பண்டைய நாளில் 'ரிது’ ஆவதற்கு முன்பு பெண் குழந்தைகளுக்குத் திருமணம் நடந்தேறிவிடும். அன்றைய நாளில், அவர்கள் ஜாதகங்களில் தென்படும் தசாபுத்தி அந்தரங்களோ, 7-ல் இருக்கும் கிரகமோ அவர்களது திருமணத்தைத் தடுத்து நிறுத்தியதில்லை. திருமணத்துக்கான இடையூறுகளை விலக்குவதற்காகப் பரிகாரத்தில் இறங்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை. உடல் ஊனமோ, மாறாப் பிணியோ இல்லாதவர்களுக்குக் கல்யாணம் தாமதமாகிக் கொண்டிருக்கவில்லை. நட்பில் இணைந்த அந்தச் சிறார்கள், பரிணாம வளர்ச்சியில் ஆசைகள் தலைதூக்கும்போது இணைந்து, ஆசைகளைச் சுவைத்து நிறைவு பெற்றுவிடுவார்கள். ஆகையால், திருமண முறிவுக்கும் இடமில்லாமல் இருந்தது.
இன்று முற்றிலும் மாறுபட்ட சூழலைச் சந்திக்கிறோம். திருமணத்தில் இணைவதற்கு இணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அவர்கள் பெற்றுவிட்டார்கள். பெற்றோரும் அவர்களிடம் ஒப்படைப்பதை விரும்பினார்கள். திருமணத்தை வாழ்வின் அடித்தளமாகப் பார்ப்பதில்லை. நுகர்பொருள்போல் ஒரு பகுதியாகவே பார்க்கிறார்கள். திருமணத்தில் இணைந்த பிறகு ஒத்துவரவில்லை என்றால், முறித்துக்கொள்வதையே தீர்வாகப் பார்க்கிறார்கள். விவாகரத்துகள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இயற்கையான முறையில் குழந்தை பெறுவது குறைந்துகொண்டு வருகிறது.
விஞ்ஞான முன்னேற்றத்தில் ஏற்பட்ட சமுதாய மாற்றத்தை ஏற்கும் மனித இனம், பறிபோகும் பண்பைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை. இன்றைய ஜோதிடத்துக்கு விவாகரத்தை இல்லாமல் செய்யவோ, குறைக்கவோ, பண்பைத் தக்க வைக்கவோ இயலவில்லை. ஆலோசனை அளித்து வந்த ஜோதிடம் வியாபாரத்தில் நுழைந்து, தனது முகத்தை மாற்றிக்கொண்டுவிட்டது. அதன் அறிவுரை நல்லதைவிட கெடுதலையும் சுமக்க வைக்கிறது. சமுதாய மாற்றம் அதன் தனி உருவத்தை மறக்கச் செய்துவிட்டது. ஜோதிடத்தை முறையாகப் படிப்பதில் ஆர்வம் இல்லை.
குருகுலவாசம் மறைந்துவிட்டது. பள்ளியிலோ கல்லூரியிலோ பாடத்திட்டத்தில் நுழைய இடம் தரவில்லை. அப்படியிருந்தும், எப்படியோ அது பூதாகாரமாக வளர்ந்திருக்கிறது. அது வளர்ச்சியா, வீக்கமா என்று தெரியவில்லை. சின்னத்திரையிலும் நாளேடுகளிலும் ஜோதிடம் தனியிடத்தைப் பிடித்திருக்கிறது. பாமரர்களை ஈர்க்கும் வகையில் ஜோதிடத்தை எளிமையாக்கித் தந்துள்ளது விஞ்ஞானம். அவர்களது சேவை சமுதாயத்தில் மகிழ்ச்சி பொங்க வைக்க வேண்டும்.
ஆண்- பெண் இருவரது இயல்பும் ஏதாவது ஒரு வகையில் மாறுபட்டி ருக்கும். இயல்புக்குக் காரணம் கர்மவினை என்பதால், மாறுபட்டுதான் இருக்கும். மாறுபட்ட இயல்பை, இன்பத்தைச் சுவைக்கும் வகையில் இணைப்பதே பொருத்தத்தின் குறிக்கோள். இயல்பை மாற்ற இயலாது என்ற கோட்பாட்டைப் பொய்யாக்கி, இணைய வைத்து, வாழ்வை முழுமையாகச் சுவைக்க வைப்பது அதன் வேலை.
