ஒரு கிராமத்தில் ஓர் இளைஞர் மிகப்பெரிய பணக்காரர் ஆனார். அவர் வம்சத்தில் யாருமே அப்படிச் செல்வம் சேர்த்தது கிடையாது. அவர் பாரம்பரியமே ஏழ்மையில் வாழ்ந்து வந்தது. இந்தப் புதிய பணக்காரரின் தந்தையும் கூட இரண்டு, மூன்று மாடுகளை மேய்த்து, அரை ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்து, வாய்க்கும் கைக்குமாக வாழ்ந்து வந்தவர்தான். ஆனால் இந்த இளைஞர் பணக்காரர் ஆனவுடன் அந்த ஊரில் பலர் "இவருக்கு யோகமப்பா' என்றுதான் கூறி வந்தார்கள். ஆனால் இவர் எப்படி செல்வந்தராக மாறினார் என்பதைக் கூர்ந்து பார்க்கவில்லை. இந்த மனிதர் ஒரு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் மின் வேலை செய்வதற்கான ஒரு பயிற்சியைப் பெற்று, ஒரு சான்றிதழ் பெற்று, அத்துடன் தனக்கிருந்த அரை ஏக்கர் நிலத்தைத் தன் தந்தையை வற்புறுத்தி விற்றுவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார். பத்து ஆண்டுகள் கழிந்தன. பத்தாண்டு கடின உழைப்பின் பிரதிபலன், ஊருக்கு வந்தார், தன் தாய், தந்தையர் தங்கி இருந்த உடைந்துபோன ஒரு கொட்டகையைப் பிரித்து எறிந்துவிட்டு முப்பது லட்ச ரூபாய்க்கு வீடு கட்டினார். அத்துடன் ஒரு கார் ஒன்றையும் வாங்கினார். இந்த இரண்டும் நடந்தவுடன் நல்ல குடும்பத்திலிருந்து அவருக்குப் பெண் தந்தனர். திருமணமாகியது. ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவருக்குத் தன் முயற்சியாலும் உழைப்பாலும் உயர்ந்த காரணத்தால் ஒரு நல்ல குடும்பத்திலிருந்து பெண் கிடைத்ததால், அவரின் சமூக அந்தஸ்து உயர்ந்தது. இது எப்படி நடந்தது என்பது தான் முன்னேற்றத்தின் சூட்சுமம். பெரும்பாலானவர்கள் இந்த மாற்றங்களின் விதிகள் யாவை என்பதனைப் புரிந்து கொள்ளாமல், இவர் பெற்ற வெற்றிக்கு யோகம் என்று பெயர் சூட்டிவிட்டனர். உண்மையில் அவர் செய்தது ஒரு சாதனை. இந்தச் சாதனையைச் செய்ய பல அடிப்படை வேலைகளைச் செய்திருக்கிறார் அந்த மனிதர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு சாதனைக்கும் பின்னால் பல சோதனைகள் மற்றும் வேதனைகள் இருக்கின்றன என்பதை நம்மில் பலர் புரிந்து கொள்வதில்லை.
வெளிநாட்டில் அவர் எலக்ட்ரீஷியன் (மின்வேலை) வேலை செய்ததால், அவருடைய வேலைகள் அனைத்தும் மரபு வழி பயன்படுத்திய உபகரணங்களை வைத்துச் செய்வது கிடையாது. வெளிநாட்டில் முதலில் அவர் கற்றுக் கொண்டது உலகத் தரமான கருவிகளை உபயோகப்படுத்தி மின் வேலைகள் செய்வதற்கு. எனவே தன் பத்து ஆண்டு காலப் பணியில் இந்தக் கருவிகளை உபயோகப்படுத்தியதன் விளைவு, நேர்த்தியான மின் வேலைகள் செய்வதற்கு அவர் நல்ல தகுதியைப் பெற்றிருந்தார். இதன் விளைவு பத்தாண்டு உழைப்பும் மிகப்பெரிய அளவிற்குச் செல்வம் சேர்ப்பதற்கு