Wednesday, October 21, 2015

வெற்றி நிச்சயம்: அப்துல்கலாம்

வெற்றி நிச்சயம்: அப்துல்கலாம்
abdul kalam1மாணவர்கள் விடாமுயற்சியுடன் உழைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம், மேலும், தன்னம்பிக்கை மட்டுமே வெற்றிக்கான ரகசியம் என தெரிவித்துள்ளார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம்.

சென்னை, சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள ரோசரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளிக்கூட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் முன்னாள் குடியரசுத் தலைவரும், இந்திய விஞ்ஞானியுமான அப்துல்கலாம். விழாவுக்கு வந்திருந்த அவரைப் பள்ளிக்கூட நிர்வாகி சகோதரி லீனா டிசவுசா, தாளாளர் சகோதரி சிறியபுஷ்பம், பிரின்சிபால் சகோதரி மேரிஜக்காரியா ஆகியோர் வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து, பள்ளிக்கூட வளாகத்தில் மாணவிகளால் அமைக்கப்பட்டிருந்த அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்த அப்துல்கலாம், அதில் இடம்பெற்றிருந்த, பி.எஸ்.எல்.வி.ராக்கெட், செவ்வாய் கிரகத்தில் ராக்கெட் இறங்குவது, நீர் ராக்கெட் உள்ளிட்ட அறிவியல் சாதனங்களை பார்வையிட்டு அதனை உருவாக்கிய மாணவிகளைப் பாராட்டினார்.

அதன்பிறகு, மாணவிகள் மத்தியில் அப்துல் கலாம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது :-

உழைப்பு முக்கியம்…

பறக்கவேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழிவகுக்கும். அந்த லட்சியத்தை அடைய என்ன செய்யவேண்டும். என்னுடைய கருத்து என்னவென்றால், உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும். லட்சியத்தை அடைய அறிவாற்றலை பெருக்கவேண்டும். அதை அடைவதற்கு உழைப்பு முக்கியம்.

வெற்றி நிச்சயம்…

உழை, உழை, உழைத்துக்கொண்டே இரு. அத்துடன் மாணவ-மாணவிகளுக்கு விடாமுயற்சியும் இருக்கவேண்டும். விடாமுயற்சியுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம். நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும். நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை.

எண்ணிய எண்ணியாங்கு….

நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும். தாமஸ் ஆல்வா எடிசன், ரைட் சகோதரர்கள், அலெக்சாண்டர் கிரகாம்பெல், சர்.சி.வி.ராமன், மேடம் கியூரி, சீனிவாச ராமானுஜம் போன்றோர் தங்கள் லட்சியத்தில் எள்ளளவும் விலகாமல் தங்கள் லட்சியத்தை அடையும் வரை மனம்தளராமல் உழைத்ததால் வெற்றிபெற்றார்கள். அதை நீங்கள் மனதில்பதியவைத்துக்கொண்டால், நீங்களும் லட்சியத்தை அடையமுடியும்’ என இவ்வாறு அவர் உரையாற்றினார்.

அதேபோல், சென்னை அடையாரில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன (சி.எல்.ஆர்.ஐ) வளாகத்தில் உள்ள அரங்கத்தில் நடைபெற்ற ‘ஹீமோபிலியா சொசைட்டி’ (ரத்த உறையாத குறைபாடு) சென்னை கிளையின் வெள்ளி விழா நிகழ்ச்சியிலும் அப்துல்கலாம் கலந்து கொண்டார்.

தன்னம்பிக்கை வேண்டும்….

அங்கு ஹீமோபீலியா பாதிக்கப் பட்ட குழந்தைகளுடன் கலந்துரையாடினார் அப்துல்கலாம். அப்போது ஹீமோபிலியா குறைபாடால் பாதிக்கப்பட்ட ஹேமந்த்ராஜ் என்ற சிறுவன் ‘உங்களை போன்று என்னாலும் அறிவியல் விஞ்ஞானியாக வர முடியுமா?’ எனக் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கலாம், ‘தன்னம்பிக்கை இருந்தால் எதுவேண்டுமானால் ஆகலாம்’ எனப் பதிலளித்தார்.

சிரிக்கவும்…சிந்திக்கவும்….

தொடர்ந்து ஹீமோபிலியா குறைபாடால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எழுப்பிய கேள்விகளுக்கு நகைச் சுவையாக பதிலளித்தார். நிகழ்ச்சியில் ஹீமோபிலியா சொசைட்டி சென்னை கிளையின் தலைவர் டாக்டர் ஆர்.வரதாராஜன் வரவேற்று பேசினார். பொருளாளர் அம்பிகா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஹீமோபிலியா குறைபாட்டில் பாதிக்கப்பட்ட குழந்தைகளும், அவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment