Wednesday, October 21, 2015

குறை கூறினால் கோபம் வருகிறதா?

குறை கூறினால் கோபம் வருகிறதா?

நாம் எவருமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட தேவதைகள் அல்லர். ஆனால், ஏனோ நமக்கு மனதின் அடித்தளத்தில் படிந்து விட்ட உணர்வு, நம்மை எவரும் விமர்சிக்கவே கூடாது என்பது. நாம் எப்போதும் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்கிற உணர்வு மிக  தவறானது. 

‘நீங்க படிக்கட்டுல தடுமாறி விழுந்திங்களே… அதை கவனிச்சேன்; என்னமாய் விழுந்தீங்க தெரியுமா… வேற எவனாச்சும் இப்படி விழுந்திருந்தால், பல்லுப் படுவாயெல்லாம் உடைஞ்சிருக்கும்; எலும்பெல்லாம் முறிஞ்சிருக்கும்…’ என்று படு செயற்கையாக ஒருவர் விழுந்ததைக் கூட பாராட்ட, ‘அப்படியா சொல்றீங்க?’ என்று முகம் பூரித்துப் போகும் முகரக் கட்டைகளும் இருக்கத் தான் செய்கின்றன.

‘படிக்கட்டுன்னா பார்த்து நடக்க வேணாம்; புது இடமில்ல… வீட்டு படிக்கட்டா இது… ரெண்டு கையிலயுமா இப்படி பொருட்களை வச்சுக்கிறது. அந்தப் பையை தோளில மாட்டிக்கிட்டிருந்தா, படிக்கட்டோட நீள, உயரம் தெரிஞ்சுருக்கும்ல…’ என்று எவரேனும் இவரது தவறை சுட்டிக் காட்டினால், ‘யோவ்… (டேய்) உன் வேலையை பாத்துக்கிட்டு போவியா… பெரிசா படிக்கட்டு இறங்குறதுக்கு எனக்கு கத்துக்குடுக்க வந்துட்டே…’ என்று, தவறை சுட்டிக்காட்டியவருக்கே, பதிலடி கொடுக்கவே நம்மில் பலர் தயாராக இருக்கிறோம்.

நம் தவறை பிறர் சுட்டிக்காட்டும் போது, அதை, ‘ஆமா… நீங்க சொன்னது ரொம்ப சரி…’ என்று ஒப்புக் கொள்ள முன் வர வேண்டும். இதன்மூலம், இரு நன்மைகள் நிகழ்கின்றன.

‘முதலாவது, நம் மனம், நமக்குள் சென்று, ‘இனி பார்த்து நட… அலட்சியத்திற்கும், கவனக்குறைவிற்கும் விலை மிக அதிகம்; பல்லாயிரம் ரூபாய் செலவும், பல மாதப் படுக்கையும் நிகழ்ந்திருக்கும்…’ என்று உணர்த்துகிற போது, அது ஆழ்மனதில் கல்வெட்டாய் பதிகிறது; இது, அடுத்தமுறை படிக்கட்டில் இறங்கும் போது பயன்படும்.

இரண்டாவது, ‘என்னைப் பார்த்து எவனாவது வாயை திறந்தீங்க… அப்புறம் நடக்கிறதே வேற…’ என்கிற எச்சரிக்கை மணியை, எவர் முன்னும் அடிக்காத காரணத்தால், ‘பார்த்துப் போங்க; ஒரே சகதி…’ என்று சொல்ல பலரும் முன் வருவர்.

நான் சொல்வது நடக்கிற பாதைக்கு மட்டுமல்ல… வாழ்க்கை பாதைக்கும் சேர்த்து தான். ஆம்… ‘நல்லது சொன்னால், இவர் கேட்டுக் கொள்வார். பொருட்படுத்திக் காதில் வாங்கிக் கொள்வார்; செயல்படுத்துவார். நம் அக்கறையை சரி வர புரிந்து கொள்கிறவர்…’ என்பன போன்ற நம்பிக்கைகளை மற்றவர்களிடையே உருவாக்கும்.

ஆனால், இவர்களது வாயை, உருட்டல், மிரட்டல்களால் அடைக்கும் போதும், வார்த்தைகளை உதாசீனப்படுத்தும் போதும் என்ன நடக்கும் தெரியுமா?

நாம் பாதிப்பு அடையும் வரை பார்த்துக் கொண்டிருந்தபின், ‘இந்தாளுக்கு இதுவும் வேணும்; இன்னமும் வேணும்…’ என்று உள்ளுக்குள் மகிழ்கிற கூட்டம் பெருத்துப் போகும்.

நம் முகத்தில் கழுவாமல் விடப்பட்ட சோப்பு நுரையையே, பிறர் சுட்டிக் காட்ட வேண்டிய அவசியம் இருக்கும் போது, முதுகின் அழுக்கை யார் தான் சுட்டிக் காட்டுவதாம்?

நான் ஒருமுறை சிக்னல் ஒன்றில் பச்சை விளக்கிற்காக காத்திருந்த போது பக்கத்தில் ஸ்கூட்டரில் வந்து நின்ற பெண்மணி ஒருவர், தன் ஹெல்மெட்டில் இருந்த முன் பிளாஸ்டிக் தடுப்பை உயர்த்தி, ‘நீங்கள் உங்கள் காரின் பின் கதவை சரியாக சாத்தவில்லை…’ என்று சொன்னார். ‘மிக்க நன்றி…’ என, உடனே மகிழ்ச்சி தெரிவித்தேன்.

ஆனால், நான் கல்லூரி மேடையில் பேசி விட்டுக் கீழே இறங்கிய போது, ‘இன்னும் கூட உங்களிடத்தில் எதிர்பார்த்தேன்…’ என்று ஒரு பேராசிரியை கூறியதும், என் முகம் சுருங்கி விட்டது.

என் கோணத்தில் அது நல்ல பேச்சாக இருக்கலாம். ஆனால், அது சென்று அடைந்தவர்களை திருப்திப்படுத்தவில்லை என்கிற போது, எங்கே கோளாறு நிகழ்ந்திருக்கிறது என்று நான் பரிசீலித்திருக்க வேண்டும்.

இரு பெண்களும் என் தவறுகளை சுட்டிக்காட்டியவர்களே. ஒன்றில், எனக்கு நன்றி தெரிவிக்க தோன்றியது; மற்றதில் ஏனோ தோற்றுப் போனேன். இவருக்குமல்லவா நான் நன்றி தெரிவித்து, என் குறையை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்; விளக்கம் கேட்டிருக்க வேண்டும்.

