Tuesday, May 13, 2014

உனக்கு நீயே நண்பனும், பகைவனும்!

உனக்கு நீயே நண்பனும், பகைவனும்!

அடுத்ததாக தியான யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு சொல்வது மிக உயர்ந்த அறிவுரை. அது கலப்படமில்லாத சத்தியமுமாகும். அவர் சொல்கிறார்:

தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள வேண்டும். தன்னை எப்போதும் இழிவுபடுத்திக் கொள்ளக் கூடாது. தனக்குத் தானே நண்பன். தனக்குத் தானே பகைவன்.

தன்னை வசப்படுத்திக் கொண்டவனுக்கு தானே நண்பன். தன்னை வசப்படுத்திக் கொள்ளாதவனுக்கு தானே சத்ருவாகி தனக்குக் கேட்டை உண்டாக்கிக் கொள்கிறான்.

ஒவ்வொருவருக்கும் மிக உயர்ந்த நிலைக்குப் போக இயல்பாகவே ஆசை இருக்கிறது. ஆனால் பெரும்பாலானோரும் அதை யாராவது தங்களுக்காக செய்து தர ஆசைப்படுகிறார்கள். கடவுளோ, குருவோ, தலைவனோ, நண்பனோ, அல்லது வேறு யாராவது செய்து தந்தால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்படுகிறார்கள். இப்படி உயர்ந்த நிலைக்குப் போகும் பொறுப்பை அடுத்தவர் தலையில் கட்டுவது ஒருவர் தாழ்ந்த நிலையிலேயே தங்கி விடுவதற்கு நிரந்தரக் காரணமாகி விடுகிறது.

எனவே தான் தன்னை உயர்த்திக் கொள்ளும் பொறுப்பு அவரவருக்கே உள்ளது என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். நான் பலவீனமானவன், சக்தியற்றவன், என்னால் இதெல்லாம் முடியாது, அதெல்லாம் முடியாது என்பதெல்லாம் தன்னைத் தானே இழிவுபடுத்திக் கொள்ளும் வழிகள். தன்னைக் குறைத்துக் கொண்டு யாரும் உயர முடியாது என்பதால் அதை எப்போதும் செய்யக் கூடாது என்று அறிவுறுத்துகிறார்.

ஒரு சிறு விதை நான் எப்படி பெரிய மரமாகப் போகிறேன் என்று தன்னை இழிவாக நினைத்துக் கொள்வதில் அர்த்தமில்லை. அது தளிராகி, செடியாகி, மரமாகத் தேவையான எல்லாமே காலா காலங்களில் கிடைக்கும். கிடைப்பதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு அது தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். அது தான் முறை. அது தான் இயற்கையான வளர்ச்சி. அது தன் ஆரம்ப நிலையில் தாழ்வு மனப்பான்மை கொண்டு தன்னை இழிவாக நினைத்துக் கொண்டு வருத்தத்தில் இருந்து விட்டால் கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு உயரும் நம்பிக்கையையும், தெம்பையும் இழந்து விட்டு அழிந்து தான் போகும்.

இது மனிதனுக்கும் முற்றிலும் பொருந்தும். இலக்கை அடையும் ஆவலை இயற்கையாகவே அவனிடம் ஏற்படுத்திய இறைவன் அதை நிறைவேற்றிக் கொள்ளும் சக்தியையும், சந்தர்ப்பங்களையும் அவனுக்கு ஏற்படுத்தித் தராமல் இல்லை. எது நல்லது எது கெட்டது என்றும், இலக்கை அடைய எது தேவை, எது தேவையில்லை என்றும் பகுத்தறியும் அறிவும் அவனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும் அவன் அதற்கேற்றாற் போல தன் மனதும், நடவடிக்கைகளும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளா விட்டால் அவன் தன்வசமில்லை என்று பொருள். உயர வேண்டும் என்ற நோக்கமும் இருந்து, அதற்கான வழியும் தெரிந்து, அதன் படி அவனால் நடக்க முடியவில்லை என்பதால் அவனுக்கு அவனே பகைவன் ஆகி விடுகிறான். அதனால் அவன் இலக்கு ஒரு கற்பனையாகவே இருந்து விடும். அது மட்டுமல்ல ஆரம்பித்த இடத்தில் கூட நிற்க முடியாமல் தன் முட்டாள்தனமான செயல்களால் அதல பாதாளத்திற்குத் தள்ளப்படுகிறான்.

