Wednesday, October 21, 2015

பிறரை வசப்படுத்துவது எப்படி?

பிறரை வசப்படுத்துவது எப்படி?

பிறரை வசப்படுத்தும் கலை மட்டும் கை வரப்பெற்று விட்டால், வாழ்வின் பாதி சவால்களுக்கு விடை கண்டு விடலாம். ‘பிறரை வசப்படுத்தி என்ன ஆகப் போகிறது… இதெல்லாம் அனாவசியம்; தேவையில்லாத வேலை. எவன் தயவும் எனக்கு தேவையில்ல…’ என்று வாதிடும் வறட்டுவாதிகளையும் கூட, இக்கட்டுரை சிறு மன மாற்றத்திற்கு வித்திடும் என்ற நம்பிக்கை, எனக்கு உள்ளது.
 
மனிதனின் மிகப் பெரிய பலவீனம் அன்பிற்கு ஏங்குவது! இப்படி ஏங்குவதை கூட ஏனோ சிலர் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. ஒரு பாலைவன பயணிக்கு நீர் கொடுப்பதை விடவும் தேவையான விஷயம் இது. அன்பின் முதல் அடையாளம், புன்னகை; பின், கனிவான சொற்கள், மரியாதை மிகுந்த உடல்மொழிகள். நிறைவாக, மனிதநேயத்தை வெளிப்படுத்தும் அணுகுமுறைகள்.
 
‘என்னை எவனும் மதிப்பதில்லை; யாரும் பொருட்படுத்துவதில்லை; ஒரு உதவி கூட ஒருத்தனும் செய்றதில்லை. மோசமான உலகமிது…’ என்று ஒருவர் புலம்பினால், கோளாறு இவரிடம் தான் உள்ளது என்பது மிகத் தெளிவு.
 
‘பணமிருந்தா தான் மதிக்கிறாங்க; இல்லைன்னா எவன் மதிக்கிறான்…’ என்று வாதிடுவோரும் இருக்கின்றனர்.
 
பொதுவாழ்வில் அதிகம் நேசிக்கப்படுபவர்களின் பட்டியலை எடுங்கள். இவர்களுள் பணத்திற்காக மட்டும் மதிக்கப்படுபவர்களை ஓரங்கட்டுங்கள். மீதமிருப்பவர்களுக்கு இவர்கள் என்ன பதில் சொல்லப் போகின்றனர்? அன்னை தெரசா பணத்திற்காகவா மதிக்கப்பட்டார்?
 
சமூகத்தை ஒட்டு மொத்தமாக குற்றவாளிக் கூண்டிலேற்றி குற்றம் சாட்டும் இவர்களிடம் ஒரு பதில் வாதம் வைக்கட்டுமா… மற்றவர்களை வசப்படுத்த தெரியாமல் போன குறை உங்களிடம் இருப்பதால் தான், இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளீர்கள் என்கிறேன் நான். வாருங்கள் பதிலோடு வாதிடுவோம்!
 
ஒரு கூட்டத்தில், தனக்கு முன் பேசியவரை, அடுத்து பேசியவர் கடுமையாக குறை கூறினார். (இத்தனைக்கும் அது பட்டிமன்றம் அல்ல!) பலருக்கும், ‘என்ன அருமையான கோணம்; பிரமாதமான வாதம்…’ என்று தோன்றியது. சுட்டிக்காட்டப்பட்டவர், ‘ஸ்கேன் எந்திரம் கூட இப்படிக் கண்டுபிடிக்காது; இதை நான் வரவேற்கிறேன். என்னை நான் திருத்திக் கொள்கிறேன்…’ என்று கூறினார். அன்றைய கூட்டத்தின் நாயகராக ஆனவர் இவர் தான்.
 
தோற்றத்தால் வசப்படுத்த முடியாதவர்கள், உடையால் வசப்படுத்தலாம்; (பிரமாதமான டிரஸ் சென்ஸ் இவருக்கு) இரண்டும் இல்லாதவர்கள், பணிவால் வசப்படுத்தலாம்.
 
போலித்தனம் இல்லாத வார்த்தைகளால் வசப்படுத்தலாம்; கருணையால், பரிவால் வசப்படுத்த முடியாதவர்கள், இவ்வுலகில் மிகக்குறைவு.
 
வீட்டில் ஒரு பழுது; அதைச் சரிசெய்ய வரும் ஊழியரை, ‘எப்ப சொன்னேன்; இப்பத்தான் வர்றே…’ என்று வரவேற்பதைக் காட்டிலும், அதையே சிறிது மாற்றி, ‘வாங்க வாங்க… உங்களை தான் ஆர்வமா எதிர்பார்த்துட்டிருக்கோம். முதல்ல டீ, காபி; அப்புறம் தான் வேலை…’ என்று கிண்டலடிக்காத தொனியில் சொல்லுங்கள்.
 
வேலையின் தரம் உயர்ந்து, கூலி குறையா விட்டால் என்னைக் கேளுங்கள். ஏனோ ஊழியர்களை மிக மோசமாகவே நடத்துகிறோம். அவர் மனதிற்குள் ஓடும், ‘நெகட்டிவ்’ ஒயரை தொடாதீர்கள்; ‘ஷாக்’ தருவார். ‘பாசிட்டிவ்’ ஒயரை தொடுங்கள்; அவர் நம் வசமாவார்.
 
சிறு சிறு உதவிகளால் பிறரை வசப்படுத்தலாம்; விமானம், ரயில் மற்றும் பேருந்தில், உங்களது சக பயணிகளை சிறு செயல்களால் வசப்படுத்துங்கள். பயணமே இனிமையாகி விடும். வசப்படுத்துறதாவது வெங்காயமாவது என்று நடந்து பாருங்கள்… பயணத்தின் இனிமையை சக பயணிகள் எப்படிப் பறித்து விடுகின்றனர் என்பதை உணர்வீர்கள்.
 
திறமைகளை காட்டி வசப்படுத்துங்கள்; பணமும், புகழும் கை கட்டி, உங்களுக்கு சேவகம் புரியும்.

நோட்டால் (பணத்தால்) வசப்படுத்துங்கள்; நீங்களும் இந்திரன், சந்திரன் தான்.
பலத்தால் வசப்படுத்துங்கள்; உலகமே உங்களை அண்ணாந்து பார்க்கும்.
 
பிறரை வசப்படுத்தி வாழும் வாழ்க்கை இனியது மட்டுமல்ல, சுவை மிகுந்ததும் கூட!

No comments:

Post a Comment