அடுத்த கல்லூரிக் கூட்டத்தில் பேச, குறிப்புகளை தயார் செய்த போது, அப்பேராசிரியைக்கு மானசீகமாக நன்றி தெரிவித்து, ஒரு தேர்வை சந்திக்கும் மாணவன் போல், என்னை கருதிக் கொண்டேன். இது பலனளித்தது என்பதை, நான் உங்களிடமாவது ஒப்புக் கொண்டாக வேண்டும்

பிறரை வசப்படுத்துவது எப்படி?

பிறரை வசப்படுத்துவது எப்படி?

பிறரை வசப்படுத்தும் கலை மட்டும் கை வரப்பெற்று விட்டால், வாழ்வின் பாதி சவால்களுக்கு விடை கண்டு விடலாம். ‘பிறரை வசப்படுத்தி என்ன ஆகப் போகிறது… இதெல்லாம் அனாவசியம்; தேவையில்லாத வேலை. எவன் தயவும் எனக்கு தேவையில்ல…’ என்று வாதிடும் வறட்டுவாதிகளையும் கூட, இக்கட்டுரை சிறு மன மாற்றத்திற்கு வித்திடும் என்ற நம்பிக்கை, எனக்கு உள்ளது.
 
மனிதனின் மிகப் பெரிய பலவீனம் அன்பிற்கு ஏங்குவது! இப்படி ஏங்குவதை கூட ஏனோ சிலர் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. ஒரு பாலைவன பயணிக்கு நீர் கொடுப்பதை விடவும் தேவையான விஷயம் இது. அன்பின் முதல் அடையாளம், புன்னகை; பின், கனிவான சொற்கள், மரியாதை மிகுந்த உடல்மொழிகள். நிறைவாக, மனிதநேயத்தை வெளிப்படுத்தும் அணுகுமுறைகள்.
 
‘என்னை எவனும் மதிப்பதில்லை; யாரும் பொருட்படுத்துவதில்லை; ஒரு உதவி கூட ஒருத்தனும் செய்றதில்லை. மோசமான உலகமிது…’ என்று ஒருவர் புலம்பினால், கோளாறு இவரிடம் தான் உள்ளது என்பது மிகத் தெளிவு.
 
‘பணமிருந்தா தான் மதிக்கிறாங்க; இல்லைன்னா எவன் மதிக்கிறான்…’ என்று வாதிடுவோரும் இருக்கின்றனர்.
 
பொதுவாழ்வில் அதிகம் நேசிக்கப்படுபவர்களின் பட்டியலை எடுங்கள். இவர்களுள் பணத்திற்காக மட்டும் மதிக்கப்படுபவர்களை ஓரங்கட்டுங்கள். மீதமிருப்பவர்களுக்கு இவர்கள் என்ன பதில் சொல்லப் போகின்றனர்? அன்னை தெரசா பணத்திற்காகவா மதிக்கப்பட்டார்?
 
சமூகத்தை ஒட்டு மொத்தமாக குற்றவாளிக் கூண்டிலேற்றி குற்றம் சாட்டும் இவர்களிடம் ஒரு பதில் வாதம் வைக்கட்டுமா… மற்றவர்களை வசப்படுத்த தெரியாமல் போன குறை உங்களிடம் இருப்பதால் தான், இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளீர்கள் என்கிறேன் நான். வாருங்கள் பதிலோடு வாதிடுவோம்!
 
ஒரு கூட்டத்தில், தனக்கு முன் பேசியவரை, அடுத்து பேசியவர் கடுமையாக குறை கூறினார். (இத்தனைக்கும் அது பட்டிமன்றம் அல்ல!) பலருக்கும், ‘என்ன அருமையான கோணம்; பிரமாதமான வாதம்…’ என்று தோன்றியது. சுட்டிக்காட்டப்பட்டவர், ‘ஸ்கேன் எந்திரம் கூட இப்படிக் கண்டுபிடிக்காது; இதை நான் வரவேற்கிறேன். என்னை நான் திருத்திக் கொள்கிறேன்…’ என்று கூறினார். அன்றைய கூட்டத்தின் நாயகராக ஆனவர் இவர் தான்.
 
தோற்றத்தால் வசப்படுத்த முடியாதவர்கள், உடையால் வசப்படுத்தலாம்; (பிரமாதமான டிரஸ் சென்ஸ் இவருக்கு) இரண்டும் இல்லாதவர்கள், பணிவால் வசப்படுத்தலாம்.
 
போலித்தனம் இல்லாத வார்த்தைகளால் வசப்படுத்தலாம்; கருணையால், பரிவால் வசப்படுத்த முடியாதவர்கள், இவ்வுலகில் மிகக்குறைவு.
 
வீட்டில் ஒரு பழுது; அதைச் சரிசெய்ய வரும் ஊழியரை, ‘எப்ப சொன்னேன்; இப்பத்தான் வர்றே…’ என்று வரவேற்பதைக் காட்டிலும், அதையே சிறிது மாற்றி, ‘வாங்க வாங்க… உங்களை தான் ஆர்வமா எதிர்பார்த்துட்டிருக்கோம். முதல்ல டீ, காபி; அப்புறம் தான் வேலை…’ என்று கிண்டலடிக்காத தொனியில் சொல்லுங்கள்.
 
வேலையின் தரம் உயர்ந்து, கூலி குறையா விட்டால் என்னைக் கேளுங்கள். ஏனோ ஊழியர்களை மிக மோசமாகவே நடத்துகிறோம். அவர் மனதிற்குள் ஓடும், ‘நெகட்டிவ்’ ஒயரை தொடாதீர்கள்; ‘ஷாக்’ தருவார். ‘பாசிட்டிவ்’ ஒயரை தொடுங்கள்; அவர் நம் வசமாவார்.
 
சிறு சிறு உதவிகளால் பிறரை வசப்படுத்தலாம்; விமானம், ரயில் மற்றும் பேருந்தில், உங்களது சக பயணிகளை சிறு செயல்களால் வசப்படுத்துங்கள். பயணமே இனிமையாகி விடும். வசப்படுத்துறதாவது வெங்காயமாவது என்று நடந்து பாருங்கள்… பயணத்தின் இனிமையை சக பயணிகள் எப்படிப் பறித்து விடுகின்றனர் என்பதை உணர்வீர்கள்.
 
திறமைகளை காட்டி வசப்படுத்துங்கள்; பணமும், புகழும் கை கட்டி, உங்களுக்கு சேவகம் புரியும்.

நோட்டால் (பணத்தால்) வசப்படுத்துங்கள்; நீங்களும் இந்திரன், சந்திரன் தான்.
பலத்தால் வசப்படுத்துங்கள்; உலகமே உங்களை அண்ணாந்து பார்க்கும்.
 
பிறரை வசப்படுத்தி வாழும் வாழ்க்கை இனியது மட்டுமல்ல, சுவை மிகுந்ததும் கூட!

நம்பிக்கை துரோகம் எவ்வாறு நிகழ்கிறது, ஏன்?

