தன்னம்பிக்கை என்பது என்ன?
தன்னுள்ளே எழும் நம்பிக்கையைத்தான் தன்னம்பிக்கை என்கிறோம். ஒரு மனிதன் தன்னுடைய எண்ணத்தில் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்து முடித்துவிடுவோம் என்று உறுதியாக எண்ணுவதே தன்னம்பிக்கை.
அந்த எண்ணம் தொடர.. தொடர.... அது வலுப்பெற்று, எந்த தடை வந்தாலும் அதைச் சமாளிக்கும் ஸ்திரத் தன்மையைப் பெற்றுவிடுகிறது. எனவே அந்த எண்ணத்தை (மனதை) எந்த ஒரு தடையாலும், சக்தியாலும் தகர்க்க முடியாது. அதுதான் தன்னம்பிக்கை.
ஊக்கம்:
சில சமயங்களில் புறச்சூழல் மற்றும் அகச்சூழலால் தன்னம்பிக்கையில் தளர்வு ஏற்படும். அவ்வாறு தளர்வு ஏற்படும்பொழுது மீண்டும் அதை வலுப்பெறச் செய்து, அதனுடைய ஸ்திரத்தன்மை மீட்டுக்கொண்டுவரப் பயன்படுவதுதான் ஊக்கம். ஊக்கம் ஒருவருடைய மனநிலையை அப்படியே முழுமையாக மாற்றிவிடக் கூடிய சக்தியுடையது.
இதை தடகளப் போட்டிகளில் நாம் கண்கூடாக காண முடியும். ஒருவர் எட்ட முடியாத உயரத்தை தாண்ட நினைக்கிறார். அவருள் இருக்கும் சக்தியை குறிப்பிட்ட உயரம் வரை மட்டுமே எம்பி குதிக்க முடியும் என்ற நிர்ணயம் செய்துவிடுகிறது. என்றாலும் சுற்றி இருக்கும் பார்வையாளர்களை கைத்தட்டி ஆரவாரம் செய்யச் சொல்கிறார். காரணம் அவருள் இருக்கும் மாபெரும் சக்தி திரட்டுவதற்காக. அவ்வாறு கைத்தட்டி ஆரம்வாரம் செய்யும்பொழுது அவருடைய சாதாரணமான மனநிலையில் ஒரு உந்துதல் ஏற்பட்டு, புதிய சக்தி பிறக்கிறது. இறுதியில் அந்த வீரர் உலகே வியக்கும் வண்ணம் புதிய உலகசாதனையை படைத்துவிடுகிறார்.
இதுதான் ஊக்கத்தின் மகிமை.
விடா முயற்சி:
முயற்சி என்பது எல்லோரிடத்திலும் உள்ளது.. விலங்குகளிடம் கூட இந்த முயற்சி உண்டு. ஆனால் விடா முயற்சி?
அது ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது.. ஒரு சில தோல்விகளிலேயே மனம் உடைந்து போனவர்கள் மீண்டும் அம் முயற்சியை தொடர்வதில்லை.. காரணம் அவர்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட எதிர்மறையான முடிவு.
'இனிமேல் நம்மால் அது முடியாது' என்று அவர்கள் மனதில் அவர்கள் எடுத்துக்கொண்ட முடிவு.
ஆனால் விடாமுயற்சி என்பது சாகும்வரை, தன்னுடைய எல்லையை அடையும் வரை, நினைத்ததை சாதித்து முடிக்கும் வரை ஒருபோதும் சோர்ந்துவிடுவதில்லை.
உறுதியான முடிவு அங்கே நிலைப்பெற்றிருக்கும். எப்படியும் வென்றுவிடுவோம்.. எப்படியவும் இலக்கை அடைந்துவிடுவோம் என்ற ஒரு வெறியுடன் கூடிய திடமான முடிவு மனதில் இருந்துகொண்டே இருக்கும்.
இவ்வாறானவர்கள் விரைவில் வென்றுவிடுவார்கள். காரணம் விடாய முயற்சியே!
மேற்கண்டவைகளைப் பின்பற்றினாலே வாழ்க்கையில் வென்று சாதனை புரியலாம். ஒவ்வொரு வார்த்தையையும் செயல்படுத்த வேண்டும்.. செயல்படுத்தினால் நிச்சயம் வெற்றி நம்மைத் தேடிவரும்.
பதிவைப் படித்தோமா, கருத்தை பகிர்ந்தோமா.. என்றிராமல் பதிவில் உள்ள சொற்களை உள்வாங்கி, அவற்றை அப்படியே செயல்படுத்துதலில் வெற்றி அடங்கியுள்ளது.
இந்த பதிவைப் படித்த முடித்துவிட்டீர்களா? அட.. நீங்களும் ஒரு வெற்றியாளர்தான்.. எப்படி என்றால் பதிவை முழுமையாக படித்து முடித்ததே ஒரு வெற்றிகரமான செயல்தானே.. !
இப்படி ஒவ்வொரு செயலிலும் வெற்றி... வெற்றி.... என்று மகிழ்ச்சியான, நேர்மறையான எண்ணத்துடன் செயல்பட்டாலே, விரைவில் நினைத்ததை அடைய முடியும். இதுதான் வெற்றிக்கு வழியும் கூட.
No comments:
Post a Comment