உதவியது. பத்தாண்டுகளுக்குப் பிறகு ஊர் திரும்பிய போது முதல் தரமான ஜெர்மானிய கம்பெனி தயாரித்த கருவிகளைக் கொண்டு வந்திருந்தார். மீண்டும் வெளிநாடு செல்ல அவர் விரும்பவில்லை. ஏன் என்றால், இந்தியாவிலும் அதிகம் சம்பாதிக்க வாய்ப்பிருப்பதாகவே அவர் கருதினார். எனவே, முதலில் தனக்குத் தெரிந்த ஒரு திறமையை வைத்துக் கொண்டு ஒரு நல்ல மதிக்கத் தகுந்த வாழ்க்கையை வாழ்வது எப்படி என்பது பற்றி யோசிக்கத் தொடங்கினார். உடனே கிராமங்களில் எப்படி மின் வேலைகள் நடைபெறுகின்றன, எப்படி இந்த மின் வேலைகள் செய்வோர் வாழ்க்கை இருக்கிறது, எப்படி வேலைப்பாட்டின் நேர்த்தி இருக்கிறது, இந்த வேலைகள் புதிதோ, பழையதோ, எப்படி எந்த அமைப்புக்கள் மூலம் செய்யப்படுகிறது என்பதனை கிராமம் கிராமமாக சுற்றிப் பார்த்து மின் வேலை செய்வோர் மற்றும் வீடு கட்டுவோர், ஒப்பந்தக்காரர்கள் அனைவரிடமும் பேசி புள்ளிவிபரங்களையும் கருத்துக்களையும் சேகரித்துக் கொண்டார். எனவே கிராமங்கள் பலவற்றில் கட்டப்பட்ட கட்டடங்களை, வேலை செய்யும் மின் வேலைக்காரர்கள், அவர்களின் வேலைகள் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு, ஒன்றைப் புரிந்து கொண்டார். கிராமங்களில் கட்டப்படும் வீடுகளுக்குத் தரமான எலக்ட்ரிகல் வேலை செய்வது இல்லை என்பதை உணர்ந்தார். அது மட்டுமல்ல, இந்தத் தொழிலில் ஈடுபட்ட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் நல்ல ஊதியம் கிடைக்கவில்லை என்பதையும் புரிந்து கொண்டார். அவர்கள் வாங்கும் சம்பளம் என்பதும் மிகப்பெரிய அளவில் அவர்கள் வாழ்க்கை மேம்பட பயன்படுவதாக இல்லை. வீட்டுக்காரர்களுக்கும் தரமான வேலை செய்ய நல்ல மின் வேலை செய்வோர் கிடைக்கவில்லை. அது மட்டுமல்ல, வீட்டுக்காரரின் தேவைகளும் பூர்த்தி செய்யப்படுவது இல்லை, குறித்த நேரத்தில் வேலைகளும் நடைபெறுவது இல்லை, தரமான மின் சாதனங்கள் பயன்படுத்தப்படுவதும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டார்.
இந்த அடிப்படைச் செய்திகளை வைத்துக் கொண்டு ஓர் உண்மையை புரிந்து கொண்டார். அதாவது, மக்களுக்குத் தரமான மின் வேலை செய்து தர ஆட்கள் தேவை. அதே நேரத்தில் மின் வேலை செய்யும் தொழிலாளிகள் இருக்கிறார்கள், அவர்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் வேலை செய்யும் திறன் இல்லை. இவர்களுக்குத் திறன் கூட்டப்பட்டுவிட்டால், நல்ல நேர்த்தியான வேலைகள் செய்து தந்தால், அதிகம் சம்பாதிக்கலாம். இதற்கு ஏதாவது ஒரு வகையில் அமைப்புகள் தேவை என்பதை உணர்ந்தார். அதனால், தன்னிடம் இருக்கும் கருவிகளை உபயோகப்படுத்தி வீடு கட்டுவோர்க்கு நேர்த்தியாக மேலை நாடுகளில் இருக்கும் வசதிகளை உருவாக்கித் தந்துவிட வேண்டும். அதே நேரத்தில் இந்தப் பணியில் இந்த