நண்பர்களைச் சம்பாதிப்பது கூட சுலபம்; அவர்களுடன் வாழ்நாள் முழுவதும் தொடர்பில் இருப்பதுதான் கடினம். ஆனால், டெக்னாலஜி இதை எளிமையாக்கிவிட்டது. பால்ய கால தோழிகளின் நினைவுகளை மட்டும் சுமந்துகொண்டு, எப்போது அவர்களை மீண்டும் பார்ப்போம் என ஏக்கத்தோடு அசைபோடும் காலமெல்லாம் போயே போயாச்சு. வெறும் பெயரை மட்டுமே வைத்துக்கொண்டே, ‘பவர் பாண்டி’ போல சில நொடிகளில் தோழிகளை இணையத்தில் கண்டறிந்து ‘ஹாய்’ சொல்லும் அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்துவிட்டது. அப்படி உங்கள் நண்பர்களைக் கண்டறியவும், எப்போதும் அவர்களோடு தொடர்பில் இருக்கவும் உதவும் சில வழிகள் இவை!
ஃபேஸ்புக்கை இப்படியும் பயன்படுத்தலாம்!
எப்போதும் நண்பர்களுடன் இணைந்திருக்க உதவும் சிறந்த சமூக வலைதளம் ஃபேஸ்புக்தான். உங்களது பழைய தோழிகளின் மின்னஞ்சல், கைபேசி எண், இருப்பிடம் சார்ந்து அவர்களைத் தேடிக் கண்டறிய ஃபேஸ்புக் உதவியாக இருக்கும். உங்கள் தொழில் சார்ந்தோ, பொழுதுபோக்கு சார்ந்தோ நீங்கள் உங்கள் தோழிகளுடன் குழுவாக உரையாட விரும்பினால் அதற்கும் வாட்ஸ்அப் போலவே ஃபேஸ்புக்கிலும் குரூப் தொடங்கி உங்களுக்குள் நீங்களே விவாதித்துக்கொள்ள முடியும். ஃபேஸ்புக்கில் இருக்கும் லைவ் வீடியோ ஆப்ஷன் மூலம் நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் எப்போதும் உங்கள் நண்பர்கள் உங்களைக் கவனித்திருக்கும்படி வைத்துக்கொள்ள முடியும். இவையனைத்தையும் சரியாகப் பயன்படுத்தினால் வீக் எண்ட் ட்ரிப் முதல் பர்த்டே பார்ட்டி வரை தோழிகளுடன் எந்நாளும் ஜாலிடேதான்!
நட்புக்குமுண்டோ அடைக்குந்தாழ்?
பள்ளி, கல்லூரி, அலுவலகம், அக்கம்பக்கத்து வீடு எனப் பல இடங்களில் நமக்கு நண்பர்கள் கிடைத்திருப்பார்கள். அவர்களைத் தனித்தனியே ஹேண்டில் செய்ய வாட்ஸ்அப்தான் சரியான வழி. வாட்ஸ்அப் க்ரூப்கள் இதை எளிதாக்குகின்றன. மொபைல் எண் மூலம் இணைந்திருப்பதால் தொடர்புகொள்ள மிக வசதியானது வாட்ஸ்அப். போட்டோ ஸ்டேட்டஸ், வாய்ஸ் காலிங், வீடியோ காலிங் போன்ற வசதிகளும் இருப்பதால் இளைய தலைமுறையின் செல்லப்பிள்ளையாக இருக்கிறது வாட்ஸ்அப். டெலிகிராம், ஹைக் போன்றவையும் வாட்ஸ்அப் போலவே செயல்படும் இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்ஸ்தான். வாட்ஸ்அப் வேண்டாம் என்பவர்கள் இவற்றை முயற்சி செய்து பார்க்கலாம்.
எல்லாம் கூகுள் வசம்!
இந்தக் காலத்தில் ஒருவரின் பெயருக்கு அடுத்து, அவரின் தனிப்பட்ட அடையாளமாக இருப்பது அவரின் மொபைல் எண்ணாகத்தான் இருக்க முடியும். ஒருவரின் மொபைல் நம்பரைக்கொண்டே அவரின் மொத்த ஆன்லைன் ஜாதகத்தையும் எழுதிவிடலாம். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த தொடர்பு எண்களைப் பாதுகாப்பாகக் கையாள உதவுவதில் முக்கியப் பங்கு வகிப்பது கூகுள் கான்டாக்ட்ஸ். உங்கள் மொபைலை கூகுள் அக்கவுன்ட்டுடன் இணைத்து, கான்டாக்ட்ஸ்களை கூகுளுடன் ‘சிங்க்’ செய்தாலே போதும். மொபைலில் இருக்கும் அனைத்து கான்டாக்ட்களும் ‘க்ளவுடில்’ பதிவாகிவிடும். எனவே மொபைலே தொலைந்தாலும்கூட, உங்கள் கான்டாக்ட் எதையும் நீங்கள் இழக்க மாட்டீர்கள். மேலும் ஃபேஸ்புக் போல, கூகுள் காலண்டர் மூலமாகவும் நண்பர்களின் பிறந்த நாளை அறிந்துகொள்ள முடியும்.
ட்விட்டர் இருக்கே பின்தொடர!
இந்தியாவில், ஃபேஸ்புக் போலவே அதிகம் பேர் பயன்படுத்தும் சமூக வலைதளம் ட்விட்டர். இதன் மூலமாகவும் அதிக நண்பர்களைப் பின்தொடரலாம். இதில் உங்கள் நண்பர்களை வகை வகையாகப் பிரித்து லிஸ்ட் கிரியேட் செய்தால் போதும். பின்னர் ட்விட்டரின் TweetDeck தளம் மூலமாக அவர்களை எளிதாகப் பின்தொடரலாம்.
வீடியோ காலிங் இப்போ ரொம்ப ஈஸி!
ஃபேஸ்புக், வாட்ஸ்அப் தாண்டி வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது இணைய சமூகம். போட்டோக்களில் கிரியேட்டிவிட்டியாகக் கதை சொல்ல இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட், நினைத்தநேரத்தில் வீடியோ காலிங் செய்ய வாட்ஸ்அப், ஃபேஸ்டைம், IMO, ஸ்கைப் மற்றும் கூகுள் டுயோ, லைவ் செய்ய ஃபேஸ்புக் மற்றும் பெரிஸ்கோப் என 4G-க்குப் பிறகு ஆன்லைன் ஷேரிங்ஸும் வேகமெடுத்துவிட்டது. வாய்ஸ்காலிங் மூலம் பேசிப்பேசியே பேலன்ஸ் தீர்ந்த காலம் போய், வீடியோ காலிங் செய்து டேட்டா பேலன்ஸ் தீரும் காலம் வந்துவிட்டது. எனவே இன்னும் பேசிக்கொண்டு மட்டுமே இல்லாமல், அவ்வப்போது இப்படி முகம்பார்த்து பேசியும் உங்கள் தோழிகளுக்கு சர்ப்ரைஸ் தரலாம்!
No comments:
Post a Comment