Monday, April 29, 2013

வெற்றி வேண்டுமா வழிகள் இதோ!!


எதைச் செய்தாலும் வெற்றிக்காகவே செய்கிறோம். ஆனால், எப்படிச் செய்கிறோம் என்பதைப் பொறுத்ததுதான் வெற்றியும் தோல்வியும். செய்கிற வேலைகளும் தொழில்களும் வேறுபடலாம். பொதுவானதாக இருப்பது அணுகுமுறையும், நம்மை ஆயத்தம் செய்து கொள்கிற விதங்களும்தான். அவற்றில் கவனம் செலுத்துகிறபோது வெற்றிக்கான விதை விழுகிறது.

நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அதை வெற்றிகரமாகச் செய்வது என்பதை நோக்கி நகர நகர சாதனை என்பதே சுலபமான வேலையாகி விடுகிறது.

அணுகுமுறை எதிலிருந்து ஆரம்பிக்கிறது? எண்ணங்களிலிருந்து ஆரம்பிக்கிறது. எந்தப் பின்புலமும் இல்லாமல் தொடங்கி சிலர் அசகாய வெற்றிகளை எட்டியிருக்கிறார்களே, அந்த வெற்றிகள் எதிலிருந்து தொடங்கின தெரியுமா? அவர்களின் அபிப்பிராயங்களில் இருந்து!! தாங்கள் வெறுமையான சூழலில் இருந்தாலும் அங்கிருந்து வெற்றியாளர்களாய் வளரமுடியும் என்ற அபிப்பிராயம்தான் அவர்களுடைய முதல் உந்து சக்தி. தங்களின் உற்சாகமே அவர்களை உரிய இடத்தில் கொண்டு சேர்க்குமென உறுதியாய் நம்பியவர்கள் அவர்கள்.

அனைத்து வெற்றிகளும் நம் அபிப்பிராயங்களில்தான் ஆரம்பமாகின்றன என்பது நாம் அறிய வேண்டிய முதல்பாடம். அந்த அபிப்பிராயம் தோன்றுகிறபோதே அடுத்தடுத்து அதனை உறுதிசெய்து கொள்ளும்விதமாக நடவடிக்கைகளும், ஒழுங்கும் தானாக உருவாகி விடுகிறது. எனவே வெற்றி பெறவேண்டும் என்கிற அபிப்பிராயமே முதல்படி.

மனதில் ஏற்படுகிற இந்த அபிப்பிராயம் வார்த்தைகளிலும் வெளிப்படத் தொடங்குமென்றால் வெற்றியை நோக்கி இரண்டாவது அடியை எடுத்து வைக்கிறீர்கள் என்று பொருள். ஏதேனும் ஒன்றில் நேர்ந்த தோல்வியைப் பற்றிப் பேசினால், புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள வாய்ப்புக் கிடைத்தது என்று நீங்கள் சொல்லத் தொடங்கிவிட்டீர்களா? அப்படியானால் வெற்றிக்கான மனோபாவம் உங்களுக்குள் அரும்பத் தொடங்கிவிட்டதாக அர்த்தம்.

ஏதேனும் ஒன்றை “இதைச் செய்ய முடியாது” என்று சொல்வதைவிட, “வேறு எப்படி செய்யலாம் என்று யோசிக்கலாம்” என்கிற அணுகுமுறை ஏற்படுவதுதான், மனதில் அரும்புகிற உறுதி வார்த்தைகளிலும் வெளிப்படத் தொடங்கியதன் அடையாளம்.

வெற்றியை நெருங்குவதற்கான வழிகளில் உடற்பயிற்சியும் ஒன்று. இது பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் உடற்பயிற்சி ஆரோக்கியத்திற்கும் எடைகுறைப்பும் மட்டுமல்ல. உடற்பயிற்சி மூலம் வாழ்க்கை இயல்பாக இருப்பதாகவும் – புதிய சக்தி கிடைப்பதாகவும் – நம்பிக்கை அதிகரிப்பதாகவும் – ஆய்வு முடிவுகள் அறிவிக்கின்றன.

வெற்றிபெற விரும்புகிறவர்களுக்கு மிக முக்கியமான இன்னொரு பண்பு, புதிய மனிதர்களையும் புதிய சூழல்களையும் தயக்கமில்லாமல் எதிர்கொள்வது. பக்கத்தில் யாராவது புதிதாகக் குடி வந்தால், அவர்களாக வந்து அறிமுகம் செய்துகொள்ளும்வரை காத்திருக்காமல், நீங்களாகச் சென்று அறிமுகம் செய்து கொள்வதில் தொடங்கி, முற்றிலும் அந்நியமான சூழலில் ஏற்படும் வாய்ப்புகளைக் கூச்சமில்லாமல் எதிர்கொண்டு, அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதுவரை எத்தனையோ நிலைகளுக்கு இது பொருந்தும்.

நாம் சற்றும் எதிர்பாராத இடங்களிலிருந்து, எதிர்பாராத வாய்ப்புகள் ஏற்படுவதும், அதன் வழியே நாம் புதிய ஏணிகளில் ஏறுவதும் நிகழ்வதற்கு எல்லா சாத்தியக் கூறுகளும் உள்ளன. எனவே புதிய திசைகள் திறந்து கொள்ள உற்சாகமாகக் காத்திருப்பதும், நமக்குள் இருக்கும் நத்தைக் கூட்டை உடைத்துக்கொண்டு நதிபோலப் புறப்படுவதும் வெற்றிக்கு வழிசொல்லும் அம்சங்கள்.

ஒருவர் வெற்றியாளராக உருவெடுக்க நினைக்கிறார் என்றால், மனதுக்குள் சில முன்னோடிகளை அவர் வரித்துக்கொள்வது வழக்கம்.அப்படி வரித்துக்கொள்கிற முன்னோடிகள் நிகரற்ற வெற்றியாளர்களா என்பது முக்கியமல்ல. நிரந்தர வெற்றியாளர்களா என்பதே முக்கியம். கொடிகட்டிப் பறந்து கோலாகலமாய் வளர்ந்து – பிறிதொருநாள், அது குறுக்கு வழியில் கிடைத்த வளர்ச்சி என்று தெரிய வரும்போது, அந்த வெற்றியாளர் மீதான அபிப்பிராயம் மட்டுமா விழுகிறது? வெற்றி குறித்த நம்பிக்கையின் அடித்தளமே ஆட்டம் காண்கிறது. எனவே, சரியான மனிதரை – சரியான காரணங்களுக்காக முன்னோடியாய் வரித்துக் கொண்டு முன்னேறுவது மிகமிக முக்கியம்.

ஒரு பாதையில் நீங்கள் போகிறபோது வாகனத்தை நிறுத்தி வழி கேட்கிறீர்கள். சிலர் சரியாக வழிகாட்டுகிறார்கள். சிலர் குழப்புகிறார்கள். சிலர் அலட்சியமாக நகர்ந்து போய்விடுகிறார்கள். இதற்கிடையே சாலைக்குக் குறுக்கே அவசரக்காரர்களிலிருந்து ஆட்டுக்குட்டிகள் வரை வருவதுண்டு. இவற்றையெல்லாம் தாண்டி பயணத்தை நிகழ்த்துவதே, சென்று சேர்கிற இடத்தில் செய்யவேண்டிய முக்கியமான பணிக்காகத்தான்.

அந்தப் பணியில் இருக்கும்போது, வழியில் நடந்தவற்றை நினைத்துக் கொண்டிருப்பீர்களா என்ன? வாழ்க்கைப் பயணமும் அப்படித்தான். உங்கள் இலக்கை எப்படியாவது சென்றடைய வேண்டுமே தவிர வழியில் வரும் விமர்சனங்களை, சின்னச் சின்ன சீண்டல்களை பொருட்படுத்தக் கூடாது.

வெற்றிக்கு மற்றொரு முக்கியமான வழி, பாராட்டு. பாராட்டு என்றதுமே மற்றவர்கள் பாராட்டும்படி வாழ்வதுதான் முதலில் நம் மனதில் தோன்றும். அதுமட்டும் போதாது. மற்றவர்கள் பாராட்டும் விதமாக வளர்வது போலவே மற்றவர்களைப் பாராட்டும் பண்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பாராட்டு மட்டும் போதாது. முடிந்தவரை மற்றவர்கள் வெற்றிபெற உதவுவதுகூட உங்கள் வெற்றிகளுக்குத் துணை நிற்கும். உதவி தருபவர்களே உதவி பெறுகிறார்கள் என்பது பொதுவிதி. எப்போதோ விதைத்த விதை எத்தனையோ பழங்களைத் தருவதுமாதிரி, எப்போதோ செய்கிற உதவி நிகரற்ற நன்மைகளாகத் திரும்பவரும்.

உள்ளத்தில் ஏற்படும் அபிப்பிராயம், உங்களிடம் வெளிப்படும் வார்த்தைகள், உடற்பயிற்சி, அறியாத இடங்களிலும் ஆளுமையுடன் அணுகுதல், உண்மையான வெற்றியாளர்களைப் பின்பற்றுதல், முக்கிய இலக்கில் மட்டும் கவனம் செலுத்துதல், மற்றவர்களைப் பாராட்டி, உரிய உதவிகள் புரிதல். இத்தனை பண்புகளும் எப்போது உங்களிடம் ஜொலிக்கிறதோ, நீங்கள் ஜெயிக்கப் போவது நிச்சயம்!

வெற்றியை அளந்தால்தான் விபரம் புரியும்


வெற்றியின் அளவுகோல்கள் விதம் விதமானவை. வித்தியாசமானவை. இருந்தாலும், நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்களா என்பதைக் கண்டறிய சில எளிய அளவு கோல்கள் உண்டு.

ஒரு துறையில் ஈடுபடும்போது, அதில் உங்கள் வளர்ச்சி அனைத்துப் படிநிலைகளிலும் ஏற்பட்டிருக்கிறதா என்று முதலில் பாருங்கள். உதாரணமாக – நீங்கள் செய்யும் பணிகளால் உங்களுக்குப் பாராட்டு கிடைக்கிறது. புகழ் வளர்கிறது. எல்லோரும் உங்களை நாடி வருகிறார்கள். இதெல்லாம் சரி, உங்களுக்கு இதனால் பொருளாதார நன்மை ஏற்படுகிறதா?

“மற்றவை எல்லாம் கிடைக்கிறது. பணம் கிடைக்கவில்லை. அதனால் என்ன! ஆத்ம திருப்தி கிடைக்கிறதே” என்று நீங்கள் சொல்வீர்களேயானால், உங்களை நீங்களே சமாதானப்படுத்திக் கொள்கிறீர்கள்.

எந்த ஒரு வேலைக்காக நீண்ட நேரம் செலவிடுகிறீர்களோ, அதில் எல்லாம் கிடைப்பது போலவே பொருளாதார நன்மையும் வேண்டும். நிறைய சம்பாதித்தவர்கள், மனநிறைவுக்காக சமூக சேவை செய்பவர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு.

ஆனால் எதைத் தொழிலாகச் செய்கிறீர்களோ அதில் பொருளாதார நன்மையும் ஓர் அம்சம். பொருளாதார நன்மை கிடைக்காமல் இருப்பது இரண்டு காரணங்களில் நிகழ்ந்திருக்கலாம்.

1. நீங்கள் செய்யும் பணிகள் நல்ல பெயரையும் புகழையும் நோக்கி செய்யப்படும் அளவு பொருளாதார நன்மை தரவில்லை என்றால், அந்த வேலையே அப்படித்தான் – அதன் மூலம் பெரிய அளவில் பொருளாதார நன்மைகள் கிடைக்காது என்று பொருள்.

2. அல்லது, உரிய அளவில் பொருளாதார நன்மைகள் கிடைத்தாலும் அந்த நன்மைகளை சரியாகப் பயன்படுத்தி வளங்களைப் பெருக்கும் வழி உங்களுக்குக் கிடைக்கவில்லை என்று பொருள்.

இதில் முதலாவது காரணம்தான் உங்கள் வாழ்க்கையில் காணப்படும் நடைமுறை உண்மையென்றால், உங்கள் உழைப்புக்கான விலையை நிர்ணயிக்க நீங்கள் தயங்குகிறீர்கள் என்று கருதலாம்.

இது மிகவும் ஆபத்தான அணுகுமுறை. மற்றவர்கள் தவறாகக் கருதுவார்கள் என்று மகத்தான பணிகளை செய்து அதற்குரிய ஊதியத்தைப் பெறவோ, அல்லது நீங்களே உங்கள் ஊதியத்தை நிர்ணயம் செய்து கேட்கவோ தயங்குவது பிற்காலத்தில் விரக்தியிலும் தன்னிரக்கத்திலும்கொண்டு போய்விடும். எனவே இந்த மனநிலையை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக உள்ள காரணம்தான் உங்களைப் பொறுத்தவரை உண்மை என்றால், நிதி ஆதாரங்களை சரிவரக் கையாள்வதில் உங்களுக்குப் பயிற்சி இல்லையென்று பொருள். இத்தகைய சூழ்நிலையில் சரியான ஒருவரை நியமித்து உங்கள் நிதி ஆதாரங்களை சீர்செய்ய வேண்டும்.

வெற்றியின் இன்னோர் அளவுகோல் வெற்றிகளைத் தொடர்கதையாக்குதல். ஒரு வெற்றி வந்த மாத்திரத்திலேயே, தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்கிற வேகம் வரவேண்டும். முதல் வெற்றி வந்தபிறகு, அடுத்த கட்டமாக முயற்சிகள் செய்து, தோல்வி ஏற்பட்டால் என்ன செய்வது என்கிற அச்சம் ஏற்பட்டுவிடுமென்றால், சிலர் முயற்சிகளைத் தொடரமாட்டார்கள்.

வெற்றியை நிகழ்த்திக் காட்டிய யாருக்கும், அந்த வெற்றியை உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பதற்கு உத்திரவாதம் கிடையாது. தொடர்ந்து வெற்றிகளை நிகழ்த்திக் காட்டிக் கொண்டே இருக்கிற போதுதான் ஒருவர் வெற்றியாளர் என்கிற அங்கீகாரத்தைப் பெறுகிறார்.