எலக்ட்ரீஷியன்களுக்கும் நல்ல ஊதியம் கிடைக்க வேண்டும், தரமான வேலைகளும் நடைபெற வேண்டும், தனக்கும் ஒரு கணிசமான அளவுக்கு வருமானம் வர வேண்டும். இவை அனைத்தும் நடைபெற என்ன செய்ய வேண்டும் என்று எண்ணியபோது ஓர் உண்மையினைக் கண்டுபிடித்தார். அதாவது தனியாக ஒரு வீட்டுக்காரரிடம் ஒரு எலக்ட்ரீஷியனை நேராக தொழிலுக்கு அனுமதிக்கும்போது ஒன்று, தொழிலாளியாக இருந்தால் வீட்டுக்காரர் ஏமாற்றப்படுவார்; வீட்டுக்காரராக இருந்தால் தொழிலாளி ஏமாற்றப்படுவார். இருவரும் ஒருவரையொருவர் ஏமாற்றாமல், இருவருக்கும் நிறைவு தரத்தக்க வேலை நடைபெற வேண்டுமானால், அதற்கு ஏதாவது ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அந்த அமைப்புத்தான் இருவரையும் பாதுகாக்கும். அது மட்டுமல்ல, இருவரும் தங்கள் மரியாதையைக் காத்துக் கொள்ள முடியும். அத்துடன், அமைப்புரீதியாகச் செயல்படும்போது அதன் வீச்சு, பலம், அதற்கான ஆதரவு, உதவிகள் அனைத்தும் மேம்பட்டவையாக இருக்கும். ஒரு தனி மனிதன் வங்கியில் கடன் கேட்பதற்கும், ஓர் அமைப்பு அல்லது நிறுவனம் கடன் கேட்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஓர் அமைப்பு என்பது பலரின் கூட்டு முயற்சி. எனவே அமைப்பிற்குக் கடன் கிடைப்பது எளிது. எனவே, ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு ஓர் அமைப்பை உருவாக்க எண்ணி பல்வேறு இடங்களுக்குச் சென்று, மின் பணியாற்றுகின்ற வேலை தெரிந்த, கற்றுக் கொண்டிருந்தவர்களைச் சந்தித்து ஓர் உறுதிமொழியைத் தந்தார். "அடுத்த மாதத்திலிருந்து உன் வருமானத்தை இரட்டிப்பாக்கித் தருகின்றேன். நீ செய்ய வேண்டியது ஒரு அமைப்பில் உறுப்பினராக வேண்டும். அடுத்து புதிய முறையில் உங்கள் தொழிலைச் செய்ய வேண்டும். அதற்கு நான் வழிவகை செய்கிறேன்'' என்றார். வருமானத்தை இரட்டிப்பாக்க யார் மறுப்பார்கள். அவர் சந்தித்த எலக்ட்ரீஷியன் அனைவரும் சம்மதித்தனர். ஏன் சம்மதித்தனர் என்றால், சொன்னவர் சாதித்தவர் என்பது அனைவருக்கும் தெரிகிறது. எனவே அனைவரையும் தனியாகத் தொழில் செய்வதை நிறுத்தச் சொன்னார். அடுத்த மாதமே அனைவரும் தனியாக தொழிலுக்குச் செல்வதை நிறுத்திவிட்டனர்.
உடனே ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். நிறுவனம் என்றால் என்ன? வேறொன்றும் இல்லை, ஒரு சிறிய அறை ஒரு நகரத்தில், அதற்கு ஒரு விலாசம், ஒரு தொலைபேசி எண், அந்த அலுவலகத் தொடர்புக்கு ஒரு ஆள் வேலை செய்ய, அவ்வளவுதான். அதுதான் அவர்களின் அமைப்பு. தன் நிறுவனத்திலிருந்து உத்தரவு வந்தால் வேலைக்குச் செல்வார்கள், தனியே அழைத்தால் அனைவரிடமும் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறிவிடுவார்கள். அத்தனை மின் வேலை செய்வோரையும் தன் நிறுவனத்துடன் இணைத்துவிட்டார்.
