சிறு வேலையில் பணிபுரிபவர் தொடங் சி.இ.ஓ-வாக இருப்பவர் வரை அனைவருமே விரும்பும் விஷயம் பதவி உயர்வு என்பது ஒவ்வொரு வருடமும் முன்பைவிட அதிகம் உழைத்து ஒரு படி மேலே செல்ல வேன்டும் என்பது அனைவரது கனவாகவும் உள்ளது. சென்ற வருடத்தைவிட குறைந்தபட்சம் 10% சம்பளமாவது இந்தவருடம் உயர்ந்துவிட வேண்டும் என்பதைத் தான் அனைவரும் விரும்புகிறார்கள். உங்கள் பதவி உயர்வுக்கு கடின உழைப்பு மட்டுமல்ல இந்த 10 விஷயங்களும் கட்டாயம் தேவைப்படுகின்றன. அவை இதோ...
நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்!
இந்த வருட இறுதியில் பதவி உயர்வு வேண்டும் என நினைத்தால் அதற்கான வேலைகளை இன்றே தொடங்குங்கள். எந்த அளவுக்கு உங்களுக்கு வேலை தரப்படுகிறததோ அதனை முதலில் 100% முழுமையாக முடிக்க பழகுங்கள். சிலர் அலுவலகத்தின் கவனத்தைத் தன் மீது திருப்ப அதிகமாக வேலை செய்வார்கள். அவற்றில் சில 100% முழுமையாக முடிக்க இயலாமல் போகலாம். அதற்குப் பதில் உங்களிடம் ஒரு வேலையைக் கொடுத்தால் 100% முழுமையாக முடிக்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். அது தானாகவே அலுவலகத்தின் கவனத்தை உங்கள் மீது திருப்பும்.
வாய்ப்புகளை வீணடிக்காதீர்கள்!
உங்களது உயர் அதிகரியோ அல்லது உங்களைவிட ஒருபடி மேலே இருக்கும் நபரோ ஏதோ ஒரு காரணத்திற்காக அலுவலகத்தில் இல்லாமல் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டு, உங்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டால் அன்று உங்களைச் சிறப்பாக நிருபிக்க முயற்சி செய்யுங்கள். மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் சில சமயம் இதனை வேண்டுமென்றே ஒருவரின் தலைமை பண்பைச் சோதிக்க செய்து பார்க்கும் முயற்சியாக மேற்கொள்கின்றன. அதனால் உங்களை நம்பி வழங்கப்படும் வாய்ப்புகளை வீணடிக்காதீர்கள். இது உங்களுக்கான இன்னொரு நுழைவுத்தேர்வு போன்றது.
அப்டேட் ஆகுங்கள்!
உங்கள் துறையில் அப்டேட்டாக இருங்கள். அது தொடர்பான தொழில் நுட்பங்களையோ, புதிய கண்டுபிடிப்புகளையோ கற்றுக்கொள்ளுங்கள். சில சமயங்களில் நீங்கள் அப்டேட்டாக இருக்கிறீர்கள் என்பதற்காகவே உங்களுக்கு சில பதவிகள் உங்களைத் தேடி வரும். இன்னும் சொல்லப்போனால் உங்களது அப்ட்டேட்டுக்காகவே சில புதிய பதவிகள் உருவாக்கப்படலாம்.
வயது பிரச்னை அல்ல!
இது குறைந்த வயதில் உள்ளவர்களுக்கும், வயது அதிகமானவர்கள் என இருவருக்குமே பொருந்தும். குறைந்த வயதில் இருப்பவர் இவர் என்னை விட சீனியர் இவர் இருக்கும் போது எனக்கு எப்படி பதவி உயர்வு கிடைக்கும் என்ற எண்ணமும், இவர்கள் நான் உயர்பதவிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வார்களா என்ற தயக்கத்தோடும் காணப்படுவார்கள். இது தடையே அல்ல. உங்கள் திறமைக்கு தான் நிர்வாகம் மதிப்பளிக்கும் வயதுக்கு அல்ல. உங்களால் நிர்வாகத்திற்கு அதிக பயன் என்றால், கண்டிப்பாக நிர்வாகம் உங்களைத் தான் தேர்வு செய்யும். அதனால் உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள்.
இதே போல் வயது அதிகமானவர்களிடமும் ஒரு கேள்வி இருக்கிறது ''இன்றைய தொழில்நுட்பம் மட்டும் தான் எனக்கு புதிது. என் அனுபவம் இருக்கும் போது இந்தப் புதியவர்களை அதிகம் நிர்வாகம் நம்புகிறதே, நமக்கு வயதாகிவிட்டதோ என்ற எண்ணம் இருக்கலாம். ஆனால் உங்கள் கேள்வியிலேயே உங்களுக்கான பதில் உள்ளது. உங்களுக்கு தொழில்நுட்பம் மட்டும் தான் புதிது. அதிக அனுபவம் உள்ளது. அதனை கற்றுக்கொண்டால் நீங்கள் தான் கில்லி. அனுபவத்துக்கு நிர்வாகம் எப்போதுமே மதிப்பளிக்கும்.
