எப்போதுமே ஈழத்துப் படைப்புகளுக்குத் தமிழ் இலக்கியத்தில் தனி இடமுண்டு. அவ்வளவாக நெருக்கடிகளைச் சந்திக்காத தமிழ்நாட்டுப் படைப்பாளிகள் எழுதும் எழுத்துக்கும் கணந்தோறும் நெருக்கடிகளைச் சந்திக்கும் ஈழத்தின் படைப்புகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உண்டு. ஈழத்துப் படைப்பாளிகளில் முக்கியமானவர் தமிழ்நதி. கவிதைத் தொகுப்புகளும் சிறுகதைத் தொகுப்பும் கட்டுரைகளும் குறுநாவலும் எழுதியுள்ள தமிழ்நதியின், ஈழத்துப் போர்ச்சூழலை அடிப்படையாகக் கொண்ட முதல் நாவல் 'பார்த்தீனியம்'.
பார்த்தீனியம், தமிழ்நதி, புத்தக விமர்சனம்
எண்பதுகளின் தொடக்கத்தில் இருந்து எண்பதுகளின் இறுதியில் முடியும் ஈழத்துச் சூழலை அடிப்படையாகக் கொண்ட இந்த நாவல் அமைதிப்படை என்ற பெயரில் ஈழத்தில் நிலைகொண்ட இந்திய ராணுவத்தின் அத்துமீறல்களைப் பதிவு செய்யும் ஆவண இலக்கியமும்கூட. ஆனால் அதோடு இந்த நாவல் நின்றுவிடவில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்திய ராணுவத்தின் நுழைவு என்பது நாவலின் பிற்பகுதியில்தான் இடம்பெறுகிறது.
வானதியும் வசந்தனும் பள்ளிப்பருவத்துக் காதலர்கள். சிங்களப் பேரினவாத அரசின் இனவழிப்பு நடவடிக்கைகளால் கோபமுற்றுப் போராளி இயக்கத்தில் இணைந்த லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்களைப் போல பரணி என்னும் இயக்கப்பெயரோடு விடுதலைப்புலி ஆன வசந்தனுக்கும் வானதிக்குமான உறவு என்பது நாவலின் அடிப்படை. விடுதலைப் புலிப் போராளிகளின் அர்ப்பணிப்புமிக்க தியாகங்கள், இயக்கங்களின் உள்முரண்கள், போராளி இயக்கங்களுக்கு இடையிலான சகோதரப் போர்கள், சொந்த நாட்டிலேயே அகதிகள் ஆக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் அவலம், ஒரு கொடூரமான இனவாதத்தைச் சந்தித்தபோதும் பிரதேசவாதத்தையும் சாதியத்தையும் கைவிடாத தமிழ்மக்களின் அவலமான மனநிலை, இந்திய ராணுவத்தால் சிதைக்கப்பட்ட தமிழ்ப்பெண்கள் என்று பல விஷயங்களை விரிவாகப் பதிவு செய்யும் தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' பலவகையில் முக்கியமான நாவல்.
பொதுவாக ஈழத்து இலக்கியங்களில் நாவல்களுக்கு முக்கியமான இடமுண்டு. 'புதியதோர் உலகம்' கோவிந்தன், டானியல், ஷோபாசக்தி, குணா கவியழகன், சர்மிளா செய்யத் என்று வெவ்வேறு காலகட்டங்களில் ஈழத்துப் படைப்பாளிகளால் எழுதப்பட்ட நாவல்கள் வெவ்வேறுவிதமான களங்களையும் அரசியல் சார்பையும் கொண்டவை. ஈழத்து இலக்கியத்தில் பெண் படைப்பாளிகள் முக்கியமான பங்களிப்பினை வழங்கியிருக்கிறார்கள் என்றாலும் பெரும்பாலும் கவிதைகளை எழுதிய அளவுக்குப் பெண்களிடமிருந்து நாவல்கள் வந்ததில்லை. அந்தவகையில் ஈழத்துப் போர்ச்சூழலைக் கொண்டு பெண் படைப்பாளியால் எழுதப்பட்ட முதல் நாவல் 'பார்த்தீனியம்' என்று சொல்லலாம்.
இந்த நாவலை எழுதியுள்ள தமிழ்நதி வெளிப்படையான விடுதலைப்புலிகள் ஆதரவாளர். இறுதிப்போருக்குப் பின் ஈழப்போராட்டம் குறித்து ஏராளமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக போராட்ட இயக்கங்களுக்கு இடையிலான சகோதரப் படுகொலைகள், ஜனநாயகமற்ற தன்மை, வன்முறை, ஈழத்தமிழர் வாழ்வின் உள்ளும் வெளியிலும் ஏற்படுத்திய பாதிப்புகள் என ஏராளமான உரையாடல்கள் நிகழ்ந்தன. இத்தகைய விமர்சனங்களை முன்வைத்தவர்களில் கணிசமானவர்கள் ஏதேனும் ஒருவகையில் போராட்ட இயக்கங்களோடு நேரடித் தொடர்பில் இருந்தவர்கள்.
