இங்கிதம் உடையர் எங்கிலும் உயர்வர்
பொது இடங்களில் நாம் எப்படி நம்மை அடையாளம் காட்டுகிறோம் என்பதும், ஒரு அலுவலகத்திலோ, நிறுவனத்திலோ, வேறொரு பொது அமைப்பிலோ, குழுவிலோ நாம் எப்படி இங்கிதத்தைக் கடைப்பிடிக்கிறோம் என்பதை வைத்துத்தான் நம் personality பிறரால் அறியப்படுகிறது. இது போன்ற பயிற்சி உங்களுக்கு ஏற்பட வேண்டுமென்றால் நீங்கள் ஏதாவது ஒரு பொது அமைப்பிலோ, துறையிலோ, தொண்டு நிறுவனங்களிலோ பங்களிக்க வேண்டும்.அப்போதுதான் பலவகை மனிதர்களிடம் எப்படிப் பழகி வேலைகளை நடத்திச் செல்லவேண்டும் என்பது புரியும். கிணத்துத் தவளையாக இருந்து கொண்டு, நம்மையே நம்பியிருக்கும் மனைவியையும் குழந்தைகளையும் (மட்டும்) விரட்டிக்கொண்டு, அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் "சலாம்" போட்டு "குலாம்" ஆகிக் கொண்டோ, அல்லது அசட்டுத் துணிச்சலுடன் ஏதாவது ஏடாகூடமாக செய்து விட்டு "என்ன நடக்குமோ" என்ற பயத்தில் வீட்டில் இருப்பவர்களிடம் "சள்புள்" என்று விழுந்து கொண்டோ கிடக்காமல், ஒரு 3600 அணுகுமுறையைக் கைக்கொள்ள வேண்டும்.
"இங்கிதம்" என்ற சொல்லுக்குத் தகுந்த பொருளாக திரு. ஹரிகிருஷ்ணன் அவர்கள், "பாஞ்சாலி சபதம்" காவியத்திற்கு அவர் எழுதியுள்ள உரையில் குறிப்பிடுவது என்ன என்று பார்ப்போம்:-
1) குறிப்பு (Hint, sign, indication of feeling by gesture)
2) கருத்து (purpose, object)
3) இனிமை,
4) சமயோசிதம் உடைமை (good manners).
இந்த "சமயோசிதம் உடைமை" என்பதை "இன்னதுதான்" என்று வரையறுத்துச் சொல்ல முடியாது. அது அதன் அடிப்படையின்படி "சமயத்"திற்கு ஏற்றாற்போல் மாறுபடும். ஒரு குறிப்பிட்ட நிகழ்வின்போது, அதன் கால, தேச, வர்த்தமானத்தில் (set of circumstances) சரியாக இருக்கும் ஒரு செயல்பாடு, இன்னொரு கால கட்டத்தில் தவறாக அமையும். ஆனால் எக்காலத்திற்கும் பொதுவான சில கோட்பாடுகள் இருக்கின்றன - செயல்முறைகள், ஏற்க வேண்டியவை, தவிற்க வேண்டியவை என்று சில உள்ளன. அவை சின்னஞ்சிறு விஷயங்களாக இருக்கலாம், ஆனால், அவை மனித மனத்தின் ஓட்டங்களைத் திசை திருப்பும் வல்லமை படைத்தவை என்பதால், அவற்றைக் கடைப்பிடித்தல் மிக அவசியமாகிறது. அவற்றில் சிலவற்றை இந்த வாரக் கட்டுரையில் அணுகுவோம்.
முதலில் ஒரு silly விஷயத்தைக் கவனிப்போம். ஷூவை நன்றாக பாலிஷ் செய்து போட்டுக் கொள்வது மட்டும் முக்கியமல்ல. அதன் உள்ளுறைகளையும் (socks) நன்கு துவைத்துச் சுத்தமாக அணிதல் வேண்டும். நம்மில் பலருக்கு "சாக்ஸை" சுத்தம் செய்தல் என்பது மட்டும் கைவராது. ஷூவைக் கழற்றும்போது சாக்ஸை அப்படியே உருவிச் சுருட்டி ஷூவுக்குள் திணித்து விட்டுச் செல்வோமேயன்றி, கையோடு அவற்றை துவைக்கப் போடமாட்டோம். அசுத்தமான உள்ளுறைகளால் நம்மைச் சுற்றி ஒரு துர்நாற்றம் வீசிக் கொண்டேயிருக்கும். உங்கள் "கப்பு" உங்களுக்கு முன்னால் கட்டியம் கூறிக்கொண்டே செல்லும். மேலும் உள்ளுறைகளில் "தொண்டி" இல்லாமலிருந்தால் நலம். ஏனென்றால், நாலு பேருக்கு முன்னால் ஷூவைக் கழட்ட வேண்டிய நிலை வரும்போது மானம் போகாமலிருக்கும்!
