Friday, June 7, 2013

புத்திசாலிகள்

காட்டில் ஒரு சிங்கம்,
ஒரு ஆட்டை அழைத்தது.

''என் வாய் நாறுகிறதா என்று பார்த்துச்சொல்,''என்று கேட்டது.

ஆடு முகர்ந்து பார்த்துவிட்டு, 'ஆமாம், நாறுகிறது.'என்று சொல்லிற்று.

உடனே சிங்கம்,''முட்டாளே, உனக்கு எவ்வளவு திமிர்,''என்று கூறி அதன் மீது பாய்ந்து குதறியது.

அடுத்து சிங்கம் ஒரு ஓநாயை அழைத்து
அதனுடைய கருத்தைக் கேட்டது.

ஓநாய் முகர்ந்து பார்த்துவிட்டு,
''கொஞ்சம் கூட நாறவில்லை,''என்றது.

சிங்கம்,''மூடனே, பொய்யா சொல்கிறாய்?''என்று கூறி அடித்துக் கொன்றது.

பின்னர் ஒரு நரியை அழைத்து அதே கேள்வியைக் கேட்டது.

நரி சொன்னது,
''நாலு நாளா கடுமையான ஜலதோஷம்.
அதனால் எனக்கு ஒரு வாசனையும் தெரியவில்லை.''

சிங்கம் நரியை விட்டுவிட்டது.

புத்திசாலிகள் ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்க மாட்டார்கள். முக்கியமாக முட்டாள்களிடம்.

சின்ன சின்ன ஆசை


* மெழுகுவர்த்தி தான் உருகி அனைவருக்கும் வெளிச்சத்தை கொடுத்து, கரைந்து காணாமல் போகிறது.

அதுபோல் உருக ஆசை!!

* ஒரு கப்பல் மூழ்க போகிறது என்றால் அதன் கேப்டன் அதில் உள்ள எல்லாரையும் தப்பிக்க வைக்க நினைப்பான்.

அது முடியாத போது 'அந்த கப்பலோடு தானும் மூழ்கி போவான்'.

'பயணிகளை காப்பாற்ற முடியலையே', 'கப்பலை காப்பாற்ற முடியலையே' என்று தன்னை தப்பிக்க நினைக்காது மூழ்கும்

கேப்டனைப் போல் மூழ்க ஆசை!!

* ஒரு விமானம் பறக்கிறது அதில் மொத்தம் 50 பேர் பயணிக்கிறார்கள்! அதில் மொத்தம் 49 பாராசூட்டுகள்தான் உள்ளன.

விமானம் பழுது காரணமாக வெடிக்க போகிறது.

5-ந்தாவது நபராகி பாராசூட்டை மற்றவர்களுக்கு கொடுக்க ஆசை!!

* ஒரு படகில் சிலபேர் பயணிக்கிறார்கள்! படகில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டு அதில் உள்ள பாரத்தை குறைக்க வேண்டும்!

அந்த படகில் இருந்து ஒருவர் கடலில் குதித்து விட்டால் மற்றவர்கள் பிழைத்து கொள்ளலாம்!

அந்த ஒருவனாக இருக்க கொள்ளை ஆசை.

இந்த சின்ன சின்ன ஆசைகள் சொல்லும் கருத்து என்னவென்றால்..!

ஒவ்வொரு சுதந்திரத்திற்க்கும்,

விடியலுக்கும்,

மக்கள் எழுச்சிகளுக்கும்,

பிண்ணியில் சிலர் செய்த ஒப்பற்ற தியாகங்கள் அடங்கி நிற்கின்றன.

நாம் இந்த பூமியில் இருப்பதின் லட்சியம் நாம் வாழ மட்டும் இல்லை.

மற்றவர்கள் வாழ நம்மால் ஏதாவது செய்யவேண்டும்.

எல்லோரும்,

இந்த பூமியில் பிறக்கிறார்கள்,

உண்கிறார்கள்,

உடுத்துகிறார்கள்,

திருமணம் செய்து கொள்கிறார்கள்,

குழந்தைகள் பெற்று கொள்கிறார்கள்,

எல்லாம் தனக்காக மட்டுமே.

இதில் இருந்து நாம் எப்படி வேறுபட்டு நிற்கிறோம் என்பதே இங்கு கேள்வி.

ஒரு சிலரே தங்களை உருக்கி மற்றவர்களுக்கு வெளிச்சமாக இருக்கும் மெழுகுவர்த்தியாக வாழ்ந்தார்கள்.

அதுவே இன்று உலகில் நாம் காணும் நல்ல விஷயங்களும், எஞ்சி நிற்கும் மனித நேயம்.

இன்று நாம் அனுபவிப்பது எல்லாம் இவர்கள் தங்களை உருக்கி நமக்கு போட்ட பிச்சைகளே.