மின் வேலை பார்ப்பதைத் தங்கள் நிறுவனம் சொன்னால் தான் வேலை பார்ப்பது. அவர்கள் எந்த வீட்டில் வேலை பார்த்தாலும், தங்களுக்கு வரும் சம்பளம் என்பதை தன் நிறுவனம் பெற்றுத் தர வேண்டும் என்ற நியதியை ஏற்படுத்திவிட்டனர். வெளிநாட்டில் வேலை செய்த அனுபவத்தால் வேலைகள், அதற்கான கூலி, இவைகளை இந்தத் தலைவர் எளிதாக நிர்ணயம் செய்துவிட்டார். செய்தது மட்டுமில்லாமல், இதற்கான பட்டியல் போட்டு அவைகளை அச்சடித்து வைத்துக் கொண்டார். தங்களுக்கென்று ஒரு அலுவலகம் ஒரு நகரத்தின் மையப்பகுதியில் உருவாக்கிக் கொண்டுவிட்டார். தாங்கள் வேலை பார்ப்பதற்கு வேலை பார்த்த வீடுகளில் கூலி வாங்குகிறோம் என்ற நிலையிலிருந்து மாதந்தோறும் கம்பெனி நமக்குச் சம்பளம் தருகின்றது என்ற நிலைக்கு வந்துவிட்டதாக அனைவரும் எண்ணத் தொடங்கிவிட்டனர். அந்த அலுவலகத்தை நிர்வகிக்க மூன்று பெண்களை பகலுக்கும், மூன்று ஆண்களை இரவுக்குமாகப் போட்டு, இருபத்தி நான்கு மணி நேரமும் சேவை செய்ய ஆரம்பித்துவிட்டனர். இரவு நேரப் பணிகளுக்குத் தனிக் கட்டணம் போட்டு வசூலித்துவிட்டனர். எந்தப் பணிக்கும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள், அலுவலக எண்கள் மட்டுமே. அச்சடித்த புத்தகத்தில் அலுவலக தொலைபேசி எண் மட்டும்தான் இருக்கும். அலுவலகத்தில் அந்தப் பகுதியின் ஒட்டுமொத்த வரைபடம், அருகாமையில் உள்ள கம்பெனியின் எலக்ட்ரீஷியன் கைபேசி எண்கள் இருக்கும். எனவே, கம்பெனி மட்டும் தான் எலக்ட்ரீஷியனை அழைக்க முடியும். புதிய வீடுகள் கட்டக்கூடியவர்கள் தங்கள் ஒப்பந்தக்காரர் மூலம் இவர்களிடம் தொடர்பு கொள்ள ஆரம்பித்தனர். அதே போல் பழைய வீடுகளில் உள்ள சிறு, சிறு வேலைகளுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டால், அடுத்த கணம் அவர்கள் வீட்டுக்குச் சென்று தங்கள் வீட்டின் வேலைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, ரசீது கொடுத்து, பணம் பெற ஆரம்பித்தனர். எந்த வேலைக்கு எவ்வளவு என்று பட்டியல் உள்ளது. எனவே எந்தவித ஏமாற்றமும் வீட்டுக்காரருக்கும் இல்லை, மின் வேலை செய்கின்ற பணியாளர்களுக்கும் இல்லை. பட்டியலில் உள்ள தொகை மட்டும் தான் ரசீது கொடுத்து பெறப்படும். எனவே ஒட்டுமொத்த தொழில் முறையே மாறிவிட்டது. இந்த நண்பர்கள் தொழிலுக்குச் செல்லும் போது இப்போது புதிய கருவிகளைக் கொண்டு வேலை செய்து கொடுப்பது நேர்த்தியாக இருப்பதால் வீட்டுக்காரர்களுக்கு ஒரு மகிழ்ச்சி. எந்த வேலைக்கு எவ்வளவு கூலி தர வேண்டும் என்று முன்பே தெரிந்து இருப்பதால், வீட்டுக்காரர்களுக்கு நாம் சரியான கூலியைத்தான் தந்துள்ளோம் என்ற மனநிறைவு, வேலை செய்த நண்பர்களுக்கு ஏதோ கூலி வாங்குகின்றோம் என்ற உணர்வில்லாமல், நாம் செய்த வேலைக்கு நம் கம்பெனிக்கு வீட்டுக்காரர்கள் பணம் கட்டுகிறார்கள் என்ற உணர்வு. ஏனென்றால், இவர்கள் மாதந்தோறும் கம்பெனியில் தான் சம்பளம் பெறுகின்றனர். கம்பெனி என்பது அனைவரின் நிறுவனம். எனவே, கம்பெனியை அனைவரும் பாதுகாக்க முனைகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, எல்லாத் தொழிலாளிகளும் மேலை நாட்டில் தயாரிக்கப்பட்ட கருவிகளை உபயோகப்படுத்தி வேலை செய்ய கற்றுக் கொண்டது தான் இவர்களின் வருமானத்தைக் கூட்டியதற்கான காரணம். அடுத்து இவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிறுவனம் மூலமாக வேலை செய்வது என்பது இவர்களுக்குப் புதிய மரியாதையை ஏற்படுத்தியது.
