Monday, April 29, 2013

வெற்றி வேண்டுமா வழிகள் இதோ!!


எதைச் செய்தாலும் வெற்றிக்காகவே செய்கிறோம். ஆனால், எப்படிச் செய்கிறோம் என்பதைப் பொறுத்ததுதான் வெற்றியும் தோல்வியும். செய்கிற வேலைகளும் தொழில்களும் வேறுபடலாம். பொதுவானதாக இருப்பது அணுகுமுறையும், நம்மை ஆயத்தம் செய்து கொள்கிற விதங்களும்தான். அவற்றில் கவனம் செலுத்துகிறபோது வெற்றிக்கான விதை விழுகிறது.

நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அதை வெற்றிகரமாகச் செய்வது என்பதை நோக்கி நகர நகர சாதனை என்பதே சுலபமான வேலையாகி விடுகிறது.

அணுகுமுறை எதிலிருந்து ஆரம்பிக்கிறது? எண்ணங்களிலிருந்து ஆரம்பிக்கிறது. எந்தப் பின்புலமும் இல்லாமல் தொடங்கி சிலர் அசகாய வெற்றிகளை எட்டியிருக்கிறார்களே, அந்த வெற்றிகள் எதிலிருந்து தொடங்கின தெரியுமா? அவர்களின் அபிப்பிராயங்களில் இருந்து!! தாங்கள் வெறுமையான சூழலில் இருந்தாலும் அங்கிருந்து வெற்றியாளர்களாய் வளரமுடியும் என்ற அபிப்பிராயம்தான் அவர்களுடைய முதல் உந்து சக்தி. தங்களின் உற்சாகமே அவர்களை உரிய இடத்தில் கொண்டு சேர்க்குமென உறுதியாய் நம்பியவர்கள் அவர்கள்.

அனைத்து வெற்றிகளும் நம் அபிப்பிராயங்களில்தான் ஆரம்பமாகின்றன என்பது நாம் அறிய வேண்டிய முதல்பாடம். அந்த அபிப்பிராயம் தோன்றுகிறபோதே அடுத்தடுத்து அதனை உறுதிசெய்து கொள்ளும்விதமாக நடவடிக்கைகளும், ஒழுங்கும் தானாக உருவாகி விடுகிறது. எனவே வெற்றி பெறவேண்டும் என்கிற அபிப்பிராயமே முதல்படி.

மனதில் ஏற்படுகிற இந்த அபிப்பிராயம் வார்த்தைகளிலும் வெளிப்படத் தொடங்குமென்றால் வெற்றியை நோக்கி இரண்டாவது அடியை எடுத்து வைக்கிறீர்கள் என்று பொருள். ஏதேனும் ஒன்றில் நேர்ந்த தோல்வியைப் பற்றிப் பேசினால், புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள வாய்ப்புக் கிடைத்தது என்று நீங்கள் சொல்லத் தொடங்கிவிட்டீர்களா? அப்படியானால் வெற்றிக்கான மனோபாவம் உங்களுக்குள் அரும்பத் தொடங்கிவிட்டதாக அர்த்தம்.

ஏதேனும் ஒன்றை “இதைச் செய்ய முடியாது” என்று சொல்வதைவிட, “வேறு எப்படி செய்யலாம் என்று யோசிக்கலாம்” என்கிற அணுகுமுறை ஏற்படுவதுதான், மனதில் அரும்புகிற உறுதி வார்த்தைகளிலும் வெளிப்படத் தொடங்கியதன் அடையாளம்.

வெற்றியை நெருங்குவதற்கான வழிகளில் உடற்பயிற்சியும் ஒன்று. இது பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் உடற்பயிற்சி ஆரோக்கியத்திற்கும் எடைகுறைப்பும் மட்டுமல்ல. உடற்பயிற்சி மூலம் வாழ்க்கை இயல்பாக இருப்பதாகவும் – புதிய சக்தி கிடைப்பதாகவும் – நம்பிக்கை அதிகரிப்பதாகவும் – ஆய்வு முடிவுகள் அறிவிக்கின்றன.

வெற்றிபெற விரும்புகிறவர்களுக்கு மிக முக்கியமான இன்னொரு பண்பு, புதிய மனிதர்களையும் புதிய சூழல்களையும் தயக்கமில்லாமல் எதிர்கொள்வது. பக்கத்தில் யாராவது புதிதாகக் குடி வந்தால், அவர்களாக வந்து அறிமுகம் செய்துகொள்ளும்வரை காத்திருக்காமல், நீங்களாகச் சென்று அறிமுகம் செய்து கொள்வதில் தொடங்கி, முற்றிலும் அந்நியமான சூழலில் ஏற்படும் வாய்ப்புகளைக் கூச்சமில்லாமல் எதிர்கொண்டு, அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதுவரை எத்தனையோ நிலைகளுக்கு இது பொருந்தும்.