வெறும் வெளிச்சத்தை நுகரும் ஒரு சராசரி மனிதனாக நாம் வாழாமல்,

நாமும் பிறருக்காக ஓளி வீசுவோம்.

பிறரின் இன்ப,துன்பங்களில் பங்கு ஏற்போம்..

புத்திசாலித்தனம் மிளிரட்டும்

மனிதனை விலங்கிடமிருந்து பிரித்து வைப்பது பகுத்தறிவு.

பிறப்பில் எல்லாருக்கும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக புத்திசாலித்தனம் இருந்தும், அதை எந்த அளவுக்கு பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதை வைத்து, சிலர் உன்னத நிலையை அடைவதையும், பலர், சராசரி நிலையில் இருப்பதையும் காண்கிறோம்.

புத்திசாலித்தனம் வளர, கல்வி பெரிதும் உதவும்.

ஆனால், சுயமுயற்சியிலும் புத்திசாலித்தனத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

நிறைய பட்டங்கள் பெற்ற பலர், பிரகாசிக்க முடியாமல் போய் விடுகின்றனர்.

அதே சமயம்,

வெறும் அடிப்படைக் கல்வியறிவு பெற்ற சிலர், அவர்கள் தேர்ந்தெடுத்த துறையில் உச்ச நிலையை அடைகின்றனர்.

அதற்கு முக்கிய காரணம்,

அவர்களுடைய புத்திசாலித்தனம், புத்திக் கூர்மை மற்றும் மதிநுட்பம்.

புத்திசாலித்தனம் படிப்பறிவு சார்ந்தது மட்டுமல்ல,

புத்திசாலித்தனத்தின் பல பரிமாணங்கள் இதோ:

தன் பலம் மற்றும் பலவீனத்தை உணர்ந்து, பொருத்தமான துறையைத் தேர்ந்தெடுப்பது,

முன்னுக்கு வர உதவும் சரியான சந்தர்ப்பங்களை நழுவ விடாமல் பயன்படுத்திக் கொள்வது,

தனக்குச் சாதகமானவர்களையும், பாதகமானவர்களையும் உடனுக்குடன் அடையாளம் கண்டு சேர்ப்பது,

அல்லது விலக்குவது,

மற்றும்,

சரியான நேரத்தில் முடிவு எடுப்பது.

முன்னுக்கு வருவதற்கு, கடின உழைப்பு மிக அவசியம்.

ஆனால்,

புத்திசாலித்தனமில்லாத உழைப்பு, நம்மைப் பெருமளவு உயர்த்தாது.

செக்கு மாட்டு வாழ்க்கை நம்மை முன்னேற விடாது என உணர வேண்டும்.

ஒருவருடைய புத்திசாலித்தனம், உயரத்திலோ, தோல் நிறத்திலோ மற்றும் நடை, உடை, பாவனையிலோ இல்லை.

ஆர்வத்துடன் முயற்சியெடுத்தால், எந்தப் பின்னணியிலிருந்து வந்தவரும், புத்திசாலித்தனத்தை வளர்த்துக் கொள்ளலாம் என்பதை பலர் நிரூபித்திருக்கின்றனர்.

நாம் செய்யும் வேலையில் முழு ஈடுபாடும், நம்முடைய இலக்கை அடைவதில் தீவிரமும் இருக்கும்போது, புத்திசாலித்தனமான யோசனைகள் தாமாகவே வரும்.

புத்திசாலித்தனம் எவருக்கும் ஒரே நாளில் வந்து விடுவதில்லை.

நாம் செய்யும் எந்த வேலையையும், மிகச் சிறப்பாகவும், குறைந்த நேரத்திலும் செய்து முடிக்க வேண்டும் என்ற உந்துதலோடு ஒரு காரியத்தில் இறங்கும் போது, புத்திசாலித்தனம் தானாக வரும்.

எதையும் உற்று நோக்குதல்,

கருத்தூன்றிப் படித்தல்,

ஆழ்ந்து சிந்தித்து செயல்படுதல்,

ஒரு நிகழ்வைக் காரண காரியங்களோடு தொடர்புபடுத்தி புரிந்து கொள்ளுதல்,

மூலமாக,

புத்திசாலித்தனத்தை வளர்த்துக் கொள்ளலாம்..

புத்திசாலித்தனம் வளர்வதற்கு, உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் அவசியம்.,

நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை உன்னிப்பாகக் கவனித்து புரிந்து கொள்ளும் பழக்கம்,

நிதானம் மற்றும் உடலுக்குத் தேவையான அளவுக்கு ஓய்வு,

புத்திசாலித்தனம் வளர்வதற்கு வழி வகுக்கும்.

செஸ் போன்ற மூளைக்குப் பயிற்சியளிக்கும் விளையாட்டுகள், நம் புத்திக் கூர்மையை மேலும் அதிகரிக்கும்.

