என்னைச் சுற்றியுள்ள நண்பர்களில் பெரும்பாலோர் எப்படி இந்த சமூகத்தில் சிக்கியுள்ளனர், அவர்களின் மன இயக்கத்தின் ஆணி வேராக இருப்பது எது என்று பார்த்தேன். அது‘கவனத்தை கவரும் முயற்சி ’ என்று தெரிகிறது. அடுத்தவர்களின் கவனத்தைக் கவர வேண்டும் என்ற உணர்ச்சியே ஆட்டிப் படைக்கிறது.
தர்க்கம் செய்து, குதர்க்கம் செய்து, கடித்து, ஜோக் சொல்லி, பாடி, அலங்காரம் செய்து, ஒதுங்கி நின்று, கூடி கும்மியடித்து, அடுத்தவரை மட்டம் தட்டி, தன் கதை பேசி, ஊர் வம்பு பேசி, அறிவுத் திறனைக் காட்டி, தனது இயலாமையை பறை சாற்றி, இறுமாப்பு காட்டி, தன் நோயைச் சொல்லி, தன் வலிமையை காட்டி, இப்படி எதையாவது செய்து அடுத்தவரின் கவனத்தைக் கவர வேண்டும். அதுவே உயிர் வாழத் தேவைப்படும் மிக முக்கிய உணவாக இன்றைய மனிதனுக்கு இருக்கிறது.
தனிமை இதனாலேயே மிரட்டுகிறது. அடுத்தவர் கவனம் இல்லாமல் ஒரு கணமும் வாழ முடியாத மனநோய் பிடித்த ஒரு சமூகத்தையே நாம் உருவாக்கியுள்ளோம். அடுத்தவர் கவனம் கிடைக்காத கணத்தில் உடனே போதை தேவைப்படுகிறது. சிகரெட்டில் ஆரம்பித்து, சினிமா, டிவி, மது, இண்டர்நெட், சேட்டிங், மொபைல் அரட்டை, மொபைல் விளையாட்டு என போதை எல்லா வடிவங்களிலும் அளவுகளிலும் தயாரித்து விற்கப்படுகிறது.
மனிதனின் இந்த வலிமையற்ற நிலையால் இந்த அடுத்தவர் கவனத்தின் போதை இல்லாமல் இருக்கமுடியாத நிலையால், அவன் கலை இலக்கியம், விஞ்ஞானம், படைப்பு என எல்லாவற்றையுமே போதையூட்டிக் கொள்ளவே பயன்படுத்திக் கொள்பவனாக இருக்கிறான்.
எல்லாவற்றையும் எப்படி உபயோகப்படுத்திக் கொள்கிறான் ஒருவன் என்பதைப் பொறுத்தே அதன் விளைவு இருக்கும். கத்தியை ஆளை வெட்டவும் பயன்படுத்தலாம், அழகு படுத்தவும் பயன்படுத்தலாம். அது போல இன்றைய மனிதனின் போதைத்தனம் எதையும் போதைக்கு பயன்படுத்தவே தூண்டுகிறது.
பணம் கிடைத்தாலும், பதவி கிடைத்தாலும், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் கிடைத்தாலும், வசதி கிடைத்தாலும் அதை அவன் தன்னை வளர்த்திக் கொள்ளவும் தன்னுணர்வு வரை தன் உணர்வை வளர்த்திக் கொள்ளவும் பயன்படுத்திக் கொள்வதில்லை. மாறாக ‘கவனிப்பு போதை’ கிடைக்காமல் தனிமை நேர்ந்தால் அதை தவிர்க்கவே பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறான். அல்லது அந்த கவனிப்பு போதை இன்னும் தலைக்கேற என்ன செய்ய இது நமக்கு உதவும் என யோசிக்கிறான்.
பணம் உள்ளவன் அதை பகிர்ந்து கொள்ளத் தயாரில்லை. கலை உள்ளவன் அதில் கரைந்து புதிய வெளிப்பாடுகளை கொண்டுவர முயற்சிப்பதில்லை. பதவி உள்ளவன் கடமையை நிறைவடைய விரும்புவதில்லை. இன்று யாருமே தனக்கு கிடைத்த வாழ்வை வாழ்ந்து பார்க்கவோ கணத்தில் கரைந்து பார்க்கவோ தயாரில்லை.
அடுத்தவர் கவனம் அதிகம் பெறுவது எப்படி என்று ஆரம்பித்து அது ஏற்படுத்திய இயந்திரத்தனத்தின் கட்டுப்பாட்டில் ஏன் எதற்கு என்று தெரியாமல் தேடியும் நாடியும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் மேலும் மேலும்.......இது மட்டும் தான் உத்தரவு. இயந்திரத்தனத்தின் கட்டளை.