இது அவன் அவன் தவறுகளுக்கான தண்டனை இல்லை. யாரோ எங்கோ அமர்ந்து தீர்ப்பு வழங்குவதில்லை. தண்டிப்பதில்லை. சுவாமி ராமதீர்த்தர் மிக அழகாகச் சொல்வார். “மனிதன் தவறுகளாலேயே தண்டிக்கப்படுகிறான். தவறுகளுக்காகத் தண்டிக்கப் படுக்கப்படுவதில்லை”. இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசம் கடலளவு பெரிது. அந்தத் தவறுகள் தங்கள் இயல்பான விளைவுகளிலேயே வந்து முடிகிறது. அது தண்டனையாகத் தோன்றினாலும் மனிதனை வேறு யாரும் தண்டிப்பதில்லை. அவன் தன் செயல்களால் தன்னையே தண்டித்துக் கொள்கிறான் என்பதே உண்மை. 

உயர வேண்டும், இலக்கை அடைய வேண்டும் என்று நோக்கம் இருந்து அதற்கான வழிகளை அறிந்து அதற்கேற்றாற் போல் தன் வாழ்வின் ஒவ்வொரு கணமும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும் மனிதன் வழிமாறிப் பயணிப்பதில்லை. தேவையற்றவற்றில் ஈடுபட்டு அவசியமானவற்றை புறக்கணித்து விடுவதில்லை. எது அவன் முன்னேற்றத்திற்கு உதவாதோ அதை ஆரம்பத்திலேயே தள்ளி விட்டு அவசியங்களில் மட்டும் மனதை நிறுத்தி செயல்களும் அது சார்ந்தே இருக்கும்படி பார்த்துக் கொள்கிறான். அவன் தன்னை வசப்படுத்திக் கொண்டவன். அதனால் அவன் தனக்கு நண்பனாகவே செயல்படுகிறான். அவன் உயரவும் செய்கிறான்.

எனவே தான் ஸ்ரீகிருஷ்ணர் தனக்குத் தானே நண்பன் என்றும் தனக்குத் தானே பகைவன் என்றும் உறுதியாகக் கூறுகிறார். எனவே நாம் காரணங்களை வெளியே தேட வேண்டியதில்லை. புறநானூறும் மிக அழகாகச் சொல்கிறது. “தீதும் நன்றும் பிறர் தர வாரா”. எனவே லௌகீகம் ஆகட்டும், ஆன்மிகம் ஆகட்டும், வெற்றி பெறவும், கடைத் தேறவும் மனிதன் முதலில் தன்னையே சரி செய்து கொள்ள வேண்டி இருக்கிறது. அவன் சரியானால் பின் அவனுக்கு உலகமே சரியாகி விடும். 

சரி-தவறு, நல்லது-கெட்டது தெரிந்தும் மனிதன் நல்வழிப்பாதையில் செல்லாமல் இருக்க என்ன காரணம் என்ற கேள்வி நியாயமாக எழுகிறது. உடலில் கட்டுப்பாடு இல்லை, மனதில் கட்டுப்பாடு இல்லை, சம நோக்கு இல்லை, மனத் திருப்தி இல்லை, பகுத்தறிவைப் பயன்படுத்துவதில்லை, ஆன்ம சிந்தனை இல்லை என்ற பல இல்லாமைகள் இதற்குக் காரணமாக இருக்கின்றன.

மிக உயர்ந்த நிலையாக பரமாத்ம நிலை அல்லது யோக நிலை பற்றிச் சொல்லும் ஸ்ரீகிருஷ்ணர் அதைப் பெற்றிடும் வழியை அடுத்ததாகக் கூறும் போது இவற்றைக் கோடிட்டுக் காட்டுகிறார்.

தன்னை வென்றவனும், குளிர்-வெப்பம், இன்பம்-துன்பம், மானம்-அவமானம் எல்லாவற்றையும் சமமாகக் கருதி அமைதியாக இருப்பவன் பரமாத்ம நிலையைப் பெற்றிடுவான்.

ஞானத்தினாலும், பகுத்தறிவினாலும் மனத்திருப்தி அடைந்தவனும் எதற்கும் அசைந்து கொடுக்காதவனும் புலன்களை வென்றவனும், மண்-கல்-பொன் மூன்றையும் ஒரே விதமாக மதிப்பவனும் யோகி என கூறப்படுகிறான்.

