Monday, May 11, 2015

அடி சிறிது, ஏற்றம் பெரிது

அடி சிறிது, ஏற்றம் பெரிது

நீங்கள் உங்கள் அலுவலகத்தில் ஒரு பெரிய அதிகாரியாக இருந்தாலும் சரி, ஒரு பொது அமைப்பில் பெரிய பொறுப்பில் உள்ளவராக இருந்தாலும் சரி, அல்லது சமூகத்தில் பெரிய மனிதராக மதிக்கப் பட்டாலும் சரி, சில அடிப்படை நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது மிக அவசியம். இவைகள் உங்களுக்கு மிக “ஸில்லி”யாகத் தோன்றலாம். ஆனால் நாம் அற்பமாக எண்ணும் இத்தகைய அடிப்படை விஷயங்கள்தான் சில முக்கிய தருணங்களில் நம்மைக் கவிழ்த்து விடுகின்றன. ஆகையால் இவற்றின்பால் நாம் குறிப்பாகக் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் நாம் ஒரு முழு நிறைவான நன்மதிப்பைப் பெறமுடியும். Trifles make perfection என்கிறது ஒரு பொன்மொழி.

சரி, இப்போது இவ்வகை “சின்னச் சின்ன செய்திகள்” என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

ஒரு இடத்தில் போய் “நான் இன்னார்” என்று சுய அறிமுகம் செய்து கொண்டு எதேனும் உதவியையோ, சிறப்புச் சலுகையையோ கேட்டுப் பெறுவதைவிட, உங்கள் உதவியாளரை விட்டு கேட்கச் சொல்வது சிறப்பானது. நீங்களே கேட்டால் ஒரு மாற்று கம்மிதான். அப்படி சில இடங்களில் நீங்களே போகவேண்டிய கட்டாயமாக இருந்தால், நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்பதை இன்னொருவரை விட்டு அறிவிக்கச் சொல்லுங்கள். இவ்வாறு செய்தால் உங்கள் செல்வாக்கு தன்னையறியாமல் கேட்பவர் மனதில் பதியும். காவல்துறை மற்றும் அரசு சார்ந்த முக்கிய அதிகாரிகள் இத்தகைய நடைமுறையைக் கையாள்வதை நீங்கள் காணலாம். “ஐயா வர்றார்” என்று கட்டியம் கூறப்படுவதை கண்டிருப்பீர்கள். இது நிச்சயமாக ஒரு effect ஏற்படுத்துகிறது.  இவ்வுலகம் பெரிய மனிதர்களை அதற்குள்ள பந்தாவுடன் இருந்தால்தான் மதிக்கிறது. என்பது மறுக்க முடியாத உண்மை.
அலுவலகத்திலோ அல்லது எந்தப் பொது இடத்திலோ, வராண்டாவில் நடந்துவரும்போதும், ஒப்பனை அறையிலும் யாருடனும் பேச்சுக் கொடுக்காதீர்கள் - முக்கியமாக உங்கள்கீழ் பணியாற்றுபவர்கள், வாடிக்கையாளர்கள், உக்களைக் காண வந்திருப்பவர்கள் போன்றவர்களுடன். அவர்களை உங்கள் அறைக்கு அழைத்துப் பேசுங்கள். இது உங்களைப் பற்றிய அவர்களின் கணிப்பை மேம்படுத்தும்.
உங்கள் அறையில் உங்கள்கீழ் பணியாற்றும் நபர்கள் குழுமியிருக்கும் நேரத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. என்ன செய்வீர்கள்? அவர்கள் பாட்டுக்கு இருக்கட்டும். நாம் பாட்டுக்கு பேசுவோம் என்று உரையாடுவீர்களா? அதுபோல் ஒருபோதும் செய்யாதீர்கள். ஏதாவது மிக முக்கியமான செய்தியை பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கும். அது எல்லோருக்கும் தெரியவேண்டியதில்லை. ஆகையால் அவர்களை, “தயவுசெய்து கொஞ்சம் வெளியிலிருங்கள்’ என்று சொல்வதில் தவறொன்றும் இல்லை. இத்தகைய நடைமுறையை பலர் கையாண்டு நான் பார்த்திருக்கிறேன். ஏனென்றால் நீங்கள் இன்னொருவருடன் பேசுவது அலுவலக புல்லடினில் பிரசுரம் ஆகவேண்டுமா! விருந்தினர்களோ, நீங்கள் “வெளியே போ” என்று சொல்லமுடியாத ஆசாமிகளோ உள்ளிருந்தால், ஃபோனில் பேசுபவர்களை “அப்புறம் பேசலாம்” என்று சொல்லி சமாளித்துவிடுங்கள். கொசு அளவு மூளையிருந்தால்கூட அடுத்த முனையில் உள்ளவர் நிலைமையைப் புரிந்து கொள்வார்!
முக்கிய விஷயங்களை - குறிப்பாக அலுவலக அரசியல் சார்ந்த விஷயங்களை காரிலோ, வேனிலோ - இதுபோன்று பிரயாணம் செய்யும்போது யாருடனும் விவாதிக்காதீர்கள். Gossip mill-க்குத் தீனி போடுவது போல ஆகும். Sensitive விஷயங்கள் - மாறுதல், பதவி உயர்வு, உங்கள் வணிக சம்பந்தமான ரகசியங்கள் முதலியவை உங்களையறியாமல் இத்தகைய உரையாடல்களின் மூலம் வெளிப்பட்டால், உங்களுக்கு பெரிய இழப்பு வர வாய்ப்புள்ளது. Information is power.
ஒப்பனை அறை (Toilet) ஒன்றில் வெளியேறும் வாயிலின் மேல் “X Y Z” என்று கொட்டை எழுத்தில் எழுதியிருந்ததை பார்த்தேன். அதற்கு என்ன பொருள் என்று விசாரித்தபோது “Examine Your Zip” என்றார்கள். நீங்களே சொல்லுங்கள், இது சின்ன விஷயமா? பாத்ரூமிலிருந்து வெளியே வரும் முன்னால் “அந்த இடத்தை” ஒரு முறை “செக்” செய்து கொள்வது மிக முக்கியம். இதில் கவனம் செலுத்தாமல் பல பொது நிகழ்ச்சிகளில் பெரிய மனிதர்கள் சிலர் வழிந்த்தை நான் பார்த்திருக்கிறேன்! மேலும் சட்டை, பேண்ட் - பெண்களானால் அவர்களின் மேலாடை முதலியவற்றின் மேல் தண்ணீர் சிந்தியிருந்தால் அதோடு பலர் முன்னால் போகாதீர்கள். அது காயும்வரை காத்திருந்து போங்கள். நம்மை பல கண்கள் கவனிக்கின்றன என்பதை எப்போதும் மனதில் கொள்ளவேண்டும்.
எப்போதும் உங்கள் நடை, உடை பாவனைகளில் ஒரு “ஸ்டைலை”க் கடைப் பிடியுங்கள். இது நீங்கள் பல முறை ஒத்திகை பார்த்து செம்மைப் படுத்தப் படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும்.  உங்கள் இமேஜை அது மேம்படுத்தவல்லதாக அமைய வேண்டும். உலகம் அதை தலைவர்களிடம் எதிர்பார்க்கிறது.
உங்களை எளிதில் எனையோர் “கணக்குப் போட்டு” வைக்க அனுமதிக்காதீர்கள். திடீரென்று வேறு விதமான கேள்விகளைக் கேளுங்கள், சற்றே மறுபட்ட கோணங்களில் அணுகுங்கள்.  எதிர்வினைகளை மாற்றுங்கள். கொஞ்சம் uncertainty இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நம்மை மேய்த்துவிடுவார்கள்.
எப்போதும் மலர்ச்சியுடனும், இலமையான தோற்றத்துடனும், தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்த முகத்தோற்றதுடனும் இருங்கள். “என்னையா, எனக்கோ வயசாயிடிச்சு, இளமைத் தோற்றத்துக்கு எங்கே போவது? யயாதி கதையெல்லாம் இப்போது எடுபடாது” என்கிறீர்களா? சொற்ப வயதுள்ள பலரே ஈரமான சாக்ஸ் போல முக மலர்ச்சி.யில்லாமல் வயோதிகத் தோற்றத்துடன் “போங்கு” போல இருப்பதைப் பார்க்கலாம். அதே நேரத்தில் வயதான பலர் “விண்’ணென்ற தோற்றத்துடன் இருப்பதையும் காணலாம்!
கூடியவரையில் உங்களுடைய சொந்த வாழ்க்கை பற்றிய உள்விவரங்கள், வங்கிக் கணக்கு மற்றும் சொத்து பற்றிய விவரங்கள் முதலியவை பொதுவில் அறியப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எனக்குத் தெரிந்த ஒரு பெரிய அதிகாரி வங்கிக்கு எந்த உதவியாளரையும் அனுப்ப மாட்டார். தானேதான் போவார். அதுபோல் இல்லாவிட்டாலும் முக்கிய விவரங்களை public domain-ஆக வைக்காமலிருப்பது நல்லது. நீங்கள் ஒரு enigma போன்று, “இன்னும் முழுதும் வாசிக்கப்படாத புத்தகமாக” தோற்றமளிக்க வேண்டும். அப்போதுதான் பிறர் மனத்தில் உயர்வான மதிப்பு இருக்கும். சலிப்புக்கு இடமில்லாமல் “இவரிடம் இன்னும் ஆசாமி ஒளிந்திருக்கிறார்” என்ற உணர்வு எப்போதும் கனன்று கொண்டிருக்க வேண்டும்.
உங்களிடம் ஒட்டுப்புல் போல் “பச்சக்”கென்று ஃபெவிகால் போடுபவர்களை “கறகற”வென்று வெட்டிவிடுங்கள். உங்களுக்கு கேடு வர வேண்டுமென்றால் இவர்களால்தான் வரும். நேர்மையானவர்களை உங்களிடம் அண்டவிடாமல் இவர்கள் விரட்டி விடுவார்கள். சரியான செய்திகள் உங்களை எட்டாமல் ஃபில்டர் செய்து விடுவார்கள். உங்களை “ராடார்” போல் கண்காணிப்பில் வைத்துக் கொள்வதால் அவர்களை நீங்கள் ஏதும் கேள்வி கேட்க இடம் கொடுக்காமல் இருப்பதுதான் அவர்களின் திட்டம். ஜாக்கிறதை!