வெற்றிக்கு மற்றுமோர் அளவுகோல், அந்த வெற்றியைப் பெற்ற வழி. உழைப்பு, திட்டமிடுதல், சமயோசிதம், துணிவு, முடிவெடுக்கும் ஆற்றல் ஆகிய அடித்தளங்கள் மீது கட்டப்படுகிற வெற்றியின் கட்டிடம்தான் உங்களுடைய வெற்றி என்று கொண்டாடத்தக்கது.

மற்றவர்கள் மூலம் கிடைக்கும் வெற்றி, யானை மாலை போட்டு ராஜா ஆன கதையாகத்தான் இருக்கும்.

வெற்றியின் மற்றோர் அளவுகோல் மேம்பாடு. முதல் வெற்றிக்குப் பிறகு உங்கள் உழைப்பின் தரம் மேம்பட்டிருக்கிறதா? உங்கள் தயாரிப்பின் தரம் மேம்பட்டிருக்கிறதா? உங்கள் நம்பிக்கையின் தரம் மேம்பட்டிருக்கிறதா? நீங்கள் பழகும் இயல்புகளில் மேம்பாடு தெரிகிறதா? என்றெல்லாம் இந்தச் சமூகம் கவனிக்கும்.

ஒவ்வொரு வெற்றிக்குப் பிறகும், நீங்கள் விளையாடும் களம் மாறிக்கொண்டேயிருக்க வேண்டும். தொடங்கும்போது யாரைப் போட்டியாளர் என்று நீங்கள் கருதினீர்களோ அவரைத்தாண்டி வெகுதூரம் நீங்கள் வந்திருக்க வேண்டும். எட்டவே முடியாத உயரத்தில் இருக்கிறார் என்று யாரை நீங்கள் அண்ணாந்து பார்த்தீர்களோ, அவர் உங்கள் அடுத்த போட்டியாளராக இருக்க வேண்டும். அவரையும் வென்றுவிட்டு, “மளமள” வென்று அடுத்த கட்டம் நோக்கி நகர வேண்டும்.

வெற்றியை உறுதிப்படுத்தும் இன்னோர் உன்னதமான அளவு கோல் எது தெரியுமா? நீங்கள் பெற்ற வெற்றிகள் பற்றியும் அதற்குக் கையாண்ட வழிமுறைகள் – தாண்டி வந்த தடைகள் பற்றியும் உங்களுக்கு ஒரு தெளிவு இருப்பதுதான். இந்த இடத்திற்கு எப்படி வந்தீர்கள் என்று யாராவது கேட்டால், துல்லியமாக சொல்லத்தெரியும் என்றால்தான் உங்கள் வெற்றி நீங்களே முயன்று பெற்றது என்பதை உலகம் ஏற்கும்.

உலகத்திற்காக வாழ வேண்டுமா என்ற கேள்வியைப் புறந்தள்ளுங்கள் – மிக நிச்சயமாக உலகம் ஒவ்வொரு மனிதனையும் உன்னிப்பாக கவனிக்கிறது. உண்மையாக உழைத்து ஜெயிப்பவனை மற்றவர்களுக்கு சுட்டிக் காட்டுகிறது. அவனைப் பற்றிய விபரங்களை சேகரிக்கிறது. உங்கள் வெற்றியின் போக்கை நீங்களே அளந்து பாருங்கள்! மேலும் மேலும் வெற்றிகள் வசப்பட்டே தீரும்!!

Saturday, April 27, 2013

கல்லிலே கலைவண்ணம் வெற்றியின் பன்முகங்கள்

நீங்கள் நினைத்ததை, முயற்சித்ததை, உழைத்ததை, நீங்கள் திட்டமிட்டதை, சரியான முறையில் எதிர்பார்த்த பலன் கிடைத்து, அதன்மூலம் உங்களுக்கு வருமானமும் கிடைத்தால் அது வெற்றி.


அதற்கிடையில் எத்தனை பிரச்சனைகள் இருக்கின்றன. உங்களது தொழிற்சாலையை மூடவேண்டும் என்று நோட்டீஸ் வரும். திடீரென்று சோதனையிட வருவார்கள். ஏதேனும் ஒரு புகாரைக் கொண்டுவந்து விசாரிக்க வேண்டுமென்பார்கள். இதையெல்லாம் தாங்கிக்கொண்டுதான் ஒருவர் வெற்றி பெறுகிறார். வெற்றி என்பது ஓர் உணர்வு. திருப்தியான உணர்வு.

பணம் சம்பாதிப்பது மட்டும் வெற்றியல்ல. வெற்றி என்பது உங்கள் திட்டம் நன்றாக செயல்பட்டு, அதன் பலன் பலருக்கும் சென்று நாட்டுக்கும் பெருமை சேர்த்து ஒரு “பிராண்டை” உருவாக்கி இந்தப் பொருள் என்றைக்கும் தரமானதாக இருக்கும் என்கிற நிலையை, நம்பிக்கையை உருவாக்குவதே வெற்றி.

ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது துணிச்சலுடன் அதைப் பயன்படுத்துகிற மனப்போக்கை நாம் கொண்டிருக்க வேண்டும்.

நான் திட்டமிட்டு தொழிலில் இறங்கவில்லை. திட்டவிளக்கங்களோடு வங்கியை அணுகி கடன் பெற்றும் தொடங்கவில்லை. எந்த விற்பனை தரவுகளோடும் நான் தொழில் துவங்கவில்லை.

நீச்சல் பழகிக்கொள்ள கிணற்றில் தூக்கிப் போட்டது போல நான் தொழில் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டேன். அதில் தத்தளித்து, நீந்தி, உயிர் பிழைத்தேன். அதுதான் வெற்றி.

நீங்கள் ஏதேனும் சாதனை படைத்து அதுதான் வெற்றி என்று எண்ணாதீர்கள். கவனித்துப்பாருங்கள். ஒரு திரைப்படம் நூறு நாட்கள் ஓடிவிட்டதென்றால், இவன்தான் மாபெரும் ஹீரோ. அற்புதமான வெற்றி என்கிறார்கள். இரண்டு படம் தோல்வியென்றால் அவனைப்பற்றி பேச்சே வருவதில்லை. தேர்தலிலும் இந்த நிலைதான். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறினால் அது வெற்றி.

பெரிய பணக்காரர் ஒருவரிடம் “What is the power of Money” என்று கேட்டேன். செல்வமிருந்தால் என்ன செய்யும்?

செல்வத்தை வைத்துக்கொண்டு நீங்கள் கற்பனை செய்கிற அனைத்தையும் வாங்கமுடியும். அவ்வளவுதான். செல்வம் மட்டுமே உங்கள் பரம்பரை முழுமைக்கும் வெற்றியைத் தராது. உங்கள் முயற்சியும், கடுமையான உழைப்பும் கண்காணிப்பும்., மற்றவர்களை இணைத்து ஒரு தொழிலை நடத்தும் தன்மையும், உங்கள் வாடிக்கையாளர், உங்கள் விநியோகஸ்தர் என்று யாராக இருந்தாலும், அன்புடன், பண்புடன், அடக்கமுடன் நிதானத்துடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் வரும்.

வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, மோகன் குமாரமங்கலம் போன்ற பிரபல வழக்கறிஞர்கள் எப்படி சாதுர்யமாக வழக்கை நடத்துகிறார்கள் என்று கற்றுக்கொண்டேன்.

வழக்கறிஞர் தொழிலில் ஒரு நல்ல எதிர்காலம் காத்திருந்த வேளையில் அதைவிட்டுவிட்டு குடும்பச் சூழல் காரணமாக இந்தத் தொழிலுக்கு வந்தபோது இந்தத் தொழிலே தமிழ்நாட்டில் இல்லை.

ஊரில், “மகன் வக்கீல் தொழிலை விட்டுவிட்டு கல் உடைக்கிற வேலைக்கு போய் விட்டானாமே” என்று கேவலமாக பேசுகிறார்கள்.

உலக அதிசயங்களில் எதைப் பார்த்தாலும் அது கல்லோடு தொடர்புடையதாகத்தான் இருக்கும்.

ஸ்வீடன் நாட்டிற்குச் சென்று ஒரு விஞ்ஞானியிடம் பயிற்சி பெற்று இந்தியா திரும்பி, தொழில் துவங்கினேன்.

அப்போது எமர்ஜென்ஸி காலம், எங்கள் உறவினர் ஒருவர் அரசியலில் இருந்தார். அவருடைய வளர்ச்சிக்கு நான்தான் காரணம் என்று என் அலுவலகத்தை சோதனையிட்டார்கள். ஐரோப்பாவில் ஏற்படுத்திய ஒப்பந்தத்தையும் அவர்கள் எடுத்துப் போய்விட்டார்கள்.

இப்போது போல் எளிதாக தொழில் துவங்க முடியாது. வருமானவரி அலுவலகத்திற்குச் சென்று ஏற்றுமதியைப் பற்றியெல்லாம் சொன்னேன். அதற்குள் புதிய ஆட்சி வந்தது. வந்த ஆட்சி கல்குவாரிகளை அரசே நடத்தும் என்று என்னிடமிருந்து பறித்துக் கொண்டது.

நானும், என்னை நம்பி இந்தத் தொழில் செய்யலாம் என்று வந்த என்னுடைய சகோதரர்களும் கர்நாடகாவிற்குச் சென்று தொழில் துவங்கினோம். அங்கேயும் இதே நிலை. நல்ல நிலையில் எல்லாம் போய்க் கொண்டிருந்தபோது அரசே என் குவாரியைப் பறித்துக் கொண்டது. வழக்குகள் நடத்தி தொழிலை மீட்டேன்.

வெற்றிகரமான முடிவென்பது சில சமயம் எதுவும் செய்யாமலிருப்பதுதான். இல்லையென்று சொல்வதற்கு மாபெரும் துணிச்சல் வேண்டும். எந்த முடிவு எடுக்க வேண்டுமானாலும் சரி, இந்தப்பக்கமா அந்தப்பக்கமா என்று தீர்மானமான முடிவு எடுக்க வேண்டும்.
இந்தத் தொழிலால் எனக்கு என்ன திருப்தியென்றால், ஜப்பானில் முப்பதாயிரம் கட்டிடங்கள் என்னுடைய கற்களால் கட்டப்பட்டவை.

வெற்றி என்று சொல்லும்போது தியாகம், துன்பம் என்பதும் இருக்கும். அதைத் தவிர்த்து வெற்றி மட்டுமே பார்க்காதீர்கள்.

சொத்து என்று பார்த்தால், முதல் சொத்து நீங்கள்தான். உங்கள் உடல்தான். நல்ல உடல் பலத்துடன், மனபலத்துடன் சாதனை புரியுமளவிற்கு பாடுபட்டால்தான் முடியும். அடிப்படையான அந்த சொத்தை விட்டுவிடாதீர்கள்.

ஒரு மனிதன் இறுதிவரை தன்னால் இயன்ற அளவிற்கு மனதாலோ, உடலாலோ உழைத்தால்தான் ஆரோக்கியமாக இருக்கமுடியும்.

நான் இந்த தொழிலுக்கு வந்தபோது ஆண்டு முழுவதும் ஒருகோடி ரூபாய்க்குக்கூட ஏற்றுமதியில்லை. இந்தியா முழுவதும் 4000 கோடி ரூபாய் அளவிற்கு, இப்போது 20 மாநிலங்களில் ஏற்றுமதி செய்கிறார்கள்.

LCD, பிளாஸ்மா டிவி செய்வதற்குக்கூட இப்போது கற்களைப் பயன்படுத்துகிறார்கள். இது இந்தியாவின் வெற்றி.

விடாமுயற்சி -நமது துருப்புச் சீட்டு

எந்த ஒரு வேலையையும் தொடர்ந்து முயல்பவர்களின் விடாமுயற்சி, வாழ்வில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்றார் ஒருவர். இதைக் கேட்டதும் சிலருக்கு வியப்பு ஏற்படலாம். முயற்சிகள் தொடரும்போது அதனால் சலிப்பு ஏற்படுவதுதானே நிஜம் என்பது சிலரின் கேள்வியாக இருக்கலாம். ஆனால் சாதிக்கும் வெறி கொண்டவர்களின் கதையே வேறு.

முயற்சியில் தோல்வி ஏற்படும்போதெல்லாம் இன்னும் வேகமாக முயல்கிறார்கள். தங்கள் தீவிரத்தை அதிகப் படுத்துகிறார்கள். அதன்விளைவாக திறக்காத கதவையும் முட்டி மோதித் திறக்கிறார்கள். ஒரு வேலை வாய்ப்பையோ, வணிக வாய்ப்பையோ அந்த முயற்சியின் மூலம் பெறுபவர்கள், அந்தத் தீவிரத்தைத் தக்கவைத்துக் கொள்கிறார்கள். காலம் முழுவதும் தங்களைக் காக்கப் போவது அந்தத் தீவிரம்தான் என்று தெரிந்து கொள்கிறார்கள்.

முதல் முயற்சியிலேயே கிடைத்த வேலை, முதல் பார்வையிலேயே கனிந்த காதல் போன்றவை சில நேரங்களில் ஆபத்தானவை. காத்திருப்பின் வலி தெரியாமலேயே கனிந்துவிடுகிற வெற்றிகளின் அருமை சிலருக்கு சில சமயங்களில் தெரியாமல் போவதுண்டு.

விடாமுயற்சியைத் தக்கவைத்துக் கொள்கிற மனிதனை, அவனது நிர்வாகமும், சமூகமும் உன்னிப்பாகக் கண்காணிக்கிறது. அவனை அதிகம் நம்புகிறது. சாத்தியமற்றவற்றைக் கூட சலிக்காது முட்டி மோதுகிற மனிதன் சாதிக்கப் பிறந்தவன் என்பது, எல்லோரும் அறிந்த ரகசியம்.

நீங்கள் வாழ்வின் எந்த நிலையிலிருந்தாலும் சரி, விடாமுயற்சியைக் கைவிடாதவர் என்ற பெயரை மட்டும் தக்க வைத்துக் கொண்டு அதற்கு உண்மையாய் இருங்கள். நீங்கள் நினைத்தால் கூட உங்கள் வளர்ச்சியைத் தடுக்க முடியாது.