நம்பிக்கை துரோகம் எவ்வாறு நிகழ்கிறது, ஏன்? 
அவன் இப்படி நடந்துக்குவான்னு, நான் கனவுல கூட நினைக்கலை…’  ‘அவளை அவ்வளவு நம்பினேன்; இப்படி கழுத்தறுப்பாள்ன்னு நான் நினைச்சு கூட பார்த்ததில்லை…’ என்று இப்படிப்பட்ட வாக்கியங்களை, நீங்கள், வாழ்வில் இதுவரை உச்சரிக்காதிருந்தால், இதுபற்றி எனக்கு மகிழ்ச்சி.

ஆனால், பெரும்பாலானவர்களின் வாழ்க்கைப் பாதைகளில், எண்ணற்ற நம்பிக்கை துரோகங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.  நான் சொல்லப் போவது பழைய உதாரணம் தான்.  ஒரு விரலை, எதிராளியை நோக்கி சுட்டிக் காட்டும் போது, அதைவிட அதிகமான விரல்கள், நம்மை நோக்கி இருக்கின்றன என்பதை, எவரேனும் மறுக்க இயலுமா?
 
ஆம்… நான் சொல்ல வருவது, இத்தகைய நம்பிக்கை துரோகிகளை வளர்த்தவர்கள் நாம் தான் என்று சுட்டி காட்டினால், உங்களுக்கு அது அதிர்ச்சியாக கூட இருக்கலாம்.
 
‘என்னது நானா… நான் எப்படி காரணமாவேன்…’ என்று அப்பாவித்தனமாக கேட்பவர்கள் உண்டு.
 
இக்கட்டுரையின், இறுதியில், ‘அதானே… நீங்க சொல்றது சரி தான்…’ என்று நீங்களும் ஏற்பீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.
 
‘நண்பர்களுக்கு வெள்ளி பாத்திரங்களில் விருந்து கொடு; விருந்து முடிந்ததும் பாத்திரங்களின் எண்ணிக்கையை சரி பார்த்துக் கொள்…’ என்று மேலைநாடுகளில் வேடிக்கையான பழமொழி உண்டு.
 
நம்பிக்கை துரோகம் பற்றி பேசும் போதும், இதை ஒட்டிய கருத்தை தான், நான் கூற வேண்டியிருக்கிறது.
 
ஒருவரை, 100 சதவீதம் நம்பும் போது, அவர் அதை அளவு கடந்து பயன்படுத்தி கொள்வதோடு, எல்லை தாண்டவும் செய்கிறார். நம்பிக்கை துரோகத்தின் வித்து, இங்கே தான் முதலில் விதைக்கப்படுகிறது.
 
குதிரைகளை அவிழ்த்து விடலாம் தான்; ஆனால், லாயங்களை பூட்டி விட வேண்டும் என்கிற விதி, பலருக்கு புரியாததாலேயே, மிக பெரிய தவறுகள் நிகழ்கின்றன. பாதி சுதந்திரம் தந்து, மீதி சுதந்திரத்தை கையில் இறுக்க பிடித்து கொள்ளாதவர்கள், நிச்சயம், பின் வருந்த வேண்டி வரும்.

பால் ஒழுக்க தவறுகளின் பிரச்னைக்கு, முதலில் வருகிறேன். இதை முடிந்த வரை, நாகரிகமாக சொல்லி, எல்லையோடு நின்று கொள்கிறேன்.

வீட்டு சாப்பாடு சரியில்லாத போது, அது சரிவர கிடைக்காத போது, மனிதனின் நாக்கு, ஓட்டல் உணவை நாடுகிறது. ஓட்டல் மீது நாட்டம் ஏற்படாதபடி பார்த்து கொள்ளாத கையாலாகத்தனம் தான், இவ்விஷயத்தில் நம்பிக்கை துரோகம் வளர காரணமாகிறது.
 
இத்தகைய நம்பிக்கை துரோகங்கள், சட்டென நிகழ்வது இல்லை. அரும்பாகி, மொட்டாகி, பூவாகி, அது மலரும் முன், ஆரம்பத்திலேயே கரு(வறு)க்கப்பட வேண்டும்.
 
இதற்கு, ஒரு மூன்றாவது சிறப்புக் கண் இரு தரப்பினருக்கும் வேண்டும். ‘கொஞ்ச நாளா சரியா இல்லையே…’ என்கிற பார்வை செலுத்தப்பட வேண்டும்.

சிறு சிறு மாறுபாடுகள் உணரப்பட வேண்டும். சந்தேக கண் கொண்டல்ல; நுணுக்கக் கண் கொண்டு பார்க்க வேண்டும். பணம் சார்ந்த நம்பிக்கை துரோகங்களை பார்ப்போம். இடுப்பை விட்டு போய்விட்ட காசு, இருப்பில் சரியாக இருக்கிறதா என்கிற பார்வை, ஒவ்வொருவருக்கும் அவசியம்.
 
‘என்னை நீங்கள் சந்தேகப்படுகிறீர்களா?’ என்கிற கேள்வி, பொறுப்பை ஏற்று கொண்டவர்களால் கேட்டு விட முடியாதபடி, ஆரம்பத்திலிருந்தே என் கடமைகளுள் ஒன்று, ஒவ்வொன்றையும் மேற்பார்வை இடுவது என்கிற பாணியில், உள்ளே மூக்கை நுழைத்து விட வேண்டும். இதுவரை, அப்படி மூக்கை நுழைத்தது இல்லையா? இனி, ஒரு விதி செய்வோம் என, மூக்கை, நாளையே நுழைத்து விடலாம்; தவறில்லை.
 
பல நாட்களாய் திறக்கப்படாத மர அலமாரிகள், கரையான்களின் புகலிடமாகின்றன. இப்படிப்பட்ட காட்சிகள் நமக்கு புதிதா என்ன! அவ்வப்போது திறந்து, சரி பார்த்து, துடைத்து, அந்துருண்டைகளை வைக்காமல் இருக்கலாமா? 

மனிதர்களும் இப்படித்தான். கண்காணிக்கப்படாத மனிதர்கள், கணிக்க முடியாத தவறுகளையும், கணக்கிலடங்காத தவறுகளையும், கண்டபடி நிகழ்த்தி வருகின்றனர் என்பதே உண்மை. இது, சில நேரங்களில், சிலர் விஷயங்களில் நடவாது என்றாலும், இவர்களது அறியாமையால், இவர்களுக்கு கீழே உள்ளவர்கள், கொட்டமடித்துக் கொண்டிருப்பர். நாள்பட கவனிக்கப்படாத எதிலும், நம்பிக்கை துரோகங்கள் எனப்படும் நட்டுவாக்காளிகள் நடமாட்டம் தவிர்க்க இயலாததாகிவிடும்.
 