யோகியானவன் மனதையும், உடலையும் கட்டுப்படுத்தி, ஆசைகளையும் உடைமைகளையும் கைவிட்டு தனிமையில் இருந்து கொண்டு இடைவிடாத ஆன்மசிந்தனையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

சமநோக்கு பற்றி எல்லா இடங்களிலும் சலிக்காமல் ஸ்ரீகிருஷ்ணர் சொல்ல மிக முக்கிய காரணம் அது இல்லா விட்டால் எதையும் உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ள முடியாது என்பது தான். சரியாகப் புரிந்து கொள்ளாத போது தவறாக நடந்து கொள்வது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. பின் விளைவுகள் அதற்குத் தகுந்தவாறு தொடர நமக்கு நாமே துன்பம் விளைவித்துக் கொள்கிறோம்.

இதில் புதிதாக ஸ்ரீகிருஷ்ணர் வலியுறுத்தும் விஷயம், தனிமையில் ஆன்மிக சிந்தனை. ’இனிது இனிது ஏகாந்தமினிது’ என்ற ஔவையாரின் கூற்றில் பலருக்கும் உடன்பாடில்லை. தனிமை என்பது இக்காலத்தில் ஒரு கொடுமையான விஷயமாகவே பலராலும் கருதப்படுகிறது. சிறிது நேரம் தனிமை கிடைத்தாலும் அது சகிக்க முடியாததாகி விடுகிறது. அந்த நேரத்தில் யாரிடமாவது போன் செய்து பேசினால் என்ன என்று தோன்றுகிறது. எங்காவது போகத் தோன்றுகிறது. இல்லா விட்டால் டிவியையாவது பார்த்துக் கொண்டு பொழுது போக்கத் தோன்றுகிறது.

ஆனால் பல நேரங்களில் ஆழமான உண்மைகளை உணர மனிதனுக்குத் தனிமை தேவைப்படுகிறது. வாழ்க்கையின் அவசர ஓட்டத்தில் இருந்தும், உலகின் இடைவிடாத கருத்துத் திணிப்புகளில் இருந்தும் விலகித் தனியாக யோசிக்க அவகாசம் தேவைப்படுகிறது. அப்போது தான் வாழ்க்கை சரியான பாதையில் தான் போய்க் கொண்டிருக்கிறதா, சொந்த வாழ்க்கை தான் வாழ்கிறோமா, இல்லை யாரோ எவரோ வகுத்த வாழ்க்கை வாழ்கிறோமா, இப்படியே போகும் வாழ்க்கை தான் நம் லட்சியமா, முடிவில் வாழ்ந்த வாழ்க்கையில் உண்மையான திருப்தியை உணர்வோமா என்ற கேள்விகளுக்கெல்லாம் சரியான பதில் கிடைக்கும்.

யோசிக்கவே நேரமில்லாமல் போவது தான் தவறான வாழ்க்கை முறைகளுக்கு முக்கியமான காரணம். யோசித்தால் நம் வாழ்க்கையின் பல குறைபாடுகள் நம் நிம்மதியைக் குலைத்து விடும் என்பதால் பலரும் யோசிக்காமல் இருக்கிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றால் மருத்துவரிடம் போனால் வியாதியைக் கண்டுபிடித்துச் சொல்லி விடுவார் என்று பயந்து கொண்டு அவரிடம் போகாமல் இருந்து விடும் முட்டாள்தனம் போலத் தான். அவரிடம் போனால் வியாதி கண்டுபிடிக்கப்பட்டு குணமடைய வாய்ப்பு உண்டு. போகாமலே இருந்து வியாதியை முற்ற வைத்துக் கொண்டு சீக்கிரமாகவே அழிந்து போவது முட்டாள்தனம் தானே!

எனவே தனிமையும் சிந்தனையும் எந்த நல்ல மாற்றத்திற்கும் சுயமுன்னேற்றத்திற்கும் அத்தியாவசியம். ஸ்ரீகிருஷ்ணர் சொல்வது போல இடைவிடாத ஆன்ம சிந்தனை அனைவருக்கும் உடனடியாக முடியக்கூடியதல்ல என்ற போதும் ஆன்ம சிந்தனையே இல்லாமல் யாரும் உலக வாழ்வில் அமைதியை அடைந்து விட முடியாது என்பது நிச்சயம்.

அடுத்ததாக தியானம் செய்யும் முறையை ஸ்ரீகிருஷ்ணர் விளக்க ஆரம்பிக்கிறார். பார்ப்போம்....

No comments:

Post a Comment