இதற்கு வெளியிலிருந்து ஊக்கங்களோ வழிகாட்டுதல்களோ தேவையில்லை. ஒவ்வொரு விநாடியும் எவ்வளவு விலைமதிப்பு மிக்கது என்று உணரும்போது, நம்மை நிரூபிக்க வேண்டிய காலநெருக்கடி இருப்பது எல்லோருக்குமே புலப்படும்.

சாதாரண மனிதர்களுக்கு பொழுது போகாது, சாதனையாளர்களுக்கோ பொழுது போதாது. இந்த முனைப்பும் காலம் பற்றிய விழிப்புமே காலங்காலமாய் வெற்றியாளர்களை செதுக்கி வருகிறது. தொடர் முயற்சி, வாழ்க்கையில் நமக்கிருக்கும் முக்கியமான துருப்புச்சீட்டு. குறிப்பிட்ட அளவு வயது வந்த பிறகோ அனுபவம் அடைந்த பிறகோ அதனைக் கீழே போட்டு விடலாகாது.

ஏனெனில் காலத்தோடு சேர்ந்து நாமும் பழசாகாமல் காப்பாற்றுவதே அதுதான். எனவே, விடாமுயற்சி செய்யுங்கள்…. விடாமுயற்சியைத் தக்க வைத்துக் கொள்ள!!

திரை கடலோடு திரவியம் தேடு

ஒளிமயமான எதிர்காலம் இதோ! இதோ!” எனக் கனவுகண்டு, “வருங்கால வல்லரசுகளில் இந்தியா முதல்வரிசையில் நிற்கும்” என்ற நம்பிக்கையோடு, இந்தியா மட்டுமன்றி, திரைகடல் கடந்த நாடுகளிலும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி மிக வேகமாகப் பயணித்துக்கொண்டிருந்த இந்தத் துணைக்கண்டத்தின் முன்னேற்றம், “திடீரென்று” ஆட்டம் காண ஆரம்பித்திருக்கின்றது. உலகப் பொருளாதாரமே நிலையில்லாமல் தள்ளாடும்போது, இது தற்காலிகமானதுதான் என்று என்னதான் சமாதானம் செய்தாலும் எல்லோர் மனதிலும் “பயம்” தோன்ற ஆரம்பித்திருக்கின்றது. ஓரிரு மாநிலங்களைத் தவிர, மின்சாரம் தட்டுப்பாடின்றிக் கிடைப்பது மிக அரிதாகிவிட்டது.

ஜெனரேட்டர்களை வைத்து உற்பத்தி செய்யலாம் என்றால் “டீசல்” விலை “கன்னா” பின்னா” வென்று உயர்ந்து “கட்டுப்படியாகாமல்” “‘ஷாக்” அடிக்கின்றது.

பங்குச் சந்தையின் “பன்னாட்டுச்” சூதாட்ட வலையில் நடுத்தர வர்க்கம் வாழ்நாள் சேமிப்பைத் தொலைத்துவிட்டு “இரகசியக் கண்ணீர்” சிந்திக்கொண்டிருக்கின்றது. “வங்கிக்கடன்” வட்டிவிகிதம் எகிறிக் கொண்டிருக்கிறது. எல்லா அரசியல்வாதிகளும், நாட்டுக்குச் சேவை செய்கிறேன் பேர்வழி என்று தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்து உள்ளதையும் கெடுத்துத் தங்கள் “பெருமையை”க் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

மூலப் பொருட்களின் விலையேற்றம், அந்நிய நாட்டு டாலர், யூரோ போன்றவற்றின் வீழ்ச்சி, எழுச்சி – நஷ்டங்கள் ஒரு புறத்தில் நமது பொருட்களை விலையேற்ற வைக்கிற. “தொழிலாளர் பிரச்சினை என்று, இல்லாத பிரச்சினைகளை உருவாக்கி சில அரசியல்கட்சிகள் மொழி, மாநில, மத வேறுபாட்டைக் கிளறிவிட்டு ஒவ்வொரு நாளும் தொழிலை முடக்கி நாட்டுக்கு நன்மை செய்கிறார்கள்.

இப்படிப்பட்ட குழப்பமான, கடினமான, நிச்சயமற்ற சூழ்நிலையில் திரைகடலோடித் திரவியம் தேட முடியுமா என்ற கேள்வி தவிர்க்க முடியாதது. ஆனால், இப்படிப்பட்ட சூழ்நிலைகள் எல்லாக் காலகட்டங்களிலும் எல்லா நாடுகளிலும், ஏதோ ஒரு சமயத்தில் இருந்துள்ளன. இவற்றை எதிர்கொண்டும், ஏற்றுக்கொண்டும்தான் நாம் நமது பணியைத் தொடர்ந்து செய்து வரவேண்டும்.

இம்மாதிரி சமயங்களில் “நம்பிக்கையை” இழந்துவிடக்கூடாது. முக்கியமாக எல்லோருமே ஒரு புத்திமதியை முன்வைப்பார்கள் – சிக்கனமாகச் செலவு செய். தேவையற்ற செலவுகளைச் செய்யாதே – ஆடம்பரத்தைக் குறை- என்று. மூன்றுமே ஒரே அர்த்தத்தைத்தான் குறிக்கின்றன.

நம் நாட்டில் பெரும்பாலான நிறுவனங்கள் – மேற்கூறிய மூன்றையும் – எப்போதுமே கடைப்பிடித்து வருவதால், இதற்குமேல் எங்கே சென்று செலவைக் குறைப்பது? கடைந்த மோரில் வெண்ணெய் எடுப்பது இயலுமா? இங்கேதான் சரியான திட்டமிடுதல், சட்டப்படியானவற்றைச் சரியாகச் செய்தல், மனிதவள மேம்பாட்டோடு தொழிலாளர் உறவைப் பேணுதல், சரியான பொருளாதாரச் சிந்தனை, தரத்துக்காக மெனக்கெடுவது, வாடிக்கையாளர் தொடர் நல்லுறவு – ஆகியவை கைகொடுக்கும்.

அகலக்கால் வைக்காமல், படிப்படியாக வளர்ச்சி இருந்திருந்தால் – எந்த நிலையிலும் நம்மால் தாக்குப்பிடிக்கமுடியும். அதிக நஷ்டம் ஏற்படும் என்று தெரிந்தால் அதற்கான மாற்று வழிகளை உடனே செய்தாக வேண்டும். தொழிலையே சிலகாலம் நிறுத்திவைக்க வேண்டியது வந்தாலும் சரியான சட்டரீதியான, அணுகுமுறையுடன் நஷ்டத்தைக் குறைக்க சிலகாலம் நிறுத்திவைத்தாலும் தவறில்லை. ஏனென்றால் வெற்றிக்குப் பலபேர் பங்கு கேட்பார்கள். தோல்வியை நீங்கள்தான் சுமக்கப் போகிறீர்கள்.

