கரிஷி மந்தபாலர் கடும் பிரம்மச்சாரி. எப்போதும் இறைச் சிந்தனையில் தோய்ந்திருப்பவர். அவருக்கு சொர்க்கம் புகும் ஆசை தவிர வேறு எந்த ஆசையும் கிடையாது. ஜொலிக்கும் விழிகளும் வெண்ணிறத் தாடியும் ஜடாமுடியுமாய் நாளுக்குநாள் அவரது வசீகரம் கூடியது. மந்தபாலர் தம் தவ வாழ்வில் நிறைவுகண்டு, தாமே விரும்பி சொர்க்கம் புக முடிவு செய்தார். அக்கினியை வளர்த்த மந்தபாலர், தன் இறுதி வேண்டுகோளைச் சமர்ப்பித்தார்: ‘‘ஏ அக்கினியே! எத்தனையோ முறை வேள்வித் தீ வளர்த்து, சமித்துக்களை ஆகுதியாகப் பெய்து உன்னை ஆராதித்திருக்கிறேன். இன்று நான் உன்னை வளர்ப்பது என்னையே ஆகுதியாக நீ ஏற்பதன் பொருட்டே. மனத்தாலும் முழு பிரம்மச்சாரியாக வாழ்ந்த என்னை ஏற்று என் ஆன்மாவை சொர்க்கத்திற்கு அனுப்புவாயாக!’’
இவ்விதம் முழங்கிய அவர், நெருப்பில் சடாரெனக் குதித்தார். சக முனிவர்கள் சடசடவென அவர் உடல் எரிவதைப் பார்த்துக் கைகூப்பி அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அவரது ஆன்மா நட்சத்திரம் போல் ஒளி வீசியவாறு விண்ணில் பறந்தது. சொர்க்கத்திற்குச் சென்ற மந்தபாலர், சொர்க்க வாசல்முன் நின்றார். ஆனால் சொர்க்கத்தின் கதவுகள் அவருக்குத் திறக்கவில்லை. தடதடவென அதன் தங்கக் கதவுகளைத் தட்டினார். கதவைத் திறந்துகொண்டு உள்ளிருந்து வந்தான் ஒரு தேவன். ‘‘யார் நீங்கள்? என்ன வேண்டும்?’’ என்று அதட்டினான்.
‘‘நான் மகரிஷி மந்தபாலன். சொர்க்கம் புக வந்திருக்கிறேன், கதவைத் திறவுங்கள்’’ என்றார் முனிவர். தேவன் கடகடவென்று சிரித்தான். ‘‘மந்தபாலரே! சொர்க்கத்தின் கதவுகள் தட்டித் திறக்கப்படுவதல்ல; தானாய்த் திறந்தால்தான் உண்டு. நீங்கள் சொர்க்கம் புகத் தகுதியானவர் என்றால் இந்தக் கதவுகள் உங்களுக்காகத் திறந்து உங்களின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கும். அப்படித் திறவாததால் உங்களுக்கு சொர்க்கம் புகத் தகுதி இல்லை என்றே பொருள்!’’
மந்தபாலர் வியப்படைந்தார். தவ சிரேஷ்டரான தனக்கு சொர்க்கம் புக அனுமதி கிடையாதா? தம் தவ வலிமையின் அர்த்தம்தான் என்ன? ‘‘தேவனே! தவத்தை அன்றி வேறெதையும் நான் செய்ததில்லை. ஏன் எனக்கு சொர்க்கம் மறுக்கப்படுகிறது?’’ தேவன் நகைத்தபடிச் சொல்லலானான்: ‘‘மந்தபாலரே! ஒவ்வோர் உயிரும் பூமிக்கு அனுப்பப்படும்போது படைப்பாற்றலுடன்தான் அனுப்பப்படுகிறது. பூமி தொடர்ந்து இயங்க வேண்டும் இல்லையா? படைப்பாற்றலைப் பயன்படுத்த வேண்டியது ஒவ்வோர் உயிரின் அடிப்படைக் கடமை. இயற்கையிலேயே ஒருவருக்கு மக்கட் செல்வம் கிட்டவில்லை என்றால் அது ஒப்புக் கொள்ளக் கூடியதே. ஏதேனும் ஒரு நோக்கத்திற்காக ஒருவர் பிரம்மச்சரிய விரதம் பூண்டால் அதுவும் கூட ஏற்கக் கூடியதே.
