தன் வாழ்வில் முன்னேற விரும்புபவன் ஆறு குணங்களை விட்டுவிட வேண்டும் என்கிறது விதுரநீதி......
அவை
1. தூக்கம்,
2. சோர்வு,
3. அச்சம்,
4. கோபம்,
5. சோம்பேறித்தனம்,
6. காரியத்தை ஒத்திப்போடுதல்.
விதுரரே அந்த ஆறு குணங்களை விட்டதால்தான் பஞ்ச பாண்டவர்களை எல்லா ஆபத்தில் இருந்தும் காப்பாற்றினார் எப்படி?
மாமன், சகுனி, துரியோதனின் பங்காளிகளை வேருடன் களைய திட்டம் தீட்டினான். வாரணாவதம் எனும் இடத்தில் விளையாட்டுகளைக் கண்டு களித்து ஒரு வருடம் சுகவாசியாக அரசு மாளிகையில் தங்கி உடல், மனம் இவற்றைத் தேற்றிக்கொள்ள பாண்டவர்களை அனுப்பினான். கூடவே குந்தியும் சென்றாள். திருதராஷ்டிரனே உத்தரவு போட்டதால் யாருக்கும் சந்தேகமே வரவில்லை.
சகுனியின் நம்பிக்கைக்கு உகந்த புரோசனன் எனும் கட்டிடக் கலை நிபுணன் உதவியால் அரசு மாளிகை அரக்கு மாளிகையாகக் கட்டப்பட்டது. மரத்தால் கட்டப்பட்ட கிரிடாக்ரஹம் (விளையாட்டு மாளிகை) சகுனியின் உத்தரவுப்படி அரக்கினால் பூசப்பட்டது. இன்னும் சில இடங்களில் வெறும் நெய், கொழுப்பு என்று சீக்கிரம் எரியும் பொருட்களால் நிரப்பப்பட்டது. ஒரே வாசல் வழியேதான் உள்ளேயும் வெளியேயும் போக முடியும். பாண்டவர்கள் வாரணாவதத்துக்குக் கிளம்பும் போது விதுரர், சாப்பாட்டில் விஷம். அக்னி இரண்டிலும் மிக மிக னாக்கிரதையாக இருக்கும்படி தருமரிடம் கூறினார். அவர்கள் சென்றபின் முழு விவரமும் அறிந்த விதுரர் உறங்கவே இல்லை. தூக்கத்தைக் கைவிட்டார். அரக்கு மாளிகையில் இருந்து பாண்டவர்கள் தப்ப, சுரங்கம் தோண்டுவதில் நிபுணன் ஒருவனை அனுப்பிவைத்தார் விதுரர். பகலில் புரோசனனை அழைத்துக்கொண்டு பாண்டவர்கள் சென்ற சமயத்தில், அவன் சுரங்கபணியில் ஈடுபட்டான்.
அதேசமயம் துரியோதனன் அருகிலேயே இருந்தார் விதுரர், சிறிதும் பயப்படவில்லை. சகுனி துளி மோப்பம் பிடித்தாலும். விதுரர்உயிருடன் இருப்பது கடினம். அவர் அச்சப்படவில்லை. பீஷ்மரிடம் இதைப்பற்றி மூச்சும் விடவில்லை. துரியோதனன் செய்த ஏற்பாட்டை முறியடிக்க, ஒரு நிமிடத்தையும் வீண் செய்யவில்லை. நாளைக்குச் செய்யலாம் என ஒத்திப் போடவில்லை. சுரங்கம் அமைக்கும் பணி நிறைவடைந்தது அரக்கு மாளிகைக்கு வந்த ஒரு வேட்டுவப் பெண், தன் ஐந்து மகன்களுடன் விருந்தும் மதுவும் உண்டு களித்தாள். அந்த மாளிகையில் அவர்கள் மயங்கிக் கிடந்தபோது, கடைசியாக வெளியேறிய பீமன் ஒரு தீப்பந்தத்தை மாளிகையின்மேல் எறிந்துவிட்டுச் சென்றான். அதுவே கடைசி விருந்தாக ஆயிற்று அவர்களுக்கு! பாண்டவர்கள் இறந்ததாக எல்லோரும் நினைத்தார்கள். அதேசமயம் விதுரர் அனுப்பிய ஆள் சுரங்கம் வழியாக கங்கைக் கரைக்கு அவர்களை அழைத்துச் சென்றான். பாண்டவர்கள் பிழைத்தார்கள். ஏக சக்ர நகரத்தில் வசித்தார்கள். என்றெல்லாம் மகாபாரதம் விரிகிறது என்றால், அதற்குக் காரணம் விதுரரின் இந்த குணங்கள்தான்!
ஷட்தோஷாஹா புருஷேணேஹ
ஹாதவ்யா பூதிமிச்சதா!
நித்ரா தந்த்ரா பயம் குரோத
ஆலஸ்யம் தீர்க சூத்ரதா.
No comments:
Post a Comment