ஒவ்வொருவரும் தான் முக்கியமானவராக இருக்கும்படிதான் வளர்க்கப்பட்டிருக்கிறார். இங்கு யாரும் உண்மையானவராக இருக்க முடியாது. முக்கியமானவராக மாறுவது மனித இனத்தின் பொதுவான வியாதியாக இருக்கிறது.
ஒவ்வொருவரும் எதிர்காலத்தில் எங்காவது, எதாவதொன்றில் முக்கியமானவராக ஆக வேண்டும் என்பதற்காக அதன்படிதான் வளர்க்கப்படுகிறார்கள். ஒரு மாடல் கொடுக்கப்படுகிறது, நீ அதுபோல மாற வேண்டும். அது உனக்கு ஒரு இறுக்கத்தைக் கொடுக்கிறது, ஏனெனில் நீ அதுபோல இல்லை. நீ வேறுமாதிரி இருக்கிறாய், இருப்பினும் நீ அதுபோல ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறாய்.
அதற்காக உண்மையானதை உண்மையற்றதற்க்காக கண்டனம் செய்கிறாய் – உண்மையற்றது உண்மையற்றதுதான். எதிர்காலத்திற்கான வடிவமைப்பு உன்னை நிகழ்காலத்திலிருந்து வெளியே இழுக்கிறது.
மாடல் ஒரு பயங்கர கனவாக துரத்துகிறது, அது தொடர்ந்து உன்னைத் துரத்துகிறது. நீ எதை செய்தாலும் அது சரியானதாக இருக்கப் போவதில்லை. ஏனெனில் சரியானது என்பதை குறித்து உனக்கு ஏற்கனவே ஒரு கருத்து உள்ளது. நீ ஏற்படுத்துவது எதுவாக இருந்தாலும் அது நிறைவாக இருக்கப் போவதில்லை, ஏனெனில் நிறைவடைய முடியாத ஒரு மடத்தனமான எதிர்பார்ப்பை நீ கொண்டிருக்கிறாய்.
நீ ஒரு மனிதன். ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட காலநிலையில் ஒரு குறிப்பிட்ட எல்லையில் இருக்கிறாய். அவற்றை ஒத்துக் கொள். மிகச்சரியாக செயல்களை செய்ய வேண்டுமென நினைப்பவர்கள் பைத்தியகாரத்தனத்தின் எல்லையில் இருக்கிறார்கள். அவர்கள் மடத்தனமானவர்கள் – அவர்கள் செய்வது எதுவாக இருந்தாலும் அது நல்லதல்ல. எதையும் மிகச்சரியாக செய்வதற்கு வழியேயில்லை. மிகச்சரியானது மனித இனத்திற்கு சாத்தியமில்லை. உண்மையில் சரியில்லாமல் இருப்பதுதான் ஒரே வழி. அதனால் நான் சொல்வது என்னவென்றால், நான் உனக்கு மிகச்சரியானதை சொல்லித்தரப் போவதில்லை. நான் உனக்கு முழுமையை சொல்லித் தருகிறேன். அது முற்றிலும் வேறு விதமான ஒரு விஷயம். முழுமையாக இரு. சரியாக இருப்பதை பற்றி கவலைப்படாதே.
நான் முழுமை என்று கூறும்போது, நான் உண்மையானதைத்தான், நிகழ்காலத்தைத்தான் கூறுகிறேன். நீ எதைச் செய்தாலும் முழுமையாக செய். நீ மிகச்சரியானவனாக இருக்கமுடியாது, ஆனால் உன் சரியற்ற தன்மை முற்றிலும் அழகானதாக, அது உனது முழுமையில் நிரம்பி இருக்க முடியும்.
