Thursday, April 10, 2014

ராமாயணம் காட்டும் நல்வழிப்பாதை

ராமாயணம் காட்டும் நல்வழிப்பாதை

கௌசல்யைசீதா தேவிராமர்ராமாயணம்
பக்தியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் வெளிப்படுத்துகிறோம். நிறைய பணம் செலவழித்து, அபிஷேகங்கள் செய்து இறைவனை வழிபட்டால்தான் நமக்கு அருள் கிடைக்கும் என்பதில்லை. பக்தியுடன், தன் வீட்டிலேயே பூஜைக்குரிய மலரை அர்ப்பணித்து, தன் இஷ்ட தெய்வத்தை அர்ச்சித்தலே மிகச்சிறந்ததாகும்.

ஒரு நாளே வாழ்ந்து, வாடிடும் மலரை இறைவனுக்கு ஒரு வேளை அர்ச்சித்தால்போதும். வாழ்நாள் முழுவதும் நம்மை வாடாமல் வைத்திருப்பான் பேரன்புடைய இறைவன். ஓர் ஆண் எத்தனை புண்ணியங்கள் செய்தாலும், தன் பத்தினியை வருந்தச் செய்தால், அப்புண்ணியங்கள் எல்லாமே வீண்தான். வயதான பிறகும்கூட ஆண்கள் தனக்கு மட்டும் வயதாகிவிட்டது. ஆனால் மனைவி வழக்கம்போல் தனக்கு எல்லா பணிவிடைகளுமே செய்ய வேண்டும் என்று கருதாமல், மனைவிக்கும் வயதாகிறது என்று நினைவில் கொண்டு, மனைவியைக் கஷ்டப்படுத்தக்கூடாது.

நிதி மற்றும் நாணயம் பற்றிய நுணுக்கங்களை, இரண்டாயிரம் ஸ்லோகங்களில் கூறும் “அர்த்த சாஸ்திரம்’ நூல் கூட, மன அமைதிக்கும், சுகத்துக்கும் வழி சொல்லவில்லை. பெரியவர்களும், அறநூல்களும் கூறியுள்ள தர்மங்களைக் கடைப்பிடித்து மட்டுமே அவற்றைப் பெறலாம் என்று சொல்கிறது.

மனிதர்கள் வாயில்லா ஜீவன்களை வதைத்து, தாயிடமிருந்து பிரித்துக் கொடுமைப்படுத்துவது பெரும்பாவச் செயலாகும். ராமர் காட்டிற்கு செல்லும்போது, அவரைப் பிரிந்து வாடிய தசரதர், “நான் முற்பிறவியில் பிராணிகளையும், பறவைகளையும், மனிதர்களையும் அவரவர் தாயிடமிருந்து பிரித்துப் பாவம் செய்ததால்தான், இப்பிறவியில் என் மகனைப் பிரிந்து வாடுகிறேன்’ எனக் கதறி கண்ணீர் விடுகிறார்.

ஒருவர் புதியதாய் வீடு கட்டியபோது, விளையாட்டாய் தோட்டத்தில் பதித்த தென்னங்கன்று, அவருடைய உழைப்பும், கவனிப்பும் இல்லாமலேயே தானே வளர்ந்து தென்னை மரமாக இளநீரையும், தேங்காயையும் கொடுத்து, அவருக்கு நல்ல பலனை அளிக்கிறது. அதுபோலவே நாம் செய்யும் நல்ல செயல்கள் தொடர்ந்து மறுபிறப்பிலும் வந்து பெரிய பலன்களை எந்த முயற்சியும் இல்லாமலே கொடுக்கிறது.

கெளசல்யை ராமனுடன் காட்டுக்குச் செல்லும் சீதையிடம், ராமன் காட்டில் துன்பப்படும்போது, உடனிருந்து அவன் எந்தவிதத்திலும் அவமானப்படாதபடி நன்கு கவனித்துக்கொள்ளல் வேண்டும் என்று அறிவுரை சொன்னாள். அதற்கு சீதை,”"ஒரு பெண்னுக்கு கணவன்தான் பெருமையளிப்பவன். என்னதான் தங்கத்தால் வீணை செய்தாலும், அதிலிருக்கும் செப்புக் கம்பிதான் நல்ல நாதத்துக்கு அஸ்திவாரம் ஆகிறது. எவ்வளவு அழகு செய்யப்பட்டாலும் தேருக்கு அதன் மரச்சக்கரமே மிக முக்கியமாகிறது. ஆகவே என் கணவரை நான் தெய்வமாகக் கொண்டாடுவேன்” என்கிறாள். இதைக் கேட்ட கெளசல்யை மனம் நெகிழ்ந்து போகிறாள். இந்தச் சம்பவத்தை வால்மீகி மிக அழகாக வர்ணித்துள்ளார்.

No comments:

Post a Comment