Saturday, April 27, 2013

சவால்களில் உள்ளது சந்தர்ப்பம்

ராஃபோர்ட் என்கிற நகரம், அமெரிக்காவின் மிஸ்ஸிசிப்பி மாநிலத்தில் உள்ளது. அங்கே வளர்ந்துவந்த இளைஞனின் தந்தை, கட்டிடங்கள் கட்டுவதற்கு செங்கல் சுமக்கும் கூலியாளாக வேலைபார்த்தார். விடுமுறைக் காலங்களில் அப்பாவுக்கு உதவியாய் இந்த இளைஞனும் போவான். கனவுகள் சுமக்கும் கல்லூரி மாணவனுக்கு செங்கல் சுமப்பதொன்றும் சந்தோஷமான வேலையல்ல.

ஓரிடத்தில் நின்றுகொண்டு, தன்னிடம் வீசப்படும் செங்கற்களைப் பிடித்து, அதே வேகத்தில் அடுத்தவரிடம் வீசுகிற வேலையில், வெய்யிலில் உலர்ந்தும் வியர்வையில் நனைந்தும் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.

ஆனால் அந்த இளைஞன் மன உறுதியுடன் செயல் பட்டான். செங்கற்கள் கைகளில் வந்து விழுகிற போதெல்லாம் கரங்களைப் போலவே அவன் மனதிலும் உரமேறிக் கொண்டிருந்தது. ஒவ்வொருமுறை செங்கல்லைப் பிடிக்கும்போதும் வாழ்வில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று உறுதிகொண்டான் அந்த இளைஞன். கைகளில் செங்கல்லைத் தாங்கிக் கொண்டே ஒரு கால்பந்து வீரனாய் வரவேண்டும் என்ற கனவுக்கு நெய்வார்த்துக் கொண்டிருந்தான் அவன். அந்தக்கனவு நனவானது. உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரனாய் வளர்ந்த ஜெர்ரி ரைஸ்தான் அந்த இளைஞன்.

கால்பந்தாட்டத்தில் ஈடுபாடு இல்லாதவர்கள் கூட “நட்சத்திரங்களுடன் ஒரு நடனம்” (Dancing with the Stars) தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அவரை அறிந்துகொண்டிருந்தார்கள்.

தன் வாழ்வில் தன்னைப்பிழிந்த வறுமையைத் தான் பிழிந்து சாரமெடுத்து, சாறு குடித்து, வெற்றி வேட்கையைத் தணித்துக் கொண்ட ஜெர்ரி ரைஸ், தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டபோது சொன்ன விஷயங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டுகிற வெற்றிச் சூத்திரங்கள்.

சவால்களில் உள்ளது சந்தர்ப்பம்:

தன்னைநோக்கி வீசப்பட்ட செங்கற்களைப் பிடிப்பது வேறு வழியில்லாத வேலை. ஆனால் வெட்டி வேலை என்று பலரும் விமர்சனம் செய்தார்கள். ஆனால் அந்த வலிமிகுந்த பொழுதுகளை, எதிர்காலத்தின் வரைபடத்தை இதயத்தில் வரைந்து கொள்ளப் பயன்படுத்தினார் ஜெர்ரி ரைஸ். அந்த வலியில் விழுந்த வியர்வைத் துளிகள் வைராக்கியத்தை வளர்த்தன. எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலைக் கொடுத்தன. கொளுத்தும் வெய்யிலில் அசராது நிற்கும் பொறுமை, வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் பக்குவத்தைப் பரிசாய்த் தந்தது.