உட்பகை நீக்கின் எப்படை வெல்லும்!

உட்பகை நீக்கின் எப்படை வெல்லும்!

"நீ நீயாக இரு" என்று பல அறிஞர்கள் சொல்கிறார்களே, ஆனால் நீங்கள் பிறருக்காக உங்களை மாற்றிக் கொள்ளச் சொல்கிறீர்களே என்கிற அடிப்படைக் கேள்வியை பலர் எழுப்புகிறார்கள். உண்மையில் நான் அடிக்கோடிட்டுச் சொல்வதும் "நீயாகவே இரு" என்பதுதான். ஆனால் அதில் ஒரு caveat (மாறுபட்ட புரிதல் கொள்ளக் கூடும் என்ற எச்சரிக்கை) உள்ளது. "நீ" என்பது சரி. ஆனால் எந்த "நீ" என்பதுதான் பிரச்னையே. ஏனென்றால் நீ உண்மையில் யார் என்பதை நீ முழுதும் அறிந்து கொண்டாயா என்ற கேள்விக்கு விடை காண முற்படும்போது தான் நீ உன்னை அறிவது எவ்வளவு கடினம் என்பது புரியும். அதனால்தான் இந்த கட்டுரைத் தொடருக்கு மிகவும் பொருத்தமாக "உன்னையறிந்தால்.." என்ற தலைப்பை நண்பர் கனேஷ் சந்திரா இட்டபோது மிகவும் மகிழ்ந்தேன்.

உண்மையில் தன்னிச்சையாக நிகழும் நம் எண்ணப் போக்கு, செயல்படும் விதம் எல்லாமே நம் மரபணுக்களில் பதிவு செய்யப்பட்ட அமைப்பின் உந்துதலால் விளைவது. இதனால்தான் பல நேரம் நம் அறிவுசார்ந்த முடிவுகளுக்கு எதிராக நம் எண்ணமும் செயலும் நிகழ்ந்து விடுகிறது. நம் ஆழ்மனதை நம் ஆளுமைக்குள் கொண்டுவருவதற்கு கடுமையான ஆழ்நிலைத் தியானமும், தொடர்ந்த பயிற்சியும், இன்னும் சிறப்பான மனவியல் சார்ந்த செயல்பாடுகளும் (self-hypnosis) தேவையாக இருக்கிறது.

அதனால்தான் நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால், உங்கள் எண்ணம், சொல், செயல் மூன்றையுமே உங்கள் மனக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்து, அவற்றின் செயல்பாட்டில் உங்களைச் சுற்றியுள்ள இந்த உலகத்தின் இயல்புக்கேற்ப சிறிது மாற்றங்கள் செய்துகொண்டு (behavioural modification), சிறப்புற வாழ வேண்டும் என்பதுதான். அத்தகையான மனப் பயிற்சிக்கு அடிப்படையே உங்களை நீங்கள் நன்கு அறிந்து, உங்களையே (சிறிதளவாவது) உங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதுதான். இதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதன் நோக்கம், இதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காண்பிக்க மட்டுமல்லாது, இது எவ்வளவு கடினம் என்பதை உங்கள் மனதில் பதிக்கவேண்டும் என்பதால்தான்.

உங்களுடைய வலிமைகளை மட்டுமல்லாமல்,. பலவீனங்களையும் முழுமையாக அறிதல் மிக அவசியம். உங்களைவிட உங்களுடைய எதிரிகள் உங்களின் பலவீனங்களை சரியாக அடையாளம் கண்டுகொண்டு, அவற்றை அவர்களின் சுயநல இலாபத்திற்கேற்ப எவ்வாறு கைக்கொள்வது என்று ஒரு  திட்டம் வகுத்திருப்பார்கள். நம்மைவிட நம் எதிரிகள் சுறுசுறுப்புடன் செயல்படுகிறார்கள் என்பதை எப்போதும் மனதில் இருத்திக் கொள்ளவேண்டும். எப்போது நீங்கள் வெற்றிப் பாதையில் அடியெடுத்து வைக்கிறீர்களோ, அப்போதே எதிரிகள் என்கிற காளான் துளிர்விடத் தொடங்குவதை ஆண்டவனேயானாலும் தடுக்க இயலாது. ஏனென்றால் ஆண்டவனுக்கே எதிரிகள் பஞ்சமில்லாமல் இருந்தார்கள் என்பதை நாம் அறிவோம்!

நம்முடைய உண்மையான மதிப்பீட்டை அறியவேண்டுமானால், நம் எதிரிகளைக் கேட்டாலே தெரியும். ஏனென்றால் அவர்கள் மிக நுணுக்கமாக நம் பலம் மற்றும் பலவீனங்களை ஆராய்ந்து அவற்றைப் பட்டியலிட்டிருப்பார்கள். உண்மையில் நீங்கள்தான் அதனைச் செய்திருத்தல் வேண்டும். ஆனால் அது உங்கள் மனதின்பால் தைக்காது. ஏனெனில் நீங்கள்தான் உங்கள் வலிமையின் சிறு வெளிப்பாட்டின்பால் கிட்டிய வெற்றியின் மிதப்பில் கிடக்கிறீர்களே - அப்போது பலவீனத்தைப் பற்றிய எண்ணம் மனதினுள் புக வாய்ப்பேது? ஆனால் இந்தத் தருணம்தான் எதிரிகளின் மைதானம் -புகுந்து விளையாடிவிடுவார்கள்! அவ்வப்போது நிகழும் சிறு வெற்றிகள் தரும் போதை உங்களைப் பற்றிய ஒரு மிகுதியான இமேஜை உங்கள் மனதில் உருவாக்கிவிடும்(megalomaniac). அதனால் உண்மைநிலை மறைக்கப் பட்டுவிடும். அப்போது உங்களைச் சுற்றி ஒரு "வேப்பிலை கோஷ்டி" உங்கள் அனுமதியில்லாமலேயே உண்டாகிவிடும். அவர்கள் உங்களையறியாமல் மனதில் புகுந்து, உங்கள் எண்ணப்போக்கை தன் ஆளுமைக்குள் கொண்டுவந்து விடுவார்கள். பிறகென்ன, உங்கள் மனம் இன்னொருவர் கைகளில் களிமண் உருண்டைபோல் இருக்கும் (putty). அவர்கள் உங்களை அவர்கள் தேவைக்கேற்ற உருவமாக மாற்றிவிடுவார்கள். உங்கள் தீர்மானங்கள், மதிப்பீடுகள், நம்பிக்கைகள், செயல் திட்டங்கள் இவை எல்லாமே பிறருடைய ஆளுமைக்குள் அடிமையாகிப் போகும் அபாயம் உள்ளது. ஆனால் அதுபற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியாது. ஏதோ நீங்கள் உங்களுடைய சிறப்பியல்களினால் வெற்றி கொண்டிருப்பதாக நம்ப வைக்கப் படுவீர்கள்.

ஆங்கிலத்தில் Murphy's Law என்ற நகைச்சுவை கலந்து இந்த உலக உணமைகளை அப்பட்டமாக உரைக்கும் வாக்கியங்கள் உண்டு. அவற்றில் இரெண்டை மட்டும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்:

If you believe that everything is going on well, it means you do not know what the hell is going on.

Be careful when things are going on well, because that is the time when things start going wrong.

மேற்கண்ட இரு மூதுரைகளும் நிர்வாகம், மேலாண்மை பற்றிய வாசகங்கள். அவற்றை இந்த context-ல் ஏன் கொணர்ந்தேன் என்றால், அங்கு குறிப்பிட்டிருக்கும் நிலைகளை உங்கள் சுற்றுப்புரம் அடைவதற்குக் காரணமே நீங்கள் உங்கள்தம் ஆளுமைக்குள் முழுமையாக இல்லை என்பதுதான்.

பல பெரிய மனிதர்கள், பேரசர்கள் வீழ்ந்ததற்குக் காரணமே அவர்கள் தங்களைத் தன் கட்டுப்பாட்டிற்குல் வைத்திராமல், அவர்களறியாமல் ஒரு "chamcha", "லோட்டா" சுயநலக் கும்பலின் கைப்பாவையாக ஆனதினால்தான் என்பதற்கு சரித்திரத்தில் பல எடுத்துக் காட்டுக்கள் கானக்கிடைக்கின்றன. மீண்டும் சொல்கிறேன், நீங்கள் வாழ்வில் சாதனைகள் புரியத் தொடங்கி வெற்றிகளை ஈட்டத் தொடங்கும்போது உங்களைச் சுற்றி வந்து சேர்பவர்கள்பால் மிகக் கவனத்துடன் இருக்க வேண்டும். உங்கள் மெயின் சுவிச்சை இன்னொருவர் கையில் உங்களையறியாமல் "தாராந்துடக்"கூடாது! பலர் உங்களை subtle-ஆக புகழ்ந்து அப்படியே pulp போல் ஆக்கிவிடுவார்கள். The Emperor's New Clothes என்கிற கதையை நீங்கள் வாசித்திருப்பீர்கள்.

உங்களுக்கு இயல்பாக அமைந்த குறிப்பறிதல் போன்ற துடிப்பான வலிமைகள் இருக்கும்போது இன்னொருவர் எவ்வாறு உங்களைத் தன் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்கிற கேள்வி எழுவது நியாயம். ஆனால் அதுபோல் நீங்கள் ஆளப்படுகிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்தால்தானே! நீங்களே சுயமாகச் சிந்தித்து செயல்படுவது போன்ற தோற்றத்தை (facade) உங்கள் மனத்தில் தோற்றுவித்து உங்களை பொம்மலாட்டம் ஆட்டிவிடுவார்கள் சண்டாளர்கள்! வெளிப்படையான எதிரிகளிடமிருந்து உங்கலைக் காப்பாற்றிக் கொள்வது மிகச்சுலபம். ஆனால் உங்களைச் சுற்றியிருக்கும் கோஷ்டிகளிடமிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய ஆயுதங்கள் ஏதும் உங்களிடம் கிடையாது. அதனால் எப்போதும் விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டும். வெற்றி என்ற ஏணியில் ஏறும் ஒவ்வொரு படியிலும் உங்களுடன் தொற்றிக் கொண்டிருப்பவர் யார்யார் என்பதில் மிகக் கவனத்துடன் இருக்க வேண்டும்.

