செல்வம் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களை பார்த்து, பொறாமைபடத் தெரிந்த அளவிற்கு, அவர்களது வெற்றி ரகசியங்களை அறிந்து கொள்ளத் தெரியவில்லை நம்மவர்களுக்கு!
'எவ்வளவு தேறும் இவருக்கு...' என்று கேட்கத் தெரிந்த அளவிற்கு, 'இவர்களைப் போல நாமும் வர வேண்டாமா...' என்று உந்து சக்தியாக பயன்படுத்திக் கொள்ளத் தெரிவது இல்லை.
சிலருடைய அபார வளர்ச்சிகளை பார்க்கும்போது, வெற்றியின் காரணங்கள் பிடிபடுவதில்லை.
'எப்படித்தான் இந்நிலைக்கு வந்தனரோ...' என்று, நம்மை ரொம்பவே யோசிக்க வைக்கின்றனர்.
'சிபாரிசுக்கும், பொருளாதார உதவிக்கும், இவர்கள் எந்த அளவுக்கு நமக்கு பயன்படுவர்...' என்று தான் இவர்களை சுற்றியிருப்போர் கணக்கு போடுகின்றனரே தவிர..
எத்தகைய தனித்திறமைகளால்,
தங்கள் நிலைகளை தக்க வைத்தோ, உயர்த்திக்கொண்டோ செல்கின்றனர் என்கிற ஆராய்ச்சியில், இறங்குவது இல்லை.
நன்கு வளர்ந்தவர்களைப் பொறாமைக் கோணத்துடன் பார்ப்பது வயிற்றில் வைக்கப்படும் நெருப்பை போன்றது.
இது வயிறெரியத்தான் பயன்படுமே தவிர, வேறு பயன் இல்லை.
'என்னோட தான் படிச்சான்;
எப்பவும் கடைசி பெஞ்சுல தான் உட்காருவான்.
இன்னைக்கு என்னடான்னா,
எங்கேயோ போயிட்டான். வயிறு பத்திக்கிட்டு எரியுது...' என்று பள்ளித் தோழர் ஒருவர், காதில் புகை வெளிவரும்படி எட்டி நின்று பேசினால், அவர் இன்னும் கீழே போகப் போகிறார் என்று தான் பொருள்.
மாறாக, நெருப்பை நெஞ்சில் வைத்து, அந்த நெருப்பை, நம் வாழ்க்கை நிலை எனும் வாகனத்தை, முன்னோக்கி தள்ளும் எரிசக்தியாகப் பயன்படுத்த வேண்டும்.
'வாடா நண்பா... நல்லா வந்துட்டே...
உன் கூட படிச்சேன்னு சொல்லிக்கவே பெருமையா இருக்கு.
எனக்கும் வாழ்க்கையில் எப்படி ஜெயிக்கிறது, உன்னைப் போல எப்படி முன்னுக்கு வர்றதுன்னு சொல்லித் தரக் கூடாதா...' என்று அண்டிச்சென்று கேட்கிற அணுகுமுறை, எத்தனை பேருக்கு இருக்கிறது?
இப்படி கேட்டே விட்டார் ஒருவர்... உடனே, இதை பாராட்டாகவும், பூரிப்பாகவும் எடுத்து கொண்ட
பால்ய நண்பர்,
'நல்ல நேரத்தில் வந்தே... கர்நாடகத்துல ஒரு கிளை திறக்கலாம்ன்னு முடிவு செய்து, யாரை போடலாம்ன்னு யோசிச்சிக்கிட்டிருந்தேன்.
நீதான் என், 'மேனேஜிங் பார்ட்னர்' ஓ.கே. வா?'' என்று கேட்க, திக்கு முக்காடி போனார் நம்மவர்.
இந்தளவிற்கு எல்லாராலும் நிர்வாக பங்குதாரராக முடியாவிட்டாலும், நெருங்கி பழகவாவது இடம் கொடுக்க, இந்த வாய்ப்பை கொண்டே, இவரது வெற்றி சூத்திரங்களை தெரிந்து கொண்டு விடலாம்.
பின் என்ன... புழுவாகக் கிடந்தவர்களின் உடலில், புலியின் ரத்தம் ஏறிய கதைதான்.
'நம்மை பார்த்து பொறாமைப் படும் கூட்டத்தில், இதோ என்னை கதாநாயகன் போல எண்ணி வியக்க ஒருவன் இருக்கிறான்; இவனுக்கு, நம் இதயத்தில் இனி நல்லிடம் தான்...' என்று வளர்ந்தவர்கள் இடம் கொடுக்க,
வியந்து பேசியவர் வாழ்க்கையில், புது அத்தியாயம் ஆரம்பிப்பது உறுதிதான்.
'அதெல்லாம் முடியாது... இவன் கிட்டப்போய் எவன் நிப்பான்; நான் மானஸ்தன், தன்மானம் கொண்டவன்...' என்கிற வீராப்பு மனநிலை இருக்குமானால், எட்டி நின்று இவரது வளர்ச்சிகளை வியந்து நோக்கலாம்.
மேல்தட்டு மக்களிடம், நான் பார்த்து வியந்த விஷயங்களை உங்களிடம் கூறுகிறேன்...
இவை உங்களுக்கு பயன்படுமானால் மகிழ்ச்சி.
நன்கு வளர்ந்தவர்கள் அனைவருமே..
வெகு சீக்கிரம் எழுகின்றனர்..
நீண்ட நேரம் உழைக்கின்றனர்..
எப்போதும் வளர்ச்சி வளர்ச்சி என்று அடங்காமல் வலம் வருகின்றனர்..
எந்நேரமும், தொழில் சார்ந்த சிந்தனையாகவே இருக்கின்றனர்...
குறைந்த உழைப்பால், நிறைந்த பலன் கிடைப்பதில் மட்டும் அதிக கவனம் செலுத்துகின்றனர்...
மிகக் குறைவாகவே பேசுகின்றனர்...
வார்த்தைகளை மிக நளினமாக கையாள்கின்றனர்...
பிடிக்காவிடில், பகைத்து கொள்ளாமல், ஒதுங்கி கொள்கின்றனர்...
எது ஒன்றையும், மனம் புண்படாதபடி மறுக்கின்றனர்.
மேல்தட்டு மக்களை வியப்பதை பொறுத்தவரை,
ஒரே ஒரு நிபந்தனை உண்டு.
சிலர், நியாயத்திற்கு புறம்பான வளர்ச்சிகளை அடைந்திருக்கின்றனர் அல்லவா? இவர்களை மட்டும், கரும்புள்ளி வைத்து ஓரங்கட்டி விடுங்கள் போதும்!
வீழ்வதற்கல்ல வாழ்க்கை
No comments:
Post a Comment