தொழிலாளர் சம்பளம், போக்குவரத்துச் செலவுகள், ரயில், விமானப் பயணங்கள் அன்றாடச் செலவுகள் – எதையுமே நீங்கள் நினைப்பதுபோல் குறைத்துவிட முடியாது. சிங்கப்பூருக்கு விமானத்தில்தான் போகமுடியும். கப்பலில்போனால் பலநாள் வீணாகும். இப்படி எந்த அத்யாவசியச் செலவையும், எந்த நிறுவனமும் குறைத்துவிடமுடியாது. வேண்டுமானால் சிலவற்றைத் தள்ளிப்போடலாம், சிலவற்றைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கலாம்.

விளம்பரச் செலவுகளைக் குறைக்கலாம். வாடிக்கையாளரைச் சென்று சந்திப்பதை அவசியத்தின்போது மட்டும் செய்யலாம். மூலப் பொருட்களின் இருப்புகளை முடிந்தவரை குறைத்துக் கொள்ளலாம். இவை தவிர நம்மால் வேறெதையும் குறைக்க முடியாது. லாபத்தைக் குறைத்துக்கொள்ளலாம். நஷ்டம் ஏற்படாமல் தடுக்கலாம். நஷ்டம் ஏற்படுமானால் சில நாட்களுக்கு நமது பொருளாதார வசதியை வைத்து குறைவான நஷ்டத்தைச் சந்திக்கலாம்.

இதிலே ஒரு மிகப்பெரிய வேறுபாடு என்னவென்றால், நமது நாட்டில் தொழில் செய்பவர்கள் நஷ்டத்தைச் சந்திக்கும்போது, அதற்கான இழப்பை ஈடுகட்டச் சரியான வழிமுறைகள் இல்லை. மேலை நாடுகளில் தொழிலின் வருமானத்தையும், சமூக நலனுக்கு அது எவ்வாறு பயன்படுகிறது, தொழிலாளர்களின் பாதுகாப்போடு, முதலீட்டாளர்களின் பாதுகாப்பும் எப்படித் தேவை என்பதை உணர்ந்து செயல்படுவதால் அரசாங்கப் பாதுகாப்பு அனைவருக்கும் உண்டு. இங்கே எப்படி என்பதை தற்சமயம் மேற்கு வங்காளம், சிங்கூர் “டாடா” நேனோ கார் தொழிற்சாலை விவகாரத்தைப் படித்தாலே தெரிந்து கொள்ளலாம்.

எது சரி, எது தவறு என்பதற்கான விவாதங்களே தேவையில்லை. இந்த மாதிரி சூழ்நிலை வரும்போது திரைகடலோடித் திரவியம் தேட நினைப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? எப்படித் தன் தொழிலை, தன் குடும்பத்தை, தனது நிறுவனப் பணியாளர்களைக் காப்பாற்றுவது என்பதே. எனது சிறு அறிவுக்கு எட்டியவரை என் அபிப்பிராயங்கள் கீழ்க்கண்டவை.

நீங்கள் இறக்குமதி செய்து இந்தியாவில் வியாபாரம் செய்பவர்களாக இருந்தால், அந்நியச் செலவாணி உங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தால், உங்கள் பொருட்களின் விலையை ஏற்றிவிடுங்கள். ஒன்று நிச்சயம் லாபம் வேண்டும், அல்லது லாபமில்லாவிட்டாலும் நஷ்டம் கூடாது, அல்லது சில நாட்களுக்கு நஷ்டம் ஆனாலும் பின்னர் சரி செய்யலாம் – என்ற முடிவைத் தாங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அதே சமயம் தங்களுடைய பிரச்சினைகளை தங்களோடு தொழில் தொடர்பு கொண்ட வெளிநாட்டவரிடம் வெளிப்படையாகத் தெரிவித்துவிடவேண்டும். உங்களது வியாபாரத்தைப் பொறுத்து, அதன் மூலம் அவருக்குக் கிடைக்கின்ற ஆதாயத்தைப் பொறுத்து, அவர் உங்களுக்கு என்ன நஷ்டம் வந்தாலும், அந்த ஒப்பந்தத்தைக் காப்பாற்றுங்கள். ஏனெனில் தொழில் தர்மம் மிகமுக்கியம். இன்றைய இந்த மின்வெட்டு, விலைவாசி உயர்வு, பண வீக்கம், வேலை நிறுத்த இடையூறுகள் எல்லாம் மாறி, மீண்டும் ஒரு நல்ல சூழ்நிலை உருவாகலாம். உருவாகும்.

அப்போது இந்த வாக்குறுதியும், ஒப்பந்தமும் அதை நிறைவேற்ற நீங்கள் அடைந்த நஷ்டத்தையும் கூறியே, புதிய ஒப்பந்தத்தில் நல்ல லாபம் பெற வழிவகைகளைச் செய்து கொள்ளலாம்.

மேற்சொன்ன வழி, எல்லாத் தொழில்களுக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. அப்படிப்பட்ட சூழல் உங்களுக்கு இருக்குமானால், அதனால் அபரிதமான இழப்பு வந்துவிடும் என்று தோன்றினால், திரைகடல் ஓட வேண்டாம். உள்நாட்டில் கவனம் செலுத்துங்கள். உங்களது பொருளாதார பலம் உங்களுக்குத்தானே தெரியும். அதை வைத்து முடிவு செய்யுங்கள்.

தொடர்ந்து தொழில் செய்தால்தான் வெற்றி என்று கூற, இதொன்றும் விளையாட்டு மைதானமல்ல. இழப்பு வரும் என்று தெரிந்தால், தற்காலிகமாக விலகி இருத்தலே நலம் என்றால் விலகி இருங்கள்.

எனக்கு மிக நெருங்கிய நண்பர் ஒருவர். கோவையிலிருந்து சிறிய அளவில், ஏற்றுமதி செய்து கொண்டிருந்தார். சில இயந்திரங்களுக்குத் தேவையான உதிரிபாகங்களை வாங்கி, சில குறிப்பிட்ட வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு விற்றுவந்தார். நான்கைந்து வருடங்கள் நன்றாக வியாபாரம் நடந்தது. ஏற்றுமதி மூலம் கணிசமான லாபம் கிடைத்தது. ஒரு சமயம், இந்தியாவில் ஏற்பட்ட சில பொருளாதார சூழ்நிலையால், இவர் ஒப்பந்தம் செய்த விலைக்கு ஏற்றுமதி செய்தபோதும், உள்நாட்டில் வாங்கிய பொருட்களுக்கு அதிகவிலை கொடுக்க வேண்டி வந்தது. மிகப் பெரிய நஷ்டத்தைச் சந்தித்ததோடு, கிட்டத்தட்ட இருக்கின்ற வீட்டைக்கூட விற்றுவிட்டு, வாடகை வீடு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இரண்டாண்டுகள் சிரமப் பட்டார். அதே சமயம், அந்தக் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்குக் கடிதம் எழுதி, தன்னால் இனிமேல் ஏற்றுமதி செய்ய இயலாது, வேறு யார் மூலமாகவாவது பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள் என்று தெரிவித்து விட்டார். தனக்கு ஏற்பட்ட இழப்பை ஏனோ தெரிவிக்கவில்லை, இரண்டாண்டுகள் கழித்து, அந்த வாடிக்கையாளர்கள் இவரைத் தொடர்பு கொண்டு மீண்டும் தொடருங்கள் என்று கேட்ட போதுதான் உண்மையை எடுத்துரைத்தார்.