கூட இருந்தே கவிழ்த்து விட்டான்" என்று பலர் புலம்புவதைக் கேட்டிருப்பீர்கள். கூட இருப்பவர்கள்தானே கவிழ்க்க முடியும், எட்ட இருப்பவர்களாலா முடியும்! Betrayal என்பதை அவர்கள்தான் செய்வார்கள். கிரேக்கர்கள் ட்ராய் நாட்டை ஒரு மரத்தினாலான குதிரைக்குள் படைவீரர்களை மறைத்துச் சென்று வீழ்த்தினார்கள் என்பதை அனைவரும் படித்திருப்பீர்கள். இதனால்தான் வஞ்சகமாகச் செயல்படுவதை Trojan Horse என்ற பெயர் கொண்டு அழைக்கிறார்கள். நம் கணினியுள்கூட பல ட்ரோஜன்கள் நம்மையறியாமல் உட்புகுந்து அதனைத் தம் கைக்குள் கொணர்ந்து அதன் இஷ்டத்திற்கேற்ப பல தவறான செயல்களுக்கு உட்படுத்துகின்றன. சாதாரண வைரஸ் எதிர்ப்புச் செயலிகள் (Anti-virus programs) இவற்றை அடையாளம் கண்டுகொள்ள இயலாத வகையில் அவைகள் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்து செயல்படுவதைக் காண்கிறோம்.

இதையேதான் வள்ளுவர் "உட்பகை" என்னும் அதிகாரத்தில் தெளிவாக விளக்கியுள்ளார்.

 வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
 கேள்போல் பகைவர் தொடர்பு.

"கேள்போல் பகைவர்"களின் "தொடர்பு" அஞ்சப்பட வேண்டுமென்கிறார். இதில் "தொடர்பு" என்னும் சொல் மிக முக்கியமானது. ஏனெனில் உறுவிய வாள் போன்ற வெளிப்பகை உங்களுடன் "தொடர்பு" கொண்டிருக்காது. அதனால் அதன் செயல்பாடுகள் வெளிப்படையாகத் தெரியும். ஆனால் உட்பகையோ உங்களுடன் தொடர்பு கொண்டது. உங்கள் அருகாமையில், உங்களிடம் ஊடுருவக்கூடிய தன்மையுடன் ஒழுகுவது. அத்தகைய access கொண்ட நபர்களிடம், அவர்களை நீங்கள் இனம் கண்டு கொள்ளும்வரை எதிர்ப்பு சக்தியே உங்களிடம் இருக்க வாய்ப்பு இல்லை! You are defenceless against those that are too close to you. பிரித்தாளும் தந்திரத்தை செயல்படுத்த முயல்வோரும், தவறு செய்பவர்களைப் பிடிக்கத் திட்டமிடும் புலனாய்வுத்துறையினரும், மனமுறிவு கொண்டு ஆனால் பிரிந்துபோகாமல் ஒட்டிக் கொண்டிருக்கும் முன்னாள் நண்பர்களைக் கொண்டுதான் திட்டம் தீட்டுவார்கள் என்று படித்திருக்கிறோம். இதனை வள்ளுவர்,

 ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
 பொன்றாமை ஒன்றல் அரிது.

என்கிறார்.

என் நண்பரொருவர் வாழ்க்கையில் அடுத்தவரை முழுமையாக நம்பியே கெட்டார். எப்போது கண்டாலும், "அவன் கழுத்தறுத்தாண்டா" என்று புலம்புவார். எப்படிய்யா அறுத்தான் என்று கேட்டால், "குயவர் மண்பானை செய்து முடித்தபின், எப்போ, எதைவைத்து கட் பண்ணினார் என்பது தெரியாது; ஆனால், அவர் அதை எடுக்கும்போது, "சக்"கென்று வெளியே வரும். அதுபோல், அசந்திருந்த நேரத்தில, நூல் போட்டு அறுத்துட்டான்யா" என்பார். இந்த உவமையை வள்ளுவர் கையாண்டிருக்கிறார் பாருங்கள்:

 உட்பகை அஞ்சித் தற்காக்க உலைவிடத்து
 மட்பகையின் மாணத் தெறும்.

Asterix comics-ல் ஒரு ரோமானிய ஒற்றன் தன்னைச் சுற்றியிருப்பவர்களைடையே பகையை மூட்டிவிட்டு தப்பித்துவிடுவான். அவனை சீஸர், சர்க்கஸில் இட்டு சிங்களை விட்டு அழைக்க முயற்சி செய்வார். ஆனால் அந்த ஒற்றனோ சிங்கங்களையே ஒன்றோடு ஒன்றை மோதவிட்டு, தான் ஒடிப்போய்விடுவான்!

திருவள்ளுவர் "நட்பு" என்று ஒரு அதிகாரமும், ஆனால் "தீ நட்பு", "கூடா நட்பு" என்று இரு அதிகாரங்களையும் எழுதியுள்ளார்.

 சீரிடம் காணின் எரிதற்குப் பட்டடை
 நேரா நிரந்தவர் நட்பு

வஞ்சிக்கத் தக்கதொரு வாய்ப்பினை எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் பகைவர் உங்கள் நண்பராக நடித்துக் கொண்டிருப்பர். அவர்தம் செயல்பாடு சம்மட்டி அடி விழும்வரை தான் தாங்கிக் கொண்டிருப்பதுபோல் தோற்றம் தரும் பட்டறைக் கல் போன்றது என்கிறார். ஆனால் அடியோ உங்கள் மேல்தான் விழும். நீங்கள் கடைசியில் அடிபட்டு விழும்போது அத்தகைய "நண்பர்கள்" காணக் கிடைக்க மாட்டார்கள். உங்கள் வீழ்ச்சியைக் கண்டு கைகொட்டிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள்.

 சொல் வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
 தீங்கு குறித்தமையான்.

 தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
 அழுத கண்ணீரும் அனைத்து.

"ஐயா, நீங்கள்தான் என் கண்கண்ட தெய்வம். உங்களால்தான் ஒரு வயிற்றுக் கஞ்சி குடிக்கறேன்" என்று காலில் விழுந்து வணங்கி நம் மனதை நெகிழ்ச்சியுறச் செய்துவிடுவார்கள். ஆனால் அந்தக் கும்பிடும் கைகளினுள் கூரிய கொடுவாள் மறைந்திருக்கும். கண்ணீருக்குள் கயமை கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும். வில்லில் பூட்டி நாணேற்றி, உங்கள்மேல் எய்யக் காத்திருக்கும் கூரிய அம்பு போன்றவை அந்த கூழைக் கும்பிடுகள் என்கிறார் வள்ளுவர்.

தற்புகழ்ச்சி தவறு என்பது தெரியாதவரில்லை. பிறர் முகத்துதியிலும், பொய்ப் புகழ்ச்சியிலும் ஈடுபடுகிறார்கள், அதனை நம்புதல் தவறு என்று என்னதான் நம் அறிவு நமக்கு இடித்துரைத்தாலும், இந்தப் பாழும் மனம் அவற்றை விரும்புகிறதே ஐயா, என்ன செய்வது! இதனைப் பற்றிய விளக்கத்தை Sigmund Freud தான் அளிக்க வேண்டும்! மீண்டும் சொல்கிறேன்: Human beings are creatures of emotion, not of logic!

"மன்ற அடுத்திருந்து மாணாத செய்"வோரை அண்ட விடாமல் உங்கள் அகத்தினைக் காப்பீர்!

இங்கிதம் உடையர் எங்கிலும் உயர்வர்

இங்கிதம் உடையர் எங்கிலும் உயர்வர்

பொது இடங்களில் நாம் எப்படி நம்மை அடையாளம் காட்டுகிறோம் என்பதும், ஒரு அலுவலகத்திலோ, நிறுவனத்திலோ, வேறொரு பொது அமைப்பிலோ, குழுவிலோ நாம் எப்படி இங்கிதத்தைக் கடைப்பிடிக்கிறோம் என்பதை வைத்துத்தான் நம் personality பிறரால் அறியப்படுகிறது. இது போன்ற பயிற்சி உங்களுக்கு ஏற்பட வேண்டுமென்றால் நீங்கள் ஏதாவது ஒரு பொது அமைப்பிலோ, துறையிலோ, தொண்டு நிறுவனங்களிலோ பங்களிக்க வேண்டும்.அப்போதுதான் பலவகை மனிதர்களிடம் எப்படிப் பழகி வேலைகளை நடத்திச் செல்லவேண்டும் என்பது புரியும். கிணத்துத் தவளையாக இருந்து கொண்டு, நம்மையே நம்பியிருக்கும் மனைவியையும் குழந்தைகளையும் (மட்டும்) விரட்டிக்கொண்டு, அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் "சலாம்" போட்டு "குலாம்" ஆகிக் கொண்டோ, அல்லது அசட்டுத் துணிச்சலுடன் ஏதாவது ஏடாகூடமாக செய்து விட்டு "என்ன நடக்குமோ" என்ற பயத்தில் வீட்டில் இருப்பவர்களிடம் "சள்புள்" என்று விழுந்து கொண்டோ கிடக்காமல், ஒரு 3600 அணுகுமுறையைக் கைக்கொள்ள வேண்டும்.

"இங்கிதம்" என்ற சொல்லுக்குத் தகுந்த பொருளாக திரு. ஹரிகிருஷ்ணன் அவர்கள், "பாஞ்சாலி சபதம்" காவியத்திற்கு அவர் எழுதியுள்ள உரையில் குறிப்பிடுவது என்ன என்று பார்ப்போம்:-

 1) குறிப்பு (Hint, sign, indication of feeling by gesture)
 2) கருத்து (purpose, object)
 3) இனிமை,
 4) சமயோசிதம் உடைமை (good manners).

