“இந்த உலகில் 97% பேர் மற்றவர்களின் கட்டளைக்குக் கீழ்ப்படிபவர்களாக அல்லது பின் தொடர்பவர்களாக இருக்கிறார்கள். ஒன்று முதல் மூன்று சதவிகிதம் பேர் மட்டுமே வழிநடத்துபவர்களாக இருக்கிறார்கள். வழிநடத்துபவர்களுக்கும், பின்தொடர்பவர்களுக்குமான இடைவெளி மிகப் பெரியதாக இருக்கிறது.
இப்படி இருப்பது ஒரு சமூக அநீதி. பொதுவாக, நிறுவனங்களில் 20% பேர் மட்டுமே உற்பத்தியில் முழுத் திறனையும் செலுத்துபவராக இருக்கிறார்கள். 80% பேர் ஓரளவுக்கு திறனைச் செலுத்துபவராகவும், பணியில் ஏதேனும் ஒரு வகையில் தொடர்பில் இருப்பவராகவும் இருக்கிறார்கள். இந்த இடைவெளியை விடப் பெரிய அளவில் வழிநடத்துபவர்களுக்கும் பின்தொடர்பவர்களுக்குமான இடைவெளி இருக்கிறது.
இந்த இடைவெளியில் இருந்து வெளியே வருவதற்கான தூண்டுதலும் உத்தியும் இருந்தால், நீங்களும் மிகப் பெரிய லீடராகவும், தொழிலில் மிகப் பெரிய வெற்றியும் பெறலாம்” என்கிறார்கள் பெர்சோனா லீடர்ஷிப் கன்சல்டிங் நிறுவனத்தின் தலைவர் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் துணைத் தலைவர் சலீன் அமாண்டா லூயிஸ்.
“ஒரு நிறுவனத்தின் தனிநபர் திறனையும் தகுந்த முறையில் மேம்படுத்துவதன் மூலம், பணியாளர்களைத் தலைவர்களாக்கி, முதலிடமும் பெறமுடியும்” என்றவர்கள், அதற்கான வழிமுறைகளையும் சொன்னார்கள்.
கிடைமட்டத் தலைமையும் செங்குத்துத் தலைமையும்!
‘‘செங்குத்துத் தலைமை (Vertical Leadership) முறைதான் நீண்ட காலமாக வழக்கத்தில் இருந்து வந்தது. இப்போது கிடைமட்டத் தலைமை (Horizontal Leadership) முறை நடைமுறைக்கு வந்திருக்கிறது. முதலிடம் பெற நினைப்பவர்கள் கிடைமட்ட முறையின் மூலம் மிகப் பெரிய அளவில் முன்னுக்கு வரமுடியும். இதற்கு நீங்கள் தெளிவான முறையில் உத்திகளை வகுக்கவேண்டும். உத்திகளை மேம்படுத்துவது (Strategy), பயிற்சி (Coaching), பிராண்டிங் (Branding), மார்க்கெட்டிங் (Marketing) என்ற நான்கு படிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
இதில் உத்திகளை வகுப்பதுதான் முதன்மையானது. உத்திகளை வகுக்காமல் வெறுமனே மார்க்கெட்டிங் செய்தாலும் பயனளிக்காது. உத்திகளை வகுப்பது, அந்த உத்திகளைச் செயல்படுத்துவதற்கான பயிற்சியை மேற்கொள்வது, பிராண்டிங் செய்வது, அதன்பின்பு மார்க்கெட்டிங் செய்வது அவசியம்.
மாறிவரும் தலைமை!
தலைவர் பணி என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வருகிறது. இன்றைக்கும் தலைமை என்பது எல்லா நிலைகளிலும் இருக்கவே செய்கிறது. தற்போது ஒருவரின் அதிகாரம் என்பது அவருடைய வருமானத்தை வைத்து முடிவெடுக்கப் படுகிறது. ஒரு காலத்தில் குடும்ப அளவில் கணவர் என்பவர் உழைத்துப் பணம் ஈட்டுபவராக இருப்பார். அவர்தான் குடும்பத்தை வழிநடத்துபவராகவும் இருப்பார். ஆனால், இன்றைக்குக் கணவருக்கு இணையாக மனைவியும் சம்பாதிக்கிறார். குடும்பத்தில் உள்ள பிள்ளைகளும் சம்பாதிக்கிறார்கள். இதனால் குடும்ப அளவில் வழிநடத்துபவரின் பண்பு மாறி வருகிறது.