கணவனிடம் கவனம் கிடைக்காத மனைவி நண்பனை நாடுகிறாள். முதலாளியால் பாராட்டப் படாத வேலையாள் இடம் மாறுகிறான். இன்று எல்லோருக்கும் அடிப்படைத் தேவையாய் இருப்பது அடுத்தவர் கவன போதை. இதை நியாயப் படுத்தும் வளர்க்கும் நம் சமூக அமைப்பை நீங்கள் கவனிக்க வேண்டும்.
ஒரு மனிதனின் உயர்வு அவன் எத்தனை பேரால் கவனிக்கப்படுகிறான் என்பதைப் பொறுத்தே உள்ளது இன்றைய சமூகத்தில். ஆனால் அது உண்மையா அதில் சிறிதளவாவது உண்மை உள்ளதா தலைவர்களும் புகழ் பெற்றவர்களாய் இன்று உள்ளவர்களும் எவ்வளவு மனவளர்ச்சி குன்றியவர்களாய் உள்ளனர் என்பதை நீங்கள் ஆராய்ந்து பாருங்கள். அவர்களிடம் எவ்வளவு பேராசை, பொய், கீழ்மை, ஏமாற்றுத்தனம், நடிப்பு, வியாபாரம். ஆனாலும் அவர்களை மக்கள் வழி காட்டும் தலைவர்களாய், குருவாய், தனது மானசீக எதிர்காலமாய் ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதன் காரணம் இவர்கள் தேடும் போதையில் திளைப்பவனாய், அதிகம் கவனிக்கப்படுபவனாய் அவர்கள் இருக்கிறார்கள் என்பதே. புகழ், அந்தஸ்து, கௌரவம் என்று மனிதனுக்கு போதையூட்டும் எல்லாவற்றின் அடித்தளமும், அதனால் ஆட்பட்டுவிட்ட இயந்திரத்தனமும்தான்.
இதன் ஆணிவேர் என்ன? எங்கிருந்து பிறந்தது இது? ஏன் இப்படி நம்மை ஆட்டிப் படைக்கிறது என்று கேட்கிறீர்களா கொஞ்சம் பின்னோக்கிப் போவோம்.
மனிதக் குழந்தை முழு வளர்ச்சியடையாமல் பிறக்கும் குழந்தை. இரண்டு காலில் நடக்க ஆரம்பித்த பிறகு கடைசி வரை குழந்தையை சுமக்க மனித உடம்பால் முடியாமல் போயிற்று. மனிதக் குழந்தைக்கு பராமரிப்பு அவசியம். அடுத்தவர் கவனம் இல்லாவிட்டால் மனிதக் குழந்தை இறந்துவிடும். குழந்தை பெறும் விலங்குகளுக்கு குட்டி சிறிது வளர்ந்தபின் தாய்மையுணர்வு மறைந்துவிடுவதைப் போல மனிதனுக்கும் மறைந்துவிட்டால் மனிதக் குழந்தையால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது.
விலங்குகளைப் போல வெறும் உணர்ச்சிகளின் வாழ்க்கை உள்ளவனல்ல மனிதன். முழு வளர்ச்சியடையாமல் பிறப்பதால், பிறந்த பின்தான் தன் வளர்ச்சியை மனிதக் குழந்தை எட்டுகிறது. உணர்ச்சிகளுடன் பிறக்கும் குழந்தை தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பிறர் கவனத்தையே நம்ப வேண்டி உள்ளது. ஆக அடிப்படையில் மனிதக் குழந்தை உயிர் வாழ்வதற்கான ஒரு அடிப்படைத் தேவை அடுத்தவர் கவனம். ஆகவே குழந்தை அடுத்தவர் கவனத்திலேயே ஒவ்வொரு கணமும் இருக்க விரும்புகிறது. தனிமை மரணத்தைக் கொண்டு வந்துவிடும் என அலறுகிறது.