ஆனால் எந்தக் குறிப்பிட்ட நோக்கமும் இல்லாமல் சொர்க்கம் புகத் தவம் செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு பிரம்மச்சரிய விரதம் பூணுபவர்களை சொர்க்கம் விரும்புவதில்லை. படைப்பாற்றல் சக்தி அளிக்கப்பட்டும் தர்மநெறிப்படி வாழ்ந்து ஆனால் ஓர் உயிரைக் கூடப் படைக்காமல் சொர்க்கம் புக எண்ணுவது சரியல்ல. உங்களுக்கு இயற்கை வழங்கிய படைப்பாற்றலுக்கு நீங்கள் நியாயம் செய்யவில்லையே! உங்கள் வாரிசு என பூமியில் யாரையாவது காட்டுங்கள். உங்களுக்காக சொர்க்கத்தின் கதவுகள் இப்போதே திறக்கும்.’’
மந்தபாலர் திகைத்தார். இப்படியொரு கோணத்தில் தாம் எண்ணிப் பார்க்கவே இல்லையே என வருந்தினார். தம் தவ ஆற்றலால் தாம் மறுபிறவி எடுத்து தம் படைப்பாற்றலுக்கு நியாயம் செய்தால் அதன் பின் சொர்க்கக் கதவுகள் தமக்குத் திறக்குமல்லவா என்று யோசித்தார். தேவன், ‘‘ஒரு பிறவியின் தவ ஆற்றல் மறுபிறவிக்கும் தொடரும், மறுபிறவியில் அவர் தவம் ஏதும் நிகழ்த்த வேண்டாம், தம் படைப்பாற்றலுக்கு நியாயம் செய்து தம் இனத்தைப் பெருக்க உதவினால் அது போதும்’’ என்று விளக்கம் தந்தான். மந்தபாலர் தன்னை விரைவில் இனப்பெருக்கம் செய்யும் ஒரு சாரங்கப் பறவையாக உருமாறும்படி மனத்தில் சங்கல்பம் செய்துகொண்டார். அப்போதுதானே சீக்கிரத்தில் சொர்க்கம் வர முடியும்?
மறுகணம் மாபெரும் காண்டவ வனத்தில் ஒரு மரக்கிளையில் அந்த அழகிய சாரங்கப் பறவை போய் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டது. இயற்கையின் நியதிப்படி, அது மறுபிறவி எடுத்த கணத்திலேயே அதன் முற்பிறவி நினைவுகள் மறைந்தன. அதே மரத்தின் கிளையில் சிறகுகளைத் தன் கூரிய அலகால் கோதிக் கொண்டு ஜரிதா என்ற ஒரு சாரங்கி அமர்ந்திருந்தது. அது, தான் அமர்ந்த மரத்தின் இன்னொரு கிளையில் உட்கார்ந்த சாரங்கத்தை வியப்போடு பார்த்தது. ஜரிதாவின் எழிலும் கனிவான பார்வையும் மந்தபால சாரங்கத்தைக் கிறக்கம் கொள்ள வைத்தன. அந்தப் பெண் பறவையிடம் மந்தபால சாரங்கத்திற்குத் தீராக் காதல் தோன்றியது.
மெல்ல மெல்ல அவற்றினிடையே காதல் வளர்ந்தது. அவை இல்லற வாழ்வை மேற்கொண்டு ஒரே கூட்டில் இணைபிரியாமல் வசிக்கலாயின. ஜரிதா நான்கு முட்டைகளை இட்டது. அவற்றை அடைகாத்துக் குஞ்சு பொரிப்பதற்குள் அந்த இனிய இல்லற வாழ்வில் ஒரு விபரீதம்! லபிதா என்ற இன்னொரு சாரங்கி மந்தபால சாரங்கனை வட்டமிட்டது. அதனுடைய ஆண்மை நிறைந்த பேரழகு லபிதாவை மயக்கிக் கொள்ளை கொண்டது. லபிதா பறந்து சென்று அதன் அருகே அமர்ந்து எதையோ தேடுவதுபோல் பாவனை செய்தது.
‘‘யார் நீ? என்ன தேடுகிறாய்?’’ விசாரித்தது மந்தபாலம்.
‘‘உங்கள் அலகின் வளைவிலும் சிறகுகளின் அடர்த்தியிலும் என்னையறியாமல் என் உள்ளத்தைத் தொலைத்துவிட்டேன். அது இங்கே எங்கேயாவது விழுந்து கிடக்கிறதா என்று தேடுகிறேன்!’’
லபிதாவின் மயக்கும் கவிதை மொழி மந்தபாலத்தைக் காந்தம் போல் இழுத்தது. தன்னை வட்டமிட்ட லபிதாவின் அழகில் லயித்த மந்தபாலம் தேடிவந்த வாய்ப்பை நழுவவிட விரும்பவில்லை. ஏற்கெனவே மணமாகி ஒரு மனைவியும் தனக்கு உண்டு என்பதையோ மனைவி இப்போது நான்கு முட்டைகள் இட்டு அடைகாத்து வருகிறது என்பதையோ நான்கு ஆண் குஞ்சுகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன என்பதையோ மந்தபாலம் எண்ணிப் பார்க்கவில்லை. காமம் அதன் கண்ணை மறைத்தது.
