Monday, July 18, 2016

க்ரியேட்டிவிட்டியை வளர்க்கும் எட்டு படிகள்!

க்ரியேட்டிவிட்டி என்பது நம் அனைவருக்கும் இயல்பாய் வருவதில்லை. க்ரியேட்டிவிட்டி என்பது புதுமையாக ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைவதாக இருந்தாலும், கூடவே கொஞ்சம் பயத்தையும் கொண்டுவரவே செய்கிறது.  ஏனென்றால், சிறுவயதிலிருந்தே நாம் எந்தவகையில் பழக்கப்படுத்தப்பட்டு இருக்கி்றோம் என்று கொஞ்சம் யோசியுங் கள். 'தம்பி தெரிந்த விஷயத்தைச் செய். சும்மா புதுசா எதையாவது செய்கி்றேன் என்று சொதப்பிவிடாதே. நாலுபேர் போற பாதையிலே போப்பா. தனிவழியெல்லாம் வேண்டாம்' என்றுதானே பழக்கப்படுத்தி வருகிறோம்.

வளரும் பருவத்தில்  இப்படி பழக்கப் படுத்திவிட்டு திடீரென ஒருநாள் க்ரியேட்டிவ்வாக இரு. எல்லோரும் போகும் பாதையில் போகாதே என்று சொன்னால் என்னவாகும்?

என்னடா இது. இவ்வளவுநாள் கூட்டம் போகும் பாதையில் போகச் சொன்னார்கள். இப்போது திடீரென சிங்கிளாகப் போகச் சொல்கிறார்கள் என்ற மலைப்பும் திகைப்பும் பயமும் தானே மிஞ்சும் என்று ஆரம்பத்திலேயே எகத்தாளம் பேசுகி்றார் 'ஜிக் ஜாக் – தி சர்ப்ரைஸிங் பாத் டு கிரேட்டர் க்ரியேட்டிவிட்டி' என்ற புத்தகத்தின் ஆசிரியர் கீத் சாயர்.

தனி மனித வாழ்வில், என் வேலை போரடிக்கிறது, என்ன பண்றதுன்னே புரியவில்லை என்கிறீர்களா? பிள்ளைகள், மனைவி போன்றவர்களுடன் சுமூகமான நிலை இல்லை என்கிறீர்களா? ஏன், நான் சம்பாதிப்பதைவிட அதிகமாகச் செலவழிக்கிறேன் என்கிறீர்களா? வேலை பார்க்கும் இடத்தில் அடுத்த விளம்பரத்துக்கான ஐடியா வரவே மாட்டேங்கிறது என்கிறீர்களா? என்கூட வேலை பார்க்கிற குரூப்பில் ஒன்றும் உருப்படியாய் நடப்பதேயில்லை; ஒருத்தனை ஒருத்தன் புரிஞ்சுக்கவே மாட்டேனென்கிறான் என்று புலம்புகிறீர்களா? உங்களுக்கெல்லாம் உதவக்கூடிய அளவில் எழுதப்பட்டுள்ளதுதான் இந்தப் புத்தகம்.

நம்மில் யாருமே இதெல்லாம் நமக்கு வருமா என்று க்ரியேட்டிவிட்டி குறித்து பயப்படத் தேவையில்லை. நாம் எல்லோருமே அதிர்ஷ்டக் காரர்கள். ஏனென்றால், இறைவன் அனைவருக்குமே இயல்பாக மூளையில் க்ரியேட்டிவிட்டிக்குத் தேவையான விஷயங்களை வைத்தே படைக்கிறான். சிலரால் அதைத் திட்டமிட்டு வெளிக்கொணர முடிகிறது. விரும்பினால் எல்லோராலும் அதை வெளிக்கொணர முடியும் என்றே சொல்லலாம்.

ஆனால், செங்கல் செங்கலாய் நீங்கள்தான் அந்த க்ரியேட்டிவ் கட்டடத்தை முயற்சி செய்து கட்டி முடிக்க வேண்டும் என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் கீத். இந்தப் பணிக்கான பயணத்தை எங்கே தொடங்குவது, எப்படி வழிநடத்துவது என்பதைச் சொல்லும் புத்தகம்தான் இது.