கீழிருந்து மேலே வரும் தலைமை
நிறுவனங்களில் காலம் காலமாக வழிநடத்தும் லீடர் என்பவர் மிகவும் உயர்ந்த இடத்தில் அமர்ந்து கொண்டு நிர்வாகம் செய்வார். அவர் உத்தர விடுபவராகவும், தேவையைச் சொல்பவராகவும், பணியாளர்களைக் கட்டுப்படுத்துபவராகவும் இருப்பார்.அவர் பொருளாதார அளவில் உயர்ந்த நிலையில் இருப்பார்.
இந்தத் தலைமைப் பதவிக்கு வருபவர்கள் சின்ன சின்னத் தடைகளைத் தாண்டி வரவேண்டும். அதாவது, சிறிய வேலையில் இருந்து படிப்படியாக உயர்ந்து பெரிய பதவிக்கு வருபவராக இருக்க வேண்டும் என்கிற நடைமுறை பல காலமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது, எல்லோரும் மேலே வரத் தான் ஓடிக்கொண்டும், சுழன்று கொண்டும் இருக்கிறார்கள். ஏற்கெனவே தலைமைப் பதவியில் இருப்பவர்களும், பெரிய அளவில் வளர்ந்தவர்களும் தங்களுடைய வளர்ச்சியையும் பதவியையும் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவே தங்களுடைய முழு பலத்தையும் பயன்படுத்துவார்கள்.
புதிய பாணி
இந்தப் போராட்டங்களுக்கு மத்தியில் நிறுவனங்களும், தனிநபர்களும் கிடைமட்ட முறையில் அதிரடி முடிவுகளை எடுத்து உலகத்தின் பார்வையை தன்மேல் விழவைத்து இருக்கிறார்கள். உதாரணத்துக்கு, ரிலையன்ஸின் ஜியோ அறிவிப்பு. ஒரே சமயத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து இந்திய தொலைத் தொடர்புத் துறையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார் முகேஷ் அம்பானி. சரியான முறையில் உத்தியையும், பிராண்டையும் உருவாக்கி வியாபாரத்தில் தனித்து நிற்கிறார். இதன் மூலம் ஜியோ ஒரு லீடராக மாறி இருக்கிறது.
இதைப் போலவே, 2015-ம் ஆண்டு வரை யாருக்குமே தெரியாமல் இருந்தவர் ட்ரம்ப். அமெரிக்கத் தேர்தலில் அதிரடியாகக் களம் இறங்கி வெற்றி பெற்று இருக்கிறார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் திடீரென அரசியலில் களம் இறங்கி வெற்றி பெற்றிருக்கிறார்.
சரியான உத்திகளைக் கையாண்டு அதிரடியாகக் களம் இறங்கினால், வெற்றி பெறலாம் என்பதற்கு இவை எல்லாம் முன்னுதாரணங்கள். இவர்களைப் போல் நீங்களும் அதிரடியாகக் களம் இறங்கினால், நீங்கள் செயல்படும் துறையைக் கதி கலங்கவைக்க முடியும்.
கடைப்பிடிக்கப்பட வேண்டியவை
1. உங்களுடைய கனவையும், குறிக்கோளையும் வரையறை செய்யுங்கள்.
2. உங்களுடைய திறனையும், என்ன செய்தால் உங்கள் வளர்ச்சியின் கிராப் மேல் நோக்கிச் செல்லும் என்பதையும் அடையாளம் காணுங்கள்.
3. உங்களுக்கு என்ன தேவை என்பதைப் பாருங்கள்.
4. உங்களை அடையாளப்படுத் துங்கள்; உங்களுடைய பிராண்டை செய்தியாக்குங்கள்.
5. உங்களுடைய பிராண்டை விற்பனையாக்குங்கள்; உங்களுடைய அங்கீகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
அங்கீகாரம் கொடுக்கும்போதுதான் நீங்கள் வெற்றி அடைகிறீர்கள். இரைச்சலும் குழப்பமுமான சூழ்நிலைகளுக்கு இடையே நீங்கள் தனித்து தெரியும்போதும், அடையாளம் காணப்படும் போதும் நீங்கள் தலைவராக உருவாகிறீர்கள்.