இந்த "சமயோசிதம் உடைமை" என்பதை "இன்னதுதான்" என்று வரையறுத்துச் சொல்ல முடியாது. அது அதன் அடிப்படையின்படி "சமயத்"திற்கு ஏற்றாற்போல் மாறுபடும். ஒரு குறிப்பிட்ட நிகழ்வின்போது, அதன் கால, தேச, வர்த்தமானத்தில் (set of circumstances) சரியாக இருக்கும் ஒரு செயல்பாடு, இன்னொரு கால கட்டத்தில் தவறாக அமையும். ஆனால் எக்காலத்திற்கும் பொதுவான சில கோட்பாடுகள் இருக்கின்றன - செயல்முறைகள், ஏற்க வேண்டியவை, தவிற்க வேண்டியவை என்று சில உள்ளன. அவை சின்னஞ்சிறு விஷயங்களாக இருக்கலாம், ஆனால், அவை மனித மனத்தின் ஓட்டங்களைத் திசை திருப்பும் வல்லமை படைத்தவை என்பதால், அவற்றைக் கடைப்பிடித்தல் மிக அவசியமாகிறது. அவற்றில் சிலவற்றை இந்த வாரக் கட்டுரையில் அணுகுவோம்.

முதலில் ஒரு silly விஷயத்தைக் கவனிப்போம். ஷூவை நன்றாக பாலிஷ் செய்து போட்டுக் கொள்வது மட்டும் முக்கியமல்ல. அதன் உள்ளுறைகளையும் (socks) நன்கு துவைத்துச் சுத்தமாக அணிதல் வேண்டும். நம்மில் பலருக்கு "சாக்ஸை" சுத்தம் செய்தல் என்பது மட்டும் கைவராது. ஷூவைக் கழற்றும்போது சாக்ஸை அப்படியே உருவிச் சுருட்டி ஷூவுக்குள் திணித்து விட்டுச் செல்வோமேயன்றி, கையோடு அவற்றை துவைக்கப் போடமாட்டோம். அசுத்தமான உள்ளுறைகளால் நம்மைச் சுற்றி ஒரு துர்நாற்றம் வீசிக் கொண்டேயிருக்கும். உங்கள் "கப்பு" உங்களுக்கு முன்னால் கட்டியம் கூறிக்கொண்டே செல்லும். மேலும் உள்ளுறைகளில் "தொண்டி" இல்லாமலிருந்தால் நலம். ஏனென்றால், நாலு பேருக்கு முன்னால் ஷூவைக் கழட்ட வேண்டிய நிலை வரும்போது மானம் போகாமலிருக்கும்!

உங்களுக்கு "அணில் மார்க்" சுருட்டு மேலும் ("சுருட்டுவதிலும்" என்றா சொன்னேன், இல்லையே!), "தனா பீனா சொக்கலால் ராம்சேட் பீடி" மேலும் காதல் இருக்கலாம். அதற்காக அவற்றை ஒரு "தம்" வலித்து விட்டு, நேர்காணலுக்கோ, மேலதிகாரிகளை மற்றும் வேறு முக்கிய நபர்களைச் சந்திக்கவோ செல்லாதீர்கள். அதிலும் பெண்மணிகள் பெரும்பாலும் இந்த விஷயத்தில் நிறையவே sensitive-ஆக இருப்பார்கள் என்பதை எப்போதும் மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.

பெண்கள் பெரும்பாலும் தங்களுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்று பட்டியலிட்டுக் கொண்டே இருப்பார்கள். எனவே பெண்களிடம் வேலை ஆகவேண்டியிருந்தால், அவர்களுக்கு (உங்களுக்கு இல்லை!) என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பதையெல்லாம் திருப்பி சொல்லிக் கொண்டேயிருங்கள்! சலிக்காமல் கேட்டுக் கொண்டேயிருப்பார்கள்!

லேசாகப் "பூசின மாதிரி" இருக்கும் ("பூசணி மாதிரி" என்றா சொன்னேன்? ஏதாவது வம்பில மாட்டி விடறதிலேயே குறியா இருக்கீங்களே!) பெண்மணிகளிடம் "லேசாக இளைச்ச மாதிரி இருக்கே", என்று சொல்லுங்கள். புது டிரெஸ் என்று சொன்னால், "it is a bit slimming" என்று கூசாமல் (சிரிக்காமல்) சொல்லுங்கள். பெரும்பாலும் பெண்கள் தன் உடல் பருமன் விஷயத்தில் ஏதாவது குறைப்பட்ட வண்ணம் இருப்பார்கள். இது போல் யாராவது சொல்ல மாட்டர்களா என்று அவர்கள் மனத்தில் எதிர்பார்ப்புக்கள் இருக்கும்.

பெரிய மனிதர்கள் பலர் தன் குரலைத் தானே கேட்டுக் கொண்டு சந்தோஷப்படும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பர் (People who love to hear the sound of their own voice). "I this, I that" என்று அளந்து கொண்டிருப்பார்கள். அதுவும் நீங்கள் அவருக்கு அடங்கியவராகவோ, அல்லது ஏதாவது உதவி கேட்டு வந்தவராகவோ இருந்தால், நீங்கள் ஒரு captive audience ஆகிவிடுவீர்கள். உங்களுக்குக் கொட்டாவியாக வந்துகொண்டிருக்கும். ஆனால் அதை வெளிக்காண்பிக்கக் கூடாது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்ள வேண்டும். லேசாக தலையைத் திருப்பி அல்லது அதை செருமலுடன் கலந்து - இது மாதிரி ஏதாவதொரு வழியில் நம் சலிப்பை மறைக்க வேண்டும். என்ன செய்வது அய்யா, இந்தப் பாழும் உலகத்தில் பிறரிடம் பலவித வேலைகள் ஆக வேண்டியிருக்கிறதே!

இதுபோல் எந்தவித உடல் உபாதையையும் பொது இடங்களில் வெளிக்காண்பித்து அவமானப்படாமல் (to avoid such embarrassing situations), மறைத்து விட்டால் நல்லது. Fart file என்ற கோப்பில் சொல்லியிருப்பது போல "அபான வாயு" தன்னையறியாமல் escape ஆக முற்பட்டால், லேசாக இருமி அதை மறைக்க வேண்டும். இதெல்லாம் விவரமாகவா சொல்லிக் கொடுக்க முடியும்? சமயம் பார்த்து புத்திசாலித்தனமாகச் செய்ய வேண்டியதுதான்!

ஒருவரிடம் ஏதாவது உதவி கேட்பதற்காகச் செல்லும் போது, அவரைத் தனியாக இருக்கும்போது சந்தியுங்கள். யாரும் உடனிருக்கும்போது போகாதீர்கள். அவர்கள் ஏடாகூடமாக ஏதாவது குறுக்கு சால் ஓட்டி காரியத்தைக் கெடுத்து விடுவார்கள். "சார், டிரான்ஸ்ஃபர் ஆர்டரை கேன்சல் செய்யுங்க சார். பிள்ளைங்க படிப்பு கெட்டுப் போயிடும் சார்" என்று நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் போது, உங்கள் மேலதிகாரி அப்போ தான் "என்னடா இது, இவனை ரொம்ப கஷ்டப் படுத்தி விட்டோமோ" என்று கொஞ்சம் கழிவிரக்கம் கொள்ள ஆரம்பித்திருப்பார். அப்போது, அங்கே கூட இருக்கும் நபர் "ஏன், நீங்கள் போகும் இடத்தில்கூட நல்ல ஸ்கூலெல்லாம் இருக்கே" என்பார். போச்சுடா! என்ன ஆகும்? நல்ல வாய்ப்பு கைநழுவிப் போய்விடும். அந்த அதிகாரிக்கு இதுபோல் ஒரு escape route கிடைத்தால், விடுவாரா! அந்த "கூட இருந்த பிரகிருதி" உங்களுக்கு எதிரியோ, அல்லது அவர் பிறருக்குக் கெடுதல் செய்ய வேண்டும் என்கிற கெட்ட எண்ணம் கொண்டவரோ இல்லை. சில பேரால் வாய் என்னும் ஓட்டையை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. அவ்வளவதுதான். அதனால்தான் சொல்கிறேன். உதவி கேட்கும் போது தனியாகப் பிடியுங்கள் என்று. சில சமயம் இன்னொருவருடன் (as a strategy) பேசி வைத்துக் கொண்டு "நான் அங்கே இருக்கும்போது நீ அங்கே வா, நான் சிபாரிசு செய்து அவர் மனதை மாற்றுகிறேன்" என்ற set up - உடன் செயல் படுவது என்பது வேறு விஷயம்!

குறிப்பறிந்து பேசுங்கள். ஆனால் குறுக்கே பேசாதீர்கள். பெரிய மனிதர்களுக்கு, தான் பெசிக்கொண்டிருக்கும்போது குறுக்கே புகுந்து ("மதுரைப் பக்கம் "ஊடாயில" என்பார்கள்) "கட்" பண்ணி பேச முற்பட்டல் ரொம்பக் கோபம் வந்துவிடும். அவர்கள் ஈகோவை நீங்கள் மிதித்து விட்டது போல் துள்ளுவார்கள். அவர்கள் பேசிக்கொண்டே யிருக்கும்போது ஏதாவது கொஞ்சம் gap கொடுத்தால் இதுதான் சாக்கு என்று நீங்கள் பேச ஆரம்பித்து விடாதீர்கள். அந்த இடைவெளியில் ஏதாவது தன் மேதாவிலாசத்தைக் காண்பிக்க என்ன சொல்லலாம் என்று மூளையைக் கசக்கிக் கொண்டிருப்பார். இது தெரியாமல் நீங்கள் குறுக்கே புகுந்தால் அவர் எண்ணச் சங்கிலி தடைப்பட்டு கோபத்தை உண்டாக்கும். இது ஒரு subtle ஆன விஷயம்; ஆனால் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டியது ஆகும்.

