‘பெரிதாக குறிவை’ என்பது ஆரம்பத்தில் மிகக் கடினமானதாகத் தோன்றும். ஏனென்றால் நம் வாழ்நாள் முழுவதும் இதற்கு மாறான முறையில் வேலை செய்தே பழகிவிட்டோம். இன்றைக்கு நம்மிடையே இருக்கும் நடைமுறை விதிகள் எல்லாம் ‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’, ‘இருப்பதை விட்டு விட்டுப் பறப்பதைப் பிடிக்க நினைக்காதே’, ‘தேன்கூட்டில் கல் எறியாதே’ என்பன போன்றவை. இப்போது இருக்கும் இடத்திலேயே இருந்தால் போதும், மாற்றம் கூடாது என்பதையே வலியுறுத்துகின்றன.
நமக்கேற்ற புதிய சவால்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? மலை ஏறும் விளையாட்டு வீரன் டாட் ஸ்கின்னரைக் கேட்டால் சொல்வார். ‘ஒரு மலையைப் பார்த்தவுடன் உங்கள் மனதில் பயம் எழவில்லையா? அப்படியானால் ஏறுவதற்கு மிகவும் சுலபமான மலையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்டீர்கள். உண்மையான சவால் என்றால் அதை நினைக்கும்போதே மனத்தில் பிரமிப்பான பயம் ஏற்பட வேண்டும். உங்கள் தற்போதைய வலிமைக்கு உட்பட்ட மலையில் ஏறுவது என்றால் அதில் செலவிடும் நேரம், உழைப்பு எல்லாமே வீண். அது மட்டுமல்ல, பெரிய சாதனை ஒன்றைச் செய்யும் வாய்ப்பையும் தவறவிடுகிறீர்கள்!
மற்றவர்களெல்லாம் முடியாத காரியம் என்று கைவிட்டவற்றை எடுத்துக்கொண்டு மோதிப் பார்த்துவிடுகிற மனம்தான் இதற்கு அடிப்படைத் தேவை. சூரத் நகரத்தில் பிளேக் நோய் பரவிவிட்டது. இப்போது ஊரையே சுத்தப்படுத்தியாக வேண்டும். அதிகாரிகள் எல்லோரும் இதில் கை வைக்கப் பயந்தார்கள். பதவிக்கே ஆபத்து வரவழைக்கக் கூடிய விஷயம் இது. அந்த நேரத்தில் ஒரே ஒரு அதிகாரி மட்டும் ‘நான் செய்கிறேன்’ என்று முன்வந்தார். அவர்தான் எஸ். ஆர். ராவ். இருபதே மாதங்களில் வெற்றிகரமாக வேலையைச் செய்து முடித்தார். இன்றைக்கு பல வருடம் கடந்துவிட்டது. இன்றும் கூட சூரத் மக்களுக்கு அவர்தான் சூப்பர் ஸ்டார்!
இங்கு எஸ். ஆர். ராவ் மட்டுமல்ல இன்னும் பலர் பெரிதாக குறி வைத்து அவற்றை சாதித்து காட்டுகிறார்கள்.
வரப்ரசாத் ரெட்டி: இந்தியாவிலிருந்து மஞ்சல் காமாலையை (ஹெபடைடிஸ்-பி) ஒழித்துக்கட்டப் போகிறேன் என்று புறப்பட்டார்.
ஜி. வெங்கடசுவாமி: உலகம் முழுவதில் பார்வைக் குறைபாடு உடையவர்கள் அனைவருக்கும் பார்வை தரப்போகிறேன் என்று கூறியதுதான் இன்று அரவிந்த் கண் மருத்துவமனையாக உருவெடுத்துள்ளது.
டைட்டான் கைக் கடிகார நிறுவனத்தின் செர்க்லெஸ் தேசாய் உலகிலேயே மெலிய நீர் புகாத கைக் கடிகாரம் தயாரிக்க முனைந்தபோது அவருடைய வல்லுநர்களே ‘அது எங்களால் இயலாத காரியம்’ என்றுதான் சொன்னார்கள். இது ‘ஸ்விட்சர்லாந்துகாரர்களாலேயே முடியாத விஷயம். நம்மால் எப்படி முடியும்?’ என்றார்கள். ஆனால் தேசாய் விடவில்லை; அவருடைய அணியும் சளைக்க வில்லை. கடைசியில் அதே எஞ்சினியர்கள், ‘அட! நம்மிடமும் இந்தத் திறமை ஒளிந்திருக்கிறதே!” என்று கண்டுபிடித்தார்கள். நம்மால் என்ன சாதிக்க முடியும் எனபதற்கு அளவுகோலாக, நாம் இதுவரை சாதித்தவற்றையே வைத்துக்கொள்வது கூடாது, அப்போது ஓர் எல்லைக்கு மேல் வளராமல் நின்றுவிடுவோம்.
மாற்றுப்பாதையில் மனம் சிந்திக்க ஆரம்பித்தவுடன் இலக்குகள் மட்டும் பெரிதாவதில்லை; மனிதர்களையும் ஒரேடியாக மாற்றிவிடுகிறது. பழகிய பாதையை மாற்றியாக வேண்டும் என்ற சவால் தோன்றியவுடன், அதைச் சாதிப்பதற்குத் தேவையான திறமைகளும் தானாகவே வளர்ந்துவிடுகின்றன.
தோல்விக்கு ஆயிரம் வழிகள். வெற்றிக்கு மிகக் குறைந்த வழிகள்தான்.
வெற்றிகளில் இருந்து கற்றுக்கொள்வது மனத்தையும் உற்சாகப்படுத்தும்.
வெற்றிகளும் விதிவிலக்குகளும் பல சாத்தியங்களைத் திறந்து காட்டுகின்றன.
No comments:
Post a Comment