உங்களுக்கு "அணில் மார்க்" சுருட்டு மேலும் ("சுருட்டுவதிலும்" என்றா சொன்னேன், இல்லையே!), "தனா பீனா சொக்கலால் ராம்சேட் பீடி" மேலும் காதல் இருக்கலாம். அதற்காக அவற்றை ஒரு "தம்" வலித்து விட்டு, நேர்காணலுக்கோ, மேலதிகாரிகளை மற்றும் வேறு முக்கிய நபர்களைச் சந்திக்கவோ செல்லாதீர்கள். அதிலும் பெண்மணிகள் பெரும்பாலும் இந்த விஷயத்தில் நிறையவே sensitive-ஆக இருப்பார்கள் என்பதை எப்போதும் மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.
பெண்கள் பெரும்பாலும் தங்களுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்று பட்டியலிட்டுக் கொண்டே இருப்பார்கள். எனவே பெண்களிடம் வேலை ஆகவேண்டியிருந்தால், அவர்களுக்கு (உங்களுக்கு இல்லை!) என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பதையெல்லாம் திருப்பி சொல்லிக் கொண்டேயிருங்கள்! சலிக்காமல் கேட்டுக் கொண்டேயிருப்பார்கள்!
லேசாகப் "பூசின மாதிரி" இருக்கும் ("பூசணி மாதிரி" என்றா சொன்னேன்? ஏதாவது வம்பில மாட்டி விடறதிலேயே குறியா இருக்கீங்களே!) பெண்மணிகளிடம் "லேசாக இளைச்ச மாதிரி இருக்கே", என்று சொல்லுங்கள். புது டிரெஸ் என்று சொன்னால், "it is a bit slimming" என்று கூசாமல் (சிரிக்காமல்) சொல்லுங்கள். பெரும்பாலும் பெண்கள் தன் உடல் பருமன் விஷயத்தில் ஏதாவது குறைப்பட்ட வண்ணம் இருப்பார்கள். இது போல் யாராவது சொல்ல மாட்டர்களா என்று அவர்கள் மனத்தில் எதிர்பார்ப்புக்கள் இருக்கும்.
பெரிய மனிதர்கள் பலர் தன் குரலைத் தானே கேட்டுக் கொண்டு சந்தோஷப்படும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பர் (People who love to hear the sound of their own voice). "I this, I that" என்று அளந்து கொண்டிருப்பார்கள். அதுவும் நீங்கள் அவருக்கு அடங்கியவராகவோ, அல்லது ஏதாவது உதவி கேட்டு வந்தவராகவோ இருந்தால், நீங்கள் ஒரு captive audience ஆகிவிடுவீர்கள். உங்களுக்குக் கொட்டாவியாக வந்துகொண்டிருக்கும். ஆனால் அதை வெளிக்காண்பிக்கக் கூடாது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்ள வேண்டும். லேசாக தலையைத் திருப்பி அல்லது அதை செருமலுடன் கலந்து - இது மாதிரி ஏதாவதொரு வழியில் நம் சலிப்பை மறைக்க வேண்டும். என்ன செய்வது அய்யா, இந்தப் பாழும் உலகத்தில் பிறரிடம் பலவித வேலைகள் ஆக வேண்டியிருக்கிறதே!
இதுபோல் எந்தவித உடல் உபாதையையும் பொது இடங்களில் வெளிக்காண்பித்து அவமானப்படாமல் (to avoid such embarrassing situations), மறைத்து விட்டால் நல்லது. Fart file என்ற கோப்பில் சொல்லியிருப்பது போல "அபான வாயு" தன்னையறியாமல் escape ஆக முற்பட்டால், லேசாக இருமி அதை மறைக்க வேண்டும். இதெல்லாம் விவரமாகவா சொல்லிக் கொடுக்க முடியும்? சமயம் பார்த்து புத்திசாலித்தனமாகச் செய்ய வேண்டியதுதான்!
