பதில் இல்லாத கேள்வி
சிறு வயதில் குருகுல வாசத்தை விட்டு நான் வெளியிலே வந்த போது, கோழிக்குஞ்சு முட்டையில் இருந்து வெளிவந்தது போல் தான் இருந்தேன்.
`நான் யார்’ என்பதே எனக்கு தெரியாது. விபரம் தெரியாத நிலை; பக்குவமற்ற சூழ்நிலை.
காபி ஓட்டல்களையும், தியேட்டர்களையும் கூட ஆச்சரியமாகப் பார்க்கின்ற சூழ்நிலை.
குருகுலம், நல்ல பண்பாடுகளையும், பழக்க வழக்கங்களையும் கற்பித்தது என்றாலும், வெளி உலகத்தைக் காண விடாமல் வைத்திருந்தது.
ஆகவே, தெளிந்த இதயத்தோடும் உலக அனுபவம் அற்ற நிலையிலும் நான் வெளியே வந்தேன்.
வந்ததிலும் தவறில்லை; நான் வாழ்ந்ததிலும் தவறில்லை; ஆனால், ஒரு முக்கியமான கேள்விக்கு விடை காண முடியாமல் தவித்தேன்.
அந்தக் கேள்வி என்ன?
"நான் யார்?” என்பதே அது. நான் யார்?
அண்ட சராசரங்கள் அனைத்துமே அதைத்தான் கேட்டுக் கொள்கின்றனவாம்!
மனிதன் அறிய வேண்டிய அறிவுகளில் எல்லாம் முக்கியமான அறிவு, தன்னை அறிதலே.
ஒவ்வொரு விலங்கும், ஓரளவுக்குத் தன்னை அறிகின்றது.
பருந்து பாய்ந்து வந்தால், கோழி ஆத்திரப்படுகின்றது.
நாயை கண்டதும், முயல் ஓடுகிறது.
புலியைக் கண்டதும், மான் ஓடுகிறது.
உயிரின் மீது உள்ள இந்த நாட்டம், ஓரளவுக்குத் தன்னைப் பற்றிய உணர்வே ஆகும்.
ஆனால், இந்த உணர்வு வேறு; தான் யார் என்று அறிந்து கொள்ளும் அறிவு வேறு.
தாயினாலும், தகப்பனாலும் நாம் இந்த பூமிக்கு வந்து விட்டோம். ஆனால், ஏன் வந்தோம்; நம் வருகைக்கான நோக்கம் என்ன என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
வந்தோம், வாழ்ந்தோம், மடிந்தோம் என்று பல பேர் மடிந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் வரவு- செலவு பார்த்திருக்கிறார்கள்.
சிலர் காதலித்து, வெற்றி காண முடியாமல் மாண்டிருக்கிறார்கள்.
சிலர் மணம் முடித்து, மக்களைப் பெற்று அவதிப்பட்டு இறந்திருக்கிறார்கள்.
சிலர், `பதவி பதவி’ என்று அலைந்து செத்து இருக்கிறார்கள்.
சிலர், `உதவி உதவி’ என்று ஓடி, ஆடி உயிரை விட்டிருக்கிறார்கள்.
இவர்களிலே, `தான் யார்’ என்பதைக் கண்டு கொண்டு உலகிற்குச் சொல்லிவிட்டு, மறைந்த ஞானிகள் எத்தனை பேர்?
அவர்கள் பெரும் கூட்டமாக இல்லை; விரல் விட்டு எண்ணக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள்.
நான் யார்?
சினிமாப் பாட்டு எழுதுகிறானே, அந்தக் கண்ணதாசன் தானா நான்?
தொடர்கதை எழுதுகிறானே, அந்தக் கண்ணதாசன் தானா நான்?
மதுவிலும் சிற்றின்பத்திலும் மயங்கிக் கிடப்பவன் தானா நான்?
அரசியல் வாண வேடிக்கையில் அடிக்கடி பங்கு கொள்கிறவன் தானா நான்?
நல்லது கெட்டது பாராமல் நடக்கும், ஒரு முரட்டு மாடுதானா நான்?
இன்றைக்கு ஐம்பத்திரண்டு தீபாவளிகளைக் கொண்டாடி, அடுத்தது என்ன என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நான் யார்?
நான் ஏன் பிறந்தேன்?
நான் விரும்பிப் பிறக்கவில்லை என்றாலும், இதுவும் ஒரு நியாயமான கேள்விதான்.
இயற்கையின் நியதியில் சூரியனுக்கும், சந்திரனுக்கும், நட்சத்திரங்களுக் கும் நோக்கம் இருக்கும்போது, என் பிறப்புக்கும் ஒரு நோக்கம் இருந்தாக வேண்டும்.
அது எனக்குப் புரியவில்லையே தவிர, ஏதோ ஒரு லட்சியத்துக்காகவே நான் சிருஷ்டிக்கப்பட்டு இருக்கிறேன் என்பது உண்மை.
ஒவ்வொரு ஜீவனும், ஒவ்வொரு லட்சியத்திற்காகவே படைக்கப்பட்டு இருக்கின்றன.