பன்முகத்தன்மை!
இவர் ஒரே ஒரு வேலையைச் செய்பவர் இந்த வேலை தவிர இவருக்கு வேறு எதுவும் தெரியாது என்ற வரிகளில் சிக்கி கொள்ளாதீர்கள். உங்களால் எந்த ஒரு வேலையையும் அசால்ட்டாக செய்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கையை அலுவலகத்துக்கு ஏற்படுத்துங்கள். அதற்காக அனைத்துப் பணிகளையும் நீங்களே செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களுக்கு அனைத்து வேலைகளும் தெரியும் ஆட்கள் பற்றாக்குறையோ அல்லது திடீர் தேவையோ ஏற்பட்டால் இவரால் முடியும் என்கின்ற பன்முகத்தன்மை கொண்டவராக இருங்கள்.
அறிவு பரிமாற்றம்!
நீங்கள் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வது மட்டுமல்ல. புதிதாகக் கற்றுக்கொண்ட , உங்களுக்குத் தெரிந்த விஷயங்களைக் கற்றுக் கொடுப்பவராகவும் இருங்கள். உங்களுக்கு மட்டுமே தெரிந்த, அலுவலகத்துக்குப் பயன்படும் விஷயங்களை அதனைக் கற்க ஆர்வமுள்ளவருக்குக் கற்றுக்கொடுங்கள். இது உங்கள் தலைமைப் பண்பையும், உங்கள் மீதான கவனத்தையும் கூட்டும்.
அலுவலக அரசியலைச் சமாளியுங்கள்!
எல்லா அலுவலகத்திலுமே, சிலரால் தொடர்ந்து பிரச்னைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். சில சமயங்களில் உங்களுக்கு வரும் வாய்ப்பைத் தட்டி பறிப்பவராகக் கூட அவர் இருக்கலாம். அவர்களைச் சமாளிக்க பழகுங்கள். எப்படியும் உங்களுடன் திறமை குறைந்தவராக இருந்தால் அந்த இடத்தில் அவரால் நீண்ட காலம் நீடிக்க முடியாது. அவர்களிடம் பிரச்னையை வளர்க்காமல் அமைதியாக இருங்கள். அதுவே பல பிரச்னைகளை தவிர்க்கும். உங்களுக்கான வாய்ப்பு உங்களைத் தேடி தானாக வரும்.
சர்ச்சைகளில் சிக்காதீர்கள்!
அலுவகத்தில் உள்ள உயர் அதிகாரிகளை பற்றியோ அல்லது நிர்வாகம் பற்றிய கருத்துக்களையோ வெளிப்படையாக தெரிவித்தோ? அல்லது உடன் பணிபுரிவர்களுடன் தேவையற்ற விஷயங்களை பகிர்ந்தோ சர்ச்சைகளில் சிக்கி கொள்ளாதீர்கள். சர்ச்சைகளை நீண்ட நாட்களுக்கு அனைவரும் நியாபகம் வைத்திருப்பார்கள். அது உங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் சர்ச்சைகளை தவிர்க்கப் பாருங்கள்.
தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள்!
உங்கள் மீதான நியாயமான தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள். நிர்வாகம் உங்களிடம் எதிர்பார்ப்பதும் அது தான். ஆனால் தவறுகளை ஒப்புக்கொள்வதையே வழக்கமாக வைத்திருக்காதீர்கள். ஒருமுறை நீங்கள் செய்த தவறை எதிர்காலத்தில், நடந்திடவே கூடாது என்பதில் தீர்மானமாக இருங்கள். அதேபோல் நீங்கள் காரணமாக இல்லாத தவறுக்கு நீங்கள் குறை கூறப்பட்டால் அதற்கான உரிய விளக்கத்தை சரியான வார்த்தைகளால் கூறி புரிய வையுங்கள்.
மாற்றங்களுக்குத் தயராக இருங்கள்!
சில நேரங்களில் நீங்கள் முன்பு பணிபுரிந்த இடத்துக்கும் தற்போது பணிபுரியும் இடத்தில் கலாச்சாரம் மாறி இருக்கலாம். அல்லது அலுவலகமே பெரிய கலாச்சார மாற்றத்துக்கு உட்படலாம். இதற்கு உங்களைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் மாற்றத்துக்குத் தயாராக இல்லை என்றால் உங்களுக்கான தேவை நிறுவனத்துக்கு இருக்காது. அதேசமயம் நீங்கள் எளிதாக மாற்றிக்கொள்ளும் நபராக இருந்தால் உங்களுக்கான பதவி உயர்வு, கட்டாயம் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து ஒருபடி மேலே தான் இருக்கும்.
No comments:
Post a Comment