Monday, February 6, 2017

வேலை - வாழ்க்கை... இரண்டையும் சமச்சீராக கொண்டாட 4 ரகசியங்கள்!

கட்டுரையை படிப்பதற்கு முன்பு ஒரு பேப்பரையும், பேனாவையும் எடுத்துக்கொண்டு அமர்ந்து விடுங்கள். வாட்ச்சை பார்க்காதீர்கள். அதிகபட்சம் இரண்டு மூன்று நிமிடங்களில் கட்டுரையும் ஆக்டிவிட்டியும் முடிந்துவிடும். என்ன பேப்பர் எடுத்தாச்சா பாஸ்?

சரி, நாம் ஏன் வேலை செய்கிறோம்  என என்றாவது நீங்கள் உங்கள் மனதுக்குள் கேட்டதுண்டா? உணவு, உடை, குடும்பத் தேவைகள், உறக்கம், பாதுகாப்பாக  தங்குவதற்கு தேவையான இடம், போக்குவரத்து, தொலைத்தொடர்புகள், ஆகியவை தான்  நமக்கான அடிப்படைத் தேவைகள். இந்த தேவைகளுக்கு பணம் வேண்டும் அதற்கு நாம் எதோ ஒரு வேலையை தேர்ந்தெடுத்தது உழைத்துச் சம்பாதிக்கிறோம். அப்படி உழைத்த பின்பும் நிம்மதியில்லை என ஏன் நாம் புலம்புகிறோம்?  அதற்கு காரணம் நாம் தான். 

இந்த கார்ப்பரேட் யுகத்தில் பிடித்தோ, பிடிக்காமலோ ஒரு இயந்திரம் போல நாம் வேலை செய்ய பழகிவிட்டோம். 
 குழந்தையாக இருந்தால் சுட்டித்தனம் பண்ணிக்கொண்டு வீட்டில் இருக்கக்கூடாது சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னரானால்தான் நல்ல குழந்தை என எண்ணுமளவுக்கு வாழ ஆரம்பித்திருக்கிறோம். பேஸ்புக்கில் நம் போட்டோவுக்கு எவ்வளவு லைக்ஸ் வருகிறது என்பதை பார்த்து தான் நம் அழகை பற்றி நாம் சுயமதிப்பீடு செய்கிறோம். ஆக இந்த கார்ப்பரேட் கலாச்சாரத்தில் நம்மை இயக்குவது நாம் கிடையாது.

இப்படிப்பட்ட வேலையையும், குடும்ப சூழலையும் எப்படி கையாளுவது என்பதே பலருக்கு புரியாத புதிராக உள்ளது. வேலையையும், வாழ்க்கையையும் ஒரே சமநிலையில் வைத்திருக்க இந்த நான்கு மந்திரங்கள் உங்களுக்கு கைகொடுக்கும். இவை உங்களின் செக் லிஸ்டில் இருந்தால் நீங்கள் மிஸ்டர் ஃபர்பெக்ட் பாஸ்! 

1. பிடித்த வேலையைத் தான் செய்வேன்!

உங்கள் வேலையை நீங்கள்  சிறப்பாக செய்யவேண்டுமெனில் நீங்கள் உங்களுக்கு பிடித்த வேலையை தேர்ந்தெடுப்பது தான் ஒரே வழி என்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ். நமக்கு பிடித்த வேலை எவ்வளவு உயரமானதாக, சாத்தியம் குறைந்ததாக இருந்தாலும் அதை எட்டிப்பிடிக்கவேண்டியது நாம் தான். நமக்கு பிடித்த வேலையை நாம் செய்யவில்லை என்றால் நாம்  வாழ்க்கையில் சரியான பாதையில் பயணிக்கவில்லை என்று பொருள். வெற்றிக்கு ஒரே வழி கடினமாக உழை என சிறுவயதில் ஆசிரியர்கள் சொல்வார்கள்.ஆனால்  கடினமான உழைப்பை விட புத்திசாலித்தனமான உழைப்பு தான் ஒருவனுக்கு உயர்வை தரும். புத்திசாலித்தனமாக வேலை செய்யும் ஒருவனால் மட்டுமே எந்தவொரு வேலையையும் குறித்த நேரத்துக்குள் முடிக்க இயலும். நமக்கு பிடித்த விஷயத்தை மட்டுமே இயல்பாக நாம் புத்திசாலித்தனமாக யோசித்தது செயல்படுவோம். எனவே உங்களுக்கு எந்த வேலை பிடிக்குமோ அதை தேர்ந்தெடுத்தாலே பாதி ஸ்ட்ரெஸ் காலி. 