ஜீவனற்ற அஃறிணைப் பொருளும் அவ்வாறே.
தண்ணீர் தாகத்தைத் தீர்க்கவும், வயல்களை வளப்படுத்தவும், உணவுப் பொருள்களுக்கு உரமாகவும் படைக்கப்பட்டு இருக்கிறது.
அந்தத் தண்ணீரில் வாழும் மீன் அழுக்கைத் தின்று நீரைச் சுத்தப்படுத்தவும், மனிதனுக்கும், பறவைகளுக்கும் ஆகாரமாகவும் படைக்கப்பட்டு இருக்கிறது.
ஒரு காக்கையின் பிறப்புக்கு கூட ஒரு சிறிய காரணம் இருக்கிறது.
அப்படி என்றால், என் பிறப்புக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டுமே?
காலையில் இட்லி, தோசை; மத்தியானம் சாப்பாடு; ராத்திரியில் மீண்டும் பலகாரம்; இதற்காகவா நான் படைக்கப்பட்டேன்?
தமிழில் எல்லாச் சொல்லுக்கும் பொருள் உண்டு என்று சூத்திரம் சொல்கிறது. அது போலவே எல்லா ஜீவனுக்கும் காரணம் உண்டு.
நான் முன்பே சொன்ன சனத்குமாரர்- நாரதர் கதை தான்.
எல்லாம் தெரிகிறது எனக்கு; என்னைத் தெரியவில்லை.
கண்ணாடியில் முகம் தெரிகிறது; மனம் தெரியவில்லை.
யோசித்துப் பார்த்தால் மனம் தெரிகிறது. ஆனால் அது ஏன் படைக்கப்பட்டது என்பது தெரியவில்லை.
ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாகப் பற்றிக் கொண்டே போனாலும் கூட, நான் படைக்கப்பட்டதன் மூலக் காரணத்தை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை.
`இப்படித்தான் இருக்கும், இதற்காகத்தான் இருக்கும்’ என்று ஒரு காரணத்தை நானே வகுத்துக் கொண்டு, என்னை நானே அறிய முற்படுகிறேன்.
இந்த ஒரு ஆன்மா, ஒரு லட்சம் ஆன்மாக்களுக்காவது வழிகாட்ட வேண்டும் என்பதற்காகவே, நான் படைக்கப்பட்டு இருக்கிறேன்.
நன்மை- தீமை புரியாமல், நியாய அநியாயம் தெரியாமல் தடுமாறும் மானிட ஜாதிக்கு, ஒரு அரிக்கேன் விளக்கையாவது ஏற்றி நான் வழிகாட்டியாக வேண்டும்.
நீதி சொல்வதில், நான் வள்ளுவனாக முடியாது. ஏன்? இன்னொரு வள்ளுவன் பிறக்கவே முடியாது.
ஆனால், என் அனுபவம் சுட்டிக் காட்டுகிற நீதிகளில் வள்ளுவன் சொல்லாததும் இருக்கக்கூடும்.
தர்மோபதேசம் செய்வதில் நான் வடலூர் வள்ளலாராக முடியாது. ஏன், இன்னொரு வள்ளலார் இந்தத் தலைமுறையில் பிறக்கப் போவதும் கிடையாது.
ஆனால், என் உடலில் பட்ட காயங்களில் வள்ளலார் காணாத காட்சிகளும் இருக்கக்கூடும்.
நான் நீண்ட தூரப் பிரயாணி.
மலைச் சரிவுகளிலும் பயணம் செய்து இருக்கின்றேன். சமவெளிகளிலும் பயணம் செய்திருக்கின்றேன்.
நான் யார் என்பது தெரியாத பிரக்ஞையற்ற நிலையிலேயே, அனுபவங்களைச் சேகரித்து இருக்கிறேன்.
இந்த உலகத்தை ஓரளவு எனக்குத் தெரியும்.
நான் எழுத்தாளனாக இருக்கிறேன்; ஆகவே, வறுமையை அறிவேன்.
அரசியலில் இருந்திருக்கிறேன்; ஆகவே, அயோக்கியத்தனம் என்ன என்பது புரியும்.
கலைத்துறையில் இருந்திருக்கிறேன்; ஆகவே, ஏற்ற இறக்கங்களை அறிவேன்.
எப்படி எல்லாம் வாழக்கூடாதோ, அப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறேன்.
ஆகவே, இப்படித்தான் வாழ வேண்டும் என்று புத்தி சொல்லக்கூடிய யோக்கியதை எனக்கு உண்டு.
முதன் முதலில் நான் நாத்திகனாக இருந்த காலங்களை எடுத்துக் கொள்கிறேன்.
இப்போது நான் நாத்திகன்.
`கடவுள் இல்லை’ என்று மிகவும் அழுத்தம் திருத்தமாக நாக்கு வலிக்கச் சொல்லும் ஒரு நாத்திகன்.
என் பின்னால் வாருங்கள்.
No comments:
Post a Comment