மனித மனம் என்பது, புனிதங்களின் புகலிடம் அல்ல. இது, பற்பல விகாரங்களின் கூடாரம். யார் மனதில், என்னென்ன கெடுதல் எண்ணங்கள் இருக்குமோ நமக்கு தெரியாது. இதை கணித்தறியும் சக்தி, நமக்கு இயல்பாகவே இல்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். எது ஒன்றும் பூதாகரமாக புறப்படுவதற்கு முன் இறங்குவோம் களத்தில்!

நெல்லை விதைத்து விட்டு, பாராதிருந்தால், அதில் புல்மண்டி விட வாய்ப்பு இருக்கிறது; இதை இனியேனும் உணர்ந்தால் சரி!

வெற்றி நிச்சயம்: அப்துல்கலாம்

வெற்றி நிச்சயம்: அப்துல்கலாம்
abdul kalam1மாணவர்கள் விடாமுயற்சியுடன் உழைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம், மேலும், தன்னம்பிக்கை மட்டுமே வெற்றிக்கான ரகசியம் என தெரிவித்துள்ளார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம்.

சென்னை, சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள ரோசரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளிக்கூட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் முன்னாள் குடியரசுத் தலைவரும், இந்திய விஞ்ஞானியுமான அப்துல்கலாம். விழாவுக்கு வந்திருந்த அவரைப் பள்ளிக்கூட நிர்வாகி சகோதரி லீனா டிசவுசா, தாளாளர் சகோதரி சிறியபுஷ்பம், பிரின்சிபால் சகோதரி மேரிஜக்காரியா ஆகியோர் வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து, பள்ளிக்கூட வளாகத்தில் மாணவிகளால் அமைக்கப்பட்டிருந்த அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்த அப்துல்கலாம், அதில் இடம்பெற்றிருந்த, பி.எஸ்.எல்.வி.ராக்கெட், செவ்வாய் கிரகத்தில் ராக்கெட் இறங்குவது, நீர் ராக்கெட் உள்ளிட்ட அறிவியல் சாதனங்களை பார்வையிட்டு அதனை உருவாக்கிய மாணவிகளைப் பாராட்டினார்.

அதன்பிறகு, மாணவிகள் மத்தியில் அப்துல் கலாம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது :-

உழைப்பு முக்கியம்…

பறக்கவேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழிவகுக்கும். அந்த லட்சியத்தை அடைய என்ன செய்யவேண்டும். என்னுடைய கருத்து என்னவென்றால், உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும். லட்சியத்தை அடைய அறிவாற்றலை பெருக்கவேண்டும். அதை அடைவதற்கு உழைப்பு முக்கியம்.

வெற்றி நிச்சயம்…

உழை, உழை, உழைத்துக்கொண்டே இரு. அத்துடன் மாணவ-மாணவிகளுக்கு விடாமுயற்சியும் இருக்கவேண்டும். விடாமுயற்சியுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம். நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும். நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை.

எண்ணிய எண்ணியாங்கு….

நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும். தாமஸ் ஆல்வா எடிசன், ரைட் சகோதரர்கள், அலெக்சாண்டர் கிரகாம்பெல், சர்.சி.வி.ராமன், மேடம் கியூரி, சீனிவாச ராமானுஜம் போன்றோர் தங்கள் லட்சியத்தில் எள்ளளவும் விலகாமல் தங்கள் லட்சியத்தை அடையும் வரை மனம்தளராமல் உழைத்ததால் வெற்றிபெற்றார்கள். அதை நீங்கள் மனதில்பதியவைத்துக்கொண்டால், நீங்களும் லட்சியத்தை அடையமுடியும்’ என இவ்வாறு அவர் உரையாற்றினார்.

அதேபோல், சென்னை அடையாரில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன (சி.எல்.ஆர்.ஐ) வளாகத்தில் உள்ள அரங்கத்தில் நடைபெற்ற ‘ஹீமோபிலியா சொசைட்டி’ (ரத்த உறையாத குறைபாடு) சென்னை கிளையின் வெள்ளி விழா நிகழ்ச்சியிலும் அப்துல்கலாம் கலந்து கொண்டார்.

தன்னம்பிக்கை வேண்டும்….

அங்கு ஹீமோபீலியா பாதிக்கப் பட்ட குழந்தைகளுடன் கலந்துரையாடினார் அப்துல்கலாம். அப்போது ஹீமோபிலியா குறைபாடால் பாதிக்கப்பட்ட ஹேமந்த்ராஜ் என்ற சிறுவன் ‘உங்களை போன்று என்னாலும் அறிவியல் விஞ்ஞானியாக வர முடியுமா?’ எனக் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கலாம், ‘தன்னம்பிக்கை இருந்தால் எதுவேண்டுமானால் ஆகலாம்’ எனப் பதிலளித்தார்.

சிரிக்கவும்…சிந்திக்கவும்….

தொடர்ந்து ஹீமோபிலியா குறைபாடால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எழுப்பிய கேள்விகளுக்கு நகைச் சுவையாக பதிலளித்தார். நிகழ்ச்சியில் ஹீமோபிலியா சொசைட்டி சென்னை கிளையின் தலைவர் டாக்டர் ஆர்.வரதாராஜன் வரவேற்று பேசினார். பொருளாளர் அம்பிகா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஹீமோபிலியா குறைபாட்டில் பாதிக்கப்பட்ட குழந்தைகளும், அவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

தன்னம்பிக்கை: வெற்றி நிச்சயம்

தன்னம்பிக்கை: வெற்றி நிச்சயம்

நாம பெருமை பட்டுக்கொள்ளும் பிறவி... மனிதப்பிறவி... எங்கே சொல்ல??
மனிதர்கள் மனிதர்களை ஆளும் காலம் இது... என்னவென்று சொல்ல? நம் சொந்த விருப்புக்கு வேலை செய்ய முடிவது இல்லை...

கூலி கொடுக்கும் முதலாளி நம் கடவுள்... அவர் கூறுவதால் கடவுளையும் நாம சந்தையில் விற்க முனைகிறோம்  என்ன கொடுமை? நமக்கு மிஞ்சியது ஏமாற்றம்... மீண்டும் தேடத் துவங்குகிறோம்... விளைவு இன்னொரு முதலாளிக் கடவுளிடம் தஞ்சம்... நம் தேடல் என்று முடியும்?

என்றாவது நம் கனவுகளை, லட்சியங்களை, ஆசைகளை நிறைவேற்ற முயற்சி செய்தோமா? செய்திருந்தால் மற்றவரின் உதவி எதற்கு? சுயமாக எதாவது செய்யலாமே???? நமக்கு பிடிக்காத இடத்தில, பிடிக்காத மனிதர்களுடன் நமக்கு என்ன வேலை?