தமிழ்நதி விடுதலைப்புலிகளின் வரலாற்றுப் பாத்திரத்தை அங்கீகரிக்கவேண்டும் என்று கருதுபவராக இருந்தாலும் இந்த நாவலில் ஈழப்போராட்ட வரலாற்றில் ஏற்பட்ட சறுக்கல்களையும் உள்முரண்களையும் அதனால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களது வாழ்க்கையையும் பதிவு செய்ததன் மூலம் அரசியல் நேர்மையுள்ள படைப்பாக மிளிர்கிறது 'பார்த்தீனியம்'.
இந்த நாவலின் குறுக்கும் நெடுக்கும் வலம் வரும் விதவிதமான மனிதர்கள் முப்பதாண்டுகால ஈழ வரலாற்றின் சாட்சித் துண்டுகள். முதன்மைப் பாத்திரமான பரணி அர்ப்பணிப்பும் கீழ்ப்படிதலும் உள்ள போராளியாக இருந்தாலும் மாத்தையாவின் அதிகார நடவடிக்கைகளும் தனது இயக்கம் மாற்று இயக்கங்களின் மீது நிகழ்த்தும் வன்முறையும் போரால் சிதைந்த தம் சொந்த மக்களின் வாழ்க்கையும் அவனை அலைக்கழிக்கின்றன. இறுதியில் துண்டு கொடுத்துவிட்டு இயக்கத்தை விட்டு வெளியேறுகின்றான்.
தமிழ்நதி
தனஞ்செயனும் ஜீவானந்தமும் விமர்சனபூர்வமான முக்கியமான குரல்கள். யாழ் பல்கலைக்கழக மாணவரான தனஞ்செயனின் அண்ணன் சீராளன், டெலோ இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதால் நடுவீதியில் விடுதலைப் புலிகளால் கொல்லப்படுகிறார். தொடர்ச்சியாக வன்முறைகளைப் பார்த்துப் பார்த்து விரக்தியும் குழம்பிய மனநிலையும் கொண்டவனாகத் தனஞ்செயன் மாறிப்போனாலும் அவனால் 'போராட்டத்தின் முக்கியமான கட்டத்தில்' பரணி புலிகள் இயக்கத்தை விட்டு விலகியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதேபோல் ஆழமான வாசிப்பு உடைய ஜீவானந்தம் இயக்கங்களின்மீது விமர்சனங்கள் உடையவராக இருந்தாலும் அவர் புலிகளால் பேணப்படுபவராக இருக்கிறார்.
வானதியின் அப்பா அருமைநாயகம் ஒரு வேடிக்கை மனிதர். 'கடமையறியோம் தொழிலறியோம்' என்று சொகுசு வாழ்க்கைக்கு விரும்புபவர். ஆனால் போர்ச்சூழல் அவரையும் குலைக்கிறது. 'இந்திய ராணுவம் இலங்கைக்கு வரப்போகிறது' என்றவுடன் ஆரவாரத்துடன் வரவேற்கிறார். ஆனால் அதே ராணுவம் தமிழர்கள் மீது அத்துமீறல்களை நிகழ்த்தும்போது 'உடுப்புகள் வேறே தவிர, இலங்கை ராணுவமும் இந்திய ராணுவமும் ஒன்றுதான்' என்பதைப் புரிந்துகொள்கிறார். இன்னமும் 'இந்தியா ஈழத்தமிழர்கள் பிரச்னையைத் தீர்க்கும்' என்று நம்பிக்கொண்டிருப்பவர்கள் படிக்க வேண்டியது அருமைநாயகத்தின் வாழ்க்கையை.
இந்திய அமைதிப்படையால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சுபத்திரா ரத்த வரலாற்றின் ஒரு சிறுதுண்டு. நாவல்களின் பக்கங்களில் சுபத்திரா போன்ற பெண்களின் அலறல்கள் கேட்டுக்கொண்டேயிருக்கின்றன. முற்றுமுழுதாக யாரையும் எதிர்நிலையில் நிறுத்தாமல் அவரவர்களின் மனவுணர்வுகளை அவரவர் நியாயங்களூடன் பதிவு செய்துள்ளது இந்த நாவலின் சிறப்பு. 'இத்தனை வன்முறை, இத்தனை இழப்புகளுக்குப் பிறகு நாம் சாதித்தது என்ன?' என்று யோசிக்கும் இந்திய ராணுவத்தின் கர்னல் தயாள்சிங் ஓர் உதாரணம்.
தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்ததாலேயே நிராகரிப்புக்கு உள்ளாகி இந்திய அமைதிப்படையாலும் ஈ.பி.ஆர்.எல்.எஃப்பாலும் உருவாக்கப்பட்ட பொம்மை ராணுவமான 'தமிழ்த்தேசிய ராணுவத்'தில் 'சேர்த்துக்கொள்ளப்பட்டு' மடிந்துபோகும் சீலனின் மரணத்தைப் படிக்கும்போதே நமக்குக் கண்ணீர் துளிர்க்கிறது. 'எளியசாதிக்காரன்' என்று இகழப்படும் சீலனின் கதை மட்டுமே ஓர் அருமையான சிறுகதையாக உருவாகும் சாத்தியம் கொண்டது.
