Monday, May 11, 2015

உட்பகை நீக்கின் எப்படை வெல்லும்!

உட்பகை நீக்கின் எப்படை வெல்லும்!

"நீ நீயாக இரு" என்று பல அறிஞர்கள் சொல்கிறார்களே, ஆனால் நீங்கள் பிறருக்காக உங்களை மாற்றிக் கொள்ளச் சொல்கிறீர்களே என்கிற அடிப்படைக் கேள்வியை பலர் எழுப்புகிறார்கள். உண்மையில் நான் அடிக்கோடிட்டுச் சொல்வதும் "நீயாகவே இரு" என்பதுதான். ஆனால் அதில் ஒரு caveat (மாறுபட்ட புரிதல் கொள்ளக் கூடும் என்ற எச்சரிக்கை) உள்ளது. "நீ" என்பது சரி. ஆனால் எந்த "நீ" என்பதுதான் பிரச்னையே. ஏனென்றால் நீ உண்மையில் யார் என்பதை நீ முழுதும் அறிந்து கொண்டாயா என்ற கேள்விக்கு விடை காண முற்படும்போது தான் நீ உன்னை அறிவது எவ்வளவு கடினம் என்பது புரியும். அதனால்தான் இந்த கட்டுரைத் தொடருக்கு மிகவும் பொருத்தமாக "உன்னையறிந்தால்.." என்ற தலைப்பை நண்பர் கனேஷ் சந்திரா இட்டபோது மிகவும் மகிழ்ந்தேன்.

உண்மையில் தன்னிச்சையாக நிகழும் நம் எண்ணப் போக்கு, செயல்படும் விதம் எல்லாமே நம் மரபணுக்களில் பதிவு செய்யப்பட்ட அமைப்பின் உந்துதலால் விளைவது. இதனால்தான் பல நேரம் நம் அறிவுசார்ந்த முடிவுகளுக்கு எதிராக நம் எண்ணமும் செயலும் நிகழ்ந்து விடுகிறது. நம் ஆழ்மனதை நம் ஆளுமைக்குள் கொண்டுவருவதற்கு கடுமையான ஆழ்நிலைத் தியானமும், தொடர்ந்த பயிற்சியும், இன்னும் சிறப்பான மனவியல் சார்ந்த செயல்பாடுகளும் (self-hypnosis) தேவையாக இருக்கிறது.

அதனால்தான் நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால், உங்கள் எண்ணம், சொல், செயல் மூன்றையுமே உங்கள் மனக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்து, அவற்றின் செயல்பாட்டில் உங்களைச் சுற்றியுள்ள இந்த உலகத்தின் இயல்புக்கேற்ப சிறிது மாற்றங்கள் செய்துகொண்டு (behavioural modification), சிறப்புற வாழ வேண்டும் என்பதுதான். அத்தகையான மனப் பயிற்சிக்கு அடிப்படையே உங்களை நீங்கள் நன்கு அறிந்து, உங்களையே (சிறிதளவாவது) உங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதுதான். இதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதன் நோக்கம், இதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காண்பிக்க மட்டுமல்லாது, இது எவ்வளவு கடினம் என்பதை உங்கள் மனதில் பதிக்கவேண்டும் என்பதால்தான்.

உங்களுடைய வலிமைகளை மட்டுமல்லாமல்,. பலவீனங்களையும் முழுமையாக அறிதல் மிக அவசியம். உங்களைவிட உங்களுடைய எதிரிகள் உங்களின் பலவீனங்களை சரியாக அடையாளம் கண்டுகொண்டு, அவற்றை அவர்களின் சுயநல இலாபத்திற்கேற்ப எவ்வாறு கைக்கொள்வது என்று ஒரு  திட்டம் வகுத்திருப்பார்கள். நம்மைவிட நம் எதிரிகள் சுறுசுறுப்புடன் செயல்படுகிறார்கள் என்பதை எப்போதும் மனதில் இருத்திக் கொள்ளவேண்டும். எப்போது நீங்கள் வெற்றிப் பாதையில் அடியெடுத்து வைக்கிறீர்களோ, அப்போதே எதிரிகள் என்கிற காளான் துளிர்விடத் தொடங்குவதை ஆண்டவனேயானாலும் தடுக்க இயலாது. ஏனென்றால் ஆண்டவனுக்கே எதிரிகள் பஞ்சமில்லாமல் இருந்தார்கள் என்பதை நாம் அறிவோம்!