இது ஒரு நடைமுறை உண்மை. ஆகவே இதில் தவறில்லை. ஆனால் அந்தக் குழந்தை வளர வளர அதன் உணர்வுகள் கூர்மைப் பட நாம் உதவ வேண்டும். அதன் உடலின், மன இயக்கத்தின் தனித்தன்மையை உணர உதவ வேண்டும். இயற்கை அதன் உடலின் மூலம் இந்த உலகிற்கு கொண்டு வரும் அழகை, கொண்டாட்டத்தை, மலர்ச்சியை, வளர்ச்சியை, மாற்றத்தை அந்தக் குழந்தை உணர்ந்து அதன் உள்ளுணர்வுப்படி வாழ உதவ வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் ஒரு இயற்கையின் செய்தியாளன். அது வாழ்ந்து மலர வேண்டிய ஒரு விஷயம் அங்குள்ளது. அதைக் கண்டுணர நாம் உதவ வேண்டும்.
மாறாக நாம் என்ன செய்கிறோம் குழந்தைக்கு மேலும் மேலும் அடுத்தவர் கவனம் கவர்வது எப்படி அது எவ்வளவு முக்கியம் என்று கற்றுத் தருகிறோம். பலரின் கவனத்தை அது கவர்ந்தால் பாராட்டுகிறோம். கவனிக்கப்படா விட்டால் இகழ்கிறோம். கவனிப்பு பெற என்னவெல்லாம் செய்ய முடியுமோ செய் என்கிறோம். பள்ளிக்குப்போனால் அதுவேதான். பலரின் கவனத்தை ஈர்ப்பவன் தலைவன், அவனுக்குப் பாராட்டு, புகழ். கவனத்தை ஈர்க்க முடியாதவன் உதவாக்கரை. இப்படி மேலும் மேலும் மேலும் இந்த போதையை ஊட்டியே வளர்க்கிறோம் நாம். உடம்பு சரியில்லை என்றால் நிறையப் பேர் வந்து பார்த்து விட்டுப் போக வேண்டுமாம். என்ன மடத்தனம். மருத்துவரும் மருந்துமே உண்மைத் தேவை. ஆனால் அதைவிட நமக்கு இந்த கவனிப்பு போதையே தேவைப்படுகிறது.
மேலும் இந்த கவனம் பெறும் முயற்சியின் அடிப்படையில் இதற்காக போட்டி, பொறாமை, தந்திரம், சூழ்ச்சி, போலித்தனம் எல்லாம் போற்றி வளர்க்கப்படுகிறது. இதுதான் நமது சமூக அமைப்பு.
இந்த கவனிப்பு போதையால் நிகழ்ந்துள்ள மற்றொரு மிகப் பெரிய தீமை என்னவென்றால் இதுவே அன்பு என்று இன்று ஆகி விட்டதுதான். உண்மையான அன்பு மறைந்து போகவும் இது காரணமாகிவிட்டது. நம்மை மதிப்பவர்கள், நமக்கு ஏதாவது என்றால் வந்து பார்ப்பவர்கள்தான் அன்பாய் இருப்பவர்கள். அன்பு என்றால் ஒருவனுக்கு கவனிப்பு போதை தர வேண்டும். அதுவே அன்பு என்று ஆகி விட்டது.
நீங்கள் உங்களது மனைவியை அவர்கள் இயல்புபோல் சுதந்திரமாக இருக்க அனுமதித்துவிட்டு நீங்கள் உங்கள் இயல்புப்படி வாழ்வது தவறு என்று ஆகிவிட்டது. ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு உதவி செய்துகொண்டு வாழ்வதே சிறந்தது என்பது போய், மனைவி கணவன் தன்னை மதிப்பதில்லை, தனக்கு கவனிப்புப் போதை தருவதில்லை, தன்னிடம் வம்பு பேசுவதில்லை, தன்னுடன் சண்டை போடுவதில்லை, என்று சொல்வதும் மனைவி அவர்கள் இயல்புப்படி இருந்து கொண்டு கணவனுக்கு தேவையான உதவிகளைச் செய்தாலும் மனைவி தன்னைப் புகழ்வதும், தனக்காகவே வாழ்கிறேன் என்று சொல்வதும் தனக்காக உருகுவதும் போன்ற கவனிப்பு போதை சமாசாரங்களே அன்பு என்று கருதப் படுகிறது.
அதிக கவனிப்பு அதிக அன்பு என்று கருதப் படுகிறது. இது இருவருக்கும் தேவைப்படுவதால் இருவரும் கவனிப்பு போதையை பரிமாறிக் கொள்கின்றனர். இது அன்பு அல்ல.
