் நீண்ட காலம் நீடிக்க முடியாது. அவர்களிடம்  பிரச்னையை வளர்க்காமல் அமைதியாக இருங்கள். அதுவே பல பிரச்னைகளை தவிர்க்கும். உங்களுக்கான வாய்ப்பு உங்களைத்  தேடி தானாக வரும். 

சர்ச்சைகளில் சிக்காதீர்கள்!

அலுவகத்தில் உள்ள உயர் அதிகாரிகளை பற்றியோ அல்லது நிர்வாகம் பற்றிய கருத்துக்களையோ வெளிப்படையாக தெரிவித்தோ? அல்லது உடன் பணிபுரிவர்களுடன் தேவையற்ற விஷயங்களை பகிர்ந்தோ சர்ச்சைகளில் சிக்கி கொள்ளாதீர்கள். சர்ச்சைகளை நீண்ட நாட்களுக்கு அனைவரும் நியாபகம் வைத்திருப்பார்கள். அது உங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் சர்ச்சைகளை தவிர்க்கப் பாருங்கள்.

தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள்!

உங்கள் மீதான நியாயமான தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள். நிர்வாகம் உங்களிடம் எதிர்பார்ப்பதும் அது தான். ஆனால் தவறுகளை ஒப்புக்கொள்வதையே வழக்கமாக வைத்திருக்காதீர்கள். ஒருமுறை நீங்கள் செய்த தவறை எதிர்காலத்தில், நடந்திடவே கூடாது என்பதில் தீர்மான‌மாக இருங்கள். அதேபோல் நீங்கள் காரணமாக இல்லாத தவறுக்கு நீங்கள் குறை கூறப்பட்டால் அதற்கான உரிய விளக்கத்தை சரியான வார்த்தைகளால் கூறி புரிய வையுங்கள்.

மாற்றங்களுக்குத்  தயராக இருங்கள்!

 சில நேரங்களில் நீங்கள் முன்பு பணிபுரிந்த இடத்துக்கும் தற்போது பணிபுரியும் இடத்தில் கலாச்சாரம் மாறி இருக்கலாம். அல்லது அலுவலகமே பெரிய கலாச்சார மாற்றத்துக்கு உட்படலாம். இதற்கு உங்களைத்  தயாராக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் மாற்றத்துக்குத்  தயாராக இல்லை என்றால் உங்களுக்கான தேவை நிறுவனத்துக்கு இருக்காது. அதேசமயம் நீங்கள் எளிதாக மாற்றிக்கொள்ளும் நபராக இருந்தால் உங்களுக்கான பதவி உயர்வு, கட்டாயம் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து ஒருபடி மேலே தான் இருக்கும்.

Monday, July 18, 2016

நேரம் நல்ல நேரம்

நேரம் நல்ல நேரம்
|
காலம் இயற்கை சொத்து

இந்த உலகில் நேற்று வரை வாழ்ந்த மனிதர்களுக்கு இயற்கை அளித்த சொத்து... ஒரு நாளில் 24 மணி நேரம் தான்.
இந்த உலகில் இன்று வாழும் மனிதர்களுக்கு இயற்கை அளித்த சொத்து... ஒரு நாளில் 24 மணி நேரம் தான்.

இதே போல், இந்த உலகில் இனி வர இருக்கும் அனைத்து மனிதர்களுக்கும் இயற்கை கொடுக்க இருக்கும் சொத்து... ஒரு நாளில் 24 மணி நேரம் தான்.

இந்த காலம், குறிப்பாக ஒரு நாளில் 24 மணி நேரம் என்பது ஒரு வழிப்பாதை.

வாழ்வில் தனி மனிதன் எந்த ஒரு காலக்கட்டத்திலும் நேரத்தை செலவு செய்து விட்டால், வாழ்நாளில் அந்த நேரத்தை எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் திரும்பப் பெற முடியாது.

இதை தெளிவாக உணர்ந்து கொண்டு ஒவ்வொரு இளைஞனும் நேரத்தை பல வேலைகளுக்கு செலவு செய்யும் முன் தெளிவாகத் திட்டமிட்டு, நேரத்தை சேமித்து, உடல் ஆரோக்கியத்தை காக்க மன ஆரோக்கியத்தை வளர்க்க அந்த நேரத்தை செலவு செய்ய வேண்டும்.