மூன்றாவது, எங்குச் சென்று இவர்கள் வேலை செய்தாலும் வீட்டுக்காரரின் நிறைவுதான் அடிப்படை என்ற கோணத்தில் இந்தக் கருவிகளுடன் வேலை செய்து வீட்டுக்காரர்களைத் திருப்திப்படுத்துவது இவர்களின் வெற்றிக்கு அடுத்த காரணம். இரு நூற்றுக்கும் மேற்பட்ட இந்தத் தொழில்நுட்ப தொழிலாளர்களை ஒன்றிணைக்க கடினமாக உழைத்தார். அடுத்து, வீட்டுக்காரர்களிடம் எப்படித் தரமான வேலைகளை நிறுவனம் மட்டும்தான் செய்ய முடியும் என நம்ப வைக்கக் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது. அடுத்து, என்ன வேலைக்கு என்ன கூலி என்பதை மிகப்பெரிய கள ஆய்வுக்குப் பிறகு அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு நிர்ணயம் செய்தார். இந்தச் செயல்பாடுகளில் கீழ்க்கண்டவைகள் அனைவருக்கும் சாதகமானவைகள்:
ஒன்று, எல்லாத் தொழிலாளர்களும் முன்பைவிட கூடுதல் சம்பளம்; இரண்டு, தொழிலாளர்கள் மேற்கத்திய நுண்கருவிகள் கொண்டு நேர்த்தியாக பணிகள் செய்ய கற்றுக்கொண்டு தங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டனர்; மூன்று, தங்கள் செயல்பாடுகளில் தங்கள் திறமைகள் நிறுவனம் மூலம் மதிக்கப்படுவதை உணர்ந்து தங்கள் சுயமரியாதையை பாதுகாத்து உயர்த்திக் கொண்டனர்; நான்கு, தங்களுக்கென்று ஒரு நிறுவனம் கட்டி, அதன் மூலம் வீடு வாங்குவதற்கு, பைக் வாங்குவதற்கு, கருவிகள் வாங்குவதற்கு வங்கிகளில் கடன் வாங்கி முன்னேற்றச் செயல்பாடுகளில் ஈடுபட முனைந்துள்ளனர்; ஐந்து, வீடுகளில் பியுஸ் கேரியர் போட்டு, சிறு சிறு பணிகள் செய்து, பல நாட்களில் அந்த வேலையும் இல்லாமல் இருந்தவர்களுக்கு மாதச் சம்பளம் கிடைக்க ஆரம்பித்ததுடன், கூடுதல் சம்பளமும் கிடைக்கிறது, மரியாதையும் கிடைக்கிறது. புதிய பெரிய வீடுகளில், வணிக வளாகங்களில் புதிய வேலைகளில் ஈடுபடுவது அவர்களையே அவர்களால் நம்ப முடியவில்லை; ஆறு, இதுவரை ஆள் தேடி அலைந்து, அரைகுறை வேலை வாங்கி, கூலி கொடுக்கும் போது அவர்களுடன் தகராறு செய்து களைத்துப்போன வீட்டுக்காரர்கள் தொலைபேசியில் பிரச்சனையைச் சொன்னால் உடன் வந்து வேலையை நேர்த்தியாய் செய்து, பட்டியலில் உள்ள கூலியை எந்தத் தகராறும் செய்யாமல் கொடுத்து நிறைவு பெறுகின்றனர். இதன் ஒட்டுமொத்த விளைவு, ஒரு தனி மனிதனின் சிந்தனையில் ஒரு அமைப்பு உருவானது, தொழிலாளர்கள் இணைக்கப்பட்டனர் அமைப்புரீதியாக, அவர்களின் நுட்பத்திறன் வளர்க்கப்பட்டு, சிறப்பான பணிபுரிய வாய்ப்பும் ஏற்படுத்தியது. இதன் பின்னணியில் ஒரு தனி மனிதனின் போராட்டம் நடந்துள்ளது. இதன் விளைவு, எல்லாருக்கும் நன்மை கிடைத்தது. இதைத்தான் "ஜ்ண்ய் ஜ்ண்ய்'' எனக் கூறுகிறோம். எல்லோருக்கும் நன்மை, யாருக்கும் இழப்பில்லை. இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி, முன்னேற்றத்திற்கு மாற்றுச் சிந்தனை தேவை, புதிய அமைப்புத் தேவை. அத்துடன், தொழில்நுட்பத்துடன் பணிகள் செய்யும் போது பணி மேன்மைப்பட ஆரம்பிக்கின்றது. ஒரு தனி மனிதனின் சிந்தனை எத்தனை பேருக்கு நன்மை பயக்கின்றது என்பதுதான் நாம் நிதர்சனமாகக் காணும் உண்மை. வெளிநாட்டில் பெற்ற வருமானத்தை நம் நாட்டிலேயே பெற முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
No comments:
Post a Comment