முக்கிய நபரை சந்திக்கச் செல்லும்போது வெறுங்கையுடன் செல்லாதீர்கள். "அவர்களிடம் இல்லாததா, நான் என்ன கொண்டு போக முடியும்" என்று எண்ணாதீர்கள். யாராவது வந்தால் அவர்கள் கையில் என்ன இருக்கிறது என்று பார்ப்பது மனித இயற்கை. "இதெல்லாம் என்ன கெட்ட பழக்கம். எனக்குப் பிடிக்காது" என்றுதான் சொல்வார்கள். சிலர், "வேண்டவே வேண்டாம்" என்று மறுத்து விடுவார்கள். பரவாயில்லை. நீங்கள் கொண்டு போனதாக இருக்கட்டும். அவர் ஏற்காததாகவே இருக்கட்டூம். அதற்காக நீங்கள் கொண்டு போகாமல் இருக்காதீர்கள். இது என்ன நாடகம் என்று கேட்கிறீர்களா? இதுதானய்யா மனித இயற்கை! ஒருவர் வீட்டுக்குச் செல்வதற்கு முன்னால் அவருடன் யார் யார் வசிக்கிறார்கள் என்று விசாரித்து அதற்கேற்றாற்போன்ற பொருளுடன் செல்ல வேண்டும். வேலை, பணம், எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் - இதுபோன்ற முக்கிய சந்திப்புக்களின் போது, நல்ல பழங்களாகக் கொண்டு செல்லுங்கள். ஏதாவது சாலையோரத் தள்ளு வண்டியில் கிடைக்கும் அழுகல், அவிசல், வெம்பல் இதெல்லாம் வாங்கிச் செல்லாதீர்கள். வாங்கிய பொருட்களின் விலைச் சீட்டை கவனமாகப் பிய்த்து விடுங்கள். ஆனால் சில நேரங்களில் நிறைய விலை கொடுத்து வாங்கிய பொருள் என்று தெரிவிப்பது அவசியமாக இருக்கலாம். ஏனென்றால் அதேபோல் தோற்றமளிக்கும் மலிவு "மாலு"ம் கிடைக்கலாம் அல்லவா! இங்குதான் உங்கள் "சமையோசிதம்" வேலை செய்யவேண்டும்!

ரொம்பப் பெரிய மனிதர்கள் வீட்டிலெல்லாம் பெரும்பாலும் காப்பி, டீ முதலியவை அவ்வளவு நன்றாக இருக்காது. ஏனெனில் அங்கு யாராவது வேலைக்காரர்கள்தான் அவற்றைத் தயார் செய்வார்கள். "இதுகளுக்கெல்லாம் காப்பி போட்டுக் கொடுக்க வேண்டியிருக்கிறதே" என்ற சலிப்புடன் போட்ட காப்பி, பின் எப்படி இருக்கும்! ஆனால் அந்தப் பெரிய மனிதரோ, "எங்க வீட்டுக் காப்பி மாதிரி எங்கேயும் கிடைக்காது. நேத்தைக்குக் கூட ஹைகோர்ட் ஜட்ஜு வந்து, 'உங்க காப்பி குடிக்கணும்னுதான் டில்லியிலேர்ந்து வந்தேன்' என்று ரெண்டு கப் கேட்டு வாங்கி சாப்பிட்டு விட்டுப் போனார்" என்று பட்டம் விடுவார். நீங்கள் அப்போதுதான் அந்த விளெக்கெண்ணையை முழுங்கிக் கொண்டிருப்பீர்கள். கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் அதை முழுவதும் விழுங்கி விட்டு, அந்த ஜட்ஜை விட ஒரு படி மேலே போய் பொய்மூட்டையை அவிழ்த்து விட்டு, "நானும் இன்னொரு கப் கேட்டிருப்பேன். ஆனால் இந்தப் பாழும் ஆயுர்வேத மருந்து சாப்பிடறேனா, காப்பி சாப்பிட்டாலே ஒத்துக்க மாட்டெனென்கிறது. எங்கேயும் ஒரு சொட்டு கூட செல்லாது, உங்கள் வீட்டுக் காப்பியாயிற்றே என்று ஒரு கப் சாப்பிட்டென்" இந்த மாதிரி முக மலர்ச்சியுடன் convincing - ஆக உங்களால் சொல்ல முடிந்தால், நீங்கள் ஒரு Managing Director material!

சரி இதோடு விட்டுவிடுமா, இதற்கு மேலும் டார்ச்சர் காத்துக் கொண்டிருக்கும். அவர்கள் வீட்டு "மேம் சாஹிப்" பெயிண்ட் பண்ணியிருப்பார்கள். அதையெல்லாம் நீங்கள் பார்வையிட்டு, கண்களை அகல விரித்து, வாயைப் பிளந்து, "ரவி வர்மா, ஹுசைன்" என்று உங்களுக்குத் தெரிந்த பெரிய ஓவியர்களின் கலைவண்ணங்களை "விஞ்சும் வகையில் இருக்கிறது" என்று சொல்ல வேண்டும். இந்த மாதிரிப் புகழ்ச்சியில் ஈடுபடுவதிலும் ஒரு கலை நுணுக்கத்துடன் செய்ய வேண்டும். நேரடியாக உப்புத்தாள் கொண்டு தேய்க்கக் கூடாது. இதிலும் ஒரு நிபுணத்துவம் வேண்டும். subtle and suggestive ஆகச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கிண்டல் செய்கிறீர்கள் என்று எண்ணிவிடுவார்கள். "இன்னும் கொஞ்சம் நேரம் செலவழித்து இதில் இன்னும் ஈடுபட்டால் பெரிய ஓவியர்களை மிஞ்சி விடுவீர்கள்" ("ஜல்ல்ல்ல்ல்'!) என்றொரு பல்லவியைப் போடவேண்டும். உடனே அந்த அம்மாள், "எனக்கு எங்கே நேரமிருக்கிறது இதெற்கெல்லாம்" என்று ஆரம்பிப்பார். அவ்வளவுதானே, அதற்கேற்றாற்போல் சரணம் பாடிவிடவேண்டியதுதான்!

இன்னும் சிலரது வீட்டில் குட்டிப் பிசாசுகள் பாட்டுப் பாடிப் படுத்தும். "என் பெண் கர்நாடக சங்கீதம் கத்துக்கிறாள். சுதா கூட முந்தா நாள் கேட்டுவிட்டு 'உங்கள் பெண்ணுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு' என்று ஆசீர்வாதம் செய்து விட்டுப் போனார்" என்று சொல்லி அந்தப் பெண்ணை அழைத்து, "அம்மா சின்னக் குட்டி, இவருக்கு ரெண்டு உருப்படி பாடிக் காண்பி" என்பார். உடனே அந்த சின்னக் குட்டி (என்னக் குட்டி?) "எனக்கு தொண்டை என்னமோ செய்யறது. இப்போ போய் பாடச் சொல்றீங்களே, இன்னொரு நாள் பார்க்கலாம்" என்பார். இதே கதையை இதுவரை 100 தடவையாவது கேட்டிருக்கிறேன். இந்த பதிலுக்கு என்ன பொருள் தெரியுமா? இது ஒரு cue தான். உடனே நீங்கள், "பரவாயில்லை அம்மா. ஒரு வர்ணமாவது பாடுங்கள். நீங்கள் நன்றாகப் பாடுகிறீர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்" என்று பிடிவாதம் பிடிக்க வேண்டும். ரொம்ப கிராக்கி பண்ணி, ஒரு மாதிரியாக "ஸா பா ஸா"வுடன் ஆரம்பிப்பார்கள். அவ்வளவுதான். நீங்கள் பாவம்! உங்களுக்கு Cacophonix, the bard நினைவுக்கு வருவார்! இந்த டெஸ்டில் பாஸ் செய்து விட்டீர்களானால் இந்த உலகில் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.

"சும்மா ஷூவோடவே உள்ளே வாங்க, பரவாயில்லை" என்று சொன்னாலும், ஷூவைக் கழட்டி விட்டு இன்னொருவர் வீட்டுக்குள் செல்லுங்கள். உங்களைப் பற்றிய மதிப்புக் கூடும். நமக்கும் சில value systems இருக்கின்றன என்பதைக் காண்பிப்பதும் ரொம்ப முக்கியம். நம்மிடம் பழக்கம் வைத்துக் கொள்வதை அவர்கள் தமக்கு ஒவ்வாத ஒன்றாக நினைக்கக் கூடாது.

எந்த நேரத்திலும் தம் நிலை மறக்காத மனப்பாங்கு வேண்டும். We must know our bearings. நெருங்கிப் பேசுகிறார்களே என்று பெரிய மனிதர்களிடம் ரொம்பவும் ஈஷிக்கொள்ளக் கூடாது. "இதென்னடா இது, 'தோ தோ' என்றால் மூஞ்சியை நக்குகிறதே" என்று அவர்கள் ஒரு நேரமில்லாவிடாலும் ஒரு நேரம் வெறுப்படையக் கூடும்.

இதெல்லாம் ஒரு deception அல்லவா - இது போல் ஏமாற்று வேலையெல்லாம் எதற்கு என்கிறீர்களா? இதெல்லாம் ஒருவகை மேனேஜ்மெண்ட் டெக்னிக் தான் நண்பர்களே. நம் சுற்றுப்புறத்தை மேனேஜ் பண்ணுவது நம் வேலை தானே. மற்றவர்கள் குண விசேஷத்திற்குத் தகுந்தாற்போல், சிறிய மாறுதல்கள் செய்துகொண்டு raw-வாக இல்லாமல், ஒரு ருசியாக சமைத்த உணவாக நம் personality - ஐ பிறருக்கு அளிக்கிறோம். அவ்வளவுதான்!

தலைமை ஒரு திறமை

தலைமை ஒரு திறமை

ஒவ்வொரு மனிதனும் எந்த நிலையிலும் தன் தனித்தன்மையை நிலைநாட்டவே முனைப்பாக இருக்கிறான். தனக்கென்று ஒரு பெயர், ஒரு identity, ஒரு அங்கீகரிப்பு இருக்கவேண்டும் என்ற விழைவு அவனுடைய வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பல்லாயிரம் மனிதத் தலைகளில் என்னுடையதும் ஒன்று என்றில்லாமல், “அதோ, அங்கே புள்ளிபோல் தெரிகிறது பார். அதுதான் நான்" என்று அடையாளம் காட்ட ஏங்குகிறது நம் மனம். டிவி கேமரா நம் பக்கம் திரும்பும் போதெல்லாம் யாராவது பார்க்க மாட்டார்களா என்று கையை ஆட்டுகிறோமே அதுவும் இத்தகைய உந்துதலால் தான். ஏதாவது ஒரு வகையில் தன் சிறப்பை, தன் individuality-ஐ பிறர் அறிய வெளிக்காண்பிக்க வேண்டும் என்ற முனைப்பு உயிருள்ளவரை தொடரும். அந்த ஈகோ வெளிப்பாடு நின்றுவிட்டது என்றால் அவன்மனம் தற்கொலைக்குத் தூண்டும் நிலை ஏற்பட்டுவிடும்.