வெற்றி ... தோல்வி

தனி ஒரு மனிதனின் வாழ்க்கையில் வெற்றி மற்றும் தோல்வி அவனது முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்தின் அளவைப் பொறுத்து இல்லை. மாறாக, ஒரு தனி மனிதன் தன்னுடைய வாழும் காலத்தில் திட்டமிட்டு காலத்தை செலவிடும் முறையில்தான் உள்ளது.

காலத்தை சரியான முறையில் திட்டமிட்டு ஒரு இளைஞன் பயன்படுத்தினால் , மனித வாழ்வில் வெற்றி மற்றும் மேலும், பலப்பல மேன்மைகள் அடைவது நிச்சயம்.
அதே சமயம் ஒரு இளைஞன் காலத்தை தவறான முறையில் திட்டமிடாமல் பயன்படுத்தினால் , வாழ்வில் தோல்வி நிச்சயம்.

காலத்தே பயிர் செய்

இளைஞனே ! சற்று சிந்தித்துப் பார்த்தால் புரியும். மனித வாழ்க்கையே நம் கையில் என்பதைவிட காலத்தின் கையில் என்பது தெளிவாகப் புரியும்.
இதனால் தான் நம் முன்னோர்கள் பல அனுபவ மொழிகளை சொல்லி உள்ளார்கள். அவைகள் 

காலத்தே பயிர் செய்
காலம் பொன் போன்றது
காலமும், கடல் அலையும், யாருக்காகவும் காத்து இருக்காது.

காலத்தின் அருமை

இன்றைய 114 கோடி இந்திய மக்களில் 57 கோடி பேர் இளைஞர்கள். இந்த 57 கோடி இளைஞர்களில் எத்தனை பேர் காலத்தின் அருமையை உணர்ந்து உள்ளனர் ?

பதில் விரல் விட்டு எண்ணி விடலாம். இதுதான் எதார்த்த உணமை

காலத்தின் அருமையை உணர்ந்தால், TV முன் உட்கார்ந்து பொழுது போக்கு என்ற போர்வையில் இன்றைய இளைஞர்கள் பல மணி நேரம் வீணடிக்க மாட்டார்கள்.

காலத்தின் மேன்மை

இன்றைய இளைஞர்களில் பலர் இளமை முறுக்கில் காலத்தின் அருமை புரியாமல், காலத்தின் மேன்மையை உணராமலும் இளமை காலத்தை வீணடிக்கிறார்கள்.
இளமை காலம் ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொள்ளும் காலம்.
இதை உணாராமல், இன்றைய இளைஞர்கள் பொழுது போக்குக்காக மாதம் ஒரு முறை மற்றும் இரு முறை பார்க்க வேண்டிய திரைப்படங்களை கணிசமான நேரம் செலவு செய்து பார்க்கின்றனர். 

நேரப் போராட்டம்

இந்திய சாதாரண இளைஞனுக்கு உடல் ஆரோக்கிய பயிற்சி செய்ய திறந்த மைதானம் மற்றும் ஜிம்முக்கு போக நேரம் இல்லை !

இந்திய சாதாரண இளைஞனுக்கு பேட்மிட்டன், டென்னிஸ், வாலிபால் போன்ற பல விளையாட்டுகளை விளையாட நேரம் இல்லை !!

இந்திய சாதாரண இளைஞனுக்கு பலப்பல நல்ல அறைவை தூண்டும் புத்தகங்கள் படித்து, அறிவை வளர்த்துக் கொள்ள நேரம் இல்லை !!

இன்றைய இளைஞனுக்கு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க நேரம் இல்லை ! மன ஆரோக்கியத்தை வளர்த்துக் கொள்ள நேரம் இல்லை !!

நேரப் போராட்டம்

தினம், தினம் ஒரு பெட்டிக் கடைக்கு 50க்கும் மேற்பட்ட செய்தித்தாள்கள் வருகின்றன. ஆனால், இன்றைய இந்திய இளைஞனுக்கு இரு செய்தித்தாளை கூட முழுமையாக படிக்க நேரம் இல்லை.