நமக்கு இரண்டு வழிகளே உள்ளன....!!! ஒன்று மற்றவரின் ஆணைக்கு அடங்கி வேலை செய்வது... மற்றொன்று நம் சுய மரியாதையை இழக்காமல் இருப்பது... இரண்டும் நம்மால் ஆகாது... பின் முதலாளி கடவுளின் வரங்களை,
வசவுகளை வாங்கி ஒடுங்கி வாழ்வதை தவிர வேறு வழி இல்லை... நாம் ஆழவும் முடிவதில்லை அழவும் முடுவதில்லை...நம் வறட்டு கெளரவம் தடுக்கிறது...

இந்த பொருளாதார சந்தையில் விலை போன பல ஆடுகள் அனைத்தையும் விட்டு விட்டு வெறும் பொருளை மட்டுமே ஈட்டுகின்றன... மார் தட்டுக்கொள்கின்றன...

அவை ஆடுகள் அல்ல நரிகள், பின் விளைவுகளை எதிர் நோக்காமல் தன்னைப்ப்ற்றி மட்டுமே சிந்திக்கும் வஞ்சனை நிறைந்த பிறவிகள்... பாவம் என்ன செய்யும்...

எல்லோரும் முதலாளிகலாய் இருந்து விட்டால் யார் தான் தொழிலாளி ஆவது? சரியான கேள்வி... இதோ பதில்...

நான் அனைவரையும் முதலாளி ஆக சொல்லவில்லை... நமக்கென்று சில இடங்கள், சில மனிதர்கள் நம்மை போல தேடலில் இருப்பார்கள்... அவர்களை இனம் கண்டு கூட்டு சேருவோம்... நம் விருப்பம், நம் தொலை நோக்கு, நம் கனவுகளை நிறைவு செய்வோம்... அதனால் மற்றவர்க்கும் லாபமே...

விருப்பமில்லாத இடத்தில அடிமை போல் இருப்பதை காட்டிலும் விரும்பும் இடத்தில், விரும்பும் மனிதர்களிடம் விருப்பம் போல் வேலை செய்வது மன அமைதி தரும்... அமைதி இல்லா மனது ஆக்கவழியில் செயல்படாது...

நம் தவறுகள் -  மாற்றங்களை ஏற்காதது... நம் அறிவின்  சொல்லைக் கேட்காதது... மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்ற பயம்... மற்றும் பேராசை...

இதை விடுத்து நம் வழியில் செல்லலாமே... யாருக்கும் நாம் அடிமை இல்லை... நமக்கும் யாரும் அடிமை இல்லை... நமக்கு மரியாதை இல்லா இடத்தில என்ன வேலை?

என்று நம் சுயமரியாதையின் இழுக்குக்கு இறுதி நாளோ.. அன்று இந்த பாரத்தை இரக்கி வைத்து முன் செல்வோம்...

வெற்றி நிச்சயம்...!!! ஒரு நாள் மன அமைதியுடன் வேலை செய்து பாருங்கள்... அன்றே நம் வாழ்வின் முன்னேற்ற பாதையின் முதல் நாள்...  வெற்றி நிச்சயம்...!!!  ---- 