இதுபோல் நம்மை தனியாக வட்டம் போட்டுக் காண்பிக்க வேண்டும்; நம் மேல் ஒளிக்கற்றைகள் தொடர்ந்து பாய்ந்த வண்ணம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமே, அது நிகழ்வது எப்படி? எதைச் செய்தால் அது சாத்தியமாகும்? அதற்கு முதல்படியாக நீங்கள் ஏதாவதொரு  துறையில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். சரி. அது போதுமா? இல்லை. நீங்கள் வெற்றிபெற்றவர் என்பதை உங்களைச் சுற்றியுள்ள உலகம் அறிந்திருக்க வேண்டும். அதுதான் மிக முக்கியம்.

இத்தகைய சிறப்பான தனிநிலை அடைவதற்கு முதல் இன்றியமையாத தேவை சுய மதிப்பு (self-esteem) தான். இதைப்பற்றி கீதையிலிருந்து மேற்கோள்காட்டி முன்னமையே எழுதியிருக்கிறேன். தன்னம்பிக்கை, தன் மேன்மையைப் பற்றிய அவதானிப்பு எல்லாம் தெளிவாக இருந்தால்தான் அதனை அடிப்படையாகக் கொண்டு பிறர்மேல் நாம் ஆளுமை செலுத்தமுடியும். நாம் நம்மைப் பற்றி எவ்வலவு தூரம் ஆழமாக அறிந்திருக்கிறோமோ அந்த அளவுக்குத்தான் வெளி உலகத்தையும் கட்டி ஆளமுடியும். இந்த உண்மையை இப்போது பலர் உணரத் தொடங்கியிருகிறார்கள். Enneagram போன்ற முறைகள் மூலம் பலர், "தான் எத்தகையவர்" என்று தோண்டி ஆறாய ஆரம்பித்துள்ளார்கள்.

“Basic self-knowledge” என்ற நூலில் Harry Benjamin என்பவர் கூறுவதைப் பாருங்கள்: 

“What we think we have discovered about ourselves is very superficial at first, so that real self-knowledge only comes after years of patient effort. But such effort is immensely worthwhile in every particular, because it not only transforms us, it transforms our whole life for us; because as our level of being changes, so does our life change, too. We become different people inside, and this is reflected by the way life treats us outside.”

“Self-change is the basic pre-requisite for external change. And self-change can only come about as a result of self-knowledge and work on oneself."

நாம் நம்மை மாற்றிக் கொள்வதன் மூலம் வெளி உலகம் நம்மை அணுகும் முறையை மாற்றி நாம் சாதனை புரியலாம். இத்தகைய செயல்பாடுகளை முழுதும் அறிந்த பலர் தம் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நேரு, எம்ஜியார் போன்றவர்கள் மக்கள் மனதைத் தங்கள்பால் திருப்பவும், என்றைக்கும் தன் பர்ஸனாலிடிக்கு சிறிதும் பங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும் இதுபோன்ற technique களைத்தான் முழுமையாகக் கையாண்டிருக்கிறார்கள்.

மக்களால் கொண்டாடப்படும் பெரிய மனிதர்கள் பலர் எல்லோரும் சுலபமாக அணுக முடியாதபடி, எட்டாத தூரத்தில் தங்களை வைத்துக் கொண்டிருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். இது தன்னிச்சையாக நிகழ்வதல்ல. அது போல் ஒரு "தொலைவு" வைத்துக் கொள்வது மிக முக்கியம். Familiarity breeds contempt – இந்தப் பழமொழியை மறக்கக் கூடாது. தூரத்துப் பச்சையாகவே இருக்க வேண்டும். “Playing hard to get” என்பது ஒரு டெக்னிக். அதாவது "நான் உங்களை விடச் சிறந்தவன். என்னை நெருங்குவது எல்லோருக்கும் சுலபத்தில் கிட்டாது"

என்ற செய்தி அடுத்தவருக்கு உணர்த்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் பிறர் மனத்தில் ஒரு சலிப்புத் தோன்றிவிடும். “ஒகோ..., அவரா" என்பார்கள்! எல்லோரையும் உங்கள் வீட்டு அடுக்களைக்கோ, படுக்கையறைக்கோ அனுமதிக்க முடியுமா? சிலரை வாசலிலேயெ பேசி அனுப்பிவிட வேண்டும். சிலரை வரவேற்பறையில் (drawing room, foyer) அமர வைத்து தாகத்திற்கு தண்ணீர் கொடுத்து, சில வார்த்தைகள் சம்பிதாயமாகப் பேசி அனுப்புகிறோம். வெகு சிலரையே நம் வீட்டுக் கூடத்துக்குள் (living room) அழைக்கிறோம். அதுபோல் தரம் பார்த்து, தகுதி பார்த்து, ஒரு குறிப்பிட்ட தூரத்திலேயெ ஒவ்வொருவரையும் நிறுத்த வேண்டும். உங்களைச் சுற்றியுள்ளவர் மனங்களில், “யார் இங்கு ஆளுமை செலுத்துபவர்" (who is in-charge) என்பது ஐயத்துக்கு இடமின்றி உணரப்பட வேண்டும். நீங்களாக முடிவு செய்து குறிப்பிட்ட நபரை அணைக்கவோ, வெட்டவோ செய்ய வேண்டுமேயன்றி, அடுத்தவர் உங்கள்மேல் உரிமை எடுத்துக் கொண்டு தங்கள் முடிவுகளை உங்கள் மேல் திணிக்க இடம் கொடுக்கக் கூடாது.

நீங்கள் பணியாற்றும் நிறுவனத்திலோ, பங்கெடுக்கும் பொது அமைப்பிலோ நீங்கள் ஒரு மேளாண்மை பதவியில் இருந்தால், உங்கள் ஒவ்வொரு அசைவும், உங்கள் வாயிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு சொல்லும் கவனமாகக் கண்காணிக்கப் படுகிறது என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் தரம் குறைந்தாலும் உங்களைப் பற்றிய இமேஜ் கீழே சரிந்துவிடும்.

பெரிய பதவியை அடைவதால் மட்டும் ஆளுமை வந்துவிடாது. தன்கீழ் பணியாற்றுபவர்களைக் கட்டுப் படுத்தமுடியாத, மேலாண்மை செலுத்தமுடியாத பல மேலதிகாரிகளை நாம் கண்டிருக்கிறோம். தன்னம்பிக்கையில்லாமலும், பிறர் மனத்தை அடக்கி, அதனைத் தம் ஆளுமைக்குள் கொண்டுவர இயலாதவர்களாகவும் பல பெரிய பதவிகளை வகிப்பவர்கள் இருக்கிறார்கள். ஊன்றிப் பார்த்தால் இவர்களுடைய "மெயின் சுவிட்ச்" இன்னொருவர் கையில் இருக்கும். பதவிக்கேற்ற ஆதிக்கத்தை இவர்கள் செலுத்தவில்லையென்றால், இவர்கள்மேல்

இன்னொருவர் ஆதிக்கம் செலுத்த முற்படுவது திண்ணம்.

நம்மில் பலர் "கித்தாய்ப்பாகப்" பேச ஆரம்பிப்பார்கள். “இப்போது பார். இவனை எப்படி விரட்டறேன் பார். நான் போடற போட்டிலே அவன் கதறிக்கொண்டு ஓடிவருகிறான் பார்" என்று வீராய்ப்பாக டெலிஃபோனை எடுத்து சுழற்றுவார்கள். ஆனால், “தொண்டையிலே 'கீச் கீச்'” விளம்பரத்தில் வரும் MGM சிங்கம் "ம்க்ம்ம்ம்--ர்ர்ர்" என்ற கர்ஜனையுடன் ஆரம்பித்து "மியாவ்" என்று முடிப்பதுபோல "நீங்க பார்த்து செய்யுங்க. ஹி...ஹி" என்று சொணங்கிவிடுவார்கள். இதுபோல் இல்லாமல் நீங்கள் தலைமை வகிக்கும் எந்த நிகழ்விலும் உங்கள் கை ஓங்கியிருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். தன் பலம், எதிராளியின் பலம், அவர்தம் பின்புலம் எல்லாவற்றையும் துல்லியமாக எடைபோட்டு, நாம் தொடங்கிய விறைப்பிலேயே கடைசிவரை தொடர வேண்டும்.

ஃபோனில் பேசும்போது "வெட்டு ஒன்று, துண்டு இரண்டு" என்றிருக்க வேண்டும். “வழவழா கொழகொழா" என்று நையக்கூடாது. “இவன் என்ன சொல்லப் போகிறானோ" என்ரு எதிராளி கவனத்துடன் கேட்டுக் கொள்ள வேண்டும்.

இன்னொரு முக்கியமான விஷயம்: தலைமையேற்கும் நிலையில் உள்ள உங்கள் சொல்தான் கடைசியாக இருக்க வேண்டும். "தட்டையான அமைப்புமுறை" (flat organization) கொண்ட நிறுவனங்களில்கூட தலைமை என்று ஒருவர் உண்டு. இது எல்லா உரினங்களிலும் உள்ள இயற்கை.

நீங்கள் ஒரு உத்தரவு பிறப்பித்தால், அதனை முழுமையும் பிறர் புரிந்துகொள்ளும்படி உரைக்க வேண்டும். உங்கள் முடிவு இன்னதுதான் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றிக் கூறி நிறுத்திவிட வேண்டும். No vacillation, no ambiguity, no hemming and hawing. (ஆனால், உங்கள் முடிவு இன்னதுதான் என்பதை கடைசியில்தான் வெளிப்படுத்த வேண்டும்!)

இதெல்லாம் ஆளுமையின் அடையாளங்கள். நம் வார்த்தைகளில் "குழைவு" வந்துவிடக் கூடாது. இது ஒரு பலவீனத்தின் வெளிப்பாடு. உங்கள் பலவீனங்கள் பிறரால் கணிக்கப்பட்டால் ஆளுமை அவர்கள் கையில் சேர்ந்துவிடும்! So, when you are the chief, play that part!