அவ்வளவு ஏன்?

ஒரு செய்தித்தாளில் மேம்போக்காக சில தலைப்புகளைக் கூட படிக்க நேரம் இல்லை.

இந்திய இளைஞன் தினம், தினம் பல வேலைகளை திறம்பட செய்ய நேரத்தோடு போராடிக் கொண்டே இருக்கிறான். இந்த நேரப் போராட்டம் இளமைக் காலத்தில் ஆரம்பித்து, வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 6 வயது முதல் 60 வயது வரை நேரப் போராட்டம்.

வாழ்க்கை அஸ்திவாரம்

ஒரு பல் மாடி கட்டிடம் கட்ட ஆரம்பிக்கும் போதே, பின்னாளில் உயர இருக்கும் உயரத்தை கட்டிடத்திற்கு போடப்படும் அஸ்திவாரத்தைக் கொண்டே கண்க்கிட்டுவிடலாம்.

அதே போல், ஒரு மனிதன், வாழ்க்கையில் அடைய இருக்கும் வளர்ச்சி, அவனுடைய இளமைக் காலத்தில் அதிலும் குறிப்பாக முதல் 30 ஆண்டு கால வாழ்க்கையில் நேரத்தை எவ்வாறு முறையாக முறைப்படுத்திக் கொண்டு செயல்படுகிறான் என்பதில் தான் உள்ளது.

உண்மை....

"உண்மை என்பது எளிது,
எளிமையாக இருப்பதால் உண்மையை 
மக்கள் மறந்துவிட்டார்கள்"
- சுவாமி விவேகானந்தர்.


தன்னடக்கம்,
தன் நம்பிக்கை,
தன் வழி......

"Truth is simple, because of simplicity
truth has been forgotten"
- Swami Vivekananda.

நேர நிர்வாக கலை

நேரமே வாழ்க்கை

நேரமே வாழ்க்கை.... வாழ்க்கை நேரம்
நேரத்தை இழந்தவன் வாழ்க்கையை இழக்கிறான்.
நேரம் ஒரு மனிதனை நிர்வகிக்கும் முன் ,மனிதன் நேரத்தை நிர்வகிக்க பழகிக் கொள்ள வேண்டும்.
இதைத் தான் நபிகள் நாயகம் மிக அழகாக சொல்கிறார். "மற்றவர்கள் உனக்காக பிரார்த்தனை செய்யும் முன் , நீங்கள் உங்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்."

நேர நிர்வாகம்.

நேரத்தை நிர்வகிப்பது என்பது ஒரு முக்கியமான வாழ்க்கை கலை.
மனிதன் ஆய கலைகள் 64 யும் தெரிந்து கொண்டு இந்த ஒரு நேர நிர்வாகக்கலையை முறையாக தெரிந்து கொள்ளவில்லை என்றால் மொத்த மனித வாழ்க்கையும் அர்த்தமற்றதாகிவிடும். 
நேர நிர்வாக கலையை எந்த ஒரு நபரும் எந்த ஒரு காலக்கட்டத்திலும் தெரிந்து கொள்ளலாம்.
6 வயது முதல் 60 வயது வரை ஒவ்வொருவருக்கும் நேர நிர்வாகம் பற்றிய விழிப்பு உணர்வு வேண்டும். பிறகு அந்த விழிப்பு உணர்வு வழி வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஆரோக்கிய நேரம்

சாதாரண மனிதன் வாழ்க்கையின் முதல் பாதியில் , அதாவது 60 வயது வரை உடல் ஆரோக்கியத்தை உதாசீனப்படுத்தி, மன ஆரோக்கியத்தை கெடுத்துக் கொண்டு பணம் சம்பாதிக்கின்றான்.
பிறகு, வாழ்க்கையின் அடுத்த பாதியில் ,அதாவது 60 வயது முதல் இழந்த உடல் ஆரோக்கியத்தில் சிறிது அளவையாவது மீட்க வேண்டும் எண்ர ஆவலில், சம்பாதித்த பணத்தை தண்ணீராக ஆரோக்கியத்துக்காக செலவு செய்கிறான்.