வெற்றி நிச்சயம் இது வேதமந்திரம்

வெற்றி நிச்சயம் இது வேதமந்திரம்  

நாம் வெற்றி பெற முதல் தேவை என்ன? முயற்சியா? பணமா? சிபாரிசா? என்றால் முதலில் இவைகளை விட மிக மிக முக்கிய தேவை மன தைரியம் – தன்னம்பிக்கை. முயற்சி செய்து செய்து ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது என்று மனம் தளர்ந்தால் வரப் போகிற வெற்றி, தோல்வியாக மாறி விடும். மன தைரியம் இருந்தால்தான் தோல்வியை கூட தோல்வியாக எண்ணாமல் அனுபவ பாடமாக்கி வெற்றியை கிடைக்கச் செய்யும். மன தைரியம், உடல் பலத்தை தரும். எந்த செயலையும் ஈடுபாடுடன் செய்ய வைக்கும். உடல் நலம் சரியில்லாமல் மருத்துவரிடம் சென்றால் அங்கே அந்த மருத்துவர் கேட்கும் முதல் கேள்வி, உங்களுக்கு நன்றாக தூக்கம் வருகிறதா,? நன்றாக பசி எடுக்கிறதா? என்றுதான் கேட்பார். இவை இரண்டும் சரியாக இருந்தால் உடலில் பெரிய பிரச்னை இல்லை. மன அமைதியோடு இருக்கிறீர்கள் என்பதை மருத்துவர் புரிந்துக்கொள்வார். மனஅமைதி இருந்தால்தான் தூக்கம் வரும், சோறும் வயிற்றில் இறங்கும். மருத்துவர்கள் நோய்களுக்கு கொடுக்கும் மருந்தும் வேலை செய்யும். மனகவலை உடலை மட்டும் கொல்லாது. வாழ்க்கையில் கிடைக்கும் சின்ன சின்ன சந்தோஷத்தையும் சேர்த்து கொன்றுவிடும். ஒரு அரசர் தன் மந்திரிகளை அழைத்து, “நான் கேட்கும் கேள்விக்கு யார் சரியான பதில் சொல்கிறீர்களோ அவர்களுக்கு சிற்றரசர் பதவி தருகிறேன்.” என்றவர், “என் கேள்வி இதுதான்” என பேச தொடங்கினார். “ஒருவர் வெற்றியடைந்த பிறகு, அந்த நபரிடம் ஒரு வார்த்தை சொன்னவுடன் அந்த வெற்றியை பெற்ற நபர் மனம் கலங்க வேண்டும். அதே வார்த்தையை தோல்வியடைந்த நபரிடம் சொன்னால், அந்த தோல்வியடைந்த நபர் அந்த வார்த்தையை கேட்டு மகிழவேண்டும். அப்படி என்ன வார்த்தை சொல்வீர்கள்.?” என கேட்டார் மன்னர். இதை கேட்ட மந்திரிகளுக்கு குழப்பம். “அது எப்படி? ஒரே வார்த்தையை வெற்றி பெற்றவனிடம் சொன்னால் அவன் கலங்க வேண்டும், தோல்வியடைந்தவனிடம் சொன்னால் அவன் மகிழவேண்டுமா? அது என்ன வார்த்தையாக இருக்கும்?” என்று தலையை பீய்த்துக் கொண்டு யோசித்தார்கள். அப்போது ஒரு மந்திரி மட்டும் எழுந்து, “அரசே, வெற்றியடைந்தவனிடமும் தோல்வியடைந்தவனிடமும், “இதுவும் மாறும்” என்ற இந்த வார்த்தையை சொன்னால் போதும். வெற்றி பெற்றவன் வருங்காலத்தை நினைத்து அஞ்சுவான், தோல்வியடைந்தவன் மன தெளிவும் நம்பிக்கையும் பெற்று மகிழ்ச்சி அடைவான்.” என்றார். அரசர், அந்த அமைச்சரை பாராட்டி பரிசுகளை தந்து, சிற்றரசர் பதவி வழங்கி கௌரவித்தார். ஆம். வாழ்வில் எது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறும். அந்த மாற்றத்தை சர்வ சாதாரணமாக எடுத்துக்கொண்டோம் என்றுச் சொன்னால், தோல்வியை கண்டு கலங்கி, மனம் துவண்டு போகாது. மனஅழுத்தம் என்பதும், குழப்பம் என்பதும் வாழ்நாள் முழுவதும் நம்மை நெருங்காது. “வருவதை கண்டு மயங்காதே. போவதை கண்டு கலங்காதே மனமே“ என்றார் ஒரு கவிஞர். ஏற்றமும் – இறக்கமும் – வருவதும் – போவதும் காலத்தால் நிகழும் சாதாரண விஷயங்கள். எதையும் நல்லநோக்கத்தோடு அணுக வேண்டும். இதனால் எடுக்கும் முயற்சி நிச்சயம் வெற்றி பெறும். இல்லை என்றாலும், “மீண்டும் போராடி வெற்றி பெறுவேன்.” என்ற மன தைரியத்தை வளர்க்க வேண்டும். செடிக்கு உரம் போல், மனதிற்கு நல்ல எண்ணங்கள்தான் உரம். இந்திய ஒலிம்பிக் போட்டியில் குத்து சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்ற மேரிகோம் என்ற அந்த பெண், இரண்டு குழந்தைகளுக்கு தாய். உங்கள் வெற்றிக்கு என்ன காரணம்? என்று பத்திரிக்கை நிருபர்கள் கேட்டபோது, என்ன சொன்னார் தெரியுமா?, “ஆரம்பத்தில் எதிராளியை அடிக்கவே பயப்படுவேன். ஆனால் என் கோச்தான், “நீ ஏன் பயப்படுகிறாய்.? உன்னோடு மோதுபவரை ஆண் என்று நினைத்துக்கொள். பெண் என்று நினைக்காதே. உன்னைவிட பலமான ஆண் உன் எதிரில் நிற்பதாக நினைத்து, ஓங்கி குத்தினால்தான் வெற்றி. இல்லாவிட்டால் உன் முகம் காணாமல் போய்விடும்.” என்று சொல்லி அவர் தீவிரமாக பயிற்சி கொடுத்ததால்தான் 5 முறை உலக சாம்பியன் ஆனேன். அதுவே நம் நாட்டுக்கு ஒலிம்பிக் பதக்கத்தை பெறக் காரணம்.” என்றார் மேரிகோம். நமக்கு வெகு தூரத்தில் இல்லை வெற்றி. அது நம் மனதுக்குள்தான் – நம் சிந்தனையில்தான் இருக்கிறது. வெற்றியை தேடி நீங்கள் ஓடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் முயற்சியும் நல்ல நம்பிக்கை மட்டுமே. இவையே வெற்றியை உங்களை நோக்கி ஓடி வர செய்யும். நம்பிக்கையோடு செயல்படுங்கள். “சிறுதுளி பெரு வெள்ளம்” என்பதை வார்த்தை ஜாலத்திற்காக நம் முன்னோர்கள் சொல்லவில்லை அது அனுபவ உண்மையும் கூட. தன்னம்பிக்கையுடன் நாம் செய்யும் சின்ன சின்ன நல்ல முயற்சிகள்தான், ஒருநாள் நாமே எதிர்பாரததைவிட பெரிய அளவில் சாதனை மனிதர்களாக நம்மை மாற்றும்.!

எது நல்லது? எது கெட்டது?

எது நல்லது? எது கெட்டது?

முந்தைய கட்டுரையில் 'நல்லதே நினை; நல்லதே செய்; நல்லதே நடக்கும்' என்ற வாசகத்தைக் கட்டுடைத்து அதனை 'நல்லதே நினைப்போம்; நல்லதே செய்வோம்; நல்லதே நடக்கும் என நம்புவோம்' எனப் புதிதாகக் கட்டமைத்தோம். அக்கட்டுரையின் இறுதியில் நல்லது செய்தல் குறித்து அடுத்த பகுதியில் விவாதிப்பதாகக் குறிப்பிட்டிருந்தேன். அதனை இப்போது காண்போம்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரு வாசகங்களில் முதலாவதில், நல்லதை நினைத்து, நல்லதைச் செய்தால் நல்லது நடக்கும் என உறுதிபடக் கூறப்பட்டிருக்கிறது. இரண்டாவதில், நல்லதை நினைத்து, நல்லதைச் செய்தால் நல்லது நடக்கும் என நம்பலாம் எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இவை சொல்வதெல்லாம் உண்மையென நீங்கள் நம்புகிறீர்களா? நல்லதைச் செய்தால் நல்லதும், தீயதைச் செய்தால் தீயதும் நடக்கும் என்பதற்கு ஏதேனும் உத்தரவாதமுண்டா? நல்லது செய்பவர்களுக்கு தீயதும், தீயது செய்பவர்களுக்கு நல்லதும் நடந்து கொண்டுதானே இருக்கின்றன. இதை உங்கள் சொந்த அனுபவத்திலும் கூட நீங்கள் கண்டிருக்க முடியுமே! அப்படியானால், இதற்கெல்லாம் அர்த்தம்தான் என்ன? நன்மை செய்தாலும் தீமை நடக்கும் என்றால் நன்மை செய்வதன் நோக்கம்தான் என்ன? நன்மை செய்தல் என்ற விழுமியத்தின் அர்த்தப்பாடு கேள்விக்குரியதா? நன்மையே செய்யக்கூடாதா? இப்படி எண்ணற்ற கேள்விகள் உங்கள் மனத்தில் எழலாம். இதற்கெல்லாம் காரணம் நம் முன்வினைப்பயன்தான் என்று ஒற்றைச் சொல்லில் புரியாத ஒரு தீர்ப்பைச் சொல்வது இக்கட்டுரையின் நோக்கமன்று. அதை நீங்களும் விரும்ப மாட்டீர்கள் என நம்புகிறேன். அப்படியெனில், இக்கட்டுரை புதிய தீர்ப்பைச் சொல்லப் போகிறதா? அப்படி எதுவுமில்லை. இதில் நாம் உரையாடப் போகிறோம்; தேடப் போகிறோம்; அவ்வளவுதான். முடிவு எப்படியிருந்தாலும் அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை.

