Monday, July 18, 2016

சந்தோசம் பெற சிந்தனை துளிகள்

01.வேலை செய்யச் செய்ய உங்கள் நடத்தை மேம்படும். சுய கட்டுப்பாடு, சுறுசுறுப்பு, மன உறுதி, திருப்தி போன்ற நூற்றுக்கணக்கான நல்ல குணங்கள் ஏற்படும்.

02. வாழ்வின் பெருமைக்கும், இனிமைக்கும் காரணமான மாபெரும் எண்ணங்களை மாபெரும் மனங்கள் இந்தப் புவியில் விட்டுச் சென்றுள்ளன. அவற்றை தேடிப் பெறுவது நமது கடமை. அதைச் செய்யாவிட்டால் இழந்துவிடுவோம்.

03. நீங்கள் நூல்களைப் படிக்கும்போது சில நல்ல வார்த்தைகள் உங்களைப் பாதிக்கும், அவை உங்களுக்காகவே எழுதப்பட்டது போலிருக்கும். அவற்றை மறவாது இதயச் சுவரில் பதித்து வையுங்கள்.

04. நமக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் எப்படி வாழ வேண்டும், எப்படி சாக வேண்டும் என்பதை கற்றுத்தந்துவிட்டே இறந்துள்ளார்கள், அவற்றை அறிந்தும் கடைப்பிடிக்க மறுப்பதே சோகமான விடயம்.

05. சிறந்த சிந்தனைகளுக்கு ஒரு காலமும் வயதாகாது. சொல்லப்பட்ட காலத்தில் எப்படி புதுமையாக இருந்ததோ அப்படியே இன்றும் வீரியத்துடன் இருக்கும்.

06. நமக்கு முன்னர் வாழ்ந்த சரித்திரகால புருஷர்களை மனதின் முன் நிறுத்தி வாழ்ந்தால் அவர்களுடைய சக்தி எங்களை பாதுகாக்கும்.

07. வாழ்வின் அர்த்தமும் தேடலும் சந்தோஷம்தான், மனித வாழ்வின் நோக்கமும் இறுதி இலட்சியமும் அதுதான்.

08. திருப்தியான மனமே சந்தோஷத்தின் அடிப்படை, அந்த அடிப்படை உருவாவது விருப்பமாக செய்யும் வேலையில் இருந்துதான்.

09. வேலையைச் சார்ந்துதான் சந்தோஷம் இருக்கிறது என்பதை ஒரு சிலர்தான் 
உணர்ந்திருக்கிறார்கள். சந்தோஷம் உங்களை விஞ்ச வேண்டும் நீங்கள் அதை விஞ்சக்கூடாது.

10. ஒவ்வொரு நாள் காலையிலும் புன்னகையுடன் விழித்தெழுந்து, ஒவ்வொரு நாளும் தரப்போகும் நல்ல வாய்ப்புக்களை வரவேருங்கள். காலை எழுந்ததும் உங்களுக்கு செய்வதற்கு ஒரு வேலையைத் தந்த இறைவனுக்கு நன்றி கூறுங்கள்.

11. சிறந்த சிந்தனைகளால் உங்கள் மனதை செழுமையாக்குங்கள். ஒவ்வொரு தலைமுறையும் பழமை தந்த புதையலை சந்தோமாக அனுபவிக்கிறது. பின்னர் புதிய சொற்களை அந்தச் சொற்களில் சேர்த்து பெரியதாக்கி எதிர்கால தலைமுறைக்கு வழங்குகிறது.

12. நம்மிடம் இருப்பதில் திருப்தியடைவதுதான் உன்னதமான மிகவும் பாதுகாப்பான செயலாகும். நீங்கள் எல்லாவற்றிலும் முதலிடம் பிடிக்க இயலாது என்பதை உணர்வீர்களாக.

13. நிகழ்காலத்தை சந்தோஷமாகக் கழிக்க வேண்டும். கடவுளுக்கும், மனிதனுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை செய்வதுதான் சந்தோஷம்.

14. எப்போதும் நம்மிடம் கவனம் இருக்க வேண்டும், படபடப்பு இருக்கக் கூடாது. அளவற்ற செல்வம் நம்மிடம் இருக்கிறதோ இல்லையோ சமமான மன நிலையுடன் வாழ வேண்டும்.

15. நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்களோ அதே நிலையில் திருப்தியடையக் கற்றுக் கொள்ளுங்கள்.

16. நாம் எங்கும் வாழலாம் ஆனால் நாம் தேர்ந்தெடுத்த சூழல்தான் நமக்கு வாழ்வில் இன்பம் தரும்.

17. நமது நிலை இந்தப் பிரபஞ்சத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடாது என்பதை புரிந்து, தனது சொந்த சக்தியை அறிந்து அமைதியாக வாழப் பழக வேண்டும்.

18. ஒரு மனிதனோ அல்லது ஓர் இனமோ சந்தோஷமின்றி இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் அவர்களுடைய சொந்தத் தவறுதான் என்று உணர வேண்டும். காரணம் கடவுள் எல்லோரையும் சந்தோஷமாகத்தான் படைத்திருக்கிறார்.

19. நீங்கள் யார்.. என்னவாக இருக்கிறீர்கள் என்பதில் சந்தோஷம் இல்லை, இப்போது என்ன செய்கிறீர்கள் என்பதில்தான் சந்தோஷம் இருக்கிறது.

20. நீங்கள் உங்களுக்காக மட்டும் சுயநலத்துடன் வாழ்ந்தால் ஒரு கட்டத்தில் களைப்பு ஏற்படும், ஆகவே சக மனிதர்களுக்காகவும் அர்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்.

21. காலம் கடப்பதற்கு முன்னதாக உங்கள் சக்தியை இந்தச் சமுதாயத்திற்காகப் பயன்படுத்துங்கள்.

22. அறிவோடு அன்பைக் கலந்து, நகைச்சுவை உணர்வோடு, எதிர்கால நம்பிக்கையோடு ஒரு வார்த்தை சொன்னால் அதைவிட பெரியது வேறெதுவும் இருக்க முடியாது.

23. பெறுவதிலோ வைத்திருப்பதிலோ அல்ல தருவதில்தான் சந்தோஷமே இருக்கிறது.

24. சந்தோஷம் என்பது நறுமணம் போன்றது. அது உங்களிடம் இல்லாவிட்டால் உங்களால் மற்றவருக்கு ஒரு துளி தெளிக்க இயலாது.

25. தனக்குத்தானே திருப்தியாக இருக்க முடியாத ஒரு மனிதனால் சந்தோஷமாக இருக்க முடியாது, சந்தோஷத்தை மற்றவர்களுக்கு வழங்கவும் முடியாது.

No comments:

Post a Comment