நாம் சற்றும் எதிர்பாராத இடங்களிலிருந்து, எதிர்பாராத வாய்ப்புகள் ஏற்படுவதும், அதன் வழியே நாம் புதிய ஏணிகளில் ஏறுவதும் நிகழ்வதற்கு எல்லா சாத்தியக் கூறுகளும் உள்ளன. எனவே புதிய திசைகள் திறந்து கொள்ள உற்சாகமாகக் காத்திருப்பதும், நமக்குள் இருக்கும் நத்தைக் கூட்டை உடைத்துக்கொண்டு நதிபோலப் புறப்படுவதும் வெற்றிக்கு வழிசொல்லும் அம்சங்கள்.

ஒருவர் வெற்றியாளராக உருவெடுக்க நினைக்கிறார் என்றால், மனதுக்குள் சில முன்னோடிகளை அவர் வரித்துக்கொள்வது வழக்கம்.அப்படி வரித்துக்கொள்கிற முன்னோடிகள் நிகரற்ற வெற்றியாளர்களா என்பது முக்கியமல்ல. நிரந்தர வெற்றியாளர்களா என்பதே முக்கியம். கொடிகட்டிப் பறந்து கோலாகலமாய் வளர்ந்து – பிறிதொருநாள், அது குறுக்கு வழியில் கிடைத்த வளர்ச்சி என்று தெரிய வரும்போது, அந்த வெற்றியாளர் மீதான அபிப்பிராயம் மட்டுமா விழுகிறது? வெற்றி குறித்த நம்பிக்கையின் அடித்தளமே ஆட்டம் காண்கிறது. எனவே, சரியான மனிதரை – சரியான காரணங்களுக்காக முன்னோடியாய் வரித்துக் கொண்டு முன்னேறுவது மிகமிக முக்கியம்.

ஒரு பாதையில் நீங்கள் போகிறபோது வாகனத்தை நிறுத்தி வழி கேட்கிறீர்கள். சிலர் சரியாக வழிகாட்டுகிறார்கள். சிலர் குழப்புகிறார்கள். சிலர் அலட்சியமாக நகர்ந்து போய்விடுகிறார்கள். இதற்கிடையே சாலைக்குக் குறுக்கே அவசரக்காரர்களிலிருந்து ஆட்டுக்குட்டிகள் வரை வருவதுண்டு. இவற்றையெல்லாம் தாண்டி பயணத்தை நிகழ்த்துவதே, சென்று சேர்கிற இடத்தில் செய்யவேண்டிய முக்கியமான பணிக்காகத்தான்.

அந்தப் பணியில் இருக்கும்போது, வழியில் நடந்தவற்றை நினைத்துக் கொண்டிருப்பீர்களா என்ன? வாழ்க்கைப் பயணமும் அப்படித்தான். உங்கள் இலக்கை எப்படியாவது சென்றடைய வேண்டுமே தவிர வழியில் வரும் விமர்சனங்களை, சின்னச் சின்ன சீண்டல்களை பொருட்படுத்தக் கூடாது.

வெற்றிக்கு மற்றொரு முக்கியமான வழி, பாராட்டு. பாராட்டு என்றதுமே மற்றவர்கள் பாராட்டும்படி வாழ்வதுதான் முதலில் நம் மனதில் தோன்றும். அதுமட்டும் போதாது. மற்றவர்கள் பாராட்டும் விதமாக வளர்வது போலவே மற்றவர்களைப் பாராட்டும் பண்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பாராட்டு மட்டும் போதாது. முடிந்தவரை மற்றவர்கள் வெற்றிபெற உதவுவதுகூட உங்கள் வெற்றிகளுக்குத் துணை நிற்கும். உதவி தருபவர்களே உதவி பெறுகிறார்கள் என்பது பொதுவிதி. எப்போதோ விதைத்த விதை எத்தனையோ பழங்களைத் தருவதுமாதிரி, எப்போதோ செய்கிற உதவி நிகரற்ற நன்மைகளாகத் திரும்பவரும்.

உள்ளத்தில் ஏற்படும் அபிப்பிராயம், உங்களிடம் வெளிப்படும் வார்த்தைகள், உடற்பயிற்சி, அறியாத இடங்களிலும் ஆளுமையுடன் அணுகுதல், உண்மையான வெற்றியாளர்களைப் பின்பற்றுதல், முக்கிய இலக்கில் மட்டும் கவனம் செலுத்துதல், மற்றவர்களைப் பாராட்டி, உரிய உதவிகள் புரிதல். இத்தனை பண்புகளும் எப்போது உங்களிடம் ஜொலிக்கிறதோ, நீங்கள் ஜெயிக்கப் போவது நிச்சயம்!

No comments:

Post a Comment