Wednesday, May 14, 2014

கருணை தெய்வம் காயத்ரி தேவி

கருணை தெய்வம் காயத்ரி தேவி

அது பிரம்ம முகூர்த்தம். ஆதவன், தன் பொன்கிரணங்களை புவியில் செலுத்த, புரவியில் அமர்ந்து புறப்பட ஆயத்தமானான்.  அதி காலையின் மெல்லிய குளிர்ச்சியால் மோனத் தவத்தில் ஆழ்ந்திருந்த விஸ்வாமித்திரர் சிலிர்த்துக்கொண்டார். அவரது உள்ளம் பேரானந்தத்தில் திளைத்தது. மெல்ல கண்களைத் திறந்து பால்வெளியைப் பார்த்தார். பார்வை தீட்சண்யமாக ஆகாயத்தை ஊடுருவியது. பல லோகங்களைத் தாண்டிப் பயணித்த அந்த பார்வை மிகப் பிரகாசமாய் ஒளிர்ந்து கொண்டிருந்த சில அட்சரங்களை தரிசித்தது. அந்த எழுத்துகளை மனம் உள்வாங்க, உதடுகள் அந்த எழுத்துகளை உச்சரித்தன

ஓம் பூர்ப்புவஸ்ஸுவஹ
தத்ஸ்வ விதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்

இதற்கு என்ன பொருள்? புத்தி ஆராய்ந்தது. மனதில் சூரியன் சிரித்தான். இதோ வெளியே இருக்கும் என்னை உன் உள்ளேயே கண்டு கொள். அதற்கு  புத்தியை தூண்டவேண்டுமல்லவா? யார் அந்த புத்தியை தூண்டுவது? அதற்காக யாரை வேண்டுவது என அடுக்கடுக்காய் கேள்விகள் எழ அர்த்தம் புரிந்தது.

ஓம். நம் அறிவை விகசிக்கச் செய்கின்ற சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக. அற்புதம். சரி, ‘நம்’ என்றால்...  எல்லோரும். எல்லோரும் என்றால்?  மனித குலம் அனைத்துக்குமான மந்திரமிது. மந்திர ராஜம். மந்திரங்களின் தாய். எங்கிருந்து ஒளிர்கிறது இந்த மந்திரம்?  ரிக் வேதத்திலிருந்து! விஸ்வாமித்திரர் வியந்தார். உலகம் உய்ய வேதமாதா தம்மூலமாக பூமிக்குள் பிரவேசமானது குறித்து மகிழ்ந்தார். உருவத்தை விட உச்சரிப்பில் சக்தி வாய்ந்தவளாய் மந்திரமாதாவாக விளங்கப் போகிறாள் எனக் குளிர்ந்தார். 

‘‘தாயே காயத்ரி... தாயே.. காயத்ரி’’ என அந்த மந்திர வலிமையைப் போற்றித் துதித்தார். மந்திரத்திற்கு உருவம் தந்து, காயத்ரியை தேவியாக்கி ஞான உலகத்திற்கு தந்தார். பிரம்ம ரிஷியாய் உயர்ந்தார்.  -இவை எல்லாம் புராணம் சொல்லும் தகவல்கள். இந்த காயத்ரி மந்திரத்தின் மகிமை சொல்லி மாளாது. காயத்ரி மந்திரத்தை தினமும் ஜபிப்பவர்களின் அனைத்து நியாயமான ஆசைகளும் நிறைவேறும். ஆத்ம சுத்தி கிடைக்கும். அவர்கள் இந்த உலகத்தில் சகல வளங்களையும் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்வார்கள் என உறுதி செய்கிறார்கள் ரிஷிகள். 

இத்தனை சிறப்பு வாய்ந்த காயத்ரி தேவிக்கு கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் தனிக் கோயில் இருக்கிறது. கஞ்சித் தொட்டி பேருந்து நிறுத்தத்திலிருந்து 15 நிமிடம் நடந்தால் கோயிலை அடையலாம்.காயத்ரி மந்திரம் மிகச் சிறியதாக இருந்து, மிகப்பெரிய மகத்துவத்தோடு விளங்குவது போலவே அன்னையின் ஆலயமும் உள்ளது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. வினைப்பயனால் கடுமையான தோஷங்களால் பீடிக்கப்பட்ட ஒரு மன்னன் தன் தோஷங்கள் நீங்க தல யாத்திரை மேற்கொண்டான். தில்லைக் காளியை தரிசித்து விட்டு, சிதம்பரம் நடராஜப் பெருமானை தரிசிக்க முகாமிட்டிருந்தான். 

அப்போது அந்த ஊரில் வசித்து வந்த ஒரு வேதியர் மன்னரின் பிரச்னையைக் கேள்வியுற்றார். அவர் தினமும் பல ஆயிரக்கணக்கில் காயத்ரி மந்திரம் ஜபிப்பவர். மன்னரின் மீது கருணை கொண்ட அவர் தமது காயத்ரி மந்திர ஜப பலனை மன்னருக்கு தாரை வார்த்துக் கொடுத்தார். உடனே மன்னரைப் பீடித்த தோஷம் நீங்கியது. அதனால் மகிழ்ந்த மன்னன், அவருக்கு ஏராளமான செல்வங்களை பரிசளிக்க முன்வந்தான். அதை ஏற்க மறுத்த அவர், ‘‘உங்கள் தோஷம் நீக்கி அருளிய காயத்ரி மாதாவுக்கு ஒரு ஆலயம் எழுப்புங்கள். அதுவே நீங்கள் செலுத்தும் நன்றி’’ என்று கேட்டுக்கொள்ள இந்த ஆலயம் உருவானது என்கிறார்கள்.

சிறிய அழகிய ராஜ கோபுரம் கடந்து உள்ளே செல்ல, கோஷ்டத்தில் சரஸ்வதி, அமிர்தகலசம் ஏந்திய மகாலட்சுமி, அஷ்டபுஜ துர்க்கை ஆகியோர்  அருள்கிறார்கள். கருவறையில் அன்னை காயத்ரி தேவி மேற்கு நோக்கி அருள்கிறாள். ஐந்து திருமுகங்கள், கருணை பொழியும் கண்களுடன் தாமரை  மலரில் வீற்றிருக்கிறாள். அன்னையின் பாதமருகே ஸ்ரீசக்ரம் உள்ளது. காலையில் காயத்ரியாகவும் மதியம் சாவித்திரியாகவும் மாலையில்  சரஸ்வதியாகவும் அருளும் அன்னை இவள். 

இங்கு, ஆவணி மாதம் பௌர்ணமியன்று காயத்ரி ஹோமம் நடக்கிறது. இதில் கலந்து கொள்வோர் சகல வளமும் பெறுகிறார்கள். கருவறையில்  சிரிக்கும் அன்னை, மந்திரமாய் நம் மனதுள் அமர்ந்து ஓங்காரமிட ஆயிரம் சூரியன் மனதில் உதயமாகிறது; நம் துயரெல்லாம் பனியாய் மறைகிறது.  

No comments:

Post a Comment