ஒவ்வொரு செயலுக்கும் இன்னொரு எதிர்வினை இருக்கும். அது நல்லதாகவும் இருக்கலாம்; கெட்டதாகவும் இருக்கலாம். இப்ப நியூட்டன் நியாபகத்துல வராரா? ''For every action there is an equal and opposite reaction'' என்று ஒன்பதாம் வகுப்பில் படித்திருக்கிறோமே, அதுதாங்க. ஒவ்வொரு செயலைச் செய்யும் பொழுதும், அதைச் செய்யலாமா வேண்டாமானு குழப்பமாக இருக்கும். ''லவ் பண்ணலாமா, வேண்டாமா?'' என்பது போல தான் இதுவும். இந்த ‘வேண்டாம்’ என்று சொல்லும் எதிர்மறை எண்ணம் இருக்கு பார்த்தீங்களா, அதை எப்படி அகற்றலாம்னு நாம யோசிப்போம். அப்படி அகற்றணும்னு நீங்க யோசனை செய்தவர்களாக இருந்தால், இதைப் படிச்சாலே போதும்… முதல் படியைத் தொட்ட மாதிரி....
• எப்பொழுதுமே நல்ல செயல்கள் நடந்து கொண்டிருக்கிறதென்றால், அதை அதன் பாட்டிற்கு விட்டுவிட வேண்டும். அப்படி விடும்பொழுது, நம்முடைய உள்மனதில் ஒரு குரல் ஒலித்து கொண்டே இருக்கும். அது என்ன சொல்லும்னு, என்னைவிட உங்களுக்கே தெரியும். நல்லதைக் கெடுப்பதற்கென்றே அது பேசும். அப்படி அது பேசுவதை எல்லாம் நாம் காது கொடுத்து கேட்காமல், நமக்கு நாம் நேர்மையாகவும் உண்மையாகவும் செயல்பட்டு வருகிறோம் என்றாலே கொஞ்சம் பெட்டராக இருக்கும்.
• அந்த உள்மனம் பேசுகின்ற எதிர்மறை சொற்களுக்கு எதிராக, நீங்க எதையாவது செய்து பாருங்களேன். அது தானாகவே... கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிவிடும்.
• ஒரு குறிப்பிட்ட சொற்களை நீங்கள் அதிகம் பேசுவீர்கள். அதைக் கொஞ்சம் உல்டாவாக்கிப் பாருங்கள். அதாவது என்னால் முடியாது, மாட்டேன், நடக்காது, வேண்டாம்; இப்படிப் பேசுவதையெல்லாம் கொஞ்சம் பாசிட்டிவாக மாற்றிப் பாருங்களேன். அந்த எதிர் சொற்கள் எல்லாம் காணாமல் போய்விடும்.
• எதையும் பிளான் செய்து செயல்படுத்த வேண்டும். நாம் ஒரு பிளான் இல்லாமல் ஒரு செயலைச் செய்தால், இந்த எதிர்மறை எண்ணம் இருக்குப் பாருங்க... அது போதும் விட்டு விடு என்று முட்டுக்கட்டை போடும்; அப்புறம் நாம அதை ஃபாலோ செய்ய நேரிடும். அதனால் எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு வைத்திருந்தால், அதைத் தொடர்ந்து நடக்கும் செயல்களும் சிறப்பாக முடிவடையும். அதனால் கிடைக்கும் மகிழ்ச்சியில் நீங்கள் மூழ்கிப் போவீர்கள் என்பதே நிதர்சனம்.
• சத்தமாகப் பேசப் பழகிக் கொள்ளுங்கள். அதற்காக நடு ராத்திரியில் எழுந்து கத்தக் கூடாது; வெளியில் ஒரு சிலவற்றை சத்தமாகப் பேசினாலே, நமக்குள்ளே சன்னமாகப் பேசுகின்ற அந்த எதிர்மறைக் குரல் காணாமல் போய்விடும். பாசிட்டிவ் எண்ணத்தைக் கொண்டு, நெகட்டிவ் எண்ணத்தை நீங்களே சுயமாக முறியடிக்க முடியும். அதற்கு ஒரு தூண்டுகோலாக உங்கள் கான்ஃபிடெண்டான பேச்சு இருக்கும்.
• உங்க எண்ணம், முழுமையான நீங்களில்லை; அது உங்களது வெற்றிக்கான ஒரு தூண்டுகோல் தான்; எனவே அதனை நல்லதாக வைத்துக் கொள்ளுங்கள். பிறரது எண்ணங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்பது போல, நம்முடைய எண்ணத்தையும் பிறரால் கட்டுப்படுத்த முடியாது. அதனால் நம்மை, நம் எண்ணங்களை நாம்தான் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்; எனவே உங்க எதிர்மறைகளை, மனசுக்கு ஆதரவு தரும்படி மாற்றினால், உங்களுக்கு அதைவிட பெஸ்ட் ஃபிரெண்ட் யாராகவும் இருக்க முடியாது.
ரொம்ப சிம்பிள்தான்... வெற்றிக்கான வழிகள் எல்லாமே சிம்பிளாதான் இருக்கும் பாஸ்!
No comments:
Post a Comment