ஆரோக்கியமே மனிதனின் மிகப் பெரிய சொத்து . நோய் இல்லாதவன் வாலிபன். இந்த உண்மை தெரிந்தும், புரிந்தும், இன்றைய இளைஞர்களுக்கு தன்னுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நேரம் இல்லை. மேலும் மனதை ஆரோக்கியமாகவும், அமைதி நிலையிலும் வைத்துக் கொள்ள இன்றைய இளைஞர்களுக்கு நேரம் இல்லை.

நேர விழிப்புணர்வு

நம்மில் அதிகமான இளைஞர்களுக்கு முதலில் நேர விழிப்பு உணர்வு இல்லை.
அவ்வாறு நேர விழிப்பு உணர்வு உள்ள சில இளைஞர்களில் பலருக்கு உடற்பயிற்சி பற்றிய விழிப்பு உணர்வு இல்லை.
நேர விழிப்பு உணர்வு மற்றும் உடற்பயிற்சி பற்றிய விழிப்பு உணர்வு உள்ள சிலரில், பலருக்கு மனப்பயிற்சி பற்றிய விழிப்பு உணர்வு இல்லை.
அதிலும் நேர விழிப்பு உணர்வு, உடல் விழிப்பு உணர்வு மற்றும் மனப்பயிற்சி பற்றிய விழிப்பு உணர்வு உள்ள சிலரில் பலருக்கு ஆன்மிகப் பயிற்சி பற்றிய விழிப்பு உணர்வு துளி கூட இல்லை.

தற்சோதனை விழிப்பு உணர்வு

அவ்வாறு உடல் பயிற்சி, மனப் பயிற்சி மற்றும் ஆன்மிகப் பயிற்சி பற்றிய விழிப்பு உணர்வு உள்ள மிக சிலரில் பலருக்கு தன்னைத் தானே தற்சோதனை செய்து எண்ணத்தை சீரமைத்துக் கொண்டு , குண நலங்களை பண்படுத்திக் கொண்டு தெளிந்த வழியில் தினசரி வாழ்க்கையை இனிமையாக அமைத்துக் கொள்ளும் விழிப்பு உணர்வு இல்லை.
இதைத்தான் சுவாமி விவேகானந்தர் கூறுகிறார், " இளைஞர்கள் எல்லாம் வீண் அல்ல. இளைஞர் சமுதாயத்தின் ஆற்றலை , சிந்தனை வேகத்தை, இந்த முதிய சமுதாயம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை" 

தூக்கத்தில் பாதி

சாதாரண மனிதன் வாழ்நாள் முழுவதும் தூக்கத்தில் பாதி, ஏக்கத்தில் பாதி என்ற நிலையில் நல்ல எதிர்காலத்தை பற்றி நினைத்து கனவு கண்டு , அதில் திளைத்து நல்ல நிகழ் காலத்தை கோட்டை விருகிறான்.

சமச்சீர் வாழ்க்கை

இளமை - முதுமை , ஆரோக்கியம்---நோய் , இன்பம் - துன்பம் என்ற வாழ்க்கை நிலைகளை ஒரு மனிதன் வாழ்க்கைப் பயணத்தில் எதிர் கொள்கிறான். இந்த நிலை இல்லாத உலகில் , உடல் நிலைக்கும் என்ற கனவில் வாழும் இளைஞனே.. வாழ்க்கையின் நிதர்சன உண்மையை குறிபாக நேர நிர்வாகத்தின் அவசியத்தை இளமை காலத்திலேயே உணர்ந்து கொள்.

தனிமனித மேம்பாடு

சுருங்க சொன்னால், நேர நிர்வாகம் என்பது தனிமனித சிந்தனை மேம்பாட்டு நிர்வாகம் 
நம் நேரத்தை சரியாக நிர்வகிக்க கற்றுக் கொள்வோம். சிந்தனஒயோடு நம் செயல்களை சரியாக செய்யக் கற்றுக் கொள்வோம். நம் வாழ்க்கையை சீரமைத்துக் கொள்வோம்.
ஒரு நாளில் நமக்குக் கிடைக்கும் இந்த உன்னதமான 24 நிமிட நேரத்தை சரியான வகையில் நிர்வகிக்க கொள்வோம்