மனைவி ஜரிதாவிடம் ஏதொன்றும் கூறாமல் ஒருநாள் லபிதாவோடு இணைந்து, விண்ணில் பறந்து, தனியே இல்வாழ்வைத் தொடங்கின.
‘‘அப்பா எங்கே?’’ என்று கேட்டன அப்போது தான் உருப்பெறத் தொடங்கியிருந்த நான்கு ஆண் குஞ்சுகள்.
‘‘உங்கள் அப்பா மனிதர்களைப் பார்த்துக் கெட்ட பழக்கத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறார். இரண்டாம் கல்யாணம் செய்துகொண்டு விட்டார். போகட்டும், நம்மை மறந்தவர்களை நாம் நினைப்பது நம் சுயமரியாதைக்கு அழகல்ல. உங்கள் நால்வருக்கும் நானே இனித் தாயாகவும் தந்தையாகவும் இருப்பேன். வெளியே சென்று உங்களுக்குத் தேவையான உணவை நானே சம்பாதித்து வருவேன். நான் உணவு பெறுவதற்காகக் கூட்டை விட்டு வெளியே செல்லும்போது மட்டும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்!’’ என்றது, ஜரிதா. ஆண் குஞ்சுகள் மனம் தேறி தாய்ப்பறவை சொன்னதை ஏற்றுக் கொண்டன.
ஒருநாள் திடீரெனக் காண்டவ வனத்தில் தீப்பிடித்துக் கொண்டது. இரண்டாம் மனைவி லபிதாவுடன் சுற்றிக் கொண்டிருந்த மந்தபாலம், நெருப்பைப் பார்த்துத் திகைத்தது. சரிவரச் சிறகு கூட முளைக்காத தன் நான்கு ஆண் குஞ்சுகளும் என்ன பாடுபடுமோ என்று அதன் தந்தை மனத்தில் கவலை எழுந்தது. ‘‘ஏ அக்கினியே! என் நான்கு மகன்களையும் நீ எரிக்காமல் காப்பாற்றுவாயாக!’’ என்று அது மனமாரப் பிரார்த்தனை செய்தது. அதன்முன் அக்கினி பகவான் தோன்றி, ‘‘மந்தபாலமே! உன் முற்பிறப்பில் உன் உடலையே எனக்கு ஆகுதியாக்கினாய். அந்த உன் தியாகத்தை மெச்சி உன் இப்பிறப்பில் உனது ஆண் குஞ்சுகளை நான் ஒன்றும் செய்யமாட்டேன்’’ என வாக்குக் கொடுத்து மறைந்தார்.
இதைக் கண்ட இரண்டாம் மனைவி லபிதா, ‘‘இன்னும் உனக்கு ஜரிதாவிடம் காதல் இருக்கிறது’’ என்று ஊடல்கொண்டு இன்னொரு மரக்கிளையில் தனியே போய் உட்கார்ந்து கொண்டது.
அக்கினியின் வாக்குறுதி பற்றி ஏதும் அறியாத தாய்ப்பறவை ஜரிதாவைக் கலக்கம் கவ்வியது. அக்கினியிடமிருந்து இறகு சரிவர முளைக்காத பிள்ளைகளை எப்படிக் காப்பாற்றுவது?
குஞ்சுகள் பயத்தில் நடுநடுங்கின. ‘‘அம்மா! நீங்கள் தப்பித்துப் போங்கள். எங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நீங்கள் இருந்தால் வம்சம் விருத்தியாக வாய்ப்புண்டு. நாங்கள் நெருப்பிலேயே மடிந்தாலும் பரவாயில்லை!’’ என்றன.
தாய்ப்பறவை ஜரிதா வேறு வழி
தெரியாமல் அழுதுகொண்டே விண்ணில் சுற்றிக்
கொண்டிருந்தது.
மூத்த ஆண் குஞ்சான ஜரிதாரி, ‘‘வரப்போகும் கஷ்டத்தை முன்கூட்டியே உணர்ந்து கடவுளைப் பிரார்த்திப்பவனே புத்திசாலி. அவன் கடவுள் அருளால் கஷ்டத்தைக் கடந்துவிடுவான்!” என்றது. சாரி, ஸ்தம்பமித்திரன், துரோணன் ஆகிய பிற மூன்று குஞ்சுகளும் அதை ஆமோதித்தன. அண்ணனுடன் சேர்ந்து பிரார்த்திக்கத் தொடங்கின. ‘‘அக்கினி பகவானே! நீயே சூரியன். நீயே மழை தருபவன். உன்னாலேயே உயிர்கள் உண்ட உணவு ஜீரணமாகிறது. நாங்கள் இளம் குழந்தைகள். எங்களிடம் இரக்கம் காட்டு. எங்களை அழிக்காதே!’’