திறமையும், உழைப்பும் நிறைய இருந்தும், சிலர் சாதிக்க முடியாமல் போவதற்கு முக்கியக் காரணம், அவையிரண்டையும் எப்படி பயன்படுத்தி முன்னுக்கு வருவதென்ற புத்திசாலித்தனம் இல்லாததுதான்.

இவர்கள் வரட்டு கவுரவத்தால் வந்த வாய்ப்பை நழுவ விடுகின்றனர்.

தங்களுக்குத் தேவையான வாடிக்கையாளர்கள் இல்லாத இடத்தில் கடையைத் திறப்பர்.

வாய்ப்பு ஒரு வாசலைத் தட்டிக் கொண்டிருக்கும்போது, பூட்டியிருக்கும் மறு வாசலைத் திறக்க பிரயத்தனப் பட்டுக் கொண்டிருப்பர்.

மாடு மாதிரி உழைக்க வேண்டும் என்கிற எண்ணத்தை விட்டு விட்டு,

ஆறறிவு படைத்த புத்திசாலி மனிதனாக செயல்பட முயல வேண்டும்.

விலங்குகளிலும் புத்திசாலி விலங்குகள் தங்களை எளிதில் காத்துக் கொள்ளும்.

மர வேலை செய்யும் தச்சர் அவ்வப்போது தன் வேலையை நிறுத்தி விட்டு, உளியைக் கூர்மையாக்குவார்.

அதுபோல, நாமும் அவ்வப்போது நேரம் ஒதுக்கி மூளையைக் கூர்மையாக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

செக்கு மாட்டுச் சிந்தனையோடு, சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக இல்லாமல், நம்முடைய பிரச்னைகளுக்குப் புதிய கோணத்தில் தீர்வு காண முயல்வோம்.

நாம் தூங்கும் நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில் நம் மூளை சிந்தித்த வண்ணம் இருக்கட்டும்.

அந்த சிந்தனைகள், ஆரோக்கியமான சிந்தனைகளாக இருக்கட்டும்.

நம்முடைய வாழ்க்கைத் தரத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் சிந்தனைகளாக இருக்கட்டும்.

கண்ணிருப்பவர்கள் எல்லாருமே பார்ப்பர்.

ஆனால்,

சிலர் மட்டும்தான் உன்னிப்பாகக் கவனிப்பர்.

காது இருப்பவர்கள் எல்லாருமே கேட்பர்.

ஆனால்,

சிலர் மட்டும் தான் உற்றுக் கேட்பர். அந்த சிலர் தான் சாதனை படைப்பர்.

அந்தச் சிலரில் நாமும் ஏன் இருக்கக் கூடாது?

நம் புத்திசாலித்தனம் நாளுக்கு நாள் மிளிரட்டும்.

நம் வெற்றி இலக்கை விரைவில் அடைவோம்..

மனிதர்களது தகுதி அறிய

ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்குப் பார்வை கிடையாது.

அவ்வழியாக வந்த ஒருவன் " ஏ கிழவா , இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா? என்று அதிகாரத் தோரணையில் கேட்டான். அதற்குத் துறவி , " இதற்கு முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை." என்றார்.

சிறிது நேரத்தில் மற்றொருவன் அங்கே வந்து, " ஐயா, இதற்கு முன் யாராவது இப்பக்கமாகச் சென்றார்களா? என்று கேட்டான்.அதற்கு அத்துறவி, சற்று முன் இந்த வழியாகச் சென்ற ஒருவன் இதே கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றான்." என்றார்.

மேலும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் அங்கு வந்தான். அவன் "துறவியாரே, வணங்குகிறேன். இதற்கு முன்பு இந்த வழியாக யாராவது செல்லும் சத்தம் தங்களுக்குக் கேட்டதா? தயவு செய்து கூறுங்கள்" என்று பணிவோடு கூறினான்.

உடனே துறவி , " மன்னர் பெருமானே, வணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான். அடுத்து ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட இதே கேள்வியைத்தான் கேட்டனர்." என்றார்.

மிகவும் வியந்த அரசன், " துறவியாரே, தங்களுக்குப் பார்வை இல்லை. அப்படி இருந்தும் நான் அரசன் என்றும், முன்னால் சென்றவர்கள் வீரன், அமைச்சர் என்றும் எப்படி அறிந்தீர்கள்? என்று கேட்டான்.

"அரசே, இதைக் கண்டறிய பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே அவர் யார், அவர் தகுதி என்ன என்பதை எல்லாம் அறிய முடியும்."