நம்முடைய உண்மையான மதிப்பீட்டை அறியவேண்டுமானால், நம் எதிரிகளைக் கேட்டாலே தெரியும். ஏனென்றால் அவர்கள் மிக நுணுக்கமாக நம் பலம் மற்றும் பலவீனங்களை ஆராய்ந்து அவற்றைப் பட்டியலிட்டிருப்பார்கள். உண்மையில் நீங்கள்தான் அதனைச் செய்திருத்தல் வேண்டும். ஆனால் அது உங்கள் மனதின்பால் தைக்காது. ஏனெனில் நீங்கள்தான் உங்கள் வலிமையின் சிறு வெளிப்பாட்டின்பால் கிட்டிய வெற்றியின் மிதப்பில் கிடக்கிறீர்களே - அப்போது பலவீனத்தைப் பற்றிய எண்ணம் மனதினுள் புக வாய்ப்பேது? ஆனால் இந்தத் தருணம்தான் எதிரிகளின் மைதானம் -புகுந்து விளையாடிவிடுவார்கள்! அவ்வப்போது நிகழும் சிறு வெற்றிகள் தரும் போதை உங்களைப் பற்றிய ஒரு மிகுதியான இமேஜை உங்கள் மனதில் உருவாக்கிவிடும்(megalomaniac). அதனால் உண்மைநிலை மறைக்கப் பட்டுவிடும். அப்போது உங்களைச் சுற்றி ஒரு "வேப்பிலை கோஷ்டி" உங்கள் அனுமதியில்லாமலேயே உண்டாகிவிடும். அவர்கள் உங்களையறியாமல் மனதில் புகுந்து, உங்கள் எண்ணப்போக்கை தன் ஆளுமைக்குள் கொண்டுவந்து விடுவார்கள். பிறகென்ன, உங்கள் மனம் இன்னொருவர் கைகளில் களிமண் உருண்டைபோல் இருக்கும் (putty). அவர்கள் உங்களை அவர்கள் தேவைக்கேற்ற உருவமாக மாற்றிவிடுவார்கள். உங்கள் தீர்மானங்கள், மதிப்பீடுகள், நம்பிக்கைகள், செயல் திட்டங்கள் இவை எல்லாமே பிறருடைய ஆளுமைக்குள் அடிமையாகிப் போகும் அபாயம் உள்ளது. ஆனால் அதுபற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியாது. ஏதோ நீங்கள் உங்களுடைய சிறப்பியல்களினால் வெற்றி கொண்டிருப்பதாக நம்ப வைக்கப் படுவீர்கள்.

ஆங்கிலத்தில் Murphy's Law என்ற நகைச்சுவை கலந்து இந்த உலக உணமைகளை அப்பட்டமாக உரைக்கும் வாக்கியங்கள் உண்டு. அவற்றில் இரெண்டை மட்டும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்:

If you believe that everything is going on well, it means you do not know what the hell is going on.

Be careful when things are going on well, because that is the time when things start going wrong.

மேற்கண்ட இரு மூதுரைகளும் நிர்வாகம், மேலாண்மை பற்றிய வாசகங்கள். அவற்றை இந்த context-ல் ஏன் கொணர்ந்தேன் என்றால், அங்கு குறிப்பிட்டிருக்கும் நிலைகளை உங்கள் சுற்றுப்புரம் அடைவதற்குக் காரணமே நீங்கள் உங்கள்தம் ஆளுமைக்குள் முழுமையாக இல்லை என்பதுதான்.

பல பெரிய மனிதர்கள், பேரசர்கள் வீழ்ந்ததற்குக் காரணமே அவர்கள் தங்களைத் தன் கட்டுப்பாட்டிற்குல் வைத்திராமல், அவர்களறியாமல் ஒரு "chamcha", "லோட்டா" சுயநலக் கும்பலின் கைப்பாவையாக ஆனதினால்தான் என்பதற்கு சரித்திரத்தில் பல எடுத்துக் காட்டுக்கள் கானக்கிடைக்கின்றன. மீண்டும் சொல்கிறேன், நீங்கள் வாழ்வில் சாதனைகள் புரியத் தொடங்கி வெற்றிகளை ஈட்டத் தொடங்கும்போது உங்களைச் சுற்றி வந்து சேர்பவர்கள்பால் மிகக் கவனத்துடன் இருக்க வேண்டும். உங்கள் மெயின் சுவிச்சை இன்னொருவர் கையில் உங்களையறியாமல் "தாராந்துடக்"கூடாது! பலர் உங்களை subtle-ஆக புகழ்ந்து அப்படியே pulp போல் ஆக்கிவிடுவார்கள். The Emperor's New Clothes என்கிற கதையை நீங்கள் வாசித்திருப்பீர்கள்.