வெற்றியின் பாதையில் வலிகள் சகஜம்:

வலியும் வேதனையும் தங்கத்தை வாட்டும் நெருப்பின் வேலையைத்தான் செய்கின்றன என்பதை சரியாகப் புரிந்து கொண்டிருந்தார் ஜெர்ரி ரைஸ். உள்ளங்கைகளில் வந்து விழுந்த ஒவ்வொரு கல்லும், “நீ செங்கல் சுமக்கப் பிறந்தவனல்ல” என்று சொல்லிக் கொண்டேயிருந்தது. அந்த வலியே அவரது ஆதர்சக் கனவுகளுக்கு அடித்தளம் அமைத்தது. யாருக்கோ வீடுகட்டப் பயன்பட்ட செங்கல், ஜெர்ரி ரைஸ்-சின் கனவுகளுக்கும் அஸ்திவாரமாய் அமைந்தது. வருகிற போது வலி அவமானமாய்த்தான் இருக்கிறது. ஆனால் வெற்றி நோக்கிய பாதைகளில் அதுவே உந்துசக்தியாய் பயன்படுகிறது.

எதையும் வெறுக்காதீர்கள்! எல்லாமே அனுபவம்தான்!

ஜெர்ரி ரைஸ்-சிற்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே அவர்கள் விரும்பாத ஒன்றைத் தான் வாழ்க்கை முதலில் கொடுக்கிறது. மற்றவர்கள் வெறுத்தொதுக்கி, விலகி ஓடிய விஷயங்களில் துணிந்து முன் நின்றதன் மூலம் ஜெர்ரி ரைஸ், விலைமதிப்பில்லாத அனுபவத்தைப் பரிசாய்ப் பெற்றார். கடினமான வேலைகள்தான் உண்மையிலேயே நாம் யார் என்பதை நமக்குக் காட்டுகின்றன. அதன் மூலம் நம்முடைய தனித்திறன்கள் என்னவென்று நமக்கும் இந்த உலகுக்கும் முதன்முதலாகத் தெரிய வருகிறது.

முடிவெடுங்கள்! செயல்படுங்கள்!

ஒன்றில் இறங்க வேண்டுமா என்ற தயக்கம் எழுகிறபோது அந்தத் தயக்கத்தைத் தழுவி வாழ்ந்தால் அதைத் தவிர்த்துவிட வேண்டும் என்றுதான் உள்மனது சொல்லும். ஆனால் இறங்கிப் பார்ப்பது என்று முடிவெடுத்த உடனேயே புத்தம்புதிய உலகம் நமக்காகத் திறந்து கொள்கிறது. எந்தச் சூழலிலும் துணிவாக முடிவெடுப்பதும் தெளிவாக செயல்படுவதும் புத்தம் புதிய வெற்றிகளை நமக்குப் பரிசாகக் கொடுக்கும்.

கூடுதல் தகுதிகளை வளர்த்தெடுங்கள்:

கால்பந்தாட்ட வீரராக வருவது என்று ஜெர்ரிரைஸ் முடிவெடுத்ததுமே, ஒவ்வொரு நாளும் ஐந்து மைல் தூரம் மலைப்பகுதிகளில் ஓடுவதை வழக்கமாகக் கொண்டார். உடலுறுதியை எவ்வளவு தூரம் வளர்த்தெடுக்கிறோமோ அந்த அளவுக்கு சிறந்த விளையாட்டு வீரராக வரமுடியும் என்பதுதான் அவருடைய எண்ணம். கால்பந்தாட்டம் கற்றுக்கொள்வது முதல் தகுதி. இந்தக் கூடுதல் தகுதியை வளர்த்ததால் தனித்தன்மையுடன் விளங்கினார் ஜெர்ரி ரைஸ்.

மிகப்பெரிய சாதனையாளராக வளர வேண்டுமென்று விரும்பிவிட்டால் குறிக்கோள் நோக்கிக் கடுமையாக உழைக்க வேண்டும். கூடுதல் தகுதிகளை வளர்க்க வேண்டும். சவால்களையே சந்தர்ப்பமாக்கி ஜெயிக்க வேண்டும். இது ஜெர்ரி ரைசுக்கு மட்டுமல்ல…. நம் ஒவ்வொருவருக்குமே வாழ்க்கை தருகிற வெற்றிச் சூத்திரம்.

No comments:

Post a Comment