நீங்கள் நினைப்பதுபோல க்ரியேட்டிவிட்டி என்பது ஒரு திடீர் மின்னலைப்போல வந்து ஒளியைத் தருவதில்லை. சின்னச் சின்ன அடிகள், மிகச் சிறிய நுண்ணறிவுகள், கொஞ்சம் கொஞ்சமாய் நம்முள் நாம் செய்துகொள்ளும் மாறுதல்கள் போன்றவைதான் க்ரியேட்டிவிட்டிக்கு ஆணிவேராய் அமைகின்றன. இதைத்தான் ஆசிரியர் ஜிக் ஜாக் என்று சொல்கிறார். இந்த ஜிக் ஜாக்குகளைத் தொடந்து பிறழாமல் கடைப்பிடிப்பவர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாய்ப் புதுப்புது ஐடியாக்கள் தோன்றும். சில சமயம் இந்த ஐடியாக்கள் தேவையான நேரத்தில் கரெக்ட்டாக வரவும் ஆரம்பித்துவிடும்.

க்ரியேட்டிவிட்டி என்ன பெரிய புடலங்காய்! என் வேலை ஒரு ரொட்டீனான வேலை. குழந்தைகளுக்கு புராஜெக்ட் செய்யும்போது கொஞ்சம் தேவைப்படுகிறது. இல்லை, ஆபீஸில் கடிஜோக் சொல்ல ரெடியாய் இருக்கும் ஒரு கூட்டத்தை மிரளவைக்க மட்டுமே எனக்குத் தேவைப்படுகிறது என்று சொல்லாதீர்கள்.

க்ரியேட்டிவிட்டி என்பது உங்களை வேலையில் சிறக்க வைக்கும். வெற்றிகரமான கேரியரை உருவாக்கும். வேலையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் வெற்றிபெற வைக்கும். உங்கள் பெர்சனா லிட்டி, ஸ்டைல், உலகத்தை நீங்கள் பார்க்கும் பார்வை, உங்களை உலகம் பார்க்கும் பார்வை என எல்லாவற்றையுமே மாற்றவைக்கும். குழந்தைகளை ஒரு ரொட்டீன் வாழ்க்கை வாழவைக்காமலும், கடுஞ்சொற்களைச் சொல்லாம லும், ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கினால் புது மொபைல் என்பது போன்ற லஞ்ச-லாவண்யத்தை உபயோகிக்காமல் வளர்க்க உதவும். நீங்கள் கற்றுக்கொள்வதை வெறுமனே மனதில் இருத்துதல் என்பது மட்டுமல்லாமல் அதை லாவகமாய் உபயோகப்படுத்தவும் உதவும். உங்களைத் தொடர்ந்து  நச்சரிக்கும் பிரச்னைகளுக்கு சூப்பரான தீர்வுகளைத் தரும். எப்போதுமே நல்ல மற்றும் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க வைக்கும். நல்ல சுவையான மற்றும் நாள்படத் தொடரக்கூடிய நட்புகளை வளர்க்கும். உங்களைச் சுற்றியிருக்கும் உலகத்தில் ஒரு நிஜமான மாற்றத்தைக் கொண்டு வர உதவும் என க்ரியேட்டிவிட்டி யின் பலனையும் பட்டியலிட்டுள் ளார் ஆசிரியர்.

எட்டு படி நிலைகளைச் சொல்லியுள்ள ஆசிரியர், அதை விரிவாக விளக்கவும் செய்துள்ளார். முதலாவதாக, கேளுங்கள் என்கிறார். பிரச்னை வருகிறதே என நினைக்காதீர்கள். பிரச்னை இருக்கிறதா? இல்லை என்றால், ஏன் வரவில்லை என எதிர்பார்க்க ஆரம்பியுங்கள். பிரச்னைகளைத் தேடிப் பிடிப்பதால் புதிய ஐடியாக்களுக்குப் பஞ்சமே இருக்காது. இப்படிப்பட்ட மனநிலையில் இருப்ப தால் எதிரே வருவதையெல்லாம் அசால்ட்டாய் சமாளித்துவிடுவீர்கள் என்கிறார்.

இரண்டாவதாக, க்ரியேட்டிவ்வாக வாழ நீங்கள் நிறையப் படிக்கவும்; கற்றுக்கொள்ளவும்; தெளிவுபடவும் வேண்டும். வகுப்புகள் மட்டும் என்றில்லாமல் மென்டர்கள், நிபுணர்கள், புத்தகங்கள், பத்திரிகைகள், நாளிதழ்கள், சினிமா போன்றவற்றில் இருந்தெல்லாம் நிறையவே கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.