உங்களுக்கு இயல்பாக அமைந்த குறிப்பறிதல் போன்ற துடிப்பான வலிமைகள் இருக்கும்போது இன்னொருவர் எவ்வாறு உங்களைத் தன் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்கிற கேள்வி எழுவது நியாயம். ஆனால் அதுபோல் நீங்கள் ஆளப்படுகிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்தால்தானே! நீங்களே சுயமாகச் சிந்தித்து செயல்படுவது போன்ற தோற்றத்தை (facade) உங்கள் மனத்தில் தோற்றுவித்து உங்களை பொம்மலாட்டம் ஆட்டிவிடுவார்கள் சண்டாளர்கள்! வெளிப்படையான எதிரிகளிடமிருந்து உங்கலைக் காப்பாற்றிக் கொள்வது மிகச்சுலபம். ஆனால் உங்களைச் சுற்றியிருக்கும் கோஷ்டிகளிடமிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய ஆயுதங்கள் ஏதும் உங்களிடம் கிடையாது. அதனால் எப்போதும் விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டும். வெற்றி என்ற ஏணியில் ஏறும் ஒவ்வொரு படியிலும் உங்களுடன் தொற்றிக் கொண்டிருப்பவர் யார்யார் என்பதில் மிகக் கவனத்துடன் இருக்க வேண்டும்.

கூட இருந்தே கவிழ்த்து விட்டான்" என்று பலர் புலம்புவதைக் கேட்டிருப்பீர்கள். கூட இருப்பவர்கள்தானே கவிழ்க்க முடியும், எட்ட இருப்பவர்களாலா முடியும்! Betrayal என்பதை அவர்கள்தான் செய்வார்கள். கிரேக்கர்கள் ட்ராய் நாட்டை ஒரு மரத்தினாலான குதிரைக்குள் படைவீரர்களை மறைத்துச் சென்று வீழ்த்தினார்கள் என்பதை அனைவரும் படித்திருப்பீர்கள். இதனால்தான் வஞ்சகமாகச் செயல்படுவதை Trojan Horse என்ற பெயர் கொண்டு அழைக்கிறார்கள். நம் கணினியுள்கூட பல ட்ரோஜன்கள் நம்மையறியாமல் உட்புகுந்து அதனைத் தம் கைக்குள் கொணர்ந்து அதன் இஷ்டத்திற்கேற்ப பல தவறான செயல்களுக்கு உட்படுத்துகின்றன. சாதாரண வைரஸ் எதிர்ப்புச் செயலிகள் (Anti-virus programs) இவற்றை அடையாளம் கண்டுகொள்ள இயலாத வகையில் அவைகள் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்து செயல்படுவதைக் காண்கிறோம்.

இதையேதான் வள்ளுவர் "உட்பகை" என்னும் அதிகாரத்தில் தெளிவாக விளக்கியுள்ளார்.

 வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
 கேள்போல் பகைவர் தொடர்பு.

"கேள்போல் பகைவர்"களின் "தொடர்பு" அஞ்சப்பட வேண்டுமென்கிறார். இதில் "தொடர்பு" என்னும் சொல் மிக முக்கியமானது. ஏனெனில் உறுவிய வாள் போன்ற வெளிப்பகை உங்களுடன் "தொடர்பு" கொண்டிருக்காது. அதனால் அதன் செயல்பாடுகள் வெளிப்படையாகத் தெரியும். ஆனால் உட்பகையோ உங்களுடன் தொடர்பு கொண்டது. உங்கள் அருகாமையில், உங்களிடம் ஊடுருவக்கூடிய தன்மையுடன் ஒழுகுவது. அத்தகைய access கொண்ட நபர்களிடம், அவர்களை நீங்கள் இனம் கண்டு கொள்ளும்வரை எதிர்ப்பு சக்தியே உங்களிடம் இருக்க வாய்ப்பு இல்லை! You are defenceless against those that are too close to you. பிரித்தாளும் தந்திரத்தை செயல்படுத்த முயல்வோரும், தவறு செய்பவர்களைப் பிடிக்கத் திட்டமிடும் புலனாய்வுத்துறையினரும், மனமுறிவு கொண்டு ஆனால் பிரிந்துபோகாமல் ஒட்டிக் கொண்டிருக்கும் முன்னாள் நண்பர்களைக் கொண்டுதான் திட்டம் தீட்டுவார்கள் என்று படித்திருக்கிறோம். இதனை வள்ளுவர்,

 ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
 பொன்றாமை ஒன்றல் அரிது.

