Wednesday, October 21, 2015

நம்பிக்கை துரோகம் எவ்வாறு நிகழ்கிறது, ஏன்?

நம்பிக்கை துரோகம் எவ்வாறு நிகழ்கிறது, ஏன்? 
அவன் இப்படி நடந்துக்குவான்னு, நான் கனவுல கூட நினைக்கலை…’  ‘அவளை அவ்வளவு நம்பினேன்; இப்படி கழுத்தறுப்பாள்ன்னு நான் நினைச்சு கூட பார்த்ததில்லை…’ என்று இப்படிப்பட்ட வாக்கியங்களை, நீங்கள், வாழ்வில் இதுவரை உச்சரிக்காதிருந்தால், இதுபற்றி எனக்கு மகிழ்ச்சி.

ஆனால், பெரும்பாலானவர்களின் வாழ்க்கைப் பாதைகளில், எண்ணற்ற நம்பிக்கை துரோகங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.  நான் சொல்லப் போவது பழைய உதாரணம் தான்.  ஒரு விரலை, எதிராளியை நோக்கி சுட்டிக் காட்டும் போது, அதைவிட அதிகமான விரல்கள், நம்மை நோக்கி இருக்கின்றன என்பதை, எவரேனும் மறுக்க இயலுமா?
 
ஆம்… நான் சொல்ல வருவது, இத்தகைய நம்பிக்கை துரோகிகளை வளர்த்தவர்கள் நாம் தான் என்று சுட்டி காட்டினால், உங்களுக்கு அது அதிர்ச்சியாக கூட இருக்கலாம்.
 
‘என்னது நானா… நான் எப்படி காரணமாவேன்…’ என்று அப்பாவித்தனமாக கேட்பவர்கள் உண்டு.
 
இக்கட்டுரையின், இறுதியில், ‘அதானே… நீங்க சொல்றது சரி தான்…’ என்று நீங்களும் ஏற்பீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.
 
‘நண்பர்களுக்கு வெள்ளி பாத்திரங்களில் விருந்து கொடு; விருந்து முடிந்ததும் பாத்திரங்களின் எண்ணிக்கையை சரி பார்த்துக் கொள்…’ என்று மேலைநாடுகளில் வேடிக்கையான பழமொழி உண்டு.
 
நம்பிக்கை துரோகம் பற்றி பேசும் போதும், இதை ஒட்டிய கருத்தை தான், நான் கூற வேண்டியிருக்கிறது.
 
ஒருவரை, 100 சதவீதம் நம்பும் போது, அவர் அதை அளவு கடந்து பயன்படுத்தி கொள்வதோடு, எல்லை தாண்டவும் செய்கிறார். நம்பிக்கை துரோகத்தின் வித்து, இங்கே தான் முதலில் விதைக்கப்படுகிறது.
 
குதிரைகளை அவிழ்த்து விடலாம் தான்; ஆனால், லாயங்களை பூட்டி விட வேண்டும் என்கிற விதி, பலருக்கு புரியாததாலேயே, மிக பெரிய தவறுகள் நிகழ்கின்றன. பாதி சுதந்திரம் தந்து, மீதி சுதந்திரத்தை கையில் இறுக்க பிடித்து கொள்ளாதவர்கள், நிச்சயம், பின் வருந்த வேண்டி வரும்.

பால் ஒழுக்க தவறுகளின் பிரச்னைக்கு, முதலில் வருகிறேன். இதை முடிந்த வரை, நாகரிகமாக சொல்லி, எல்லையோடு நின்று கொள்கிறேன்.

வீட்டு சாப்பாடு சரியில்லாத போது, அது சரிவர கிடைக்காத போது, மனிதனின் நாக்கு, ஓட்டல் உணவை நாடுகிறது. ஓட்டல் மீது நாட்டம் ஏற்படாதபடி பார்த்து கொள்ளாத கையாலாகத்தனம் தான், இவ்விஷயத்தில் நம்பிக்கை துரோகம் வளர காரணமாகிறது.
 
இத்தகைய நம்பிக்கை துரோகங்கள், சட்டென நிகழ்வது இல்லை. அரும்பாகி, மொட்டாகி, பூவாகி, அது மலரும் முன், ஆரம்பத்திலேயே கரு(வறு)க்கப்பட வேண்டும்.
 
இதற்கு, ஒரு மூன்றாவது சிறப்புக் கண் இரு தரப்பினருக்கும் வேண்டும். ‘கொஞ்ச நாளா சரியா இல்லையே…’ என்கிற பார்வை செலுத்தப்பட வேண்டும்.

சிறு சிறு மாறுபாடுகள் உணரப்பட வேண்டும். சந்தேக கண் கொண்டல்ல; நுணுக்கக் கண் கொண்டு பார்க்க வேண்டும். பணம் சார்ந்த நம்பிக்கை துரோகங்களை பார்ப்போம். இடுப்பை விட்டு போய்விட்ட காசு, இருப்பில் சரியாக இருக்கிறதா என்கிற பார்வை, ஒவ்வொருவருக்கும் அவசியம்.
 
‘என்னை நீங்கள் சந்தேகப்படுகிறீர்களா?’ என்கிற கேள்வி, பொறுப்பை ஏற்று கொண்டவர்களால் கேட்டு விட முடியாதபடி, ஆரம்பத்திலிருந்தே என் கடமைகளுள் ஒன்று, ஒவ்வொன்றையும் மேற்பார்வை இடுவது என்கிற பாணியில், உள்ளே மூக்கை நுழைத்து விட வேண்டும். இதுவரை, அப்படி மூக்கை நுழைத்தது இல்லையா? இனி, ஒரு விதி செய்வோம் என, மூக்கை, நாளையே நுழைத்து விடலாம்; தவறில்லை.
 
பல நாட்களாய் திறக்கப்படாத மர அலமாரிகள், கரையான்களின் புகலிடமாகின்றன. இப்படிப்பட்ட காட்சிகள் நமக்கு புதிதா என்ன! அவ்வப்போது திறந்து, சரி பார்த்து, துடைத்து, அந்துருண்டைகளை வைக்காமல் இருக்கலாமா? 

மனிதர்களும் இப்படித்தான். கண்காணிக்கப்படாத மனிதர்கள், கணிக்க முடியாத தவறுகளையும், கணக்கிலடங்காத தவறுகளையும், கண்டபடி நிகழ்த்தி வருகின்றனர் என்பதே உண்மை. இது, சில நேரங்களில், சிலர் விஷயங்களில் நடவாது என்றாலும், இவர்களது அறியாமையால், இவர்களுக்கு கீழே உள்ளவர்கள், கொட்டமடித்துக் கொண்டிருப்பர். நாள்பட கவனிக்கப்படாத எதிலும், நம்பிக்கை துரோகங்கள் எனப்படும் நட்டுவாக்காளிகள் நடமாட்டம் தவிர்க்க இயலாததாகிவிடும்.
 
மனித மனம் என்பது, புனிதங்களின் புகலிடம் அல்ல. இது, பற்பல விகாரங்களின் கூடாரம். யார் மனதில், என்னென்ன கெடுதல் எண்ணங்கள் இருக்குமோ நமக்கு தெரியாது. இதை கணித்தறியும் சக்தி, நமக்கு இயல்பாகவே இல்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். எது ஒன்றும் பூதாகரமாக புறப்படுவதற்கு முன் இறங்குவோம் களத்தில்!

நெல்லை விதைத்து விட்டு, பாராதிருந்தால், அதில் புல்மண்டி விட வாய்ப்பு இருக்கிறது; இதை இனியேனும் உணர்ந்தால் சரி!

No comments:

Post a Comment