மிகச்சரியானவனாக இருக்க ஒருபோதும் முயற்சி செய்யாதே, இல்லாவிடில் நீ மேலும் மேலும் வேதனையைதான் உருவாக்குகிறாய். இங்கு ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்னைகள் உள்ளன. மேலும் உனக்கு பிரச்னைகளை உருவாக்கிக் கொள்ளாதே. முழுமையாக இரு. நீ எங்கே இருந்தாலும் என்ன செய்தாலும் முழுமையாக செய். அதனுள் செல். அது உனது தியானமாகட்டும். அது சரியானதா இல்லையா என்று கவலை படாதே. அது சரியானதாக இருக்காது. அது முழுமையானதாக இருந்தால் போதுமானது. அது முழுமையானதாக இருந்தால் நீ அதை செய்யும்போது விருப்பபட்டு செய்யலாம். நீ அதன்மூலம் ஒரு நிறைவை உணரலாம், நீ அதனுள் செல்லலாம். நீ அதனுள் ஆழ்ந்து விடலாம், நீ அதிலிருந்து வெளியே வரும்போது புதிதாக இளமையாக புத்துணர்வோடு வரலாம்.
புத்துணர்வோடு முழுமையாக செய்யப்படும் எல்லா செயல்களும் முழுமையோடு செய்யப்படும் எந்த செயலும் தளைகளை கொண்டு வருவதில்லை. முழுமையாக அன்பு செய்யும்போது அங்கு பந்தம் எழுவதில்லை. அன்பு அரைகுறையாகும் போதுதான் அங்கு பந்தம் உருவாகிறது. முழுமையாக வாழ், சாவைக் கண்டு பயப்பட மாட்டாய். வாழ்வை பிளந்தால் அங்கே சாவை கண்டு பயம் வரும். ஆகவே மிகச்சரியாக என்ற சொல்லை மறந்து விடு. அது மிகவும் வன்முறையான சொற்களில் ஒன்று. இந்த சொல் உலகத்திலுள்ள அத்தனை மொழிகளிலிருந்தும் நீக்கப்பட வேண்டிய ஒன்று. இது மனித மனத்திலிருந்து எடுக்கப்பட வேண்டிய ஒரு சொல். இதுவரை யாரும் அப்படி இருக்க முடிந்ததில்லை, அப்படி யாரும் இருக்கவும் முடியாது.
எல்லாமும் சரியானதாக இருக்கும் ஒரு ஓமாகா பாயிண்ட் உண்டு என்று டெலிஹார்ட் டீ சார்ட்டின் கூறுவார். அப்படி ஒரு ஓமாகா பாயிண்ட் கிடையாது. அப்படி இருக்கவே முடியாது. உலகம் நகர்ந்து கொண்டே இருக்கிறது, பரிணாம வளர்ச்சி நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நாம் நெருங்கிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் நாம் அடையவேயில்லை. ஏனெனில் நாம் அடைந்து விட்டால் முடிந்தது. ஆனால் கடவுள் இன்னும் வேறுபட்ட விதங்களில் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார்.
ஒரு விஷயம் உறுதி. அவர் தனது வேலையில் சந்தோஷமாக இருக்கிறார். இல்லாவிடில் அவர் இதை எப்போதோ கைகழுவி விட்டிருப்பார். அவர் இன்னும் தனது சக்தியை இதில் செலுத்திக் கொண்டே இருக்கிறார். கடவுள் உன்னால் மகிழ்ச்சி அடையும்போது நீ உன்னைப் பற்றி மகிழ்ச்சியற்று இருப்பது மடத்தனமானது. நீ மகிழ்வோடு இரு. மகிழ்ச்சியே நிறைவான எல்லையாக இருக்கட்டும். நான் புலன் உணர்ச்சியை ஆதரிப்பவன். அதுதான் மகிழ்ச்சியின் வெளிப்பாடு என்பதை நினைவில் கொள். நீ என்ன செய்தாலும் மகிழ்வோடு இரு. அவ்வளவுதான். அது சரியானதா இல்லையா என்பதைப்பற்றி கவலைப்படாதே!