முதலில் வந்தவர் சிறிதும் மரியாதையின்றி கேள்வி கேட்டார். அடுத்து வந்தவர் பேச்சில் அதிகாரம் தொனித்தது. ஆனால் நீங்களோ மிகவும் பணிவாகப் பேசுறீர்கள்." என்று விளக்கினார் அந்த பார்வையற்ற துறவி.

Tuesday, June 4, 2013

முயற்சித்து முன்னுக்கு வருக!

* ஒற்றுமைக்கு வலிமை அதிகம். பெரிய கூட்டத்தில் சேர்ந்திருக்கும் ஒவ்வொரு மனிதனும் புதிய வலிமையும், நன்மையும் பெறுவான். 
* திருமணம் செய்து கொண்ட ஆணுக்குப் பெண் அடிமையல்ல. மனைவி என்பவள் உயிர்த்துணை. வாழ்க்கைக்கு ஊன்றுகோல். கணவனின் உயிரிலே ஒரு பகுதி.
* செல்வம் சிலரின் வசமாகி விட்டதால் தான், பலரும் ஏழைகளாக இருக்கும்படி ஆகி விட்டது. இயன்றவரை பலரிடமும் பொருள் இருக்கும் படி செய்யும் வியாபாரமே சிறந்தது.
* திருமண பந்தத்தை விலக்கிக் கொள்வதில் அவசரப்படுவது கூடாது. பொறுமையாக இருந்து மணவாழ்வைப் பாதுகாப்பதே நாகரிகம்.
* மனம் துன்பத்தில் நழுவி விழத் தொடங்கும்போது, தைரியம் என்னும் சாதனத்தால் தாங்கிப் பிடித்து நிறுத்தப் பழகுவதே சரியான யோகப் பயிற்சி.
* பிறர் உழைப்பின் பயனைத் திருடி வாழ முற்படுவது கூடாது. உங்கள் சொந்த முயற்சியில் முன்னுக்கு வருவதில் தான் பெருமை இருக்கிறது.
- பாரதியார்

ஊக்கத்துடன் முன்னேறுங்கள்

* நம்மிடத்தில் நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை இதுவே வெற்றி பெறுவதற்கான பரம ரகசியம்.
* தன்னம்பிக்கை கொண்ட ஒருசிலரின் வாழ்க்கை வரலாறே உலக சரித்திரமாக விளங்குகிறது. 
* பாவம் என்ற ஒன்று உலகில் இருக்குமானால் அது, "நான் பலவீனமானவன்; மற்றவர்கள் பலவீனமானவர்கள்' என்று சொல்வது ஒன்று தான்.
* சுதந்திரமானவர்களாக வாழுங்கள். எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்த்துக் காத்திருக்காதீர்கள். 
* "இல்லை' என்றோ, "என்னால் இயலாது' என்றோ ஒருபோதும் சொல்லாதீர்கள். உங்களால் எதையும் சாதிக்க முடியும்.
* தோல்வியைப் பொருட்படுத்தாதீர்கள். ஆயிரம் முறை தோற்றாலும் மீண்டும் ஒருமுறை முயற்சியில் இறங்குங்கள்.
* சிங்கத்தின் இதயம் படைத்த ஆண்மகனையே திருமகள் விரும்பி சேர்கிறாள். கடந்து வந்த பாதையைப் பின்னால் திரும்பிப் பார்க்கத் தேவையில்லை. ஊக்கத்துடன் முன்னோக்கிச் செல்லுங்கள்.
- விவேகானந்தர்

வாழ்க்கையின் ரகசியம்

* உடல், மனம், அறிவு மூன்றையும் பலவீனமாக்கும் எதையும் நஞ்சென்று ஒதுக்கி விடுங்கள். 
* வஞ்சனையால் எதையும் உலகில் சாதிக்க இயலாது. அன்பும் உண்மையும் இருந்தால் பெரிய செயலைக் கூட எளிதாக செய்து விடலாம்.
* இந்த பரந்த உலகில் பிறந்திருக்கும் நீங்கள், அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லாவிட்டால், உங்களுக்கும் சிறு கல்லுக்கும் கூட வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.
* பயமின்மையே வாழ்க்கையின் ரகசியம். பிறரிடம் இருந்து வரும் உதவியை ஏற்க மறுக்கின்ற அந்த கணமே நமக்கு சுதந்திரம் கிடைத்து விடும்.
* நியாயமான கோபம் என்ற ஒன்று எங்கும் கிடையாது. ஏனெனில், அனைத்தையும் சமமாகக் காணத் தவறுவதால் தான் ஒருவருக்கு கோபமே உண்டாகிறது.
* எண்ணங்களுக்கு நாம் உரிமை உடையவர்கள். நல்ல எண்ணங்கள் நம்மை நோக்கி வருவதற்காக உள்ளங்களைத் திறந்து வைக்க வேண்டியது நம் கடமை. 
- விவேகானந்தர்