பதறாமல், உதறாமல், வெளிப்படையாக உணர்ச்சிகளைக் கொட்டாமல், நிதானமான, ஆழமான குரலுடன் உங்கள் கருத்துக்களையும் முடிவுகளையும் எடுத்துக் கூறினால், அதன் தாக்கம் ஏற்றமுள்ளதாக அமையும். உத்தரவுகள் "தொங்கும்" சொற்களாக இருக்கக் கூடாது. உறுதியாக இருக்கவேண்டும். Spoken with deep resonant voice and a measured tone; words delivered with appropriate pause. எந்த உத்தரவு பிறப்பித்தாலும், அது நிறைவேற்றப் பட்டதா -  என்பதைக் கண்காணிக்கவேண்டும். இல்லையெனில் உங்கள் மேல் அசட்டையாக இருக்கத் தொடங்கி விடுவர். “அவர் அப்படித்தான் ஏதாவது சொல்லுவார். ஆனால், செய்யல்லைன்னா கண்டுக்க மாட்டார். பேசாம விடு" என்பார்கள். சொற்கள் தன்னிச்சையாக வந்து விழக்கூடாது. நம் முழு ஆளுமையுடன் வரவேண்டும். ROM-ன் ஆதிக்கமில்லாமல், நம் அறிவுசால் RAM-ன் கட்டுப் பாட்டில் வரவேண்டும்!

பொது இடங்களுச்சென்றால் நீங்கள் நாலுபேர் முன்னால் மதிக்கப்பட விரும்புகிறீர்கள். பிரபலமான கொயில்களுக்குச் சென்றால், முண்டியடித்து, நெட்டித்தள்ளி தரிசனம் செய்யாமல், தனியாக கர்ப்பக் கிரகத்துக்கு அழைத்துச் செல்லப் படுவதை விரும்புகிறீர்கள். எங்கு சென்றாலும் உங்களை சிறப்பாக கவனிக்க வேண்டும் என்று ஆவல்படுகிறீர்கள். இவ்வகை சிறப்பு மரியாதைகள் நீங்கள் பெறவேண்டுமானால், வாழ்க்கையில் வெற்றி பெற்றவராக, ஒரு தலைவனாக, சிறப்பு வாய்ந்தவனாக பிறரால் உணரப்பட வேண்டும். வெற்றி பெற்றால் மட்டும் போதாது. அந்த வெற்றி எட்டுத் திக்கும்  எட்டும்படி முரசு கொட்டப்பட வேண்டும்!

Nothing succeeds like success in this world !

திறமையை வளர்த்துக் கொள்ள….

திறமையை வளர்த்துக் கொள்ள….

வளர்ச்சிக்கு அறிவு – பயிற்சி பாரம்பரியம் மூன்றும் அடிப்படைகளாக அமைகின்றன. சிறந்த சூழ்நிலை வளர்ச்சிக்குத் துணையாகிறது. அறிவும் பயிற்சியும் ஒவ்வொரு துறையிலும் தேவைப்படுகிறது. பாரம்பரியம் தந்தை தாய்வழியே வருவதாகும். சிறந்த பாரம்பரியம் – அறிவு – பயிற்சி ஒருவனை திறமை மிக்கவனாக உருவாக்கும். திறமை ஒன்றே வளர்ச்சியின் அளவு கோல்.

திறமையின்றி ஒருவன் வளர நினைப்பது, புகழைக் கௌவ நினைப்பது – ஒரு கனவு காண்பதைப் போன்றதாகும். கணித்தத்தில் திறமை பெற்றதால் இராமானஜம், கவிதையில் திறமை பெற்றதால் தான் பாரதியார், அரசியலில் திறமை பெற்றதால் இந்திரா – பேச்சில் திறமை பெற்றதால் அண்ணா. எழுத்தில் திறமை பெற்றதால் டாக்டர். மு.வ. இப்படி திறமை பெற்றவர்களின் பெயர் வரிசைப் பட்டியலை நீட்டிக் கொண்டே செல்லலாம்

அவன் வளர்ந்துள்ளான். “எப்படியோ” வளர்ந்துவிட்டான் என்று எண்ணுவதை விட அவன் வளர்வத்கு உறுதுணையாக நின்ற அவன் திறமை என்ன என்பதை மட்டும் கூர்ந்து கவனியுங்கள். வளர நினைப்பவர்கள், செழிக்க நினைப்பவர்கள் பிறரைக் காட்டிலும் ஏதேனும் ஒரு துறையிலாவது நல்ல அறிவும் பயிற்சியும் பெற்று திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அறிவும் பயிற்சியும் பெற்று ஒன்றை ஒழுங்கு செய்யும் நன்மையை திறமையென்று கொள்ளலாம்.

உங்கள் திறைமையை எந்த துறையில் பெருக்கிக் கொள்ளலாம் என்பதை நீங்கள் அமைதியாக சிந்தித்து முழுமையாகத் தீர்மானியுங்கள். எந்தத் துறையைத் தேர்ந்து எடுக்கிறீர்கள். அந்தத் துறை நூல்களைப் படியுங்கள். குறிப்பெடுங்கள். கருத்துக்களை ஜீரணிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அதைப்பற்றி கேள்விகளை எழுப்புங்கள். பதில்களைப் பல முறைகளிலும் பெற முயலுங்கள். செய்தித்தாள் , வானொலி, தொலைக்காட்சி இன்னபிற வழிகளில் அறிவைப் பெருக்குங்கள். பயணம் செய்யுங்கள். பார்த்து – கேட்டு அறிவைப் பெருக்குங்கள்.

பயிற்சி – ஒழுங்குற செய்வதாகும். பயிற்சி பெறப் பெற – அறிவு – பொலிவு பெறும். பயிற்சி படிப்பதிலும், எழுதுவதிலும், எண்ணுவதிலும், செய்வதிலும், ஒழுங்குற அமைய வேண்டும். பயிற்சியில் நேரமும் வேண்டும். நேரத்தை ஒழுங்குறப் பயன்படுத்தி பயிற்சியைத் தொடரும்பது அறிவு தெளிவு பெறும். திறமை பிறக்கும். திறமை வெறியைத் தேடித்தரும் திறமைக்குத் திறவுகோல் அறிவு – பயிற்சி, பாரம்பரியம் எனவே – திறமை பெற முயல்வீர்…

Wednesday, May 6, 2015

நேரத்தில் சில விந்தைகள்!

நேரத்தில் சில விந்தைகள்!

ஒரு மணி நேரத்தில் 60 நிமிடங்கள் அடங்கியுள்ளன. ஒரு நிமிடத்தில் 60 வினாடிகள் அடங்கியுள்ளன. இம்மியளவு நேரமான வினாடியை நாம் அலட்சியம் செய்கிறோம். அதை நாம் பொருட்படுத்துவதில்லை. வீணாக்குகிறோம். 

ஆனால் வினாடி, உயிர்த்துடிப்பு நிறைந்தது. வினாடிப் பொழுதில் உலகில் எத்தனையோ அதிசயங்கள் நடந்துவிடுகின்றன. 

அந்த வினாடியையும் தற்போது விஞ்ஞானிகள் எத்தனையோ ஆயிரம் பிரிவுகளாகப் பிரித்திருக்கின்றனர். கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்குதான் தெரிந்திருந்தது. 

நிமிடங்களையும், வினாடிகளையும் ஒரு பொருட்டாகக் கருதாத நாம், ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்குக்கு மதிப்புக் கொடுப்போமா? இருந்தபோதும், வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதைத் தெரிந்துகொள்வோம். 

ஆகாய விமானங்களும், மோட்டார்களும், ரெயில் களும், செல்போனும் இல்லாத காலத்துக்கு நாம் கற்பனை ரதத்தில் பயணம் செய்து பார்ப்போம். 

இந்தக் காலத்தில் நேரம் போவது தெரியவில்லை. அவ்வளவு வேகமாக வாழ்க்கை சுழல்கிறது. ஆனால் அந்தக் காலத்தில் நேரம் போவது ஒரு யுகமாகத் தோன்றியது. பண்டைய நாட்களில் நேரத்தைத் துல்லியமாகத் தெரிந்துகொள்வதற்கான அவசியம் இல்லை. அலுவல கம் அல்லது பள்ளிக்குச் செல்வதற்கு நேரமாகிவிட்டது என்று எச்சரிக்கை செய்வதற்குக் கடிகாரங்கள் பிறக்கவில்லை. 

பண்டைக் காலத்து மக்கள் நேரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்காவிட்டாலும், நேரத்தை அறிந்துகொள்ள விரும்பினர். அவர்கள் நேரத்தை அறிவதற்குச் சில உபாயங்களையும், சாதனங்களையும் உபயோகப்படுத்தினர். சூரியக் கடிகாரங்கள், மணல் கடிகாரங்கள் போன்றவை அந்தக் காலத்து மக்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்தன.

எனினும் இந்த இயற்கைக் கடிகாரங்கள், நிமிடங்களையோ, அவற்றின் பிரிவுகளாகிய வினாடிகளையோ தெரிவிக்கவில்லை. அவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டிய தேவையும் பண்டைக் காலத்து மக்களுக்கு ஏற்படவில்லை. நிமிட முள் 18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், வினாடி முள் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பும்தான் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

சமீப காலத்தில் நாம் தெரிந்துகொண்ட, வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரத்தின் நுட்பங்களை அறிவோம். இவ்வளவு சிறிது நேரத்தில் என்ன நிகழ முடியும் என்ற அலட்சியமான எண்ணம் நமக்கு ஏற்படுவது இயற்கைதான். ஆனால் இந்த நுண்ணிய நேரத்தில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடைபெறும். சில உதாரணங்களைப் பார்ப்போம். 

வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு என்ற இம்மி நேரத்தில் ஒரு ரெயில் சுமார் 2 செ.மீ. தூரம் செல்லும். அதே நேரத்தில் ஒலி சுமார் 34 செ.மீ. தூரமும், விமானம் ஒன்றரை அடியும் செல்லும். சூரியனைப் பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது அல்லவா? அது தனது சுழலும் பாதையில் சுமார் 40 அடி பயணம் செய்திருக்கும். ஒளியைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அதன் வேகம் மிக அதிகம் என்பது நமக்குத் தெரியும். வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரத்தில் அது 300 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்திருக்கும். 

இன்னும் ஓர் உதாரணத்தை பார்க்கலாம். நம்மைச் சுற்றிலும் எண்ணற்ற உயிர்கள் உள்ளன. அவற்றுக்குச் சிந்திக்கும் திறன் இல்லை. எனினும் வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு அவற்றுக்கு முக்கியமாக இருக்கிறது. உதாரணமாக கொசுக்கள் இந்த நேரத்தில் 6 லட்சம் தடவை தமது சிறகுகளை அடித்துக்கொள்கின்றனவாம். 