ஒருவரிடம் ஏதாவது உதவி கேட்பதற்காகச் செல்லும் போது, அவரைத் தனியாக இருக்கும்போது சந்தியுங்கள். யாரும் உடனிருக்கும்போது போகாதீர்கள். அவர்கள் ஏடாகூடமாக ஏதாவது குறுக்கு சால் ஓட்டி காரியத்தைக் கெடுத்து விடுவார்கள். "சார், டிரான்ஸ்ஃபர் ஆர்டரை கேன்சல் செய்யுங்க சார். பிள்ளைங்க படிப்பு கெட்டுப் போயிடும் சார்" என்று நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் போது, உங்கள் மேலதிகாரி அப்போ தான் "என்னடா இது, இவனை ரொம்ப கஷ்டப் படுத்தி விட்டோமோ" என்று கொஞ்சம் கழிவிரக்கம் கொள்ள ஆரம்பித்திருப்பார். அப்போது, அங்கே கூட இருக்கும் நபர் "ஏன், நீங்கள் போகும் இடத்தில்கூட நல்ல ஸ்கூலெல்லாம் இருக்கே" என்பார். போச்சுடா! என்ன ஆகும்? நல்ல வாய்ப்பு கைநழுவிப் போய்விடும். அந்த அதிகாரிக்கு இதுபோல் ஒரு escape route கிடைத்தால், விடுவாரா! அந்த "கூட இருந்த பிரகிருதி" உங்களுக்கு எதிரியோ, அல்லது அவர் பிறருக்குக் கெடுதல் செய்ய வேண்டும் என்கிற கெட்ட எண்ணம் கொண்டவரோ இல்லை. சில பேரால் வாய் என்னும் ஓட்டையை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. அவ்வளவதுதான். அதனால்தான் சொல்கிறேன். உதவி கேட்கும் போது தனியாகப் பிடியுங்கள் என்று. சில சமயம் இன்னொருவருடன் (as a strategy) பேசி வைத்துக் கொண்டு "நான் அங்கே இருக்கும்போது நீ அங்கே வா, நான் சிபாரிசு செய்து அவர் மனதை மாற்றுகிறேன்" என்ற set up - உடன் செயல் படுவது என்பது வேறு விஷயம்!
குறிப்பறிந்து பேசுங்கள். ஆனால் குறுக்கே பேசாதீர்கள். பெரிய மனிதர்களுக்கு, தான் பெசிக்கொண்டிருக்கும்போது குறுக்கே புகுந்து ("மதுரைப் பக்கம் "ஊடாயில" என்பார்கள்) "கட்" பண்ணி பேச முற்பட்டல் ரொம்பக் கோபம் வந்துவிடும். அவர்கள் ஈகோவை நீங்கள் மிதித்து விட்டது போல் துள்ளுவார்கள். அவர்கள் பேசிக்கொண்டே யிருக்கும்போது ஏதாவது கொஞ்சம் gap கொடுத்தால் இதுதான் சாக்கு என்று நீங்கள் பேச ஆரம்பித்து விடாதீர்கள். அந்த இடைவெளியில் ஏதாவது தன் மேதாவிலாசத்தைக் காண்பிக்க என்ன சொல்லலாம் என்று மூளையைக் கசக்கிக் கொண்டிருப்பார். இது தெரியாமல் நீங்கள் குறுக்கே புகுந்தால் அவர் எண்ணச் சங்கிலி தடைப்பட்டு கோபத்தை உண்டாக்கும். இது ஒரு subtle ஆன விஷயம்; ஆனால் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டியது ஆகும்.