இளம் குழந்தைகளின் மழலைப் பிரார்த்தனை அக்கினி பகவானைக் குளிரச் செய்தது. ‘‘உங்கள் தந்தைக்கு வரம் கொடுத்திருக்கிறேன். உங்களை அழிக்கமாட்டேன். உங்களுக்கென்று என்ன வரம் வேண்டும்?’’ என்று வெகு பிரியமாகக் கேட்டார்.
‘‘எங்கள் தந்தையை எங்களிடமிருந்து பிரித்த லபிதாவை நாங்கள் வெறுக்கிறோம். எங்கள் தந்தை எங்களுக்கு வேண்டும்!’’ என்றன அவை.
அக்கினி பகவான் சிரித்துக் கொண்டே ‘‘அப்படியே நடக்கும்’’ என்று சொல்லி படபடத்துப் பாய்ந்தார். அதோடு, தனியே மரக்கிளையில் அமர்ந்திருந்த லபிதாவைப் போகிற போக்கில் அள்ளி விழுங்கிச் சென்றுவிட்டார்!
தாய்ப்பறவை ஜரிதா அக்கினி அடங்கியதும் பாய்ந்தோடி வந்தது. சேதமில்லாமல் தன் குஞ்சுகள் இருப்பதைப் பார்த்ததும் அவற்றை அரவணைத்துக் கொண்டு மகிழ்ச்சியில் அரற்றியது.
அப்போது மந்தபாலமும் அங்கே வந்துசேர்ந்தது. மனைவி, பிள்ளைகளைக் கண்டு அழுதது. ஜரிதா கணவனை வெறுப்புடன் நோக்க, பிள்ளைகளோ பாசத்தோடு தங்கள் தந்தையிடம் சென்று அமர்ந்தன.
‘‘இந்தப் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று நான் தான் அக்கினி பகவானிடம் வரம் கேட்டேன். அத்தோடு அந்த சாகசக்காரி லபிதாவை இப்போது முற்றிலுமாகத் தலைமுழுகி விட்டேன்! என்னை மன்னிக்கக் கூடாதா?’’ என்று உருகியது மந்தபாலம்.
சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தது ஜரிதா. குழந்தைகளுக்குத் தந்தை முக்கியமல்லவா; திருந்தி மன்னிப்புக் கேட்பவரை ஏற்பதுதான் தர்மமல்லவா என்று சிந்தித்தது. மெல்லப் பறந்துபோய்த் தன் கணவன் அருகில் அது அமர்ந்தபோது குழந்தைகள் அப்போதுதான் முளைக்கத் தொடங்கிய தங்கள் சின்னஞ்சிறு சிறகுகளை அசைத்து ஆர்ப்பரித்தன. ஜரிதாவின் முகத்தில் வெட்கம் படர்ந்த அழகை ரசித்தது மந்தபாலம்.
மேலிருந்து இந்தக் காட்சியைப் பார்த்த அக்கினி பகவான் சிரித்துக் கொண்டார். முதல் மனைவியின் வாழ்வைக் கெடுக்கும் இரண்டாம் மனைவியை வாழ்க்கை நெருப்பு எரிக்கக் கடவது என்று அவர் விதி வகுத்தார்.
காலப்போக்கில் மந்தபாலம் மூப்படைந்து தளர்ந்து உயிர் விட்டபோது அதன் ஆன்மா சொர்க்கம் நோக்கிச் சென்றது. என்ன ஆச்சரியம்! மந்தபால ஆன்மாவை வரவேற்க சொர்க்கத்தின் கதவுகள் தயாராய்த் திறந்திருந்தன. இரு தேவிகள் அந்த ஆன்மாவை வரவேற்கப் பூரண கும்பத்தோடு காத்திருந்தார்கள். இயல்பிலேயே வழங்கப்பட்ட படைப்பாற்றலுக்கு நியாயம் செய்த மந்தபால ஆன்மா அப்படித்தான் சொர்க்கத்தைச்
சென்றடைந்தது.
(கிளையில் அமர்ந்து குடும்பம் நடத்திய சாரங்கப் பறவை பற்றிய இக்கதை, மகாபாரதத்தில் வரும் ஒரு கிளைக்கதை!)
No comments:
Post a Comment