சரியானதாக இருக்க வேண்டும் என்ற முனைப்பு எதற்கு? அந்த முனைப்பினால் நீ இறுக்கமாக, வேதனையோடு, தவிப்போடு இருக்கிறாய். அதனால் நீ எப்போதும் பிளவுபட்டவனாக, தளர்வாக இல்லாமல் சிக்கலில் சிக்கி தவிக்கிறாய்.
வேதனை என்ற பொருள் தரும் ஆங்கில வார்த்தை ஆகோனி (Agony) பிளவுபட்டிருப்பது என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும். எப்போதும் தொடர்ந்து தன்னுடன் மல்யுத்தம் செய்துகொண்டே இருப்பது. இதுதான் ஆகோனி என்ற ஆங்கில வார்த்தையின் பொருள். நீ உன்னில் திருப்தியாக இல்லையென்றால் நீ வேதனையில்தான் இருப்பாய் – நடக்க முடியாததை கேட்காதே. உன்னை நேசி. அடுத்தவர்களையும் நேசி, இயல்பாக இரு. ஓய்வாக இரு.
மிகச்சரியாக செயலை செய்ய நினைப்பவன் ஒரு பைத்தியக்காரன். அவன் தன்னை சுற்றிலும் அந்த பைத்தியக்காரத்தனத்தை உருவாக்குவான். அதனால் மிகச்சரியான முறையை கடை பிடிப்பவனாக இருக்காதே. யாராவது உன்னைச் சுற்றி அப்படி இருந்தால், அவர்கள் உனது மனதையும் கெடுப்பதற்கு முன் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவர்களிடமிருந்து தப்பி போய் விடு.
எல்லோரும் ஒருவிதமான ஆழமான ஆணவத்தில் சிக்கி விடுகின்றனர். உனது கருத்துகளும் உனது செயல்கள் சரியானவை எனக் கூறுவதும் நீதான் சிறந்தவன் எனக் கூறும் ஒரு வகையான ஆணவம்தான். ஒரு தாழ்மையான மனிதன், தன் வாழ்க்கை மிகச்சரியானதாக இருக்காது என்பதை ஏற்றுக் கொள்வான். ஒரு உண்மையான ஆன்மீகவாதி நாம் எல்லைகுட்பட்டவர்கள், நமக்கு வரையறைகள் உண்டு என்பதை உணர்ந்து கொள்வான்.
மிகச்சரியானவனாக இருக்க முயற்சி செய்யாதவனே அடக்கமானவன் என்பதே என்னுடைய வரையறை. ஒரு அடக்கமானவன் மேலும் மேலும் முழுமையானவனாக மாறுவான். ஏனெனில் மறுப்பதற்க்கோ, தவிர்ப்பதற்க்கோ எதுவும் இல்லை. அவன் எப்படியோ அதை அப்படியே அவன் ஏற்றுக் கொள்வான். நல்லதோ, கெட்டதோ... ஒரு அடக்கமான மனிதன் மிகவும் செழிப்பானவன், ஏனெனில் அவன் அவனை முழுமையாக ஏற்றுக் கொண்டவன். அவனது கோபம், செக்ஸ், பேராசை, எல்லாமும் ஒத்துக் கொள்ளப்படுகிறது. அந்த ஆழ்ந்த ஏற்றுக் கொள்தலில் ஒரு ரசாயன மாறுதல் நிகழ்கிறது. எல்லா அசிங்கங்ளும் தானாகவே மறையத் தொடங்கும். மேலும் மேலும் முழுமையாக, மேலும் மேலும் லயப்படுதல் நிகழ்கிறது.
உன்னுடைய கருத்துக்களால் உன்னுடைய துயரத்தை நீயே உற்பத்தி செய்து கொள்கிறாய் என்பதை நீ புரிந்து கொள்ளும் நாளில் எல்லா கருத்துக்களையும் உடைத்து விடுவாய். அப்போது நீ அது என்னவாக இருந்தாலும் அதன்படியே உண்மையாகவும் இயல்பானவனாகவும் இருக்க ஆரம்பிப்பாய் – அதுதான் மிகச் சிறந்த நிலைமாறுதலாகும்.
No comments:
Post a Comment