முக்கிய நபரை சந்திக்கச் செல்லும்போது வெறுங்கையுடன் செல்லாதீர்கள். "அவர்களிடம் இல்லாததா, நான் என்ன கொண்டு போக முடியும்" என்று எண்ணாதீர்கள். யாராவது வந்தால் அவர்கள் கையில் என்ன இருக்கிறது என்று பார்ப்பது மனித இயற்கை. "இதெல்லாம் என்ன கெட்ட பழக்கம். எனக்குப் பிடிக்காது" என்றுதான் சொல்வார்கள். சிலர், "வேண்டவே வேண்டாம்" என்று மறுத்து விடுவார்கள். பரவாயில்லை. நீங்கள் கொண்டு போனதாக இருக்கட்டும். அவர் ஏற்காததாகவே இருக்கட்டூம். அதற்காக நீங்கள் கொண்டு போகாமல் இருக்காதீர்கள். இது என்ன நாடகம் என்று கேட்கிறீர்களா? இதுதானய்யா மனித இயற்கை! ஒருவர் வீட்டுக்குச் செல்வதற்கு முன்னால் அவருடன் யார் யார் வசிக்கிறார்கள் என்று விசாரித்து அதற்கேற்றாற்போன்ற பொருளுடன் செல்ல வேண்டும். வேலை, பணம், எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் - இதுபோன்ற முக்கிய சந்திப்புக்களின் போது, நல்ல பழங்களாகக் கொண்டு செல்லுங்கள். ஏதாவது சாலையோரத் தள்ளு வண்டியில் கிடைக்கும் அழுகல், அவிசல், வெம்பல் இதெல்லாம் வாங்கிச் செல்லாதீர்கள். வாங்கிய பொருட்களின் விலைச் சீட்டை கவனமாகப் பிய்த்து விடுங்கள். ஆனால் சில நேரங்களில் நிறைய விலை கொடுத்து வாங்கிய பொருள் என்று தெரிவிப்பது அவசியமாக இருக்கலாம். ஏனென்றால் அதேபோல் தோற்றமளிக்கும் மலிவு "மாலு"ம் கிடைக்கலாம் அல்லவா! இங்குதான் உங்கள் "சமையோசிதம்" வேலை செய்யவேண்டும்!
ரொம்பப் பெரிய மனிதர்கள் வீட்டிலெல்லாம் பெரும்பாலும் காப்பி, டீ முதலியவை அவ்வளவு நன்றாக இருக்காது. ஏனெனில் அங்கு யாராவது வேலைக்காரர்கள்தான் அவற்றைத் தயார் செய்வார்கள். "இதுகளுக்கெல்லாம் காப்பி போட்டுக் கொடுக்க வேண்டியிருக்கிறதே" என்ற சலிப்புடன் போட்ட காப்பி, பின் எப்படி இருக்கும்! ஆனால் அந்தப் பெரிய மனிதரோ, "எங்க வீட்டுக் காப்பி மாதிரி எங்கேயும் கிடைக்காது. நேத்தைக்குக் கூட ஹைகோர்ட் ஜட்ஜு வந்து, 'உங்க காப்பி குடிக்கணும்னுதான் டில்லியிலேர்ந்து வந்தேன்' என்று ரெண்டு கப் கேட்டு வாங்கி சாப்பிட்டு விட்டுப் போனார்" என்று பட்டம் விடுவார். நீங்கள் அப்போதுதான் அந்த விளெக்கெண்ணையை முழுங்கிக் கொண்டிருப்பீர்கள். கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் அதை முழுவதும் விழுங்கி விட்டு, அந்த ஜட்ஜை விட ஒரு படி மேலே போய் பொய்மூட்டையை அவிழ்த்து விட்டு, "நானும் இன்னொரு கப் கேட்டிருப்பேன். ஆனால் இந்தப் பாழும் ஆயுர்வேத மருந்து சாப்பிடறேனா, காப்பி சாப்பிட்டாலே ஒத்துக்க மாட்டெனென்கிறது. எங்கேயும் ஒரு சொட்டு கூட செல்லாது, உங்கள் வீட்டுக் காப்பியாயிற்றே என்று ஒரு கப் சாப்பிட்டென்" இந்த மாதிரி முக மலர்ச்சியுடன் convincing - ஆக உங்களால் சொல்ல முடிந்தால், நீங்கள் ஒரு Managing Director material!
சரி இதோடு விட்டுவிடுமா, இதற்கு மேலும் டார்ச்சர் காத்துக் கொண்டிருக்கும். அவர்கள் வீட்டு "மேம் சாஹிப்" பெயிண்ட் பண்ணியிருப்பார்கள். அதையெல்லாம் நீங்கள் பார்வையிட்டு, கண்களை அகல விரித்து, வாயைப் பிளந்து, "ரவி வர்மா, ஹுசைன்" என்று உங்களுக்குத் தெரிந்த பெரிய ஓவியர்களின் கலைவண்ணங்களை "விஞ்சும் வகையில் இருக்கிறது" என்று சொல்ல வேண்டும். இந்த மாதிரிப் புகழ்ச்சியில் ஈடுபடுவதிலும் ஒரு கலை நுணுக்கத்துடன் செய்ய வேண்டும். நேரடியாக உப்புத்தாள் கொண்டு தேய்க்கக் கூடாது. இதிலும் ஒரு நிபுணத்துவம் வேண்டும். subtle and suggestive ஆகச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கிண்டல் செய்கிறீர்கள் என்று எண்ணிவிடுவார்கள். "இன்னும் கொஞ்சம் நேரம் செலவழித்து இதில் இன்னும் ஈடுபட்டால் பெரிய ஓவியர்களை மிஞ்சி விடுவீர்கள்" ("ஜல்ல்ல்ல்ல்'!) என்றொரு பல்லவியைப் போடவேண்டும். உடனே அந்த அம்மாள், "எனக்கு எங்கே நேரமிருக்கிறது இதெற்கெல்லாம்" என்று ஆரம்பிப்பார். அவ்வளவுதானே, அதற்கேற்றாற்போல் சரணம் பாடிவிடவேண்டியதுதான்!
