ஒளிமயமான எதிர்காலம் இதோ! இதோ!” எனக் கனவுகண்டு, “வருங்கால வல்லரசுகளில் இந்தியா முதல்வரிசையில் நிற்கும்” என்ற நம்பிக்கையோடு, இந்தியா மட்டுமன்றி, திரைகடல் கடந்த நாடுகளிலும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி மிக வேகமாகப் பயணித்துக்கொண்டிருந்த இந்தத் துணைக்கண்டத்தின் முன்னேற்றம், “திடீரென்று” ஆட்டம் காண ஆரம்பித்திருக்கின்றது. உலகப் பொருளாதாரமே நிலையில்லாமல் தள்ளாடும்போது, இது தற்காலிகமானதுதான் என்று என்னதான் சமாதானம் செய்தாலும் எல்லோர் மனதிலும் “பயம்” தோன்ற ஆரம்பித்திருக்கின்றது. ஓரிரு மாநிலங்களைத் தவிர, மின்சாரம் தட்டுப்பாடின்றிக் கிடைப்பது மிக அரிதாகிவிட்டது.
ஜெனரேட்டர்களை வைத்து உற்பத்தி செய்யலாம் என்றால் “டீசல்” விலை “கன்னா” பின்னா” வென்று உயர்ந்து “கட்டுப்படியாகாமல்” “‘ஷாக்” அடிக்கின்றது.
பங்குச் சந்தையின் “பன்னாட்டுச்” சூதாட்ட வலையில் நடுத்தர வர்க்கம் வாழ்நாள் சேமிப்பைத் தொலைத்துவிட்டு “இரகசியக் கண்ணீர்” சிந்திக்கொண்டிருக்கின்றது. “வங்கிக்கடன்” வட்டிவிகிதம் எகிறிக் கொண்டிருக்கிறது. எல்லா அரசியல்வாதிகளும், நாட்டுக்குச் சேவை செய்கிறேன் பேர்வழி என்று தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்து உள்ளதையும் கெடுத்துத் தங்கள் “பெருமையை”க் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
மூலப் பொருட்களின் விலையேற்றம், அந்நிய நாட்டு டாலர், யூரோ போன்றவற்றின் வீழ்ச்சி, எழுச்சி – நஷ்டங்கள் ஒரு புறத்தில் நமது பொருட்களை விலையேற்ற வைக்கிற. “தொழிலாளர் பிரச்சினை என்று, இல்லாத பிரச்சினைகளை உருவாக்கி சில அரசியல்கட்சிகள் மொழி, மாநில, மத வேறுபாட்டைக் கிளறிவிட்டு ஒவ்வொரு நாளும் தொழிலை முடக்கி நாட்டுக்கு நன்மை செய்கிறார்கள்.
இப்படிப்பட்ட குழப்பமான, கடினமான, நிச்சயமற்ற சூழ்நிலையில் திரைகடலோடித் திரவியம் தேட முடியுமா என்ற கேள்வி தவிர்க்க முடியாதது. ஆனால், இப்படிப்பட்ட சூழ்நிலைகள் எல்லாக் காலகட்டங்களிலும் எல்லா நாடுகளிலும், ஏதோ ஒரு சமயத்தில் இருந்துள்ளன. இவற்றை எதிர்கொண்டும், ஏற்றுக்கொண்டும்தான் நாம் நமது பணியைத் தொடர்ந்து செய்து வரவேண்டும்.
இம்மாதிரி சமயங்களில் “நம்பிக்கையை” இழந்துவிடக்கூடாது. முக்கியமாக எல்லோருமே ஒரு புத்திமதியை முன்வைப்பார்கள் – சிக்கனமாகச் செலவு செய். தேவையற்ற செலவுகளைச் செய்யாதே – ஆடம்பரத்தைக் குறை- என்று. மூன்றுமே ஒரே அர்த்தத்தைத்தான் குறிக்கின்றன.
நம் நாட்டில் பெரும்பாலான நிறுவனங்கள் – மேற்கூறிய மூன்றையும் – எப்போதுமே கடைப்பிடித்து வருவதால், இதற்குமேல் எங்கே சென்று செலவைக் குறைப்பது? கடைந்த மோரில் வெண்ணெய் எடுப்பது இயலுமா? இங்கேதான் சரியான திட்டமிடுதல், சட்டப்படியானவற்றைச் சரியாகச் செய்தல், மனிதவள மேம்பாட்டோடு தொழிலாளர் உறவைப் பேணுதல், சரியான பொருளாதாரச் சிந்தனை, தரத்துக்காக மெனக்கெடுவது, வாடிக்கையாளர் தொடர் நல்லுறவு – ஆகியவை கைகொடுக்கும்.
