Monday, October 16, 2017

நீங்கள் யார்… ஆந்தையா? சேவலா?

மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதற்கேற்ப இன்று எல்லாமே மாறிவிட்டது. நம்முடைய உணவுப்பழக்கங்கள், வேலை பார்க்கும் முறை, தூங்கும்  நேரம் என்று கடந்த 15 ஆண்டுகளில் தலைகீழ் மாற்றத்தைச் சந்தித்திருக்கிறோம். அவற்றில் குறிப்பாக இரவு நேரப் பணிகள் என்பது இன்று  சாதாரணமானதாக மாறிவிட்டது. இந்த வாழ்க்கைமுறையை வைத்து அதிகாலையில் எழும் பழக்கம் உள்ளவர்களை சேவல் என்றும், இரவில்  பணியாற்றுகிறவர்களை ஆந்தை என்றும் வினோதமாக வகைப்படுத்துகிறார்கள்.

அதேபோல், வேலைத்திறனிலும் இந்த இரண்டு வகையில் யார் சிறந்தவர்களாக இருக்கிறார்கள் என்பது பற்றியும் இப்போது ஆராய்ச்சிகளும், விவாதங்களும் நடந்துவருகின்றன. வாழ்வியல் முறை மேலாண்மை நிபுணரான கௌசல்யாவிடம் இந்த கேள்வியைக் கேட்டோம்…வேலைத்திறனில் சிறந்தவர்கள் யார்… ஆந்தையா? சேவலா?

‘‘இரவுப் பணியைப் பொறுத்தவரை ஒரு மருத்துவர் என்ற முறையில் முதலில் சில விஷயங்களைச் சொல்லிவிடுகிறேன். இரவுப் பணி என்பது  எல்லோருடைய உடல்நிலைக்கும் ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் பகலில் வேலைசெய்து இரவில் தூங்கித்தான் இத்தனை ஆண்டுகாலமாகப்  பழக்கப்பட்டுள்ளோம். இரவுப் பணிகள் 10 சதவீதம் பேரின் உடல்நிலைக்குத்தான் ஒத்துழைக்கிறது. 

இரவில் பணியாற்றுவதற்கு உடல்ரீதியாக ஒருவர் தயாராக இருக்கும் பட்சத்தில்தான் இரவுப் பணியினை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் உடல்நலனும் பாதிக்கப்படும்; வேலைத்திறனும் பாதிக்கப்படும். அதேபோல இரவில் பணியாற்றினாலும், பகலில் பணியாற்றினாலும் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்பது முக்கியம். இரவு பணியாற்றிவிட்டு பகலில் தூங்கும்பட்சத்தில் தூங்கும் அறை இருட்டாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். 

சூரிய வெளிச்சத்தில் உடலுக்குத் தேவையான ஹார்மோன்கள் சுரப்பதில்லை. அதேபோல ஊட்டச்சத்து மிக்க உணவுகளையும் எடுத்துக்கொள்ள  வேண்டும். பாரம்பரிய உணவுகள் எப்போதும் நல்லது. முக்கியமாக இரவில் பணியாற்று பவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவரை அணுகி  ஆலோசனைகள் பெற்றுக் கொண்டு உடல் நலனைப் பேண வேண்டும்’’ என்பவர், வேலைத்திறனில் சிறந்தவர்கள் யார் என்ற கேள்விக்கு சொல்லும்  பதில்… ‘‘வேலைத்திறனுக்கும், கால நேரத்துக்கும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை. 

வேலைத்திறன் என்பது ஒருவரின் தனிப்பட்ட திறமை, ஆர்வம், உழைப்பைப் பொறுத்ததுதான். பகல் நேரத்து பணிகளாக இருந்தாலும் சரி… இரவுப் பணிகளாக இருந்தாலும் சரி… அந்த வேலைச்சூழலுக்கு ஒருவரின் உடல் பழகியிருக்க வேண்டும். அதைப் பொறுத்தே ஒருவரின் உற்பத்தித்திறனைத் தீர்மானிக்க முடியும். செவிலியர்கள், மருத்துவர்கள், ஐ.டி ஊழியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் 18 வயது தொடங்கியே அவர்கள் இரவு வேலை செய்து பழகி இருப்பார்கள்.

இவ்வாறு பழகி இருக்கும்போதுதான் பகலில் வேலைசெய்வதுபோல சுறுசுறுப்பாகவும், அதிக உற்பத்தித் திறனுடனும் வேலை செய்ய முடியும். இரவுப் பணிக்கு பழகாதவர்களால் பகலில் வேலை செய்வதுபோல அதிக உற்பத்தித்திறனுடன் வேலை செய்ய முடியாது. இதுதான் வித்தியாசம். ஆக, இரவில் பணியாற்றுவதற்கு உடல்ரீதியாகவும் பழகிவிட்டால் பகலில் பணியாற்றுபவர்களுக்கு சமமாகவே பணியாற்றுவார்கள். ஆனாலும், உடல் நலம் என்று பார்க்கும்போது இரவில் பணியாற்று பவர்களுக்கு நாளடைவில் பல்வேறு நோய்கள் வரக்கூடிய அபாயம் உள்ளது என ஆய்வில் நிரூபித்திருக்கிறார்கள். அதனால், இரவுப் பணிகளை முடிந்தவரை தவிர்ப்பதே நல்லது!’’

No comments:

Post a Comment