இவரது அந்த நல்லெண்ணமும், இரண்டாண்டுகள் துயரைத் தன் மனதிலேயே இருத்திக்கொண்ட பொறுமையும், வியாபார நேர்மையும், வாடிக்கையாளரது நம்பிக்கையும் – மீண்டும் அவரது வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, இன்று மிகச் சிறப்பாகத் தொழில் செய்துகொண்டு வளமாக வாழ்ந்து வருகிறார்.

எப்போதுமே பாதை சீராக இருப்பதில்லை. குண்டும் குழியுமாக இருந்தால் பத்திரமாகப் பார்த்து ஓட்ட வேண்டியது நமது திறமை. அல்லது சரியான பாதை அமையும்வரை காத்திருப்பது புத்திசாலித்தனம்.

சவால்களில் உள்ளது சந்தர்ப்பம்

ராஃபோர்ட் என்கிற நகரம், அமெரிக்காவின் மிஸ்ஸிசிப்பி மாநிலத்தில் உள்ளது. அங்கே வளர்ந்துவந்த இளைஞனின் தந்தை, கட்டிடங்கள் கட்டுவதற்கு செங்கல் சுமக்கும் கூலியாளாக வேலைபார்த்தார். விடுமுறைக் காலங்களில் அப்பாவுக்கு உதவியாய் இந்த இளைஞனும் போவான். கனவுகள் சுமக்கும் கல்லூரி மாணவனுக்கு செங்கல் சுமப்பதொன்றும் சந்தோஷமான வேலையல்ல.

ஓரிடத்தில் நின்றுகொண்டு, தன்னிடம் வீசப்படும் செங்கற்களைப் பிடித்து, அதே வேகத்தில் அடுத்தவரிடம் வீசுகிற வேலையில், வெய்யிலில் உலர்ந்தும் வியர்வையில் நனைந்தும் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.

ஆனால் அந்த இளைஞன் மன உறுதியுடன் செயல் பட்டான். செங்கற்கள் கைகளில் வந்து விழுகிற போதெல்லாம் கரங்களைப் போலவே அவன் மனதிலும் உரமேறிக் கொண்டிருந்தது. ஒவ்வொருமுறை செங்கல்லைப் பிடிக்கும்போதும் வாழ்வில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று உறுதிகொண்டான் அந்த இளைஞன். கைகளில் செங்கல்லைத் தாங்கிக் கொண்டே ஒரு கால்பந்து வீரனாய் வரவேண்டும் என்ற கனவுக்கு நெய்வார்த்துக் கொண்டிருந்தான் அவன். அந்தக்கனவு நனவானது. உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரனாய் வளர்ந்த ஜெர்ரி ரைஸ்தான் அந்த இளைஞன்.

கால்பந்தாட்டத்தில் ஈடுபாடு இல்லாதவர்கள் கூட “நட்சத்திரங்களுடன் ஒரு நடனம்” (Dancing with the Stars) தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அவரை அறிந்துகொண்டிருந்தார்கள்.

தன் வாழ்வில் தன்னைப்பிழிந்த வறுமையைத் தான் பிழிந்து சாரமெடுத்து, சாறு குடித்து, வெற்றி வேட்கையைத் தணித்துக் கொண்ட ஜெர்ரி ரைஸ், தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டபோது சொன்ன விஷயங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டுகிற வெற்றிச் சூத்திரங்கள்.

சவால்களில் உள்ளது சந்தர்ப்பம்:

தன்னைநோக்கி வீசப்பட்ட செங்கற்களைப் பிடிப்பது வேறு வழியில்லாத வேலை. ஆனால் வெட்டி வேலை என்று பலரும் விமர்சனம் செய்தார்கள். ஆனால் அந்த வலிமிகுந்த பொழுதுகளை, எதிர்காலத்தின் வரைபடத்தை இதயத்தில் வரைந்து கொள்ளப் பயன்படுத்தினார் ஜெர்ரி ரைஸ். அந்த வலியில் விழுந்த வியர்வைத் துளிகள் வைராக்கியத்தை வளர்த்தன. எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலைக் கொடுத்தன. கொளுத்தும் வெய்யிலில் அசராது நிற்கும் பொறுமை, வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் பக்குவத்தைப் பரிசாய்த் தந்தது.

வெற்றியின் பாதையில் வலிகள் சகஜம்:

வலியும் வேதனையும் தங்கத்தை வாட்டும் நெருப்பின் வேலையைத்தான் செய்கின்றன என்பதை சரியாகப் புரிந்து கொண்டிருந்தார் ஜெர்ரி ரைஸ். உள்ளங்கைகளில் வந்து விழுந்த ஒவ்வொரு கல்லும், “நீ செங்கல் சுமக்கப் பிறந்தவனல்ல” என்று சொல்லிக் கொண்டேயிருந்தது. அந்த வலியே அவரது ஆதர்சக் கனவுகளுக்கு அடித்தளம் அமைத்தது. யாருக்கோ வீடுகட்டப் பயன்பட்ட செங்கல், ஜெர்ரி ரைஸ்-சின் கனவுகளுக்கும் அஸ்திவாரமாய் அமைந்தது. வருகிற போது வலி அவமானமாய்த்தான் இருக்கிறது. ஆனால் வெற்றி நோக்கிய பாதைகளில் அதுவே உந்துசக்தியாய் பயன்படுகிறது.

எதையும் வெறுக்காதீர்கள்! எல்லாமே அனுபவம்தான்!

ஜெர்ரி ரைஸ்-சிற்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே அவர்கள் விரும்பாத ஒன்றைத் தான் வாழ்க்கை முதலில் கொடுக்கிறது. மற்றவர்கள் வெறுத்தொதுக்கி, விலகி ஓடிய விஷயங்களில் துணிந்து முன் நின்றதன் மூலம் ஜெர்ரி ரைஸ், விலைமதிப்பில்லாத அனுபவத்தைப் பரிசாய்ப் பெற்றார். கடினமான வேலைகள்தான் உண்மையிலேயே நாம் யார் என்பதை நமக்குக் காட்டுகின்றன. அதன் மூலம் நம்முடைய தனித்திறன்கள் என்னவென்று நமக்கும் இந்த உலகுக்கும் முதன்முதலாகத் தெரிய வருகிறது.

முடிவெடுங்கள்! செயல்படுங்கள்!

ஒன்றில் இறங்க வேண்டுமா என்ற தயக்கம் எழுகிறபோது அந்தத் தயக்கத்தைத் தழுவி வாழ்ந்தால் அதைத் தவிர்த்துவிட வேண்டும் என்றுதான் உள்மனது சொல்லும். ஆனால் இறங்கிப் பார்ப்பது என்று முடிவெடுத்த உடனேயே புத்தம்புதிய உலகம் நமக்காகத் திறந்து கொள்கிறது. எந்தச் சூழலிலும் துணிவாக முடிவெடுப்பதும் தெளிவாக செயல்படுவதும் புத்தம் புதிய வெற்றிகளை நமக்குப் பரிசாகக் கொடுக்கும்.