அகலக்கால் வைக்காமல், படிப்படியாக வளர்ச்சி இருந்திருந்தால் – எந்த நிலையிலும் நம்மால் தாக்குப்பிடிக்கமுடியும். அதிக நஷ்டம் ஏற்படும் என்று தெரிந்தால் அதற்கான மாற்று வழிகளை உடனே செய்தாக வேண்டும். தொழிலையே சிலகாலம் நிறுத்திவைக்க வேண்டியது வந்தாலும் சரியான சட்டரீதியான, அணுகுமுறையுடன் நஷ்டத்தைக் குறைக்க சிலகாலம் நிறுத்திவைத்தாலும் தவறில்லை. ஏனென்றால் வெற்றிக்குப் பலபேர் பங்கு கேட்பார்கள். தோல்வியை நீங்கள்தான் சுமக்கப் போகிறீர்கள்.
தொழிலாளர் சம்பளம், போக்குவரத்துச் செலவுகள், ரயில், விமானப் பயணங்கள் அன்றாடச் செலவுகள் – எதையுமே நீங்கள் நினைப்பதுபோல் குறைத்துவிட முடியாது. சிங்கப்பூருக்கு விமானத்தில்தான் போகமுடியும். கப்பலில்போனால் பலநாள் வீணாகும். இப்படி எந்த அத்யாவசியச் செலவையும், எந்த நிறுவனமும் குறைத்துவிடமுடியாது. வேண்டுமானால் சிலவற்றைத் தள்ளிப்போடலாம், சிலவற்றைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கலாம்.
விளம்பரச் செலவுகளைக் குறைக்கலாம். வாடிக்கையாளரைச் சென்று சந்திப்பதை அவசியத்தின்போது மட்டும் செய்யலாம். மூலப் பொருட்களின் இருப்புகளை முடிந்தவரை குறைத்துக் கொள்ளலாம். இவை தவிர நம்மால் வேறெதையும் குறைக்க முடியாது. லாபத்தைக் குறைத்துக்கொள்ளலாம். நஷ்டம் ஏற்படாமல் தடுக்கலாம். நஷ்டம் ஏற்படுமானால் சில நாட்களுக்கு நமது பொருளாதார வசதியை வைத்து குறைவான நஷ்டத்தைச் சந்திக்கலாம்.
இதிலே ஒரு மிகப்பெரிய வேறுபாடு என்னவென்றால், நமது நாட்டில் தொழில் செய்பவர்கள் நஷ்டத்தைச் சந்திக்கும்போது, அதற்கான இழப்பை ஈடுகட்டச் சரியான வழிமுறைகள் இல்லை. மேலை நாடுகளில் தொழிலின் வருமானத்தையும், சமூக நலனுக்கு அது எவ்வாறு பயன்படுகிறது, தொழிலாளர்களின் பாதுகாப்போடு, முதலீட்டாளர்களின் பாதுகாப்பும் எப்படித் தேவை என்பதை உணர்ந்து செயல்படுவதால் அரசாங்கப் பாதுகாப்பு அனைவருக்கும் உண்டு. இங்கே எப்படி என்பதை தற்சமயம் மேற்கு வங்காளம், சிங்கூர் “டாடா” நேனோ கார் தொழிற்சாலை விவகாரத்தைப் படித்தாலே தெரிந்து கொள்ளலாம்.
எது சரி, எது தவறு என்பதற்கான விவாதங்களே தேவையில்லை. இந்த மாதிரி சூழ்நிலை வரும்போது திரைகடலோடித் திரவியம் தேட நினைப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? எப்படித் தன் தொழிலை, தன் குடும்பத்தை, தனது நிறுவனப் பணியாளர்களைக் காப்பாற்றுவது என்பதே. எனது சிறு அறிவுக்கு எட்டியவரை என் அபிப்பிராயங்கள் கீழ்க்கண்டவை.
