Monday, February 6, 2017

அஸ்தமனம் ஆகிறதா அமெரிக்க கனவு?

அந்த செய்தி வெளியான சில மணி நேரங்களில், இந்திய ஐ.டி நிறுவனங்கள் சுமார் 33 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை பங்குச்சந்தையில் சந்தித்தன. இன்னும் சில மாதங்களில் கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு கல்லூரி செல்லும் மாணவர்கள் திகைத்துப் போயிருக்கிறார்கள். பல்லாயிரம் ஐ.டி பணியாளர்கள் இன்னும் அதிர்ச்சி யிலிருந்து மீளவில்லை. ‘ஹெச்-1 பி விசா விதிமுறைகளை மாற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஓர் உத்தரவு பிறப்பிக்கப் போகிறார்’ என்பதுதான் அந்தச் செய்தி.  

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்து வரும் இளைஞர்களின் அமெரிக்க கனவை நனவாக்கி வருகிறது ‘ஹெச்-1 பி’ விசா. அதாவது, பணி சம்பந்தமாக அமெரிக்கா செல்பவர்கள் அமெரிக்க குடியுரிமை பெறாமல், ஆறு ஆண்டுகள் வரை அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு இந்த விசாக்களை வழங்கி வருகிறது அமெரிக்கா. ஆண்டுக்கு 60 ஆயிரம் டாலருக்கு மேல் சம்பளம் பெறுகிறவர் களுக்கு இந்த விசா வழங்கப்படும். ஒவ்வோர் ஆண்டும் 65 ஆயிரம் பேருக்கு அமெரிக்கா இந்த விசாக்களை வழங்குகிறது. இதில் பெரும்பாலான வற்றைப் பெறுவது இந்தியர்கள்தான். உதாரணமாக, கடந்த 2014-ம் ஆண்டில் 70 சதவிகிதம் ‘ஹெச்-1 பி’ விசாக்களை இந்தியர்களே பெற்றனர்.

இதனால், ‘‘அமெரிக்காவில் உள்ள ஐ.டி நிறுவனங்கள், ‘ஹெச்-1 பி’ விசா மூலம் இந்தியா உள்ளிட்ட வெளிநாடு களில் இருந்து வரும் ஊழியர் களைக் குறைந்த சம்பளத்துக்கு பணியில் அமர்த்திக்கொண்டு, அங்கு ஏற்கெனவே அதிக சம்பளத்தில் பணியாற்றிவரும் அமெரிக்கர்களைப் பணி நீக்கம் செய்துவிடுவதால், தொடர்ந்து அமெரிக்கர்கள் வேலையிழந்து வருகின்றனர்’’ என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ட்ரம்ப், தனது தேர்தல் பிரசாரத்தின்போதே, ‘‘அமெரிக்கப் பொருட்களை வாங்குங்கள், அமெரிக்கர்களுக்கு வேலை கொடுங்கள். இதுதான் எனது நிர்வாகத்தின் விதி. விசா திட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளை நசுக்கும் செயல்பாடுகளையும் தடுப்பேன்’’ எனக் கூறியிருந்தார். 
இந்த நிலையில், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஹெச்-1 பி விசாவில் மாற்றம் கொண்டுவரும் மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதைச் செய்திருப்பவர், கலிபோர்னியா உறுப்பினர் ஸோ லாஃப்க்ரென். ஆனால், இவர் ஒபாமாவின் கட்சியைச் சேர்ந்தவர். ‘முதுநிலைப் பட்டம் முடித்து பணிக்கு வருபவர்களுக்கும், ஆண்டுக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் டாலருக்கு மேல் சம்பளம் வாங்குகிறவர்களுக்கும் மட்டுமே இந்த விசா தரப்பட வேண்டும். இந்த விசா பெற்று அமெரிக்கா வருகிறவர்களின் மனைவி அல்லது கணவர் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும்’ என்கிறது இந்த மசோதா. இதில் குறிப்பிடும் சம்பளம், முன்பு இருந்ததை விட இரண்டு மடங்குக்கும் அதிகம். இதை ட்ரம்ப் ஒரு நிர்வாக உத்தரவாகப் பிறப்பிக்கப் போகிறார் எனவும் வதந்திகள் பரவின. 

இதுகுறித்து நம்மிடம் பேசிய அவ்தார் குழுமத்தின் சி.ஆர்.ஓ உமாசங்கர், ‘‘தற்போது அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களை நாட்டைவிட்டு அனுப்ப வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக குறைந்தபட்ச சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளனர். அமெரிக்காவில் நீண்ட காலம் வேலை பார்த்து உயர்ந்த பதவியில் இருக்கும் இந்தியர்களைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என கம்பெனி விரும்பினால், சம்பளத்தை உயர்த்திக் கொடுத்து வைத்துக்கொள்ளும். ஆனால், சப்போர்ட் டீம், கீழ்நிலை ஊழியர்கள், அனுபவம் இல்லாதவர்கள் என பலதரப்பட்டவர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்தச் சூழ்நிலையில் முதல்கட்டமாக 30-40 சதவிகித இந்தியர்கள் இந்தியா திரும்ப வேண்டிய நிலை ஏற்படும். புதிதாக இந்தியர்கள் அமெரிக்கா செல்வது சிரமம் என்பது ஒருபுறம் இருக்க, இந்தியா திரும்பியவர்களுக்கு அதே சம்பளத்தைக் கொடுப்பதா? வேலைக்கு வைத்துக்கொள்வதா? என்ற குழப்பங்கள் இங்கேயும் ஏற்படக்கூடும்.  இந்தியர்கள் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கக் கூடியவர்கள். ஆனால், அமெரிக்கர்கள் அப்படி அல்ல. இதனால், நிச்சயம் அமெரிக்க நிறுவனங்களின் உற்பத்தி குறையும்’’ என்றார்.

ஆனால், ‘‘இன்னும் அதிகாரபூர்வமாக எந்த உத்தரவும் வரவில்லை. யூகங்களை நம்ப வேண்டாம். அமெரிக்காவின் வளர்ச்சிக்கு இந்திய ஐ.டி நிறுவனங்களும், இந்தியாவிலிருந்து வரும் திறமைசாலிகளும் கண்டிப்பாகத் தேவை. இதை அமெரிக்க நிறுவனங்கள் உணர்ந்திருக்கின்றன. அவர்கள் இந்தியாவுக்கு நியாயம் கிடைக்க வழி செய்வார்கள்’’ என அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் பலர் அடித்துச் சொல்கிறார்கள்.   

இனி என்ன ஆகும்?

அமெரிக்காவில் இத்தனை நாளும் இருந்த நிறுவனங்கள், இனி Near Shore அலுவலகம் என்ற முறையில், பக்கத்தில் இருக்கும் கனடா, மெக்சிகோவுக்கு அலுவலகங்களை மாற்றிக்கொள்ளக்கூடும். ஏற்கெனவே மெக்சிகோவில் பலர் கிளை திறந்திருக்கிறார்கள்.

அமெரிக்க நிறுவனங்கள், இனி தங்கள் அதிகாரிகளை இந்தியாவுக்கு அனுப்பி, இங்கே பி.பி.ஓ நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வைக்கக்கூடும்.

புத்திசாலிகள் அத்தனை பேரையும் அமெரிக்கா ஈர்த்துக்கொள்வதால், சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ள போன்றவர்கள் அமெரிக்கர்களாக அறியப்பட்டார்கள். இனி இப்படிப்பட்ட திறமைகள் இந்தியாவில் உருவாகி, நம் நாட்டுக்கு வளம் சேர்க்கக்கூடும்.

No comments:

Post a Comment