என்கிறார்.

என் நண்பரொருவர் வாழ்க்கையில் அடுத்தவரை முழுமையாக நம்பியே கெட்டார். எப்போது கண்டாலும், "அவன் கழுத்தறுத்தாண்டா" என்று புலம்புவார். எப்படிய்யா அறுத்தான் என்று கேட்டால், "குயவர் மண்பானை செய்து முடித்தபின், எப்போ, எதைவைத்து கட் பண்ணினார் என்பது தெரியாது; ஆனால், அவர் அதை எடுக்கும்போது, "சக்"கென்று வெளியே வரும். அதுபோல், அசந்திருந்த நேரத்தில, நூல் போட்டு அறுத்துட்டான்யா" என்பார். இந்த உவமையை வள்ளுவர் கையாண்டிருக்கிறார் பாருங்கள்:

 உட்பகை அஞ்சித் தற்காக்க உலைவிடத்து
 மட்பகையின் மாணத் தெறும்.

Asterix comics-ல் ஒரு ரோமானிய ஒற்றன் தன்னைச் சுற்றியிருப்பவர்களைடையே பகையை மூட்டிவிட்டு தப்பித்துவிடுவான். அவனை சீஸர், சர்க்கஸில் இட்டு சிங்களை விட்டு அழைக்க முயற்சி செய்வார். ஆனால் அந்த ஒற்றனோ சிங்கங்களையே ஒன்றோடு ஒன்றை மோதவிட்டு, தான் ஒடிப்போய்விடுவான்!

திருவள்ளுவர் "நட்பு" என்று ஒரு அதிகாரமும், ஆனால் "தீ நட்பு", "கூடா நட்பு" என்று இரு அதிகாரங்களையும் எழுதியுள்ளார்.

 சீரிடம் காணின் எரிதற்குப் பட்டடை
 நேரா நிரந்தவர் நட்பு

வஞ்சிக்கத் தக்கதொரு வாய்ப்பினை எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் பகைவர் உங்கள் நண்பராக நடித்துக் கொண்டிருப்பர். அவர்தம் செயல்பாடு சம்மட்டி அடி விழும்வரை தான் தாங்கிக் கொண்டிருப்பதுபோல் தோற்றம் தரும் பட்டறைக் கல் போன்றது என்கிறார். ஆனால் அடியோ உங்கள் மேல்தான் விழும். நீங்கள் கடைசியில் அடிபட்டு விழும்போது அத்தகைய "நண்பர்கள்" காணக் கிடைக்க மாட்டார்கள். உங்கள் வீழ்ச்சியைக் கண்டு கைகொட்டிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள்.

 சொல் வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
 தீங்கு குறித்தமையான்.

 தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
 அழுத கண்ணீரும் அனைத்து.

"ஐயா, நீங்கள்தான் என் கண்கண்ட தெய்வம். உங்களால்தான் ஒரு வயிற்றுக் கஞ்சி குடிக்கறேன்" என்று காலில் விழுந்து வணங்கி நம் மனதை நெகிழ்ச்சியுறச் செய்துவிடுவார்கள். ஆனால் அந்தக் கும்பிடும் கைகளினுள் கூரிய கொடுவாள் மறைந்திருக்கும். கண்ணீருக்குள் கயமை கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும். வில்லில் பூட்டி நாணேற்றி, உங்கள்மேல் எய்யக் காத்திருக்கும் கூரிய அம்பு போன்றவை அந்த கூழைக் கும்பிடுகள் என்கிறார் வள்ளுவர்.

தற்புகழ்ச்சி தவறு என்பது தெரியாதவரில்லை. பிறர் முகத்துதியிலும், பொய்ப் புகழ்ச்சியிலும் ஈடுபடுகிறார்கள், அதனை நம்புதல் தவறு என்று என்னதான் நம் அறிவு நமக்கு இடித்துரைத்தாலும், இந்தப் பாழும் மனம் அவற்றை விரும்புகிறதே ஐயா, என்ன செய்வது! இதனைப் பற்றிய விளக்கத்தை Sigmund Freud தான் அளிக்க வேண்டும்! மீண்டும் சொல்கிறேன்: Human beings are creatures of emotion, not of logic!

"மன்ற அடுத்திருந்து மாணாத செய்"வோரை அண்ட விடாமல் உங்கள் அகத்தினைக் காப்பீர்!

No comments:

Post a Comment