ஆசையும் நேசமும் பாசமும் வளர்ந்தோங்கும் நிலையில், ஆசையைச் சுவைத்தே ஆகவேண்டும் என்ற எல்லையை எட்டும்போது, இயல்பு தற்காலிகமாக தன்னை மாற்றிக்கொண்டுவிடும். இன்பச்சுவையில் படிப்படியாக ஈர்ப்பு வளரும்போது, அதற்கு இசைவாக இயல்பு தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டுவிடும். நெருடல் தலைதூக்காத உறவானது நிரந்தரமாக்கப் பட்டுவிடும். ஒருவரின் இயல்பு மற்றவரின் இயல்பைத் தனதாக்கிக் கொண்டுவிடும்.
கணவன்- மனைவி உறவை மகிழ்ச்சியோடு விளங்கவைக்க, இருவரது மனத்தையும் ஒன்றாக இணையவைக்கச் சொல்லும் தர்மசாஸ்திரம். மனம் ஒன்றானால் இயல்பும் இணைந்துவிடும். மன ஒற்றுமையை ஜாதகத்தில் ஆராய வேண்டும். மனவியல் பின்னணியில் அதன் ஒற்றுமையை வரையறுக்க வேண்டும்.
ஜாதகப் பொருத்தம் மனம் சார்ந்த விஷயம்; உடல் சார்ந்தது அன்று. பிறப்பின் முழுமையை எட்டத் தேவையான விஷயங்கள் அத்தனையும் படைப்பில் சேமிக்கப்படுவது இல்லை. பிறரிடம் இருந்து பெற்று, உள்வாங்கி, குறையை அகற்றி நிறைவு செய்துகொள்ள வேண்டும்.
புருஷன் தன்னிடம் உள்ள குறையை நிறைவு செய்ய, பெண்ணிடம் இருந்து பெற்று நிறைவு பெறவேண்டும். பெண்ணினமும் ஆணினத்திடம் இருந்து பெற்றுதான் முழுமை பெறவேண்டும். ஆக, திருமணத்தில் இருவரும் முழுமை பெறுகிறார்கள். பிறப்பின் முழுமையைத் திருமணம் உறுதி செய்கிறது. ஆணானவன் மனமுவந்து பெண்ணை மகிழ்விக்க நினைத்தால் மட்டுமே பெண்ணுக்கு மகிழ்ச்சி இருக்கும். அவள் தன்னிச்சையாக மகிழ்ச்சியை வரவழைத்துக் கொள்ள இயலாது. இந்த பலவீனமே அவளை அபலையாக்கியது. படைப்பில் ஏற்பட்ட உடலுறுப்புகளின் அமைப்பு அதற்குக் காரணம்.
இரு மனமும் ஒரு மனமாக மாறும் வேளையில் மகிழ்ச்சி சாத்தியமாகிறது. பிரச்னைகளை எதிர்கொள்ளும் வேளை யில், சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் வெளி வருவதற்கு மன ஒற்றுமை உதவும். தாம்பத்தியத்தின் வெற்றி மன ஒற்றுமையின் இறுக்கத்தில் ஈடேறும்.
கல்வி, பதவி, செல்வம், இளமை, பெருமை ஆகியவற்றில் சமமாக இருப்பது மட்டுமே மன ஒற்றுமைக்கு அளவுகோல் ஆகாது. இப்படி எதிர்பார்ப்பவர்களே பெரும்பாலும் விவாகரத்தைச் சந்திக்கின்றனர்.
ஆண்- பெண் இருவரது ஆயுளையும் முதலில் ஆராய வேண்டும். அல்பாயுள் யோகம், மத்யாயுள் யோகம், அகால மிருத்யு, அபமிருத்யு, துர்மரணம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டும் கிரக அமைப்பை ஆராய வேண்டும். தீர்க்காயுள் யோகங்களை அட்டவணை இட்டு, விரிவாக விளக்கம் அளிக்கும் ஜோதிடம். நீண்ட ஆயுள் இருக்கும் யோகம் இருந்தால், இடையிலேயே ஆயுளைத் துண்டிக்கும் யோகம் அடிபட்டுவிடும் என்ற முடிவுக்கு வரக்கூடாது.