2. நேர மேலாண்மை 

வேலை செய்வது என்பது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்குத்தான். ஆனால் அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்யக்கூட நேரமில்லாமல் உழைப்பதில் எந்த பயனும் இல்லை. அம்மாவிடம் நலம் விசாரிக்கவோ, குழந்தைக்கு ஆசை முத்தம் தரவோ கூட நேரமில்லாமல் உழைத்து என்ன பிரயோசனம். எனவே ஒரு நாளில் உங்களது வேலையை பொறுத்தது இவ்வளவு நேரம் தான் வேலைக்கு செலவழிப்பேன் என உறுதியெடுங்கள். ஒரு மெஷின் போல உழைத்தால் உங்களை  ஒரு இயந்திரமாக மட்டுமே அலுவலகமும், வீட்டில் இருப்பவர்களும் கருதுவார்கள் எனவே வேலைக்கும், குடும்பத்துக்கும் எப்போதும் துரோகம் செய்யாமல் நேர்மையாக இருங்கள். வாழ்வு வளமாகும்.

3. குடும்பம் முக்கியம் 

வீட்டில் இருக்கும் உறவுகளுக்கு எப்போதும் போதிய முக்கியத்துவம் கொடுக்க தயங்காதீர்கள். குறிப்பாக அம்மா- அப்பா,  உங்கள் பார்ட்னர், குழந்தைகள் ஆகியோருக்கு  முக்கியத்துவம் கொடுங்கள். உங்கள் மேல் அக்கறை கொண்ட குடும்பத்தினர் மேல்  நீங்களும் அக்கறை உள்ளவராக மாறுங்கள். ஒவ்வொரு மாதமம் சராசரியாக நான்கு நாட்களாவது  குடும்பத்தோடு செயல்படுங்கள். வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் வாட்ஸ் அப், பேஸ்புக், மெயில் போன்றவற்றுக்கு அதிக முக்கியதத்துவம் கொடுக்காதீர்கள். அலுவலக உறவுகளை அலுவலகத்தோடு முடித்துக்கொள்ளுங்கள்.அலுவலக வேலையை எக்காரணம் கொண்டும் வீட்டில் செய்யாதீர்கள்.சமூக வலைதள நண்பர்களுடன் அதிகபட்சம் ஒரு மணிநேரத்துக்கு மேல் செலவிடாதீர்கள்.இணையத்துக்கு முடிந்தவரை  வீட்டில் தடை போடுங்கள். குடும்பத்தோடு ஒன்றாக இணைந்து சாப்பிடுங்கள். சுகமோ, துக்கமோ மனம் விட்டு வீட்டில் உள்ளவர்களிடம் பேசுங்கள். பெரும்பாலான விவாகரத்துக்கு காரணமே கணவன் மனைவியை மதிக்காததும், மனைவி கணவனை மதிக்காததும் தான். எனவே விட்டுக்கொடுத்து புரிதலோடு வாழுங்கள். குழந்தைகள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். கேண்டிகிரஷ்ஷுக்கு பதிலாக உங்கள் குழந்தைகளோடு விளையாடுங்கள். ஒருவர் வீட்டில் சந்தோஷமாக இருந்தால் அலுவலகத்தில் வேலையை திறம்படச்செய்ய முடியும் என்பது சைக்காலஜி ரகசியம். 

4. உங்களை மீட்டெடுங்கள்

உங்கள் பயணம் எதை நோக்கியது?  உங்களுக்கு பிடித்தது எது? உங்களுக்கு பிடிக்காதது எது? என உங்களை பற்றி முதலில் நீங்களே ஒரு தாளில் நேர்மையாக எழுதுங்கள். இப்போது உங்களை எப்படி வடிவமைக்க வேண்டுமோ அப்படி வடிவமையுங்கள். உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் தான் கதை, திரைக்கதை, இயக்கம் எல்லாம் செய்ய வேண்டும். உங்களுக்கு உங்களை பிடிக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள். உங்களுக்கு  உலக சினிமா பார்க்கும் விருப்பம்  இருந்தாலும் சரி, பிரியாணி செய்ய வேண்டுமென ஆசை இருந்தாலும் சரி, எது ஆரோக்கியமான விஷயமோ அதை நிச்சயம் செய்யுங்கள். தினமும் உங்களுக்கென தனி நேரம் ஒதுக்குங்கள். அந்த நேரத்தை உங்கள் கேரியர் வளர்ச்சிக்கோ, பொழுதுபோக்குக்கோ  எதுவாக வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அது உங்கள் விருப்பம்.

No comments:

Post a Comment