தூண்டுதல் அவசியம்
உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவேண்டியும், பிராண்ட் நிலைக்கு உயர்வதற்கும் உங்களுடைய தூண்டுதலை வெளிக்கொணர வேண்டும். உங்களுடைய தூண்டுதலை வெளிக்கொண்டு வரும்போதுதான் உங்களுடைய போட்டியாளர் களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டவும் முடியும். இதன் மூலம் உங்களுக்குத் தேவையான அங்கீகாரத்துக்கு நீங்கள் பங்களிக்க முடியும்.
இதைப் போலவே, நிறுவனத்தை முன்னுக்குக் கொண்டுவர, புதுமையும், மாற்றத்தை இயக்கு வதற்கான திறமையும் வேண்டும். எந்தவிதமான சமரசமும் செய்துகொள்ளாத, இலக்கை அடையக்கூடிய பரிமாணமுள்ள தூண்டுதல் வேண்டும். ஒரு தனிமனிதர் அல்லது நிறுவனத்தின் புகழ் மட்டுமே மாற்றத்தைக் கொண்டுவந்துவிடாது. மாறாக, பெரிய அளவில் தற்காலத்திலும், எதிர்காலத்திலும் இடர்பாட்டைச் சமாளிக்கும் வகையிலும் தூண்டுதல் இருக்க வேண்டும்.
வழிகாட்டுதல் அவசியம்
ஒவ்வொரு செயலையும் சிறப்பாகச் செய்ய வழிகாட்டுதல் அவசியம். இந்த வழிகாட்டுதல் மூலம் நிறுவனமும், தனிநபரும் சரியான அடையாளமும், என்ன புகழை அடைய விருப்பப் படுகிறார்களோ, அதனைப் பெறவும், அடைந்த புகழை நிலைநிறுத்தி, தனித்துவமிக்க தலைவர்களாக இருக்கவும் முடியும்.
வெற்றிப்படியின் முதல்படி
நிறுவனங்கள் முதலில் ஸ்டார்ட் அப் நிறுவனமாக வளர வேண்டும். அதன்பின்பு நடுநிலை நிறுவனமாக வளரவேண்டும். அதன் பின்பு பெரிய நிறுவனமாக உருவெடுக்க வேண்டும். அதன்பின்பு நீண்ட காலம் தாக்குப் பிடிக்கவேண்டும். இப்படி வளரும் போதுதான் எந்தவொரு நிறுவனத்தையும் ஒரு பிராண்டாக மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதனை மேம்படுத்தி ஒரு புராடக்ட்டாக அங்கீகாரம் தருவார்கள். இதுகூட வெறுமனே ஒரு புராடக்ட்டாக இருந்தால் மட்டும் போதாது. இதனைக் கட்டிக்காக்க உன்னதமான தலைமைப் பண்பும் இருக்க வேண்டும். இதற்கு நீங்கள் நிறையவே மெனக்கெட வேண்டும். இப்படி இருந்த நிலைமைகள் எல்லாம் மாறி, இன்றைக்கு மிகப் பெரிய திட்டமிடல் மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனமே உலகத்தில் உள்ள எல்லா நிறுவனங் களையும் கிடைமட்ட அணுகுமுறை மூலம் திரும்பிப் பார்க்க வைக்க முடியும்.
இன்றைக்குக் கிடைமட்டத் தலைமை அணுகு முறையைப் பயன்படுத்தி, பல திசைகளில் இருந்தும் பல புதிய உத்திகளை மேற்கொண்டு சிறப்பாக முன்னேறி வருகிறார்கள். இந்த முறையின் மூலம் யார் வேண்டுமானாலும் எளிதாகச் சாதனை செய்ய முடியும். எனவே, இனி நீங்கள் இந்த கிடைமட்டத் தலைமை அணுகுமுறையின்படி யோசித்துப் பாருங்கள். நிச்சயம் ஒரு தலைவராக மாறுவீர்கள்’’ என்கிறார்கள் ஜான் ஆரோக்கிய சாமி மற்றும் சலீன் அமாண்டா லூயிஸ்.
இவர்கள் சொல்வது புதுமையாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறதல்லவா?
No comments:
Post a Comment