தீர்க்காயுள் யோகம் எல்லோருக்கும் பொதுவானது. அதற்கு ஸாமான்ய யோகம் என்று பெயர். மற்றவை விசேஷ யோகம். அவை எல்லோரிலும் இருக்க இடமில்லை. அங்கு விசேஷ யோகம்தான் நடைமுறைக்கு வரும்; ஸாமான்யம் அடிபட்டுவிடும்.
தொடர்வண்டியில் நமக்குப் பிடித்த இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் உரிமை இருந்தாலும், முன்பதிவு செய்தவனின் இருக்கையில் நாம் அமர்ந்து பயணிக்க இயலாது. இங்கு, விசேஷ நியமமானது ஸாமான்ய நியமத்தை வலுவிழக்கச் செய்கிறது.
எனவே, முதலில் ஆயுளை ஆராய்ந்து தெரிந்துகொள்ளல் வேண்டும். பின்னர், அதன் தரத்தை வரையறுக்க வேண்டும். ஆயுள் இல்லாதவனுக்கு ஜாதகத்தில் சொல்லும் பெருமைகள் அத்தனையும் நடைமுறைக்கு வராது (பூர்வம் ஆயு: பரீஷேத). மனைவி, குழந்தைகள், செல்வம், செல்வாக்கு, பெருமை, அங்கீகாரம் எல்லாம் இருப்பதால், அதை உறுதி செய்ய ஆயுள் இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடாது. விதண்டாவாதங்கள் ஜாதக விஷயத்தில் அரங்கேறாது.
அதன்பிறகு, திருமணத்தை அவர்கள் சந்திப்பார்களா என்று ஆராயவேண்டும். நித்ய பிரம்மசாரி, துறவி, அலி போன்ற யோகங்களை ஆராய்ந்த பிறகு, 7-ஆம் பாவத்தை ஆராய வேண்டும். 7 செழிப்பாக இருந்தாலும், முன்சொன்ன குறைகள் திருமணத்தைச் சுரத்தில்லாமல் செய்துவிடும். அப்படித் திருமணம் நடந்தாலும் ஆயுள் வரை அவளது தொடர்பு நீடிக்குமா என்று ஆராய வேண்டும். அதை அறியப் போதுமான தகவல்கள் உண்டு. நீட்டிப்பு மகிழ்ச்சியோடு இருக்குமா என்றும் ஆராயவேண்டும்.
இருவருக்கும் மகிழ்ச்சி அளிப்பதில் மழலைச் செல்வமும் ஒன்று. குறையில்லாத குழந்தைகள் இருக்குமா என்று ஆராய்வதற்கு ஏராளமான தகவல்களைத் திரட்டித் தந்துள்ளது ஜோதிடம்.
சந்தான அரிஷ்டம், சந்தான அபாவம், அனுபவச் சந்தானம், தத்த புத்திர யோகம், வம்சவிச்சேத யோகம் ஆகியவற்றை ஆராய்ந்த பிறகு, குழந்தைச் செல்வத்தின் நிறையைக் கவனிக்கவேண்டும். வசவசவென்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளச் சொல்லாது அது. இருவரது ஆனந்தத்தின் முடிச்சு குழந்தைச் செல்வம் என்பார் பவபூதி (ஆனந்தக்ரந்திரேகோயம் அபத்யமிதிகத்யதே).
தம்பதியின் நீண்ட நெருக்கத்தை உறுதி செய்கிறது குழந்தைகளின் எண்ணிக்கை. நிறையக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் தகுதி இருந்தாலும், அதன் ஆணிவேரை அறுத்துக் கொண்டு குழந்தைகளைக் குறைத்துக்கொள்ளும் போக்கு இன்று பரவலாகக் கடைப்பிடிக் கப்படுகிறது. தேவைகளை வளர்த்துக் கொண்டு, அதை நிறைவு செய்யப் பணம் ஈட்டுவதில் முனையும் வேளையில் ஏற்படும் மனப் போராட்டமானது, குழந்தைகளைக் குறைத்துக் கொள்ள ஊக்கம் அளிக்கிறது. தாம் சேமித்த நுகர்பொருட் களில் மற்றும் ஒருவர் பங்காளியாக வருவதை விரும்பாத சுயநலம், குழந்தைகளைக் குறைத்து நிம்மதி தேடுகிறது என்றுகூடச் சொல்லலாம்.
