மனிதனை விலங்கிடமிருந்து பிரித்து வைப்பது பகுத்தறிவு.
பிறப்பில் எல்லாருக்கும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக புத்திசாலித்தனம் இருந்தும், அதை எந்த அளவுக்கு பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதை வைத்து, சிலர் உன்னத நிலையை அடைவதையும், பலர், சராசரி நிலையில் இருப்பதையும் காண்கிறோம்.
புத்திசாலித்தனம் வளர, கல்வி பெரிதும் உதவும்.
ஆனால், சுயமுயற்சியிலும் புத்திசாலித்தனத்தை வளர்த்துக் கொள்ளலாம்.
நிறைய பட்டங்கள் பெற்ற பலர், பிரகாசிக்க முடியாமல் போய் விடுகின்றனர்.
அதே சமயம்,
வெறும் அடிப்படைக் கல்வியறிவு பெற்ற சிலர், அவர்கள் தேர்ந்தெடுத்த துறையில் உச்ச நிலையை அடைகின்றனர்.
அதற்கு முக்கிய காரணம்,
அவர்களுடைய புத்திசாலித்தனம், புத்திக் கூர்மை மற்றும் மதிநுட்பம்.
புத்திசாலித்தனம் படிப்பறிவு சார்ந்தது மட்டுமல்ல,
புத்திசாலித்தனத்தின் பல பரிமாணங்கள் இதோ:
தன் பலம் மற்றும் பலவீனத்தை உணர்ந்து, பொருத்தமான துறையைத் தேர்ந்தெடுப்பது,
முன்னுக்கு வர உதவும் சரியான சந்தர்ப்பங்களை நழுவ விடாமல் பயன்படுத்திக் கொள்வது,
தனக்குச் சாதகமானவர்களையும், பாதகமானவர்களையும் உடனுக்குடன் அடையாளம் கண்டு சேர்ப்பது,
அல்லது விலக்குவது,
மற்றும்,
சரியான நேரத்தில் முடிவு எடுப்பது.
முன்னுக்கு வருவதற்கு, கடின உழைப்பு மிக அவசியம்.
ஆனால்,
புத்திசாலித்தனமில்லாத உழைப்பு, நம்மைப் பெருமளவு உயர்த்தாது.
செக்கு மாட்டு வாழ்க்கை நம்மை முன்னேற விடாது என உணர வேண்டும்.
ஒருவருடைய புத்திசாலித்தனம், உயரத்திலோ, தோல் நிறத்திலோ மற்றும் நடை, உடை, பாவனையிலோ இல்லை.
ஆர்வத்துடன் முயற்சியெடுத்தால், எந்தப் பின்னணியிலிருந்து வந்தவரும், புத்திசாலித்தனத்தை வளர்த்துக் கொள்ளலாம் என்பதை பலர் நிரூபித்திருக்கின்றனர்.
நாம் செய்யும் வேலையில் முழு ஈடுபாடும், நம்முடைய இலக்கை அடைவதில் தீவிரமும் இருக்கும்போது, புத்திசாலித்தனமான யோசனைகள் தாமாகவே வரும்.
புத்திசாலித்தனம் எவருக்கும் ஒரே நாளில் வந்து விடுவதில்லை.
நாம் செய்யும் எந்த வேலையையும், மிகச் சிறப்பாகவும், குறைந்த நேரத்திலும் செய்து முடிக்க வேண்டும் என்ற உந்துதலோடு ஒரு காரியத்தில் இறங்கும் போது, புத்திசாலித்தனம் தானாக வரும்.
எதையும் உற்று நோக்குதல்,
கருத்தூன்றிப் படித்தல்,
ஆழ்ந்து சிந்தித்து செயல்படுதல்,
ஒரு நிகழ்வைக் காரண காரியங்களோடு தொடர்புபடுத்தி புரிந்து கொள்ளுதல்,
மூலமாக,
புத்திசாலித்தனத்தை வளர்த்துக் கொள்ளலாம்..
புத்திசாலித்தனம் வளர்வதற்கு, உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் அவசியம்.,
நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை உன்னிப்பாகக் கவனித்து புரிந்து கொள்ளும் பழக்கம்,
நிதானம் மற்றும் உடலுக்குத் தேவையான அளவுக்கு ஓய்வு,
புத்திசாலித்தனம் வளர்வதற்கு வழி வகுக்கும்.
செஸ் போன்ற மூளைக்குப் பயிற்சியளிக்கும் விளையாட்டுகள், நம் புத்திக் கூர்மையை மேலும் அதிகரிக்கும்.
திறமையும், உழைப்பும் நிறைய இருந்தும், சிலர் சாதிக்க முடியாமல் போவதற்கு முக்கியக் காரணம், அவையிரண்டையும் எப்படி பயன்படுத்தி முன்னுக்கு வருவதென்ற புத்திசாலித்தனம் இல்லாததுதான்.
இவர்கள் வரட்டு கவுரவத்தால் வந்த வாய்ப்பை நழுவ விடுகின்றனர்.
தங்களுக்குத் தேவையான வாடிக்கையாளர்கள் இல்லாத இடத்தில் கடையைத் திறப்பர்.
வாய்ப்பு ஒரு வாசலைத் தட்டிக் கொண்டிருக்கும்போது, பூட்டியிருக்கும் மறு வாசலைத் திறக்க பிரயத்தனப் பட்டுக் கொண்டிருப்பர்.
மாடு மாதிரி உழைக்க வேண்டும் என்கிற எண்ணத்தை விட்டு விட்டு,
ஆறறிவு படைத்த புத்திசாலி மனிதனாக செயல்பட முயல வேண்டும்.
விலங்குகளிலும் புத்திசாலி விலங்குகள் தங்களை எளிதில் காத்துக் கொள்ளும்.
மர வேலை செய்யும் தச்சர் அவ்வப்போது தன் வேலையை நிறுத்தி விட்டு, உளியைக் கூர்மையாக்குவார்.
அதுபோல, நாமும் அவ்வப்போது நேரம் ஒதுக்கி மூளையைக் கூர்மையாக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
செக்கு மாட்டுச் சிந்தனையோடு, சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக இல்லாமல், நம்முடைய பிரச்னைகளுக்குப் புதிய கோணத்தில் தீர்வு காண முயல்வோம்.
நாம் தூங்கும் நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில் நம் மூளை சிந்தித்த வண்ணம் இருக்கட்டும்.
அந்த சிந்தனைகள், ஆரோக்கியமான சிந்தனைகளாக இருக்கட்டும்.
நம்முடைய வாழ்க்கைத் தரத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் சிந்தனைகளாக இருக்கட்டும்.
கண்ணிருப்பவர்கள் எல்லாருமே பார்ப்பர்.
ஆனால்,
சிலர் மட்டும்தான் உன்னிப்பாகக் கவனிப்பர்.
காது இருப்பவர்கள் எல்லாருமே கேட்பர்.
ஆனால்,
சிலர் மட்டும் தான் உற்றுக் கேட்பர். அந்த சிலர் தான் சாதனை படைப்பர்.
அந்தச் சிலரில் நாமும் ஏன் இருக்கக் கூடாது?
நம் புத்திசாலித்தனம் நாளுக்கு நாள் மிளிரட்டும்.
நம் வெற்றி இலக்கை விரைவில் அடைவோம்..
No comments:
Post a Comment