நாம் பொதுவாக அறிந்த துரிதமான நேரம், `கண்ணிமைக்கும் நேரம்’ என்பதுதான். இது உண்மையில் ஒரு வினாடியில் ஆயிரத்தில் 400 பங்குதான்!

பதில் இல்லாத கேள்வி

பதில் இல்லாத கேள்வி

சிறு வயதில் குருகுல வாசத்தை விட்டு நான் வெளியிலே வந்த போது, கோழிக்குஞ்சு முட்டையில் இருந்து வெளிவந்தது போல் தான் இருந்தேன். 

`நான் யார்’ என்பதே எனக்கு தெரியாது. விபரம் தெரியாத நிலை; பக்குவமற்ற சூழ்நிலை. 

காபி ஓட்டல்களையும், தியேட்டர்களையும் கூட ஆச்சரியமாகப் பார்க்கின்ற சூழ்நிலை. 

குருகுலம், நல்ல பண்பாடுகளையும், பழக்க வழக்கங்களையும் கற்பித்தது என்றாலும், வெளி உலகத்தைக் காண விடாமல் வைத்திருந்தது. 

ஆகவே, தெளிந்த இதயத்தோடும் உலக அனுபவம் அற்ற நிலையிலும் நான் வெளியே வந்தேன். 

வந்ததிலும் தவறில்லை; நான் வாழ்ந்ததிலும் தவறில்லை; ஆனால், ஒரு முக்கியமான கேள்விக்கு விடை காண முடியாமல் தவித்தேன். 

அந்தக் கேள்வி என்ன? 

"நான் யார்?” என்பதே அது.  நான் யார்? 

அண்ட சராசரங்கள் அனைத்துமே அதைத்தான் கேட்டுக் கொள்கின்றனவாம்!

மனிதன் அறிய வேண்டிய அறிவுகளில் எல்லாம் முக்கியமான அறிவு, தன்னை அறிதலே. 

ஒவ்வொரு விலங்கும், ஓரளவுக்குத் தன்னை அறிகின்றது. 

பருந்து பாய்ந்து வந்தால், கோழி ஆத்திரப்படுகின்றது. 

நாயை கண்டதும், முயல் ஓடுகிறது. 

புலியைக் கண்டதும், மான் ஓடுகிறது. 

உயிரின் மீது உள்ள இந்த நாட்டம், ஓரளவுக்குத் தன்னைப் பற்றிய உணர்வே ஆகும். 

ஆனால், இந்த உணர்வு வேறு; தான் யார் என்று அறிந்து கொள்ளும் அறிவு வேறு. 

தாயினாலும், தகப்பனாலும் நாம் இந்த பூமிக்கு வந்து விட்டோம். ஆனால், ஏன் வந்தோம்; நம் வருகைக்கான நோக்கம் என்ன என்பது எத்தனை பேருக்கு தெரியும்? 

வந்தோம், வாழ்ந்தோம், மடிந்தோம் என்று பல பேர் மடிந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் வரவு- செலவு பார்த்திருக்கிறார்கள். 

சிலர் காதலித்து, வெற்றி காண முடியாமல் மாண்டிருக்கிறார்கள். 

சிலர் மணம் முடித்து, மக்களைப் பெற்று அவதிப்பட்டு இறந்திருக்கிறார்கள். 

சிலர், `பதவி பதவி’ என்று அலைந்து செத்து இருக்கிறார்கள். 
சிலர், `உதவி உதவி’ என்று ஓடி, ஆடி உயிரை விட்டிருக்கிறார்கள். 

இவர்களிலே, `தான் யார்’ என்பதைக் கண்டு கொண்டு உலகிற்குச் சொல்லிவிட்டு, மறைந்த ஞானிகள் எத்தனை பேர்? 

அவர்கள் பெரும் கூட்டமாக இல்லை; விரல் விட்டு எண்ணக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள்.

நான் யார்? 

சினிமாப் பாட்டு எழுதுகிறானே, அந்தக் கண்ணதாசன் தானா நான்? 
தொடர்கதை எழுதுகிறானே, அந்தக் கண்ணதாசன் தானா நான்? 
மதுவிலும் சிற்றின்பத்திலும் மயங்கிக் கிடப்பவன் தானா நான்? 
அரசியல் வாண வேடிக்கையில் அடிக்கடி பங்கு கொள்கிறவன் தானா நான்? 
நல்லது கெட்டது பாராமல் நடக்கும், ஒரு முரட்டு மாடுதானா நான்? 
இன்றைக்கு ஐம்பத்திரண்டு தீபாவளிகளைக் கொண்டாடி, அடுத்தது என்ன என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நான் யார்? 

நான் ஏன் பிறந்தேன்? 

நான் விரும்பிப் பிறக்கவில்லை என்றாலும், இதுவும் ஒரு நியாயமான கேள்விதான். 

இயற்கையின் நியதியில் சூரியனுக்கும், சந்திரனுக்கும், நட்சத்திரங்களுக் கும் நோக்கம் இருக்கும்போது, என் பிறப்புக்கும் ஒரு நோக்கம் இருந்தாக வேண்டும். 

அது எனக்குப் புரியவில்லையே தவிர, ஏதோ ஒரு லட்சியத்துக்காகவே நான் சிருஷ்டிக்கப்பட்டு இருக்கிறேன் என்பது உண்மை. 

ஒவ்வொரு ஜீவனும், ஒவ்வொரு லட்சியத்திற்காகவே படைக்கப்பட்டு இருக்கின்றன. 

ஜீவனற்ற அஃறிணைப் பொருளும் அவ்வாறே. 

தண்ணீர் தாகத்தைத் தீர்க்கவும், வயல்களை வளப்படுத்தவும், உணவுப் பொருள்களுக்கு உரமாகவும் படைக்கப்பட்டு இருக்கிறது. 

அந்தத் தண்ணீரில் வாழும் மீன் அழுக்கைத் தின்று நீரைச் சுத்தப்படுத்தவும், மனிதனுக்கும், பறவைகளுக்கும் ஆகாரமாகவும் படைக்கப்பட்டு இருக்கிறது. 

ஒரு காக்கையின் பிறப்புக்கு கூட ஒரு சிறிய காரணம் இருக்கிறது. 

அப்படி என்றால், என் பிறப்புக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டுமே? 

காலையில் இட்லி, தோசை; மத்தியானம் சாப்பாடு; ராத்திரியில் மீண்டும் பலகாரம்; இதற்காகவா நான் படைக்கப்பட்டேன்? 

தமிழில் எல்லாச் சொல்லுக்கும் பொருள் உண்டு என்று சூத்திரம் சொல்கிறது. அது போலவே எல்லா ஜீவனுக்கும் காரணம் உண்டு. 

நான் முன்பே சொன்ன சனத்குமாரர்- நாரதர் கதை தான். 
எல்லாம் தெரிகிறது எனக்கு; என்னைத் தெரியவில்லை. 
கண்ணாடியில் முகம் தெரிகிறது; மனம் தெரியவில்லை. 

யோசித்துப் பார்த்தால் மனம் தெரிகிறது. ஆனால் அது ஏன் படைக்கப்பட்டது என்பது தெரியவில்லை. 

ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாகப் பற்றிக் கொண்டே போனாலும் கூட, நான் படைக்கப்பட்டதன் மூலக் காரணத்தை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. 

`இப்படித்தான் இருக்கும், இதற்காகத்தான் இருக்கும்’ என்று ஒரு காரணத்தை நானே வகுத்துக் கொண்டு, என்னை நானே அறிய முற்படுகிறேன்.

இந்த ஒரு ஆன்மா, ஒரு லட்சம் ஆன்மாக்களுக்காவது வழிகாட்ட வேண்டும் என்பதற்காகவே, நான் படைக்கப்பட்டு இருக்கிறேன். 

நன்மை- தீமை புரியாமல், நியாய அநியாயம் தெரியாமல் தடுமாறும் மானிட ஜாதிக்கு, ஒரு அரிக்கேன் விளக்கையாவது ஏற்றி நான் வழிகாட்டியாக வேண்டும். 

நீதி சொல்வதில், நான் வள்ளுவனாக முடியாது. ஏன்? இன்னொரு வள்ளுவன் பிறக்கவே முடியாது. 

ஆனால், என் அனுபவம் சுட்டிக் காட்டுகிற நீதிகளில் வள்ளுவன் சொல்லாததும் இருக்கக்கூடும். 

தர்மோபதேசம் செய்வதில் நான் வடலூர் வள்ளலாராக முடியாது. ஏன், இன்னொரு வள்ளலார் இந்தத் தலைமுறையில் பிறக்கப் போவதும் கிடையாது. 

ஆனால், என் உடலில் பட்ட காயங்களில் வள்ளலார் காணாத காட்சிகளும் இருக்கக்கூடும். 

நான் நீண்ட தூரப் பிரயாணி. 

மலைச் சரிவுகளிலும் பயணம் செய்து இருக்கின்றேன். சமவெளிகளிலும் பயணம் செய்திருக்கின்றேன். 

நான் யார் என்பது தெரியாத பிரக்ஞையற்ற நிலையிலேயே, அனுபவங்களைச் சேகரித்து இருக்கிறேன். 

இந்த உலகத்தை ஓரளவு எனக்குத் தெரியும். 

நான் எழுத்தாளனாக இருக்கிறேன்; ஆகவே, வறுமையை அறிவேன். 
அரசியலில் இருந்திருக்கிறேன்; ஆகவே, அயோக்கியத்தனம் என்ன என்பது புரியும். 

கலைத்துறையில் இருந்திருக்கிறேன்; ஆகவே, ஏற்ற இறக்கங்களை அறிவேன். 

எப்படி எல்லாம் வாழக்கூடாதோ, அப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறேன். 

ஆகவே, இப்படித்தான் வாழ வேண்டும் என்று புத்தி சொல்லக்கூடிய யோக்கியதை எனக்கு உண்டு. 

முதன் முதலில் நான் நாத்திகனாக இருந்த காலங்களை எடுத்துக் கொள்கிறேன். 

இப்போது நான் நாத்திகன். 

`கடவுள் இல்லை’ என்று மிகவும் அழுத்தம் திருத்தமாக நாக்கு வலிக்கச் சொல்லும் ஒரு நாத்திகன். 
என் பின்னால் வாருங்கள்.