மூன்றாவதாக, உங்கள் பார்வையை அனைத்திலும் செலுத் துங்கள். உங்களுக்குப் பிடித்ததை மட்டுமே பார்க்காமல் அனைத்திலும் உங்கள் பார்வையைப் பதியுங்கள். எல்லோரும் இதுதானே என நினைத்து அசிரத்தையாய் பார்க்கும் விஷயங்களையும் நீங்கள் உன்னிப்பாய்ப் பாருங்கள். புதிய அனுபவங்களைத் தரும் விஷயங்களைத் தேடி ஓடுங்கள். எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் புதிய இடம், ஊர், மனிதர், சூழல், தகவல் என எல்லாவற்றையும் தேடிக்கொண்டே இருங்கள்.

நான்காவதாக, கொஞ்சம் நிறையவே விளையாடுங்கள். ஏனென்றால், சிறுபிள்ளையைப் போன்ற விளையாட்டு என்பது உங்கள் மூளையை இலகுவாக்கி ஆழ்மனத்தைக் குதூகலிக்கச்செய்து க்ரியேட்டிவிட்டியை ஊக்குவிப்பதாய் இருக்கும்.

ஐந்தாவதாக, சிந்தனைச் செய்யுங்கள் என்கிறார். சிந்தனை என்பது மூளைக்குப் பயிற்சி. சிந்திப்பதால் ஆயிரக்கணக்கான ஐடியாக்கள் உங்கள் மூளையில் தோன்றும். அவற்றில் ஒரு சிலவே வெற்றி பெறுவதாய் இருக்கும். ஒரே ஒரு ஐடியா தோன்றி அதுவே வெற்றி பெறுவதாய் அமைவதேயில்லை என்பதாலேயே பல ஐடியாக்கள் தேவைப்படுகிறது.

ஆறாவதாக, தோன்றும் ஐடியாக்களை ஒன்றுடன் ஒன்று இணைத்துப் பாருங்கள். சில சமயம் ஜோடி சேரவே சேராது என்று நினைத்த பல ஐடியாக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து சூப்பராய்ச் செயல்பட்டிருக்கின்றன.

ஏழாவதாக, தேர்ந்தெடுக்கப் பழகிக் கொள்ளுங்கள். ஏனென்றால், க்ரியேட்டிவிட்டி என்பதே கொண்டா, கொண்டா என்று பல்வேறு ஐடியாக்களையும் பெற்றுக்கொண்டு, பின்னர் அதனை க்ரிட்டிக்கலாக ஆராய்ந்து இது தேறாது, இது லாயக்குப்படாது என்று திறம்படக் கழித்துக் கட்டுவதில்தான் இருக்கிறது.

எட்டாவதாக, உருவாக்கிப் பழகுங்கள். ஐடியாவை ஐடியாவாக வைத்துக்கொள்வது மட்டுமே போதாது. ஐடியாவைச் செயலாக்க வேண்டும். செயலாக்க முயலும்போதுதான் ஐடியாக்கள் இன்னமும் கூர்மைபடுத்தப்பட்டு,  பொலிவு பெறும். ஐடியா என்பது ஒரு டிராப்ட் தான். அதைத் தொழிலுக்கு ஏற்றாற்போல் வரைபடமாக வரைந்து, அதை நடைமுறைக்குக் கொண்டுவந்தால் மட்டுமே க்ரியேட்டிவிட்டி என்ற விஷயத்துக்கு அர்த்தம் கிடைக்கும்.

மேலே சொன்ன, எட்டு படி நிலைகளையும் பல உதாரணங்களுடன் சொல்லியிருக்கும் ஆசிரியர், க்ரியேட்டிவிட்டி என்ற விஷயத்தில் நாம் தவிர்க்க வேண்டிய இரண்டு பெரிய தவறுகளையும் நச்செனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒன்று, சிலசமயங்களில் அல்லது தேவையான சமயங்களில் மட்டுமே க்ரியேட்டிவ்வாக இருந்தால் போதுமானது என்று நாம் நினைத்துக்கொள்வது. இரண்டாவது, கையில் இருக்கும் பிரச்னைக்கு ஒரே ஒரு சரியான தீர்வுதான் இருக்கிறது என்று நினைத்துக்கொள்வது.

சின்னச் சின்ன பொறிகளைக் கண்டறிந்து அந்த வெளிச்சத்தில் மேலே சொன்ன எட்டு படிகளில் ஏறிச்சென்றால் க்ரியேட்டிவிட்டி தரும் வெற்றிக்கனியைச் சுவைக்கலாம் என்கிறார் ஆசிரியர். முதலாளி, தொழிலாளி, மேனேஜர், உதவியாளார் என்ற பாகுபாடு ஏதுமில்லாமல் அனைவருமே படிக்கவேண்டிய புத்தகம் இது எனலாம்.

No comments:

Post a Comment