தமிழகத்தில் புலிகள் பயிற்சி பெறும் முறை, வீரச்சாவடைந்த போராளிகளின் வீடுகளுக்கு மரணச் செய்தியைச் சொல்லப்போகும்போது ஒவ்வொருமுறையும் பரணி சந்திக்கும் அவஸ்தை அனுபவங்கள், யாழ்ப்பாண மாணவர் போராட்டம் என்று நாவலின் பல பகுதிகள் குறிப்பிடத்தக்கவை. வரலாற்றுத் தகவல்களைத் தேடித் தொகுத்திருக்கும் தமிழ்நதியின் உழைப்பு பாராட்டத்தக்கது. அதை வெறுமனே தகவல்களாகப் பதிவு செய்யாமல் ஒரு நல்ல இலக்கியமாக மாற்றியிருப்பதற்குத் தமிழ்நதியின் எழுத்தாளுமைதான் காரணம்.
மாத்தையா குறித்த நாவலின் சித்தரிப்பு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்தாலும் மாத்தையா பக்க நியாயங்கள் பதியப்படவில்லையோ என்று தோன்றுகிறது. அதேபோல் ஒரு பெண்ணெழுத்தாளரிடமிருந்து வரக்கூடிய நாவலில் பெண் போராளிகளின் வாழ்க்கை இன்னமும் அழுத்தமாகவும் விரிவாகவும் பதியப்பட்டிருக்கலாம். தமிழ்நாட்டில் புலிகளின் இயங்குமுறை விளக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இங்கே புலிகளுக்கு உதவியவர்கள், ஆதரவுக்களம் அமைத்துக் கொடுத்த அரசியல் இயக்கங்கள் குறித்த பதிவுகள் இல்லை. குறிப்பாகப் புலிகளுக்கு உதவியதற்காகப் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தவர்கள் பெரியாரியக்கங்களைச் சேர்ந்தவர்கள். ஆனால் அதுகுறித்த பதிவுகள் அவர்களாலேயே எழுதப்படவில்லை. இவையெல்லாம் 'பார்த்தீனியம்' நாவலின் குறைகள் என்றோ விடுபடல்கள் என்றோ சொல்லமுடியாது. வாசக எதிர்பார்ப்பு என்று வேண்டுமானால் சொல்லலாம்.
எல்லாவற்றையும் விட முக்கியமானது, இந்த நாவலில் முழுக்க விரவியிருக்கும் பெண் பார்வை. வன்முறை மேலெழும் எல்லாச் சூழல்களிலும் அதிகம் பாதிக்கப்படுபவர்களாகப் பெண்களே இருக்கிறார்கள். சிங்களப் பேரினவாதமாக இருந்தாலும் சரி, இந்திய ராணுவத்தின் அட்டூழியங்களாக இருந்தாலும் சரி, பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்ப்பெண்களே. குழந்தைகள் மரணம், நிர்க்கதியான நிலை, உடைமைகள் அழிப்பு, ஓடிக்கொண்டேயிருக்கும் அவலம், மானத்துக்கு ஏற்படும் இழுக்கு, குடும்ப உறவுகளின் இழப்புகள் என்று எல்லாவற்றாலும் அதிகம் சிதைவது பெண்களின் வாழ்க்கைதான். அதிகாரத்துக்கும் வன்முறைக்கும் எதிராக எழும் போராட்டத்தின் விளைவாக உருவாகும் வன்முறைச் சூழலிலும் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பள்ளிப் பருவத்திலிருந்து சிங்களப் பேரினவாதத்தைச் சந்தித்தாலும் பரணியை இயக்கத்தை விட்டு வெளியேறச் சொல்லி வானதி நிர்ப்பந்திப்பதையும் இறுதியில் பரணியை அவள் நிராகரிப்பதையும் அப்படித்தான் புரிந்துகொள்ளமுடியும்.
அதேபோல் போலியான கலாசாரத் தூய்மைவாதமும் வானதியிடம் இல்லை. அவள் பரணியை நேசித்தாலும் அவனோடு வாழ விரும்பினாலும் குட்டியும் தனஞ்செயனும் அவளை விட்டுவிட்டுப் போகும்போது அவள் தன்னளவில் ஏமாற்றமடைகிறாள். இதை நேர்மையாகப் பதிவுசெய்யும் தமிழ்நதி பாராட்டப்பட வேண்டியவர்.
ஒரு வரலாற்றை எந்தளவுக்கு நேர்மையாகவும் படைப்புத்திறனுடனும் எழுதமுடியும் என்பதற்கு 'பார்த்தீனியம்' உதாரணம்.
No comments:
Post a Comment