பிறப்பில் இருந்து ஆரம்பமாகும் தசா காலங்கள் அவர்களது வாழ்வில் சந்திக்கும் இன்ப- துன்பங்களின் அளவை வரையறுக்கும். ஆகவே, வாழ்வின் எல்லையை எட்டும் வரை நிகழும் தசா காலங்களின் தரத்தை ஆராய்ந்து முடிவை எட்ட வேண்டும். விரும்பாத தசா காலங்களை எதிர்த்து முறியடிக்கும் மன உறுதியை ஆராய்ந்து தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு உறுதுணையாக, அதாவது மனஉறுதியை ஈட்ட பரிகாரங்கள் வாயிலாக வெற்றிபெற இயலுமா என்றும் ஆராயவேண்டும். இத்தனை விஷயங்களையும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிந்துகொள்ளும் வகையில் ஜாதகத் தகவல்கள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. அவசரம் அவசரமாக ஆராய்ச்சியில் இறங்காமல் தகவல்களை ஆராய்ந்து அறிந்துகொண்டால் போதுமானது.
நிறைய பந்துக்கள், நன்னடத்தை, ஒழுக்கம், கல்வி, ஆண்- பெண் இலக்கணம், ஆண்மை, பெண்மை, இருவருக்கும் குழந்தைகள் பெறும் தகுதி, நோயின்மை ஆகிய அத்தனையும் இருவரிடமும் இருந்தால், அவர்கள் திருமணத்தில் இணைய முதல் தகுதி பெற்றவர்கள் என்கிறது தர்மசாஸ்திரம் (பந்துசீல லக்ஷண ஸம்பன் னாம் அரோகாம் உபயச்சேத).
நட்சத்திரப் பொருத்தத்தை நம்பி இணை சேர்ப்பது என்பது, விரும்பிய பலனை அளிக்காது. ஆயுள், செல்வம், கல்வி, வேலை, குழந்தைகள் அத்தனையையும் நட்சத்திரப் பொருத்தத்தில் அறிய இயலாது. கண்ணுக்குப் புலப்படாத வருங்காலத்தை நட்சத்திரப் பொருத்தம் வரையறுக்கும் என்பது சிந்தனைக்குப் பொருந்தாத ஒன்று.
அன்பும், பண்பும், சகிப்புத்தன்மையும், மனோதிடமும் வலுவாக இருந்தால், ஜாதகம் பார்க்கவேண்டிய தேவையே எழாது. இதெல்லாம் இல்லாதவரிடத்தில் ஜாதகப் பொருத்தம் பலன் அளிக்காது. பிற்பாடு வந்த ஜோதிடர்கள் ஜாதகப் பொருத்தத்தை விரிவுபடுத்தி எல்லோரிடத்திலும் திணித்தார்கள். வாழ்க்கை அவலமாகப் போகக்கூடாது என்ற நல்லெண்ணம் ஜாதகப் பொருத்தத்தைக் கட்டாயம் ஆக்கியது.
கர்ம வினையின் தாக்கம் அவன் வாழ்க்கையை நரகமாக்கக் கூடாது என்பதால், எச்சரிக்கையோடு வருங்காலத்தை ஆராய்ந்து விழிப்பு உணர்வை அளித்துத் தேற்றிவிடுவது அதன் குறிக்கோள்.
எல்லோரும் இன்பத்தைச் சுவைக்க வேண்டும்; ஒருவர்கூட துயரத்தைத் தொடக்கூடாது என்ற ஸனாதனத்தின் கூற்றை நடைமுறைப்படுத்தும் எண்ணத்தில் ஜாதகப் பொருத்தம் உதயமானது. காலத்தில் எடுக்கும் முயற்சி பலன் அளிக்காமல் இருக்காது (காலேகலு ஸமாரப்தா: பலம்...) என்கிற ஸனாதனக் கோட்பாடு ஜாதகப் பொருத்தத்தை உண்மையாக்குகிறது.
No comments:
Post a Comment