அவசியமான உதவிகள் செய்யலாம். ஆனால் அவரவர்களே செய்து கொள்ளக்கூடியதைக் கூட மற்றவர் செய்து தருவது இந்த போதை ஏற்றும் விஷயம்தானே தவிர, அது அன்பு அல்ல. இந்த கவனிப்புத் தேவை என்ற அம்சம் சிறு குழந்தைக்கு ஒரு அவசியம். ஆனால் அதை நாம் வளர வளர வெட்டிவிடாமல் அந்தக் குழந்தையை அடிமைப்படுத்த இந்த அதிக கவனிப்பை அன்பு என்ற பெயரில் கொடுத்து போதையூட்டி வளர்த்து விடுகிறோம். இந்த போதைக்கு அடிமைப்பட்டுப் போன இன்றைய சமூகம் அன்பை இழந்து நிற்கிறது.
அன்பின் சுவை அறியாமல் போலியான இந்த கவனிப்பு சுவையில் விழுந்து வருந்துபவர்களையே நான் பார்க்கிறேன். கவனிப்பு அதிகமாகும் பக்கம் மனம் சாய்வதால் உறவுகளில் விரிதல், நட்பில் விரிசல், வாழ்க்கையே தடம் புரளுதல் என எல்லாம் நடக்கிறது. இந்த கவனிப்பு போதையை பயன்படுத்தி குழந்தைகளிடமும் இளைஞர்களிடமும் ஏராளமான தீய பழக்கங்கள் மற்றவர்களால் ஏற்றப்படுகின்றன. இதற்குத் தடுப்புச் சுவர்களும் எழுப்பபடுகின்றன. ஆனால் உண்மையான இயல்பான வழி அதுவல்ல. ஒரு குழந்தைக்கு வளர வளர மற்றவர் கவனிப்பில் நாட்டம் குறைய வேண்டும். மற்றவர் கவனம் தேவை என்பதை தாண்டி அது வளர வேண்டும்.
தனக்காக, தன் தன்மையை வாழ்ந்து அனுபவித்து அது ஆனந்தப்பட வேண்டும். அப்போதுதான் நமக்கு விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், ஞானிகள் கிடைப்பார்கள். இல்லாவிடில் புகழுக்கும் பெருமைக்கும் அலையும் கவனிப்பு போதையில் ஆழ்ந்து கிடக்கும் கும்பலே மிஞ்சும்.
மேலும் தன் தனித்தன்மையில் நிறைவும் சந்தோஷமும் அனுபவிக்காத ஒருவன் தன்னுணர்வுப் பாதைக்கு வர முடியாது. வந்தால் அதுவும் போலியாகவே இருக்கும். தானாக, தன்னைப் போல, தான் எப்படியோ அப்படியே இருப்பதில் உள்ள சுதந்திரத்தையும், நிறைவையும் அனுபவிப்பதே தியானத்தின் ஆரம்பம்.
அதிலிருந்து தான் ஒருவன் உணர்வைக் கூர்மைப் படுத்திக் கொண்டே போய், பிரபஞ்சவுணர்வுகளில் ஒன்றைத் தொட்டுக் கரைகிறான், கலக்கிறான். அந்த அனுபவமே தியானம். தன்னுணர்வு அனுபவம். விழிப்புணர்வு அனுபவம். அதன்பின் அவன் பிரபஞ்சவுணர்வின் பலதில் ஏதோ ஒரு அம்சத்தை மட்டும் வெளிப்படுத்தும் தனித்தன்மை கொள்கிறான். எதன் மூலம் அவன் தொடர்பு கொண்டானோ அதுவே அவன் வெளிப்பாடாகிறது. இப்படி உடலின் தனிதன்மையில் ஆழ்ந்து அனுபவித்து வாழும் மனிதன் பிரபஞ்சத்தன்மைகளில் ஏதாவது ஒன்றை வெளிப்படுத்தும் ஒரு தனித்தன்மை கொண்டவனைப் மலர்கிறான்.
இந்த மலர்ச்சியே மனிதனின் மகிழ்ச்சியான எதிர்காலம். மாறாக இப்போது வாழும் கவனிப்பு போதை வாழ்வு மேலும் மேலும் மனிதனை அடிமைப்படுத்துவதாய், இயந்திரமயமாக்குவதாய், வலிமையற்றவனாக்குவதாய், தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் பாதைக்கே கொண்டு செல்லும்.
ஆகவே நண்பர்களே
உங்கள் உடல் மன இயக்கங்களை கவனியுங்கள். அதை வாழுங்கள், வளருங்கள்.
பிரபஞ்சவுணர்வு வரை வளருங்கள். அதை வாழ்கையில் இந்த மரணம் ஒரு கட்டுக்கதை, மனம் ஒரு கருவி, வாழ்க்கை ஒரு விளையாட்டு.
No comments:
Post a Comment