Tuesday, October 14, 2014

லக்னத்தை கண்டறிவது எப்படி ?

லக்னத்தை கண்டறிவது எப்படி ?

நீங்கள் உங்களுடைய ஜாதகத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அதில் ‘ல’ என்று குறிப்பிட்டு இருப்பதுதான் லக்னம் என்பதாகும். இந்த லக்னத்தை அடிப்படையாகக் கொண்டுதான் ஜாதகப் பலன்கள் கணிக்கப்படுகின்றன.
இந்த லக்னத்தைக் கண்டறிவது எப்படி என்று பார்ப்போம். சூரியனின் நகர்வை 360 பாகைகளாகப் பகுத்து ஒவ்வொரு ராசிக்கும் 30 பாகைகள் வீதம் 12 ராசிகளுக்கும் பிரித்துக் கொடுக்கப் பட்டிருக்கின்றன. ஒரு பாகை என்பது 4 நிமிடங்களைக் கொண்டதாகும். 30 பாகைகள் 120 நிமிடங்களாகும். ஆக, ஒரு ராசிக்கான லக்னம் என்பது சுமார் 2 மணி நேரம் ஆகும். ஒவ்வொரு லக்னத்துக்குமான நேரக் கணக்கீடு சற்றே கூடவோ குறையவோ செய்யலாம். ஒவ்வொரு லக்னத்துக்குமான கால அளவு பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஒரு மாதத்தில் சூரியன் எந்த ராசியில் அமைந்திருக்கிறதோ, அந்த ராசிதான் உதய லக்னமாக அமையும். உதாரணமாக, ஒருவர் சித்திரை மாதம் 1-ம் தேதி காலை 6 மணிக்குப்  பிறப்பதாக வைத்துக் கொள்வோம். சித்திரை மாதம் சூரியன் தன் உச்ச வீடாகிய மேஷத்தில் இருப்பார். எனவே, அந்த ஜாதகரின் ஜனன லக்னம் மேஷம் ஆகும். அதே நாளில் ஒருவர்் 8.30 மணிக்குப் பிறப்பதாக வைத்துக் கொள்வோம். அப்போது மேஷ லக்னம் முடிந்து ரிஷப லக்னம் தொடங்கி இருக்கும். எனவே, அந்த ஜாதகரின் ஜனன லக்னம் ரிஷப லக்னம் ஆகும்.

சித்திரை மாதத்தின் முதல் நாள் மேஷ லக்னத்துக்கு 30 பாகைகள் இருக்கும் என்பதால், ஒரு பாகைக்கு 4 நிமிடங்கள் வீதம் 120 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் மேஷ லக்னம் ஆகும். அடுத்த நாள் மேஷ லக்னத்துக்கு ஒரு பாகை குறைந்து விடுவதால், அடுத்த நாள் மேஷ லக்னம் 1 மணி 56 நிமிடங்கள் மட்டுமே இருக்கும்.

சித்திரை மாதம் 15-ம் தேதி மேஷ லக்னத்துக்கான பாகைகள் 15 மட்டுமே. எனவே அன்று மேஷ லக்னம் 1 மணி நேரம் மட்டுமே இருக்கும். சித்திரை மாதம் 1-ம் தேதி காலை 6 மணி முதல் 8 மணிக்குள் பிறப்பவரின் ஜன்ம லக்னம் மேஷம் என்றால், அதே ஜாதகர் சித்திரை மாதம் 15-ம் தேதி 6 மணியில் இருந்து 7 மணிக்குள் பிறந்தால்தான் அவருடைய ஜன்ம லக்னம் மேஷமாக இருக்கும். 7 மணிக்கு மேல் ஆகிவிட்டால், அவருடைய ஜன்ம லக்னம் ரிஷபமாக இருக்கும். இப்படி ஒரு நாளில், சுமாராக  ஒவ்வொரு 2 மணிநேரத்துக்கும் லக்னம் மாறிக் கொண்டே இருக்கும்.

வைகாசி மாதம் சூரியன் ரிஷப ராசியில் இருப்பதால் உதய லக்னம் ரிஷபம் ஆகும். இப்படியே ஆனி மாதம் மிதுனம்; ஆடி மாதம் கடகம்; ஆவணி மாதம் சிம்மம்; புரட்டாசி மாதம் கன்னி; ஐப்பசி மாதம் துலாம்; கார்த்திகை மாதம் விருச்சிகம்; மார்கழி மாதம் தனுசு; தை மாதம் மகரம்; மாசி மாதம் கும்பம்; பங்குனி மாதம் மீனம் என்று உதய கால லக்னமாக அமையும்.

லக்னத்தைக் கொண்டுதான் பன்னிரண்டு பாவங்களின் பலாபலன்களைக் கணிக்க வேண்டும் என்பதால், லக்னத்தைத் துல்லியமாகக் கண்டறிவது அவசியம்

No comments:

Post a Comment