நன்மை, தீமை இவையிரண்டுமே வெவ்வேறு செயல்கள் ஆயினும், அவை பொதுவில் செயல்களே. எந்தவொரு செயலும் அதற்கென ஒரு விளைவை உடனடியாகவோ, தொடர்ச்சியாகவோ தரவல்லது. இதில் நான் நீண்ட கால விளைவைக் குறிப்பிடவில்லை. காரணம், எந்தவொரு செயலும் உடனடியாக விளைவைத் தொடங்கி விடுகிறது. அதன் முழுமையை அடைய நீண்டகாலமானாலும், அது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகவே (process) இருக்கிறது. காட்டாக, ஒரு விதையை நீங்கள் விதைத்தவுடன், அச்செயல் உடனடி விளைவு எதையும் தோற்றுவித்து விடுவதில்லை. நீண்ட காலம் கழித்துத்தான் அது ஒரு மரத்தை உருவாக்குகிறது. அதற்காக, இவ்விளைவு ஒரு நீண்டகால விளைவு என்று முடிவு கட்டிவிட முடியாது. காரணம், நீங்கள் விதையை ஊன்றிய பின் அது முளைவிடுதல், வேர்விடுதல், இலைவிடுதல், கிளைவிடுதல், பூவிடுதல், காய்விடுதல், கனிவிடுதல் (இடையில் நான் ஏதாவது விட்டிருக்கலாம்) எனப் பல தொடர்ச்சியான படிநிலைகளைக் கடந்த பின்னரே அது முழுமையானதொரு மரமாகிறது. மேலும், அது அன்றாடம் வளர்ந்து கொண்டுமிருக்கிறது. எனவே, இதனைத் தொடர்ச்சியான விளைவு என்றுதான் குறிப்பிட வேண்டும்.

இப்பேரண்டத்தையும், அதன் நிகழ்வுகளையும் காதலோடு உற்று நோக்கி வந்தால் பெரும்பான்மையானவை ஏதேனுமொரு செயலின் தொடர்ச்சியான விளைவாகவே இருப்பதை நாம் அவதானித்து விடலாம். இப்பேரண்டத்தின் இப்போதைய நிலையை எதிர்த் திசையில் ஓடவிட்டு (rewind) நம்மால் பார்க்க முடியுமேயானால், அறிவியல் கோட்பாடுகளின்படி ஒரு பெருவெடிப்பையும், மெய்யியல் அல்லது ஆன்மீகக் கோட்பாடுகளின்படி ஏதேனுமொரு கடவுளையும் நாம் சென்றடையலாம் (ஆனால், அவ்வாறு நம்மால் முடியாது. காரணம், எதிர்த் திசையில் செல்லும்போது மனித இனத்தின் தோற்றம் நிகழும் புள்ளிக்கு முன்னால் மனித இருப்பு இருக்கப் போவதில்லை). அதாவது, ஆதிவினையின் தோற்றப் புள்ளியை நாம் அடைந்துவிடலாம்.

ஆகவே, செயல்கள் என்பதை மனிதச் செயல்கள் என்ற ஒற்றைப் பரிமாணத்தில் மட்டுமே நாம் சுருக்கி விடத் தேவையில்லை. வெளி, விண்மீன்கள், கோள்கள், வளிமண்டலம், ஆறுகள், கடல்கள், விலங்குகள், பறவைகள், புழு பூச்சிகள் மற்றும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் என இப்பேரண்டத்தின் அனைத்துப் படைப்புகளின், இருப்புகளின் செயல்கள் என்ற விரிந்த பார்வையை நாம் கொள்ள வேண்டும். இப்போது இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது, உயிர்களில் மனிதனைத் தவிர்த்த மற்றையவை தங்கள் செயல்களை நல்லது, கெட்டது எனப் பிரித்துப் பார்ப்பதாகத் தெரியவில்லை (இதை உறுதியாகச் சொல்ல இயலாது. தன்னைத் தவிர்த்த மற்றைய உயிர்கள் அறிவில் குறைந்தன என்ற மனித அறிவின் ஆணவப் பார்வையாக இது இருந்தாலும், பொதுவான அர்த்தத்தில் மட்டும் இதை உண்மை என நம்புவோம்). ஆனால், மனிதன் மட்டுமே மொழியால் கட்டமைக்கப்பட்ட தனது சிந்தனை முறையால் செயல்களை நல்லவை, தீயவை என இனம் பிரிக்கிறான்.

எனவே, நல்லவையாயினும், தீயவையாயினும் அவை செயல்கள் என்ற அளவில் ஒன்றே. நாம் செயல்களை மட்டுமே நல்லவை, தீயவை எனப் பெயரிட்டுப் பிரித்துச் செய்ய முடியும். விளைவுகள் நமது கட்டுப்பாட்டில் இல்லையென்பதால் அவை நல்ல விளைவுகளாகவோ, தீய விளைவுகளாகவோ இருக்கலாம். அதிலும் விளைவுகளை நாம்தாம் நல்லவை, தீயவை என வகைப்படுத்திப் பார்க்கலாமேயொழிய, விளைவுகளைப் பொருத்தவரை தம்மளவில் அவை வெறும் விளைவுகளே.

சுயநலமிக்க மனித இனம் உடனடியாகத் தனக்கு நன்மை நிகழும் விளைவுகளை மட்டுமே கருத்தில் கொண்டு, தொடர்ச்சியான விளைவுகளின் மீது கவனமற்றுப் போய் அழகான இப்புவியைக் குலைத்து வருகிறது. குழந்தை அடித்தால்தான் படிக்கிறது எனச் சொல்லிக் கொள்ளும் பெற்றோரைப் பொருத்தவரை, அடித்தல் என்னும் செயல் நல்ல செயல். அது உடனடியாகக் குழந்தை படித்தல் என்னும் தாங்கள் விரும்பும் நல்ல விளைவை உண்டக்குவதால் அவர்களுக்கு மகிழ்ச்சி. அவ்வாறு குழந்தையை அடிப்பதன் நீண்டகால விளைவாக அக்குழந்தை தன் வாலிப வயதில் முரட்டுத்தனம் மிக்கதாக மாறிவிடும் என்பதையோ, தங்களை முதுமையின் போது கைவிட்டு விடும் என்பதையோ அவர்கள் உணரத் தலைப்படுவதில்லை. அதே சமயம் அக்குழந்தை தன்னை அடிப்பதை நல்ல செயலாக ஏற்றுக் கொள்வதில்லை. மேலும், முதுமையின் போது பெற்றோரைக் கைவிடுவதை கெட்ட செயலாகவும் கருதுவதற்கு இடமில்லை. ஆக, இங்கே நல்ல செயல், கெட்ட செயல் என்பவை மனிதர்களைப் பொருத்து சார்புத் தன்மையைப் பெற்று விடுகின்றன.