நீங்கள் இறக்குமதி செய்து இந்தியாவில் வியாபாரம் செய்பவர்களாக இருந்தால், அந்நியச் செலவாணி உங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தால், உங்கள் பொருட்களின் விலையை ஏற்றிவிடுங்கள். ஒன்று நிச்சயம் லாபம் வேண்டும், அல்லது லாபமில்லாவிட்டாலும் நஷ்டம் கூடாது, அல்லது சில நாட்களுக்கு நஷ்டம் ஆனாலும் பின்னர் சரி செய்யலாம் – என்ற முடிவைத் தாங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அதே சமயம் தங்களுடைய பிரச்சினைகளை தங்களோடு தொழில் தொடர்பு கொண்ட வெளிநாட்டவரிடம் வெளிப்படையாகத் தெரிவித்துவிடவேண்டும். உங்களது வியாபாரத்தைப் பொறுத்து, அதன் மூலம் அவருக்குக் கிடைக்கின்ற ஆதாயத்தைப் பொறுத்து, அவர் உங்களுக்கு என்ன நஷ்டம் வந்தாலும், அந்த ஒப்பந்தத்தைக் காப்பாற்றுங்கள். ஏனெனில் தொழில் தர்மம் மிகமுக்கியம். இன்றைய இந்த மின்வெட்டு, விலைவாசி உயர்வு, பண வீக்கம், வேலை நிறுத்த இடையூறுகள் எல்லாம் மாறி, மீண்டும் ஒரு நல்ல சூழ்நிலை உருவாகலாம். உருவாகும்.
அப்போது இந்த வாக்குறுதியும், ஒப்பந்தமும் அதை நிறைவேற்ற நீங்கள் அடைந்த நஷ்டத்தையும் கூறியே, புதிய ஒப்பந்தத்தில் நல்ல லாபம் பெற வழிவகைகளைச் செய்து கொள்ளலாம்.
மேற்சொன்ன வழி, எல்லாத் தொழில்களுக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. அப்படிப்பட்ட சூழல் உங்களுக்கு இருக்குமானால், அதனால் அபரிதமான இழப்பு வந்துவிடும் என்று தோன்றினால், திரைகடல் ஓட வேண்டாம். உள்நாட்டில் கவனம் செலுத்துங்கள். உங்களது பொருளாதார பலம் உங்களுக்குத்தானே தெரியும். அதை வைத்து முடிவு செய்யுங்கள்.
தொடர்ந்து தொழில் செய்தால்தான் வெற்றி என்று கூற, இதொன்றும் விளையாட்டு மைதானமல்ல. இழப்பு வரும் என்று தெரிந்தால், தற்காலிகமாக விலகி இருத்தலே நலம் என்றால் விலகி இருங்கள்.
எனக்கு மிக நெருங்கிய நண்பர் ஒருவர். கோவையிலிருந்து சிறிய அளவில், ஏற்றுமதி செய்து கொண்டிருந்தார். சில இயந்திரங்களுக்குத் தேவையான உதிரிபாகங்களை வாங்கி, சில குறிப்பிட்ட வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு விற்றுவந்தார். நான்கைந்து வருடங்கள் நன்றாக வியாபாரம் நடந்தது. ஏற்றுமதி மூலம் கணிசமான லாபம் கிடைத்தது. ஒரு சமயம், இந்தியாவில் ஏற்பட்ட சில பொருளாதார சூழ்நிலையால், இவர் ஒப்பந்தம் செய்த விலைக்கு ஏற்றுமதி செய்தபோதும், உள்நாட்டில் வாங்கிய பொருட்களுக்கு அதிகவிலை கொடுக்க வேண்டி வந்தது. மிகப் பெரிய நஷ்டத்தைச் சந்தித்ததோடு, கிட்டத்தட்ட இருக்கின்ற வீட்டைக்கூட விற்றுவிட்டு, வாடகை வீடு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இரண்டாண்டுகள் சிரமப் பட்டார். அதே சமயம், அந்தக் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்குக் கடிதம் எழுதி, தன்னால் இனிமேல் ஏற்றுமதி செய்ய இயலாது, வேறு யார் மூலமாகவாவது பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள் என்று தெரிவித்து விட்டார். தனக்கு ஏற்பட்ட இழப்பை ஏனோ தெரிவிக்கவில்லை, இரண்டாண்டுகள் கழித்து, அந்த வாடிக்கையாளர்கள் இவரைத் தொடர்பு கொண்டு மீண்டும் தொடருங்கள் என்று கேட்ட போதுதான் உண்மையை எடுத்துரைத்தார்.
இவரது அந்த நல்லெண்ணமும், இரண்டாண்டுகள் துயரைத் தன் மனதிலேயே இருத்திக்கொண்ட பொறுமையும், வியாபார நேர்மையும், வாடிக்கையாளரது நம்பிக்கையும் – மீண்டும் அவரது வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, இன்று மிகச் சிறப்பாகத் தொழில் செய்துகொண்டு வளமாக வாழ்ந்து வருகிறார்.
எப்போதுமே பாதை சீராக இருப்பதில்லை. குண்டும் குழியுமாக இருந்தால் பத்திரமாகப் பார்த்து ஓட்ட வேண்டியது நமது திறமை. அல்லது சரியான பாதை அமையும்வரை காத்திருப்பது புத்திசாலித்தனம்.
No comments:
Post a Comment