கூடுதல் தகுதிகளை வளர்த்தெடுங்கள்:

கால்பந்தாட்ட வீரராக வருவது என்று ஜெர்ரிரைஸ் முடிவெடுத்ததுமே, ஒவ்வொரு நாளும் ஐந்து மைல் தூரம் மலைப்பகுதிகளில் ஓடுவதை வழக்கமாகக் கொண்டார். உடலுறுதியை எவ்வளவு தூரம் வளர்த்தெடுக்கிறோமோ அந்த அளவுக்கு சிறந்த விளையாட்டு வீரராக வரமுடியும் என்பதுதான் அவருடைய எண்ணம். கால்பந்தாட்டம் கற்றுக்கொள்வது முதல் தகுதி. இந்தக் கூடுதல் தகுதியை வளர்த்ததால் தனித்தன்மையுடன் விளங்கினார் ஜெர்ரி ரைஸ்.

மிகப்பெரிய சாதனையாளராக வளர வேண்டுமென்று விரும்பிவிட்டால் குறிக்கோள் நோக்கிக் கடுமையாக உழைக்க வேண்டும். கூடுதல் தகுதிகளை வளர்க்க வேண்டும். சவால்களையே சந்தர்ப்பமாக்கி ஜெயிக்க வேண்டும். இது ஜெர்ரி ரைசுக்கு மட்டுமல்ல…. நம் ஒவ்வொருவருக்குமே வாழ்க்கை தருகிற வெற்றிச் சூத்திரம்.

வட்டத்துக்குள் சுழல்கிறீர்களா? வளர்க்கிறீர்களா..?

நம்மை நாமே அடிக்கடி கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகளில் இதுவும் ஒன்று. ஒரே தொழிலில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே வரும்போது வாழ்க்கை பரபரப்பாகத்தான் இருக்கும். ஒரு தொழிலில் தொடர்ந்து செயல்படுவது என்பதற்கும், ஒரே விதமாக செயல்படுவது என்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. உதாரணமாக ஒரு ஜவுளிக்கடையை எடுத்துக் கொள்ளுங்கள்.

அந்த ஜவுளிக்கடை ஒரு கிளையுடன் இயங்குகிறபோது அந்தக் கிளையிலேயே புதிய புதிய பிரிவுகள் கொண்டு வருவது, நவீன ரகங்களை அறிமுகப்படுத்துவது என்று பரபரப்பாக இயங்கிக் கொண்டே இருக்கும்.

அதே நிறுவனம், புதிய புதிய கிளைகளைத் தொடங்கி இன்னும் பல பகுதிகளில் செயல்படுகிறபோது வளர்வதாக அர்த்தம்.

இது நிறுவனங்களுக்கு மட்டுமல்ல. தனிமனிதர்களுக்கும் பொருந்தும். ஒரு நிறுவனத்தை நடத்துபவர் தன்னுடைய சக்தி முழுவதையும் அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மட்டும் உரியதாக்கி நிறுவனத்தை வளர்ப்பது ஒரு வகை.

பொதுப்பணி, உபதொழில், கொஞ்சம் நிலம் வாங்கி தோட்டக்கலை வளர்ப்பில் ஈடுபடுவது, பங்குச்சந்தை என்று அவரவர் ஆர்வத்திற்கும் திறமைக்கும் ஏற்ப விரிவாக்கம் செய்து கொண்டே போனால் வளர்வதாக அர்த்தம்.

பொதுவாக, புதிதாய் எதையும் முயன்று பார்ப்பதில் தயக்கம் உள்ளவர்களும், தங்களுக்கு வசதியான வாழ்க்கையை சிரமங்களோடு வாழ்ந்தால்கூடப் போதுமென்று நினைப்பவர்களும் வட்டங்களுக்குள்ளேயே வாழ்வார்கள்.

வட்டத்தில் சுழல்வதற்கும் வளர்ச்சிக்கும் உள்ள வேறுபாட்டை ஒரு வாகனத்தின் சக்கரத்திற்கும் வாகனத்தில் செல்பவருக்கும் உள்ள வேறுபாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

வழவழப்பான சாலையாக இருந்தாலும் சரி, குண்டுங்குழியுமான பாதையாக இருந்தாலும் சரி, வாகனத்தில் செல்பவரோ புதிய புதிய இடங்களைப் பார்க்கிறார். போகும் இடங்களில் எத்தனையோ வேலைகளைச் செய்கிறார்!

சக்கரம் சுழல்வதால்தான் அவர் செல்கிறார் என்பது வேறு விஷயம். ஆனால் வாகனத்தில் பயணம் செய்பவர் பெறும் பயன்களையெல்லாம் வண்டியின் சக்கரம் பெறுவதில்லை. ஒரு வட்டத்துக்குள்ளேயே சுழன்று கொண்டிருப்பவர்கள் வளர்ச்சிகள் எதையும் காண்பதில்லை.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வட்டத்தில் சுழல்பவராக மட்டும் இல்லாமல் வளர்ச்சியும் காண்கிறீர்கள் என்பதை உறுதி செய்துகொள்ள, இதோ சில வழிகள்.

நீங்கள் அன்றாடம் செய்கிற வேலைகளில், முதலிடம் தருகிற வேலைகள் என்னென்ன என்பதைப் பாருங்கள். அவை கீழ்க்கண்ட அம்சங்களுக்குள் அடங்குகின்றனவா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்:

1. நீங்கள் செய்யும் வேலை உங்களுக்கு வருமானம் தருகிறதா?

2. செய்தே தீரவேண்டிய அளவுக்கு முக்கியமானதாய் அமைகிறதா?

3. நீங்கள் கொண்டிருக்கும் இலட்சியங்களுக்கும் வகுத்திருக்கும் இலக்குகளுக்கும் தொடர்புள்ளதாய் இருக்கிறதா?

4. மற்றவர்களுக்கு பிரித்துத்தர முடியாமல் நீங்கள்தான் செய்யவேண்டும் என்ற அளவுக்கு உங்கள் கவனத்துக்குரியதாய் இருக்கிறதா?

இந்தக்கேள்விகளுக்கு பதில் கண்ட பிறகே ஒவ்வொரு வேலையையும் தேர்வு செய்யவேண்டும். அதாவது, ஒரு வாரம் முழுவதும் நீங்கள் செய்து முடிக்கவேண்டிய வேலைகளைப் பட்டியல் போட்டு அவற்றை இந்தக் கேள்விகளுக்கு உட்படுத்த வேண்டும்.

இந்த நான்கு கேள்விகளில் ஒன்றில்கூட உள்ளடங்காத வேலைகள், உங்கள் வளர்ச்சிக்குத் துணை செய்யாதவை என்று தனியாகப் பிரித்துவிட வேண்டும்.

அவற்றை, நிறைய ஓய்வு நேரம் இருக்கையில் செய்வதா, அல்லது மற்றவர்களை செய்யச் சொல்வதா, தேவையில்லாத பட்சத்தில் செய்யாமலேயே விடுவதா என்றெல்லாம் யோசித்துத் தெளிவாக முடிவெடுங்கள்.

உங்கள் ஒவ்வொரு செயலிலும் உச்சகட்டமான பலன் பெறுங்கள்.