எங்கள் ஊரிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் போதெல்லாம் அங்கு வரவேற்பறையில் ஒரு கண்ணாடித் தொட்டியில் ஒரு பெரிய வண்ணமீன் சிரமப்பட்டு நீந்திக் கொண்டிருப்பதைக் கவனிப்பேன். வாஸ்து என்ற பெயரில் ஒரு உயிரை அதன் இயல்பிடத்திலிருந்து விலக்கி தனது வரவேற்பறையில் வைத்து வாட்டிக் கொண்டிருக்கும் மனித செயலைக் கண்டு மனம் மிக வருந்துவேன். அப்போதெல்லாம் எனக்கு ஒன்று தோன்றும். இந்த மீனை எப்படியாவது விடுவித்துக் கடலில் கொண்டு சேர்த்துவிட வேண்டுமென்று. அப்படியொரு நாள் அந்த மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது இதே சிந்தனை அப்போதும் எனக்குத் தோன்றியது. மேலும், கூடுதலாக ஒரு சிந்தனையும் தோன்றியது. அதாவது, நான் அந்த மீனைக் கடலில் கொன்டு போய் விட்டதும் அந்த மீனை வேறொரு பெரிய மீனோ, திமிங்கிலமோ தின்று விட்டால் என்னாவது என்று தோன்றியது. என்னைப் பொருத்தவரை அந்த மீனை விடுவிப்பது ஒரு நல்ல செயலாக இருக்கலாம். உடனடி விளைவாக அச்செயல் அம்மீனுக்குச் சுதந்திரத்தையும், எனக்கு மகிழ்ச்சியையும் கொடுத்து விடலாம். ஆனால், தொடர்ச்சியான விளைவாக அந்த மீன் வேறொரு மீனுக்கு இரையாகி விட்டால் நான் செய்த செயல் எப்படி நல்ல செயலாக இருக்க முடியும்? மருத்துவமனையிலேயே இருந்திருந்தால் குறைந்த பட்சம் அம்மீன் உயிரோடாவது இருந்திருக்குமே. அப்படியானால், அந்த மீனின் சுதந்திரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற என் எண்ணம் தவறா? இல்லை. சிந்தித்துப் பார்த்தால் இதெல்லாம் அம்மீனைக் கடலிலிருந்து பிடித்தவனின் செயலின் தொடர்விளைவுகள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். அவன் அம்மீனைப் பிடித்திருக்காவிட்டால் அதை மருத்துவர் தன் மருத்துவமனைக்குக் கொண்டு வந்திருக்க மாட்டார் (வேறு யாரிடமாவது வாங்கியிருப்பார் எனச் சொல்லக் கூடாது. நான் சொல்வது வண்ண மீன்களை யாருமே பிடித்து விற்கக் கூடாது என்ற பொருளில்); அவர் கொண்டு வந்திருக்காவிட்டால் எனக்கு அதை விடுவிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்காது; பின்னர் அதைக் கடலில் கொண்டு போய் விட்டிருக்க மாட்டேன்; அதை இன்னொரு மீன் தின்றிருக்காது; எனக்குக் குற்ற உணர்ச்சியும் வந்திருக்காது. நீங்கள் கேட்கலாம், யாரும் பிடித்திருக்காவிட்டாலும் கடலில் அம்மீனை வேறொரு மீன் சாப்பிட வாய்ப்பிருக்கிறதே என்று. உண்மைதான்; ஆனால், அவ்வாறு சாப்பிட்டிருந்தாலும் அது இயல்பான நிகழ்வாகவே இருந்திருக்கும். காரணம், மனிதன் அந்நிகழ்வைக் காண வாய்ப்பில்லாததால் அதனை நல்லது, கெட்டது எனப் பிரித்துப் பார்க்கும் வாய்ப்புமில்லை. மேலும், மீன்களிடம் நல்ல செயல், கெட்ட செயல் எனப் பிரித்துப் பார்க்கும் அறிவில்லை என நம்பப்படுவதால் அவற்றிடம் குற்ற உணர்ச்சியும் இருந்திருக்காது.

நம்மைப் பொருத்தவரை விளைவுகளைப் பொருத்து நமது செயல்களை நல்ல செயல்கள் என்றும் தீய செயல்கள் என்றும் நம் அறிவுக்குட்பட்டுப் பிரித்து வைக்கிறோம். ஆனால், அச்செயல்கள் மூலம் குறிப்பிட்ட விளைவுகள் கிட்டாதபோது நாம் ஏமாற்றமடைகிறோம். இதற்குக் காரணம் விளைவுகளை நம்மால் கட்டுப்படுத்த முடியாததுதான். விளைவுகளைத்தான் நம்மால் கட்டுப்படுத்த முடியாதேயொழிய நமது செயல்களை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.

எனவே, நல்லவை, தீயவை என்பதையெல்லாம் தாண்டி நாம் செய்யும் செயல்களின் மீது மிகுந்த விழிப்புணர்வோடிருந்தால் அதுவே இப்பேரண்டத்திற்கு நாம் ஆற்றும் நமது பங்காக இருக்கும். போகிறபோக்கில் சாலையோரம் நாம் துப்பிவிட்டுப் போகும் எச்சில் கூட நோய்க்கிருமிகள் இருக்கும் நிலையில் பலருக்கும் நோயைப் பரப்பி விடும் என்பதால் நமது ஒவ்வொரு செயலின் மீதும் அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், எவ்வளவு பெரியதாக இருந்தாலும் நமக்கு மிகுந்த விழிப்புணர்வு தேவை. எந்தவொரு செயலின் உடனடி விளைவுகளை மட்டுமே நம்மால் அனுமானிக்க முடியும் என்பதால், அது தொடர்ச்சியான விளைவின் ஒரு பகுதிதான் என்பதையும் அதன் இறுதியான விளைவை நம்மால் அனுமானிக்க முடியாது என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதுவே இக்கட்டுரை வலியுறுத்தும் விழிப்புணர்வாகும். இந்த விழிப்புணர்வுடன் கூடிய வாழ்க்கையையே ஜென் வலியுறுத்துகிறது என்பதையும் இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

எனவே, விழிப்புணர்வுடன் இருக்கும் ஒருவனால் நன்மையும் செய்ய முடியாது; தீமையும் செய்ய முடியாது. அவனால் முடிந்ததெல்லாம் விழிப்புணர்வுடன் செயல்படுவது மட்டுமே.

இப்போது தொடக்கத்தில் நாம் கண்ட இரு வாசகங்களை இக்கட்டுரையின் முடிவிலிருக்கும் நாம் இப்படியாக மாற்றிக் கொள்வோம்.

விழிப்புணர்வோடு சிந்திப்போம்; விழிப்புணர்வோடு செயல்படுவோம்; நல்லதே நமக்கு நடக்காவிட்டாலும் கூட.