இன்னும் சிலரது வீட்டில் குட்டிப் பிசாசுகள் பாட்டுப் பாடிப் படுத்தும். "என் பெண் கர்நாடக சங்கீதம் கத்துக்கிறாள். சுதா கூட முந்தா நாள் கேட்டுவிட்டு 'உங்கள் பெண்ணுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு' என்று ஆசீர்வாதம் செய்து விட்டுப் போனார்" என்று சொல்லி அந்தப் பெண்ணை அழைத்து, "அம்மா சின்னக் குட்டி, இவருக்கு ரெண்டு உருப்படி பாடிக் காண்பி" என்பார். உடனே அந்த சின்னக் குட்டி (என்னக் குட்டி?) "எனக்கு தொண்டை என்னமோ செய்யறது. இப்போ போய் பாடச் சொல்றீங்களே, இன்னொரு நாள் பார்க்கலாம்" என்பார். இதே கதையை இதுவரை 100 தடவையாவது கேட்டிருக்கிறேன். இந்த பதிலுக்கு என்ன பொருள் தெரியுமா? இது ஒரு cue தான். உடனே நீங்கள், "பரவாயில்லை அம்மா. ஒரு வர்ணமாவது பாடுங்கள். நீங்கள் நன்றாகப் பாடுகிறீர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்" என்று பிடிவாதம் பிடிக்க வேண்டும். ரொம்ப கிராக்கி பண்ணி, ஒரு மாதிரியாக "ஸா பா ஸா"வுடன் ஆரம்பிப்பார்கள். அவ்வளவுதான். நீங்கள் பாவம்! உங்களுக்கு Cacophonix, the bard நினைவுக்கு வருவார்! இந்த டெஸ்டில் பாஸ் செய்து விட்டீர்களானால் இந்த உலகில் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.
"சும்மா ஷூவோடவே உள்ளே வாங்க, பரவாயில்லை" என்று சொன்னாலும், ஷூவைக் கழட்டி விட்டு இன்னொருவர் வீட்டுக்குள் செல்லுங்கள். உங்களைப் பற்றிய மதிப்புக் கூடும். நமக்கும் சில value systems இருக்கின்றன என்பதைக் காண்பிப்பதும் ரொம்ப முக்கியம். நம்மிடம் பழக்கம் வைத்துக் கொள்வதை அவர்கள் தமக்கு ஒவ்வாத ஒன்றாக நினைக்கக் கூடாது.
எந்த நேரத்திலும் தம் நிலை மறக்காத மனப்பாங்கு வேண்டும். We must know our bearings. நெருங்கிப் பேசுகிறார்களே என்று பெரிய மனிதர்களிடம் ரொம்பவும் ஈஷிக்கொள்ளக் கூடாது. "இதென்னடா இது, 'தோ தோ' என்றால் மூஞ்சியை நக்குகிறதே" என்று அவர்கள் ஒரு நேரமில்லாவிடாலும் ஒரு நேரம் வெறுப்படையக் கூடும்.
இதெல்லாம் ஒரு deception அல்லவா - இது போல் ஏமாற்று வேலையெல்லாம் எதற்கு என்கிறீர்களா? இதெல்லாம் ஒருவகை மேனேஜ்மெண்ட் டெக்னிக் தான் நண்பர்களே. நம் சுற்றுப்புறத்தை மேனேஜ் பண்ணுவது நம் வேலை தானே. மற்றவர்கள் குண விசேஷத்திற்குத் தகுந்தாற்போல், சிறிய மாறுதல்கள் செய்துகொண்டு raw-வாக இல்லாமல், ஒரு ருசியாக சமைத்த உணவாக நம் personality - ஐ பிறருக்கு அளிக்கிறோம். அவ்வளவுதான்!
No comments:
Post a Comment